“வாத்ரா”விற்கு கொள்ளுத் தாத்தாவின் பெயரில் கிடைத்த கொள்ளை லாட்டரி !!

“வாத்ரா”விற்கு கொள்ளுத் தாத்தாவின் பெயரில்
கிடைத்த கொள்ளை லாட்டரி !!

ராஜஸ்தானின் 60 சதவீதம் வெறும் பாலவனப்பகுதி.
தண்ணீரையே காணாத, மழையே பார்க்காத
வெறும் மணல் மேடுகள். இதன் சொந்தக்காரர்கள்
பஞ்சப்பரதேசிகள். எந்தவித விளைச்சலையும்
காணாத இந்த நிலத்தை யாராவது விலைக்கு கேட்டால் –
தெய்வமே வந்து விட்டது போல் காலில் விழுந்து கும்பிட்டு,
கேட்ட விலைக்கு கொடுத்து விடுவார்கள்.

2009 ஆம் ஆண்டு.
ஏக்கருக்கு 20,000 ரூபாய் என்று விலை கொடுத்து
ஒரு புண்ணியவான் இவர்களிடமிருந்து
எதற்கும் பயன்படாத பாலை நிலத்தை நிறைய வாங்கினார்.
சலாம் போட்டு சந்தோஷமாக நிலத்தைக் கொடுத்தனர்
அப்பாவி விவசாய மக்கள். இப்படி கிட்டத்தட்ட 8,800 ஏக்கர்
நிலங்கள் மருமகனின் சார்பில் அவரது கம்பெனிகளான –
ப்ளூ ப்ரீஸ்,  ஸ்கைலைட், நார்த் இண்டிய ஐடி பார்க்
ஆகியவை  பெயரிலும்,
அவரது பெர்சனல் செக்ரெட்டரி மனோஜ் அரோரா பெயரிலும்
அவரது  சகோதரர் லலித்நகர் பெயரிலும் வாங்கப்பட்டன.

இதன் பின்னணி என்ன ?

2008ஆம் ஆண்டு – நேஷனல் அட்வைசரி
கமிஷனின் தலைவர் “அன்னை”யின் இருப்பிடத்தில் நிகழ்ந்த
ஒரு கமிட்டி மீட்டிங்கில்  சூரிய சக்தி பற்றிய  புதிய கொள்கை
முடிவு ஒன்று எடுக்கப்படுகிறது. விவரங்கள் தயாரிக்க
குறிப்பிட்ட சிலரிடம் இந்தப் பொறுப்பு ஒப்படைக்கப் படுகிறது.
இது குறித்த சகல விவரங்களும் மருமகனுக்கு முதலில்
கிடைக்கின்றன.

இதைப்பற்றி முதன் முதலில்  வெளியில் பேசுபவர் பிரதமர் –
ஜூன் 30, 2008-ல் (மறைமுகமாக) ஒரு கூட்டத்தில்
சவுண்டு கொடுக்கிறார் – இனி எதிர்காலத்தில் எல்லாரும் சக்தி
வேண்டுமானால்  சூரியனையே சார்ந்திருக்க வேண்டும் என்று !

நாட்டிலேயே சூரிய சக்தி அதிகம் கிடைக்கும் –
காங்கிரஸ் ஆளும் மாநிலமான ராஜஸ்தானில்,
30 இடங்களில் சூரிய சக்தியை சேகரித்து பகிர்மானம்
செய்யும் புதிய சோலார் சப்-ஸ்டேஷன்களை மத்திய அரசின்
சார்பில் நிர்மாணிப்பது என்றும்,

அந்த சப்-ஸ்டேஷன்களை ஒட்டி/அருகில் அமைக்கப்படும்
“சோலார் பவர் ஸ்டேஷன்கள்” அதாவது சூரிய சக்தியை
பயன்படுத்தி மின் உற்பத்தி செய்யும் மின் நிறுவனங்களை
அமைக்க தனியார் நிறுவனங்களுக்கு அனுமதி கொடுப்பது
என்றும் –

அப்படி நிறுவனங்களை அமைக்க முன்வருபவர்களுக்கு
பலவித சலுகைகளை (40% உதவிநிதி(subsidy) உட்பட)
அளிப்பது என்றும் முடிவெடுக்கப்பட்டது.
இந்த திட்டத்திற்கு “ஜவஹர்லால் நேரு நேஷனல் சோலார்
மிஷன் திட்டம்” (Jawaharlal Nehru National Solar
Mission (NSM) Policy) என்று பெயரிடப்பட்டு,
பிப்ரவரி 2010ல்  அரசு அறிவிப்பு வெளியிடப்பட்டது.

