சற்குருவும், துர்குருவும் – 20,000 கோடி சொத்துக்கு அதிபதி …. (பகுதி-2)

சற்குருவும், துர்குருவும் –
20,000 கோடி சொத்துக்கு அதிபதி ….
(பகுதி-2)

இந்த இடுகையில் நான் அளிக்கும் விவரங்கள்
பல நாள் உழைப்பில், பல்வேறு இடங்களிலிருந்து
சேகரிக்கப்பட்டவை.சில இடங்களுக்கு நான் நேரில்
சென்றேன். இதில் சம்பந்தப்பட்ட,
அனுபவப்பட்ட பலரிடம் பேசினேன்.

இந்த நபர் மீதோ, இவர் நடத்தும் நிறுவனத்தின்
மீதோ தனிப்பட்ட முறையில் எனக்கு
எந்த விரோதமுமில்லை.
நான் எந்தக் கட்சியையோ, அமைப்பையோ,
சார்ந்தவனும் இல்லை.

இந்த வலைத்தளைத்தை நான் துவக்கியதே –
என் மனசாட்சிக்கு சரி என்று தோன்றுவதை
எல்லாம் வெளிப்படையாக கூற ஒரு அமைப்பு
(forum) தேவை என்பதால்  தான்.

போலி என்றும் மோசடி என்றும், தவறு என்றும்
எனக்குப் புரிவதை வெளிப்படுத்த
வேண்டியது என் கடமை என்று நான் நினைக்கிறேன்.

அதைத்தான் செய்து கொண்டும் இருக்கிறேன்.
நான் எழுத்துடன் நிறுத்திக்கொள்கிறேன்.
சக்தியுடையவர்கள், விரும்பினால்  இதை
அடுத்த கட்டத்திற்கும் மேற்கொண்டு
எடுத்துச் செல்லலாம்.

இந்த  நபரின் தீவிரமான பக்தர்களோ,
ஆதரவாளர்களோ –
இந்தக் கட்டுரையின் மூலம் தங்கள்
நிலையிலிருந்து நிச்சயம் மாறப்போவதில்லை.
அதையும் நான் உணர்கிறேன்.

ஆனால் என்னவென்று அறிய வேண்டும்
என்கிற ஒரு ஆர்வத்தினால் மட்டும்  உள்ளே
சென்றவர்கள் – உண்மை
அறிந்தால் வெளி வரக்கூடும்.

ஆனால் -புதிதாக யாராவது ஒருவராவது ஏமாறுவதை
இந்த இடுகையால் தடுக்க முடிந்தால் – அதுவே
எனக்கு  மகிழ்வு தரப்போதுமானது.

இவரை அறிய வேண்டும் என்ற ஆர்வத்தில்
பல ஆண்டுகளாக இவரை
நெருங்கி கவனித்த  ஆர்வலர்கள்  சிலர் கூறிய
கருத்துக்கள் கீழே –

“இருபது வருடங்களுக்கு முன் முதன் முதலில்
அவர் எனக்கு அறிமுகமானது சஹஜஸ்திதி யோகா
என்னும் யோகாசனத்தை கற்றுக்கொடுக்கும்
மாஸ்டராக. பங்களூர் ரெஸ்டாரண்ட் ஒன்றில்
கோழி இறைச்சி சாப்பிட்டுக்கொண்டிருந்த
அதே ஜக்கி தான் இவர் என்பதை நினைத்துப்
பார்க்கவே எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. “

“தன் மனைவி விஜியின் கொலை அல்லது
தற்கொலைக்கு காரணமாக இருந்தவர் என்று
10 -12 வருடங்களுக்கு முன் இவர் மீது
போடப்பட்டு இருந்த வழக்கு எப்படி
முடிக்கப்பட்டது என்றே வெளியில்
தெரியவில்லையே “

“இவர் நடத்தும் நிகழ்ச்சிகளில்,தப்பித்தவறி யாராவது
கேள்வி கேட்டு விட்டால், கேள்வி கேட்டவரை அதே
நிகழ்ச்சியிலேயே அவமானப்படுத்தாமல் விடமாட்டார்.
மூர்க்கமான (arrogance), குதர்க்கமான
பதில்கள் தான் வரும்.ஏன் தான் கேட்டோமோ என்று
கேட்டவர் நொந்துக்கொள்ளவும், அடுத்தவர் யாரும்
கேள்வி கேட்கத் துணியாமல் இருக்கவும் தான்
இத்தகைய பதில்கள் என்பது எனக்கு புரிந்தது.”

