பிரம்மச்சரியம் …..

 

சின்மயானந்தா அவர்களின் புத்தகம் ஒன்றினை
படித்துக் கொண்டிருந்தேன். அப்போது படித்த
ஒரு பகுதியை இங்கு பதிவிடலாமென்று தோன்றியது.
கீழே தந்திருக்கிறேன் –

—————

s.c.t.2

s.c.t.1

s.c.special

காம இச்சைகளைத் துறப்பது மட்டும் தான்
பிரம்மச்சரியமா என்று கேட்டால் ….

கண், மூக்கு, காது, வாய், ஸ்பரிசம்
ஆகியவை அனைத்துமே நமக்கு வெவ்வேறு விதமான
இன்பங்களை அளிக்கக்கூடிய புலன்கள்.

இவற்றினால், நாம் பெறும்
இன்பமே உண்மையானது என்றால்,
இந்த இன்பங்கள் எல்லாருக்குமே ஒரே மாதிரியான
பலனை விளைவிக்க வேண்டும்.. ஆனால் அவ்வாறு
அமைவதில்லையே …

ஒருவன் கண்ணுக்கு ரதியைப் போல் தோன்றும்
ஒரு பெண் இன்னொருவனுக்கு
அப்படித்தோன்றுவதில்லையே..!

ஒருவன் ரசிக்கும் புலால் உணவு, மற்றொருவனுக்கு
பார்க்கவே அருவருப்பாகத் தோன்றுகிறதே ..!

சிகரெட் பிடிக்கும்போது ஒருவன்
ஆனந்தம் அடையும்போது,
கூடவே இருக்கும் இன்னொருவனுக்கு
குமட்டி எடுக்கிறதே ..!
இவற்றிற்கு என்ன காரணம் …?

உண்மை என்னவென்றால்,
நமக்கு இன்பத்தையோ, துன்பத்தையோ தருவது
இந்தப் புலன்கள் அல்ல என்பதே..!

இவையெல்லாம் வெறும் கருவிகளே.
இவற்றை இயக்கும் உண்மையான உரிமையாளர்
நம்முடைய மனம் தான். மனம் சொல்வதை
கேட்டுத்தான் இந்த புலன்கள் பணி செய்கின்றன.
உண்மையில் எப்படியாக இருந்தாலும்
மனம் நன்றாக இருக்கிறது என்று நினைத்தால் தான்-
அது நன்றாக இருக்கிறது. இல்லையென்றால் -இல்லை.

மனம் வேதனையில் இருந்தால், மனைவியின் ஸ்பரிசம்
கூட ரசிப்பதில்லை. மனம் ஆனந்த நிலையில்
இருக்கும்போது, எளிய உணவு கூட ருசிக்கிறது.
எல்லாமே பிடிக்கிறது…!

மனதைக் கொண்டு புலன்களை ஆட்டுவிக்கும் சக்தி,
மனிதனுக்கு மட்டும் தான் இருக்கிறது. மிருகங்களுக்கு
தங்கள் புலன்களைப் பயன்படுத்தத் தெரியும். ஆனால்,
அவற்றை அறிவைக்கொண்டு ஆளத்தெரியாது.

இது போலத்தான் –
மனிதர்களிலும், அறிவைப் பயன்படுத்தத்
தெரியாதவர்கள், கட்டுப்படுத்தத் தெரியாதவர்கள் –

மிருகங்களாகவே இருக்கிறார்கள்.
அவர்களுடைய இச்சை, கோபம், கெட்ட உணர்வுகள்
ஆகியவற்றை அவர்களால் கட்டுப்படுத்த முடிவதில்லை.

புத்திசாலியாக இருப்பவன் புலன்களை சீராகக்
கட்டுப்படுத்தி, அவற்றை அளவுடன் உபயோகிக்கிறான்.
இப்படி புலன்களை கட்டுப்படுத்தி வாழ்வதற்குப் பெயர்
தான் பிரம்மச்சரியம்.

இன்று, பெண் உறவை அறியாதவர்கள் அல்லது
மறுப்பவர்களை மட்டும் தான் பிரம்மச்சரியத்தை
கடைப்பிடிப்பவர்களாகச் சொல்கிறோம். இது தவறு.

மனதைக் கட்டுப்படுத்தி,
எல்லா விதத்திலும், தன்னுடைய சக்தியை
சுயகட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்து,
அவற்றின் மூலம் சிறந்த பலன்களை அடைவதே
பிரம்மச்சரியம்.

