…
…
…
நேற்று படித்தது சின்ன அம்பானிஜி ஜெயில் கதை …
இன்று படிப்பது பெரிய அம்பானிஜியின் ஜியோ புராணம் –
————-
3 நாட்கள் வேலை நிறுத்தம் அறிவித்த BSNL ஊழியர்களின் முக்கிய
கோரிக்கை என்ன…? செய்தி என்ன…?
————————————–
கேள்வி – ரிலையன்ஸ் ஜியோவுக்கு ஆதரவாக அரசு செயல்படுவதாக
எந்த அடிப்படையில் சொல்கிறீர்கள்?
அரசாங்கம் தனது சொந்த நிறுவனமான பிஎஸ்என்எல்லுக்கு 4ஜி
அலைக்கற்றையை நாங்கள் மூன்று வருடங்களாகக் கேட்டும்
வழங்கவில்லை. ஆனால் ரிலையன்ஸ் அறிமுகமாகும்போதே 4ஜி
அலைக்கற்றையை ஒதுக்கீடு செய்து அறிமுகப்படுத்த 2016 செப்டம்பரிலேயே அனுமதி அளித்தது.
அரசானது எவ்வளவு தூரம் ரிலையன்ஸுக்கு ஆதரவாக இருந்தது என்பதற்குப் பல உதாரணங்கள் சொல்லலாம். ஜியோ அறிமுகமாகும்போதே பாரதப் பிரதமர் நரேந்திர மோடியின் விளம்பரத்தைப் பயன்படுத்தி தொடங்கினார்கள்.
பிஎஸ்என்எல் அரசாங்கத்துடைய சொந்த நிறுவனம். ஆனால், பாரதப் பிரதமர் எந்த விளம்பரத்தையும் அதற்காகச் செய்ததில்லை. ஜியோ விளம்பரத்துக்கு வந்தார்.
ஜியோ ஆரம்பித்த காலத்தில் இந்தியாவில் ஒரு சட்டம் இருந்தது.
அதாவது தொலைத் தொடர்பைப் பொறுத்தவரை மூன்று மாதங்கள்
இலவசமாகப் பயனாளிகளுக்குக் கொடுக்கலாம் என்பதுதான் அது.
ரிலையன்ஸ் ஜியோ அறிமுகப்படுத்தப்பட்டபோது அக்டோபர், நவம்பர், டிசம்பர் என மூன்று மாதங்களுக்கு அனைத்தும் இலவசம் என்று அறிவித்தார்கள்.
ஒன்றரை லட்சம் கோடி ரூபாய் மூலதனம் செய்து இலவசமாக ஜியோவை உருவாக்கி அதன் மூலம் மூன்றே மாதங்களில் சந்தாதாரர்களைத் தங்கள் பக்கம் இழுத்தார்கள். மக்களும் நிறையவே வாங்கினார்கள்.
‘டேட்டா’ 4ஜியாக இருந்ததால் அறிமுகத்திலேயே வேகமாகக் கிடைத்தது. இந்த அறிமுகச் சலுகை முடிந்த பிறகும் ஜனவரி மாதத்தில், ரிலையன்ஸ் ஜியோ புத்தாண்டுச் சலுகை என்னும் பெயரில் மேலும் மூன்று மாதங்கள் இலவசமாக்கினார்கள். இது இந்தியாவிலிருக்கும் சட்ட விதிகளுக்கு முரணானது. ‘ட்ராய்’ வகுத்த சட்டங்களுக்கும் முரணானது.
கேள்வி – பிஎஸ்என்எல்லுக்கு ஏன் 4ஜி கொடுக்கவில்லை என்று
நினைக்கிறீர்கள்?
பிஎஸ்என்எல்லுக்குக் கொடுத்தால் ரிலையன்ஸ் ஜியோவோடு பிஎஸ்என்எல்லும் போட்டிக்கு வந்துவிடும். போட்டிக்கு வந்தால் ரிலையன்ஸ் ஜியோ விரிவாக்கம் செய்ய கஷ்டப்படும்.
அக்டோபர் 2018இல் ஒரு கோடி இணைப்புகளை ஒரே மாதத்தில் ரிலையன்ஸ் ஜியோ உயர்த்தியது. அந்த ஒரு கோடி இணைப்புகள் ‘மொபைல் நம்பர் போர்ட்டபிலிட்டி’ அடிப்படையில வோடஃபோன் நிறுவனத்திலிருந்து 76 லட்சம் இணைப்புகள் ஜியோவுக்குப் போனது.
ஏர்டெலிலிருந்து 28 லட்சம் இணைப்புகள். மற்ற நிறுவனங்களிலிருந்து
இன்னும் கொஞ்சம் என்று ஒரு கோடி இணைப்புகள் ஆனது.
அதே அக்டோபர் 2018இல் பிஎஸ்என்எல் ஓர் இணைப்பைக்கூட இழக்கவில்லை. மூன்றரை லட்சம் புதிய இணைப்புகளை பிஎஸ்என்எல் கொடுத்தது. 4ஜி இல்லாத பிஎஸ்என்எல் மற்ற 4ஜி உள்ளவர்களைக் காட்டிலும் அந்த வேளையில் மூன்றரை லட்சம் இணைப்புகளைக் கொடுக்க முடிந்ததனால் எங்களுக்கு 4ஜி வேண்டும் என்று கேட்டோம். அப்போதுதான் நாங்கள் போட்டியில் முன்னேற முடியும் என்றோம்.
