நேசியுங்கள் – நேசிப்பதை அவர்களுக்கு தெரியப்படுத்துங்கள் …

அன்றாட வாழ்வில் நாம் எவ்வளவோ பேருடன் தொடர்ந்து
பழகிக் கொண்டிருக்கிறோம். பெற்றோர், மனைவி,
குழந்தைகள், மற்ற உறவினர்கள், அலுவலகத்தில்,
வெளியில் – நண்பர்கள், என்று
பலதரப்பட்ட மக்கள் ! அவர்களில் பலரையும் நாம்
அவர்களின் பலவித குண விசேஷங்களுக்காக விரும்புகிறோம்.

ஆனால், எவ்வளவு பேரிடம் அதைப்பற்றி சொல்லி
இருப்போம் ?

பல வருடங்களுக்கு  முன் ஆங்கிலத்தில்
ஒரு கட்டுரை படித்தேன்.
நினைவில் இருப்பதை வைத்துக்கொண்டு அதை என் வழியில்
இங்கு தமிழில் தருகிறேன்.

————–

ஒரு டீச்சர் தன் வகுப்பு மாணவர்களிடம் வெற்றுத் தாள்களைக்
கொடுத்து, ஒவ்வொருவரையும், வகுப்பில் உள்ள மற்ற
மாணவர்கள் அனைவரின் பெயரையும் அதில் எழுதச் சொன்னார் –
ஒரு பெயருக்கும், அடுத்த பெயருக்கும் இடையே சிறிது
இடைவெளியுடன் !

மாணவர்கள் எழுதி முடித்தவுடன், டீச்சர் சொல்கிறார் –
“ஒவ்வொரு பெயருக்கும்  எதிரே, அவர்களிடம் நீங்கள்
காணும் – உங்களுக்கு பிடித்த நல்ல விஷயம் ஒன்றைப்பற்றி
எழுதுங்கள்.”
மாணவர்கள் ஒவ்வொருவரும், யோசித்து, தங்களுக்கு
தோன்றியதை எல்லாம் எழுதிக் கொடுத்தனர்.

வாரக்கடைசி – டீச்சர் ஒவ்வொரு மாணவனின் பெயரிலும்
ஒரு தாள் தயார் செய்து, அதில்  மற்ற மாணவர்கள்
அவனைப்பற்றி எழுதியிருந்த உயர்வான வார்த்தைகளை
வரிசையாகத் தொகுத்து எழுதி கீழே தன் கையெழுத்தையும்
போட்டு, மாணவர்கள் ஒவ்வொருவராக அழைத்து அவர்களின்
பெயரிட்ட தாளைக் கொடுத்தார். மாணவர்கள் அவரவர்
இடத்திற்கு சென்று அமர்ந்து படிக்கிறார்கள்.

10 நிமிடங்கள் – வகுப்பறையே சந்தோஷக்கடலில்
மிதக்கிறது.
“நான் இவ்வளவு சிறப்பானவனா – என்னைப் பற்றி
மற்றவர்கள் இவ்வளவு நல்ல அபிப்பிராயம்
வைத்திருக்கிறார்களா ?” – அத்தனை மாணவர்களும்
ஆனந்தத்தில் திளைக்கிறார்கள். அந்த பட்டியலில்
குறிப்பிடப்பட்டுள்ள குணாதிசயங்களை மேலும் மேலும்
வளர்த்துக் கொள்ள முயற்சி செய்கிறார்கள். தன்னைப்பற்றி
உயர்வாகச் சொன்னதற்காக, ஒவ்வொரு மாணவனுக்கும்,
சக மாணவர்கள் மேல் அன்பு அதிகரிக்கிறது.

பல வருடங்கள் கழிகின்றன. அந்த வகுப்பில் படித்த
மாணவன் ஒருவன் வளர்ந்த பிறகு ராணுவத்தில் சேர்கிறான்.
பிறகு போர் ஒன்றில் வீர சாகசம் புரிந்து,
மரணம் அடைகிறான். அவன் உடல் ராணுவ மரியாதையுடன்
சொந்த ஊர் கொண்டு  வரப்படுகிறது. இறுதிச் சடங்கில்
கலந்து கொள்ள அந்த டீச்சரும் செல்கிறார்.