மனிதனுடைய உடல் சக்தி என்பது,
அவனுக்கு ஆண்மையையும், இளமையையும்,
வீரியத்தையும் கொடுக்கிறது. இவையும்,
அவனுடைய அறிவைக் கூர்மைப் படுத்தும்
சிந்தனை ஆற்றலும் அவனுடைய நல்வாழ்க்கைக்காக
அளிக்கப்பட்டுள்ள செல்வங்கள்.

இவற்றைப் பாதுகாத்து,
அளவுடன் செலவிட்டு, அதனால் மிகச்சிறந்த
மறுபலனைப் பெறும் வாய்ப்பை அடைபவனிடம் –
பொலிவும், புத்திசாலித்தனமும், செயல் வேகமும்
குடிகொள்கின்றன.

அதுவே உண்மையான பிரம்மச்சரியம்.

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

14 Responses to பிரம்மச்சரியம் …..

 1. todayandme சொல்கிறார்:

  आम् । ब्रह्म इव आचरणम् येन सः इत्यपि अर्थः किल ।

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   நண்பரே (todayandme),

   தமிழில் இதற்கான அர்த்தத்தையும் நீங்களே எழுதுங்களேன்.
   படிப்பவர்களுக்கு உதவியாக இருக்கும்.

   -வாழ்த்துக்களுடன்,
   காவிரிமைந்தன்

 2. சாமானியன் சொல்கிறார்:

  வாழ்க்கைக்கு தேவையான அருமருந்து !

  இதைதான், ” அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு !” என மூத்தோர் சொல்லாக கூறுகிறார்கள்.

  நல்லபதிவு.

 3. எழில் சொல்கிறார்:

  அற்புதமான பதிவு. இந்த பதிவுக்கு ஓரளவு தொடர்புடையது என்று கருதுவதால் என் சிறு அனுபவம் கீழே…

  16 வயதில், ரத்தம் எப்படி ஒரே நிறமோ; அன்பு, பாசம், கோபம், காமம் எப்படி எல்லா மனிதருக்கும் பொதுவோ அதே போல் ஆன்ம விடுதலை/ஈடேற்றம் என்பதும் எல்லாருக்கும் பொதுவாக இருக்கவேண்டும் எனும் சிந்தனை மனதில் தோன்றி வேரூன்ற ஆரம்பித்த போது என்னுடைய தேடுதலும் ஆரம்பித்தது.

  அந்த வயதில், வீட்டில் சாக்கு போக்கு சொல்லிவிட்டு, சென்ட்ரல் தொடர்வண்டி நிலையம் வந்து ஒரு சுமைதூக்கிக்கு 10 ரூபா கொடுத்து மங்களூர் மெயில் ‘Unreserved ‘ பெட்டியில் ஒரு இருக்கையை பிடித்து, அது வரை சென்றிராத கேரளாவின் கண்ணனூர் போய் இறங்கி, ஒரு வாரம் தங்கி இருந்து கேட்டது – சின்மையாவின் கீதாபதேசம். கேட்க நன்றாகவும், புத்திக்கு விருந்தாகவும் இருந்ததே தவிர நான் தேடிய அனுபவமும் உணர்வும் கிட்டவில்லை. அதன் பின் இந்தியாவின் பல பாகங்களுக்கும், பல சாமியார்கள், பல திருத்தலங்கள், பல தேவாலையங்கள், தர்காக்கள் என பயணம் தொடர்ந்தது. இதனால் ஒரு புத்தகம் எழுதும் அளவுக்கு ஒவ்வொரு மதத்தின் அடிப்படை எவ்வளவு தூரம் பொதுவானது எனும் அறிவு ஏற்பட்டதே தவிர, என்னுடைய தேடுதலுக்கு விடை இதுதான் என்றும் உணர்வு ஏற்படவில்லை.

  படிப்பு, வேலை, குடும்பம், குழந்தைகள் என உலக நெருக்கடிக்குள் மேற்கொண்டு இருபது, இருபத்தைந்து வருடங்கள் கழித்து விட்டாலும், முடிந்த வரை என் தேடுதலும் தொடர்ந்து கொண்டு தான் இருந்தது.

  கடந்த வருடத்தில் ஒரு நாள், நம் வழக்கத்தில் இருந்து விடுபட்டு போன, அற்புதமான நோய் நொடியின்றி வாழும் வகையை மக்களுக்கு கற்று தரும் ‘ஹீலர் பாஸ்கர்’ என்பவரை சந்திக்க நேர்ந்தது. பல விஷயங்களை பேசும் போது எனது தேடுதலுக்கு உதவும் பொருட்டு, அவர் ஒரு முகவரியை கொடுத்து இதை முயற்சி செய்து பாருங்களேன் என்றார்…

  (பணி அழைப்பதால் சில மணி நேரங்களில் தொடர்கிறேன்…)

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   எழில்,

   சின்மயானந்தா அவர்களுடன் நான் நேரில் ஒரு
   சந்திப்பில் சில நிமிடங்கள் பேசி இருக்கிறேன்.
   சில விஷயங்களில் விளக்கமும் பெற்றேன்.

