“மிஷன் இம்பாஸ்ஸிபிள்” -நாலரை மாத கர்ப்பிணியை சட்டவிரோதமாகக் கடத்திச்சென்று சித்ரவதை செய்த நாகரீக அரசுகள் …

“மிஷன் இம்பாஸ்ஸிபிள்” -நாலரை மாத கர்ப்பிணியை
சட்டவிரோதமாகக் கடத்திச்சென்று சித்ரவதை செய்த நாகரீக
அரசுகள் …

fathima-1

மிஸ்டர் “எம்” – இது ஒரு மனிதருக்கு
பிரிட்டிஷ் அரசு சூட்டிய பெயர்.
இந்த “எம்” க்கு ஒரு மனைவி இருந்தார். வயது 30.
அவர் நாலரை மாத கர்ப்பிணியாக இருந்தபோது
நடந்த கொடுமை இது.

“எம்”மும், அவரது மனைவியும் சீனாவிலிருந்து
பிரிட்டனுக்கு  விமானத்தில் வந்து கொண்டிருக்கிறார்கள்.

இடையே, கோலாலம்பூர் விமான நிலையத்தில் –
பாஸ்போர்ட் விசாரணை என்கிற பெயரில்  தடுத்து
நிறுத்தப்படுகிறார்கள்.
பல மணி நேர தடங்கல்,விவாதங்களுக்குப் பிறகு
அவர்கள் வேறோரு பிரிட்டிஷ் விமானத்தில் பிரிட்டன்
செல்லலாம் என்று கூறி ஏற்றப்படுகிறார்கள்.
ஏன் விமானம் மாற்றப்பட்டார்கள் என்பது இறுதியில்
தெரிய வருகிறது !

அந்த பிரிட்டிஷ் விமானம் வழியில் பாங்காக்கில்
(தாய்லாந்து)  நிற்கிறது. கணவன் மனவி இருவரும்
விமானத்திலிருந்து பலவந்தமாக கீழே இறக்கப்படுகிறார்கள்.
கணவர் தனியே போலீசாரால் இழுத்துச் செல்லப்படுகிறார்.
நான்கரை மாத கர்ப்பிணியான மனைவி தனியே அழைத்துச்
செல்லப்படுகிறார்.
அந்தப் பெண், பாங்காக்கின் “தான் மூவாங்”
விமான நிலையத்திலேயே உள்ள,
வெளியுலகிற்கு தெரியாத –
சட்டவிரோதமான ஒரு அமெரிக்க சிறையில் –
தனியே ஒரு ரகசிய அறையில் அடைத்து வைக்கப்படுகிறார்.
அவர்  கைகள் சங்கிலியால் பிணைக்கப்படுகின்றன.
அதன் மற்றொரு முனை ஒரு சுவற்றோடு இணைக்கப்படுகிறது.

கணவர் என்ன ஆனார் என்பது மனைவிக்கு தெரியவில்லை.
தான் ஏன் இப்படி அடைக்கப்பட்டிருக்கிறோம் என்றோ
எப்போது விடுவிப்பார்கள் என்றோ தெரியவில்லை.
சுமார் 5 நாட்கள் இவ்வாறு அடைபட்டுக் கிடக்கிறார்.
பெரும்பாலும் இருட்டு.
அவ்வப்போது சிறிது குடிக்கத் தண்ணீர் கிடைத்ததைத் தவிர
உண்ண வேறு எதுவுமே கொடுக்கப்படவில்லை.
கர்பிணிப்பெண் 5 நாட்கள் கொலைப்பட்டினி.
பயமும், அழுகையும் பொங்கிவர தவிக்கிறாள்
அந்தப் பெண். என்ன செய்வதென்றே தெரியவில்லை.

ஆறாம் நாள், ஒரு ஸ்ட்ரெச்சர் கொண்டு வரப்படுகிறது.
அதில் அவர் கிடத்தப்பட்டு கால் முதல் தலை வரை
பேண்டேஜ் துணியால் இறுக சுற்றப்பட்டு கட்டப்படுகிறார்.
வாயில் டேப் ஒட்டப்படுகிறது.காதுகள் அடைப்பான்களால்
அடைக்கப்படுகின்றன.

