மலையாள மனோரமா விவகாரம் – “ஞானி”க்கு ஏன் இந்த கோணல் பார்வை ?

மலையாள மனோரமா விவகாரம் –
“ஞானி”க்கு ஏன் இந்த கோணல் பார்வை ?

எக்கச்சக்கமான நீர் ஆதாரம் உள்ள கேரளாவில்
1976-ல் நீர் மின்சாரத்தை வணிக நோக்கில்
உற்பத்தி செய்ய வேண்டி, மிகப்பெரிய  இடுக்கி
அணை கட்டப்பட்டது.

அணை கட்டப்பட்டு தொடர்ந்து 3 ஆண்டுகள் ஆகியும்
ஒரு முறை கூட, அணையின் பாதி அளவைக்கூட
நீர் மட்டம் தொடவில்லை.  இதற்கு முக்கிய
காரணம், இடுக்கி அணைக்கு நேர் மேலே இருந்த
முல்லைப் பெரியாறு அணை தான் என்று கேரள அரசு
கருதியது.

முல்லைப் பெரியாறு அணை இருக்கும் வரை
இடுக்கியில் தாங்கள் நினைத்தபடி மின்சாரத்தை
உற்பத்தி செய்ய முடியாது என்பது கேரளாவிற்கு
மிகத்தாமதமாக புரிந்தது. அணையைத்
திட்டமிடும்போதே இதை
அவர்கள் யோசித்திருக்க வேண்டும்.

மனசாட்சியை குழிதோண்டிப் புதைத்துவிட்டு,
தாங்கள் செய்த தவறுக்கு – தமிழ் நாட்டை
பலி வாங்கி, பரிகாரம் காணத் திட்டமிட்டனர்.

விளைவு ஒரு நாசகாரத் திட்டம்.

முல்லைப் பெரியாறு அணையின்  மூலம்
தென் தமிழ் நாட்டில் பாசனம் செய்யப்படும்
2,08,000 ஏக்கர் நிலம்
பாலைவனமாக  மாறவும்,
பாசனம் செய்யும் 10 லட்சம் விவசாயிகளும்,
குடிநீர் பெறும் 60 லட்சம் மக்களும்
பிழைப்பு பறிபோய் – பிச்சைக்காரர்களாக
அலையவும்  ஒரு திட்டம்.

முல்லைப் பெரியாறு 100 வருடங்களுக்கு
மேல் பழசாகிப்போன,  மண்ணாலும்,
சுண்ணாம்பாலும் கட்டப்பட்ட மிகபழைய அணை.
அணையைச் சுற்றி அடிக்கடி ஏற்படும் நில அதிர்வுகள்
காரணமாக இந்த அணை எப்போது வேண்டுமானாலும்
உடையக்கூடிய ஆபத்து இருக்கிறது.

அப்படி அணை உடைய நேரிட்டால், அதிலிருந்து
வெளிப்படும் நீரின் வேகத்தால், அதன் கீழ் மட்டங்களில்
வசிக்கும் 35 லட்சம் கேரள மக்கள்  அரபிக்கடலுக்கு
அடித்துச் செல்லப்படுவார்கள்.
முல்லைப் பெரியாறு அணையால் கேரளாவிற்கு
மிகப்பெரிய அழிவு ஏற்படப் போகிறது என்று
ஒரு மிக பயங்கரமான வதந்தியைக் கிளப்பி  அணைக்கு
உலை வைக்க வேண்டும்.

எப்படி இந்த திட்டத்தை நிறைவேற்றுவது ?

மலையாள மனோரமா கேரளாவில்
100 ஆண்டுகளுக்கும் மேலாக வெளியாகும்
மிகவும் புகழ் பெற்ற மலையாள பத்திரிகை.
18 லட்சம் பிரதிகளுக்கு மேல் விற்கும்,
மிகப்பெரிய மலையாள  வாசகர் வட்டத்தை
கொண்ட பத்திரிகை.

இந்த பத்திரிகை, காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவான,
கேரள கிறிஸ்தவர்களால் நடத்தப்படும் ஒரு
வலது சாரி பத்திரிகை.

இந்த சதியை நிறைவேற்ற மலையாள மனோரமா
பத்திரிகையை பயன்படுத்திக்கொண்டது கேரள அரசு.
முழு மனதுடன், விரும்பி, இந்த சதியில்
முக்கிய பங்கேற்றது மலையாள மனோரமா நிறுவனம்.

முதல் முதலாக, மிகப்பெரிய அளவில், பரபரப்பாக,
முல்லைப் பெரியாறு அணையால் கேரளாவிற்கு
ஏற்படப் போகும் பேரழிவைப் பற்றி –

செய்தி என்கிற பெயரில் ஒரு மாபெரும்
சதியை அறிமுகப்படுத்தியது
மலையாள மனோரமா. மனசாட்சியையும்,
மனோதர்மத்தையும் குழி தோண்டிப் புதைத்துவிட்டு,
துணிந்து ஒரு மிகப்பெரிய பொய்யைப் பரப்பியது.
பல இடங்களில் அணையில் விரிசல்கள்
ஏற்பட்டிருப்பதாக  1979 ஆம் ஆண்டு முதன்முதலில் ஒரு பொய்ச்செய்தி வெளியிட்டது.

அன்று ஆரம்பித்த பொய் தான் இன்றும் பரந்து, பரவி,
தொடர்கிறது. தமிழ் மக்களின் உயிர் நாடியைத்
தொட்டுப் பார்க்கிறது. உணர்ச்சிக் கொந்தளிப்புகளை
உருவாக்குகிறது. கேரளாவிலும், லட்சக்கணக்கான
மக்களை அச்சுறுத்தி, இரண்டு மாநில மக்களையும்
இன்று கொந்தளிப்பின் உச்சத்தில் கொண்டு போய்
நிறுத்தி உள்ளது.

இன்றும் மலையாள மனோரமா பத்திரிகை
இதே செய்தியை பூதாகாரமாக்கும் வேலையைத்தான்
செய்து கொண்டிருக்கிறது.

இந்த மலையாள மனோரமா நிறுவனத்தின் சார்பாக
சென்னை புத்தகக் கண்காட்சியில்  2 ஸ்டால்கள்
போட்டிருக்கிறார்கள்.
சொரணை கெட்ட தமிழர்கள்
முக்கியப் பொறுப்புகளில் இருக்கும் –
இந்த கண்காட்சியை நடத்தும் BAPASI  அமைப்பு –
(தென்னிந்திய புத்தக வெளியீட்டாளர் மற்றும்
விற்பனையாளர்களின் சங்கம் )
ஏற்கெனவே, தமிழ் நாட்டின் சூழ்நிலையை உணர்ந்து,
தானாகவே இதைத் தவிர்த்திருக்க வேண்டும்.

புத்தகக் கண்காட்சியில் இந்த ஸ்டால்கள்
அமைக்கப்பட்டிருப்பதை எதிர்த்து, அவற்றை
மூடக்கோரி, அவற்றின் முன், மே 17 இயக்கத்தினர்
(சுமார் 20-25 பேர்கள்  இருக்கலாம்)
சாத்வீகமான முறையில், கோஷங்கள் எழுப்பினர்.


முதலில் இந்த கோரிக்கையில் இருந்த நியாயத்தை
புரிந்து கொண்ட BAPASI அமைப்பின் தலைவர்
ஆர்.எஸ்.ஷண்முகம், தன் சகாக்களுடன் கலந்து
பேசி விட்டு, புத்தகக் கண்காட்சியில் பங்கேற்றுள்ள
மற்ற நிறுவனங்களின் நலனைக்கருதி
மலையாள மனோரமா நிறுவனம் தங்கள் ஸ்டாலை
மூட வேண்டும் என்று கேட்டுகொண்டார்.

அவர்களும், தற்காலிகமாக திரைச்சீலைகளின் மூலம்
ஸ்டால்களை மூடி விட்டு, தங்கள் மேலமைப்பிடம்
கலந்து பேசி விட்டு  மேல் நடவடிக்கை
எடுப்பதாகச் சொல்லி இருக்கின்றனர்.

