வானத்திலிருந்து குதித்த சூப்பர் சிபிஐ ….

வானத்திலிருந்து குதித்த சூப்பர் சிபிஐ ….

வெள்ளைக்காரர்களின் காலத்திலேயே
கொண்டு வரப்பட்ட சட்டம் ஸ்பெஷல் போலீஸ்
எஸ்டாபிளிஷ்மெண்ட் ஆக்ட் (SPE), 1941.
துவக்கத்தில் இரண்டாம் உலகப்போரின்போது,
இந்திய அரசு சம்பந்தப்பட்ட சப்ளை விவகாரங்களில்
நிகழ்ந்த ஊழல்களை விசாரிக்க என்று
உருவாக்கப்பட்டது.

பின்னர் இதன் நடவடிக்கைகளை மத்திய அரசு
ஊழியர்கள் தொடர்புள்ள அனைத்து லஞ்ச, ஊழல்
வழக்குகளையும் விசாரிக்க அதிகாரம் உள்ளதாக
1946ல் DSPE -டெல்லி ஸ்பெஷல் போலீஸ்
எஸ்டாபிலிஷ்மெண்ட்  ஆக்ட் பிறப்பிக்கப்பட்டது.
இதே அமைப்பு தான் 1963ல் சிபிஐ (Central
Bureau of Investigation) ஆக
மறு பெயர் பெற்றது.

துவக்கத்தில் மத்திய அரசு ஊழியர்கள் சம்பந்தப்பட்ட
லஞ்ச ஊழல் வழக்குகளை மட்டும் விசாரித்து வந்த
சிபிஐ-ன் எல்லைகள் கொஞ்சம் கொஞ்சமாக
விரிவாக்கப்பட்டு, கொலை, லஞ்சம்,
ஊழல், கடத்தல், தீவிரவாதிகள் என்று பல
துறைகளிலும் எக்ஸ்பர்ட் விசாரணை அமைப்பாகி
விட்டது.

பொதுவாக –மத்திய அரசின் ஆளுகைக்கு
உட்பட்ட  யூனியன் பிரதேசங்களில் கவனம்
செலுத்தி வரும் சிபிஐ, மாநில அரசுகள் விரும்பும்/
சம்மதம் தெரிவிக்கும் – மற்ற வழக்குகளிலும்,
கோர்ட் உத்திரவு இடும் வழக்குகளிலும்,பொறுப்பேற்று
விசாரணையை மேற்கொண்டு வருகிறது.

இந்தியா முழுவதும் வலுவான நெட்வொர்க் அமைப்பும்,
தேர்ச்சி பெற்ற, விசேஷ, அனுபவம் மிக்க,
திறமையான அதிகாரிகளைக் கொண்ட சிபிஐ –
ஒரு காலத்தில் அமெரிக்க் FBI போல் மிகச்சிறந்த
துப்பறியும் அமைப்பாகத்தான் இருந்தது.

ஆனால் அந்த அமைப்பு தற்போது –
ஆளுங்கட்சி தலைமையின்  தலையீட்டாலும்,
மத்திய அரசின் குறுக்கீட்டாலும் – கேலிக்குரிய
ஒரு பரிதாபமான அமைப்பாக நிற்கிறது !

சிபிஐ ஒரு சுதந்திரமான அமைப்பு என்று
வெளியே சொல்லிக் கொள்ளப்பட்டாலும் –
உண்மையில் அது மத்திய அரசின் (முக்கியமாக
உள் துறை அமைச்சகத்தின் )கட்டுப்பாட்டிற்குள்
தான் இருக்கிறது. சிபிஐ சுதந்திரமாகச் செயல்பட
முடியாமல், மத்திய அரசு அதை தன் அரசியல்
செயல்பாடுகளுக்குத் தகுந்தாற்போல் பயன்படுத்திக்
கொள்கிறது.

எப்படி ?

