கள்ள நோட்டும் – பதற்றமும்…

கள்ள நோட்டும் – பதற்றமும்…

money-2

சில நாட்கள் முன்னதாக ஏதோ வேலையாக, வங்கிக்கு
சென்றிருந்தேன். எனக்கு பழக்கமான, ஒரு சிறிய
கிளை வங்கி  தான்.

அங்கே எனக்குத் தெரிந்த ஒரு நபரைப் பார்க்க நேரிட்டது.

முஸ்லிம் சமுதாயத்தைச்   சேர்ந்தவர். எளிமையானவர்.
மிகவும் பதட்டமாகக் காணப்பட்டார். என்ன விஷயம்
என்று கேட்டேன். வங்கிக்கு ஒரு டிடி வாங்க வந்ததாகவும்,
தான் கொடுத்த பணத்தில் இரண்டு 500 ரூபாய்
கள்ள நோட்டுக்கள் இருந்ததால், கவுண்டரில் இருந்த
அதிகாரி, pay slip மற்றும்   currency யுடன்  வங்கி
மேனேஜரைப் பார்க்கப் போயிருப்பதாகவும், அவர்கள்
பேசிக்கொள்வதைப் பார்த்தால் போலீசில் புகார் கொடுக்கப்
போவது போல் தெரிகிறது என்றும் சொன்னார்.

அவரை பதட்டப்படாமல் இருக்கும்படி கூறி, அவரையும்
அழைத்துக் கொண்டு மேனேஜர் அறைக்கு சென்றேன்.
மேனேஜர் ஏற்கெனவே எனக்கு ஓரளவுக்கு பழக்கமானவர் தான்.
அவரிடம் விசாரித்தபோது, தங்கள் நடைமுறை
விதிகளின்படி அடுத்த நடவடிக்கைக்காக காவல் துறைக்கு
ரிப்போர்ட் கொடுக்க வேண்டியிருக்கும் என்று சொன்னார்.

மேனேஜரிடம் கொஞ்சம் விவரமாகப் பேசினேன்.
மேற்படி நண்பர் எனக்கு மிகவும் பழக்கமானவர் தான்.
நீண்ட நாட்களாக அவரை எனக்குத் தெரியும்.
எங்கள் வீட்டிற்கு அருகில் சிறு வணிகத்தில்
ஈடுபட்டிருக்கிறார். அவர் கொடுத்த பணத்தில் கள்ள நோட்டு
கலந்திருந்ததற்கு அவர் எந்தவிதத்திலும் காரணமாக
இருந்திருக்க வாய்ப்பே இல்லை.
அவரே ஏமாந்து போய் யாரிடமிருந்தோ
இதைப் பெற்றிருக்கிறார். ஏற்கெனவே செல்லாத நோட்டை
பெற்று நஷ்டம் அடைந்திருக்கும் அவர்  போலீஸ்
விசாரணைக்கு  வேறு செல்ல நேர்ந்தால் -தாங்க மாட்டார்.
தயவுசெய்து இதை மேற்கொண்டு ரிப்போர்ட் செய்ய வேண்டாம்.
இத்துடன் விட்டு விடுங்கள் என்று கேட்டுக் கொண்டேன்.
மேனேஜர் மிகவும் தயங்கினார். இதன் காரணமாக
மேற்கொண்டு எந்த பிரச்சினை ஏற்பட்டாலும், நானும்
பொறுப்பு ஏற்றுக் கொள்கிறேன் – தயவு செய்து உதவுங்கள்
என்றேன்.

மேற்கொண்டு இந்த பணம் புழக்கத்தில் இருப்பது தான் தவறு.
எனவே உங்கள் எதிரிலேயே, அவரையே
ரூபாய் நோட்டையும், pay slip ஐயும் கிழித்துப்போடச்
சொல்கிறேன். அத்துடன் விட்டு விடுங்கள் என்றேன்.

மிகுந்த முயற்சிக்குப்  பிறகே நண்பரை சிக்கலிலிருந்து
விடுவித்துக் கொண்டு வர முடிந்தது.
வெளியே வந்தவுடன் என் இரண்டு கைகளையும்
அழுத்திப் பிடித்துக் கொண்டு அவர் கண்ணீர் விட்டார்.

அந்த நண்பர் முகத்தில் காணப்பட்ட திகிலையும்
பதட்டத்தையும் என்னால் மறக்கவே முடியவில்லை.
எனக்கே – ஏன் உங்களில் ஒருவருக்கே கூட –
எங்கேயாவது முன்பின் தெரியாத இடத்தில்
இப்படி நடக்க வாய்ப்பிருக்கிறதே …

எந்தவித தவறோ, சட்ட மீறலோ செய்யாத ஒரு
நல்ல மனிதர் கூட சில சந்தர்ப்பங்களில் எப்படி
சிக்கிக்கொள்ள நேரிடுகிறது பாருங்கள் !