இந்த நிலையில் –
கண்காட்சியில் தானும் ஒரு ஸ்டால் போட்டிருந்த
எழுத்தாளர், பதிப்பாளர், அறிவுஜீவி ஞானி –
தன் ஆதரவு குழுவினருடன் கூடி –

BAPASI-நிர்வாகத்திடம், மலையாள மனோரமா
ஸ்டாலை மூடச்சொன்னதற்கு ஆட்சேபம் தெரிவித்து
இருக்கிறார். நிர்வாகம் செய்தது தவறு என்றும் –
கண்டவர்கள் ஆட்சேபம் தெரிவிக்கிறார்கள்
என்பதற்காக ஸ்டாலை மூட முடியுமா ? மாறாக,
போராட்டம் நடத்தியவர்கள் மீது நடவடிக்கை
எடுக்கக் கோரியும், மலையாள ஸ்டாலுக்கு
போலீஸ் காவல் கேட்டும் அல்லவா தீர்மானித்திருக்க
வேண்டும் என்று அழுத்தம் கொடுத்திருக்கிறார்.

அவருக்குத் துணையாக இருந்திருப்பவர்கள் –
காலச்சுவடு கண்ணன், பாரதி புத்தகாலயம் மற்றும்
கிழக்கு பதிப்பகம்  பத்ரி சேஷாத்ரி ஆகியோர்.

விளைவு –ஏற்கெனவே எடுத்த  முடிவு மாற்றப்பட்டது.
மலையாள மனோரமா ஸ்டால் வெற்றிப்
பெருமிதத்துடன் மீண்டும் திறக்கப்பட்டது.
அதன் வாசலில் தொடர்ந்து போலீஸ்
காவல் போடப்பட்டிருக்கிறது.

கேரள அரசு ஏற்கெனவே அணையின் நீர் மட்டத்தை
படிப்படியாக – 152 அடியிலிருந்து,
136 அடியாக தனது தகிடுதித்தங்களால்
குறைக்கச் செய்து விட்டது.
142 அடி வரை நீரைத் தேக்க சுப்ரீம் கோர்ட்
கொடுத்த உத்திரவை செல்லாக்காசாக்கி விட்டது.

அதை எதிர்த்து தமிழ் நாடு சுப்ரீம் கோர்ட்டில்
தொடர்ந்த வழக்கை நேர்மையாக சந்திக்கத்
துணிவில்லாமல் இதுவரை 36 முறை வாய்தாக்கள்
வாங்கி காலம் கடத்தி விட்டது. சுப்ரீம் கோர்ட்
அமைத்த எம்பவர்டு கமிட்டி மேலேயே குறை கூறி
மீண்டும் சுப்ரீம் கோர்ட்டில் புகார் கொடுத்திருக்கிறது.

சட்டபூர்வமாக தீர்ப்பு வருவதை எல்லா விதத்திலும்
தாமதித்து வருகிறது. கேரள மக்களிடையே
அநாவசியமாக பொய்யான பயத்தையும்,
பதட்டத்தையும் தொடர்ந்து உண்டு பண்ணி வருகிறது.

அணையை உடைக்க வேண்டும் – உடைப்போம்.
புதிய அணை கட்டுவோம்.
எங்கள் இடம் – எங்கள் பணம் – யாருடைய
அனுமதியும் எங்களுக்கு தேவை இல்லை என்று
திமிர்வாதம் பேசும் கேரள காங்கிரஸ் அரசுக்கு
எல்லா விதத்திலும் துணையாக நிற்கிறது
மலையாள மனோரமா பத்திரிகை நிறுவனம்.

தென் மாவட்டத்துக் தமிழ் மக்கள் கொதித்துப்
போயிருக்கிறார்கள். நிம்மதி இழந்து தவிக்கிறார்கள்.
எல்லை மாவட்டங்களில், ஏலக்காய்தோட்டங்களில்
வேலை செய்யும் தொழிலாளர்கள் ஒரு மாதமாக
வேலைக்குப் போக முடியாமல், ஊதியமின்றித்
தவிக்கிறார்கள்.

லாரிகள் போகவில்லை. காய்கறி, தானியங்கள்,
பால், முட்டை, கோழி ஆகியவற்றை கேரளாவிற்கு
வர்த்தகம் செய்து வந்த சிறு வியாபாரிகள்
தாங்கள் நஷ்டம் அடைந்தாலும் பரவாயில்லை –
பொது நன்மையே முக்கியம் என்று ஒற்றுமை
காக்கிறார்கள்.

தமிழர்கள் அனைவரும் ஒன்று பட்டிருக்கிறோம் –
விஷமம் செய்தால் விபரீதத்தை சந்திக்க நேரிடும்
ஜாக்கிரதை என்று கேரளாவிற்கு  ஒரே குரலில்
தெரிவிக்க வேண்டிய நேரத்தில் –

தன் அறிவுஜீவித் தனத்தையும்,
நடுநிலை போக்கையும்
ஞானி இப்படித்தான் காட்டிக் கொள்ள வேண்டுமா ?

தமிழ் நாட்டின், தமிழர்களின் –
ஒட்டுமொத்த நன்மையை விட,
இவருக்கு இவரது
சொந்த பெர்சனாலிடியும்,
வரட்டுத்தனமான ஈகோவும்
முக்கியமாகப் போய் விட்டனவா ?

ஞானியின் இந்த பார்வை – கோணல் பார்வை.
சமூகத்தை விட தான் பெரியவன் என்கிற
அகங்காரமான பார்வை.

உணர்ச்சிக் கொந்தளிப்பில் தமிழ் மக்கள்
தவிக்கும்போது – வரட்டு வேதாந்தம் பேசும்

அவரது அகங்காரம் தொலைய –
காலம் வழி செய்யும்.

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

29 Responses to மலையாள மனோரமா விவகாரம் – “ஞானி”க்கு ஏன் இந்த கோணல் பார்வை ?

  1. Tirupurvalu சொல்கிறார்:

    Entha paya summa eruka madanna.EYANNI r u a tamilian

  2. CDR சொல்கிறார்:

    நான் என்ன சொல்லுறேனோ அது தான் நியாயம், உண்மை அப்படின்னு நினைக்கிறவன் தான் இந்த ஞானி. இவனுக்கு தான் தான் அறிவு ஜீவின்னு நினைப்பு. கூடங்குளம் பற்றி இவன் பேசுற பேச்சு இருக்கே, தாங்க முடியல சார்.

  3. ஜோதிஜி திருப்பூர் சொல்கிறார்:

    கிழக்கு பதிப்பகம் பா.ரா அல்ல. பா. ராகவன் எழுத்தாளர். பத்ரி ஷேசாத்திரி தான் கிழக்கு பதிப்பகம் முதலாளி. மாற்றி விடுங்க.

    • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

      வருக ஜோதிஜி,

      அது பத்ரி சேஷாத்ரி தான்.
      நான் தான் தவறி விட்டேன்.

      இப்போது மாற்றி விட்டேன்.

      சமயத்தில் சரி செய்ய உதவினீர்கள்.
      மிக்க நன்றி.

      -வாழ்த்துக்களுடன்
      காவிரிமைந்தன்

  4. Naaradhar சொல்கிறார்:

    Indha naaikku manasaatchiye kidaiyaadhu . Periya arivu jeevi nu ninaippu.

  5. ரிஷி சொல்கிறார்:

    ஜோதிஜி,
    பா.ரா. கிழக்கு பதிப்பகத்தின் தலைமை எடிட்டர்களில் ஒருவர்னு நினைக்கிறேன். அந்த வகையில் இதை மாற்றத் தேவையில்லை.

  6. அக்கப்போரு சொல்கிறார்:

    //காலச்சுவடு கண்ணன், பாரதி புத்தகாலயம் மற்றும்
    கிழக்கு பதிப்பகம் பா.ரா. //
    இந்த மூன்று பதிப்பகங்களையும் புறக்கணிப்போம் அங்கே கட்சி பேதமின்றி காங்கிரசும் கம்யூனிஸ்டும் சிறந்து ஒரே பொய்யை வாய் ஓயாமல் சொல்கிறார்கள். இங்கேயோ இது போன்று அறிவு ஜீவி இமேஜுக்கு அலையும் ஆட்கள்…. நமக்கு எதிரி வெளிநாட்டில் இல்லை

  7. ramanans சொல்கிறார்:

    உங்கள் கருத்தோடு எனக்கு உடன்பாடில்லை. எதை எதனுடன் முடிச்சுப் போடுகிறீர்கள். புத்தகங்கள் அறிவை வளர்க்க உதவுபவை. அவை எந்த மொழியாக இருந்தாலும் வரவேற்பதன் மூலம் பயனடையப் போவது நாம் தான்.

