காக்கும் கடவுளா ? அல்லது பணம் பிடுங்கிப் பிசாசா ?

காக்கும் கடவுளா ?
அல்லது பணம் பிடுங்கிப்  பிசாசா ?

தன் மனைவியையும், அவள் வயிற்றில் இருந்த
குழந்தையையும் பறி கொடுத்த ஆத்திரத்தில்,
அவளுக்கு ஆபரேஷன் செய்த டாக்டரையே
ஒருவன் கொன்ற அந்த சம்பவத்தை நான்
நியாயப்படுத்த விரும்பவில்லை.
ஆனால், சில விஷயங்களை விவாதிப்பது
தவிர்க்க இயலாதது.

முதலாவதாக -செத்துப்போன டாக்டர்,
பிரசவ ஆபரேஷன் செய்வதற்கான தகுதியோ,
அனுபவமோ பெற்றவரா ?
மயக்க மருந்து
கொடுக்கும் டாக்டர் தானே அவர் ?
எந்த தைரியத்தில் அவர் ஆபரேஷன் செய்யத்
துணிந்தார் ?
நோயாளி ஆபத்தான நிலையில்
இருந்தால் உடனடியாக விசேஷ வசதிகளைக்
கொண்ட மருத்துவமனைக்கு அல்லவா
அனுப்பி வைத்திருக்க வேண்டும் ?
காசுக்கு ஆசைப்பட்டு தானே ஆபரேஷன் செய்ய
முன் வந்தது தவறு அல்லவா ?

இரண்டு உயிர்கள் சாகக் காரணமாக இருந்தவருக்கு
பொதுவாக,விபத்தில்பெ பாதிக்கப்பட்ட மற்ற மக்களுக்கு
கொடுப்பது போல் – அரசாங்கம் பத்து லட்ச ரூபாய்
கொடை கொடுக்க வேண்டும் என்று வேறு டிமாண்ட் வேறு வைத்திருக்கிறார்கள் மருத்துவ சங்கத்தினர்.

ரெயில்வே தண்டவாளத்தின் குறுக்கே நடந்து செல்வது
ரெயில்வே சட்டத்தின்படி தண்டிக்கத் தக்க குற்றம்
என்று அரசு அறிவித்திருக்கிறது.

படிப்பறிவு இல்லாத பாமரர்கள்  யாராவது
தற்செயலாக குறுக்கே போய் உயிர் இழந்தாலும் –
ரெயில்வே நிர்வாகம்  நஷ்ட ஈடு என்று
ஐந்து காசு கூட  கொடுக்காது.
காரணம் – சட்ட விரோதம் என்று அறிவிக்கப்பட்ட
செயல்களில் ஈடுபட்டவருக்கு நஷ்ட ஈடு கிடையாது.

இந்த நிலையில், அரசு மருத்துவர் ஒருவர்
சட்டத்துக்கு புறம்பாக – சொந்தமாக  
மருத்துவ மனை இயக்குவதே குற்றம்.
இதில் தன் தகுதிக்கு ஒத்து வராத ஆபரேஷன்
ஒன்றைச் செய்து -உயிர் விட நேர்ந்தால் அதற்கு
அரசாங்கம் நஷ்ட ஈடு வேறு கொடுக்க
வேண்டுமா ?

வெட்கப்பட வேண்டும் நஷ்ட ஈடு கேட்பவர்கள்.

இந்த சம்பவத்தை விட்டு விடுங்கள்.
இதன் பின் உள்ள சமூக அவலத்தைச் சொல்லவே
நான் இதை எழுத  விழைகிறேன்.

இந்த சம்பவம் நிகழ்ந்த பிறகு சம்பந்தப்பட்ட
மனிதன் கைது செய்யப்பட்டான். அவன் மீது
உரிய முறையில் வழக்கு நடைபெறப்போகிறது.
தண்டனையும் பெறப்போகிறான்.

