ஈஷா மையம் – சற்குருவே சொல்ல வேண்டும் ! வெட்டுகிறார்களா – நடுகிறார்களா ? வெட்டுவது யாருக்காக- நடுவது யார் பணத்தில் ?

ஈஷா மையம் – சற்குருவே சொல்ல வேண்டும் !
வெட்டுகிறார்களா – நடுகிறார்களா ?
வெட்டுவது யாருக்காக- நடுவது யார் பணத்தில் ?

திரு ஜக்கி வாசுதேவ் அவர்களின் செயல்பாடுகள் குறித்து
மூன்று ஆண்டுகள் முன்பு இதே விமரிசனம் வலைத்தளத்தில்
சில  கட்டுரைகள் எழுதி இருந்தேன். அவற்றில் அவரது
பல நடவடிக்கைகளைப் பற்றி
எனக்குத் தோன்றிய கருத்துக்களை எழுதி இருந்தேன்.
(அவற்றை மீண்டும் பிரசுரித்தால் – தற்போது இன்னும்
அதிகம் பேரை அந்த கருத்துக்கள் சென்றடையும் என்று
தோன்றுகிறது !)

அண்மையில் சவுக்கு வலைத்தளத்தில் இது குறித்த
விவரமான கட்டுரை ஒன்று தகுந்த ஆதாரங்களுடன்
பிரசுரிக்கப்பட்டிருக்கிறது. ஆதாரங்களை சேர்ப்பதில்
அவர்களது உழைப்பு மிகவும் பாராட்டத்தக்கது.

இப்போது ஒரு செய்தி வெளிவந்திருக்கிறது.
பூவிலகின் நண்பர்கள் என்கிற அமைப்பைச் சேர்ந்தவர்கள்
வழக்கறிஞர் வெற்றிச்செல்வன் மூலமாக
ஒரு பொது நல வழக்கைத் தொடர்ந்திருக்கிறார்கள்.

வெளிவந்துள்ள செய்திகளின்படி வழக்கின் விவரம்  –

1990-களில் கோவை மாவட்டம், தொண்டாமுத்தூர்

பஞ்சாயத்து, இக்கரை பொலுவம்பட்டியில் மிகச் சிறிய
அளவில் ஜெகதீஷ் என்பவர் ஆசிரமம் தொடங்கினார்.
பிறகு அவர், சத்குரு ஜக்கி வாசுதேவ் ஆன பிறகு,
அவருடைய ஆசிரமத்தை விரிவுபடுத்தத் தொடங்கினார்.

அடர்ந்த வனப் பகுதியை மொட்டையடித்து,ஆடம்பரமான
கட்டடங்களைக் கட்டத் தொடங்கினார். 1994-ம் ஆண்டு
முதல் 2005-ம் ஆண்டு வரை கட்டப்பட்ட பரப்பளவு
37,424.32 சதுர மீட்டர். 2005 முதல் இது வரை
படுவேகமாக 55,944.82 சதுர மீட்டரில் கட்டடங்களைக்
கட்டி உள்ளனர்.

இதுபோன்ற அடர்ந்த வனப் பகுதிக்குள் கட்டடம் கட்டுவதற்கு,
மலைத்தளப் பாதுகாப்புக் குழுவிடம் அனுமதி பெற வேண்டும்.

மாவட்ட கலெக்டரும், மாவட்ட வனச்சரக அதிகாரியும் நேரில்
சென்று ஆய்வுசெய்து அறிக்கை அளிக்க வேண்டும்.
உள்ளூர் பஞ்சாயத்து ஒப்புதல் அளித்து தீர்மானம் நிறைவேற்ற
வேண்டும். இவை அனைத்தும் மலைத்தளப் பாதுகாப்புக்
குழுவின் பார்வைக்கு வைக்கப்படும்.
அதன்பிறகு, மலைத்தளப் பாதுகாப்புக் குழு கூட்டம் நடத்தி,
அதில்தான் ஒப்புதல் வழங்கப்படும். இதில், ஏதாவது
ஒன்றில் பிசகினால்கூட வனப் பகுதிக்குள் ஒரு
செங்கல்லைக்கூட வைக்க முடியாது.

ஆனால், ஈஷா தியான மையம் எந்த அனுமதியும்
பெறாமல், கட்டடம், விளையாட்டு மைதானம்,
செயற்கை ஏரி, வாகன நிறுத்துமிடம் என பல வசதிகளை
செய்துள்ளது. (முந்தைய திமுக ஆட்சித் தலைவருக்கும்
சத்குருவுக்கும் நல்ல நெருக்கமும் “புரிதலும்” உண்டு !)

