கச்சத்தீவு/மீனவர் பிரச்சினையை தீர்க்க இப்படியும் ஒரு வழி …

கச்சத்தீவு/மீனவர்  பிரச்சினையை தீர்க்க
இப்படியும் ஒரு வழி …

இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையினரால்
தாக்கப்படாமல் தடுக்க – அவர்களுக்கு கடலோரப்
பாதுகாப்புப் படை (Indian Coast Guard)
பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று, சென்னை
உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளையில் கோரிக்கை
விடப்பட்டபோது,

கோஸ்ட் கார்டு சார்பில் சொல்லப்பட்ட பதில் –
“இந்திய கடல் எல்லைக்குள் இருக்கும் வரை தான்
அவர்களுக்கு பாதுகாப்பு கொடுக்க முடியும்.
அவர்கள் IMBL ஐ( International Maritime
Boundary Line )தாண்டிப் போய் இலங்கை
கடல்பகுதியில் மீன் பிடித்தால் நாங்கள் என்ன
செய்ய முடியும் ?”

அதாவது கோஸ்ட் கார்டைப் பொறுத்த வரை –
கச்சத்தீவு பகுதியில் மீன் பிடித்தால் அது எல்லை
தாண்டுவது என்று அர்த்தம்.

இரண்டு விதங்களில் அவர்களின் வாதம்
தவறானது –

முதலில் கடலோரப் பாதுகாப்புப் படையின்
கடமைகளும், பொறுப்புகளும் பற்றி –
சம்பந்தப்பட்ட சட்டத்திலிருந்து சில பகுதிகள் –

—————————
THE COAST GUARD ACT, 1978
Chapter III

Duties and functions of Coast Guard.

14.(1) It shall be the duty of the Coast
Guard to protect by such measures, as it
thinks fit, the maritime and other
national interests of India in the
maritime zones of India.

(2) Without prejudice to the generality
of the provisions of sub-section (1),
the measures referred to therein may
provide for –

(a) Ensuring the safety and protection
of artificial islands, offshore
terminals, installations and other
structures and devices in any
maritime zone;

(b) Providing protection to fishermen
including assistance to them at sea
while in distress;

————————————–

1) சட்டப் பிரிவுகள், இந்திய எல்லைக்குள்
இருந்தால் மட்டும் தான் மீனவர்களுக்கு உதவ
வேண்டும் என்று கூறவில்லை.
“protection to fishermen
at sea while in distress;”
“கடலில்,ஆபத்தில் இருக்கும் மீனவர்களுக்கு
பாதுகாப்பு கொடுக்கப்பட வேண்டும்”
என்று தான் கூறுகின்றன.

2)  இந்திய கடல் எல்லை என்பதைப் பற்றி
பாதுகாப்புப் படையே தவறாகப் புரிந்து கொண்டு
அதையே சரியென்றும் வாதிக்கிறது.

ஜூன் 28, 1974 அன்று கையொப்பமிடப்பட்ட
கச்சத்தீவு பற்றிய இந்திய-இலங்கை உடன்படிக்கை
பிரிவுகள் 5 மற்றும் 6ன் படி இந்த ஒப்பந்தத்தின்படி
கச்சத்தீவு இலங்கைக்கு அளிக்கப்பட்டு விட்டாலும் கூட-

Article 5
Subject to the foregoing, Indian
fishermen and pilgrims will enjoy
access to visit Kachchativu as hitherto,
and
will not be required by Sri Lanka
to obtain travel documents or visas
for these purposes.

Article 6
The vessels of Sri Lanka and India
will enjoy in each other’s waters
such rights as they have traditionally
enjoyed therein.

“பாரம்பரியமாக இரு நாட்டையும் சேர்ந்த
மீனவர்கள் அனுபவித்து வந்த எல்லா உரிமைகளையும்
அவர்கள் தொடர்ந்து, எந்தவித கட்டுப்பாடும் இன்றி
அனுபவிப்பார்கள். கச்சத்தீவு பகுதிக்கு அவர்களது
மீன்பிடி படகுகள் சென்று வர இலங்கை அரசிடமிருந்து
எந்தவித விசாவோ, அனுமதியோ தேவையிலை”
என்று கூறப்பட்டுள்ளது.

கச்சத்தீவு பற்றிய அறிக்கையை இந்திய
பாராளுமன்றத்தில் வெளியிட்ட அப்போதைய வெளியுறவு
அமைச்சர் ஸ்வரண் சிங் கூட –

“மீனவர்கள் இதுவரை மீன்பிடித்து வந்த இடங்களில்
தொடர்ந்து தங்கள் தொழிலை செய்ய எந்த தடங்கலும்
இருக்காது” என்று உறுதி அளித்துள்ளார்.

உண்மை நிலை இவ்வாறு இருக்கையில் –
கச்சத்தீவு அருகே செல்வதோ, மீன் பிடிப்பதோ –
எல்லை தாண்டுவதாகும் என்று கோஸ்ட் கார்டு
எப்படி முடிவு செய்யலாம் ?