ஆனால், அரசாங்கமோ தனியார் நிறுவனங்கள் கொள்ளை அடித்த பின்தான் என்று முடிவெடுத்ததால் இன்று வரை 4ஜி கிடைக்கவில்லை.
4ஜி உடனே வேண்டும் என்று இன்றல்ல கடந்த மூன்று வருடங்களாகப்
போராடிவருகிறோம்.
பிப்ரவரி 24, 2018இல் தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் எங்களுடன்
பேச்சுவார்த்தை நடத்தும்போது 4ஜி அலைக்கற்றை உங்களுக்கு உடனடியாக வழங்கப்படும் என்று வாக்குறுதி கொடுத்தார்.
டிசம்பர் 3ஆம் தேதி நடந்த பேச்சுவார்த்தையிலும் உடனே வழங்கப்படும் என்றார். இன்று வரை அதற்கு எந்த அறிகுறியும் இல்லை. தனியாருக்கு
ஆதரவான அரசின் இந்தப் போக்கை எதிர்த்துத்தான் இந்த வேலைநிறுத்தத்தை நடத்துகிறோம்.
கேள்வி – பிஎஸ்என்எல்லுக்கு 4ஜி வாங்குவதற்கான தகுதி இல்லையோ?
4ஜியைப் பொறுத்தவரை உறுதித்தொகை 16,000 கோடி காட்டினால் கொடுத்து விடுகிறார்கள். 3ஜி இருந்தால் அதை வைத்து 4ஜி வழங்கப்படலாம் என்றிருந்தது. ஆனால், ரிலையன்ஸ் ஜியோ 16,000 கோடி கட்டி நேரடியாக 4ஜியுடன் சந்தையில் நுழைந்தது.
பிஎஸ்என்எல்லும் கட்டத் தயார் என்றோம். நிறுவனம் நஷ்டத்திலிருந்தது. இது அரசாங்க கம்பெனி என்பதால் 50 சதவிகிதத்தை அரசாங்கம் ஏற்றுக்கொள்ள வேண்டுமென்றும் மீதி 8,000 கோடியை 10 தவணைகளில் கட்டுகிறோம் என்றும் பிஎஸ்என்எல் போர்டு தெரிவித்ததற்கு இதுவரை பதிலில்லை.
தனியார் நிறுவனங்கள் வங்கிகளில் கடன் வாங்குவது போல பிஎஸ்என்எல் வாங்க முடியாத நிலை உள்ளது.
ரிலையன்ஸ் ஒரு லட்சத்து இருபத்தையாயிரம் கோடி கடன் வாங்கியுள்ளது.
ஏர்டெல் ஒரு லட்சத்து பதிமூன்றாயிரம் கோடி கடன் வாங்கியுள்ளது.
வோடாபோன் நிறுவனம் ஒரு லட்சத்து இருபதாயிரம் கோடி வாங்கியுள்ளது.
பிஎஸ்என்எல்லின் கடனோ வெறும் பத்தாயிரம் கோடி ரூபாய். அரசாங்கம்
உத்தரவாதம் அளிக்கும் ‘லெட்டர் ஆஃப் கம்ஃபர்ட்’ கடிதத்தைக்
கொடுக்காததால்தான் கடன் வாங்க முடியவில்லை.
இது ஒருபுறமிருக்க பிஎஸ்என்எல்லுக்கு ஏராளமான சொத்துகள் உள்ளன.
ஒன்றரை லட்சம் கோடி மதிப்புள்ள இடம் உள்ளது. இந்த இடத்தை ஒரு
வருடத்துக்குப் பத்தாயிரம் கோடி வரை வாடகைக்குக் கொடுத்து அதன் மூலம் பிஎஸ்என்எல் நஷ்டத்திலிருந்து மீளலாம் என்று கோரிக்கை வைத்தோம். ஆனால் அதையும் உரிய முறையில் பயன்படுத்த வழிவகை செய்யாமல் அரசு காலம் தாழ்த்துகிறது.
ஆனால், ஜியோவின் கோரிக்கைகளையெல்லாம் உடனடியாக அரசு
நிறைவேற்றியது. ‘இன்டெர் யூசேஜ் கட்டணம்’ (IUC) என்பது பொதுவான
ஒன்று. இதன்படி ஒரு ஜியோ பயனாளி பிஎஸ்என்எல் பயனாளியைக்
கூப்பிட்டால் அதற்கு ஒரு நிமிடத்துக்கு 14 பைசா கட்ட வேண்டும்
அவர்களோ இலவசமாகப் பயனாளிகளுக்குச் சேவைகளைத்
தந்துகொண்டிருந்ததால் எங்களால் கட்ட முடியாது என்று கோரிக்கை
வைத்தபோது அரசாங்கம் நிமிடத்துக்கு 6 பைசா என்று குறைத்துவிட்டது.
