யாரைக் கேட்கிறார் நிதியமைச்சர் சிதம்பரம் அவர்கள்….?

 

யாரைக் கேட்கிறார் நிதியமைச்சர் சிதம்பரம் அவர்கள்….?

pc on google chat

நேற்றைய தினம் google plus உரையாடல்களின்போது –
உலகத்தின் 3வது பெரிய பொருளாதார சக்தியாக
உருவாகி இருக்க வேண்டிய இந்தியா இன்னமும்
பின்தங்கி இருப்பது ஏன் என்ற கேள்விக்கு விளக்கம்
அளிக்கும்போதே –
சில கேள்விக்கணைகளை வீசி இருக்கிறார் நிதியமைச்சர்.

————-

நமக்கு 1000 கிலோ மீட்டர் தூரத்திற்கு ரோடு போடுவதற்கு
5 வருடங்கள் ஆவது ஏன்  ?

ஒரு மின் உற்பத்தி நிலையத்தை அமைப்பதற்கு
6 வருடங்கள்  ஆவது ஏன்  ?

————-

நியாயமான கேள்விகள்.  ஆனால் –

கடந்த 9 ஆண்டுகளாக ஆட்சி யாரிடம் இருக்கிறது ?
அதிகாரம் யாரிடம் இருக்கிறது ?
அதிகாரிகளும், அமைச்சர்களும் –
யார் சொன்னால் கேட்பார்கள் ?

தாமதம்  ஆகிறதே ஏன் என்று
யார் – யாரிடம் கேட்பது  ?
பதில் சொல்ல வேண்டிய பொறுப்பில் இருப்பவர்கள்
கேள்வி கேட்டால் எப்படி?

உண்மையில் இந்நாட்டு மக்கள் அல்லவா
இந்த கேள்வியைக் கேட்க வேண்டியவர்கள் ?

மக்கள்  கேட்க மாட்டார்கள் ! ஏனென்றால்
அவர்களுக்கு –
விடை ஏற்கெனவே தெரியும் !

வேலைகள் நடக்காததற்கு காரணம் –
சம்பந்தப்பட்ட அமைச்சர்கள்,
அவர்களது இலாக்காக்கள்  – அதிகாரிகள் –
எல்லாருமே வேறு வேலையில் “பிஸி” யாக இருந்தனர் –
இருக்கிறார்கள் !

எவ்வளவு ஏரியாக்கள் ? எவ்வளவு பெரிய தொகைகள் ?
எப்பேற்பட்ட பொறுப்புகள் ? அத்தனையையும்
தாண்டி வர வேண்டுமே !
இலேசுப்பட்ட விஷயமா என்ன ?

2ஜி ஒலிக்கற்றை – 1,76,000 கோடி
காமன்வெல்த் கேம்ஸ் – 1000 கோடி
ஆதர்ஷ் குடியிருப்பு – அசல் மதிப்பே தெரியவில்லை
நிலக்கரி ஊழல் –  தோராயமாக இரண்டு லட்சம் கோடி
ஹெலிகாப்டர் –  400 கோடி

ஆம் – DLF நிலம் வேறு !
ராஜஸ்தான் பாலவன சோலார் பவர் ப்ளாண்ட்
நிலங்கள் வேறு !

(கொஞ்சமா – நஞ்சமா –மற்றதெல்லாம் உடனடியாக
நினைவிற்கு வர மாட்டேன் என்கிறது !)

——————————-

கேள்விகள் அத்தோடு போயிற்றா ?
நடுத்தர வர்க்கத்திற்கு புதிய வரிகள் போட்டது பற்றி –

6000 ரூபாய் கொடுத்து மொபைல் வாங்க சக்தி
இருப்பவரிடம் மேலும் 300 ரூபாய் கேட்பதில்
என்ன தவறு ?

ஏர்-கண்டிஷன் ஹோட்டலில் உணவருந்த
வசதி இருப்பவரிடம் – அரசாங்கம்  கொஞ்சம்
பணம் பிடித்துக் கொண்டால் என்ன தவறு ?

———————–

நல்ல கேள்விகள் தான்  -ஆனால், எப்போது ?

உண்டு கொழுத்து, திண்டில் அமர்ந்திருக்கும்
செல்வந்தர்களுக்கு -பெத்த வர்த்தகர்களுக்கு,
பெரிய பெரிய தொழிலதிபர்களுக்கு  –
4,65,000 கோடி வரியைத் தள்ளுபடி செய்வதை
தவிர்த்து விட்டு – கேட்டிருந்தால் பொருத்தமாக இருக்கும் !