பிறகு அந்த ஸ்ட்ரெச்சர் தூக்கிச் செல்லப்பட்டு
ஒரு விமானத்தின் சரக்குப் பகுதியில்
தரையில் கிடத்தப்படுகிறது. அது ஒரு அமெரிக்க
சரக்கு விமானம் !

இத்தனை செயல்களும் நிகழும்போது –
அவரால் பார்க்க முடிந்தது 3 கருப்பு உடை அணிந்த
அமெரிக்கர்களை மட்டும் தான். இரண்டு ஆண்களும்,
ஒரு பெண்ணும். தனக்கு என்ன நிகழ்கிறது என்பதே
புரியாமல் நடுங்கிக் கொண்டிருக்கிறார் பாவம் அந்தப் பெண்.

விமானம் கிளம்பும் நேரத்தில், பக்கத்தில் இன்னொருவர்
இதே போல் ஸ்ட்ரெச்ச்சரில் கொண்டு வந்து
கிடத்தப்படுகிறார்.வலியால் துடிக்கும் அந்த நபரின்
முனகல் சப்தத்தைக் கொண்டு,
அவர் தன் கணவர் தான் என்பதை உறுதி செய்து
கொள்கிறார் அந்தப் பெண். கணவர் அருகிலிருக்கிறார்
என்று தெரிந்ததும் அந்த துயரிலும் –
-கொஞ்சம் நிம்மதி அந்தப் பெண்ணுக்கு!
வாய் அடைக்கப்பட்டிருப்பதால் பேச முடியவில்லை !

விமானம் கிளம்புகிறது. இடையில் ஒரு இடத்தில்
நின்று எரிபொருள் நிரப்பிக்கொண்டு, விமானம் மீண்டும்
பயணத்தைத் தொடர்கிறது. 17 மணி நேரப்பயணம்.
இறுதியில், விமானம் தரைஇறங்கியவுடன், அவர்கள்
இருவரும் காவலர்களால் தனித்தனியே கொண்டு
செல்லப்பட்டு சிறையில் அடைக்கப்படுகிறார்கள்.
ஒன்றிரண்டு நாட்களில் அவர்களுக்கு நிகழும்
சித்ரவதைகளிலிருந்து, தாங்கள் இருப்பது லிபியா
நாட்டில் – கொடுங்கோல் சர்வாதிகாரி கர்னல் கடாபியின்
அதிகாரத்திலுள்ள  லிபியாவின்  தஜௌரா ரகசிய சிறை
ஒன்றில் என்பதை தெரிந்து கொள்கிறார்கள்.

இவர்கள்  லிபியாவில் ஒப்படைக்கப்பட்டு
இரண்டு வாரங்கள் கழித்து –

பிரிட்டிஷ் பிரதமர் டோனி ப்ளெயர் நல்லெண்ண வருகையாக
லிபியா வருவதாக அறிவிக்கப்படுகிறது. கர்னல் கடாபி
ட்ரிபோலி விமான தளத்தில் பிரிட்டிஷ் பிரதமரை
கட்டியணைத்து வரவேற்கிறார்.  அதே சமயத்தில்,
பிரிட்டிஷ் பெட்ரோலிய கம்பெனிக்கும் (Anglo-Dutch oil
giant Shell ), லிபியா அரசுக்கும் இடையே மிகப்பெரிய
அளவிலான  எண்ணை ஏற்றுமதி தொடர்பான ஒப்ப்பந்தம்
கையெழுத்தாகிறது.

அடுத்த 4 மாதங்களுக்கு அந்தப்பெண் அந்த சிறையின்
சிறிய அறை ஒன்றில்  கேள்விக்கணைகளால்
துளைக்கப்பட்டு,தினம் தினம் துன்புறுத்தப்படுகிறார்.
புரட்சிக்குழுவின் உறுப்பினர்கள் யார் யார்  –
அவர்களில் லண்டனில் வசிப்பவர்கள் யார் யார் –
லிபியாவில் மறைந்து வாழ்பவர்கள் யார் –
அவரது கணவரின் நெருங்கிய நண்பர்கள் எவரெவர் –
இப்படிப் போகின்றன கேள்விகள். இப்போது
எட்டரை மாத கர்ப்பிணியாகி விட்ட  அந்தப் பெண்ணுக்கு
எப்போது வேண்டுமானாலும் பிரசவம் நிகழலாம் என்கிற நிலை.
இதற்குள் வெளியில் இந்தமாதிரி ஒரு கர்ப்பிணிப் பெண்
சட்டவிரோதமாக சிறையில் வைக்கப்பட்டிருப்பது குறித்த
செய்திகள் பரவுகின்றன.