   அவரது சமாதி, இமாலயத்தில்,
   ஹிமாசல் பிரதேசத்தில் இருக்கிறது.
   மிக மிக அமைதியான அந்த இடத்தில் சில நாட்கள் தங்கியும் இருக்கிறேன்.
   அது ஒரு நல்ல அனுபவம்.

   உங்கள் பின்னூட்டத் தொடர் பதிவுக்காக நானும் ஆவலுடன்
   காத்துக் கொண்டிருக்கிறேன்.

   -வாழ்த்துக்களுடன்,
   காவிரிமைந்தன்

   • எழில் சொல்கிறார்:

    உங்கள் அனுபவங்களை போலவே எனக்கும் சில இடங்களில் சில நேரங்களில் நல்ல சாந்தியும், சமாதானமும் மிக்க அனுபவங்கள் ஏற்பட்டிருக்கிறது. உதாரணமாக, மேற்கூறியது போல சின்மயாவுடன் காலை 5 முதல் 5 மணி வரை தியானத்தின் போதும், ரமணர் வாழ்ந்த குடிலில் கண்களை மூடி இருந்த போதும், மதுராவில் கிருஷணர் பிறந்ததாக கூறப்படும் சிறை அறையிலும், புனித பாபரசரால் ஆசிர்வதிக்கப்பட்ட பாரிசில் உள்ள நோர்டடாம் என்னும் 800 வருட தேவலையத்தில் பூஜையில் கலந்து கொண்ட போதும், அபுதாபி, பாஹ்ரைன் போன்ற நாடுகளின் பெரிய மசூதிகளின் தொழுகையின் போது அங்கு கண்மூடி இருக்கும் போது கிடைக்கும் மன அமைதி சொல்லில் அடங்காது. ஆனால் அந்த உணர்வை நிரந்தரமாக எமக்கு கிடைக்க வைக்கும் வழி முறையையே நான் தேடிக்கொண்டிருந்தது. அதில் கீழ் கூறிய ‘விப்பாசனா’ நான் இதுவரை அறிந்த வற்றில் முதன்மையானது.

    • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

     எழில்,

     சிறிய வயதில் உங்களுக்கு இது குறித்து இருக்கும்
     ஆர்வமும், அனுபவமும் என்னை வியக்க வைக்கிறது.

     இத்தனை கட்டுப்பாடுகளுக்கும் உட்பட்டு உங்களால்
     இந்தப் பயிற்சியை நிறைவு செய்ய முடிந்தது என்றால்
     உண்மையிலேயே உங்கள் மன உறுதியும் விருப்பமும்
     பாராட்டத்தக்கவை. என் மனம் நிறைந்த பாராட்டுக்கள்.

     இந்த பின்னூட்டத்தின் மூலமாக, இதில் ஆர்வம் உள்ள
     நண்பர்கள் சில செய்திகளைப் புதிதாகத் தெரிந்து கொள்ள
     உதவியுள்ளீர்கள். மிக்க நன்றி.

     -வாழ்த்துக்களுடன்,
     காவிரிமைந்தன்

     • எழில் சொல்கிறார்:

      உங்கள் அன்புக்கும் ஆசீர்வாதத்திற்கும் மிக்க நன்றி கா மை ஐயா!

 4. ரிஷி சொல்கிறார்:

  எழில், பின்னூட்டம் ஒன்றினை ஒரு தொடர் போல சஸ்பென்ஸாக முடித்திருக்கிறீர்கள். அந்த முகவரியைக் காண ஆவலாக உள்ளேன் 🙂

 5. எழில் சொல்கிறார்:

  (தொடர்கிறேன்…)

  அவர் கொடுத்தது ஒரு வலைச்சுட்டி (web address ). சொடுக்கி பார்த்த போது அது மிகவும் எளிமையான வடிவமைப்புடன் கூடிய, ஆனால் தேவையான விபரங்கள் அடங்கிய தொகுப்பு. அதில் அவர்கள் கொடுத்திருந்த தியான முறை, அதன் ஸ்தாபகர் போன்ற முக்கிய சொற்களை எடுத்து (keywords ) எடுத்து கூகிளில் ஆராய்ந்து, அவை பற்றிய கட்டுரைகளை படித்தேன். படிக்க படிக்க ஆர்வம் கூடியதே தவிர குறையவில்லை. அந்த வலைதளத்திலேயே அருகில் உள்ள மையம் பற்றிய தகவல்களும் இருந்தது. தொடர்பு கொண்டபோது அவர்கள் சுருக்கமாக சொன்னது இதுதான்…