இந்த நாட்டின் அடித்தட்டு மக்கள் பயணம் செய்யும்
வாகனங்களின் டீசல் விலையை, பெட்ரோல் விலையை
கொஞ்சம் மட்டுப்படுத்தி விட்டு
கேட்டிருந்தால் பொருத்தமாக இருந்திருக்கும் !

சர்க்கரை விலையை, அரிசி விலையை,
பருப்பு விலையை, எண்ணை விலையை
கொஞ்சம் கட்டுப்படுத்தி விட்டு
கேட்டிருந்தால் – பொருத்தமாக இருந்திருக்கும் !

உணவுப் பொருட்களுக்கு ஆன்லைன் speculative
வர்த்தகத்தை தடை செய்து விட்டு  கேட்டிருந்தால் –
பொருத்தமாக இருந்திருக்கும் !

————————
அடுத்த அறிவிப்பு –

அந்நிய நாடுகளிலிருந்து தங்கம் இறக்குமதி செய்யப்படுவதை
ஒரு ஆண்டு நிறுத்தி வைத்தாலே போதும் –

இந்தியாவின் அந்நியச் செலாவணியில் பாதி
மிச்சம் ஆகி விடும் !

——————-

இதுவும் அருமையான ஐடியா  தான். பொதுமக்கள்
யாருமே எதிர்ப்பு தெரிவிக்க மாட்டார்கள் !

ஆனால் எப்போது ?

வெளிநாடுகளில் பதுக்கி வைக்கப்பட்டிருக்கும்
இருபத்தி ஐந்து லட்சம் கோடி கறுப்புப் பணத்தில் –

வெறும் 25 கோடியையாவது
இந்தியாவிற்கு திரும்பக் கொண்டு வந்து
காட்டி விட்டு,
இதைச் சொன்னால் – மக்கள் எந்தவித வருத்தமும்
இல்லாமல் உடனடியாக ஏற்றுக் கொள்வார்களே !

(ஆனால் தங்கம் கடத்துபவர்களுக்குத் தான் பாவம் –
தொழிலே மறந்து போயிருக்கும்  – திரும்பத் துவங்க
கொஞ்சம் நேரம் பிடிக்குமே !
அவர்களுக்கு – ஒரு வருடம் – போதாதே !)

கூடவே – பொதுத்துறை வங்கிகளில் கோடிக்கணக்கில்
கடன் வாங்கி விட்டு, வருடக்கணக்காக
திரும்பக் கொடுக்காமலிருக்கும்
பெத்த கடங்கார பெரிய தொழிலதிபர்களின்
பெயர்களையும் வெளியிட்டு விட்டு  – சொன்னால் –
மக்கள் எதிர்ப்பே தெரிவிக்க மாட்டார்கள் !

——————-

உலகத்தின் 3வது பெரிய சக்தியாக என்ன –
முதலாவது பெரிய சக்தியாகவே இந்தியா
உருவெடுக்க முடியும் –

எப்போது ?

லஞ்சமும் ஊழலும் புழுத்து நெளியும்
இந்த நாட்டின் அதிகார வர்க்கம் அடியோடு மாற்றப்பட்டால் –

நாடு பூராவும்  பல்வேறு நீதிமன்றங்களில் ஆண்டுக்கணக்கில்
குவிந்து கிடக்கும் லஞ்ச ஊழல் வழக்குகள் அத்தனையையும்
தூக்கி எடுத்து, தூசி தட்டி,
3 மாதங்களுக்குள் விசாரித்து தீர்ப்பளித்தால் –

சிபிஐ -ஐ அரசின் பிடியிலிருந்து விடுவித்து,
நேரடியாக உச்சநீதிமன்றத்தின் கீழ் கொண்டு வந்தால் –

கிரிமினல் அரசியல்வாதிகள் அத்தனை பேருக்கும்
தேர்தலில் போட்டியிட தடை விதித்தால் –

இரண்டு தடவைகளுக்கு மேல் யாரும் மந்திரி பதவி
வகிக்க தடை விதித்தால்  ………

-இவற்றில் எதையாவது  செய்ய ……….
உங்களால்  முடியுமா ?

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

2 Responses to யாரைக் கேட்கிறார் நிதியமைச்சர் சிதம்பரம் அவர்கள்….?

  1. c.venkatasubramanian சொல்கிறார்:

    I wonder how a person is fit enough to presnt a budget,when he is unfit to manage his own
    Textile-spinning mill at Rajapalayam?

  2. pkandaswamy சொல்கிறார்:

    அக்கிரமம்.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.