இங்கு யாருக்கும் …………..இல்லை …!!

இங்கு யாருக்கும் …..இல்லை …!!

red fort -modified-1
கடந்த சில நாட்களில் தொடர்ந்து சில திரைப்படங்களைக்
காணக்கூடிய (வீட்டிலேயே தான் ) வாய்ப்பு கிடைத்தது.

கப்பலோட்டிய தமிழன் திரைப்படம்-
செக்கிழுத்த செம்மல் வ.உ.சி,
சுப்ரமணிய சிவா, பாரதி, வீரன் வாஞ்சிநாதன்
போன்ற தமிழகத்தைச் சேர்ந்தவர்களையும் –

காந்தி திரைப்படம் – நேரு, லோகமான்ய திலகர்,
வல்லப் பாய்  படேல்,ராஜாஜி, சுபாஷ் சந்திர போஸ்
போன்ற அகில இந்திய தலைவர்களையும், –

மங்கள் பாண்டே – தி ரெய்ஸிங்  திரைப்படம் –
முதல் சுதந்திரப் போர் (சிப்பாய்க்கலகம்) துவங்க
முக்கிய காரணமாக இருந்த –
(34 பெங்கால் ரெஜிமெண்டைச் சேர்ந்த –
ஏப்ரல் 8, 1857 அன்று பிரிட்டிஷ்காரர்களால்
பொதுமக்கள் மத்தியில் தூக்கில் தொங்கவிடப்பட்ட)

சிப்பாய் மங்கள் பாண்டே, ஜான்சி ராணி
லட்சுமி பாய்  உட்பட  அனைத்து
முதல் சுதந்திரப் போராட்ட வீரர்களையும் –

காலா பாணி திரைப்படம் – அந்தமான் சிறையில்
அடைக்கப்பட்டிருந்த, வீர் சவார்க்கர் உட்பட
அத்தனை சுதந்திரப் போராட்ட வீரர்களையும் –
நினைத்து  உணர்ச்சி வசப்பட வைத்தது.

ஆனால் அடுத்த நிகழ்வை –
நினைத்தாலே  எரிகிறது – கொதிக்கிறது.

இத்தனை ஆயிரம் பேர், இத்தனை லட்சம் பேர்,
தங்கள் உயிரையும், வாழ்க்கையையும் –
தியாகம் செய்து போராடிப் பெற்ற சுதந்திரம்
இன்று எந்த கதியில் இருக்கிறது ?

26 ஜனவரி – இந்திய குடியரசுத் திருநாள்.

மர பொம்மை போல்,
முகத்தில் எந்தவித உணர்ச்சியையும் காட்டாத
ஒரு இயந்திர மனிதர் இந்த சுதந்திர நாட்டின்
மூவர்ணக் கொடியை ஏற்றி வைத்து –
அமெரிக்காவிற்கு சல்யூட் அடிக்கிறார்.

அதன் இத்தாலியத் தலமை –
அதே போல் எந்தவித உணர்ச்சியையும்
வெளிக்காட்டாமல், மௌனமுடன்
கவனித்துக் கொண்டிருக்கிறது.

இரண்டு பேரிடமும் ஒரு மாபெரும் ஜனநாயக
நாட்டின் குடியரசுத் திருநாளைக் கொண்டாடுகிறோம்
என்கிற மகிழ்ச்சியோ, உணர்வோ -சற்றும் இல்லை !

இத்தனை லட்சம் இந்திய சுதந்திரப் போராட்ட வீரர்கள்
இன்னல்களை அனுபவித்தது, தங்கள் இன்னுயிரை
ஈந்தது – இதற்காகத் தானா ?
சுதந்திர இந்தியா இப்படித்தான் இருக்கப்போகிறது
என்பது அன்றே அவர்களுக்குத் தெரிந்திருந்தால் –
அவர்களாவது நிம்மதியாக தங்கள் குடும்பத்துடன்
இல்லற வாழ்வில் இனிதே ஈடுபட்டிருக்கலாமே !