ஆனால் – இதை சாக்கிட்டு தமிழகம் முழுதும்
இதர டாக்டர்கள் வேலை நிறுத்தம் செய்ததும்,

ஏதோ பாதுகாப்பே அற்ற சூழ்நிலையில்,
அரக்கர்களுக்கிடையே தாங்கள்
பணி புரிவது போலவும்,
டாக்டர்கள் கிராமங்களில் பணி புரிய
மறுப்பதற்கு கூட இத்தகைய சூழ்நிலை தான்
காரணம் என்றும்,

அரசு  தங்கள் பாதுகாப்பிற்கான விசேஷ சட்டங்களை
உடனே அமுல்படுத்தவில்லை என்றால்
மீண்டும் தொடர் வேலை நிறுத்தம் செய்வோம் என்றும்
அச்சுறுத்துவதும் தான் இதை எழுத என்னைத்
தூண்டியது.

டாக்டர்கள் விசேஷ பாதுகாப்பு கோரும் சூழ்நிலை
உருவானது எப்படி ? எதனால் ?

மருத்துவம் ஒரு தொழில் என்பதை விட –
ஒரு சமூக சேவை என்று தான் மக்கள் மனதில்
இருந்தது இரண்டு பத்தாண்டுகளுக்கு முன்பு வரை.
டாக்டர்கள் தெய்வமாகவே கருதப்பட்டனர்
அப்போதெல்லாம்.

நுரையீரலுக்கு ஒருவர், இதயத்துக்கு ஒருவர்,
கிட்னிக்கு ஒருவர், சர்க்கரைக்கு ஒருவர்,
உப்புக்கு ஒருவர், டிபிக்கு ஒருவர்,
கேன்சருக்கு ஒருவர், தலைக்கு/மூளைக்கு ஒருவர்,
அதில் உள்ள கண்களுக்கு ஒருவர், காதுக்கு ஒருவர்,
மூக்குக்கு ஒருவர், பல்லுக்கு ஒருவர்,
வயிற்றுக்கு ஒரு ஸ்பெஷலிஸ்ட்,
பிரசவத்திற்கு ஒருவர், பொது மருத்துவத்திற்கு ஒருவர்,
குழந்தைகளுக்கு ஒருவர், பெண்களுக்கு ஒருவர்,
முதியோர்களுக்கு ஒருவர் – அப்பாடா எத்தனை
எத்தனை ஸ்பெஷலிஸ்டுகள் இன்று.

வெறும் எம்பி பிஎஸ் படித்து விட்டு,
தொழிலுக்கு வந்து, வசதியற்ற சூழ்நிலையில்
பெருத்த கூட்டத்திற்கிடையே அமர்ந்து கொண்டு,
ஒரே டாக்டர் –
எல்லா வித நோயாளிகளையும் கவனித்து
வந்த காலம் அது. ஐந்து ரூபாய் மட்டும்
பெற்றுக் கொண்டு (ஊசி போட்டால் மட்டும்
பத்து ரூபாய்) மருத்துவம் பார்த்த,
திருச்சி,திருவெறும்பூர் அருகிலுள்ள ஒரு
கிராமத்தைச் சேர்ந்த
டாக்டர் பாலகிருஷ்ணனை நான் என்றும் மறக்க
முடியாது.(இன்றும் அவர் வாங்குவது இருபது
ரூபாய் மட்டுமே ).ஒரே ஒரு ஊசி மட்டும்
போட்டு விட்டு, 3 நாட்களுக்கு மருந்து மாத்திரை
கொடுத்து விட்டு, தேவைப்பட்டால் 2 நாட்கள்
கழித்து வாருங்கள் என்பார். அந்த தேவை
அநேகமாக தேவைப்படாது –
அவரைப் போன்றவர்களே  டாக்டர்கள் என்று
அழைக்கத் தகுதி பெற்றவர்கள் !

