டாக்டர் அன்புமணி மீண்டும் மத்திய அமைச்சர் ஆனால் தான் இது நடக்குமா ?

அண்மையில் ஆஸ்திரேலிய அரசு, டிசம்பர் 1, 2012
முதல் அமுலுக்கு வரும்படியாக  ஒரு சட்டம் கொண்டு
வந்தது  (Plain Packaging Laws)அதன்படி –

1)  சிகரெட்டு பாக்கெட்டுகளின் –மேல் பக்கத்தில்,
அதன் அளவில் 75 %-உம், பின் பக்கத்தில் 90 %
அளவிற்கும் பளிச்சென்று  தெரியும்படியாக -புகைபிடிப்பதால்
வரக்கூடிய வியாதிகளின் அதிர்ச்சி தரும் புகைப்படங்களை
அச்சடிக்க வேண்டும்.( வாய் புற்று நோய்,கண்களில் பாதிப்பு
போன்றவை  –மாதிரி புகைப்படம் கீழே )

2) சிகரெட்டின் பிராண்டு பெயரை பளிச்சென்று தெரியும்
வண்ணங்களிலோ, பெரிய அளவிலோ தெரியும்படி
அச்சடிக்கக் கூடாது.

3) பிராண்டு பெயர், மற்றும் வகைகளை –
எந்த கம்பெனியும் அதன் விருப்பம் போல்
டிசைன் பண்ணவோ, அச்சடிக்கவோ கூடாது.
அரசாங்கத்தால் டிசைன் பண்ணி கொடுக்கப்பட்டுள்ள
(மாதிரி படம் கீழே )

– சிகரெட்டு பாக்கெட்டுகளின் அட்டையின் கீழே அதற்கென
ஒதுக்கப்பட்டுள்ள ஆலிவ் க்ரீன் வண்ணத்தில் உள்ள பட்டையான
இடத்தில், ஒரே மாதிரியாக,  குறிப்பிட்ட அளவிலும்,
வண்ணத்திலும் தான் அச்சடிக்கப்பட வேண்டும்.

3) பிடிப்பது உயர்ரக சிகரெட்டா அல்லது மலிவான
சிகரெட்டா என்பதே வெளியே தெரியாதவாறு அனைத்து
சிகரெட்டுகளும் ஒரே தோற்றத்தில் இருக்க வேண்டும்.

4) கடைகளில், பளிச்சென்று கண்ணில் தென்படும்படி
சிகரெட்டு பாக்கெட்டுகளை அடுக்கி வைக்கக்கூடாது.

ஆஸ்திரேலியாவில் – தொலைக்காட்சிகளிலும்,
வானொலியிலும், பத்திரிகைகளிலும் –
சிகரெட்டு விளம்பரங்களை
ஏற்கெனவே தடை செய்தாகி விட்டது.

பணி புரியும் இடங்களில் புகை பிடிப்பதையும் தடை
செய்தாகி விட்டது.

பொது இடங்களில் புகை பிடிப்பதையும்
தடை செய்தாகி விட்டது.

சிகரெட்டுகளின் மீது எக்கச்சக்கமாக
வரி போட்டு சிகரெட்டு பிடிப்பதை அதிகம் செலவு
பிடிக்கக்கூடிய ஒரு பழக்கமாகவும் ஆக்கி விட்டது அரசு.

ஆஸ்திரேலிய அரசின் இந்த Plain Packaging Laws
சட்டத்தை எதிர்த்து ஆக்ரோஷத்துடன் உயர்நீதிமன்றத்தில்
வழக்கு தொடுத்தன புகையிலை கம்பெனிகள்.
British American Tobacco,
Philip Morris International,
Imperial Tobacco,
Japan Tobacco International –  
என்று -எல்லாம் பெரிய பெரிய பன்னாட்டு புகையிலை
கம்பெனிகள். கோடிக்கணக்கான டாலரை கொட்டி
இரைத்து எப்படியாவது இந்த சட்டத்தை செல்லுபடி
ஆகாமல் செய்ய வேண்டுமென்று துடித்தன.

ஒரு நாட்டில் ஆரம்பித்தால் – உலகம் பூராவும்
பல நாடுகள் இதே போல் செய்ய ஆரம்பித்து விடுமே –
தங்கள் வியாபாரம் என்ன ஆகும் என்கிற
கவலை அவர்களுக்கு !

பிராண்டு பெயரை, ட்ரேட் மார்க்கை கவர்ச்சியாக,
தாங்கள் விரும்பும் விதத்திலும், அளவிலும் அச்சடிப்பது
தங்கள் உரிமை (Intellectual Property Rights)
என்றும் தங்கள் வியாபாரத்தில் கை வைக்க ஆஸ்திரேலிய
அரசுக்கு உரிமை இல்லை என்றும் வாதித்தனர்.

புகையிலையினால் ஏற்படும் கேடுகள் பற்றி அரசாங்கம்
தன் செலவில் தான் விளம்பரம் செய்ய வேண்டுமே தவிர
சிகரெட்டு கம்பெனிகளின் செலவில் அவற்றின்
பாக்கெட்டுகளின் மேல் செய்யும்படி வற்புறுத்துவது
சட்ட விரோதம் என்றும் வாதித்தனர்.