இறுதியில், எந்தநேரமும் பிரசவம் நிகழலாம் என்கிற
சமயத்தில், அந்தப்பெண் சிறையிலிருந்து
விடுவிக்கப்படுகிறார் (செய்தியாளர்கள் யாரிடமும்
பேசக்கூடாது என்றும், லிபியாவை விட்டு வெளியேற
முயற்சி செய்யக்கூடாது என்கிற  கட்டுப்பாடுகளுடன்).

வெளியில்,அரசின் கண்காணிப்பிலேயே
ஒரு விடுதியில் தங்க வைக்கப்படுகிறார். அங்கு அவருக்கு
இத்தனை துன்பங்களிடையே ஒரு மகன் பிறக்கிறான்.

அந்தப் பெண்ணின் கணவர் அடுத்த 6 ஆண்டுகளுக்கு,
லிபியாவின் விலாசம் தெரியாத ரகசியச் சிறைகளில்
அடைக்கப்பட்டு சித்திரவதைக்குள்ளாகிக் கிடக்கிறார்.

எல்லாம் சரி.யார் இந்த கணவர் “எம்” ?
அவரும் அவரது கர்ப்பிணி மனைவியும் ஏன் இப்படி
நடத்தப்பட்டார்கள் ?
இவர்களுக்கும் பெட்ரோல் உடன்படிக்கைக்கும் என்ன
சம்பந்தம் ?

1990 களில் லிபியாவில், சர்வாதிகாரி கர்னல் கடாபியின்
ஆட்சியை எதிர்த்து புரட்சி நடக்கிறது. புரட்சிக்குழு ஒன்றில்
முக்கியப் பொறுப்பு ஏற்றிருந்தவர் அப்துல் ஹகீம் பெல்ஹாஜ்.

1994-ல் லிபியாவில் தன்னைச் சிறைப்பிடிக்க
கடாபி செய்த முயற்சியிலிருந்து தப்பி, தன்னுடைய
குழுவைச் சேர்ந்த மற்றும் சில போராளிகளுடன் பிரிட்டனில்
தஞ்சம் அடைகிறார் அப்துல் ஹகீம் பெல்ஹாஜ்.
பிரிட்டனில் அவர் மணந்துகொண்ட பெண் தான்
அந்த அப்பாவிப் பெண் பாத்திமா பௌஜர்- அவரது
இளம் மனைவி.

அந்த சமயத்தில் -பிரிட்டன், அமெரிக்கா போன்ற
மேற்கத்திய நாடுகளுக்கு வில்லனாக இருந்தார் லிபியாவின்
கடாபி.

அவர் லிபியாவில்,அணு ஆயுதம் தயாரிக்க முயற்சி
செய்வதாக (வழக்கம் போல் ?) குற்றம் சாட்டி,
லிபியாவின் மீது பல்வேறு
விதமான பொருளாதாரத் தடைகளை விதிக்க முயற்சி செய்து
வந்தன அமெரிக்காவும், பிரிட்டனும் – அவர்களது
ஜால்ரா நாடுகளும்.

இந்த பின்னணியில் –

கடாபி ஆட்சிக்கு  எதிராக செயல்படுபவர் என்பதால் –
அப்துல் ஹகீம் பெல்ஹாஜுக்கு
பிரிட்டனில் தஞ்சம் கிடைப்பதில் எந்த பிரச்சினையும்
ஏற்படவில்லை. தன்னைப் பற்றிய முழு உண்மையான
விவரங்களையும், தான் சார்ந்த புரட்சிக்குழுவான
al-Jama’a al-Islamiyyah al-Muqatilah fi-
Libya, the Libyan Islamic Fighting Group
(LIFG),பற்றிய விவரங்களையும் அப்போதே பிரிட்டிஷ்
அரசிடம் அறிவித்து விட்டு தான் தஞ்சம் கோரி இருந்தார்.