அரசு மருத்துவ மனைகளில் பணி புரியும் மருத்துவர்கள்,
தனியே தொழில் பார்க்கக்கூடாது என்று தான்(NPA)
நான் பிராக்டீஸிங் அலவுன்ஸ் என்று ஒரு தொகை
மாதந்தோறும் சம்பளத்துடன் தருகிறார்கள்.

இருந்தாலும், இந்த பணத்தையும் வாங்கிக்கொண்டு,
தனியே தொழில் பார்ப்பதில்லை என்று எழுதியும்
கொடுத்து விட்டு (declaration )
தனியே சொந்தமாகவும் மருத்துவம் பார்க்காத டாக்டர்கள்
இன்று எத்தனை பேர் இருக்கிறார்கள் ?

அரசு மருத்துவ மனைகளுக்கு வருபவர்களை –
தன் சொந்த மருத்துவமனைக்கு வந்து பார்க்கும்படி
சொல்லாத டாக்டர்கள் எத்தனை பேர் ?

தனியார் மருத்துவர்களிடம் சென்றாலும், எவ்வளவு
பேர் ஒழுங்காக, உடனடியாக டயாக்னைஸ்
செய்கிறார்கள் ? தேவையற்ற பரிசோதனைகள்
எத்தனை பண்ண வேண்டி இருக்கிறது ?
லேபரடரிகளிலும், எக்ஸ்ரே, ஸ்கேன்
செண்டர்களிலும் பெர்சண்டேஜ் கமிஷன் வாங்காத
டாக்டர்கள் எத்தனை பேர் இன்று இருக்கிறார்கள் ?

நோயாளிகள் பலபேர் வரிசையில் காத்துக்
கொண்டிருக்கும்போதே – மெடிகல் ரெப்ரெசென்டேடிவ்
மட்டும் சட்டென்று உள்ளே போவது
யாருடைய நலத்திற்காக ?

அவர்களது மருந்து கம்பெனிகள் தரும் சலுகைகளுக்காக,
தேவை இல்லாத மாத்திரைகளையும்,
சிரப்புகளையும், டானிக்குகளையும்
வாங்கும்படி எழுதித்தராத டாக்டர்கள் இன்று
எத்தனை பேர் இருக்கிறார்கள் ?

– மாதச் சம்பளம் வாங்கும் கிளார்க்கை கூட
வருமானத்திற்கான ஆதாரம் கேட்டு நிர்பந்தித்து,
விடாமல் வருமான வரி பிடிக்கும்  மத்திய அரசு
இந்த டாகடர்களுக்கான வருமான விவரங்களை
மட்டும் எந்தவித ஆவணங்களும் இல்லாமல் எப்படி
ஏற்றுக் கொள்கிறது ?

இன்று எந்த டாக்டரிடம் வேண்டுமானாலும்
செல்லுங்கள். 100,150,300 என்று கன்சல்டேஷன்
பணம் வாங்கும் இவர்கள் யாராவது தாங்கள் பெறும்
பணத்திற்கு ரசீது தருகிறார்களா ?

நாம் கொடுக்கும் பணம் எங்காவது பற்று வரவு
வைக்கப்படுகிறதா ?

டாக்டர்கள் ரசீது கொடுக்க வேண்டும்.
நோயாளிகளின் வருகை விவரங்களைக் காட்டும்
ரிஜிஸ்டர் ஒன்றை அதிகாரபூர்வமாக வைக்க வேண்டும்
என்று அரசு ஏன் வற்புறுத்துவதில்லை ?
ஊர்வலம் போகும், வேலைநிறுத்தம் செய்யும்
டாக்டர்கள் சங்கம் இதற்கு என்ன பதில் சொல்லும் ?