இந்த உத்தரவால் மட்டும் இந்திய அரசுக்கு ஐயாயிரம் கோடி நஷ்டம்
ஏற்பட்டது. அதே வேளையில் ஜியோ நஷ்டத்திலிருந்து லாபத்துக்கு
உயர்ந்துவிட்டது. பிஎஸ்என்எல் நஷ்டத்தில் இருக்கிறதென்றால் அதற்கு
அரசாங்கத்தின் கொள்கைகள்தான் காரணம்.
ஆனாலும்கூட 2002இல் மொபைல் சேவையைத் தொடங்க அனுமதி கொடுக்கப்பட்டபோது இன்கமிங் அழைப்புகள் இலவசம் என்று ஆக்கினோம். ஒரு நிமிடத்துக்கு இன்கமிங் 8 ரூபாய் என்றிருந்ததை பிஎஸ்என்எல்தான் மாற்றியது. இப்போதுகூட தேசிய அளவில் ‘ரோமிங் இலவசம்’ என்று பிஎஸ்என்எல் அறிவித்த பின்தான் மற்றவர்கள் மாறினார்கள்.
நாங்கள் போட்டியில் இருப்பதால்தான் தனியார் நிறுவனங்கள் விலையை ஏற்றாமல் இருக்கிறார்கள். நாங்கள் மக்களுக்கு உதவியாகத்தான் இன்றுவரை உள்ளோம்.
கேள்வி – மக்கள் ஏன் பிஎஸ்என்எல் ஊழியர்களின் போராட்டத்தைக் கவனத்தில் வைத்துக்கொள்ள வேண்டும்?
பிஎஸ்என்எல் என்பது மக்களின் சொத்து. பிஎஸ்என்எல் போன்ற பொதுத் துறை நிறுவனங்களில் கிடைக்கப்பெறும் வருவாயெல்லாம் இந்திய அரசாங்கத்துக்குப் போகும்.
தனியார் நிறுவனங்களுக்குக் கிடைக்கக்கூடிய வருமானமோ, லாபமோ தனியார் முதலாளிக்கோ அல்லது கார்ப்பரேட்டுக்கோதான் போகும்.
எல்ஐசி பொதுத் துறை நிறுவனம். அதனுடைய லாபமெல்லாம் அரசாங்கத்துக்குப் போகிறது. பிஎஸ்என்எல்லும் அது போல அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது. இதன் வருவாய் லாபமாக மாறும்போது இந்திய அரசாங்கத்துக்குப் போகும்.
மக்களிடம் சொல்ல நினைப்பதெல்லாம் ஒன்றுதான் உங்கள் சொத்தைத் தனியாருக்கு விற்கப் பார்க்கிறார்கள். அதை நீங்கள் அனுமதிக்கக் கூடாது. பிஎஸ்என்எல் இருந்தால் விலை உயராது. சேவை தொடர்ந்து கிடைக்கும்.
மக்கள் நிச்சயம் யோசிப்பார்கள். யார் அவர்களுக்கு எந்த இடர்பாடுகளுக்கு இடையிலும் சேவை செய்தார்கள்? வெள்ளத்தில், புயலில் ஏன் இன்றைக்கு வேலைநிறுத்தப் போராட்டங்களில் ஈடுபட வேண்டாம் என்று, ஜம்மு காஷ்மீர் ஊழியர்களை, சமீபத்தில் நடந்த தாக்குதலின் காரணமாக வேலைநிறுத்தத்தில் பங்கெடுக்க வேண்டாம் என்று எங்கள் தோழமை ஊழியர்கள் இன்று அங்கே பணியில் இருக்கிறார்கள்.
அது மட்டுமா? மாவோயிஸ்ட் நடமாடும் பகுதி என்றழைக்கப்படும் ‘ரெட் காரிடோர்’ பகுதியில் சேவை அளிக்க அரசாங்கம் இரண்டாயிரம் கோடி ஒதுக்கினார்கள். அப்போது யார் அந்தச் சேவையைத் தருவது என்னும்போது பிஎஸ்என்எல்லிடம்தான் அந்த வேலை ஒப்படைக்கப்பட்டது. தனியாரிடமல்ல!
இன்றைக்கும் கிராமங்கள் முழுக்க தங்கள் சேவைகளை அளித்துவரும் ஒரே நிறுவனம் பிஎஸ்என்எல். அப்படி கிராமத்திலிருந்து நகரம் வரை சேவையளித்து வரும் நிறுவனம் பிஎஸ்என்எல் மட்டும்தான். அதனால் மக்கள் இவற்றை கவனத்தில் கொள்ள வேண்டும்.
( இதைத்தவிர, BSNL ஊழியர்களின் போராட்டத்திற்கு இன்னும் சில
காரணங்களும் இருக்கின்றன… நான் இங்கே பொதுமக்களுக்கு தொடர்பு உள்ள தலைப்பை மட்டும் எடுத்துக் கொண்டிருக்கிறேன்…)
( அடித்தளம் – மின்னம்பலம் செய்திகள் ….)
.
—————————————————————————————————————-