    மலையாள மனோரமா கடையை மூடி விட்டால் அணைக்கட்டுப் பிரச்சனை தீர்ந்து விடுமா? அப்படி மூடியதால் உம்மண் சாண்டிக்கோ இன்ன பிறருக்கோ கவலை ஏற்பட்டு உடனே தமிழக நலன் குறித்து அக்கறை கொள்ள ஆரம்பித்து விடுவார்களா?

    இதனால் நான் எதிர்ப்பே தெரிவிக்கக் கூடாது என்று சொல்லவில்லை. எங்கு அடித்தால் வலிக்குமோ அங்கு அடிக்க வேண்டும். முற்றிலுமாக அவர்களது கடைகளை/பண்டங்களை. நகைகள்/பொருட்கள். வாங்குவதைப் புறக்கணிக்க வேண்டும்.அதை யாரும் செய்யவில்லை.

    அதை விடுத்து மலையாள மனோரமா கடைக்குச் சென்று தமிழில் வெளி வந்திருக்கும் பொது அறிவு குறித்த நூலை வாங்காமல் புறக்கணிப்பதால் யார்க்கு நட்டம்? சிந்தித்துப் பாருங்கள்.

    இந்த விஷயத்தில் உணர்ச்சிவசப்பட்டு வெற்றுக் கூச்சல் எழுப்பி எந்தப் பயனும் இல்லை. தமிழர்கள் மீண்டும் ஒரு சுதேசி இயக்கத்தைத் தொடங்கி அவர்களைப் புறக்கணித்தால் நன்மை விளையும். அதுவே இப்போதைய தேவை.

    மலையாளிகள் எழுதியிருக்கும் தமிழ்ப் புத்தகங்களை புறக்கணிப்பதல்ல.

    நன்றி.

    • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

      வருக ரமணன்,

      இந்த இடுகையில் நான் முக்கியமாகச்
      சாடியது இரண்டு விஷயங்களை –

      1) மலையாள மனோரமா நிறுவனம்
      தமிழ் நாட்டிற்கு எப்பேற்பட்ட கெடுதலை
      உண்டு பண்ணி இருக்கிறது என்பதையும்

      2)தமிழ் எழுத்தாளர்-அறிவுஜீவி “ஞானி”யின்
      போக்கும் வாதமும் எவ்வளவு வரட்டுத்தனமாகவும்
      தமிழ் நாட்டின் நலனுக்கு எதிராக உள்ளன
      என்பதையும் –

      மக்களது வயிற்றுப்பாட்டுகே உலை வைக்கும் –
      அவர்களது வாழ்வாதாரங்களை நாசமாக்கும் –
      தென் தமிழ் நாட்டை வறண்ட பாலைவனமாக்கும்
      முயற்சியில் கேரள அரசும், அவர்களுக்குத்
      துணை போகும் நிலையில் மலையாள
      மனோரமா நிறுவனமும் ஈடுபட்டிருக்கும்போது –

      யார் வேண்டுமானாலும், எங்கு வேண்டுமானாலும்
      வியாபாரம் செய்ய உரிமை உண்டு என்று
      “வறட்டு வேதாந்தம்” பேசும் “ஞானி”களின்
      எழுத்தால் நமக்கு, தமிழ் நாட்டிற்கு என்ன பயன் ?

      BAPASI நிர்வாகத்தின் முன் –
      ஞானி எடுத்து வைத்த முக்கிய வாதமே,
      இவர்களை இன்று தடுத்தால்,
      நாளை நாம் எப்படி திருவனந்தபுரம்
      புத்தகக் கண்காட்சியில் ஸ்டால்
      போட முடியும் என்பது தான் !

      அவரது அடிப்படைக் கவலை அது தான்.

      கம்பம், தேனி மக்கள் வேலையின்றி அலையலாம்.
      தக்காளியும், கீரையும், காய்கனிகளும்
      கேரளாவிற்கு செல்லாமல் அழுகலாம் –
      விவசாயிகளும், வியாபாரிகளும்
      வயிற்றுக்கு இல்லாமல் வாடலாம்.
      – ஆனால், இவர்கள் புத்தகம் விற்க மலையாள
      தேசம் போவது தடைபடக்கூடாது !

      ஒரு விஷயத்தில் நாம் தீர்மானமாக இருக்க வேண்டும்.
      ஒன்று இந்தியனாக இருக்க வேண்டும் -அல்லது
      தமிழனாக இருக்க வேண்டும்.
      நிச்சயம் இரண்டுங்கெட்டானாக இருக்கக் கூடாது.

      சுப்ரீம் கோர்ட்டின் உத்திரவை கேரளா மதிக்காமல்
      அரசியல் சட்டத்தை மீறியபோது, மத்திய அரசு
      ஏன் கண்டு கொள்ளவில்லை ?

      கேரளா அரசியல் சட்டத்திற்கு விரோதமாக
      நடக்கலாம் – அதன் மீது ஒரு நடவடிக்கையும்
      கிடையாது என்றால், பிறகு நமக்கு மட்டும்
      ஏன் அந்த அரசியல் சட்டம் ?

      ஒவ்வொரு மாநிலமும் அதன் இஷ்டம் போல்
      செயல்படலாம் என்றால் பிறகு ஏன்
      இந்த “இந்திய தேசம்” ?

      என்னைப் பொறுத்த வரையில்,
      தான் சார்ந்த மக்களுக்காக,
      அந்த மக்களின் நலனுக்காக,
      அந்த மக்களின் எதிர்காலத்திற்காக –
      சமுதாய அக்கரையுடன்
      எழுதுபவன் தான் எழுத்தாளன்.

      இவரைப் பொருத்த வரையில் எழுத்து –
      தொழிலும், வியாபாரமும் கூட.
      அவ்வப்போது தன் மேதாவித்தனத்தை
      நிரூபித்துக் கொண்டே இருந்தால் தான்
      தொழிலும், வியாபாரமும் கூடும்.
      மக்கள் நலனைப் பற்றிய அக்கரை
      அங்கே மூன்றாம் பட்சம் தான் !

      மற்றபடி – நீங்கள் கூறும் – அறிவை வளர்க்கும்
      நூல்களை, நாம் சென்னை
      புத்தகக் கண்காட்சியில் உள்ள,
      அந்த மலையாள மனோரமா ஸ்டால்
      போய்த்தான் வாங்க வேண்டும் என்பது
      அவசியம் இல்லையே ? அவை கிடைக்கும்
      இடங்கள் வேறு எதுவுமே இல்லையா என்ன ?

      “உணர்ச்சி வசப்பட்டு, வெறும் கூச்சல்” –

      மன்னிக்கவும்.
      தன் மக்களுக்காக – நியாயமான விஷயங்களுக்காக, உணர்ச்சிவசப்படுவதும்,
      அவர்களுக்காகப் போராடுவதும் –
      அதனால் ஏற்படக்கூடிய விளைவுகளை
      எதிர்கொள்வதும்
      மனிதாபிமானம், கடமை – என்று கருதுகிறேன் நான்.

      உங்கள் மறுமொழி, மேலும் சில
      கருத்துப் பரிமாற்றங்களுக்கு வழி செய்தது.நன்றி.

      -வாழ்த்துக்களுடன்
      காவிரிமைந்தன்

      • ramanans சொல்கிறார்:

        //BAPASI நிர்வாகத்தின் முன் –
        ஞானி எடுத்து வைத்த முக்கிய வாதமே,
        இவர்களை இன்று தடுத்தால்,
        நாளை நாம் எப்படி திருவனந்தபுரம்
        புத்தகக் கண்காட்சியில் ஸ்டால்
        போட முடியும் என்பது தான் !//

        காவிரி மைந்தன்

        இப்போதுதான் இந்தத் தகவலைத் தெரிந்து கொண்டேன். அப்படி அவர் பேசியிருப்பின் அது கண்டிக்கத் தகுந்தது. சந்தர்ப்ப வாதம். ஏன் பைத்தியக்காரத்தனமும் கூட.