நோயாளிகளிடம் நியாயமான அளவு பணம்
பெற்றுக்கொண்டு வைத்தியம் செய்ய வேண்டும்
என்று டாக்டர்களுக்கும் தோன்றுவதில்லை.
நோயாளிகளை கொள்ளை அடிக்கும் டாக்டர்களை
கட்டுப்படுத்த அரசாங்கத்திற்கும் எண்ணமில்லை.

என்னென்ன  பரிசோதனை பண்ணச் சொல்லி
எப்படியெல்லாம் காசு பிடுங்கப்போகிறாரோ என்று
பயந்து கொண்டே வேறு வழியின்றி தான்
இன்றைய தினம் டாக்டரிடம் நோயாளிகள்
செல்கிறார்கள்.

உண்மையாகவும், நேர்மையாகவும்,
தொழில் தர்மத்துடனும் நடந்து கொள்ளும் சி
டாக்டர்கள் அதிசயமாக இன்றும் சில பேர்
இருக்கத்தான் செய்கிறார்கள். அவர்களுக்கு
எந்த பாதுகாப்பும் தேவைப்படாது. மக்களே
அத்தகைய டாக்டர்களைப் புரிந்து கொண்டு
தலைமேல் தூக்கி வைத்து கொண்டாடுவார்கள்.

எனவே, தங்களுக்கு பாதுகாப்பு தேவைப்படும்
சூழ்நிலையை உருவாக்கிக் கொள்வது
டாக்டர்களே தானே தவிர –
பொது மக்கள் அல்ல !

இந்த பிரச்சினைக்கு மற்றொரு முக்கிய காரணம்
டாக்டர்களின் பற்றாக்குறை.

மொத்த இந்தியாவிலும் உள்ள டாக்டர்களின்
எண்ணிக்கை வெறும் ஆறரை லட்சம் தான்.

இந்தியா முழுவதும் சேர்த்து, மொத்தம்
300 மருத்துவக் கல்லூரிகள் மட்டுமே உள்ளன.
அத்தனையிலும் சேர்த்து உள்ள மொத்த
இடங்கள் வெறும் 40,000.

ஒரு ஆண்டுக்கு 6 லட்சம் எஞ்சினீயர்கள்
தமிழ் நாட்டில் மட்டும் உருவாகிறார்கள். ஆனால்-
ஒரு வருடத்தில் இந்தியா முழுவதிற்கும் சேர்த்து
மொத்தம் 40,000 டாக்டர்கள் மட்டுமே
உருவாகின்றார்கள்.

120 கோடி மக்கள் உடைய ஒரு நாட்டிற்கு
வெறும் ஆறரை லட்சம் டாக்டர்கள் மட்டும்
இருக்கும் இந்த அவல நிலை ஏன் ?

உடனடியாக அதிக எண்ணிக்கையில் மருத்துவக்
கல்லூரிகளை உருவாக்கி டாக்டர்களின்
எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும்.
இந்த பொறுப்பை மத்திய் அரசோ,
மாநில அரசோ – தட்டிக்கழிக்க கூடாது.
கல்வி பொதுப் பட்டியலில் வருவதால், இரண்டு
அரசுகளுக்குமே இந்த பொறுப்பு இருக்கிறது.

தூத்துக்குடி சம்பவங்கள் தொடராமல் இருக்க
வேண்டுமானால் –
டாக்டர்கள்  சங்கம் வெத்து சவுடால்கள் விடுவதை
விட்டு விட்டு, உருப்படியாக மக்களின் துன்பங்களை,
சங்கடங்களை போக்கும் வழியைப் பார்க்க வேண்டும்.

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

13 Responses to காக்கும் கடவுளா ? அல்லது பணம் பிடுங்கிப் பிசாசா ?

  1. CDR சொல்கிறார்:

    சார், நீங்கள் கூறிய டாக்டர் பாலகிருஷ்ணன் போலவே திருச்சி தென்னூர் பட்டாபிராமன் சாலையில், டாக்டர் பழனியாண்டி என்பவர் இருக்கிறார். அவர் இன்றும் கட்டணமாக 20 ரூபாய் மட்டுமே வாங்குகின்றார். அவருக்கு வயது 70 இருக்கும். நல்ல கைராசியான டாக்டரும் கூட.

