பெருமதிப்பு வாய்ந்த புராதனச் சிற்பங்கள், கலைப்பொருட்கள் கடத்தப்படுவது எப்படி ?

பெருமதிப்பு வாய்ந்த  புராதனச் சிற்பங்கள்,
கலைப்பொருட்கள் கடத்தப்படுவது எப்படி ?

முதலில் ஒரு விறுவிறுப்பான சம்பவம் பற்றி
சொல்லப் போகிறேன்.

ஜூன் 2003ல் ஒரு நாள் -அதிகாலை நேரம்.
இன்னும் விடியவில்லை.
ராஜஸ்தானில், ஜெய்ப்பூர் நகரில்
ஒரு குடியிருப்புப் பகுதி. 3 மாடி கட்டிடம்.
சுற்றி வலுவான காம்பவுண்டுச் சுவர். ஆயுதம் தாங்கிய
ஒரு காவல்காரர்.

வீட்டைச் சுற்றிக்கொள்கிறது 15 பேர் அடங்கிய
ஒரு சிறிய போலீஸ் படை. சுவர் தாண்டப்பட்டு,
காவல்காரர் செயலிழக்கப்படுகிறார்.
கிட்டத்தட்ட ஒரு வருட காலம்,
டிஎஸ்பி ஆனந்த் ஸ்ரீவத்சவா வும் அவரது உதவியாளர்களும்
-பால்காரராகவும்,
பழம் விற்பவராகவும்,
விற்பனைப்பிரதிநிதிகளாகவும்
அந்தப் பகுதியில் அலைந்து திரிந்து சேகரித்த விவரங்களின்
விளைவு அந்த சுற்றிவளைப்பு. அதிகாலை நேரத்தில்
வீட்டில் உள்ளவர்கள் விழித்து செயல்படும் முன்னர்
அவர்களை வளைப்பதே திட்டம்.

வீடு வெளிப்பக்கமாகப் பூட்டப்பட்டிருக்கிறது.
“யார் உள்ளே ? கதவை திற”
என்று இடிக்கிறார்கள் போலீஸ் அதிகாரிகள். உள்ளே
நடமாட்டம் இருப்பதாகவே தெரியவில்லை.

திடீரென்று 3வது மாடியில் புகை.ஏதோ எரிகிற வாசனை.
டிஎஸ்பி ஆனந்த் ஸ்ரீவத்சவா கதவை உடைக்க உத்திரவு
இடுகிறார். மாடியை நோக்கி ஓடுகிறார்கள். உள்ளே,
மூன்றாவது மாடியில், படுக்கை அறையில்
பைஜாமாவுடன், கையில் ஆவணக் கட்டுகளுடன்
வீட்டின் சொந்தக்காரர் வாமன் நாராயண் கியா!
தரையில் மூட்டப்பட்ட நெருப்பில், ஆவணங்களை
எரித்துக் கொண்டிருக்கிறார்.

தடதடவென்று உள்ளே நுழைபவர்களைக் கண்டு –
“யாரைக் கேட்டு உள்ளே நுழைந்தீர்கள் ?” என்று கத்துகிறார்.
ஆவணங்களைப் பிடுங்க வரும் போலீஸ் அதிகாரிகளை
கிட்ட நெருங்காதே என்று மிரட்டுகிறார்.

அவரை மடக்கிய போலீஸ் அதிகாரிகள் வீடு முழுவதும்
சோதனை இடுகிறார்கள். சுவர்களுக்குள் ஒளித்து
கட்டப்பட்டிருக்கும் ரகசிய அலமாரிகளுக்குள் – ஏகப்பட்ட
புகைப்படங்கள். பழங்கால சிற்பங்கள், அற்புதமான கலை
நுணுக்கம் மிகுந்த -விஷ்ணு, சிவன், பாரவதி, கணபதி,
ஜெயின் தீர்த்தங்கரர்கள், சோழர் காலத்திய பஞ்சலோக
நடராஜர் சிலைகள், அவற்றின் ஆபரணங்கள் !
அத்தனையும் வண்ண வண்ண புகைப்படங்களாக !

அதன் கூடவே லண்டனிலும், அமெரிக்காவிலும் உள்ள
பழங்கால பொருட்களை ஏலம் விடும் “ஸொத்பீ”
மற்றும் “க்றிஸ்டீ”கம்பெனிகளின் கேடலாக்குகள் !