        என்னுடைய கருத்து பபாஸி புத்தக விழா ஆரம்பிக்கும் முன்பே மனோரமா ஸ்டாலைச் சேர்க்காமல் தடுத்திருக்க வேண்டும். இப்போது நடுவில் பிரச்சனை செய்வதால் அது மேலும் பல பிரச்சனைகளுக்கே வழி வகுக்கும் என்பதே எனது எண்ணம்.

        முக்கிய விஷயம். நான் தங்கள் வெற்றுக் கூச்சல் போடுபவர் என்று சொல்லவில்லை. பிரச்சனையின் ஆழம் தெரியாமல் குறுகிய நோக்கத்திற்காகவும் சொந்த ஆதாயங்களுக்காகவும் சிலர் செயல்படுவதையே அவ்வாறு சொன்னேன்.

        நன்றி

  8. R.Kumaraswamy சொல்கிறார்:

    your Article is fantastic.

  9. மணிமலர் சொல்கிறார்:

    நியாமாக நடந்து நாசமாக போனது போதும்
    பொய்யை விற்று பூதத்தை கிளப்பிய மனோரமா ஸ்டால் மூடுவதுதான் நல்லது
    தமிழர்களின் உணர்வுகளை மதிக்க வேண்டும் .

  10. R.Puratchimani சொல்கிறார்:

    “சிறு” தண்டனை கிடைக்கும் பொழுது “சிலர்” உணர்வார்கள் என்று தான் நினைக்கின்றேன்

  11. SATHISH சொல்கிறார்:

    GNANI AVAR ELUTHIYA O PAKKANGALIL KERALAVUKKU OTHULAIYAMAI SEITHALE POTHUM ENDRU ELUTHINAR..THAKKALI ALUHI PONALUM NASTAPATTALUM KERALAKU ANUPPAMAL PORADUM ORU SATHARANA MANITHANIN VALI VETHANAI PANAM KONDA IVARHALUKKU EPPADI THERIUM? PORADAVILLAI ENDRALUM SUMMAVAVATHU IRUKKALAME… VANMAIYAHA EN KUDUMBAM ,NANBARHALODU KANDIKKIROM…

  12. Ramanan சொல்கிறார்:

    This is so wrong stance taken by Kizhaku and Gnani- first of – he should change his name from Gnani to something else which would be appropriate. Point is – there is a publication house which spreads lies and rumors about something for its own purposes and it doesn’t matter who lives or dies? Shouldn’t we all support our May 17 patriots who have took up this issue when no one will do anything about it. All Kizhaku, Kalasuvadu and Gnani- I will never ever buy the books published by you guys. Also as a bonus – we need to stop doing any business with the malayali run organizations and also pseudo thamizh organizations.

  13. Ganpat சொல்கிறார்:

    காவிரிமைந்தன் மற்றும் ஏனைய நண்பர்களுக்கு பொங்கல் வாழ்த்துக்கள்.வேலைப்பளு காரணமாக இப்பக்கம் வர இயலவில்லை.
    மலையாள மனோரமா விவகாரம்:
    கா.மை கருத்துக்கு நான் உடன்படுகிறேன்.இங்கு இப்பத்திரிகை எதிர்க்கப்படுவது அது மலையாளம் என்ற காரணம் மட்டுமில்லை.முல்லைப்பெரியாறு சதியில் அது வகித்த முக்கிய பங்கிற்காக.இன்று உலகத்தை எதிர்த்து செல்வதே தங்கள் குறிக்கோளாக கொண்டவர்கள் சிலர்.அவர்களில் சோ,ஞானி,பத்ரி போன்றவர்கள் முக்கியமானவர்கள்..அவர்களை ஒன்றும் செய்ய முடியாது.

  14. ஞாநி சொல்கிறார்:

    அன்புடையீர் வணக்கம்.

    முல்லைப்பெரியாறு பிரச்சினையில் என் நிலை கேரள அரசு நிலை தவறானது என்று கண்டிக்கும் நிலையேயாகும். கல்கி 3.12.2011 இதழில் நான் எழுதிய கட்டுரை கீழே உள்ளது. தமிழகத்தில் இருக்கும் மலையாளிகளை வெளியேறச் சொல்வது , அவர்களது வர்த்தக் அமைப்புகளை மூடச் சொல்வது போன்ற நடவடிக்கைகளை நான் ஆதரிக்கவில்லை. பிற மாநிலங்களில் சென்று பணியாற்றும் தொழில் நடத்தும் தமிழர்களின் நலனிலும் நாம் கவனத்துடன் இருக்க வேண்டும் என்பதே என் நிலை. மலையாள மனோரமா போன்று தவறான பிரசாரம் செய்யும் அமைப்புகளுக்கு எதிராக கண்டன முழக்கங்கள் எழுப்புதல், அது குறித்து மக்கள் கவனத்தை ஈர்க்க அமைதியான முறையில் கறுப்புக் கொடி, பதாகைகள் ஏந்திய போராட்டங்கள் நடத்துதல் ஆகியவற்றை நான் எதிர்க்கவில்லை. அவற்றுக்கு இடம் தரப்படவேண்டும் என்பதே என் நிலை. இந்தக் கருத்துகளையே நான் பபாசியிடமும் சொன்னேன். ஹிந்து நிருபரிடமும் சொன்னேன். எப்போதும் சொல்வேன்.

    அன்புடன் ஞாநி.

    என் கட்டுரை:

    முல்லைப் பெரியாறு – ஒரு கேள்வி பதில் தொகுப்பு :

    பெரியாறு அணைப் பிரச்சினை என்பது என்ன ?

    “தமிழக கேரள எல்லையில் அமைந்திருக்கும் முல்லைப் பெரியாறு அணை கட்டி 116 வருடமாகிவிட்டது. இந்த அணை பலவீனமாகிவிட்டது. எனவே உடைந்தால் கேரள மக்களுக்கு ஆபத்து. புதிய அணை கட்ட வேண்டும். இப்போதுள்ளதை உடைக்க வேண்டும்” என்பது கேரள அரசின் நிலை. “அணை பாதுகாப்பாகத்தான் இருக்கிறது. புதிய அணை தேவையில்லை. இருக்கும் அணையை அழித்து புது அணை கட்டுவதில் இறங்கினால், தமிழ்நாட்டில் பாசன வசதி பெறும் மதுரை, தேனி, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய ஐந்து மாவ்ட்டங்களின் சுமார் இரண்டு லட்சம் ஏக்கரிலும் விவசாயம் பாதிக்கப்படும்” என்பது தமிழக அரசின் நிலை.

    இரண்டில் எது உண்மை ?

    அணை பலவீனமாகிவிட்டது என்று 1979ல் கேரள அரசு சொல்ல ஆரம்பித்தது. மெல்ல மெல்ல இந்த பிரச்சினை வளர்ந்து உச்ச நீதிமன்றத்தின் முன்பு வழக்காக வைக்கப்பட்டது. நிபுணர் குழுவை அமைத்து பிரச்சினையை ஆராய்ந்த உச்ச நீதிமன்றம் அணை பலவீனமாக இல்லை என்றும் தற்காலிகமாக குறைத்துத் தேக்கிய நீரின் அளவை பழையபடி அதிகரிக்கலாமென்றும் 2006ல் தீர்ப்பு வழங்கியது. இந்த்த் தீர்ப்பை எதிர்த்து கேரளத்திலிருந்து தாக்கல் செய்த மனுக்கள் எல்லாம் உச்ச நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டன.

    அப்படியானால் விஷயம் ஏற்கனவே முடிந்து போய்விட்டதே? ஏன் மறுபடியும் பிரச்சினை ?

    உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை கேரள அரசு எதிர்த்து தோல்வியடைந்தபின், அணைகள் பாதுகாப்புக்கென்று ஒரு தனிச்சட்டம் கொண்டு வந்து உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை செயல்படவிடாமல் தடுத்தது. காவிரி நீர் பிரச்சினையிலும் இதே போல உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக கர்நாடகம் சட்டம் கொண்டு வந்தபோது அந்த சட்டம் செல்லாது என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது. அதைச் சுட்டிக் காட்டி கேரள அரசின் சட்டமும் செல்லாது என்று தமிழக அரசு போட்ட வழக்கில் தொடர்ந்து இன்னும் விசாரணை நடந்துகொண்டிருக்கிறது. அந்த வழக்கில் நீதிமன்றம் நியமித்த உயர்நிலைக் குழுவின் அறிக்கை வருவதற்கு சற்று முன்னதாக கேரளத்தைச் சேர்ந்தவர்களால் எடுக்கப்பட்ட டேம் 999 படம் வெளியானது. அணை உடைந்து மாபெரும் விபத்து ஏற்படுவது பற்றிய படம் இது. கேரளத்தில் ஆட்சியில் இருக்கும் கூட்டணியின் எதிர்காலத்தை தீர்மானம் செய்யக் கூடிய இடைத் தேர்தல் நடக்கும் சமயம். எல்லாமாக சேர்ந்துகொண்டு கேரள மக்களின் பயத்தை கிளப்பிவிட்டு அரசியல் லாபமடையும் நோக்கத்தில் மறுபடியும் முல்லைப் பெரியாறு அணை பலவீனமானது என்ற பிரசாரம் எழுப்பப்பட்டிருக்கிறது.

    இந்த அணை யாருக்கு சொந்தம் ? கேரளாவுடையதா? தமிழ்நாட்டுடையதா?

    முல்லைப் பெரியாறு அணை ஒரு விசித்திரமான அணை. கட்டப்பட்ட அணை தமிழக அரசுக்கு சொந்தமானது. ஆனால் கட்டியிருக்கும் இடம் கேரளாவுடையது என்ற அடிப்படையில் தமிழக அரசுக்கு 999 வருட குத்தகையில் தரப்பட்டிருக்கிறது.

    அப்படியானால் அணை கட்டப்பட்டிருக்கும் பெரியாறு ஆறு யாருக்கு சொந்தமானது ?

    பெரியாறு ஆறு உற்பத்தியாவது தமிழ்நாட்டில்தான்.திருநெல்வேலி மாவட்டத்தில் இருக்கும் சிவகிரி மலையில்தான் இந்த ஆறு உற்பத்தியாகி வடக்கு நோக்கி 48 கிலோமீட்டர் ஓடி கேரளாவுக்குள் நுழைந்து அங்கிருக்கும் முல்லையாற்றில் சேர்ந்து பின் கிழக்கு நோக்கிச் சென்று இன்னும் பல ஆறுகளுடன் அங்கே இணைந்து பிரும்மாண்டமாகி கடைசியில் அரபிக் கடலில் கலக்கிறது. வீணாகும் நீரை பயன்படுத்தி தமிழகத்தின் தென் மாவட்டங்களின் குடிநீர் பிரச்சினையையும் விவசாயப் பாசனத் தேவையையும் பூர்த்தி செய்யல்லாமென்பது 160 வருடம் முன்பு உதயமான திட்டம். அதை பிரிட்டிஷ் ராணுவப் பொறியாளர் மேஜர் ஜான் பென்னிகுயிக் கடும் சிரமத்துடன் நிறைவேற்றினார். பெரியாறு நீர்த்தேக்கத்தை செயற்கையாக ஏற்படுத்தி அதிலிருந்து தமிழகத்துக்கு நீர் வருவதற்காக மலையைக் குடைந்து சுரங்கக் கால்வாய் உருவாக்க வேண்டியிருந்தது. முதற்கட்டத்தில் கட்டுமானம் வெள்ளத்தில் உடைந்ததும் பிரிட்டிஷ் அரசு பணம் தர மறுத்துவிட்டது. பென்னிகுயிக் தன் சொத்தை விற்றும் அடமானம் வைத்தும் சொந்தச் செலவில் அணையை கட்டினார். அவருடைய சாதனையை நேரில் கண்டபின்னர் அரசு பணத்தை திருப்பிக் கொடுத்தது. இந்தியாவின் இரண்டு பருவ மழைகளிலிருந்தும் பயனடையக்கூடிய ஒரே மலைப்பகுதியில் இருப்பதுதான் முல்லைப் பெரியாறு அணயின் சிறப்பான தனித்தன்மை.

    அணை கட்டி நூறு வருடங்களுக்கு மேலாகிவிட்டதால், அது பலவீனமாகியிருக்க வாய்ப்பு உண்டுதானே ?

    பராமரிப்பு இல்லையென்றால் கட்டி இரண்டே வருடத்தில் கூட ஒரு வீடு நாசமாகப் போகும். தொடர்ந்து சீரான பராமரிப்பு இருந்தால் பல நூறு வருடம் கழித்தும் ஒரு கட்டுமானம் பலமாகவே இருக்க முடியும். கரிகாலன் கட்டிய கல்லணை 1900 வருடமாகியும் பலமாகவும் பயன்பாட்டிலும் இருந்துவருகிறது. காரணம் தொடர்ந்து பழுதுபார்த்து பராமரித்துவருவ்துதான். பென்னிகுயிக் முல்லைப்பெரியாறு அனையைக் கட்டிய சமயத்தில் கவர்னராக இருந்தவர் சர் ஆர்தர் காட்டன். அவர் ஆட்சியில் முல்லைப் பெரியாறுக்கும் முன்னதாகக் கட்டப்பட்ட, கோதாவரி, தௌலேஸ்வரம், கிருஷ்ணா அணைகள் எல்லாம் தொடர்ந்த பராமரிப்பினால் பலமாகவே இருந்துவருகின்றன. முல்லைப்பெரியாறு அணையையும் அவ்வப்போது பலப்படுத்தும் பராமரிப்பு வேலையை தமிழகப் பொறியாளர்கள் செய்துவந்துள்ளனர். உச்ச நீதிமன்றம் நியமித்த நிபுணர் குழு இந்த வட்டாரத்தின் நில அதிர்ச்சி தன்மை உட்பட எல்லா அம்சங்களையும் ஆராய்ந்தபிறகே அணைக்கு ஆபத்தில்லை என்று கூறியிருக்கிறது.

    முல்லைப் பெரியாறு அணையிலிருந்து தமிழகத்துக்கு தண்ணீர் வருவதால், கேரளாவுக்கு ஏதாவது இழப்பு இருக்கிறதா?

    இல்லவே இல்லை. பெரியாற்றில் கிடைக்கும் மொத்த நீர் அளவு 4,867.9 மில்லியன் கன மீட்டர். இன்னும் பத்து வருடம் கழித்துப் பார்த்தாலும் கூட,2021-ம் ஆண்டில் கேரளத்தின் விவசாயத்திற்கும் குடிநீருக்கும் தொழிலுக்கும் தேவையான மொத்த நீர் அளவு 2254 மி.க.மீட்டர்தான். வீணாகக் கடலில் சென்று கலக்கும் நீரின் அளவு 2313 மி.க.மீ. ஆகும். இப்போது முல்லைப் பெரியாறு அணையின் நீர் மட்டம் 136 அடிக்கு மேல் இருக்கக்கூடாது என்ற நடைமுறைதான் 1979லிருந்து பின்பற்றப்படுகிறது. இதை பழையபடி 152 அடி வரை உயர்த்திக் கொள்லலாம் என்று உச்ச நீதிமன்ரம் சொல்லியும் நடக்கவில்லை. அப்படி உயர்த்தினால் கூட, தமிழகத்துக்குத் தர வேண்டிய நீரின் அளவு வெறும் 126 மி.க.மீட்டர்தான்.கேரளத்துக்கு எந்த தண்ணீர் நஷ்டமும் இல்லை.

    மாறாக கேரளம் ஏற்கனவே தமிழகத்தின் தண்ணீரை மறைமுகமாக அனுபவித்து வருகிறது. தமிழகத்திலிருந்து கேரளத்துக்கு அதிகாரப்பூர்வமாக 700 டன் அரிசி அனுப்பப்படுகிறது. இதை உற்பத்தி செய்ய 511 மில்லியன் கன மீட்டர் நீர் செலவாகிறது. கேரளத்தின் இதர உணவுத்தேவைகளையும் தமிழகம்தான் வழங்குகிறது. எல்லாவற்றுக்கும் மேலாக கேரளாவில் எந்த ஆற்றுப்படுகையிலிருந்தும் மணல் எடுக்க அனுமதியில்லை. தமிழக ஆற்றுப்படுகைகளிலிருந்து எடுக்கப்படும் மணல்தான் கேரளாவில் கட்டட வேலைக்குப் பயன்படுத்தப்படுகிறது.