  2. anu சொல்கிறார்:

    sir,u r right. IN Dindigul,Dr. Ramachandran, Arunachalam child hospital, his fees is only 10 rupees. Mostly he didn’t do injection.with injection his fees is 20 rupees only. Actually his name is 5 rupees doctor. Because he bought 5 rupees for before 5 years.

  3. Mauroof, Dubai சொல்கிறார்:

    மிக மிக அவசியமான ஆக்கப்பூர்வமான கட்டுரை. நன்றிகள் பல. இது யாருடைய காதுகளையும் உள்ளத்தையும் சென்றடைய வேண்டுமோ அங்கு சென்றடைய வேண்டும். இக்கட்டுரையை தமிழகத்தின் எல்லா பகுதிகளிலும் சுவரொட்டிகள் மூலம் பொதுமக்கள் மற்றும் அனைத்து சிறிய, பெரிய மருத்துவமனைகள், மருத்துவர்கள் வசிக்கும் பகுதி என ஒட்டுதல் வேண்டும். தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுங்கள்.

  4. P. Saravanan சொல்கிறார்:

    Very, very Excellent Article. Manasu valikkuthu…… Kuttram ullavarhalukku romba kuthum…. Very Thank u

  5. smtvkendra சொல்கிறார்:

    1) In all Hospitals suitable Notice should be exhibited.

    2) No. of Doctors should be increased in Homeo, Ayurveda and
    Chitha medicals.

  6. சைதை அஜீஸ் சொல்கிறார்:

    மிகவும் அவசியமான அறுமையான பதிவு!
    செய்யும் தொழிலே தெய்வம் எனும் கூற்றை மறந்தவர்கள்தான், இதுபோன்று தாம் செய்யும் வேலையில் தவறிழைப்பது.
    சாக்கடை சுத்தம் செய்பவர் முதல் ஸாஃப்ட்வேர் ப்ரோக்ராமர் வரை அனைவரும் தாம் செய்வதை ஒரு தவம் போல செய்வாரேயானில் இதுபோல அவலம் நடைபெறாது.

  7. Indian சொல்கிறார்:

    A Very good article.

  8. shandu சொல்கிறார்:

    this is the one of the milestone article ,I agree with your all terms

    the above said should be happen to avoid these kind of problems in future

    the murder is the correct punishment for the doctor,with this all the fraud doctors will get alert

  9. T.V.G.Prabhakar சொல்கிறார்:

    Yes,I fully agree with your comments.I know a doctor by name G.Ganapathy in Trichy,Thillainagar who is getting 50 rupees for consultation.But gives medicines if available with him ,that cost more than his fee.He recommend ECG,X ray or scan only as a last resort.There is one more Dr.T.P.Ganesan who gets money only if given.Both of them are M.D.,
    As you said rightly we can’t weigh all the doctors in the same scale

  10. chollukireen சொல்கிறார்:

    உள்ளதை உள்ளபடி எழுதியிருக்கிறீர்கள். டாக்டரிடம் போனால் எதையாவது எழுதிகொடுத்து செய்யமுடியாமல்
    கடன் வாங்கியாவது செய்தேஆகவேண்டிய நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள். சாதாரண லோக்கல் பண்ட் ஆஸ்ப்பத்திரிகளில் பணமே செலவில்லாது கொடுக்கும் மருந்துகளைத்தவிர வேறெதுவுமே செலவில்லாத காலமொன்றும் இருந்தது. டாக்டர்கள் கைராசிக்குத்தான்
    ஆசைப்பட்டு நல்ல வைத்தியத்தைக் கொடுத்து புகழீட்டினார்கள். இப்போது நிலையே வேறு. பணமிருந்தால்தான் வைத்தியம் செய்துகொள்ள முடியும்.
    கட்டுரை திரும்பத் திரும்ப படிக்கும்படியான உண்மைக் கட்டுரை.