பொது மக்களைப் பற்றியோ, அவர்களது உணர்வுகளைப்
பற்றியோ கொஞ்சமாவது கவலைப்படுகிறதா இந்திய அரசு ?

டெல்லி மருத்துவ மாணவி ரேப் சம்பவத்தைத்
தொடர்ந்து அமைக்கப்பட்ட
ஜஸ்டிஸ் வர்மா தலைமையிலான கமிஷன் சென்ற வாரம்
தன் ரிப்போர்ட்டைக் கொடுத்திருக்கிறது.

அந்த கமிஷன் –  பொது மக்களிடமிருந்தும்
பல சமூக, பெண்கள் நல அமைப்புகளிடமிருந்தும்
பெற்ற சுமார் 80,000 யோசனைகளையும்,
பல்வேறு மனித நேய அமைப்புகளையும்,
கலந்து ஆலோசித்து 200 பக்க ரிப்போர்ட் ஒன்றை
தயாரித்து இருக்கிறது.

டிசம்பர் 23ந்தேதியன்று கமிஷனை நியமித்து
உத்திரவு கிடைக்கப்பெற்றதும், முதல் கேள்வியாக
ஜஸ்டிஸ் வர்மா அடுத்து பாராளுமன்றம் எப்போது
கூடவிருக்கிறது என்று அரசிடம் கேட்டிருக்கின்றார்.
பிப்ரவரி 23 என்று சொல்லப்பட்டிருக்கிறது. அத்தனை
நாட்கள் கூட தனக்கு தேவையில்லை என்று கூறி விட்ட
அவர் ஒரே மாதத்தில் தனது ஆலோசனைகளைக் கொண்ட
ரிப்போர்ட்டைக் கொடுத்து விட்டார்.

கிரிமினல் சட்ட( Indian Penal Code) திருத்தங்கள்,
Armed Forces Special Actக்கு திருத்தங்கள்,
போலீஸ் துறைக்கு நழுவிச் செல்ல முடியாத பொறுப்புகள்,
டெல்லி அரசுக்கு போலீஸ் பொறுப்பு/விதிமுறைகள்,
உள்துறை செயலருக்கு கண்டனம்,

பொங்கி எழுந்து அமைதியான முறையில் கண்டனம்
தெரிவித்த பொது மக்களுக்கு, முக்கியமாக
இளைய சமுதாயத்திற்கு  பாராட்டு –

இத்தனையையும் தெரிவித்துள்ள கமிஷன் ரிப்போர்ட் –

நிறைவேற்றப்பட்டால், இந்தியாவின் எதிர்கால
அரசியலையே முற்றிலுமாக மாற்றி விடக்கூடிய
மிக முக்கியமான ஒரு ஆலோசனையையும்
தெரிவித்திருக்கிறது.

இந்தியாவில் உள்ள சட்டமன்ற,
பாராளுமன்ற உறுப்பினர்களில்  ஐந்தில் ஒரு பங்கினர்
மீது கிரிமினல் வழக்குகள்
நிலுவையில் இருப்பதை சுட்டிக்காட்டி, இவர்கள்
அத்தனை பேரையும் உடனடியாகப் பதவி
விலகச் செய்ய வேண்டும்.

மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தில்
(Representatives of People Act )
உடனடியாக திருத்தங்கள் கொண்டு வரப்பட்டு,
எந்த வேட்பாளராவது  கிரிமினல் கோர்ட்
நடவடிக்கைகளுக்கு உட்பட்டிருந்தால் –
அதாவது அந்த வழக்குகளில் cognizance of court
கொடுக்கப்பட்டிருந்தால் –
அவர்கள் தேர்தலில் போட்டியிட
தடை செய்யும் விதத்தில் ( to disqualify such
candidates ) விதிகள் உருவாக்கப்பட வேண்டும்
என்பதே அது.

முதலில் -அற்புதமான ஒரு ரிப்போர்ட்டை அதிவிரைவாகத்
தயாரித்துக் கொடுத்துள்ள ஜஸ்டிஸ் வர்மாவையும்,
அவரது இதர கமிட்டி உறுப்பினர்களையும் மனதாரப்
பாராட்ட வேண்டும்.