    அப்படியானால் ஏன் கேரளா முல்லைப்பெரியாறு அணை விஷயத்தில் இப்படி பீதியை கிளப்பிவிடுகிறது ?

    இந்தப் பிரச்சினையின் வேர் தொடக்கத்திலேயே இருக்கிறது. பென்னிகுயிக் அணை கட்ட திட்டம் போட்டபோது அங்கே திருவிதாங்கூர் அரசும் இங்கே பிரிட்டிஷ் அரசும் இருந்தன. அணைப் பகுதி அமையவேண்டிய தேவிகுளம் பீர்மேடு பகுதிகள் 90 சதவிகிதம் தமிழ் மக்கள் வாழ்ந்து வந்த பகுதிகள். ஆனால் பிரிட்டிஷ் அரசு தவறாக அந்தப் பகுதிகளை திருவிதாங்கூருக்கு சொந்தமானது என்று கருதியது. அந்த அடிப்படையில் ஒப்பந்தம் போட்டது.

    ஆனால் திருவிதாங்கூர் மகாராஜா இருமுறை பிரிட்டிஷ் அரசுக்குக் கடிதம் எழுதியிருப்பதாக ஆய்வாளர் கே.எஸ்.ராதாகிருஷ்ணன் சுட்டிக்காட்டுகிறார். அணை இருக்கும் இடம் சென்னை ராஜதானிக்கு சொந்தமானது. எனவே சுற்றிலும் இருக்கும் பகுதிகலையும் சென்னையே எடுத்துக் கொண்டு தனக்கு 6 லட்ச ரூபாய் தந்தால் போதுமானது என்று மன்னர் சொல்லியிருக்கிறார். அஞ்சியோ, தங்கச்சேரி, பாலம் ஆகிய மூன்று பகுதிகளை சென்னை தனக்குக் கொடுத்துவிட்டு பதிலுக்கு முல்லைப் பெரியாற்றை சுற்றியுள்ள பகுதிகளையும் எடுத்துக் கொள்ளட்டும் என்று சொல்லியிருக்கிறார். இதை பிரிட்டிஷ் அரசு பொருட்படுத்தவே இல்லை. அப்போதே அப்படி செய்திருந்தால், பின்னாளில் மொழி வாரி மாநிலம் அமைக்கும்போது 90 சதவிகித தமிழர்கள் இருக்கும் தேவிகுளம் பீர்மேடு பகுதிகள் தமிழகத்தோடே இருந்திருக்கும்.

    தங்கள் நிலத்தில் அணையை வைத்துக் கொண்டு தண்ணீரை எடுத்துக் கொள்ளும் தமிழகம் கையில் அணை தொடர்பான எல்லா அதிகாரமும் இருப்பதை கேரள அரசு விரும்பவில்லை. படிப்படியாக ஒவ்வொரு அதிகாரமாக அது பறித்துக் கொண்டது. 1979 எம்.ஜி.ஆர்- அச்சுதமேனன் ஒப்பந்தத்துக்கு முன்பு வரை 48 அடி நீர் தமிழகம் வசம் இருந்தது. அது மூன்றில் ஒரு பங்காக்கப்பட்டது. அணைப் பாதுகாப்பு தமிழக காவல் துரையிடமிருந்து கேரல காவல் துறைக்கு பிடுங்கித் தரப்பட்டது. ஆனால் கேரள போலீசுக்கான சம்பளத்தை தமிழகமே தருகிறது. அணையில் படகு விடும் உரிமை தமிழகத்திடமிருந்து பறி போனது. மீன் பிடிக்கும் உரிமையும் போயிற்று. அணை வரையிலான சாலையும் தமிழக அரசிடமிருந்து பிடுங்கப்பட்டது. அணை தமிழகத்துக்குச் சொந்தமென்றாலும் அணைக்கு செல்ல பொறியாளர்கள் உடபட எல்லாரும் கேரள அரசின் அனுமதி பெற வேண்டும். இவையெதுவும் 1979க்கு முன்னர் இல்லாதவை. கடைசியாக இப்போது அணையையே பறிக்க விரும்புகிறது. அணையின் பாதுகாப்பு மட்டும்தான் அசல் கவலையென்றால் புது அணையை தமிழகமே கட்டட்டுமென்றல்லவா சொல்ல வேண்டும் ? தான் கட்டித் தன் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள விரும்புவதாக் ஏன் சொல்ல வேண்டும் ?

    ஒரு வாதத்துக்காக, அணை பலவீனமாகிவிட்டதாகவும் ஒரு பூகம்பத்தில் உடைந்துவிடுமென்றும் வைத்துக் கொண்டால், 30 லட்சம் கேரள மக்கள் உயிருக்கும் உடமைக்கும் ஆபத்து ஏற்படத்தானே செய்யும் ?

    இல்லை. இந்தக் கருத்தே கேரளத்தில் மலையாளிகள் ஆதரவைத் திரட்ட அவர்களிடையே பீதியைக் கிளப்ப சொல்லப்படும் கருத்துதான். அணை உடைந்து எந்த மக்களாவது பாதிக்கப்பட்ட்டால், அதில் பெரும்பாலோர் தமிழர்கள்தான். இந்த வட்டாரத்தில் அவர்கள்தான் இப்போதும் பெரும்பான்மையாக வசிக்கிறார்கள். தவிர அனை உடைந்தால் அந்த தண்ணீர் நேராக கீழே உள்ள இடுக்கி அணைக்குத்தான் போய்ச் சேரும். இடுக்கி அணையே முல்லைப் பெரியாறிலிருந்து வரும் உபரி நீரைத் தேக்கக் கட்டப்பட்டதுதான். வழியில் இருக்கும் ஊர்கள் குமுளி, ஏலப்பாறா இரண்டு மட்டுமே. குமுளி கடல் மட்டத்திலிருந்து 3350 அடி உயரத்திலும் ஏலப்பாறாI 4850 அடி உயரத்திலும் உள்ளன. முல்லைப்பெரியாறு அணை இருப்பது கடல் மட்டத்திலிருந்து 2890 அடி உயரத்தில்தான். எனவே அதில்லிருந்து வெள்ளம் இந்த ஊர்களுக்கு மலையேறிச் செல்ல முடியாது.

    இந்தப் பிரச்சினையைத் திரும்பவும் பேசித் தீர்த்துக் கொள்ளமுடியாதா ?

    பேச்சுகளின் மூலம் தீர்க்க முடியாத நிலையில்தான் நீதிமன்றத்தை இரு தரப்புமே அணுகுகின்றன. அதன்பின்னர் நீதிமன்ற உத்தரவை ஏற்றுக் கொள்வதுதான் முறை. ஆனால் கேரள அரசு உச்ச நீதிமன்ற உத்தரவை ஏற்க மறுக்கிறது. மேல் முறையீடுகள் நிராகரிக்கப்பட்டபின்னரும் உத்தரவை ஒப்புக் கொள்ள மறுத்து, அணைக்கு ஆபத்து என்று மக்களிடையே கலவரத்தை தூண்டிவிட்டு தான் விரும்புவதை சாதிக்க நினைக்கிறது.

    அப்படியானால் என்னதான் தீர்வு ?