  11. ramanans சொல்கிறார்:

    நல்ல கட்டுரை. உங்கள் கட்டுரைத் தலைப்புக்கு பதில் சொல்ல வேண்டுமானால் – சில நேரங்களில் கடவுள்; சில நேரங்களில் சாத்தான்.

  12. vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

    இந்த கட்டுரைக்கு கிடைத்த மறுமொழிகளின்
    மூலம் ஆங்காங்கே உள்ள கருணை உள்ளம்
    படைத்த பல டாக்டர்கள் பற்றிய செய்திகள்
    வெளியானது குறித்து
    மகிழ்ச்சியாக இருக்கிறது.

    இத்தகைய டாக்டர்களின் எண்ணிக்கை
    பெருக வேண்டும். மருத்துவர்கள் மனசாட்சிக்கு
    மதிப்பு கொடுத்து தங்களை நம்பி வரும்
    மக்களுக்கு உண்மையாக இருக்க வேண்டும்.

    மருத்துவம் என்பது ஒரு தொழில் மட்டும் அல்ல –
    மக்களுக்கு செய்யும் ஒரு மகத்தான தொண்டு கூட
    என்பதை அவர்கள் உள்ளுக்குள் உணர வேண்டும்.

    விஞ்ஞான வளர்ச்சி மனிதத்தன்மையை
    அழித்து விடக்கூடாது. அது மேலும் அன்பையும்,
    கருணையையும் வளர்ப்பதாக இருக்க வேண்டும்.

    இந்த கட்டுரையை பல டாக்டர்கள் படிக்கக்கூடும்.
    அவர்களது குடும்ப உறுப்பினர்கள், உறவினர்கள்,
    நண்பர்கள் என்று பலர் படிக்கக்கூடும்.
    தயவுசெய்து, இதை ஒரு பாசிடிவ் கண்ணோட்டத்துடன்
    எடுத்துக் கொள்ளுங்கள்.

    உங்களுக்கு தெரிந்த டாக்டர்களின் பார்வைக்கு
    இந்த கட்டுரையை எடுத்துச் சென்று உதவுமாறு
    கேட்டுக்கொள்கிறேன்.

    டாக்டர்களை –
    தங்களைக் காக்க வந்த தேவதைகளாக
    மக்கள் கருதக்கூடிய காலம் –
    மீண்டும் உருவாகட்டும்.

    -வாழ்த்துக்களுடன்
    காவிரிமைந்தன்

  13. raj சொல்கிறார்:

    இங்கே பலரும் டாக்டர்கள் மீது மிக மோசமான கருத்து சொல்லியுள்ளார்கள்.
    அவற்றில் பல, முழுவதும் ஏற்றுக்கொள்ள வேண்டியது தான்.
    ஆனால் சில கருத்துக்கள் விவாதிக்கப் பட வேண்டியது.

    – இந்த டாக்டர் சரியான தகுதி பெறவில்லை —-
    ஒரு டாக்டர் MBBS படித்து இருந்தால் போதும், பிரசவ ஆபரேஷன் செய்ய மேலும் படித்து இருக்க வேண்டும் என்று எந்த சட்டமும் இல்லை.
    அரசாங்கPHCil, MBBS படித்த டாக்டர்கள் தான் சகல விதமான மருத்துவமும் பார்க்கின்றனர்.
    மருத்துவருக்கு அனுபவம் இருக்கிறதா என்பது தான் முக்கியம். மேல்படிப்பு (postgraduation – DGO, MD) படித்த ஆபரேஷன் செய்ய தெரியாத ஆயிரகணக்கான டாக்டர்கள் இருக்கிறார்கள்.
    அனுபவம் உள்ள, நல்ல முறையில் ஆபரேஷன் செய்யும் MBBS டாக்டர்களும் உள்ளார்கள்.