வழக்குகளை  பைசல் பண்ணாமல் வருடக்கணக்கில்
கிடப்பிலேயே போடுவதன் மூலம் சம்பந்தப்பட்ட
நபர்களை தொடர்ந்து தங்கள் கட்டுப்பாட்டிலேயே
வைக்கலாம்.
பல வழக்குகளை இதற்கு உதாரணம் காட்டலாம்-

லாலு பிரசாத் யாதவ் மீது 900 கோடி ரூபாய்
மாட்டுத்தீவன ஊழல் புகார் 1996 லிருந்து இன்னும்
கிடப்பில் கிடக்கிறது –

முலாயம் சிங் யாதவ் மீதான வருமானத்திற்கு
அதிகமான சொத்து குவித்ததற்கான வழக்கு
2007 லிருந்து கிடப்பில்,

மாயாவதி மீதான 50 கோடி ரூபாய் சொத்து
குவிப்பு வழக்கு 2008லிருந்து  கிடப்பில்,

2ஜி அலைவரிசை ஊழல் புகழ் ராஜாவின் நண்பர்
சாதிக் பாஷா வின் 600 கோடி பெருமானமுள்ள
க்ரீன் ஹவுஸ் பில்டர்ஸ் பற்றிய விசாரண- கிடப்பில்

சாதிக் பாஷவின் மரணம் – கொலையா
அல்லது தற்கொலையா – விசாரணை கிணத்தில்
போட்ட கல்லாகக் கிடக்கிறது

ஜகத் கஸ்பர் என்று ஒரு போலியின் அலுவலகத்தில்
ரெய்டு நடந்ததன் விவரம் –

நக்கீரன் துணை ஆசிரியர் காமராஜ் இல்லத்தில்
நிகழ்ந்த ரெய்டு விவரம் –

தயாநிதி, கலாநிதி மாறன் சகோதரர்களின்
மீதான புகார் –

(இப்போதைக்கு நினைவிற்கு வருவது இவ்வளவு
தான். இது போல் இன்னும் எத்தனையோ )

சில புள்ளி விவரங்களைப் பாருங்கள் –



2010ஆம் ஆண்டு கடைசியில் தேங்கியிருந்த
சிபிஐ   வழக்குகளின் எண்ணிக்கை – 9,927

2009 கடைசியில் இருந்தவை -9636
2008 கடைசியில் இருந்தவை – 9112

இவற்றில்,  2,245 வழக்குகள் (மொத்த
வழக்குகளில் 23%) பத்து வருடங்களுக்கும்
மேலாக தேங்கிக் கிடப்பவை.

50%  வழக்குகள் 5 வருடங்களுக்கும் மேலாக
தேங்கிக் கிடப்பவை.

பைசலான் வழக்குகளின் எண்ணிக்கையை
பாருங்கள் –

2008 ல் 642
2009 ல் 719
2010 ல் 745

வருடங்களின் கடைசியில் பார்த்தால் பைசலான
வழக்குகளின் எண்ணிக்கை  13 % ஐ கூடத்
தாண்டமாட்டேனென்கிறது. சிபிஐ சுறுசுறுப்பாகச்
செயல்படவே விரும்புகிறது.
ஆனால் – அரசியல்வாதிகள் விட்டால் தானே ?

அன்னா ஹஜாரே கொண்டு வந்த ஜன்லோக்பால்
மசோதா நிறைவேறி சட்டம் ஆக்கப்பட்டால்,
எந்த வழக்காக இருந்தாலும் –
புகார் கொடுத்து இரண்டு வருடங்களுக்குள் வழக்கை
முடித்து தீர்ப்பு அளிக்கப்பட்டாகி விட வேண்டும்.

இப்போது உள்ள சட்டப்படி,
அரசு அதிகாரிகள், அமைச்சர்கள் ஆகியோர் மீது
வரும் புகார்களின் மீது வழக்கு தொடுக்கும் முன்னர்
சம்பந்தப்பட்ட மாநில/மத்திய அரசுகளிடம்
அனுமதி பெற வேண்டும்.