இந்த திட்டம் வெளிப்படையாக சகல  விவரங்களோடு
அறிவிக்கப்படுவதற்கு பல மாதங்கள்  முன்னதாகவே  
மருமகனுக்கு அடிப்படை விஷயங்கள் அனைத்தும்
கிடைத்து விடுகின்றன! அதன் விளைவே – மேற்கண்ட
8,800 ஏக்கர் ராஜஸ்தான் நிலக் கொள்முதல் !!
கோலயாத் என்கிற ஒரு இடத்தில் மட்டும் – ஜூன் 2009க்கும்
ஜூன் 2010க்கும் இடைப்பட்ட ஒரு ஆண்டுக் காலத்தில்
மட்டும், 63 நில விற்பனை பத்திரங்கள் பதிவு
செய்யப்பட்டிருக்கின்றன !

மத்திய அரசின் இந்த திட்டத்திற்கு தேவையான
நிலங்களை ஆர்ஜிதம் செய்யும் பொறுப்பு ராஜஸ்தான் மாநில
அரசிடம் விடப்பட்டது. திட்டமிட்டபடியே ராஜஸ்தான் அரசும்,
30 பவர் சப்-ஸ்டேஷன்களுக்கான நிலங்களை ஆர்ஜிதம்
செய்தது. இதைச் சுற்றியுள்ள இடங்கள் அனைத்தும்
ஏற்கெனவே திட்டமிட்டபடி, மருமகனால் வளைக்கப்பட்டவையே.

எனவே, சூரிய சக்தி மின் உற்பத்தி ஆலைகளுக்கு
விண்ணப்பம் செய்வோரில்,  சப்-ஸ்டேஷன்களுக்கு
அருகாமையில் இருப்பவர்களுக்கே முன்னுரிமை கிடைக்கும்.
உற்பத்தி செய்யப்படும் மின்சக்தியை சப்-ஸ்டேஷனுக்கு
கொண்டு செல்ல அதிக சிக்கலோ,சேதமோ இருக்காது
என்பதால் இந்த சலுகை. அப்படி மின் உற்பத்தி நிலையம்
அமைக்க முன்வருபவர்கள் அனைவரும்,  தேவைப்படும்
நிலத்திற்காக மருமகன் நிறுவனங்களையே முதலில் நாடுவர்.

விவசாயிகளிடமிருந்து 2 வருடங்கள் முன்னதாக
சல்லிசாக வாங்கிய நிலங்களை இப்போது மின் உற்பத்தி
நிலையங்கள் அமைப்போருக்கு  மறு விற்பனை
செய்வதன் மூலம்  அடிக்கப்போகும் லாபம் தான் -லாட்டரி !
மனைவியின் கொள்ளுத்தாத்தா பெயரில்
கிடைக்கும் கொள்ளை லாட்டரி !

(ஒரு சின்ன உதாரணம் -கோலயாத்தில் ஒரு துண்டு நிலம் –

30 ஹெக்டேர் – மொத்தமாக ரூபாய் 4.45 லட்சத்திற்கு
வாங்கப்பட்டது, 2 வருடங்களுக்குப் பிறகு – இதே நிலம்
சுமார் இரண்டு கோடி ரூபாய்க்கு (Rs 1,99,58,121-)
மறு விற்பனை செய்யப்பட்டுள்ளது !)

இந்த 8,800 ஏக்கர் நிலங்களும் வாங்கி-
மீண்டும் மறு விற்பனை செய்வதில் –
இந்த அதிருஷ்டக்கார மருமகனுக்கு எத்தனை கோடி
ரூபாய் கிடைக்கும் என்பதை நாமே யூகித்துப் பார்த்து
பெருமூச்சு விட்டுக் கொள்ள வேண்டியது தான் !!

பின்குறிப்பு –
இதை சட்ட விரோதம் என்று யாரும்
குற்றம் சாட்ட முடியாது. அவர் செய்வது ரியல் எஸ்டேட்
பிஸினஸ். சில இடங்களை வாங்குகிறார். பின்னர்
தேவைப்படுவோர்க்கு மறு விற்பனை செய்கிறார்.