இந்த புரட்சிக்குழு – LIFG –  அப்போது,
பிரிட்டனில் தடை செய்யப்பட்டிருக்கவில்லை.
எனவே, அவர்களது நடவடிக்கைகளை பிரிட்டனிலிருந்து
தொடரவோ, நிதிஆதாரங்களைத் திரட்டிக் கொள்ளவோ –
அவர்களுக்கு எந்த வித தடங்கலும் பிரிட்டிஷ் அரசிடமிருந்து
வரவில்லை. உண்மையில், கர்னல் கடாபியின் ஆட்சியைக்
கவிழ்க்க  இந்தக்குழு மேற்கொண்ட முயற்சிகளுக்கு, பிரிட்டிஷ்
அரசின் மறைமுக ஆதரவு கூட இருந்தது.

ஆனால் – 2002 முதல் இந்தப் போக்கில் ஒரு மாறுதல்
ஏற்படத்துவங்கியது. லிபியாவின் பரந்த அளவிலான
கொட்டிக் கிடக்கும் எண்ணை வளமும், இயற்கை
எரிவாயுவும் அமெரிக்கா  மற்றும் பிரிட்டனின்
கண்களை உறுத்திக் கொண்டே இருந்தன.அமெரிக்காவும்,
பிரிட்டனும் – கடாபியுடனான தங்கள் உறவை சீர்செய்யும்
முயற்சிகளில் இறங்கின. விரைவில் நிலைமை தலைகீழாக
மாறியது. கடாபி தன் ஈகோவை கைவிட்டு விட்டு,
மேற்கத்திய நாடுகளின் உற்ற நண்பனாகச் சம்மதித்து
விட்டார். கடாபி திருந்தி விட்டார் !
அமெரிக்காவின் நட்பு வட்டத்திற்குள் கடாபி
கொண்டு வரப்பட்டார் ! எனவே – கடாபியின் எதிரிகளை
வேட்டையாடுவதில்  – அமெரிக்காவும்,பிரிட்டனும்
தீவிரம் காட்டத்துவங்கின.

மார்ச் 2004-ல் அப்துல் ஹகீம் பெல்ஹாஜ் லண்டன்
ஹீ த்ரூ விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டார்.
பயங்கரவாதிகளுக்கு எதிரான சட்டத்தின் கீழ்
(under the Anti-terrorism, Crime and
Security Act ) அவர் கைது
செய்யப்பட்டுள்ளதாக அவருக்கு தெரிவிக்கப்பட்டது.
அமெரிக்காவை பாதித்த 9/11ஐ ஒட்டி கொண்டுவரப்பட்ட
இந்த சட்டம் –
சர்வதேச பயங்கரவாதிகளை கைது செய்யவும்,
அவர்களை விசாரணையின்றி சிறையில் அடைத்து வைக்கவும்,
பிரிட்டிஷ் அரசுக்கு அதிகாரம் அளிக்கிறது.

பெல்ஹாஜ் இந்தக் கைதை எதிர்த்து,
தான் ஒரு சர்வதேச பயங்கரவாதி அல்ல என்றும் –
தங்கள் குழு, லிபியாவில் சர்வாதிகாரி கடாபியை
எதிர்த்து போராடும் ஒரு போராட்டக்குழு மட்டுமே
என்றும் தன்னை சர்வதேச பயங்கரவாதியாக சித்தரித்து
கைது செய்து, சிறையில் வைத்திருப்பது சரியாகாது என்றும்,
பிரிட்டனின் Special Immigration Appeals
Commission (SIAC)-க்கு அப்பீல் செய்தார்.