(ஜன்லோக்பால் வந்தால் -இந்த அனுமதி
தேவை இல்லை – அதனால் தான் காங்கிரஸ்
கட்சி கொண்டு வராமல் ஏமாற்றுகிறது  )

பெரும்பாலான வழக்குகளில் –
அரசு அனுமதி தராமலே இழுத்தடிக்கிறது.
கீழ்க்காணும் விவரங்களைப் பாருங்கள் –

டிசம்பர் 2010ல் மத்திய அரசு அனுமதி கோரி
காத்திருந்த  வழக்குகள் – 236

மாநில அரசுகளின் அனுமதி கோரி காத்திருந்த
வழக்குகளின் எண்ணிக்கை – 84

புள்ளி விவரங்களின்படி
லஞ்சம் வாங்கியதாக வரும் புகார்களில் பொதுவாக
6 % அளவிற்கு தான் வழக்குகள் தொடுக்க
அரசின் அனுமதி கிடைக்கிறது.
(மீதி வழக்குகளில் எல்லாம், இலாகா பூர்வமாக
நடவடிக்கை எடுக்க உத்திரவிடப்பட்டு விடுகிறது.)

இதன் மூலம் –
94 % ஊழல் பேர்வழிகள், கிரிமினல் நடவடிக்கையில்
இருந்து தப்பி விடுகிறார்கள்.
(பாதுகாக்கப் படுகிறார்கள் என்று சொல்வதே
சாலப் பொருத்தமாக இருக்கும்)

ஒரு விஷயத்தை சாகடிக்க வேண்டுமானால்
(to kill  an issue )
ஒரு கமிட்டியை போடு என்பது அரசாங்கத்தில் சகஜமாக
இருக்கும் ஒரு  வழக்கம்.

பத்தாயிரத்திற்கும் அதிகமாக வழக்குகள் தேங்கி
இருப்பதை கண்டு,  கவலையுற்ற (?) மத்திய அரசு,
தேக்கத்தைக் குறைக்க வழிகளைக் கண்டறிய,
அமைச்சர் குழு ஒன்றை ஜனவரி 2010 -ல் அமைத்தது.

அந்த அமைச்சர் குழு, தீவிரமாக ஆராயந்த பிறகு –
மீண்டும் ஒரு கமிட்டியை நியமித்தது !!!

இந்த தடவை –

ஓய்வு பெற்ற சுப்ரீம் கோர்ட் நீதிபதி  ஒருவரைத்
தலைவராக கொண்டு ,
10 வருடங்களுக்கு மேலாக தேங்கி இருக்கும்
வழக்குகளை  தீர்க்கும் (?) வழியை
பரிந்துரைக்க வழி செய்தது.
அந்த கமிட்டி இன்னும் வழிமுறைகளை
ஆராய்ந்து கொண்டிருக்கிறது !

சிபிஐ  நிறுவனம் வானத்திலிருந்து குதித்த
சூப்பர் அமைப்பாகவே இருந்தாலும் கூட –
இந்த சூழ்நிலையில்
அதனிடமிருந்து எத்தகைய செயல்பாடுகளை
எதிர்பார்க்க முடியும் ?

(முக்கியமாக சிபிஐ முனைந்து செயல்படக்கூடாது
என்பதே அரசின் கொள்கையாக இருக்கும்போது  !)

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

3 Responses to வானத்திலிருந்து குதித்த சூப்பர் சிபிஐ ….

  1. jayakumar சொல்கிறார்:

    super thodarnthu eluthungal vaalthukkal….

  2. லால்குடி நாராயணன் சொல்கிறார்:

    உள்துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் வரும்
    சிபிஐ யிடம் உள்துறை அமைச்சரையே
    கூண்டிலேற்றி விசாரிக்கச் சொன்னால் அது
    என்ன செய்யும் ?

    பிப்ரவரி 4, வந்தால் தெரியும் !

  3. ramanans சொல்கிறார்:

    சாரி.. எனக்கு நம்பிக்கையில்லை. ஏ.கே.கங்குலி ரிடயர் ஆனவுடன் எல்லா கேஸையும் ஊற்றி மூடி விடுவார்கள். மீண்டும் பணத்தைக் கொடுத்து காங்கிரஸை ஜெயிக்க வைத்து விடுவார்கள்.

    மீண்டும் ஒரு தலைமுறை நல்ல தலைவனை நோக்கிக் காத்துக் கிடக்க வேண்டியதுதான்.

    சுயநலமற்ற நல்ல தலைவர்கள் இல்லாதது இந்தியாவின் சாபக் கேடாகி விட்டது.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.