தா.கிருட்டிணன் கொலை வழக்கு – வேறு ஒரு புதிய கோணத்திலும் தொடரலாம் ….!

தா.கிருட்டிணன்  கொலை வழக்கு – வேறு ஒரு
புதிய கோணத்திலும் தொடரலாம் ….!

தா.கிருட்டிணன் கொலையை நேரில் பார்த்த ஒரே
சாட்சியாக மதுரையை சேர்ந்த பிரபாகர் என்பவர்
அந்த வழக்கில் சாட்சி சொல்ல அழைக்கப்பட்டிருந்தார்.

முதலில் தான் பார்த்த விவரங்களை
மதுரை போலீசிடம் கூறி இருந்த அவர் –

அந்த வழக்கு ஆந்திர மாநிலம், சித்தூர் கோர்ட்டில்
நடந்தபோது, அவர் பிரழ் சாட்சியாகிப் போனார்.
பின்னர் பல சாட்சிகளும் பிரழ் சாட்சியாகிப் போனதும்,
வழக்கு தள்ளுபடியானதும் அனைவரும் அறிந்த
கதை தான்.

வழக்கு தள்ளுபடியாகி விட்டதால் –
தா.கிருட்டிணன் கொலையுண்டது பொய்யாகவில்லை.
அவர் கொலையில் சம்பந்தப்பட்டவர்கள் இன்னும்
சுதந்திரமாக சுற்றிக் கொண்டிருப்பதும் பொய் இல்லை.
இந்த விஷயத்தில், நீதி தேவதை –
வெட்கப்பட்டுக் கொண்டு தான் தன் கண்களை
கருப்புத் துணியால் கட்டிக் கொண்டிருக்கிறது.

மூடப்பட்டு விட்ட இந்த கொலை வழக்கிற்கு
தற்போதைய அரசு
மீண்டும் அப்பீல் மூலம் உயிர் கொடுக்க முயற்சி
எடுத்துக் கொண்டிருக்கிறது.

இது ஒருபக்கம்  இருக்க –

அந்த நேரிடை சாட்சியான  பிரபாகர் தற்போது
ஒரு புதிய  வாக்குமூலம் கொடுத்திருக்கும்
விஷயம்  இன்று வெளிவந்திருக்கிறது.
அதிலிருந்து சில பகுதிகள் –

“நான் சாட்சி சொல்லக்கூடாதுன்னு  பல வழிகளிலும்
மிரட்டுனவங்க, என்னோட கடைசி பையன் கபிலனை
கடத்தும் அளவுக்கு துணிஞ்சப்பத்தான் பதறித்
துடிச்சுட்டேன்.  இது திமுக ஆட்சிக்கு வந்த பின்னாடி
நடந்தது. அப்ப கபிலனுக்கு மூன்றரை வயசு.
வீட்டு வாசல்ல வெளையாடிக்கிட்டு இருந்தவன்,
திடீர்னு காணாமப் போயிட்டான். முதலில் தா.கி.
வழக்கில் அழகிரிக்காக ஆஜரானவரும்,
ஆட்சி மாறியதும்(திமுக ஆட்சிக்கு வந்ததும்)
அரசு வக்கீலாகவும் இருந்த மோகன்குமார் கொஞ்ச
நேரத்தில் எனக்கு போன் பண்ணி, “உம் புள்ளையை
தேட வேண்டாம். பத்திரமா இருக்கான்”னு சொன்னார்.
ஒரு நாள் முழுக்க நாங்க நெருப்புல விழுந்தாப்புல
தவிச்சோம்.

மறு நாள் காலையில், அவரே காருல என்னைய
ஏத்திக்கிட்டு திமுக முக்கியப் புள்ளியோட வீட்டுக்குப்
போனார். தா.கி. வழக்குல சம்பந்தப்பட்ட அத்தனை
பேரும் அங்க தான் இருந்தாங்க. அழகிரிக்கு
வேண்டப்பட்ட போலீஸ் உதவி கமிஷனர்கள்
இரண்டு பேரும், ஒரு இன்ஸ்பெக்டரும் இருந்தாங்க.
அவங்க முன்னாடியே,” மோகன்குமார் சொல்றபடி
நடந்துக்க”னு முக்கியப் புள்ளி மிரட்டினார்.
“நீங்க சொல்றதைக் கேக்குறேன். எம் புள்ளையக்
குடுத்துருங்க”னு கதறுனேன். அதுக்கப்புறம தான்
கபிலனைக் கண்ணுல காட்டுனாங்க.