ஏற்கெனவே 1994ல் முதல் தடவையாக பிரிட்டனில்
தஞ்சம் கோரும்போதே அவர் இந்த விவரங்களை பிரிட்டிஷ்
அரசிடம் அதிகாரபூர்வமாக அறிவித்திருந்ததால், அவரது
வேண்டுகோளை ஏற்ற  அப்பீல்ஸ் கமிஷன் அவரை
உடனடியாக விடுதலை செய்ய பிரிட்டிஷ் அரசுக்கு
உத்திரவு பிறப்பித்தது.

அதன் பின்னர் – அப்துல் ஹகீம் பெல்ஹாஜ்,
தன் மனைவியுடன் சீனா சென்று விட்டு,
மீண்டும் பிரிட்டனுக்கு திரும்பும்போது தான்
மிஸ்டர் “எம்” என்று பெயர் சூட்டப்பட்டு
மேலே கூறியுள்ளபடி “பாங்காக்”விமான நிலையத்தில்
அமெரிக்க/பிரிட்டிஷ் கூட்டுப்படைகளால்
மனைவியுடன் சேர்த்து சட்டவிரோதமாக
கைது செய்யப்பட்டு –
லிபியாவுக்கு கடத்தப்பட்டு, கர்னல் கடாபி அரசிடம்
ஒப்படைக்கப்பட்டார்.

பிரிட்டன், தான் கடாபியுடன் விரோதம் கொண்டிருந்தபோது
அப்துல் ஹகீம் பெல்ஹாஜ் மற்றும் அவரது குழுவினருக்கு
மகிழ்ச்சியுடன் ஆதரவும் அடைக்கலமும் கொடுத்தது போய் –

எண்ணை வளங்களுக்காக மீண்டும் கடாபியுடன்
நட்புறவு ஏற்பட்டவுடன், தஞ்சம்
அடைந்தவர்களை சட்டவிரோதமாகக் கடத்தி –
கடாபியிடமே கொண்டு போய் ஒப்படைத்தது.

அப்துல் ஹகீம் பெல்ஹாஜாவது – லிபிய அரசுக்கு
எதிராக ஆயுதம் ஏந்தி புரட்சி செய்தவர் என்பதால்
அவரைக் கைது செய்து ஒப்படைத்ததை
எந்த விதத்திலாவது  
நியாயம் காட்ட பிரிட்டன்/அமெரிக்க நாடுகள்
முயற்சி செய்யலாம்.

ஆனால் இதில் எந்த விதத்திலும் சம்பந்தப்படாத
அப்பாவியான ஒரு கர்ப்பிணிப் பெண்ணை
இவ்வாறு கண்காணாத இடத்தில்
கைது செய்து சித்ரவதை செய்வதும்,
முன்பின் அறியாதவர்களிடம் ஒப்படைப்பதிலும்
எந்த விதத்தில் நியாயம் காண முடியும் ?

நியாயமாவது அநியாயமாவது  – தங்கள் நாட்டின்
பாதுகாப்பு தொடர்பான நடவடிக்கைகள் யாவும்
உலகத்தின் நியாய அநியாயங்களுக்கு அப்பாற்பட்டது
என்று செயல்படுவதில் –
அமெரிக்காவிற்கு எந்த விதத்திலும் தான் குறைவில்லை
என்று இந்த செயலின் மூலம் நிரூபித்தது பிரிட்டிஷ் அரசு.
(ஆனால் இது பாதுகாப்பு சம்பந்தப்பட்ட விஷயம் அல்ல –
எண்ணை காண்ட்ராக்டு விஷயம் என்பது அப்போது
வெளியே தெரியாதே !)

இத்தோடு கதை முடிந்திருந்தால் –
இறைவனைச் சபித்திருப்போம் நாம்.

ஆனால் இதனைத் தொடர்ந்து நிகழ்ந்த சம்பவங்கள் –

அக்கிரமங்களும், அநியாயங்களும் ஒரு நாள்
தண்டிக்கப்படாமல் போகாது  என்பதை உலகிற்கு
நிரூபிக்கின்றன.

லிபியாவில் கர்னல் கடாபிக்கு எதிராக செயல்பட்ட
புரட்சியாளர்கள் -2010-ல் சிறையிலிருந்த
அப்துல் ஹகீம் பெல்ஹாஜ்,
மற்றும் அவர்களது
புரட்சிக்குழு தோழர்களை விடுவித்து வெளியே
கொண்டு வருகின்றனர்.
பெல்ஹாஜூம் அவரது குழுவினரும் ஒன்று சேர்ந்து
கடாபியின் ராணுவத்தை ட்ரிபோலியிலிருந்து
வெளியே துரத்துகின்றனர்.