டிஎஸ்பி ஆனந்த் ஸ்ரீவத்சவா வின் முயற்சி வீண்போகவில்லை
என்றாலும், வீடு முழுவதும் தலைகீழாகத் திருப்பிப் போட்டும்
ஒரு குட்டிக் குரங்கின் சிலை கூட கிடைக்கவில்லை.

இருந்தாலும் விடவில்லை ஸ்ரீவத்சவா.
கிடைத்த  ஆவணங்களை அலசியதில்   சில
விவரங்கள் கிட்டுகின்றன. அதை வைத்துக்கொண்டு
வாமன் நாராயண் கியா விற்கு தொடர்புள்ள, மதுராவிலும்
டெல்லியிலும் இருந்த சுமார் அரை டஜன் இடங்களை
சோதனையிட்டதில் கிடைக்கிறது உழைப்பிற்கான பலன்.

பழமையான வண்ண ஓவியங்கள்,
வேலைப்பாடுகளுடன் கூடிய, மன்னர்கள் பயன்படுத்திய

சிறிதும்,பெரியதுமான கத்திகள், வாட்கள், கேடயங்கள்,
நகைகள், 348 சிறியதும், பெரியதுமான சிற்பங்கள்,
சிலைகள்.

வாமன் நாராயண் கியா வின் தொழிலே வித்தியாசமானது.
நிரந்தர உதவியாளர் என்று யாரும் கிடையாது.
20 வயதை நெருங்கிக்கொண்டிருக்கும் அவரது மகன்
மட்டுமே துணை !
தேவைக்கேற்றாப்போல், மிகப்பெரிய ஓட்டல்களில்
அறைகளை எடுத்து தங்கிக் கொண்டு – தன் தொடர்புகளுடன்
தொடர்பு கொண்டு -வியாபாரம் செய்திருக்கிறார்.

அவர் செய்த வியாபாரம்… ?

புராதன கலைப்பொருட்களை கவர்ச்சியாக,
விதம் விதமாக  வண்ணப்புகைப்படங்கள் எடுத்து,
அதில் ஆர்வமுடைய மேற்கத்திய நாடுகளைச்
சேர்ந்த மியூசியங்களுடனும், தனிப்பட்ட  நபர்களுடனும்,
லண்டனிலும் அமெரிக்காவிலும் உள்ள ஏலக்கம்பெனிகளிடமும்
காட்டி பேரம் பேசி, ஆர்டர் வாங்கி,
அதன் பின்னர் –
பழமை வாய்ந்த அந்த பொருட்களை – திருடுவதையே
தொழிலாகக் கொண்ட, தனக்கு பரிச்சயமான,
சாமர்த்தியம் உள்ள நபர்களுடன்
தொடர்பு கொண்டு, குறிப்பிட்ட பொருட்களை கடத்தி
வரச்செய்து, அவர்களுக்கு ஆயிரக்கணக்கில் பணம்
கொடுத்து வாங்கி, அதை வெளிநாட்டவர்களுக்கு
கோடிக்கணக்கில் விற்பது  !

எந்தவித பின்னணியும் இல்லாமல் இந்த
வியாபாரத்தை எப்படிச் செய்வது ?  எனவே –

ஜெய்பூரில் கல்வேலைப்பாடுகள் அமைந்த பொருட்கள்,
கைவினைப்பொருட்கள், கலைப்பொருட்கள் ஆகியவற்றை
வெளிநாடுகளிலிருந்து வரும் டூரிஸ்டுகளுக்கு விற்பனை
செய்யும் கடை ஒன்றை நடத்தி வந்தார். அதன் சார்பில்
ஒரு ஏற்றுமதி லைசென்ஸும் வாங்கி வைத்திருந்தார்.
இது தான் அவரது வெளிப்படையான வியாபாரப் போர்வை.
உள்ளுக்குள் நடந்தது பூராவும்  பழங்காலத்து, மதிப்பு
வாய்ந்த கலைச்சின்னங்களின் கடத்தல் !

இது எப்படி சாத்தியமானது ?