“தமிழக முதல்வருக்கும் அவரது மகள்
கனிமொழிக்கும் இவர் மிக நெருக்கமானவர் என்பது
அநேகருக்குத் தெரியாது.
ஆனால் இவரது இத்தகைய பிரம்மாண்ட வளர்ச்சிக்கு,
அவர்களது நட்பு மட்டும் காரணமில்லை.”

“ஆரம்பத்தில், இவர் மிகப்பெரிய பகுத்தறிவாளர்
போலவே பேசுவார்.அறிவுக்கு ஒவ்வாத எந்த
விஷயங்களையும் தன்னால் ஏற்க முடியாதென்றே
கூறுவார். பழகப்பழக,சீடர்களை/பக்தர்களை,
தான் கூறுவதை அப்படியே ஏற்றுக்கொள்ளும் நிலைக்கு
தயார் செய்து விட்டு -பிறகு பிள்ளையார், சிவன்,
பார்வதி, விஷ்ணு என்று புராணங்களை அவிழ்த்து
விடுவார். ஒரு கட்டத்தில் தானும் சிவனும்
வேறு வேறு அல்ல என்று அவர் கூறியதைக்கேட்டு
பிரமித்துப் போய் விட்டேன்.”

“குரு என்றால் சரி – புரிகிறது. அது என்ன
“சற்குரு”(நல்ல குரு !) –
நல்ல கத்திரி, நல்ல வெண்டை
என மார்க்கெட்டில் கூவி விற்பதைப் போல ?”

“சற்குரு,துர்குரு என்று யாராவது தரம் பிரிப்பார்களா?
தன்னைத்தானே “சற்குரு” என்று பட்டம்
சூடிக்கொள்வதற்கு ஒரு வித தாழ்வு மனப்பான்மையே
காரணம்.”

“வன விலங்குகள் குறித்த ஆராய்ச்சியை மேற்கொள்ள
விரும்பிய ஒரு அமைப்புக்கு  சுற்றுப்புற சூழல்
பாதிக்கப்படும் என்று காரணம் கூறி சிறிய அளவிலான
இடம்  கூடத்தர  மறுத்த  அரசாங்கம்
ஆயிரக்கணக்கான பசுமரங்களை வெட்டிச்சாய்த்து
நூற்றுக்கணக்கான ஏக்கரில் ஹால்களும், குடியிருப்பு
பகுதிகளும், விருந்தினர் விடுதிகளுமாக
கான்க்ரீட் காடுகளாக இந்த ஆசிரமம் அமைய
வெள்ளியங்கிரி மலைக்காட்டில் அனுமதி கொடுத்தது
எப்படி என்பது ஆச்சரியமாக இருக்கிறது.”

“ஆசிரமத்திற்கு போகும் வழியிலும், உள்ளேயும்
ஆயிரக்கணக்கான  மின் விளக்குகளும்,
எக்கச்சக்கமான டெசிபல் ஒலிகளுடன் ஒலிபெருக்கிகளை
அமைத்து நிகழ்த்தப்படும் நிகழ்ச்சிகளும் சூழ்நிலையை
மாசுபடுத்துவது அரசுக்கு தெரியவில்லையா ?”

“வருடந்தோரும் சிவராத்திரி அன்று இங்கு நடக்கும்
நிகழ்ச்சிகளுக்கு ஆயிரக்கணக்கில் வாகனங்கள் வருவதும்,
வனத்தை மாசுபடுத்தும் வகையில் அவை பெட்ரோல்,
டீசல் புகையை வெளியிடுவதும் எப்படி பொறுத்துக்
கொள்ளப்படுகிறது ?”