    – அரசு மருத்துவ மனைகளில் பணி புரியும் மருத்துவர்கள்,
    தனியே தொழில் பார்க்கக்கூடாது

    இது உண்மை தான். ஆனால், இங்கே அரசு டாக்டர்களுக்கு என்ன வருமானம் உள்ளது? சாதாரணமாக அரசு டாக்டர்களுக்கு Rs 20000 முதல் Rs30000 வரை தான் சம்பளம். நான் பிராக்டீஸிங் அலவுன்ஸ்(NPA) Rs1000 to 2000 தான். இந்த சம்பளத்தில் ஒரு அரசு டாக்டர் எப்படி தன் குடும்பத்துக்கு இன்று நகரவாசிகள் எல்லாம் அனுபவிக்கும் சகல சுகம்களை தரமுடியும்.
    சாதாரணமாக B.Sc(comp) படித்த பட்டதாரியோ, BE படித்த பட்டதாரியோ ஆரம்ப சம்பளமே Rs 40000/pm முதல் Rs 75000/pm வரை பெறும் போது, 7 முதல் 12 ஆண்டுகள் படித்த டாக்டர் மட்டும் மிக குறைவான சம்பளம் பெற்றால் போதும் என்று நினைப்பது, ஓரவஞ்சனை இல்லையா?

    இங்கு எந்த அரசும், நான் பிராக்டீஸிங் அலவுன்ஸ்(NPA) கண்டு கொள்ளாமல் இருப்பதற்கு காரணம், அவர்களால் நல்ல சம்பளம் தர முடியாது என்பது தான். மத்திய அரசு பணியில் பயிற்சி டாக்டர்கள் Rs 35000/pm சம்பளம் பெறுகிறார்கள், முழு நேர மத்திய அரசு டாக்டர்கள் இன்னும் பல மடங்கு சம்பளம் பெறுகிறார்கள். இதை சரியாக்கும் வரை private doctors மருத்துவம் இருக்க தான் செய்யும்.

    ஏழை குடும்பத்தில் அல்லது நடுத்தர குடும்பத்தில் பிறந்த டாக்டர்கள் தன் தந்தை ஆரம்பித்த மருத்துவமனையில் சென்று உட்கார்ந்து கொண்டு பணம் பண்ண முடியாது.

    இத்தகைய டாக்டர்கள் private practice செய்து தான், சம்பாதிக்க வேண்டும்.

    கமிஷன் வாங்காத
    டாக்டர்கள் எத்தனை பேர் இன்று இருக்கிறார்கள் ?

    இதில் ஆச்சரிய பட ஒன்றும் இல்லை. இது இன்றைய சமுகத்தின் பிரதிபலிப்பு. டாக்டர்கள் மட்டும் வானத்தில் இருந்து குதித்து வரும் தேவதைகள் இல்லை. இந்த காலத்து மக்கள் எப்படி ஒழுங்கீனம் இல்லாமல் இருகிறார்களோ, அதே போல டாக்டர்களும் ஒழுங்கீனம் இல்லாமல் இருக்கிறார்கள். சமூகம் மாறினால் தான் இது மாறும். பல துறைகளில் உள்ளது போலவே இவர்களும் படித்த criminals, அவ்வளவு தான்.

    Strike செய்வது என்றுமே தவறு தான். அதற்காக டாக்டர்கள் பணம் (நியாயமாக) பண்ண நினைக்ககூடாது என்று ஒரு தவறான கருத்து நிலவுகிறது. இந்த கேள்வி ஒரு வக்கீல் அல்லது Engineer/Architect அல்லது Accountant இவர்களிடம் யாரும் கேட்பதில்லை. ஏன் இவர்களுக்கு மட்டும் சமூக பொறுப்பு தேவை இல்லையா?

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.