ஆட்சி மாற்றம் ஏற்பட்டதும் சத்குரு என்ன நினைத்தாரோ?
ஏற்​கெனவே கட்டியுள்ள கட்டடங்களுக்கும், புதிதாகக்
கட்டப்பட உள்ள கட்டடங்களுக்கும் அனுமதி வேண்டும்
என்று மலைத்தளப் பாதுகாப்புக் குழுவிடம் விண்ணப்பம்
அளித்துள்ளார்.

இதையடுத்து, ஆய்வில் இறங்கிய வனச்சரக அலுவலகம்
தனது அறிக்கையில், ‘ஈஷா தியான மையம் அமைந்துள்ள
பகுதி யானை வழித்தடங்களைக்கொண்ட அடர்ந்த வனப் பகுதி.
அங்கு கட்டடங்கள் கட்டுவது விதிமுறைகளுக்கு மாறானது.
எனவே, உடனே அதைத் தடுத்து நிறுத்த வேண்டும்’ என்று
அறிக்கை அளித்தது.

அத்துடன், கட்டப்பட்ட கட்டடங்களை
அகற்ற வேண்டும் என்றும் ஈஷா தியான மையத்துக்கு
நோட்டீஸும் அனுப்பி உள்ளது.

பதிலுக்கு,தடாலடியாக –  கட்டடம் கட்ட அனுமதி கேட்டு
விண்ணப்பித்த படிவத்தைத் திரும்பக் பெற்றுக்​கொள்கிறோம் என்று
ஈஷா தியான மையம் மனுச் செய்கிறது.

விதிமுறைகளைப் பின்பற்றச் சொன்னால், அதைச்
செய்யாமல், அனுமதி கேட்ட விண்ணப்பத்தைத்
திரும்பப் பெற்றுக்கொள்வது என்பதுதான் தீர்வா? –
என்று வழக்கு தொடர்ந்தவர்கள் வினவுகின்றனர்.

வழக்கறிஞர் வெற்றிச்செல்வனின் மனுவைப் பரிசீலித்த,
உயர் நீதிமன்றம், விதிமுறை மீறிய கட்டுமானங்கள் பற்றி
உரிய விளக்கம் அளிக்க உத்தரவிட்டு தமிழக அரசுக்கும் ஈஷா
தியான மையத்துக்கும் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர் –
என்பதே வெளியாகி இருக்கும் செய்தி.

ஈஷா மையம் தமிழ் நாட்டில் பசுமைக்காடுகளை
உருவாக்குவதாகச் சொல்லி வெளிநாடுகளிலும்,
உள்நாட்டிலும் – கடந்த பல வருடங்களாக,
மிகப் பெரிய அளவில் நன்கொடைகள்
வசூலித்து வருகிறது.

ஒரே சமயத்தில் லட்சக்கணக்கில் மரக்கன்றுகளை நடுவதாகச்
சொல்லி,3-4 வருடங்களுக்கு
முன்பு,  கருணாநிதி அவர்கள்  தமிழக முதல்வராக இருந்தபோது,
திரு ஜக்கி வாசுதேவ் அவர்கள் ஒரு பெரிய நிகழ்ச்சியை பலத்த
விளம்பரங்களுடன் நடத்தியது நினைவிற்கு வருகிறது.

அரசாங்க அமைப்புகளிடம் உரிய அனுமதியைப் பெறாமல்,
காடுகளுக்குள்  மரங்களை வெட்டி, யானைத்தடங்களை அழித்து,
பெரிய பெரிய கான்க்ரீட் கட்டிடங்களை கட்டுவதும் –

பின்பு பசுமைக்காடுகளை உருவாக்குவதாகவும்,
கோடிக்கணக்கில் மரக்கன்றுகளை நடப்போவதாகச் சொல்லி
பொது மக்களிடமே பணம் வசூலித்து அதிலும் சொன்னதைச்
செய்யாமல் ஏமாற்று வேலை செய்வதும் –
எந்த விதத்தில் சேர்த்தி ?

அண்மைக் காலங்களில் புதிதாக ஒரு உத்தியும் சேர்ந்திருக்கிறது.
வியாபாரம் நன்கு நடக்க, வீடுகளில் மங்கலம் பொங்க
என்று பலவிதமான உருவங்கள், எந்திரங்கள், மந்திரத்தகடுகள்,
மந்திரித்ததாகச் சொல்லப்பட்ட கயிறுகள் –
எல்லாம் விற்பனைக்கு வந்திருக்கின்றன.

