“ஞாநி” அவர்களே -ஊரார் பணம் உங்களுக்கு எதற்கு …?

தேர்தல் லட்சியம் குறித்து ஆப் கட்சி அறிவித்தது என்ன ?
“ஊழல்வாதிகள் போட்டியிடும் பாராளுமன்ற தொகுதிகளில்
எல்லாம் அவர்களை எதிர்த்து ஆப் வேட்பாளர்கள்
போட்டியிடுவார்கள்” என்பது தானே ?

congaap

அதிருஷ்டவசமாக, திருவாளர் ஞாநி வசிக்கும்
சென்னையிலேயே, தொலைபேசி ஊழல் தயாநிதி மாறன்
போட்டியிடுகிறார். ஞாநி அவரை எதிர்த்து
பாராளுமன்றத்திற்கு போட்டியிடுவது தானே
சரியாக இருக்கும் ..?

பின்னர் ஏன் ஆலந்தூரைத்தேடி, அதுவும் சட்டமன்ற
இடைத் தேர்தலில் – போட்டியிடப் போக வேண்டும் ?
அவர் தயாநிதி மாறனைத் தவிர்ப்பது ஏன் ?
தயக்கமா ? அச்சுருத்தலா ? அல்லது வேறு எதாவது
‘விவகார’மா ?

இங்கு இன்னொரு விஷயமும் சொல்லியாக வேண்டும்.
சென்ற மாதம் தி.நகரில் லஞ்சம்,மற்றும் மதுவுக்கு
எதிரான சட்டபஞ்சாயத்து அமைப்பினரால் ஒரு கூட்டம்
நடத்தப்பெற்றது. அதில் மதுக்கடைகளை மூடுவது
தொடர்பான போராட்ட திட்டங்கள் குறித்து
விரிவாகப் பேசப்பட்டது.

அண்மையில், ‘விழி -தமிழ்நாடு’என்று மதுவுக்கு
எதிராக மக்களைத் திரட்டும் அமைப்பு ஒன்று உருவாக்கப்
பட்டிருக்கிறது. அதன் தலைவர் (ஓய்வு பெற்ற)நீதிபதி
திரு.சந்துரு அவர்கள். ஒருங்கிணைப்பாளர் சாட்சாத்
ஞாநி அவர்களே தான்.

அந்த கூட்டத்தில், இவர்களைத் தவிர, மதுக்கடைகளை
மூடக்கோரி,கடந்த சில வருடங்களாக தீவிரமாகப்
போராடிவரும் காந்தீயவாதி சசிபெருமாளும் கலந்து
கொண்டார். ஞாநியும், சசிபெருமாளும் அடுத்தடுத்து
ஆளுக்கு 20 நிமிடமாவது மதுவின் கொடுமைகளைப்
பற்றி விரிவாகப் பேசினார்கள்.

மது ஒழிப்பு பிரச்சினை, தமிழக அரசை நோக்கி முன்
வைக்கப்படுவது. எனவே அதனை முன்நிறுத்தி
சசிபெருமாள் சட்டமன்ற இடைத்தேர்தலில்
போட்டியிடுவதில் ஒரு அர்த்தம் இருக்கிறது.

ஆனால், ஆப் போராடுவது லஞ்ச ஊழல்வாதிகளை எதிர்த்து.
அதற்கு ஞாநி – தயாநிதி மாறனை எதிர்த்துப்
போராடுவது தானே பொருத்தமாக இருக்கும்…?

ஞாநி ஆலந்தூரில் சசிபெருமாளை ஆதரித்து பிரச்சாரமும்,
மத்திய சென்னையில் தயாநிதி மாறனை எதிர்த்து
போட்டியும் – என்பது தானே நியாயமாகவும்,
பொருத்தமாகவும் இருக்கும் …?
பின் ஏன் ஞாநி ஆலந்தூரில்….?
அவர் ஏன் தயாநிதி மாறனைத் தவிர்க்கிறார்…?

