கலைஞரின் பேட்டி – நடுவுல கொஞ்சம் -sorry – கடைசீல கொஞ்சம் பக்கத்தைக் காணோம்….

கலைஞரின் பேட்டி – நடுவுல கொஞ்சம் -sorry –
கடைசீல கொஞ்சம் பக்கத்தைக் காணோம்….

இது இரண்டு தினங்களுக்கு முன் நடந்தது –
பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் காங்கிரஸ் தலைவர்
சோனியா காந்தி ஆகியோருக்கு கருணாநிதி தனித்தனியாக
கடிதம் அனுப்பினார்.

அந்தக் கடிதங்களில் –
(1) இலங்கை அரசாலும், அரசு நிர்வாகத்தில் உள்ளோராலும்
ஈழத் தமிழர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள்
போர்க் குற்றங்கள் என்றும்,

(2)இனப்படுகொலை என்றும் பிரகடனப்படுத்த வேண்டும்.

(3)மேலும், நம்பகத்தன்மை வாய்ந்த சுதந்திரமான பன்னாட்டு

ஆணையம் ஒன்றை அமைத்து குறிப்பிட்ட கால வரையறைக்குள்

இலங்கையில் நடைபெற்ற போர்க் குற்றங்கள்,
மனித இனத்திற்கு எதிரான குற்றங்கள்,
பன்னாட்டு மனித உரிமை மற்றும் மனிதாபிமான சட்ட மீறல்கள்

மற்றும் தமிழர்களுக்கு எதிரான இனப்படுகொலை –
குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று கோரிக்கைகள்
வைக்கப்பட்டன.
செய்தியாளர்களுக்கும்,கடிதத்தின் நகல்கள் தரப்பட்டன.

இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் கலைஞர் கூறியது –

தொடர்ந்து வலியுறுத்தி வரும் எங்கள் கோரிக்கைகளை
மத்திய அரசு ஏற்கவில்லை என்றால் –

எங்களுக்கும் இந்தக் கூட்டணிக்கும் உள்ள உறவு நீடிக்குமா
என்பது சந்தேகம் !!

நீடிக்காது என்பது உறுதி !!!

நேற்றைய முன்தினம் சொன்னது –

மத்திய அரசுக்கு எச்சரிக்கை விடுத்தபின்னரும் –
மத்தியில் இருந்தோ, காங்கிரசில் இருந்தோ பேச
இன்னும் யாரும் வரவில்லை. அதனால், இந்தக் கூட்டணியில்
இனி நீடிப்பதில் அர்த்தம் இருப்பதாகத் தெரியவில்லை !

இதன் பின்னர் நேற்று மாலை 3 மத்திய அமைச்சர்கள்
(ப.சி., ஏ.கே.அந்தோனி, குலாம் நபி ஆசாத் )
ஆகியோர் கலைஞரை சந்தித்தி 2 மணி நேரம் ஆலோசனை
நிகழ்த்துகின்றனர்.

வெளியே போகும்போது குலாம் நபி ஆசாத் சொன்னது –
“கலைஞரிடம் பேசிய விவரங்களை பிரதமரிடமும்,
காங்கிரஸ் தலைவரிடமும் எடுத்துக் கூறுவோம். காங்கிரஸ்
தலைமை தகுந்த முடிவை எடுக்கும்.”

அதே சமயம் கூட்டம் முடிந்ததும் கலைஞர் சொன்னது –

நான் கூறியுள்ள தீர்மானங்களை -(முதலில் ..?)
இந்திய பாராளுமன்றத்தில் நிறைவேற்ற வேண்டும் என்று
கூறி இருக்கிறேன். அதற்கு அவர்கள் ஒப்புக் கொண்டுள்ளார்கள்.

(இந்திய பாராளுமன்றத்தில் இப்படி ஒரு தீர்மானம்
நிறைவேற்றுவது என்கிற, புதிய, திசை திருப்பும் முயற்சி
இங்கு தான் முதல் தடவையாக சத்தம் போடாமல்
அரங்கேறுகிறது !)

காங்கிரஸ் கட்சி இதுகுறித்து – இதற்குப் பின்னர்
ஒன்றும் கூறவில்லை.

இன்று காலை 11 மணிக்கு பாராளுமன்றம் கூடுகிறது.

அதே சமயம்,சென்னை அறிவாலயத்தில் கலைஞர்
ஒரு அறிக்கை வெளியிடுகிறார் –
“மத்திய அரசிலிருந்து திமுக வெளியேறுகின்றது“என்று.

அதற்கு ஆதரவாக அவர் கூறிய வார்த்தைகள்  –

“குதிரை குப்புறத் தள்ளியதும் அல்லாமல், குழியும் பறித்த
கதை”யாக, அமெரிக்காவின் வரைவுத் தீர்மானத்தை
பெருமளவுக்கு நீர்த்துப் போக விட்டதோடு; திராவிட
முன்னேற்றக் கழகம் முன்மொழிந்த திருத்தங்கள்
எவற்றையும் இந்திய அரசு சிறிதும் பரிசீலனையும்
செய்யவில்லை”.