Antiquities and Art Treasures Act,1972
என்கிற சட்டம் தான் பழமை வாய்ந்த பொருட்களை
அயல்நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதை ஒழுங்குபடுத்தும்
சட்டம். 100 ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்த
பொருட்களை விற்பவர்கள் இந்த சட்டத்தின் கீழ் பதிவு
செய்து கொள்ள வேண்டும். அவர்கள் வெளிநாடுகளுக்கு
ஏற்றுமதி செய்யும் ஒவ்வொரு பொருளையும்
Archeological Survey of India அதிகாரிகளிடம்
காட்டி இது “பழமையான பொருள் அல்ல”என்று
சர்டிபிகேட் வாங்கி இணைக்க வேண்டும். மதிப்பு வாய்ந்த
பழம்பொருட்களுக்கு – சர்டிபிகேட் கொடுக்கப்பட மாட்டாது.

பழம்பொருட்களை கடத்துபவர்கள் – இதற்கென்று நிறைய
வழிகளை கண்டுபிடித்திருக்கிறார்கள்.

சம்பந்தப்பட்ட அதிகாரிகளை கரன்சியால் வளைப்பது
ஒரு வகை என்றாலும் – கரன்சிக்கெல்லாம் மயங்காத,
மசியாத – ஸ்ரீவத்சவா போன்ற –
நேர்மையான அதிகாரிகளும் இருக்கிறார்களே !

கடத்தப்படும் பொருள், தினமும் மக்கள் பார்வையில்
படக்கூடிய இடத்தில் இருந்தால், முதலிலேயே அவற்றை
புகைப்படம் எடுத்து, அளவுகளை துல்லியமாகத்
தெரிந்து கொண்டு, தங்கள் குழுவில் இணந்துள்ள,
தோதான சிற்பக்கலைஞர்களிடம் கொடுத்து, கச்சிதமாக
டூப்ளிகேட் ஒன்றை தயார் செய்து, ஒரிஜினலை எடுக்கும்
போதே, கொஞ்சம் கூட வித்தியாசம் தெரியாதபடி
டூப்ளிகேட்டை அதே இடத்தில் வைத்து விடுவார்கள்.

பின்னர், சில காலம் கமுக்கமாக இருந்து விட்டு,
அதை வெளிநாட்டிற்கு கடத்த முயற்சிகள் நடக்கும்போது,
மீண்டும் அதே போல் ஒரு டூப்ளிகேட் – இந்த முறை
பார்த்தாலே அது டூப்ளிகேட் தான் என்று தெரிகிற மாதிரியே
தயார் செய்து, அதை ASI அதிகாரிகளிடையே
காண்பித்து “இது ஒரிஜினல் அல்ல” என்ற சர்டிபிகேட்டையும்
பெற்றுக் கொள்வார்கள்.

இறுதியாக, ஒரிஜினல் வெளிநாட்டிற்கு வெளிப்படையாக
எடுத்துச் செல்லப்படும்போது, அதன் மீது இந்த சர்டிபிகேட்
பதிக்கப்பட்டு எடுத்துச்செல்லப்பட்டு விடும் !

கன்டெயினர்களில் அனுப்பும்போது, இவற்றை மொத்தமாக
அனுப்புவதில்லை. பலவேறு பொருட்களுக்கிடையே
இவற்றை சாமர்த்தியமாக சேர்த்து அனுப்புவார்கள்.
கஸ்டம்ஸிலும் 10 % தான்  பரிசோதனை  செய்யப்
படுகிறது என்பதால், இவற்றை வெளியே அனுப்புவதில்
அதிகம் சிரமம்  இல்லை !

இப்போது –  நமக்கு சம்பந்தம் இல்லாத
இந்த தலைப்பிற்கு
நான் ஏன் வந்தேன்
என்று கேட்கிறீர்களா ?

2003ல் கண்டு பிடிக்கப்பட்ட இந்த  வாமன் நாராயண் கியா
விற்குப் பிறகு பிடிபட்டுள்ள மிகப்பெரிய சிலைக்கடத்தல்காரர்

கடந்த வாரம் பிடிபட்டிருக்கும் –
ஜெர்மனியில் உள்ள  ப்ராங்க்போர்ட் டிலிருந்து
இன்டர்போல் உதவியுடன் கைது செய்து கொண்டு வரப்பட்டு-

தமிழ் நாட்டில், அரியலூர் கோர்ட்டில்
ரிமாண்ட் செய்யப்பட்ட சுபாஷ் சந்திர கபூர்
என்கிற 61 வயது கில்லாடி.

