110 வயதில் கண் தானம் ! ஐஸ்வர்யா ராயை விட அழகான சரஸ்வதி அம்மாளுக்கு நம் சல்யூட் !!

110 வயதில் கண் தானம்  !
ஐஸ்வர்யா ராயை விட அழகான
சரஸ்வதி அம்மாளுக்கு நம்   சல்யூட் !!

விஸ்ராந்தி முதியோர் இல்லத்தில் இருந்து
காலமான, 110 வயது சரஸ்வதி அம்மாள் என்பவர்
தன் இரண்டு கண்களைத் தானமாகத் தந்து
எந்த வயதிலும் கண் தானம் செய்ய முடியும் என்பதை
நிரூபித்திருக்கிறார் !

அவரது ஒரு கண் 12 வயது பையன் ஒருவனுக்கும்
இன்னொரு கண் 35 வயது பெண் ஒருவருக்கும்
உடனடியாகப் பொருத்தப்பட்டு இருவருக்கும்
கண் பார்வை  தெரிகிறது.

இந்த  கண் அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக
நடத்தி  இருப்பவர்
சென்னை நுங்கம்பாக்கத்தில் இருக்கும்
ராஜன் ஐ கேர்  கண் மருத்துவ மனையின் நிர்வாகி
டாக்டர்  மோகன் ராஜன் அவர்கள்.

இந்த அரிய நிகழ்ச்சிக்கு முக்கிய காரணமாக
இருந்தவர் விஸ்ராந்தி முதியோர் இல்ல
நிர்வாகியான திருமதி சாவித்ரி வைத்தி அவர்கள்.
இந்த இல்லத்தில் சேரும் அனைவரிடம்
அவர்கள் சேரும்போதே,விருப்பத்தைக் கேட்டறிந்து
பதிவு செய்து  கையெழுத்தும் வாங்கி வைப்பதை
வழக்கமாக வைத்திருக்கிறார் இவர்.

எனவே  இறப்பு நிகழ்ந்ததும் எந்தவித தாமதமும்
இல்லாமல் கண்களைப் பெற முடிந்திருக்கிறது.

இப்போது சரஸ்வதி அம்மாள் புகைப்படத்தைப்
பார்த்தால் அவர்  ஐஸ்வர்யா ராயை விட
அழகாகத் தெரிகிறார் எனக்கு.

சரி தானே  நண்பர்களே ?

———————————————-

இந்த தருணத்தில் சில நாட்களுக்கு முன்
இதே வலைத்தளத்தில் நான் எழுதி இருந்த
ஐஸ்வர்யா ராய் என்ன செய்தார் தெரியுமா
என்கிற இடுகையை மீண்டும் ஒரு முறை
பதிவு செய்தால் பயனுள்ளதாக இருக்கும்
என்று தோன்றியது  எனவே  மீண்டும் –

ஐஸ்வர்யா ராய் என்ன செய்தார் தெரியுமா ?

அதை அவ்வளவு சுலபமாகச்
சொல்லி விட மாட்டேன்.
இந்த இடுகையை முழுவதுமாகப்
படியுங்கள் – தெரியும் !

இந்தியாவில் கார்னியா குறைபாடு காரணமாகப்
பார்வை இல்லாமல் இருப்பவர்களின் எண்ணிக்கை
சுமார் 11 லட்சம்.

இப்போதைக்கு கண் தானம் மூலம் சராசரியாக
நம் நாட்டில் பார்வை பெறுவோர் எண்ணிக்கை
ஆண்டுக்கு சுமார் 32,000 மட்டுமே.இந்த
நிதானத்தில் இருந்தால் இவர்கள் எல்லாரும்
பார்வை பெறுவது என்று ?

கண் தானம் செயவது அப்படி என்ன பெரிய காரியமா?
அப்படி ஒன்றுமில்லை. நமக்கு பயன்படாததைத் தான்
பிறருக்கு கொடுக்கப் போகிறோம் – இதில் என்ன கஷ்டம் ?

மண்ணுக்கு கொடுப்பதையோ,
நெருப்புக்கு கொடுப்பதையோ
பார்வை இல்லாத பாவப்பட்ட  மனிதருக்குக்
கொடுத்தால் தான் என்ன ?

சில தகவல்கள் –

ஒருவர் தானம் செய்தால் –
இருவருக்கு பார்வை கிடைக்கும்.