இன உணர்வுள்ள எந்த ஒரு
தமிழனும் இந்த நிலையை ஏற்றுக் கொள்ள இயலாது.

இந்திய மத்திய ஆட்சியில் திராவிட முன்னேற்றக் கழகம்
நீடிப்பது தமிழினத்திற்கே இழைக்கப்படும் பெரும் தீமை.
மத்திய திமுக அமைச்சர்கள் எப்போது பதவி விலகுவார்கள்
என்று கேட்டதற்கு – “இன்றோ – நாளையோ”
என்றார் ( அர்த்தம் புரிகிறது ).

வெளியிலிருந்து ஆதரவு உண்டா என்று நிருபர் ஒருவர்
கேட்டதற்கு “அதெல்லாம் கிடையாது” என்றார்.

இறுதியில் கீழ்க்கண்டவாறு அவர்  சொன்னது தான்
நமக்கு கடைசீ பக்கமாகத் தோன்றுகிறது !!!

இந்த முடிவில் மாற்றம் ஏற்பட வாய்ப்பு உண்டா என்ற
கேள்விக்கு – பாராளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற
இன்னும் அவகாசம் இருக்கிறது. இன்றோ, நாளையோ,
21ந்தேதியோ கூட தீர்மானம் வரலாம். நாங்களும்
எங்கள் முடிவை மாற்றிக் கொள்ளத் தயாராக இருக்கிறோம் !”

ஆக மொத்தம் – கடைசீ பக்கம் இப்போதைக்கு காணோம்.
ஆனால் – வரும் !!

அந்த கடைசீ பக்கம் காணாமலே போனால் நல்லது
என்று தோன்றுகிறது. இன்றைய பக்கம் தமிழ் நாட்டுக்கு
நல்லது. இதுவே நிலைக்கட்டுமே !!!

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, கருணாநிதி, பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

2 Responses to கலைஞரின் பேட்டி – நடுவுல கொஞ்சம் -sorry – கடைசீல கொஞ்சம் பக்கத்தைக் காணோம்….

  1. எழில் சொல்கிறார்:

    ஐநா மன்றத்தை தான் நாடாளுமன்றம் என அவசரத்தில் கூறி விட்டேன் என்று அதற்கும் ஒரு நாடகம் போடாமல் இருந்தால் சரி.

  2. venkataramani r சொல்கிறார்:

    லாஜிக்கலாக பார்த்தால் தமிழினத் தலைவர் டாக்டர்
    கலைஞரின் பேட்டி சரிதான். பாராளுமன்றத்திலே இவ்விஷயம்
    குறித்த விவாதம் முற்றுப் பெற்ற பின்னர், “அர்த்தமுள்ள” தீர்மானம்
    நிறைவேறுமானால், தி.மு.கவின் ஆதரவு வாபஸுக்கு அர்த்தம்
    அனர்த்தமாகாதா?
    பலரும் கோரும் அர்த்தமுள்ள தீர்மானம் நிறைவேறினால்
    வெற்றி. எங்களால் தான் (என்னால் தான் என்று வாசிக்க வேண்டும்)
    இலங்கை அரசுக்கு எதிரான மனித உரிமை மீறல் குறித்த ஐ நா
    தீர்மானத்தில் கடும் (?!) கண்டனத்தை பதிவு செய்தது என்று மார்தட்டிக்
    கொள்ளலாம். நிறைவேறாமல் போனாலும் வெற்றிதான். அதிகாரத்தைத்
    துறந்தேன் என்று சொல்லிக் கொள்ளலாம்.
    2G ஊழல்களை மறந்து, இலங்கை தமிழர் நலனுக்காக் “இப்போது”
    செய்த தியாகத்தை மெச்சி, மக்கள் மே 2014-ல் வாக்களிப்பார்கள்
    என்கிற கணக்கும் இதில் இருக்கக்கூடும்.
    ஒரு அரசியல்வாதிக்கு “சந்தர்ப்பம்” என்கிற ஒன்றைத் தவிர இருப்பைக்
    காட்டிக்கொள்ள வேறென்ன வேண்டும். எனவே, நடுவிலோ,
    கடைசியிலோ பக்கங்கள் காணமல் போகவில்லை. மாறாக
    வேறொன்றொடு ஒட்டியிருக்கிறது என்பதே உண்மை.
    அது சரி. பலரும் கோரும் திருத்தங்களைக் இந்தியா கொண்டு
    வருவதால் மட்டும் இலங்கை அரசு தனது போக்கை மாற்றிக்
    கொண்டுவிடும் என்பதற்கு என்ன உத்திரவாதம்? அல்லது பரவலாகி
    வரும் தமிழ் மாணவர்களின் போராட்டங்கள்தான், இலங்கை
    அதிபருக்கு தண்டனையைப் பெற்று தந்துவிடப் போகிறதா? விவரமான
    கருத்தினை தங்களிடமிருந்து எதிர்பார்க்கிறேன்.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.