மிடுக்கான ராணுவ உடையில் –
நாட்டின் தேசியக்கொடு போர்த்தப்பட்டு,
சவப்பெட்டியிலும்  கம்பீரத்துடன் காணப்பட்ட அந்த
மாணவனைக் கண்டு பெருமிதத்துடன் கண் கலங்குகிறார்.
ஒவ்வொருவராக வரிசையில் வந்து இறுதி மரியாதை
செலுத்துகின்றனர். டீச்சர் கடைசியாகச் செல்கிறார்.
பின்னர், பக்கத்திலேயே நிற்கிறார். உடலைத் தாங்கி
வந்த, ராணுவ சக வீரர்கள் அருகிலேயே நின்றிருந்தனர்.
ஒரு வீரர் கேட்கிறார் -“நீங்கள் சரவணனின் 10ஆம் வகுப்பு
டீச்சரா ?” என்று. டீச்சர் ஆம் என்று தலையசைக்கிறார்.

பின்னர் அந்த ராணுவ வீரன் சொல்கிறான் “டீச்சர் –
எனக்கு உங்களைத் தெரியும். சரவணன் உங்களைப்பற்றி
எப்போதும் சொல்லிக்கொண்டே இருப்பான்”

சடங்குகள் முடிந்த பின்னர், சரவணனின் பழைய வகுப்புத்
தோழர்கள் அங்கு டீச்சருடன் ஒன்றாக நின்றிருந்தனர். அங்கு
சரவணனின் தாயும் தந்தையும் வருகின்றனர்.

அந்த சோகத்திலும் தந்தை டீச்சரிடம்  கூறுகிறார் –
“டீச்சர் நான் உங்களுக்கு ஒன்றைக் காட்ட வேண்டும்.
இது சரவணன் போரில் கொல்லப்பட்டபோது, அவனது
பாக்கெட்டிலிருந்து இறுதியாக கண்டெடுக்கப்பட்டது “.

அவர் காட்டியது, பெரிய பர்ஸ்  ஒன்றில் பத்திரமாக –
பல முறை மடிக்கப்பட்டு,
மடிப்புகள் எல்லாம் டேப் போட்டு ஒட்டப்பட்டு பத்திரமாக
பாதுகாக்கப்பட்ட  ஒரு தாள். ஆமாம் – பல வருடங்களுக்கு
முன்னர் அந்த டீச்சர் சரவணனைப் பற்றிய நல்ல
குணங்களை வரிசைப்படுத்தி தொகுத்து எழுதிக் கொடுத்திருந்த
அதே  காகிதம் தான் !

கண்ணீர்ப் பெருக்குடன் சரவணனின் தாய் கூறுகிறார் –
ரொம்ப நன்றி டீச்சர் – உங்கள் கடிதத்தை அவன்
உயிரையும்விட மேலாக விரும்பினான். இத்தனை வருடங்களும்
அதை அவ்வளவு பத்திரமாக பாதுகாத்து வந்தான்.
அவனுக்கு வாழ்க்கையில் மிகுந்த தன்னம்பிக்கையும், பிடிப்பும்  
ஏற்பட இந்த காகிதம் தான் உதவியது.”

டீச்சரும் மற்ற மாணவர்களும் சரவணனை நினைத்து
கதறி அழுகின்றனர்.

—————–

இந்த வாழ்க்கைப் பாதை  கரடு முரடானது.
எங்கே துவங்கும் – எப்படி இருக்கும் -எப்போது,
எப்படி முடியும் ?
யாருக்கும் தெரியாது.

இருக்கின்ற காலத்தில் – நம்முடன் இருப்பவர்களை
அவர்களின் நல்ல இயல்புகளுக்காக நேசிப்போம்.

நல்லதும் கெட்டதும் கலந்தது தான் மனித குணம்.
ஒருவர் விரும்பத்தகாத குணத்தைக் கொண்டிருந்தால்,
நாம் அதை விரும்பவில்லை என்பதை எரிச்சல் காரணமாக,
அநேகமாக உடனேயே வெளிப்படுத்தி விடுகிறோம்.

ஆனால், ஒருவரிடம் உள்ள நற்பண்புகளை, குணங்களை –
அநேகமாக – நாம் வெளிப்படையாக பாராட்டத் தவறி
விடுகிறோம்.

கூடாது என்றல்ல. அதன் அவசியம் நமக்குத் தெரிவதில்லை.
சாம்பாரில் சற்று உப்பு அதிகமாக இருந்தால் கூட உடனடியாக
மனைவியிடம் அதைக்கூறும் கணவர்கள், அந்த சமையல்
நன்றாக இருக்கும்போது – பாராட்டுவது இல்லை !
பாராட்ட வேண்டும் என்று தோன்றுவதில்லை !