கடந்த சில மாதங்களாக செய்தித்தாள்களில் அடிக்கடி
பார்க்க நேரிடுகிறது. தமிழ் நாட்டில் 500 ரூபாய் கள்ள
நோட்டுகளுடன் ஆசாமிகள் பிடிபடுவதாக.

இங்கு எப்படி கள்ள நோட்டுகள் வருகின்றன ?
பாகிஸ்தானில் இந்திய கள்ள 500 ரூபாய் மற்றும்
1000 ரூபாய் நோட்டுகள் அச்சிடப்பட்டு –
அங்கிருந்து இரண்டு வழிகளில் –
(1) நேபாளம் – பீகார் மூலமாகவும்,
(2) பங்களா தேஷ் – மேற்கு வங்காளம் மூலமாகவும்
கடத்தப்பட்டு,இந்தியாவின் முக்கிய நகரங்களில்
புழக்கத்தில் விடப்படுகின்றன  என்றும்  

வடகிழக்கு, மேற்கு வங்கம் மற்றும் பீகார் மாநிலத்தைச்
சேர்ந்த சில நபர்கள் மற்றும்
இங்கு பணிபுரியும் சில கட்டிடத் தொழிலாளர்கள் மூலமாக
(சிலருக்கு தெரிந்தே ஆதாயத்திற்காகவும்,
சிலர் உண்மை தெரியாமலேயும் )
இவை புழக்கத்திற்கு வருவதாகத் தெரிகிறது.
மாநில அளவில் – தங்களுக்கு கிடைக்கும் தகவல்களின்
ஆதாரப்படி சில குழுக்களை காவல் துறையினர்
அவ்வப்போது மடக்குகிறார்கள்.

சில  நேரங்களில் மேற்படி நண்பரைப்
போன்ற அப்பாவிகளும்
மாட்டிக் கொள்கிறார்கள் –
நஷ்டத்திற்கும் உள்ளாகிறார்கள்.

ஆனால் இத்துடன் பிரச்சினை தீர்ந்து விடுமா ?

இத்தகைய கள்ள நோட்டுகள்  எங்கே அச்சாகின்றன –
எப்படி இந்தியாவிற்குள் வருகின்றன –
எப்படி புழக்கத்தில் விடப்படுகின்றன –
என்பது எல்லாம் மத்திய புலனாய்வு குழுக்களால்
கண்டு பிடிக்கப்பட முடியாத அளவிற்கு
சிக்கலான விஷயங்களா ?

பெரிய அளவில் கள்ள நோட்டுக்கள் புழக்கத்தில்
விடப்படுவது இந்தியாவின் பொருளாதாரத்தை
சீர்குலைக்கும் என்பதோடு –
தனிப்பட்ட முறையிலும் பலரை பாதிக்கிறது
என்பது தெரிந்தும் சம்பந்தப்பட்ட மத்தியஅரசு ஏஜென்சிகள்
தீவிர நடவடிக்கை எதுவும் எடுப்பதாகத் தெரியவில்லை.

ஏன் இப்படி ?
மத்திய அரசு இதை சீரியசாக எடுத்துக் கொள்ளவில்லையா ?
அல்லது வழக்கம் போல் –
இதிலும் அரசியல்வாதிகள்
சம்பந்தப்படுகிறார்களா ?

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

8 Responses to கள்ள நோட்டும் – பதற்றமும்…

  1. Mauroof சொல்கிறார்:

    இப்படி அனுதினமும் எத்துனை அப்பாவி பொதுமக்கள் இந்தியா முழுவதிலும் பாதிக்கப்படுகிறார்களோ? ஒரு 5, 10, 20, 50, 100, 500, 1000 ரூபாய் கள்ள நோட்டுகளை கள்ள நோட்டு என்ற அறியாத நிலையில் வைத்திருந்தவர்களை உண்டு இல்லை என்று ஆக்கிட முயலும் நேர்மை தவறா அதிகாரிகள்(?), பல லட்சம் மற்றும் கோடிக் கணக்கில் புரளும் இந்த கள்ள நோட்டு கும்பலை பிடிக்க துப்பில்லாதவர்கள். எல்லாம் அரசியல். தகுந்த நேரத்தில் உங்களுடைய உதவி ஒரு அப்பாவிக்கு நேரவிருந்த மிகப்பெரும் மனவேதனையை தடுத்துள்ளது. இறைவன் தங்களது இந்த நற்செயலை பொருந்திக் கொள்வானாக.

  2. GOPALASAMY சொல்கிறார்:

    THERE WILL BE A VERY BIG NETWORK. IF ANY WRONG DEEDS ARE THERE LIKE THIS, DEFINITELY, WITHOUT POLITICIAN SUPPORT, IT CAN NOT TAKE PLACE.
    YOUR FREIND MAY BE A TEST PIECE, WITHOUT HIS KNOWLEDGE. BUT HE MAY KNOW THE PERSON WHO GAVE THE MONEY TO HIM. THIS IS MY ASSUMPTION ONLY.