ஏற்கெனவே ஈஷா மையத்தில் ஆர்வம் கொண்டு
கலந்து கொண்டவர்கள், அதன் மீது ஈடுபாடு கொண்டவர்களை –
நாம் என்ன சொன்னாலும் – வெளியே கொண்டு வர முடியாது.
அதன் மீது அவர்களுக்கு அத்தகைய ஈர்ப்பு உருவாகும்படி
அந்த அமைப்பினர் செய்து விடுகின்றனர்.

புதிதாகப் போய்ச்சேர விரும்பி, ஆனால் இன்னும் சேராத
நண்பர்கள் இந்த கட்டுரைகளை எல்லாம்  ஒரு முறைக்கு
இருமுறை படித்து யோசித்து முடிவெடுக்குமாறு கேட்டுக்
கொள்கிறேன்.

இந்த மையத்தைப் பற்றி இதுவரை எந்தவித
அபிப்பிராயமும் இல்லாதவர்களுக்கு – இந்த கட்டுரைகளே
போதுமானவை.

பிப்ரவரி 13, 2010 தேதியிட்டு விமரிசனம் தளத்தில்
வெளிவந்த இடுகை ஒன்றை கீழே மீண்டும் பிரசுரிக்கிறேன்.

———————————————————————————————-

திரு.ஜக்கி வாசுதேவ் அவர்களின் மீதான குற்றச்சாட்டு…


நம் நாட்டில் பொதுவாக ஆத்திகர்கள் என்றால் பெரும்பாலும்
அப்பாவிகளாகவே இருக்கிறார்கள்.

உண்மைக்கும் பொய்க்கும், அசலுக்கும் நகலுக்கும்
மெய்யான ஆன்மிக வழிகாட்டிகளுக்கும்,  போலிச்
சாமியார்களுக்கும் வித்தியாசம் தெரியாமலே ஏதோ ஒரு
வித உந்துதலில் உணர்ச்சி வசப்பட்டு
அவர்கள்  சொல்வதை எல்லாம் வேதவாக்காக
எடுத்துக் கொள்கிறார்கள்.

அவர்கள் தாங்கள் நம்பும் ஆன்மிகவாதிகள் மீது
எத்தகைய குற்றச்சாட்டு
வெளி வந்தாலும் நம்ப மறுக்கிறார்கள் !

யோகா கற்றுக்கொடுக்கிறேனென்று சொல்லிக்கொண்டு
ஆசிரியராக வருபவர்கள்  எல்லாம் ஆன்மிகவாதிகளாகி
விட முடியுமா ? யோகாவுடன், மெஸ்மெரிசமும்,
ஹிப்னாடிசமும் பயன்படுத்தி தங்களிடம் வருபவர்களை
எல்லாம் மனோவசியம் செய்து விடுகிறார்கள் !

ஏன் -பிரேமானந்தாவை  இன்னும் கூட சாமியாராக
ஏற்றுக்கொள்பவர்களும் இருக்கிறார்களே !

உலகம் முழுவதும் ஆசிரமம் பரவி இருக்கிறது
என்று சொல்லிக்கொண்டு  ஆண்டில் ஆறு மாதங்கள்
ஆகாய விமானத்தில்  பறக்கிறார்கள்.

ஜீன்ஸ் பேண்ட், ரீபோக் ஷூ, கூலிங் கிளாஸ்,
ஸ்போர்ட்ஸ்  பைக், சகிதமாகச் சுற்றுகிறார்கள்.
கேட்டால் –  உள்ளுக்குள் எல்லாவற்றையும் துறந்தவர்கள்
வெளியே  எப்படி  இருந்தால் என்ன  என்று
எதிர் கேள்வி கேட்கிறார்கள்.அகங்காரமும்,
பகட்டும், வெளிவேடமும் பார்த்தாலே திகட்டுகிறது.

உண்மையான துறவிகள் மிகக்குறைந்த தேவைகளுடன்,
அன்பும், கருணையும், சாந்தமும் கொண்டு சுயநலம் சிறிதும்
இல்லாத மனிதராக இருப்பர் ! அனைத்து உயிர்களிடமும்
அன்பு செலுத்துபவராக இருப்பர்.

வள்ளலாரையும், விவேகானந்தரையும் தந்த இதே நாடு தான்
இந்த  போலிவேடதாரிகளையும்  பெற்றிருக்கிறது.