இந்த உலகில் அனைத்து உயிர்களுமே,
பாராட்டுதலை எதிர்பார்க்கிறது.கிடைத்தால் சந்தோஷப்படுகிறது !
நீங்களோ, நானோ –
யாருமே அதற்கு விதிவிலக்கல்ல.

வெளிப்படையான பாராட்டுதல் –
அவர்களிடையே  தன்னம்பிக்கையை கொடுக்கும்.
நல்ல குணங்கள் மேலும் மேம்பட உதவும்.
தோழமை உணர்வு அதிகப்பட உதவும்.

மனிதர்களை மேலும் நல்லவர்களாக  
உருவாக்க இது  உதவும்.

———————————

பின் குறிப்பு –

எனக்கு மிகவும் பிடித்த ஒரு பாடல் கீழே –
உங்கள் அனைவருக்கும் கூட அவசியம் பிடிக்கும் !

v=8sefEeamoRI&feature=related
manithan enbavan deivamagalam

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

14 Responses to நேசியுங்கள் – நேசிப்பதை அவர்களுக்கு தெரியப்படுத்துங்கள் …

  1. ரிஷி சொல்கிறார்:

    மிக அருமையான விஷயத்தினை சொல்லியிருக்கிறீர்கள் அன்பின் காவிரி மைந்தன். நேசம் மட்டுமே விரிவடைந்து செல்லக்கூடியது. எவ்வளவுக்கெவ்வளவு நம்மிடம் இருந்து பிறரிடம் நேசத்தினை செலவழிக்கிறோமே அவ்வளவுக்கவ்வளவு அது விரிவடைந்து கொண்டே செல்லும்.. நம்மிடமும், பிறரிடமும். நட்புகளையோ உறவுகளையோ ஆராதிக்க பணம் தேவையில்லை. உண்மையான நேசம் இருந்தால் போதும். நாம் பிறரை மனதளவில் நேசித்தால் மட்டும் போதாது.. அவர்களிடம் அவர்களை நேசிக்கிறோம் என்பதை தெரியப்படுத்திக்கொண்டே இருக்க வேண்டும் என்ற கூற்றையும் அழகாக சொல்லியிருக்கிறீர்கள்.

    நேசிப்பது சுகமானது;
    நேசிக்கப்படுவது அதனினும் சுகமானது.

    ஒருவன் தான் யாராலும் நேசிக்கப்படுவதில்லை என்பதை உணரும் கணத்தில் அவனுக்குள் ஒருவித வெறுமை குடிகொண்டுவிடுகிறது – அவனுள் எவ்வளவு திறமைகள் இருந்தாலும், பணம் இருந்தாலும்.

    ஆதலினால்..
    நேசிப்போம்
    நேசிக்கக் கற்றுக்கொடுப்போம்
    நேசிக்கப்பட்டு உன்னத நிலையடைவோம்.

    இவ்வலைதள வாசக நண்பர்கள் அனைவருக்கும் என் நேசத்தினை உரித்தாக்குகிறேன்.

    நேசமுடன்
    ரிஷி

    • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

      ரிஷி,

      நேசித்தலில், நேசிக்கப்படுதலில் – விளையும் ஆனந்தத்தை
      அனுபவத்தில் உணர்ந்த ஒருவரிடம் இந்த இடுகை எத்தகைய
      உணர்வுகளை உண்டு பண்ண முடியும் என்பதை
      உங்கள் பின்னூட்டத்தில் நான் உணர்கிறேன்.

      மிக நல்ல கருத்தோட்டம். நன்றி நண்பரே.

      -வாழ்த்துக்களுடன்,
      காவிரிமைந்தன்

  2. bagath சொல்கிறார்:

    Thiru K.M avarkalukku,

    Nan Manthara parattukiren. thangalathu pathippu ovvondrum miga arumai.

    Bagath.

    • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

      நண்பர் பகத்,

      உங்கள் பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி.
      உங்கள் பாராட்டிற்கு அருகதையுடையவனாக
      இருக்க தொடர்ந்து முயற்சி செய்வேன்.

      -வாழ்த்துக்களுடன்,
      காவிரிமைந்தன்

  3. Padmanabhan Potti சொல்கிறார்:

    LOVE IS GOD. GOD IS LOVE.