ஆனால் – அனைத்து விவாதங்களும் முடிவடைந்த பின்
ஆஸ்திரேலிய உயர் நீதிமன்றம் அளித்த பரபரப்பான
தீர்ப்பில் – தங்கள் குடிமக்களின் ஆரோக்கியமான
வாழ்விற்காக, எத்தகைய சட்டத்தையும் கொண்டு வர
அரசாங்கத்திற்கு உரிமை உண்டு என்று தீர்ப்பு அளித்து
விட்டது.

உலகம் பூராவும் உள்ள – புகையிலை எதிர்ப்பாளர்கள்
இதை மிகுந்த உற்சாகத்துடன் வரவேற்றுள்ளார்கள்.

விரைவில், பல ஐரோப்பிய நாடுகளும் இந்த வழியை
பின்பற்றும் என்பதற்கான அறிகுறிகள் தெரிகின்றன.

ஆஸ்திரேலியாவின் மக்கள் தொகையில் கிட்டத்தட்ட
17% மக்கள் புகையிலை பழக்கம் உள்ளவர்கள்.

இந்தியாவில் கிட்டத்தட்ட 27.5 கோடி மக்கள் எதாவது
ஒரு விதத்தில் (பீடி, சிகரெட்டு, புகையிலை, பான்
பராக் போன்றவை ) புகையிலை பழக்கம் உடையவர்களாக
இருப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன.

இந்தியாவிலும்- தொலைக்காட்சிகளிலும்,வானொலியிலும்,
பத்திரிகைகளிலும் சிகரெட்டு விளம்பரம் ஏற்கெனவே
தடை செய்யப்பட்டு உள்ளது.

திரைப்படங்களிலும் ஓரளவு கட்டுப்பாடுகள் கொண்டு
வரப்பட்டுள்ளன.
பணி இடங்களிலும், பொது இடங்களிலும் புகை பிடிக்க
தடை விதிக்கப்பட்டிருக்கிறது.

அட்டைப்பெட்டிகளின் மீது கொடூரமான வியாதிகளின்
புகைப்படங்களை அச்சடிப்பது போன்ற இன்னும் பல வித
நிர்பந்தங்களை கொண்டு வர, டாக்டர் அன்புமணி
மத்திய சுகாதார அமைச்சராக இருந்தபோது
மிகத்தீவிரமாக முயற்சி செய்தார். இந்தியாவின்
புகையிலை கம்பெனிகளும், கேரளா போன்ற சில மாநில
அரசுகளும் இதில் நேரடியாகவும், மறைமுகமாகவும்
தலையிட்டு – பல தடங்கல்களை ஏற்படுத்தின.

எந்தவித நிர்பந்தத்திற்கும் அடிபணியாமல், அவரைப்
பொருத்த வரையில் அன்புமணி முழுமனதோடு
தீவிரமாகவே முயற்சி செய்தார். ஆனால் இந்த முயற்சிகள்
வெற்றி பெறவில்லை !

ஏனோ தெரியவில்லை – இந்தியாவில் பொதுவாக
அரசியல்வாதிகள் மக்களின் ஆரோக்கியத்தைப் பற்றி பெரிதாக
கவலைப்படுபவர்களாக இல்லை.

நமக்குத் தெரிந்தவரை – பலன் கிடைக்கிறதோ இல்லையோ,
தொடர்ந்து சிகரெட்டு, மது இரண்டிற்கும் எதிராக
தீவிரமாகப் பேசும் தலைவர்கள் யார் யார் என்று
எண்ணிப்பார்த்தால் –
டாக்டர் ராம்தாஸ், டாக்டர் அன்புமணி ஆகியோர் பெயர்கள்
மட்டும் தான் நினைவிற்கு வருகின்றன !
துரதிருஷ்டவசமாக -இந்த இருவருமே அதிகாரத்திற்கு
வரக்கூடிய வாய்ப்புகள் கண்ணுக்கு எட்டியவரை இருப்பதாகத்
தெரியவில்லை.

ஆட்சி அதிகாரத்தில் இருந்து கொண்டு நல்லது செய்வது
ஒரு வித சாதனை. ஆனால் அதிகாரத்தில் இல்லாவிட்டாலும்
நல்ல லட்சியங்களுக்காக  மக்கள் சக்தியைத் திரட்டி
தொடர்ந்து போராடி வெற்றி பெறுவது இன்னொரு வித சாதனை.

எனவே பதவியில் இல்லாவிட்டாலும்  கூட இவர்கள் –
மற்ற பொது நல அமைப்புகள், தொண்டு நிறுவனங்களுடன்
கூட்டாகச் சேர்ந்து இறங்கி இத்தகைய சட்டங்கள் இந்தியாவிலும்
கொண்டு வரப்பட தீவிரமாக முயற்சி செய்யலாம்.