அடுத்து –

ஆலந்தூர் சட்டமன்ற தொகுதியின் மொத்த
வாக்காளர் எண்ணிக்கை – 230480

கடந்த முறை ஓட்டு போட்டவர்களின்
எண்ணிக்கை – 168135

இருமுனைப்போட்டியில் வெற்றி பெற்ற
பண்ருட்டி ராமச்சந்திரன் பெற்ற வாக்குகள் -76537

இந்த தடவை 4 முனைப்போட்டி இருப்பதால்,
சுமார் 70,000 ஓட்டுக்கள் பெறுபவர்கள்
வெற்றி பெறலாம் என்று வைத்துக் கொள்வோம்.

ஞாநியால் இந்த தொகுதியில் அதிகபட்சம்
10,000 ஓட்டுக்களாவது பெற முடியுமா ?

ஆலந்தூரில் முதல் 3 இடங்களையும் பெறுவதற்கு
அதிமுக, திமுக, தேமுதிக ஆகிய 3 கட்சிகளுள்
தான் போட்டி இருக்க முடியும் என்பது வெளிப்படை.

ஞாநியோ, சசிபெருமாளோ,
போட்டி போடப்போடுவது 4வது இடத்திற்கு தான் …!

வெற்றி கிடைக்காது என்று நிச்சயமாகத் தெரிந்தும்
ஞாநி போட்டியிடுவது எதற்காக ..?
அதுவும் சசி பெருமாளை எதிர்த்து …?
சரி அவர் ஆசை அவருக்கு…!

ஆனால் அவர் தன் அதீத ஆசையை நிறைவேற்றிக்கொள்ள
மற்றவர்களின் 10 லட்ச ரூபாய் பணத்தை
விரயமாக்க வேண்டும் என்பது எந்த விதத்தில் நியாயம் ?

முகநூல் மூலமாகவும், மற்ற மீடியாக்கள் மூலமாகவும்
ஞாநி தனக்கு தேர்தலில் போட்டியிட பணம் அனுப்புமாறு
பொது மக்களுக்கு வேண்டுகோள் விடுத்து –
அதற்காக, தனது வங்கிக்கணக்கு எண்களையும்
வெளியிட்டுள்ளார்.

அவரது அறிவிப்பைப் பாருங்கள் –

————-

“நிதி அனுப்புங்கள்… உதவுங்கள்.

சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடுவதென்றாலே 30
நாட்களுக்கு தினசரி சராசரி செலவு ரூ 50 ஆயிரம்.
இது மிகக் குறைந்தபட்ச செலவாகும். இதே 30 நாட்களில்
தேர்தல் ஆணையம் அனுமதித்த உச்சவரம்பின்படி
செலவிட்டால், தினசரி சுமார் 83 ஆயிரம் வரை
செலவிடலாம். நடைமுறையில் பெரும் கட்சிகள் எல்லாம்
தினசரி பத்து லட்சம் ரூபாய்க்கு மேல்தான்
செலவிடுகின்றன.

எளிய மக்கள் கட்சியான ஆம் ஆத்மி
கட்சியின் ஆலந்தூர் சட்டமன்றத் தொகுதி வேட்பாளராகிய
நான் தினசரி 50 ஆயிரம் செலவுக்கு பணம் திரட்டவே
மக்களிடம் உதவி கோருகிறேன்.
குறைந்தபட்சம் பத்து லட்சம் ரூபாய் மக்களிடம் திரட்ட
விரும்புகிறேன்.

எதிலும் பகிரங்கத்தன்மை, நேர்மை என்பவையே என்
கோட்பாடுகள்.வெற்றி மட்டுமல்ல , அதற்கான வழிமுறைகளும்
முக்கியமானவை என்று நான், நாங்கள் நம்புகிறோம்.”