கர்னல் கடாபியின் வெளியுறவுத் துறை அமைச்சராகவும்,
உளவுத்துறை தலைவராகவும் செயல்பட்டுக் கொண்டிருந்த
மௌசா கௌசாவின்  அலுவலகமும் இருப்பிடமும்
புரட்சியாளர்களால் பிடிக்கப்பட்டபோது –

அங்கு கிடைத்த ஆவணங்கள்  இந்த கைதுகள் தொடர்பாக
பிரிட்டிஷ் அரசுக்கும், கடாபியின் அரசுக்கும் இடையே
நிகழ்ந்த பேரங்களை உறுதி செய்தன. தங்கள் சுயநலத்திற்காக
பிரிட்டனும், அமெரிக்காவும் எந்த அளவிற்கு
கர்னல் கடாபியுடன் பேரம் பேசி இருக்கின்றனர் என்பதை
இந்த ஆவணங்கள் வெட்ட வெளிச்சமாக்குகின்றன.
அத்தனை ஆவணங்களும் தற்போது புரட்சிக்குழுவின்
வசத்தில் வருகிறது.

புரட்சி முழுமை பெறுகிறது.
சர்வாதிகாரி கர்னல் கடாபி காணாமல் போகிறார்.

விதியின் விளையாட்டு –
புதிய ஆட்சியில் -மிஸ்டர் “எம்”என்று பிரிட்டனால்
பெயர் சூட்டப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட அதே
அப்துல் ஹகீம் பெல்ஹாஜ்-
லிபியாவின் புதிய ராணுவக் கவுன்சில் தலைவராக –
அதாவது ராணுவ அமைச்சராக –
பொறுப்பேற்கிறார்.

இப்போது –

அப்துல் ஹகீம் பெல்ஹாஜ்- தங்கள் அனைவரின் மீதும்
பிரிட்டிஷ் அரசு நிகழ்த்திய கைது மற்றும் நாடு கடத்தல்
உட்பட்ட அனைத்து சட்டவிரோத நடவடிக்கைகளுக்காகவும்
பிரிட்டிஷ் அரசு மீது வழக்கு தொடுத்திருக்கிறார்.

இந்த குற்றச்சாட்டுக்களை திரும்பப்பெறவும்,
வழக்கை வாபஸ் பெறவும், அப்துல் ஹகீம் பெல்ஹாஜ்க்கு
ஒரு மில்லியன் பவுண்டு நஷ்ட ஈடு தர பிரிட்டிஷ் அரசு
முன்வந்தது.

ஆனால் இதை நிராகரித்து விட்ட பெல்ஹாஜ் தரப்பு –
வழக்கு தொடர்ந்து நடத்தப்பட வேண்டும் என்பதில்
உறுதியாக இருக்கிறது.

வழக்கு வெளிப்படையாக நிகழ்ந்தால் –
பிரிட்டிஷ் அரசுக்கும், அன்றைய கால கட்டத்தில்
ஆட்சியிலிருந்த  தொழிற்கட்சிக்கும்  இழப்புகள்
பல  நேரிடலாம்.  

“எனக்கு இந்த நிகழ்வுகள்  குறித்து எதுவுமே தெரியாது.
என் ஆட்சியின் போது தவறு எதாவது நிகழ்ந்திருந்தால் –
அதற்கு பொறுப்பானவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்
என்பதில் எனக்கு மாறுபட்ட கருத்து ஏதும் இல்லை ”

— என்று இப்போது அப்பாவியாகச் சொல்கிறார்
அப்போது பதவியில் இருந்த பிரதமர் டோனி ப்ளேயர்.

