இத்தாலிக்கே அல்வா வா ? நடக்கிற காரியமா ? அகஸ்டா ஹெலிகாப்டர் விவகாரம் …

இத்தாலிக்கே அல்வா வா ?  நடக்கிற காரியமா ?
அகஸ்டா ஹெலிகாப்டர் விவகாரம் …

augusta helicopter-1augusta helicopter-2

பிரதமர், ஜனாதிபதி, மற்றும் அவர்களைப் போன்ற (!)
அதி முக்கிய  பிரமுகர்கள் (VVIPs) பயணிப்பதற்காக
6000 மீட்டர் (அதாவது கிட்டத்தட்ட 18,000 அடி )
உயரம் வரையில் சுலபமாகப் பறக்கக்கூடிய ஹெலிகாப்டர்
விமானங்கள் ஒரு டஜன் வாங்குவதாகத் தீர்மானிக்கப்படுகிறது.

முதன் முதலில் தேவையை தெரிவிப்பது  –
டெல்லி போலீசில், உள்துறை அமைச்சகத்தின்
கண்ட்ரோலுக்குள் வரும் ஸ்பெஷல் ப்ரொடெக்ஷன்
க்ரூப் (SPG) பிரிவு. பின்னர் பாதுகாப்புத் துறையில்
வெளிநாடுகளிலிருந்து ராணுவ சாதனங்கள் வாங்குகின்ற
முறையை கடைப்பிடிக்கத் தீர்மானம் செய்யப்படுகிறது.

இதன்படி, சாதனங்களின் விலைமதிப்பு 100 கோடிக்கு மேல்
இருந்தால் – டெண்டர்கள் வெளிப்படையாக விடப்பட
வேண்டும். இடைத்தரகர்கள் யாரும் இருக்கக் கூடாது.
இந்தியாவிலோ, வெளிநாடுகளிலோ -இந்த பேரத்தில்
யாருக்கும் எத்தகைய  கமிஷனும் தரக்கூடாது.

2004-ல் துவங்கும் இந்த விவகாரம், படிப்படியாக
பற்பல நிலைகளைக் கடந்து, பல மாறுதல்களைச்
சந்திக்கிறது. ( இறுதி நிலையில் உயரம் 6000 மீட்டரிலிருந்து
4500 மீட்டராக குறைக்கப்படுகிறது )
எந்தெந்த மாறுதல்களை யார் யார் செய்தார்கள்
என்கிற விவரம் நமக்குத் தெரியாது.
(அநேகமாக விசாரண வரும்போது – யாருக்கும் தெரியாது !)

இறுதியில் – சுமார் 3600 கோடி ரூபாய் மதிப்பில் –
12 ஹெலிகாப்டர்களை வாங்குவதற்கு
இத்தாலியைச் சேர்ந்த அகஸ்டா வெஸ்ட்லேண்ட்
நிறுவனத்துடன் 2010ஆம் ஆண்டு இந்திய பாதுகாப்பு
அமைச்சகம் மூலமாக ஒப்பந்தம் போடப்படுகிறது.

இது வரை 3 ஹெலிகாப்டர்கள் இந்தியாவிற்கு டெலிவரி
செய்யப்பட்டுள்ளன. 2014 இறுதிக்குள் அத்தனையும்
வந்து விட ஏற்பாடு.

சென்ற வருடம் அதாவது 2012 பிப்ரவரி மாதத்தில்,
இந்த ஹெலிகாப்டர் வாங்கும் விஷயத்தில், பணம்
கை மாறியுள்ளது என்று இத்தாலி நாட்டில் வெளியான
சில தகவல்களை அடிப்படையாகக் கொண்டு
சில இந்திய நாளிதழ்களில் செய்திகள் வெளியாயின.
முதலில்,பாதுகாப்புத்துறை அமைச்சர் ஏ.கே.அந்தோனி
அப்படி எல்லாம் எதுவுமில்லை என்று மறுத்தார்.
பின்னர் பாதுகாப்புத் துறை செயலாளரிடம், இது குறித்து
வெளியுறவுத்துறை ( ? )மூலமாக இத்தாலி அரசிடம்
விசாரிக்குமாறு கூறினார்.

பின்னர் மீண்டும் செப்டம்பர் 2012ல் இத்தாலி ஊடகங்களை
அடிப்படையாக வைத்து, சில இந்திய ஊடகங்கள் இந்த
பிரச்சினையை எழுப்பின.  பாராளுமன்றத்திலும் இது குறித்து
கேள்வி கேட்கப்பட்டது. அப்போதும் ஏ.கே.அந்தோனி
அவர்கள் இந்திய அரசு – இத்தாலிய அரசிடம் இது குறித்து
விவரங்களைக் கோரியுள்ளது. ஆனால் இது வரை எத்தகைய
விவரங்களும் கிடைக்கவில்லை.  எங்கேயாவது தவறு
நடந்திருந்தால், அது யாராக இருந்தாலும் – கடுமையான
நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தார்.
மீண்டும் விஷயம் கிணற்றில் போட்ட கல் ஆனது.