வியாபாரி லாபத்திற்குத் தான் தொழில் செய்ய முடியும்.
எனவே அவருக்கு கிடைப்பது லாபம் – புத்திசாலித்தனமாக
வியாபாரம் செய்ததால் கிடைக்கும் லாபம் – அவ்வளவே !

எப்போது இவ்வளவு பெரிய இடத்தில் ஒரு பெண்ணைத்
திருமணம் செய்து கொண்டாரோ -அப்போதே அவரது
எதிர்காலம் தீர்மானிக்கப்பட்டு விட்டது.

இதில் யாருக்காவது குறை இருந்தால் –
எரிச்சல் படுவதை விட்டு விட்டு –
இதே மாதிரி வேறு எங்கேயாவது  தானும்
மாப்பிள்ளையாக முடியுமா என்று முயற்சி
செய்வது நல்லது  !!!

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

3 Responses to “வாத்ரா”விற்கு கொள்ளுத் தாத்தாவின் பெயரில் கிடைத்த கொள்ளை லாட்டரி !!

  1. சைதை அஜீஸ் சொல்கிறார்:

    மிகவும் சுவாரஸ்யமான விஷயம்தான்!
    பாலைவனத்தை வாங்கி விற்றால் income tax கிடையாதோ?
    அல்லது மருமகனுக்கு அந்த டிபார்ட்மெண்ட்டும் சல்யூட் அடித்து கப்சிப் ஆகிவிடுமோ?
    இதுவும் இன்னொரு 2G விவகாரம் போலத்தான் தெரிகிறது.
    சத்தியமாக புலம்புவதைவிட ஒன்றும் செய்யமுடியாது.
    (அந்த கடைசி அறிவுரை, நல்ல ஜோக்கு, சார்)
    இதைத்தான் வள்ளுவர், துன்பம் வரும் வேளையில் சிரிக்கச்சொன்னது போல!

  2. ரிஷி சொல்கிறார்:

    அன்பின் கா.மை.
    மிகச் சிறப்பான கட்டுரை.
    சமீப காலங்களில் வாசித்தவற்றிலேயே ஆகச் சிறந்த உருவாக்கம்.
    சட்டமும், சாத்தியங்களும் எப்படி வேறுபடுகின்றன என்பதற்கு மிகச் சிறந்த உதாரணமாக குறிப்பிடலாம்.

    மூன்று நாட்களுக்கு முன்னர்தான் நண்பரும் நானும் நம் ஆள்வோரைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்தோம். அதற்குள் இப்படி ஒரு கட்டுரை!

    தொழில்முறையில் பொறியாளராக இருந்தபோதும் தற்போது அவர் சட்டம் படித்துக் கொண்டிருக்கிறார். காரணம் கேட்டேன். அவரது பதில்
    1) IPC-ல் அப்படி என்னதான் இருக்கிறது எனப் பார்க்க வேண்டும்
    2) இரண்டே கேசுகள் அட்டெண்ட் பண்ணனும். அப்புறம் கோர்ட்டிற்கே போகக்கூடாது.
    a) கொடூர குற்றங்கள் புரிந்தவனை திறமையாக வாதாடி குற்றமற்றவன் என்று நிரூபிக்க வேண்டும்
    b) குற்றமற்ற நபரை திறமையாக வாதாடி குற்றமிழைத்தவன் என்று நிரூபிக்க வேண்டும்.

    இந்த இரண்டிலும் வென்று விட்டால் அதன்பின் உண்மைகளை ஊருக்கு உரக்கச் சொல்லி இதுதான் சட்டம்; இதுதான் நடைமுறை என்று நிரூபிக்க வேண்டும் என்கிறார். ஹும்ம்..!!

    நீங்கள் சொல்வதுபோல் வாத்ரா செய்தது சட்டத்தின் பார்வையில் எவ்வகைக் குற்றமும் அல்ல. He played the game smart.. அதற்குமேல் என்ன சொல்வது!!

    தகவல்களை முன்கூட்டியே தெரிவித்த வகையில் மாமியார் தான் எடுத்துக்கொண்ட உறுதிமொழிகளை மீறி தேசத் துரோகம் புரிந்துள்ளார். ஆனால் இதை நிரூபிக்க யாராலும் இயலாது. :-((((

  3. c.venkatasubramanian சொல்கிறார்:

    what do they do with the looted money?

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.