கோஸ்ட் கார்டு தவறான நிலையை எடுத்ததற்கு
காரணம் மத்திய அரசு இது விஷயத்தில் கடைபிடிக்கும்
ஒரு குழப்பமான நிலையே.

கச்சத்தீவு பற்றி  ஏதேனும் பிரச்சினை கிளம்புமானால்,
அது இலங்கையுடன் உள்ள உறவை பாதிக்கும் என்று
மத்திய அரசு எண்ணுகிறது.

ராஜபக்சேயின் இலங்கை அரசு, இந்திய அரசைக்
கால் காசுக்கு கூட மதிப்பதில்லை. இந்தியாவைக்
கண்டு இலங்கை பயந்தது எல்லாம் அந்தக் காலம்.
இப்போது, சைனாவின் துணை இருப்பதால்,
சந்தர்ப்பம் வாய்க்கும்போதெல்லாம் இந்தியாவை
மட்டம் தட்ட காத்துக் கொண்டிருக்கிறது இலங்கை.
அதன் வெளிப்பாடு தான் இந்திய வெளியுறவுத்துறை
அமைச்சர் இலங்கை போய் நாடு திரும்பி 24 மணி
நேரம் ஆவதற்குள் மீண்டும் மீனவர் மீது தாக்குதல் –
படகுகள் பறிமுதல் எல்லாம்.

முதலில், இந்திய  அரசு தன் கௌரவத்தையும்,
உரிமையையும் நிலை நாட்டவும், இந்திய மீனவர்கள்
நலனை பாதுகாக்கவும் உறுதி எடுத்துக் கொள்ள
வேண்டும்.

கச்சத்தீவு ஒப்பந்தப்படியே, இந்திய மீனவர்களுக்கு
கச்சத்தீவு அருகே மீன் பிடிக்க  உரிமை இருக்கிறது
என்பதை மத்திய அரசு முதலில்
இலங்கையிடம் வெளிப்படையாக அறிவித்து,

இலங்கை கடற்படையினராலோ, மீனவராலோ
அங்கு வரும் தமிழக மீனவர்களுக்கு எந்த வித
அச்சுறுத்தலோ, துன்புறுத்தலோ – நிகழக் கூடாது
என்பதையும் வலியுறுத்திக் கூற வேண்டும்.

இதை உறுதி செய்ய –
கச்சத்தீவு அருகே இந்திய கடலோர காவல்படையின்
கப்பல்கள் தொடர்ந்து நிறுத்தப்பட்டு, அங்கு
மீன் பிடிக்கும் இந்திய மீனவர்களின் பாதுகாப்பு
உறுதி செய்யப்பட  வேண்டும்.

இதையும் மீறி இலங்கை கடற்படை தொந்திரவு
கொடுக்குமேயானால், கச்சத்தீவு பற்றிய ஒப்பந்த
விதிகளை இலங்கை மீறுவதை  காரணம் காட்டியே,
இந்தியா இந்த ஒப்பந்தத்தை ரத்து செய்து
கச்சத்தீவை நிரந்தரமாகத் தன் பொறுப்பில்
ஏற்க வேண்டும்.

ஐக்கிய நாடுகள் சபையின் விதிகளின்படியே கூட,
இரு நாடுகளிடையே சில விதிகளுக்கு உட்பட்டு
ஒரு உடன்படிக்கை ஏற்பட்டு,

பிற்காலத்தில் எதாவது ஒரு தரப்பினர் அந்த
விதிமுறைகளின்படி நடக்கவோ, ஏற்கவோ மறுத்தால்,

அந்த காரணங்களுக்காகவே ஒப்பந்தத்தை ரத்து செய்யும்
உரிமை எதிர் தரப்பினருக்கு கிடைக்கிறது.

மத்திய அரசு உண்மையிலேயே இந்த பிரச்சினையை
தீர்க்க விரும்பினால் –
இலங்கை அரசுடன் இது பற்றி கடுமையான குரலில்
பேசித்தான் ஆக வேண்டும்.
இது தமிழக மீனவர்களின் ஜீவாதாரப் பிரச்சினை
மட்டும் அல்ல –
இந்தியாவின் தன்மானப் பிரச்சினையும் கூட என்பதை
மத்திய அரசு உணர வேண்டும்.

மத்திய அரசு இப்படி ஒரு நிலையை எடுக்க வேண்டும்
என்று தமிழக, மற்றும் புதுவையைச் சேர்ந்த
40 பாராளுமன்ற உறுப்பினர்களும் சேர்ந்து,
மத்திய அரசை வற்புறுத்த வேண்டும்.