அப்புறமும் என்னை விடலை. சித்தூர் கோர்ட்டுக்கு
நான் சாட்சி சொல்லப் போறதுக்கு மூணு நாள்
முன்கூட்டியே –
என்னையும், என் மனைவி மக்களையும் அவங்க
கஸ்டடிக்குக் கொண்டு போயிட்டாங்க. எங்களை
அவசரமா மதுரை ஏர்போர்ட்டுக்கு அழைச்சிட்டுப் போயி,
சென்னைக்கு ப்ளைட் ஏத்திட்டாங்க. சென்னை
ஏர்போர்ட்டுல இன்ஸ்பெக்டர் ஒருவர் தான் எங்களை
ரிஸீவ் பண்ணி இம்பாலா ஓட்டல்ல தங்க வெச்சார்.

அங்கருந்து சித்தூருக்கு ஏ.ஸி.கார்ல கூட்டிட்டுப்
போயி, சித்தூர் கோர்ட்டுக்கு எதிர்லயே காஸ்ட்லி
ஹோட்டல்ல தங்க வெச்சாங்க. அப்ப எங்களை
சந்திச்ச மதுரை போலீஸ் ஆட்கள்”இவனுக உங்க
அம்மாவையே (ஜெயலலிதா) படாதபாடு
படுத்தறானுங்க. உனக்கு எதுக்கு பொல்லாப்பு ?
பேசாம, “எனக்கு எதுவும் தெரியாது”னு சொல்லிட்டு
போயிக்கிட்டே இரு”ன்னாங்க. குடும்பத்த பணயம்
ஆக்கி மிரட்டுனதால, நானும் அவங்க சொன்னபடியே
மனசாட்சியை ஒதுக்கி வெச்சிட்டு, பிறழ் சாட்சியம்
சொல்லிட்டு வந்துட்டேன். வரும்போதும், அதே
மாதிரி ப்ளைட்ல எங்களை மதுரைக்கு அனுப்பி
வெச்சாங்க.”

தா.கி. கொலைவழக்கில்  ஆந்திரா ஹைகோர்ட்டில்
அப்பீல் செய்வதன் மூலம் மீண்டும் நீதி கிடைக்க
ஒரு பக்கம் முயற்சி நடந்தாலும் –

இந்த வாக்குமூலத்தின் அடிப்படையிலேயே,
தகுந்த ஆதாரங்களை சேகரித்து,
குற்றம் சாட்டப்பட்டுள்ளவர்கள் மீது தமிழக
நீதிமன்றத்திலேயே “ஆள் கடத்தல்,
மிரட்டி பொய் சாட்சி சொல்ல வைத்தல்”
ஆகிய குற்றங்களுக்காக தனியே புதிதாக ஒரு வழக்கு
தொடர முடியும்.

பிரபாகர் கூறியுள்ள வாக்குமூலத்தில் உள்ள கீழ்க்கண்ட
விஷயங்களுக்கான ஆதாரங்களை வெகு சுலபமாக
திரட்ட முடியும் –

1)மதுரையிலிருந்து சென்னைக்கு பிரபாகர்
குடும்பத்துடன் விமானத்தில் வந்தது.
(இதற்கான டிக்கெட் எங்கே, எப்போது,
யாரால் வாங்கப்பட்டது,
அதற்கு யார் கணக்கிலிருந்து பணம்
செலுத்தப்பட்டது -என்கிற விவரங்கள் )

2)சென்னையில் இம்பாலா ஓட்டலில்
தங்க வைக்கப்பட்ட நாளில் –
யார் ரூம் புக் செய்தது, யார் பெயரில்
புக் செய்யப்பட்டது, பணம் செலுத்தியது யார் –
என்கிற விவரங்கள்.

3)சித்தூர் கோர்ட் எதிரே “காஸ்ட்லி”யான
ஓட்டலில் ரூம் யார் புக் செய்தது,
யார் பெயரில், யார் பணம் செலுத்தியது
போன்ற விவரங்கள்.

இந்த விவரங்களைத் திரட்டினால் போதும் –
புதிய வழக்கிற்கான ஆதாரங்கள் கிடைத்து விடும்.

நமக்கு தோன்றும் யோசனைகள் –
போலீசுக்குத் தோன்றாதா என்ன ?
நிச்சயம் மேல் நடவடிக்கைகளை விரைவில்
எதிர்பார்க்கலாம்.
(என்ன – இதில் இவர்களுக்குத் துணை போன
சில போலீஸ் அதிகாரிகளும் சிக்குவார்கள்.
எனவே கொஞ்சம் தயக்கம் இருக்கலாம் )

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

2 Responses to தா.கிருட்டிணன் கொலை வழக்கு – வேறு ஒரு புதிய கோணத்திலும் தொடரலாம் ….!

  1. smtvkendra சொல்கிறார்:

    NEETHI VETRI PERUM

  2. V.MATHIVANAN சொல்கிறார்:

    LET US RAISE A SIMILIAR RESPONSE EVEN TO KANCHI JEYANTHIRAN INVOLVED SANKARRAMANS MURDER TOO WHICH I BELIEVE IS MORE OR EVEN MOST IMPORTANT AT THIS STAGE. THERE TOO MANY CHANGWED THEIR STANDS.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.