  4. ஜோதிஜி திருப்பூர் சொல்கிறார்:

    படித்த போது மிக்க மகிழ்ச்சியாய் உணர்ந்தேன். ஆனால் ஒரு சிறிய திருத்தம். பொதுவா எல்லோருமே வெளியே தான் திருத்த வேண்டும் என்று யோசிக்கிறார்கள், பேசுகிறார்கள். நாடு கெட்டுப் போச்சு, அத்தனை பேர்களும் ஊழல்வாதிகள் என்று இதைப் போல பலதும்.

    ஆனால் சீர்திருத்தம் அல்லது முன்னேற்பாடுகள் அல்லது மாற்றம் என்பது முதலில் தனது குடும்பத்திற்குள் இருந்து தான் தொடங்க வேண்டும். அது தான் சரியாக இருக்க முடியும். மனைவியை, தாயை, தந்தையை, சகோதரியை, குழந்தைகளை, உறவினர்களிடம் நேசம் பாராட்ட முடியாத ஒருவனால் எப்படி சமூகத்தில் அன்பு காட்ட முடியும்.

    ஆதலினால் காதல் செய்வீர். அதை
    முதலில் தங்கள் குடும்பத்தில் இருந்து தொடங்குவீர்.

    • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

      மிகச்சரியாக சொன்னீர்கள் ஜோதிஜி.

      வாழ்க்கையில் பாடம் என்பது பள்ளிப் படிப்பிற்கு
      பிறகு தான் துவங்குகிறது.

      அனுபவங்கள் தான் நமக்கு பாடங்கள்.
      ஒவ்வொரு அனுபவத்திலிருந்தும் நாம் கற்றுக் கொள்ள
      தெரிந்து கொள்ள வேண்டும். அவற்றை சரியாக
      உணர்ந்து கொண்டோமானால், நமக்கும் நல்லது.
      நம்மைச் சுற்றி இருப்பவர்களுக்கும் நல்லது.

      சிலருக்கு இது வாழ்க்கையின் ஆரம்ப கட்டத்திலேயே
      புரிகிறது. சிலருக்கு மத்திய வயதில்,
      சிலருக்கு முதிய பருவத்தில். இன்னும் சிலருக்கோ
      இறுதிவரை தெரிவதே இல்லை !

      புரிந்து கொண்டவர்களுக்கு ஒரு கடமை இருக்கிறது.
      முடிந்த வரை தான் கற்றுக்கொண்டதை மற்றவரும்
      உணரச் செய்ய முயற்சிக்க வேண்டும்.

      எல்லாரும் நல்லவராக இருந்தால் – வாழ்க்கை
      தான் எவ்வளவு மகிழ்ச்சிகரமானதாக இருக்கும் !

      -வாழ்த்துக்களுடன்,
      காவிரிமைந்தன்

  5. Thamaraiselvan சொல்கிறார்:

    நீங்கள் இதுவரை எழுதியதில் , நான் படித்ததில் , எனக்கு மிகவும் பிடித்ததில் , முதலிடத்தில் இக்கட்டுரை ..

  6. Bala சொல்கிறார்:

    I have been a regular visitor of your blog but never commented before…..
    Would like to start from you.

    All of your articles were really good and very informative…
    Keep up your good work…
    I wish, (y)our dream comes true one day…..

    Regards,
    Bala

  7. rathnavelnatarajan சொல்கிறார்:

    இன்று ஆசிரியர் தினம். நெகிழ வைக்கும் அருமையான பதிவு. நன்றி திரு காவிரி மைந்தன்.

  8. Venkatesh சொல்கிறார்:

    Really excellent post…! Great work… We are luck to read your blogs… Thanks a lot..

  9. amve சொல்கிறார்:

    அன்புடையார் என்றும் உடையர் பிறர்க்கு !

  10. எழில் சொல்கிறார்:

    உங்கள் பதிவு பசு மரத்து ஆணி போல பதிந்து விட்டது. மிக்க நன்றி.

  11. சிறப்பான பகிர்வு… ரசித்துப் படித்தேன்…

    உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது…வாழ்த்துக்கள்… இந்த வார வலைச்சர ஆசிரியருக்கு நன்றி…

    மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2012/09/blog-post_9.html) சென்று பார்க்கவும்…

    நேரம் கிடைச்சா நம்ம தளம் வாங்க… நன்றி…

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.