அமெரிக்க குடியுரிமை பெற்று அங்கேயே தொன்மையான
கலைப்பொருட்களை விற்பனை செய்யும் கடை ஒன்றையும்
நடத்தி வருகிறார் இந்த மனிதர்.
இவர் இப்போது கைது செய்யப்பட்டிருப்பது -இரண்டு
தனித்தனியான சிலைத்திருட்டு வழக்குகளுக்காக !
அரியலூர் அருகே –
திருப்பரந்தம் கோவிலிலிருந்து 10 சிலைகளையும்,
சுதமல்லி கோவிலிலிருந்து 8 சிலைகளையும் 2008-ஆம்
ஆண்டில் திருடிக் கடத்தியதாக.
திருடியவர்கள் வேறு ஆட்கள். கடத்தியவர் இவர்.
அவர்கள் எல்லாரும் ஏற்கெனவே பிடிபட்டு விட்டார்கள்.
இவர் இப்போது தான் மாட்டி இருக்கிறார்.

அதெல்லாம் சரி – மேலே ஏதோ படம் போட்டிருக்கிறாயே
என்ன என்று கேட்டிருக்கிறீர்களா ?

இந்தியாவில் – கைவினைப்பொருட்களையும்,
கற்கள் பதித்த விதம் விதமான டிசைன்களில் நகைகளையும்
வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய வசதியும், வாய்ப்பும்
உள்ள சிலர் – லைசென்ஸ் வாங்கி வைத்திருக்கிறார்கள்.
அவர்கள் நிறைய ஏற்றுமதியும் செய்கிறார்கள்.
ஆனால்,அவர்கள் என்ன ஏற்றுமதி
செய்கிறார்கள், எந்தெந்த நாடுகளுக்கு ஏற்றுமதி
செய்கிறார்கள் ? அதன் மூலம் எவ்வளவு சம்பாதிக்கிறார்கள்
என்கிற விவரங்கள் எதுவும் பொதுவாக வெளிவருவதில்லை.
அவை டாக்டர் சுப்ரமணியன் சுவாமி போன்றவர்களுக்கே
தெரியும் !

அதில் அரசியலில், அரசில், செல்வாக்கு பெற்ற சிலரும்
இருக்கிறார்கள்.  பெரிய இடத்து மருமகன்கள்,
விமான நிலையங்களில் செக்யூரிடி செக்கிங் தேவைப்படாத
நபர்கள் எல்லாம் கூட இதில் அடக்கம்.

இவ்வளவு வசதியும், வாய்ப்பும் இருந்தும்,
தொழில் நுணுக்கம் தெரிந்தும் – இத்தகையோர்,
எவ்வளவு நேர்த்தியாக, திறமையாக –
தொழில் செய்கிறார்கள். இவர்கள் பாராட்டுதல்களுக்கு
உரியவர்கள் ! அவர்கள் திறமை வியக்கத்தக்கது !

அவர்கள் தவறு செய்திருந்தால் தான்
வாமன் நாராயண் கியா, மற்றும்
சுபாஷ் சந்திர கபூர் ஆகியோரைப் போன்று –
பிடிபட்டிருப்பார்களே ! ???

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

11 Responses to பெருமதிப்பு வாய்ந்த புராதனச் சிற்பங்கள், கலைப்பொருட்கள் கடத்தப்படுவது எப்படி ?

  1. Padmanabhan Potti சொல்கிறார்:

    பலநாள் திருடன் ஒருநாள் அகப்படுவான். இதில் அரசியல் வாதிகளுக்கும் பங்கு இருக்குமோ?

    இந்த கூட்டத்தின் சொத்துக்களை பறிமுதல் செய்ய வேண்டும். நக்சல்பாரிகளையும் , தீவீரவாதிகளையும்

    திருடர்களையும் இவர்கள்தான் ஊக்குவிக்கிறார்கள் .