அடுத்து –  ஜஸ்டிஸ் வர்மா கமிஷன் கொடுத்துள்ள
பரிந்துரைகள் பற்றி –

40 ஆண்டுக்காலம் மத்திய அரசு நிர்வாகத்தில்
குப்பை கொட்டியவன்
என்கிற அனுபவத்தில் சொல்கிறேன் –
ஒரு பிரச்சினையை அமுங்கச் செய்ய வேண்டுமென்றால் –
உருப்படாமல் போகச் செய்ய வேண்டுமென்றால் –
குப்பைக்கூடையில் போடு –
அல்லது ஒரு கமிட்டியைப் போடு
என்பது அரசாங்கத்தில் எழுதப்படாத ஒரு விதி.

அதே எண்ணத்தில் தான்,
அப்போதைக்கு எழுந்த சூட்டை,
கொந்தளிப்பை தவிர்க்க வேண்டுமென்ற
எண்ணத்தில் தான் மத்திய அரசு
இந்த கமிட்டியையும் அமைத்தது.

ஆனால் ஜஸ்டிஸ் வர்மா கமிஷன் இந்த விஷயத்தை
இவ்வளவு சீரியஸாக எடுத்துக் கொண்டு, இப்படி
ஒரு ரிப்போர்ட்டை ஒரே மாதத்தில்  கொடுக்கும்
என்று மத்திய அரசில் யாரும்  
கனவு கூட கண்டிருக்க மாட்டார்கள்.

அடுத்து  மத்திய அரசு என்ன செய்யும் என்று
எதிர்பார்க்கிறீர்கள் … ?

ஜஸ்டிஸ் வர்மா கமிஷனின் ஆலோசனைகள்
என்ன ஆகும் என்று நினைக்கிறீர்கள் ?

அடுத்து பாராளுமன்றம் கூடும்போது – எதிர்க்கட்சிகள்
என்ன செய்யும் என்று எதிர்பார்க்கிறீர்கள் ?

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

11 Responses to இங்கு யாருக்கும் …………..இல்லை …!!

  1. ரிஷி சொல்கிறார்:

    //சுதந்திர இந்தியா இப்படித்தான் இருக்கப்போகிறது என்பது அன்றே அவர்களுக்குத் தெரிந்திருந்தால் – அவர்களாவது நிம்மதியாக தங்கள் குடும்பத்துடன் இல்லற வாழ்வில் இனிதே ஈடுபட்டிருக்கலாமே !//

    இன்று பெரும்பாலான ஜனத்தினர் அமைதியாக இருப்பதன் காரணமே இதுதான். தங்கள் அளவில் இதை மாற்ற முடியாது என்று ஏற்றுக்கொண்டு விட்டவர்கள் அவ்வப்போது சிறு சிறு எதிர்ப்புகளை ஆற்ற மாட்டாமல் வெளிப்படுத்துகின்றனரே ஒழிய, ஒட்டுமொத்தமாய் கொந்தளிக்கவில்லை. எதிர்காலத்தில் அமையவிருக்கும் மாற்று அரசும் இப்படித்தான் இருக்கும் என்பதை மக்கள் உணர்ந்திருப்பதனால்தான் நம் வளங்கள் நம் சக மனிதர்களாலேயே களவாடப்பட்டு வருகிறபோதும் பெரிய அளவில் அணிதிரள்வதில்லை. சரியான சித்தாந்தமும், அளப்பரிய வீரியமும் இன்றி யாராலும் இம்மக்களை ஒன்று திரட்ட முடியாது.