“நடப்பது அனைத்தும் செயலாளருக்கு தெரிந்திருக்க
வேண்டும் என்கிற அவசியம் இல்லை. உளவுத்துறையின்
செயல்பாடுகள் அனைத்தும் செயலாளருக்கு எப்போதும்
தெரிந்திருப்பதில்லை”

–என்கிறார் அப்போதைய பிரிட்டிஷ்
வெளியுறவுத்துறை செயலாளராகப் பணியாற்றிய  
ஜேக் ஸ்ட்ரா !

பிரிட்டனின் தற்போதைய போலீஸ் துறை –
வழக்கின் புலன் விசாரணை
மற்றும்  ஆவணங்களைத் தயார் செய்தல் நடந்து
வருவதாகவும், விரைவில் நீதிமன்றத்தில் வழக்கு
தாக்கல் செய்யப்படும் என்றும் கூறுகிறது !

வழக்கு எப்போது நடக்குமோ –
எப்படி நடக்குமோ – நமக்குத் தெரியாது !!

ஆனால் -தாம் தான் உலகின் ஜனநாயகக் காவலர்கள்
என்று மார்தட்டிக் கொள்ளும்
அடிப்படை  ஜனநாயக நாடுகள் கூட –
தங்கள் நலம் என்று வரும்போது –
முக்கியமாக எண்ணை வளம் கண்ணை உறுத்தும்போது –
எல்லா நியாயங்களையும் காற்றில் பறக்க விட்டு விட்டு –

சர்வாதிகார, கொடுங்கோல் அரசுகளை விட
மோசமாக நடந்து கொள்வதைப் பார்க்கும்போது –

என்றுமே – எப்போதுமே,
ஆட்சியாளர்களின் சுயநலத்திற்கு முன் –
பொது நியாய அநியாயங்கள் –
எதுவுமே பெரிதில்லை என்பது மட்டும் நன்றாகப் புரிகிறது !

இடையில் சிக்கி வதைபடும் பாத்திமா பௌஜர் போன்ற
அப்பாவிப் பொது மக்கள் நம் பார்வைக்கு வராமல்
உலக நாடுகளில் இன்னும் எத்தனை பேரோ !

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

5 Responses to “மிஷன் இம்பாஸ்ஸிபிள்” -நாலரை மாத கர்ப்பிணியை சட்டவிரோதமாகக் கடத்திச்சென்று சித்ரவதை செய்த நாகரீக அரசுகள் …

  1. எழில் சொல்கிறார்:

    மிகவும் பயனுள்ள அரிய பதிவு ஐயா. மேலை நாடுகள் என்று நாம் அண்ணாந்து பார்த்த காலம் போய் பல வருடங்கள் ஆகிவிட்டது. இன்றைய காலகட்டத்தில் அறத்தின் வழி அரசாட்சி என்று ஒன்று உலகில் இருப்பதாகவே தெரியவில்லை. முடிந்தால் கூடவே நேற்றைய ‘The Independent’ நாளிதளின் ஆசிரியர் தலையங்கத்தையும் படித்து விடுங்கள்.
    http://www.independent.co.uk/voices/editorials/editorial-britains-hypocrisy-over-sri-lanka-8498812.html

    • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

      நன்றி எழில்.

      நெஞ்சு பொறுக்குதில்லையே –
      இவற்றை எல்லாம் காணும்போதில் …
      காலம் தான் –
      எல்லாவற்றையும் மாற்ற வேண்டும்.

      இன்னமும் நம்பிக்கையுடன்,
      -காவிரிமைந்தன்

  2. raveendar சொல்கிறார்:

    Good one..never read this anywhere in Media…Seems nothing comes between governments and their Oil interests!!

  3. narayana சொல்கிறார்:

    மிக்க நன்றி கா.மை.
    இதுவரை அதிகம் வெளிவராத ஒரு நிகழ்வை படம் பிடித்தாற்போல காட்டி இருக்கிறீர்கள்.படிக்கவே பயமாக உள்ளது.Enemy of the state எனும் ஆங்கில படத்தில் இதன் கொடுமையை மிக நன்றாக காட்டியிருப்பார்கள்.

  4. Dr.M.K.Muruganandan சொல்கிறார்:

    திரைப்படம் பாரத்தது போல இருந்தது உங்கள் பதிவு.
    மிகச் சிறப்பான பதிவு

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.