  3. Padmanabhan Potti L சொல்கிறார்:

    சட்டப்படி தாங்கள் நடக்காமல் இருப்பினும் மனிதாபிமானத்துடன் நடந்துகொண்டுள்ளீர்கள் . வாழ்த்துக்கள். கள்ளநோட்டு விவகாரத்தில் ஏழைகள் மட்டுமே பாதிக்கபடுகிறார்கள். பண முதலைகள் தப்பித்து கொள்கிறார்கள் .

  4. vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

    நன்றி நண்பர்களே.

    நண்பர் பத்மனாபன் போத்தி –

    என்னைப் பொருத்த வரை –
    மனிதாபிமானமா ? சட்டமா ? – என்று கேட்டால்,
    மனிதாபிமானத்திற்கு தான் முதலிடம் !

    சட்டம் – இல்லாதவனையும், அறியாதவனையும்,
    தெரியாதவனையும் படாதபாடு படுத்துகிறது.

    இருப்பவர்கள், கெட்டிக்காரர்கள் – எல்லா மோசடிகளையும்
    செய்து விட்டு சுலபமாகத் தப்பித்துக் கொள்கிறார்கள்.

    சட்டம் தீயவர்களை தண்டிப்பதற்கு தானே ?
    அப்பாவிகளை வதைக்க அல்லவே !
    சட்டத்தின் நோக்கத்தை சரியாகப் புரிந்து கொண்டால் –
    நாம் செயல்பட வேண்டிய விதத்தையும்
    தீர்மானித்துக் கொள்ளலாமே !

    -வாழ்த்துக்களுடன்,
    காவிரிமைந்தன்

    • எழில் சொல்கிறார்:

      வாழ்த்துக்கள் ஐயா. உங்கள் செயலும், மேலே சொல்லியுள்ள விளக்கமும் என்போன்றவர்களுக்கு முன் உதாரணம். மதவெறி மனிதத்தை கூறு போட்டு கொண்டிருக்கும் வேளையில் இது போன்ற செயல்களினால் தான் மனிதம் விதைக்கப்படுகிறது.

  5. நெற்குப்பை தும்பி சொல்கிறார்:

    நீங்கள் தெரிவித்துள்ள விவரங்கள் புரிகின்றன.
    காவல் துறைக்கு புகார் செய்யாவிட்டால் எவ்வாறு புலன் விசாரணை செய்து குற்றவாளிகளைப் பிடிக்க முடியும்? வங்கியில் பணம் செலுத்துபவர்களை விசாரித்து அவர்களுக்கு எவரிடம் இருந்து அல்லது எந்த வழியில் அப்பணம் வந்தது என்று தெரிந்து கொள்வது அவசியமே. அவ்வாறு விசாரிக்கப்படுவது தொல்லை தான். ஆனால் எல்லா சமயங்களிலும்/ எல்லா இடங்களிலும் இவ்வாறு சமாளித்து விட்டால் உண்மை எங்ஙணம் வெளிவரும்? எல்லா இஸ்லாமிய அன்பர்களையும் சந்தேகத்துடன் பார்க்கக்கூடாது தான். அவர்கள் தம்மிடம் வந்த விவரத்தை உண்மையாக பதிவு செய்து விட்டு போகவேண்டியதுதான். வேறு வழி இல்லை.
    இரண்டு: இந்தியாவில் காணப்படும் அனைத்து பிரச்னைகளுக்கும் அரசியல் வாதிகளைக் குறை சொல்லியே பழகி விட்டோம். தம் பணியை சரியாக அதிகாரிகள் செய்யாமல் இருப்பதாலேயே இது போன்று பல பிரச்னைகள் தீர்க்கப்படாமலேயே இருக்கின்றன என்பது தாழ்மையான எண்ணம். ஒரு தேல்கிக்குப்பின்னால் (போலி முத்திரை தாள் விவகாரம்) நூறு அதிகாரிகளின் கவனக்குறைவு/பங்கு இருந்ததது என்றே நினைக்கிறேன். பத்து அரசியல் வாதிகளும் இருக்கக்கூடும்.

  6. Chandru சொல்கிறார்:

    உங்கள் நண்பரது மதத்தை குறிப்பிட்டு இருக்க வேண்டிய அவசியம் இல்லை என்று கருதுகிறேன்

    • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

      நண்பர் சந்துரு,

      இன்னும் கொஞ்சம் யோசித்துப் பாருங்களேன்.
      நான் அதைக் கூறியதன் அவசியம் உங்களுக்கே புரியும்.

      -வாழ்த்துக்களுடன்,
      காவிரிமைந்தன்

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.