    நிச்சயம் வன்முறை உதவாது. இங்கே நாயர் டீக்கடையையோ மேன நகைக்கடையையோ தாக்குவது தீர்வல்ல. பதிலுக்கு கேரளத்தில் இருக்கும் ஆயிரக்கணக்கான தமிழ் தொழிலாளர்கள், வணிகர்கள் மீதான தாக்குதல் அங்கே ஆரம்பிக்கும். இதற்கு முடிவே இல்லை. கேரளத்திலேயே உண்மை நிலையை அறிந்தவர்கள் உண்டு. இலக்கியவாதி பால் சக்கரியா, மத்திய நீரியல் கழகத் தலைவர் தாமஸ் போன்றோர் உண்மை நிலையை பகிரங்கமாகப் பேசியவர்கள். ஜெயலலிதா போல மலையாளத்தில் நன்றாகப் பேசத் தெரிந்த தமிழகத் தலைவர்கள் தொலைக்காட்சி வாயிலாகவும் தேவையானால் நேரில் கேரள நகரங்களுக்கு சென்றும் மலையாளத்திலேயே பேசி மலையாளிகளிடையே தூண்டிவிடப்பட்டிருக்கும் பயத்தை நீக்க முயற்சிக்கலாம். தமிழக சினிமா கலைஞர்களுக்கு கேரளத்தில் சாதாரண மக்களிடையே பெரும் செல்வாக்கு இருக்கிறது. தமிழ் திரைப்படங்கள் அங்கே பெரும் வசூலைக் குவிக்கின்றன. தமிழ் சினிமா பாடல்கள் இல்லாத கேரள ஊரே இல்லை. எனவே தமிழ் சினிமா பிரமுகர்கள் கேரள சுற்றுப்பயணம் மேற்கொண்டு பொய் பயத்துக்கெதிரான பிரசாரம் செய்ய வேண்டும். உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை கேரள அரசு தொடர்ந்து ஏற்க மறுத்தால் அந்த அரசை அரசியல் சட்டத்தின் கீழ் டிஸ்மிஸ் செய்ய மத்திய அரசுக்கு அதிகாரம் உண்டு. அதைப் பயன்படுத்த முன்வரும்படி மத்திய அரசை நாம் வற்புறுத்த வேண்டும்.தமிழகம் காந்திய வழியில் ஒத்துழையாமை இயக்கத்தை நடத்தினாலே கேரளம் தாங்காது. கேரளத்துக்கு உணவுப் பொருட்களையோ மின்சாரத்தையோ மணலையோ ஒரு வாரத்துக்கு வழங்காமல் ஒத்துழையாமை செய்தால், கேரளம் பெரும் சிக்கலில் ஆழ்ந்துபோகும்.

    கல்கி 3.12.2011

  15. ஞாநி சொல்கிறார்:

    ஒரு பின்குறிப்பு: குறிப்பாக ரமணன் கவனத்துக்கு: நான் தமிழ்நாட்டுக்கு வெளியே எந்தப் புத்தகக் கணகாட்சியிலும் சென்று ஸ்டால் போடுவதில்லை. நான் தொழில்முறை புத்தக விற்பனையாளனும் அல்ல. என் புத்த்கங்களை நானே வெளியிட்டு அவற்றை விற்பதுடன் சரி. இவ்வாறு ஸ்டால் நடத்துகிற ஒரே எழுத்தாளன் நான்தான். எனவே திருவனந்தபுரத்திலோ பெங்களூருவிலோ ஸ்டால் போடுவதுடன் என் வர்த்தக நலன் எதுவும் சம்பந்தப்படவில்லை. என் புத்டகங்களை யாரேனும் வாங்கி சென்று அங்கே விற்றால் கூட அதிகபட்சம் நூறு பிரதிகளுக்கு மேல் விற்கும் வாய்ப்பு கூட கிடையாது. தமிழர்கள் தமிழ்நாட்டுக்கு வெளியே பணியாற்றுகிற, வணிகம் செய்கிற உரிமைகள் பாதிக்கப்படக் கூடாது என்பதும் அதே உரிமைகள் பிறருக்கும் தமிழகத்தில் இருக்க வேண்டும் என்பது மட்டுமே என் கருத்து. ஞாநி

    • ramanans சொல்கிறார்:

      அன்புள்ள ஞாநி

      திரு காவிரி மைந்தன்

      ////BAPASI நிர்வாகத்தின் முன் ஞானி எடுத்து வைத்த முக்கிய வாதமே, இவர்களை இன்று தடுத்தால், நாளை நாம் எப்படி திருவனந்தபுரம் புத்தகக் கண்காட்சியில் ஸ்டால் போட முடியும் என்பது தான் !//

      – என்று குறிப்பிட்டிருந்தார். அதற்கு நான் -கீழ்கண்டவாறு

      //இப்போதுதான் இந்தத் தகவலைத் தெரிந்து கொண்டேன். அப்படி அவர் பேசியிருப்பின் அது கண்டிக்கத் தகுந்தது. சந்தர்ப்ப வாதம். ஏன் பைத்தியக்காரத்தனமும் கூட//

      – என்று பதிலளித்திருந்தேன்.

      இதில் இரண்டு முக்கிய விஷயங்கள்:

      1) – அப்படி அவர் பேசியிருப்பின் – என்றே குறிப்பிட்டிருக்கிறேன். நீங்கள் அப்படிப் பேசினீர்களா?

      2) /நாளை நாம் எப்படி திருவனந்தபுரம் புத்தகக் கண்காட்சியில் ஸ்டால் போட முடியும்//

      இதில் ’நாம்’ என்ற வார்த்தைக்கான பொருளை நான் தனிப்பட்ட ’ஞாநி’ என்ற நபரைக் குறிப்பதாகக் கருதவில்லை. மொத்த புத்தக விற்பனையாளரையும் சேர்த்தே அவ்வாறு நீங்கள் பேசியதாகக் கருதினேன். அதனாலேயே அதை ’கண்டிக்கத் தகுந்தது’ ’சந்தர்ப்பவாதம்’ என்றெல்லாம் சொன்னேன். ஆனால் நீங்களோ கேரளாவில் உங்கள் புத்தக விற்பனை பற்றி நான் பேசியிருப்பதாகக் கருதி விளக்கமளித்துள்ளீர்கள்.

      நம்மைப் புறக்கணிப்பவர்களுக்கு நாம் ஒத்துழைப்பு தரக் கூடாது. அவர்களை நாமும் புறக்கணிக்க வேண்டும் என்பதே என் கருத்து. ஆனால் அதற்கு அடிதடிகளோ, வன்முறைகளோ தீர்வல்ல என்பதையும், உணர்ச்சி வசப்பட்ட வெற்றுக் கூச்சல்கள் வேண்டாம் என்றும் சொல்லியிருக்கிறேன்.

      உங்கள் விரிவான விளக்கத்திற்கு மிக்க நன்றி.

      அன்புடன்
      ரமணன்

  16. Sathiyanarayanan சொல்கிறார்:

    /* தமிழகத்தில் இருக்கும் மலையாளிகளை வெளியேறச் சொல்வது , அவர்களது வர்த்தக் அமைப்புகளை மூடச் சொல்வது போன்ற நடவடிக்கைகளை நான் ஆதரிக்கவில்லை. */

    இதை செய்ய துண்டிய அதாவது முதலில் எம்மக்களை துன்புறுத்தியது மலையாளிகள் தானே, இதில் ஞானியின் நிலைப்பாடு என்ன. மேலே உள்ள வரிகள் தமிழன் தான் போராட்டத்தை துவக்கியது போல் உள்ளது.

    /* நிச்சயம் வன்முறை உதவாது. இங்கே நாயர் டீக்கடையையோ மேன நகைக்கடையையோ தாக்குவது தீர்வல்ல. பதிலுக்கு கேரளத்தில் இருக்கும் ஆயிரக்கணக்கான தமிழ் தொழிலாளர்கள், வணிகர்கள் மீதான தாக்குதல் அங்கே ஆரம்பிக்கும். */

    யார் வன்முறையை முதலில் கையில் எடுத்தது?

  17. சைதை அஜீஸ் சொல்கிறார்:

    திரு ஞானி அவர்களே!
    நீங்கள் கூறியது போலதானே
    //மே 17 இயக்கத்தினர் சாத்வீகமான முறையில், கோஷங்கள் எழுப்பினர்//
    அதனால்தானே கண்காட்சி நிர்வாகிகளும் உடனடியாக நடவடிக்கை எடுத்தனர்.
    பின்னர் மலையாள மனோரமா ஸ்டால் திறப்பதற்கு நீங்கள் முயற்சித்தது நீங்கள் கூறிய ஒத்துழையாமை இயக்கத்தையே கேவலப்படுத்தும் முயற்சி அல்லவா?

  18. Ganpat சொல்கிறார்:

    Dear ஞாநி,
    1.நீங்கள் மனோரமா ஸ்டாலுக்கு சென்றீர்களா?

    2.அங்கு ஏதேனும் புத்தகம் வாங்கினீர்களா?

    3.மேற்கண்ட இரண்டிற்கும் உங்கள் பதில் ஆம் என்றால்,
    மனோரமாவிற்கும் முல்லைபெரியார் பிரச்சினைக்கும் ஒரு சம்பந்தமும் இல்லை என்று நீங்கள் நினைக்கிறீர்களா?