ஒரு வயதுக்கு மேற்பட்டவர் –
எவ்வளவு வயதானவராக
இருந்தாலும் கொடுக்கலாம்.

கண்ணாடி அணிந்தவராக இருந்தாலும்,
காடராக்ட் செய்து கொண்டவராக இருந்தாலும்,
ரத்தக்கொதிப்பு உள்ளவராக இருந்தாலும்,
சர்க்கரை நோய் உள்ளவராக இருந்தாலும்,
கண்களைத்தவிர மற்ற இடங்களில் கேன்சர்
உள்ளவராக இருந்தாலும் கூட பரவாயில்லை.
தானம் கொடுக்க தகுதி உடையவர்களே !

இறந்து 6 மணி நேரத்துக்குள்ளாக கண்கள்
சேகரிக்கப்பட வேண்டும்.

இதற்கு ஆகும்  நேரம் வெறும்
20 நிமிடங்கள் மட்டுமே !

இதை எங்கு வேண்டுமானாலும் டாக்டர்கள்
மிகச்சுலபமாக செய்து விட முடியும் – இதற்காக
உடலை மருத்துவ மனைக்கு
கொண்டு போக வேண்டிய அவசியமே இல்லை.
வீட்டிலோ, ஆம்புலன்சிலோ – ஏன்
இடுகாட்டிலேயே கூடவோ  செய்யலாம்.
எந்தவித விகாரமும் தெரியாது. அந்த இடத்தில்
செயற்கை கண்கள் உடனடியாக வைக்கப்படும்.

இறந்தவர் கண்களை மூடி, அதன் மேல்  ஈரப் பஞ்சை
வைத்து கண்களை ஈரமாக வைத்திருந்தால்  நல்லது.

இறந்தவர் தானம் செய்ய எழுதிக்கொடுத்திருக்க
வேண்டிய அவசியம் இல்லை.  நெருங்கிய உறவினர்
தகவல்/சம்மதம் கொடுத்தாலே போதுமானது.

அருகில் உள்ள கண் வங்கியிலோ அல்லது அரசு பொது
மருத்துவ மனையிலோ தகவல் கொடுக்கலாம்.
உடனே டாக்டர்கள் வருவார்கள். அகில இந்திய அளவில்
இலவச தொலைபேசி எண் – 1919 க்கு தொடர்பு
கொண்டாலும் ( 24 மணி நேரமும் வேலை செய்யும் )
தேவையான தகவல்கள்  கிடைக்கும்.

இனிமேல் தலைப்புக்கு வரலாம்.
உலக அழகி ஐஸ்வர்யா ராய் கண்தானம் செய்ய
எழுதிக் கொடுத்திருக்கின்றார்.

கார்னியாவைப் பொறுத்த வரையில் உலக அழகியாக
இருந்தாலும், உள்ளூர் அழகியாக இருந்தாலும் –
நீங்களாக இருந்தாலும் – நானாக இருந்தாலும்
ஒன்று தான்.

எழுதிக்கொடுப்பது கூட முக்கியமில்லை. இதைப்பற்றிய
விழிப்புணர்வை – செய்தியை பரப்புவது தான் முக்கியம்.

நாம் மனம் வைத்து முனைந்தால்- இரண்டே வருடங்களில்
காத்திருப்போர் பட்டியலே(waiting list)
இல்லாமல் செய்து விடலாம். சரி தானே நண்பர்களே !
செய்யலாமா ?

எப்போது, யாரிடமிருந்து இறப்புச் செய்தியைக் கேள்விப்பட்டாலும்,
சம்பிரதாயமாகப் பேச வேண்டியதைப் பேசிய பின்னால்
தொடர்ச்சியாக, தவறாமல் கேட்க வேண்டிய கேள்வியாக
இதை வைத்துக்கொள்வோமே –

“கண் வங்கிக்கு தகவல் கொடுத்து விட்டீர்களா ?”

This entry was posted in அரசியல், அழகு, ஆனந்தம், இணைய தளம், இன்றைய வரலாறு, இரக்கம், ஐஸ்வர்யா ராய், கட்டுரை, சரித்திர நிகழ்வுகள், தமிழீழம், தமிழ், பொது, பொதுவானவை, மனதைக் கவர்ந்தது, Uncategorized and tagged , , , , , , , , , , . Bookmark the permalink.