  2. ரமேஷ் சொல்கிறார்:

    காவிரிமைந்தன், நீங்கள் எப்படித்தான் புகைப்படங்களை
    தேர்ந்தெடுக்கிறீர்களோ.பிரமாதம். அடுத்த பிரதமரின்
    “மச்சான்” கம்பீரமாக கடையில் நின்று கொண்டிருக்கிறாரே !
    இந்த ஊசிமணி பாசிமணிகளை எல்லாம் விற்று காசு
    சம்பாதிக்க வேண்டிய நிலையிலா அவர் இருக்கிறார் ?
    இது ஒரு front office அவ்வளவு தான். உள்ளே “அதே”
    வேலை தான் நடக்கிறது போலிருக்கிறது.
    நல்ல விவரமான இடுகை. உங்கள் பணி இதே போல் தொடர
    வேண்டுகிறேன்.

  3. Ganpat சொல்கிறார்:

    கா.மை,எனக்கு ஒரு உம்ம்ம்ம தெரிஞ்சாகணும்!
    “மறுமொழியொன்றை இடுங்கள் ” என்ற தலைப்பிற்கீழ் ஒரு சிறிய செவ்வகம் காணப்படுகிறதே,இதை நிரப்பும் அளவிற்காவாவது நம் நாட்டில் ஏதேனும் நல்லவை நடக்கிறதா?

  4. காவிரிமைந்தன் சொல்கிறார்:

    கண்பத்,

    விமரிசனம் வலைத்தளத்தில் உள்ள
    இந்த “சிறிய செவ்வகம்” உங்களாலும், மற்ற
    நண்பர்களாலும், மறுமொழிகளால் நிரப்பப்படும்
    போதெல்லாம் நல்லவை நடப்பதாகவே
    நான் உறுதியாக நம்புகிறேன். இதையே ஒரு
    சிறிய அடையாளமாக வைத்துக் கொள்வோமே –
    இதைப் போல் நாட்டில் நிறைய நல்லவர்கள்
    உழைத்துக் கொண்டு தான் இருக்கிறார்கள்.
    அவர்கள் எல்லாரும் ஒன்று சேரும் நாளே
    இந்த நாட்டிற்கு விடிவு நாள்.

    -வாழ்த்துக்களுடன்,
    காவிரிமைந்தன்

  5. நல்லதொரு விளக்கமான பதிவு …
    தொடருங்கள்… வாழ்த்துக்கள்…
    பகிர்வுக்கு நன்றி…

  6. venkataramanivenkataramani சொல்கிறார்:

    மோடஸ் ஆப்ரண்டி-யை மிக யாருக்கும் எளிதில்
    புரியும் வண்ணம் எழுதியிருக்கிறீர்கள்.
    இக்குழுவில், சில உள்ளூர் அர்ச்சகர்களும் அடக்கம்.
    பல சிலை திருட்டு சம்பவங்கள் குற்ற வழக்குகளாக
    பதிவு செய்யப்படாமலே நிகழ்ந்திருக்கிறது. எப்போதாவது
    சிலைகள் திருடர்களிடமிருந்து போலீஸாரால்
    கைப்பற்றப்பட்டால், இந்த சிலைகளை இந்தக் கோவிலில்
    இருந்து திருடினேன் என கள்வனே சொல்லும் போது
    போலீஸார் திடுக்கிட்ட சம்பவங்களும் நிகழ்ந்து வருகிறது.
    கைப்பற்றப்பட்ட சிலைகளை திரும்பக் கோருவாரும்
    இல்லை.
    ஆனந்த் ஸ்ரீவத்சவாவுக்கு ஐ ஜி அருள்தான் முன்னோடி. திரு.அருள்
    அவர்கள் தமிழ ஐ ஜி பி-ஆக இருந்த காலத்தில், இம்மாதிரியான
    ஒரு ஆப்ரேஷனில் தான் கோவையில் நடந்து வந்த “கள்ள நோட்டு”
    வழக்கை முடிவுக்கு கோண்டு வந்தார்.

  7. நித்தில் சொல்கிறார்:

    Sidney Sheldon நாவலில் இதே மாதிரி மோடஸ் ஆபரண்டியை பின்பற்றி ஒரு ஆர்ட் மியுசியத்தில் திருடுவார்கள். இந்த பதிவை படிக்கும்போது அந்த நாவலைப் படித்தது ஞாபகம் வந்தது. என்ன வித்தியாசம், அது கற்பனை, இது நிஜம்.