  2. ரிஷி சொல்கிறார்:

    //அடுத்து மத்திய அரசு என்ன செய்யும் என்று எதிர்பார்க்கிறீர்கள் … ?//

    “மத்திய அரசு ஐந்து அமைச்சர்கள் கொண்ட கமிட்டி ஒன்றை அமைத்து இதை கவனமாக பரிசீலித்து வருகிறது” என யாராவது ஒரு அல்லக்கை அமைச்சர் மூலமாக செய்தி வெளியிடப்படும். அது அநேகமாக நம் நாராயணசாமியாகக் கூட இருக்கலாம்! பரிசீலிக்கப்படும்…நிச்சயம் பரிசீலிக்கப்படும்.. 2037 வரை கூட பரிசீலித்துக்கொண்டே இருப்பார்கள். இதற்கென காலக்கெடு எதுவும் நம் அரசியல் சட்டத்தில் இல்லை.

    //ஜஸ்டிஸ் வர்மா கமிஷனின் ஆலோசனைகள் என்ன ஆகும் என்று நினைக்கிறீர்கள் ?//

    மேலேயே சொல்லியாச்சு…

    //அடுத்து பாராளுமன்றம் கூடும்போது – எதிர்க்கட்சிகள் என்ன செய்யும் என்று எதிர்பார்க்கிறீர்கள் ?//

    எதிர்க்கட்சியாவது ஆளுங்கட்சியாவது!!! அனைத்தும் ஓட்டுப் பொறுக்கிக் கட்சி வகையறாதானே! அரசை எதிர்ப்பது போல, வர்மா கமிஷனின் முடிவை செயல்படுத்த வேண்டும்போல கோரிக்கை வைப்பார்கள். கத்துவார்கள். கிரீச்சிடுவார்கள். சைடு கேப்பில் இது இந்திய அரசியலமைப்பு சட்டத்தை ஸ்திரத்தன்மையற்றதாக ஆக்கிவிடும் என்று அவர்களே முதலில் சில வரிகளை எதிர்ப்பார்கள். அப்புறம் மொத்த வர்மா கமிசன் ரிப்போர்ட்டையே எதிர்ப்பார்கள். இதற்கிடையில் பல நூறு புதிய பிரச்சினைகள் எழுந்து தாண்டவமாடும். இந்தப் பிரச்சினை பற்றியெல்லாம் டிவியில் ஆழ்ந்து பார்த்துக்கொண்டிருக்கும்போது நம் கிளையண்ட் கூப்பிடுவார். செல்ல வேண்டியிருக்கும். பையன் ஸ்கூலில் நடந்த பிரச்சினைகளை ஒப்பாரி வைப்பான். வீட்டுக்கு பக்கத்து வீட்டு ஆண்ட்டி புறணி பேச வரும். ஆளாளுக்கு கவனத்தை திருப்ப ஒவ்வொரு பிரச்சினைகள்.

  3. ஜோதிஜி திருப்பூர் சொல்கிறார்:

    விழா இனிதே முடிந்தது. மின் அஞ்சல் வழியே இந்த தலைப்பு கிடைத்தது. உடல் நிலை சரியில்லாத போதும் கூட ரிஷி கொடுத்த விமர்சனம் என்னை எழுதத் தூண்டியது. இரவு வீட்டுக்கு வந்ததும் பதில் அளிக்கின்றேன்.

  4. எழில் சொல்கிறார்:

    ஐயா, நீதிபதி வர்மா டிவியில் சொன்னதை படியுங்கள்…

    “Past mid-night, someone came to my residence, woke me up and wanted to hand over personally (the Congress party’s suggestions). But somehow the Congress president came to know of it. She was very gracious and next day she rang me up personally and profusely apologised to my great embarrassment. I had to tell her do not do this,” he told Karan Thapar on CNN-IBN’s Devil’s Advocate Programme. (Times of Inida, 27th Jan 13)

    வஞ்சப் புகழ்ச்சியாய் இருக்குமோ?

  5. rathnavelnatarajan சொல்கிறார்:

    அருமையான பதிவு. எனது பக்கத்தில் பகிர்ந்திருக்கிறேன்.
    நண்பர்களே, தயவு செய்து படியுங்கள்.
    நன்றி.
    Salute to காவிரி மைந்தன்.