நேற்று  திடீரென்று அனைத்து மீடியாக்களும் அலறின.
இத்தாலியில் திங்களன்று  இந்த ஹெலிகாப்டர் நிறுவனத்தின்
தலைவர் கைது செய்யப்பட்டார் என்பதே இதற்கு காரணம் !
இந்தியாவிற்கும், மற்ற சில நாடுகளுக்கும் ஹெலிகாப்டர்
விற்பனை செய்யப்பட்ட விவகாரத்தில்,
(இத்தாலியிலும், இந்தியாவிலும் ! )
சில அரசியல்வாதிகளுக்கும், அமைச்சர்களுக்கும்,
அதிகாரிகளுக்கும் – லஞ்சம் கொடுத்ததாகவும்,
சட்ட விதிகளை மீறி கமிஷன் கொடுத்ததாகவும்
இத்தாலி  கோர்ட்டில் வழக்கு பதிவு செய்யப்பட்டிருப்பதாக
இத்தாலிய ஊடகங்களில் செய்திகள் வெளியாயின.

நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட 64 பக்க அறிக்கையில்,
சம்பந்தப்பட்டவர்களின் பெயர் மற்றும் விவரங்கள்
அடங்கி இருக்கின்றன  என்றும், அதில் 3 இந்தியர்களும்
அடங்குவர் என்றும் தகவல்கள் சொல்கின்றன.

இந்திய தொலைக்காட்சிகள் – பதவிஓய்வு பெற்ற
ஏர்மார்ஷல் ஒருவரின் பெயரையும், டெல்லி மற்றும் பஞ்சாபை
சேர்ந்த இன்னும் 2 பிசினஸ் புள்ளிகளின் பெயர்களையும்
குறிப்பிடுகின்றன.  அந்த ஏர்மார்ஷலோ, இந்த பேரம்
துவங்கிய 2004ஆம் ஆண்டு நான் இந்த பதவிக்கே
வரவில்லை. ஒப்பந்தம் கையெழுத்தான 2010-க்கு
முன்னதாகவே நான் ரிடையர் ஆகி விட்டேன். அநாவசியமாக
என் பெயரை இழுக்காதீர்கள் என்கிறார்.

நமக்குத் தெரியாதா என்ன ?
கீழ் மட்டத்தில் உள்ளவர்கள் 360 கோடி அளவிற்கு
எல்லாம் ஊழல் செய்ய முடியாது என்று.
அதெல்லாம் போய்ச்சேர வேண்டிய இடத்திற்கு போய்
சேர்ந்திருக்கும்.
இவர்கள் எல்லாம் –
“நெல்லுக்கு இரைத்த நீர் –
புல்லுக்கும் ஆங்கே பொசியுமாம் – என்பது போல்
கொசுறு பெற்றவர்களாக இருக்கும் !

செய்தியாளர்களைச் சந்தித்த பாதுகாப்புத் துறை அமைச்சர்
ஏ.கே.அந்தோனி – நேற்றே (!) -இத்தாலியில் கைது
நடவடிக்கை பற்றி ஊடகங்களில் செய்தி வந்த உடனேயே
நான் இது குறித்து விசாரித்து ரிப்போர்ட் தரும்படி சிபிஐ க்கு
உத்திரவு போட்டு விட்டேன். சிபிஐ விசாரித்து ரிப்போர்ட்
வந்தவுடன் மேல் நடவடிக்கை தொடரும். தவறு ஏதேனும்
நடந்திருந்தால் (!), அதைச் செய்தவர் யாராக
இருந்தாலும் (!) நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

30 வருடங்கள் போபர்ஸ் வழக்கை விசாரித்து விட்டு,
250 கோடி ரூபாய்க்கு மேல் வரிப்பணத்தை செலவழித்து,
சிபிஐ யில் – பல அதிகாரிகள் உலகம் சுற்றிய வாலிபர்கள்
ஆன பிறகு – கொட்டராச்சியையும் அனைத்துப் பணத்தையும்
எடுத்துக் கொள்ள அனுமதித்து விட்டு, இறுதியாக தடயங்கள்
ஒன்றும்  கிடைக்கவில்லை என்று வழக்கையே
மூடியவர்களாயிற்றே !

இந்த சிபிஐ எப்படி விசாரிக்கும் என்பதை நாம் அறிய
மாட்டோமா என்ன ?

இந்த சிபிஐ விசாரணையை கூட துவங்க அமைச்சர்
இவ்வளவு கால தாமதம் செய்தது ஏன் ? முதன் முதலில்
இந்திய ஊடகங்களில் செய்தி வெளிவந்த பிப்ரவரி 2012லேயே
உத்திரவிட்டிருக்கலாமே ?

இப்போது கூட –

விற்பனை ஒப்பந்த ஷரத்துக்களின்படி –

(1) இந்திய அரசு விரும்பினால், தங்கள் பிரதிநிதிகள்
மூலம் எப்போது வேண்டுமானாலும் ஹெலிகாப்டர்
கம்பெனியின் கணக்கு வழக்குகளை /ஆவணங்களை பார்த்து,
பரிசோதனை செய்ய உரிமை உண்டு.