————

ஆப் கட்சியின் அறிவிக்கப்பட்ட –முக்கிய குறிக்கோளே-
தேர்தலில் பெரும் செலவை ஒழித்து, சாமான்யனும்
தேர்தலில் போட்டியிட வழி வகுப்பது தான்.

இவர் ஒரு சாதாரண சிறிய சட்டமன்ற தொகுதிக்கு
ஒரு நாளைக்கு 50 ஆயிரம் செலவிடப்போகிறேன்.
என்கிறார். இதில் பெரிய கட்சிகள் ஒரு நாளைக்கு
10 லட்சம் வரை செலவிடுகின்றன
என்கிற சாக்கு, சப்பைக்கட்டு வேறு..!

இந்த இடைத்தேர்தலுக்கு இவ்வளவு பணம் செலவழிப்பது
இவரது கட்சியின் லட்சியத்துக்கு உகந்தது தானா ?
எல்லாரும் செய்கிறார்களே – நான் செய்ய வேண்டாமா?
என்று கேட்கிறாரே –எல்லாரும் செய்வதை இவரும்
செய்வதற்காகத் தான் போட்டியிடுகிறாரா ?

சரி – அப்படி ஒரு வேண்டாத ஆசை இருந்தால்
ஞாநி தன் சொந்தப் பணத்தை செலவழிக்கட்டும்.
பொது மக்களின் 10 லட்ச ரூபாயை, இவர் தேர்தலில்
நின்று தோற்பதற்காக ஏன் வீணடிக்க வேண்டும்…?

வேட்பாளர் விண்ணப்ப பத்திரத்தில் தனக்கு
1.72 கோடி அளவிற்கு சொத்து/பணம் இருப்பதாகத்
தெரிவித்திருக்கிறார். இதிலிருந்து செலவழிக்க வேண்டியது
தான் ? இவர் தேர்தலில், அதுவும் ஆலந்தூரில் –
சட்டமன்ற இடைத்தேர்தலில் –
போட்டியிட வேண்டுமென்று யார் அழுதார்கள் ?

அது இவரது சொந்த ஆசை. அதற்கு தன் சொந்தப்
பணத்தை செலவழித்தால், இந்த இடுகைக்கு அவசியமே
நேர்ந்திருக்காதே ..
(சசி பெருமாள் தனக்கு சொத்தோ, குறிப்பிடும்
அளவிற்கு ரொக்கப் பணமோ எதுவுமில்லை என்று
அறிவித்திருக்கிறார். ஆனால் அவர் இன்டர்னெட்டில்
பிச்சை எடுக்கவில்லை …!)

லோக் சத்தா என்பது -தமிழ் நாட்டில் அதிகம்
பாப்புலராகாத, ஊழலை எதிர்க்கும் இன்னுமொரு
கட்சி. அதன் வேட்பாளர் தென் சென்னையில்
பாராளுமன்றத்திற்கு போட்டியிடுகிறார். அவர் தனது
தேர்தல் பட்ஜெட்டை வெளிப்படையாக அறிவித்திருக்கிறார்.

கீழே பாருங்கள் –

தென்சென்னை – வேட்பாளர் – ஜெய்கணேஷ்

திட்டமிடப்பட்டுள்ள செலவுகள்

S.no         Expenses          Amount        Days

1.          1.5 lakhs notice (80 paise each)

Rs.1,20,000.00

2.         Bike petrol – 200 per day per bike              (5 bikes everyday) -20 days

Rs.20,000.00

3,         Food and refreshment –                 250 x 6 persons each day-20 days

Rs.30,000.00

4.         Small speaker with mike 6,000.00

5.         Battery (rent) 4,000.00

6.         Paid volunteer 50,000.00

7 .         Deposit –        25,000.00

——————-
    Total – Rs.2,55,000.00

ஆக அவர்களது பட்ஜெட் –
ஒரு பாராளுமன்ற தொகுதியின்
மொத்த வேட்பாளர் செலவே
இரண்டு லட்சத்து 55 ஆயிரம் ரூபாய் மட்டுமே.