  6. Ganpat சொல்கிறார்:

    Already it is very late.
    2014 தேர்தல் நமக்கு அளிக்கப்பட்டுள்ள கடைசி வாய்ப்பு.
    காங்கிரஸ் என்ற அசிங்கம் வேருடன் அகற்றப்படவேண்டும்.
    பிறகுதான் நாட்டிற்கு விடிமோட்சம் உண்டா என்று தெரிய வரும்.
    அப்படி தப்பித்தவறி அவர்களே ஆட்சிக்கு வந்து விட்டால் நாட்டை காப்பற்ற கடவுளாலும் முடியாது.
    பின் குறிப்பு: தேர்தலில் வெற்றி பெற காங்கிரஸ் மற்றும் அதன் தோழமை கட்சிகள் “எதையும்” (கதை/உதை/வதை) உபயோகபடுத்த அஞ்சிடர்.உஷார்.

  7. சைதை அஜீஸ் சொல்கிறார்:

    ஆந்திர மாநிலத்தில் தெலுங்கானா அமைப்பது தொடர்பாக மத்திய அமைச்சர்கள் ப. சிதம்பரம் மற்றும் சுஷீல்குமார் ஷிண்டே மீது மக்களை ஏமாற்றியதாக 420 ( சீட்டிங் ) வழக்கு பதிவு செய்ய மாநில போலீசாருக்கு, ரெங்கா ரெட்டி மாவட்ட செஷன்ஸ் கோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது.

    இப்படி ஃபோர் டொண்டி(420)களை வைத்துக்கொண்டு எந்த பாராளுமன்றத்திலும் ஒன்றும் செய்யமுடியாது.

    //நினைத்தாலே எரிகிறது – கொதிக்கிறது//
    இதுதான் நடக்கும்.

  8. Prakash சொல்கிறார்:

    ”வரலாறு காணாத பாதுகாப்புடன்” குடியரசு விழா நடந்தது .

  9. Padmanabhan Potti L சொல்கிறார்:

    முந்தைய கால திரைப்படங்களில் தாங்கள் கூறிய படங்கள் மட்டுமல்லாது வீரபாண்டிய கட்டபொம்மன், பாரதியார்
    படம் மற்றும் பந்துலு . பீம்சிங் எ.பி .நாகராஜன் ஆகியோரது திரைப்படங்கள் பார்க்க வேண்டியவையாகும் . ஆனால் தற்போது சினிமா வியாபாரம்தான் நடக்கிறது. குடியரசு தினத்தை பொறுத்தமட்டில் தற்போது நடைபெறும் குடியரசு தினங்கள் வெறும் சடங்காக மட்டுமே வெளிநாட்டினரை வரவழைத்து அவர்கள் முன்னிலையில் நடத்தப்படுகிறது அவார்டுகள் கொடுப்பதற்கும் குடியரசு தின செய்தியாக இளைஞ்சர்களை அழைப்பதும் பாராளுமன்றத்தில் லோக்பாலை நிறைவேற்றிவிடுவோம் என பாவலா காட்டுவதும்தான் நடைபெறுகிறது .வர்மா
    கமிஷன் ரிப்போர்ட்டை பொறுத்தவரை கூறவேண்டுமானால் சர்க்காரியா கமிஷன் ரிப்போர்டிலிருந்து எந்த ரிப்போர்ட்தான் நிறைவேற்றப்பட்டுள்ளது வர்மா கமிஷன் அறிக்கையை
    நிறைவேற்றுவதற்கு.

  10. ரிஷி சொல்கிறார்:

    ஐயா,
    இக்கட்டுரையைப் படியுங்கள். உங்கள் கருத்துக்களை அறிய ஆவல். அதைப் பதிவாக வெளியிடுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

    பெண்கள் மீதான வன்கொடுமைகள்: அரசமைப்பே குற்றவாளி!

    • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

      நன்றி ரிஷி.

      நாம் இது குறித்து விவாதிக்கலாம் –
      கொஞ்சம் அவகாசம் கொடுங்களேன் !

      -வாழ்த்துக்களுடன்,
      காவிரிமைந்தன்

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.