(2) யாருக்காவது கமிஷன் கொடுக்கப்பட்டிருப்பதோ,
இடைத்தரகராக யாராவது செயல்பட்டிருப்பதோ
தெரிய வந்தால், உடனே காண்ட்ராக்டை ரத்து செய்யவோ,
தொகையை பிடித்துக் கொள்ளவோ இந்திய அரசுக்கு
உரிமை உண்டு.

(3) முழு விவரங்களும் வெளிவரும்வரையில்,
மேற்கொண்டு டெலிவரியை நிறுத்தி வைக்கச் சொல்லவும்
உரிமை உண்டு.

இதை எல்லாம் போன வருடம் பிப்ரவரியிலேயே துவங்கி
இருந்தால் – இப்போது அனைத்து விவரங்களும்
வெளிவந்திருக்கும்.

இப்போது கூட, இத்தாலிய கோர்ட்டில் ஒரு மனுவை
தாக்கல் செய்வதன் மூலம், வழக்கு சம்பந்தப்பட்ட
ஆவணங்கள் அனைத்தையும்
இந்திய அரசு உடனடியாகப் பெற முடியும்.

மீண்டும், இத்தனை தாமதங்களுக்குப் பிறகும்,
சிபிஐ விசாரணையை  துவங்குவது  – எதற்கு என்பது
அமைச்சருக்கும் தெரியும், மக்களுக்கும் புரியும்.
ஆனால் மக்களுக்கு இது புரியும் என்பது தான் அமைச்சருக்கு
தெரியாமல் போகிறது.

ஏ.கே.அந்தோனி – கரைபடாத கரங்களுக்கு
சொந்தக்காரர். அவர் மீது ஊழல் குற்றம் கூறக் கூடாது.
ஆனால் – எஜமான விசுவாசத்தில் அவர் ம.மோ.சி.யை
விட மிஞ்சியவர்.

ஆன்மிகத்தில் சொல்வது வழக்கம் –
எல்லா ஆறுகளும் கடலை நோக்கித்தான் செல்கின்றன.
கடலில் தான் சங்கமிக்கின்றன. எனவே,
மதங்கள் பல இருந்தாலும் –
எல்லா மதங்களும் – ஒரே கடவுளிடம்  தான்
இட்டுச் செல்கின்றன என்று !

அதே போல் –
இந்தியப் பெரும் ஊழல்கள் எதுவாக
இருந்தாலும் –
இறுதியில் அவை ஒரே திசையைத் தான்
காட்டுகின்றன  !

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

8 Responses to இத்தாலிக்கே அல்வா வா ? நடக்கிற காரியமா ? அகஸ்டா ஹெலிகாப்டர் விவகாரம் …

  1. கொச்சின் தேவதாஸ் சொல்கிறார்:

    அந்த ஒரு திசை எது என்பது அனைவருக்கும் தெரியும்.ஆனால் அதை பகிரங்கமாக வெளியே சொல்லத்தான் அனைவருக்கும் பயம்.
    வாழ்க வளமுடன்.
    கொச்சின் தேவதாஸ்

    • baruthi சொல்கிறார்:

      @கொச்சின் தேவதாஸ் : சொல்லிருவீங்கலோ..!! சொல்லிட்டு நிம்மதியா இருந்திடுவீங்கலோ..!!
      .
      .
      கொஞ்ச நாள் பொருங்க,
      இணையத்தில் அவதூறு, காவிரி மைந்தன் கைது-னு சேதி வந்தாலும் வரும்.. அப்புறமா அது அப்படி இருக்குமோ.. இது இப்படி இருக்குமோ-னு கார சாரமா பேசலாம்.. அப்ப கூட யாரு எவருனு சொல்ல கூடாது..!! 🙂

  2. c.venkatasubramanian சொல்கிறார்:

    Ethanai kaalam than ematruvan indha naatile sonndha vettle?

  3. Ganpat சொல்கிறார்:

    மிக விவரமான அவசியமான பதிவு.(வழக்கம் போல)
    மனமார்ந்த நன்றி..திரு.கா.மை. அவர்களே.

  4. Kumar.T சொல்கிறார்:

    இத் “தாலி” பாக்கியம் ,…

  5. எழில் சொல்கிறார்:

    “இத்தாலிக்கே அல்வா வா ?” என்பதை விட ‘”இத்தாலி’யின் இன்னுமொரு அல்வா!’ என்பது சரியாயிருக்குமோ என்று தோன்றுகிறது.
    மேலும் கடந்த முப்பது ஆண்டுகளில் சிபிஐ, பாதுகாப்பு துறை முறைகேடுகள் (Defence Scandals) ஒன்றில் கூட குற்றவாளிகளை பிடிக்கவில்லை என்பது புள்ளி விபரம். ஒரு வரியில் சொல்வதானால்… சிபிஐ விசாரணை – விளங்கிடும்!.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.