வெற்றியை எதிர்பார்க்காமல், ‘சிம்பலிக்’
ஆக போட்டியிடுவது என்றால்
இவருக்கு சட்டமன்ற தொகுதி என்பதால்
இவ்வளவு கூட தேவைப்படாதே …!

ஓ -வசதி இருப்பவர்கள் தானே –
விருப்பம் உள்ளவர்கள் தானே –
ஈடுபாடு இருப்பவர்கள் தானே -கொடுக்கப் போகிறார்கள் –

உனக்கென்ன வந்தது என்று திரும்பக் கேட்கக்கூடும்.
உண்மை தான் ..!

நேர்மையான, நடுநிலையான, பழுத்த அனுபவமுள்ள,
நியாயமான கொள்கைகளுக்காகவும்,
நல்ல லட்சியங்களுக்காகவும் –
தொடர்ந்து குரல் கொடுப்பவர் என்கிற
இமேஜ் நிலைக்க வேண்டுமே என்கிற
அக்கரையில் தான் கேட்கிறேன்.

“ஞாநி” அவர்களே –
உங்களுக்கு எதற்கு ஊரார் பணம் …?

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

5 Responses to “ஞாநி” அவர்களே -ஊரார் பணம் உங்களுக்கு எதற்கு …?

 1. N.Paramasivam சொல்கிறார்:

  ஞானி அவர்கள் “பிழைக்கத்” தெரிந்தவர். அவரிடம் இவ்வாறு கேள்வி கேட்பது தவறு.

 2. Rajagopalan Rangarajan சொல்கிறார்:

  காவிரிமைந்தன்,

  நீங்கள் எவ்வளவு தடவை கேட்டாலும் ஞாநி பதில்
  சொல்லவே மாட்டார். கண்டு கொள்ளவும் மாட்டார் தான்.
  அவரது வலத்தளத்திலும், முகநூலிலும், நாக்கைப்பிடுங்கிக்கொள்கிற மாதிரி எல்லாம் பலர் கேள்வி கேட்டிருக்கிறார்கள். Avoid / Ignore என்பது அவரது best form of self defence. தன்மானம், சுயமரியாதை எல்லாம் அவரைப் பொருத்த வரையில் எழுத்தில் மட்டுமே காணப்பட வேண்டிய விஷயங்கள். இருந்தாலும், நீங்கள் எழுப்பி இருக்கும் விஷயங்கள் ‘கனமான’வை. அவரை இதுவரை சரியாகப் புரிந்து கொள்ளாதவர்கள் புரிந்துகொள்ள இவை ஓரளவு உதவும். உங்கள் முயற்சிக்கு பாராட்டுகள். நன்றி.

  • Srinivasanmurugesan சொல்கிறார்:

   தன்மானம், சுயமரியாதை எல்லாம் அவரைப் பொருத்த வரையில் எழுத்தில் மட்டுமே காணப்பட வேண்டிய விஷயங்கள்.—திரு.ராஜகோபாலன் அய்யா… இது அவருக்கில்லை அடுத்தவர்களுக்கு தான்.

 3. T.N.MURALIDHARANt சொல்கிறார்:

  ஞானியின் சொத்து மதிப்பு 1.72 கோடி என்பது நம்ப முடியாத ஒன்று

 4. Ganpat சொல்கிறார்:

  In India we have different forms of cheating the innocent public..
  Political,Intellectual,Religious,Caste,emotional,Media are the most popular among them.
  For the first type we have all political party leaders,
  For the second we have Kejriwal,Gnani,et al
  For the third and fourth we have Seers,Yogis,Gurujis of all religions
  For the Fifth we have cine actors and orators.
  For the sixth all TV channels and news papers.
  The above are more dangerous than thieves burglers,gangsters..

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.