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

4 Responses to கச்சத்தீவு/மீனவர் பிரச்சினையை தீர்க்க இப்படியும் ஒரு வழி …

  1. சைதை அஜீஸ் சொல்கிறார்:

    ஆஸ்ட்ரேலியாவில் ஒரு பஞ்சாபியோ அல்லது சோமாலி கடல் கொள்ளையரால் ஒரு மராட்டியோ கொல்லப்பட்டால் விரைந்து செயல்படும் இந்திய அரசு கச்சத்தீவில் கொல்லப்படும் தமிழர்களுக்கு சொல்லும் காரணம், விந்தையானது மட்டுமல்ல இந்திய இறையாண்மைக்கு குந்தகம் விளைவிக்கவும் செய்யக்கூடிய செயல்.

    பிறகு கடைசியாக அந்த 40 பேரும் ஒன்று சேர்ந்து அப்படின்னு சொன்னீங்களே காவிரிமைந்தன், அது உங்களின் நகைச்சுவையின் உச்சக்கட்டம்.ஹாஹ்ஹாஹஹ்

  2. smtvkendra சொல்கிறார்:

    இந்திய மீனவர்கள் கச்சத் தீவு பகுதியில் மீன் பிடிக்கும் தொழிலில் ஈடுபட எந்த தடையும் இல்லை
    என தெளிவாக மேற்கூறிய பிரிவு 6 -ல் திருத்தம் வழங்க வேண்டும். அல்லது தனியாக இலங்கை
    அரசுடன் ஒப்பந்தம் செய்து கொள்ள வேண்டும்.

  3. எழில் சொல்கிறார்:

    ஐயா, சரத்பொன்சேக்கா பொது மக்களின் உயிர் இழப்பை குறைக்கும் பொருட்டு மெதுவாக முன்னேறி போரை ஆகஸ்ட்டு வாக்கில் தான் முடிவுக்கு கொண்டு வர இருந்த்ததாகவும், ஆனால் அன்னையின் உத்தரவு படி நாராயணன், தேர்தல் முடிவு வரு முன் (மே 2009 ) புலிகளை இல்லாது ஒழிக்க ரசாயன குண்டுகள் உட்பட சகல உதவிகளையும் செய்ததாகவும் விஷயம் அறிந்தவர்கள் சொல்கிறார்கள். விளைவு, இந்தியாவின் நெருக்குதலால் தான் இன்று மனித உரிமை சிக்கலில் மாட்டியுள்ளதாக இலங்கை எண்ணுகிறது. மேலும் இந்தியா மறைமுகமாக (நேபாம் கொடுத்தது, வேண்டுகோள்களை வைத்து உட்பட ) உதவியதற்கான ஆதாரங்களை கோத்தாபாயா கச்சிதமாக பாதுகாத்து வருவதாகவும் கூறப்படுகிறது. இதனால் இலங்கை அரசை பாதுகாக்க வேண்டிய கட்டாயத்தில் நமது அரசு. கதையில் ஆப்பிழுத்தது ஒரு ஆண் குரங்கு; நிஜத்தில் பெண். தண்ணீர் மூக்கு வரை வரும் வரை தான் குரங்கு தனது குட்டியை தலைக்கு மேல் தூக்கி புடிக்குமாம் அதற்க்கு பின் குட்டியை காலில் போட்டு அதன் மீது ஏறி நின்று தனது உயிரை காக்குமாம். குரங்கு அதே குரங்கு தான் மீனவர்கள் தான் காலடியில் மூழ்கி சாகிறார்கள். குரங்குக்கு தன் உயிர் முக்கியமா, குட்டி (மீனவர்) உயிர் முக்கியமா… நீங்களே சொல்லுங்கள்!

  4. CDR சொல்கிறார்:

    //இந்தியாவின் தன்மானப் பிரச்சினையும் கூட என்பதை
    மத்திய அரசு உணர வேண்டும்.//

    ஒரு இந்தியருக்கு தான் இந்தியாவின் தன்மானத்தை பற்றிய அக்கறை இருக்கும். ஒரு இத்தாலி காரருக்கு அது பற்றி தெரிந்திருக்க அவசியமில்லை. அது அவருக்கு தேவையுமில்லை. என்ன தான் ஒருவர், தான் பிறந்து வளர்ந்த தாய் நாட்டை விட்டு மற்றொரு நாட்டுக்கு குடிபெயர்ந்து விட்டாலும், தன் தாய் நாட்டு மீது தான் அவருக்கு பாசம் இருக்கும். அப்படி பட்ட ஒருவர் இத்தாலியில் இருந்து இந்தியாவிற்கு குடிபெயர்ந்து வந்து விட்டார். அவரிடம் தான் இந்தியாவின் மொத்த அதிகாரமும் இருக்கின்றது. அவரிடம் போய் இந்தியாவின் தன்மானத்தை எதிர்பார்க்கலாமா?

    இப்படி ஒரு நிலைமை இந்தியாவிற்கு ஏற்பட காரணமாக இருந்த காங்கிரஸ்க்கு, நாம் எப்பொழுதும் விசுவாசமாக இருக்க வேண்டும். அது தான் நாம் காங்கிரஸ்க்கு செய்யும் வெளக்கமாறு சாரி கைமாறு…

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.