பதவி அரசியல் வேறு -மக்கள் நலம் வேறு என்றாகி விட்ட
இந்த கால கட்டத்தில், மக்கள் நலனை கவனிப்பவர்களே
என்றும் நினைவு கூறப்படுவர்.

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

5 Responses to டாக்டர் அன்புமணி மீண்டும் மத்திய அமைச்சர் ஆனால் தான் இது நடக்குமா ?

  1. பிரபு சொல்கிறார்:

    மருத்துவக் கல்லூரிகளுக்கு அனுமதி வழங்கியது
    தொடர்பாக டாக்டர் அன்புமணி மீது சில
    புகார்கள் கூறப்பட்டு விசாரணையில் உள்ளன.

    இருந்தாலும், நீங்கள் கூறுவது போல், தனி மனித
    ஒழுக்கம் சம்பந்தப்பட்டவைகளை வலியுறுத்திக் கூறும்
    அரசியல் தலைவர்கள் தமிழகத்தில், டாக்டர் ராம்தாஸ்/
    அன்புமணி மற்றும் தமிழருவி மணியன் ஆகியோரை விட்டால்
    வேறு யாரும் இல்லை தான்.

    சாராயம், புகையிலை இல்லாத தமிழ்நாடு உருவாக
    அனைத்து தரப்பினருமே முயற்சிக்க வேண்டும்.
    நல்ல கருத்துக்களைச் சொல்கிறீர்கள். நன்றி.

    பிரபு

  2. Padmanabhan Potti L சொல்கிறார்:

    புகையிலை அல்லது மது ஒழிப்பு பற்றி அன்புமணியோ அவர் தந்தை ராமதாஸோ ஒரு அரசியல்வாதியாக பேசும் பேச்சுக்களை ஆளும்கட்சியாக குறைந்த பட்சம் அமைச்சராக இருந்தால் கூட அமுல்படுத்த முடியாது.

  3. todayandme சொல்கிறார்:

    “குடிமக்களின் ஆரோக்கியமான வாழ்விற்காக, எத்தகைய சட்டத்தையும் கொண்டு வர அரசாங்கத்திற்கு உரிமை உண்டு”

    தற்போது தமிழக அமைச்சரவையில் அங்கம் வகிக்கும் சுகாதாரத் துறை அமைச்சரும் ஒரு ஆர்த்தோ டாக்டர் தான். இதுவரை ஏன் இந்த சிந்தனை உதிக்கவில்லை என்று தெரியவில்லை. இதை அவருக்கு மெயில் பண்ணுங்க.
    mlavellore@tn.gov.in, hfsec@tn.gov.in , cmcell@tn.gov.in

  4. நித்தில் சொல்கிறார்:

    // இந்தியாவிலும்- தொலைக்காட்சிகளிலும்,வானொலியிலும்,
    பத்திரிகைகளிலும் சிகரெட்டு விளம்பரம் ஏற்கெனவே
    தடை செய்யப்பட்டு உள்ளது.

    திரைப்படங்களிலும் ஓரளவு கட்டுப்பாடுகள் கொண்டு
    வரப்பட்டுள்ளன. //

    எழுதுவதற்கு வேதனையாக உள்ளது. திரைப்படங்களில் சிகரெட் பிடிப்பதுமாதிரியான காட்சிகள் வராமல் இருக்கலாம். ஆனால் டாஸ்மாக்கை காண்பிக்காமல் இன்று எந்த தமிழ் சினிமாவும் இல்லை. 15 அல்லது 20 வருடங்களுக்கு முன்னால் வில்லன் அறிமுக காட்சியில் மது அருந்துவது போல ஓரு காட்சி இருக்கும். இப்பல்லாம் கதாநாயகன் அறிமுகமே பார் உள்ளேதான். இல்லாவிட்டால் இரண்டாம் கதாநாயகன் அதான் சிரிப்பு நடிகர் தண்ணி போட்டு அலம்பல் பண்றமாதிரி காட்சி. இளம் தலைமுறையினரை சீரழிப்பதில் இன்றைய சினிமாவின் பங்கு மிக அதிகம்.

  5. நித்தில் சொல்கிறார்:

    // ஏனோ தெரியவில்லை – இந்தியாவில் பொதுவாக
    அரசியல்வாதிகள் மக்களின் ஆரோக்கியத்தைப் பற்றி பெரிதாக
    கவலைப்படுபவர்களாக இல்லை. //

    மக்களப்பத்தியே கவலப்படாதவங்க, அவங்களோட ஆரோக்கியத்தபத்தியா கவலப்படப்போறாங்க. அரசாங்க மருத்துவமணைகளின் நிலமையே இதற்கு சாட்சி. மருத்துவமனையில் எலி கடிச்சு குழந்தை இறந்த அவலம் எங்காவது கேட்டதுன்டா? இவர்களுக்கு ஏதாவதுன்னா வெளிநாடுகளுக்கு காதும் காதும் வச்சமாதிரி போயிடுவாங்க அல்லது தனியார் மருத்துவமணைக்கு போயிடுவாங்க…

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.