உண்மையையும், போலியையும் வித்தியாசம் கண்டுகொள்ள
மக்கள் தான்  பழகிக்கொள்ள வேண்டும்.
ஏமாறுபவர்கள் இருக்கும் வரை ஏமாற்றுபவர்களும்
இருந்து கொண்டே தான் இருப்பார்கள்.

கத்தரிக்காய் சொத்தையா என்று பத்து முறை பார்ப்பவர்கள்,
வெண்டைக்காயை முற்றலா  என்று முனை உடைத்துப்
பார்ப்பவர்கள் – சாமியார்களை மட்டும் – யாராக இருந்தாலும்
அப்படியே நம்பி
ஏற்றுக்கொண்டு விடுகிறார்கள் !

கீழே உள்ள புகைப்படங்களைப்  பாருங்கள் –
என்ன தொழில் செய்கிறார் இவர் – இவ்வளவு பகட்டாக
வாழ்வதற்கு ?

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

5 Responses to ஈஷா மையம் – சற்குருவே சொல்ல வேண்டும் ! வெட்டுகிறார்களா – நடுகிறார்களா ? வெட்டுவது யாருக்காக- நடுவது யார் பணத்தில் ?

  1. pkandaswamy சொல்கிறார்:

    ஏமாறுகிறவர்கள் இருக்கும் வரை ஏமாற்றுபவர்கள் இருப்பார்கள். இந்த சாமியாரைப் பார்க்க அமெரிக்காவிலிருந்து ஸ்பெஷலாக வருபவர்கள் சிலரை எனக்குத் தெரியும். உள்ளூர் நண்பர் ஒருவர் இவர் பிடியில் சிக்கிக்கொண்டு தன் வருமானம் பூராவும் இவருக்கு கொடுக்கும் அவலத்தையும் பார்த்திருக்கிறேன்.

  2. அழகேசன் சொல்கிறார்:

    கா.மை அண்ணே
    எனக்கொரு டவுட்டு. “சத்குரு” ”சத்குரு”ன்னு சொல்றீங்களே அவரு யாரு? மரங்களை வெட்டி, காடுகளை அழித்து மழை பொய்ப்பதற்குக் காரணமாக இருப்பவர்கள், மிருகங்கள் அழிவிற்குத் துணை போகின்றவர்கள்தான் சத்குருவா? நல்லா வருது வாயிலே

    • ramanans சொல்கிறார்:

      ”குரு” என்பதற்கு இருளை நீக்குபவர் என்பது பொருள். “ஸத்குரு” என்றால் எல்லோரது அக இருளையும் நீக்கி மனம் மலர வழிகாட்டுபவர்-நல்ல குரு, வழிகாட்டி என்பது பொருள்.

      இது இவருக்குப் பொருந்துமா என்பதை நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள் அழகேசன். நன்றி.

  3. ரமேஷ் சொல்கிறார்:

    இவர் சிவராத்திரி இரவு போட்ட ஆட்டத்தை
    பார்த்தீர்களா ?
    அய்யோ என்ன ஆட்டம் போடுகிறார்கள் !
    இதன் பெயர் பக்தியாம் -முக்தியாம்.
    மலையில், காட்டுக்குள்ளே மரங்களை அழித்து,
    கான்க்ரீட் ஆசிரமம் அமைத்து, ஆயிரக்கணக்கில் வாகனங்கள்
    வரவழைத்து, இரவைப்பகலாக்கும் விளக்குகளை அமைத்து
    ஆட்டம் போடுகிறார் -சத்குரு !

    இவரது மனைவி விஜி என்பவர் 1996-ல்
    இளம் வயதில் சாக நேர்ந்தது குறித்தும்,
    இவர் மீது அது குறித்து கோயம்புத்தூர்
    போலீசில் இருந்த கொலை வழக்கு என்ன ஆனது
    என்பது குறித்தெல்லாம் யாராவது
    விவரங்கள் சொல்ல முடியுமா ?

  4. ssk சொல்கிறார்:

    வாழும் கலை என்று சொல்லி உலகம் முழுக்க சுரண்டி வாழ்பவர்களை பற்றி எழுதவும்
    இவர்கள் ஏழைகளுக்கு வாழும் கலை சொல்லி தருவார்களா ?
    பணக்காரனுக்கும் , கொழுப்பு கூடியவனுக்கும் மட்டும் சொல்லி தரும் இவர்கள் எப்படி பட்ட ஆசாமிகள் என்று மக்களுக்கு தெரிய
    வேண்டும்

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.