“லட்சக்கணக்கில் மரக்கன்றுகள் நடுவதாக போலியாக
மிகைப்படுத்தப்பட்ட  விளம்பரங்களைச் செய்வதும்,
வெள்ளியங்கிரி மலையை சுத்தப்படுத்துவதாக வரும்
பக்தர்களுக்கு குப்பை பை கொடுப்பதும் எந்த அளவிற்கு
இவர் செயலை நியாயப்படுத்தும் ?”

இனி முக்கியமான ஒரு விஷயத்திற்கு வருகிறேன்.
குமுதம் பத்திரிகை எதைச் செய்தாலும் அதில் ஒரு
வியாபார நோக்கு நிச்சயமாக இருக்கும். அது
வியாபாரம், விளம்பரம் என்பது வெளியே தெரியாத
அளவிற்கு சூட்சுமமாகச் செய்வார்கள் !
நித்யானந்தாவை நம்பி பல தமிழர்கள் மோசம்
போனதற்கு குமுதமும் ஒரு முக்கிய காரணம்.

ஆறு மாதங்களுக்கு முன்னர் இதில் ப்ரியா
கல்யாணராமன் என்பவர் ( பெண் பெயரில் எழுதும்
ஆண் தான் ) எழுதும் ஆன்மிகத் தொடர் ஒன்றை
“சம்போ சிவ சம்போ” என்ற பெயரில் ஆரம்பித்தனர்.
(அது இன்னும் தொடர்கிறது )

கொஞ்சம் கொஞ்சமாக ஆரம்பித்து சூடேற்றி –
கைலாஷ் மானசரோவர் போய் வந்தவர்கள் உயிரோடு
சொர்க்கத்திற்கு போய் வந்ததற்கு சமம் என்கிற
அளவிற்கு உசுப்பிவிட ஆரம்பித்தார்கள். பிறகு –
அப்படிப் போவதாக இருந்தாலும் “சற்குரு”வுடன்
செல்பவர்கள் மட்டுமே சொர்க்கத்திற்குப் போக
முடியும் என்கிற அளவிற்கு எழுத ஆரம்பித்தார்கள்.

அவர்கள் குறி எல்லாம், நடுத்தர மற்றும் பணக்கார
குடிம்பத்தைச் சேர்ந்த, நடுத்தர வயதுடைய மற்றும்
முதியவர்கள் தான். அவர்களிடம் பணம் பறிக்க
இவர்கள் கையாளும் நடைமுறைகள் – அடேயப்பா
தேர்ந்த வியாபாரிகளுக்கு கூட கை வராது.

ஆன்மிகம், கடவுள் நம்பிக்கை என்கிற மக்களின்
நம்பிக்கையை மிகப்பெரிய பலவீனமாக மாற்றி
பணம் பண்ணும் அற்பப் பதர்கள்  இவர்கள்.

இவர்களை விட, வெளிப்படையாக சாராயம்,
விபச்சாரம், சூதாட்டம் என்று பணம் சம்பாதிப்பவர்கள்
எவ்வளவோ மேல்.

இவர்களது  சாமர்த்தியம் –
இதை விவரமாகச் சொன்னால் தான் இவர்களை
நம்பி ஏமாறுபவர்களுக்குப் புரியும் என்பதால்,
இந்த இடுகை சிறிது நீளுகிறது.

–தொடர்கிறேன்.

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அடுத்த சாமியார், அரசியல், அறிவியல், ஆத்திகன், இணைய தளம், ஈஷா யோகா, கட்டுரை, கைலாஷ் யாத்திரை, சற்குரு, ஜக்கி வாசுதேவ், தமிழ், பொது, பொதுவானவை, போலிச் சாமியார்கள், வெள்ளையங்கிரி, Uncategorized and tagged , , , , , , , , , , , , , , , , , . Bookmark the permalink.