  8. எழில் சொல்கிறார்:

    கா மை ஐயா, உங்களை போலவே ஒத்த கருத்துடைய ஒரு புண்ணியவான் கணினி தொழில்நுட்பத்துடன் ஒரு வீடியோ பதிவு பண்ணியிருக்கிறார்.

    எம்பெருமான் ‘வலை’யப்பரில் தேடிய பொது கிடைத்தது.

  9. Padmanabhan Potti சொல்கிறார்:

    நண்பரே தாங்கள் காட்டியுள்ள வீடியோவில் ஒன்றும் காணவில்லையே? ஆனால் ஆங்கிலத்தில் கீழ்கண்டவாறு
    எழுதப்பட்டிருந்தது. This Vedio is not available in your country.

  10. Ganpat சொல்கிறார்:

    கீழ்கண்ட விவரம் ஒன்றும் ரகசியமில்லை.
    ஆனால் 2014 தேர்தலுக்குள் மக்களுக்கு விளக்க வேண்டியது அவசியம்..
    மேலும் காங்கிரசுடன் கூட்டணி வைத்துக்கொள்ளும் மாநில கட்சிகளும்
    நிராகரிக்கப்படவேண்டும்.

    இந்தியாவின் பிரதமர்களாக இரண்டு ஆண்டுகளுக்கு மேல் ஆண்ட
    பெரு மக்கள்.பட்டியல்.

    ஜவஹர்லால் நேரு..1947-64…17 ஆண்டுகள்
    லால்பஹதூர் சாஸ்திரி 1964-66…2 ஆண்டுகள்
    இந்திரா காந்தி..1966-77;1980-84..15 ஆண்டுகள்
    மொரார்ஜி தேசாய்…1977-79…2 ஆண்டுகள்
    ராஜீவ் காந்தி..1984-89…5 ஆண்டுகள்
    நரசிம்ம ராவ்…1991-96…5 ஆண்டுகள்
    வாஜ்பாயி…1998-2004…6 ஆண்டுகள்
    மன்மோகன் என அழைக்கப்படும் சோனியா …2004-,,,, 8 ஆண்டுகள் (தொடர்கிறது)

    எனவே இந்தியாவின் இன்றைய நிலைக்கு முக்கிய காரணம்:
    ஜவஹர்லால் நேரு
    இந்திரா காந்தி
    மன்மோகன் என அழைக்கப்படும் சோனியா

    ஒரே காரணம்
    காங்கிரஸ்

    09:59 21/07/2012

  11. எழில் சொல்கிறார்:

    மன்னிக்கவும். முதலிலேயே குறிப்பிட்டு இருக்க வேண்டும். இவ்வாறான வீடியோக்களை பார்க்க நான் செய்வது என்னவென்று சொகிறேன். விரும்பினால் செய்து பாருங்கள். முதலில் கூகுளுக்கு சென்று ‘anonymous proxy ‘ என்று தேடுங்கள். பல நூறு தளங்கள் பட்டியலிடப்படும். அவற்றில் ஒன்றை கிளிக் செய்யுங்கள்.

    மேலே உள்ள விடியோவில் share என்ற இடத்தில் சொடுக்கினால் வீடியோவின் ‘web address ‘ கிடைக்கும். அதை ‘கட்’ செய்து நீங்கள் மேலே கிளிக் செய்த ‘anonymous proxy ‘ தளத்தின் ‘web address ‘ என்ற இடத்தில் ‘பேஸ்ட்’ செய்யுங்கள். சில தளங்களில் ‘http ‘ எனும் சொல்லை தவிர்த்து மீதியை இடுங்கள்.

    பின் அந்த ‘web address ‘ பகுதியின் முடிவில் உள்ள ‘go ‘ என்ற இடத்தில் கிளிக் செய்தால் வீடியோவை பார்க்கலாம்.

    நேரம் இருந்தால் ‘anonymous proxy ‘ என்ற சொல்லின் விளக்கத்தை வலையில் தேடி படியுங்கள் முழுவதுமாக அறிந்து கொள்வீர்கள்.

    முக்கிய குறிப்பு: ஏதாவது ஒரு சில தளம் உங்களை ஒரு மென் பொருளை தரவிறக்கம் செய்ய சொன்னால் பின் வாங்கி வேறு தளத்துக்கு செல்லுங்கள். அவ்வாறான மென்பொருள் நம்ப தகுந்தது அல்ல.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.