    4.கண்காட்சி நடைபெறும் பதினைந்து நாட்களும் தன்னை தமிழன் எனக்கருதி,முல்லைப்பெரியார் விவகாரத்தில் முழு நியாயமும் தமிழர் பக்கம் உள்ளது எனக்கருதும் ஒவ்வொரு நபரும் மனோரமா ஸ்டாலுக்குள் அடியெடுத்து வைக்காமல் இருப்பதுதான் ஒத்துழையாமை என நான் நினைக்கிறேன்.உங்கள் கருத்து?

  19. ramanans சொல்கிறார்:

    கண்பத், என் கருத்தைச் சொல்லவா?

    நான் மலையாள ம்னோரமா செல்லவில்லை. அங்கு புத்தகம் வாங்கவும் இல்லை. ஆனால் யாராவது அங்கு தமிழ் ’பொது அறிவுப் புத்தகம்’ வாங்கச் சென்றால் தடுக்க மாட்டேன். அதே சமயம் ஜாய் ஆலுகாஸிலும், ஜோஸ் ஆலுகாஸிலும் எனக்குத் தெரிந்தவர்கள் யாராவது நகைகள் வாங்கச் சென்றால் அவர்களைத் தடுப்பேன். தமிழர்கள் நடத்தும் ஜூவல்லரியில் வாங்கச் சொல்வேன்.

    மலையாளிகள் எழுதியிருக்கும் தமிழ்ப் புத்தகங்களை புறக்கணிப்பதற்கும், மலையாளிகள் நடத்தும் பிற வியாபாரங்களைப் புறக்கணிப்பதற்கும் வேறுபாடு உள்ளது.

  20. vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

    இந்த வலைத்தளத்தில் எழுப்பப்பட்டிருக்கும்
    உணர்வுபூர்வமான ஒரு விஷயத்தின்
    தாக்கம் கருதி இதற்கு விளக்கம் அளிக்க
    முன்வந்த திரு ஞானி அவர்களுக்கு
    எனது வணக்கங்கள்.

    நான் இந்த இடுகையை எழுதுவதற்கான
    அடிப்படைக் காரணமே இது போன்ற முக்கியமான
    விஷயங்களில் நிறைய கருத்துப் பரிமாற்றங்கள்
    தேவை என்பது தான்.
    அந்த வகையில் தங்கள் கருத்துக்களை
    பதிவு செய்த அனைவருக்கும் என் நன்றி.

    ஞானி அவர்கள் கூறி இருப்பதிலிருந்து சில
    கருத்துக்களும் அதற்கான என் கேள்வியும் –

    ———————————
    // ஜெயலலிதா போல மலையாளத்தில்
    நன்றாகப் பேசத் தெரிந்த தமிழகத் தலைவர்கள்
    தொலைக்காட்சி வாயிலாகவும் தேவையானால்
    நேரில் கேரள நகரங்களுக்கு சென்றும்
    மலையாளத்திலேயே பேசி மலையாளிகளிடையே

    தூண்டிவிடப்பட்டிருக்கும் பயத்தை நீக்க
    முயற்சிக்கலாம். தமிழக சினிமா கலைஞர்களுக்கு
    கேரளத்தில் சாதாரண மக்களிடையே பெரும்
    செல்வாக்கு இருக்கிறது. தமிழ் திரைப்படங்கள்
    அங்கே பெரும் வசூலைக் குவிக்கின்றன.
    தமிழ் சினிமா பாடல்கள் இல்லாத கேரள ஊரே
    இல்லை. எனவே தமிழ் சினிமா பிரமுகர்கள்
    கேரள சுற்றுப்பயணம் மேற்கொண்டு பொய்
    பயத்துக்கெதிரான பிரசாரம் செய்ய வேண்டும்.//

    இது நடைமுறை சாத்தியமானதா ?
    கொஞ்சம் யோசித்து விட்டு பிறகு
    சொல்லுங்கள் பார்க்கலாம்.

    (முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களின்
    விளக்கமான் வேண்டுகோள் ஏற்கெனவே
    அத்தனை முக்கிய மலையாள செய்தித்தாள்களிலும்
    மலையாள மொழியிலேயே முழு பக்கத்திற்கு
    வெளி வந்து விட்டது – அதன் பின்னரும்
    அவர்களது போக்கில் எந்தவித மாறுதலும் இல்லை )

    ————————————-

    //உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை கேரள அரசு
    தொடர்ந்து ஏற்க மறுத்தால் அந்த அரசை
    அரசியல் சட்டத்தின் கீழ் டிஸ்மிஸ் செய்ய
    மத்திய அரசுக்கு அதிகாரம் உண்டு.
    அதைப் பயன்படுத்த முன்வரும்படி
    மத்திய அரசை நாம் வற்புறுத்த வேண்டும்.//

    உச்சநீதி மன்றத்தின் தீர்ப்பை கேரளா
    காலில் போட்டு மிதித்து 6 வருடங்கள்
    ஆகப்போகிறது. காங்கிரஸ் ஆளும் மாநிலத்தை
    காங்கிரஸ் மத்திய அரசு டிஸ்மிஸ் செய்யுமா ?
    இதுவும் நடைமுறை சாத்தியமானதா ?

    —————————————–

    //தமிழகம் காந்திய வழியில் ஒத்துழையாமை
    இயக்கத்தை நடத்தினாலே கேரளம் தாங்காது.
    கேரளத்துக்கு உணவுப் பொருட்களையோ
    மின்சாரத்தையோ மணலையோ ஒரு வாரத்துக்கு
    வழங்காமல் ஒத்துழையாமை செய்தால்,
    கேரளம் பெரும் சிக்கலில் ஆழ்ந்துபோகும்.//

    தலைநகரத்திற்கு வந்து நம் வீட்டிலேயே
    டேரா அடித்து அவர்கள் ஸ்டால் போட்டு
    புத்தகம் விற்பதை அனுமதித்து விட்டு,
    அவர்களுக்கு ஒரு வாரம் காய்கறிகள்
    அனுப்பாமல் பயமுறுத்தலாம் என்பது
    கொக்கு தலையில் வெண்ணை வைத்து
    பிடிக்கும் யோசனையை நினைவு படுத்தவில்லை ?

    ————————————-

    வாதத்திற்கு வாதம் பதில் வாதம் செய்ய வேண்டும்
    என்பது என் நோக்கம் அல்ல.

    ஞானி போன்ற அறிவாளிகள்,
    விஷய ஞானம் உடையவர்கள் –

    நடைமுறைக்கு உதவாத வறட்டுத் தனமான
    லட்சியங்களை போதிக்காமல்,
    மக்களின் உணர்வுகளைப் புரிந்து கொண்டு,
    அவற்றிற்கு மதிப்பு கொடுத்து,
    அவர்களின் சுக துக்கங்களில் பங்கெடுத்து,
    அவற்றை தன் எழுத்துக்களில் பிரதிபலிக்க வேண்டும்
    என்பதே என் வேண்டுகோள்.

    -வாழ்த்துக்களுடன்
    காவிரிமைந்தன்

  21. செழியன் சொல்கிறார்:

    வணக்கங்கள் காவிரிமைந்தன்,

    நீங்கள் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளும் பொருளும், அதை முன் வைக்கும் விதமும் மிக நன்றாக இருக்கிறது.

    சாதாரணமாக எழுத்தாளர் ஞானி
    யார் என்ன சொன்னாலும் respond பண்ண மாட்டார். ஆனால் அவரே பதில் எழுத வேண்டிய
    சூழ்நிலை வந்து விட்டதே.

    அருமையான பதிவுகள்.
    உங்களுக்கு என் உளமார்ந்த வாழ்த்துக்களும்
    நன்றியும்.

  22. jayakumar சொல்கிறார்:

    how to follow your blog?

  23. vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

    welcome mr.jayakumar

    when you open the site,
    at the bottom, right corner, there will be a
    +follow logo.
    Just click that .
    that is enough.

    with all best wishes,
    kavirimainthan

  24. RAVICHANDRAN G சொல்கிறார்:

    ஞானி தன் மேதமையை,இப்படித்தான் காண்பிப்பார் போலும்.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.