7 Responses to சற்குருவும், துர்குருவும் – 20,000 கோடி சொத்துக்கு அதிபதி …. (பகுதி-2)

  1. ஜெகதீஸ்வரன் சொல்கிறார்:

    நான் இவரைப் பற்றி கேள்விப்படாததை சொல்லியிருக்கீர்கள்.

    வாழ்க வளமுடன்.

  2. prakash சொல்கிறார்:

    ஆகா… இப்போ தான் கொஞ்சம் கொஞ்சமா வெளிவருகிறது….

    துருவுங்கள் துருவுங்கள்.. யாருக்கும் பயப்பட வேண்டிய அவசியம் இல்லை..

  3. ரகு சொல்கிறார்:

    காவிரி மைந்தன் அவர்களே
    நான் ஈஷா யோகா வகுப்பில் கலந்து கொள்வதற்கு முன் எனக்குள் மிகுந்த தாழ்வு மனப்பான்மை மற்றும் பயம் பதட்டம் எல்லாம் இருந்தது . ஈஷா யோகா தொடர்ந்து செய்ய செய்ய இப்போது நான் தன்னம்பிக்கைவுள்ள மனிதனாக மற்றவர்கள் என்னை பின்பற்றும் மனிதனாக மாறி உள்ளேன் . சத்குரு பற்றிய உங்கள் கருத்துக்கள் தவறானவை என்பதை நீங்கள் விரைவில் உணர்வீர்கள் .

  4. vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

    மேலே உள்ள இடுகையிலிருந்தே ஒரு வாசகம் –

    ‘ இந்த நபரின் தீவிரமான பக்தர்களோ,
    ஆதரவாளர்களோ –
    இந்தக் கட்டுரையின் மூலம் தங்கள்
    நிலையிலிருந்து நிச்சயம் மாறப்போவதில்லை.
    அதையும் நான் உணர்கிறேன். ‘

    ” ஆனால் -புதிதாக யாராவது ஒருவராவது ஏமாறுவதை
    இந்த இடுகையால் தடுக்க முடிந்தால் – அதுவே
    எனக்கு மகிழ்வு தரப்போதுமானது.”

  5. gandhi.m சொல்கிறார்:

    நீங்கள் சொல்வது எனக்கு புதுமயாக உள்ளது. ஈஷா வெப்சைட்ல கேட்கலாமே.

    • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

      வருக நண்பர் காந்தி,

      எதைப் பற்றி ஈஷா வெப்சைட்டில்
      கேட்கலாம் என்கிறீர்கள் ?

      நான் மேலே சொல்லி இருப்பனவற்றைப்
      பற்றியா ?

      பதில் சொல்வார்கள் என்று
      நம்புகிறீர்களா ?

      மீண்டும் சொல்கிறேன்.
      அவருடைய திறமைகளைப் பற்றி
      எந்தவித சந்தேகமும் இல்லை !
      அவர் ஒரு அசாத்திய புத்திசாலி.
      நிறையப் படித்திருக்கிறார்.
      நிறைய யோசிக்கிறார்.
      நன்றாகப் பேசுகிறார்.

      ஆனால் – அதை வைத்து
      எக்கச்சக்கமாக சம்பாதிக்கிறார்.
      கிராமங்களை தத்து எடுப்பது –
      பசுமரங்களை நடுவது,
      என்பது போன்ற காரணங்களைச்
      சொல்லி உள்நாட்டிலும்,
      வெளிநாடுகளிலும் கோடிக்கணக்கில்
      பணம் வசூல் செய்யப்படுகிறது.
      ஒரு பெரிய் கூட்டமே இதில்
      ஈடுபட்டுள்ளது.

      கணக்கு வழக்குகள் ?

      -வாழ்த்துக்களுடன்
      காவிரிமைந்தன்

  6. ELANGO சொல்கிறார்:

    miga sariyaaga solliyulleergal.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.