  1. இது 10 நாள் பயிற்சி. 16 வயதுக்கு மேல் யார் வேண்டுமானாலும் பங்கு பற்றலாம்.
  2. 10 நாளும் அங்கு தங்கி இருந்து தான் பயிற்சி பண்ண வேண்டும்.
  3. பயிற்சி, தங்கும் இடம், உணவு என அனைத்தும் முற்றிலும் இலவசம்.
  4. கைபேசி, புத்தகம், பேனா என எதுவுமே வைத்திருக்க கூடாது. மொத்தத்தில் 10 நாட்களுக்கு வெளியுலக தொடர்பே இருக்காது.
  5. பயிற்சி தொடங்கும் நாளுக்கு முதல் நாள் மாலை, மையம் வந்து சேர்ந்து விட வேண்டும். அன்று மாலை ஆறு மணியளவில் ஆரம்பித்து 10 ஆவது நாள் வரை யாரும் ஒருவருடன் ஒருவர் பேசக் கூடாது; மற்றவர் கண்களை கூட பார்க்க கூடாது.
  6. தேவை ஏற்படின் பொறுப்பாசிரியருடன் மட்டும் பேசலாம். காலை எழுதல், உணவு தயார், தியான துவக்கம், முடிவு என அனைத்துக்கும் மணியோசை தான்.

  வருடத்திற்கே 28 நாட்கள் தான் சொந்த விடுப்பு எடுக்கலாம் எனும் நிலையில் பணிபுரியும் ஒரு குடும்பஸ்தனுக்கு 10 நாள் விடுப்பு எவ்வளவு கடினம் என்பதும், பணி ரீதியாக வெளியூர் சென்றாலும் தினமும் இரண்டு தடவையாவது மனைவி குழந்தைகளுடன் பேசி விடும் பழக்கம் உள்ளவன் என்பதாலும் எனக்கு இது மிகவும் கடினமாக பட்டது.

  இருந்தும், “நாம் தேடுவது இதுவாக இருந்தால்…” இந்த உறுத்தலினால் மனைவியுடன் பேச முடிவு செய்தேன். முதலில் ஒரு கணம் அதிர்ந்து, பின் சற்று பயந்து தான் போய்விட்டார். “இந்த 10 நாள் பயிற்சிக்கு பின் உங்கள் மனநிலை குடும்ப வாழ்கை மீது பற்றற்று போய் விட்டால்…” போன்ற குழப்பம் அவருக்கு.

  ஏறக்குறைய 6 மாதங்கள் இழுபறிக்கு பின் சகலோர் சம்மத்ததுடன் இதில் கலந்து கொண்டேன். இரண்டாவது நாளிலேயே இதன் மகத்துவம் புரிய ஆரம்பித்தது. ஐந்து ஆறாம் நாளில் ஆழ்மனதில் குடியிருந்த (கோபம், வெறுப்பு, வன்மம்) போன்ற அழுக்குகள் அகலுவதை உணர்ந்தேன். 10 நாட்கள் கழித்து நிறைவுடன் வெளியே வந்தேன். மேற்கூறியது சிறிய வார்த்தைகள் ஆனால் பெற்ற அனுபவம் சொல்லில் அடங்காது.

  வாழ்கையின் விலை மதிக்க முடியாத பொக்கிஷங்கள் சில நம் காலடியில் இருக்கையில் அதை தேடி எங்கெல்லாமோ அலைந்ததற்கு நம் ஊழ்வினையை தவிர வேறு எதை தான் சொல்ல முடியும்.

  நான் பயிற்சியில் கலந்து கொண்ட போது கூட இருந்த 31 பேரில் 14 இந்துக்கள், 13 இஸ்லாமியர்கள், 5 கிறிஸ்தவர்கள். என்னை தவிர மற்ற அனைவருமே, ஏற்கனவே பயிற்சி பெற்றவர்களின் நண்பர்கள் அல்லது உறவினர்கள். நான் மட்டுமே இணைய வழியாக தொடர்பு கொண்டவன். இது எந்தவித விளம்பரமும் இல்லாமல் வெறும் வாய் மொழியாக மட்டுமே பிறருக்கு தெரியப்பட்டு வருவதால் தான் இவ்வளவு நாளும் எனக்கு தெரியவில்லை என்று எண்ணினேன்.

  மேற்கொண்டு நீட்டி உங்கள் பொறுமையை சோதிக்க விரும்பவில்லை.

  அந்த வலைசுட்டி இதுதான்..

  http://www.dhamma.org/en/about/vipassana

  வாழ்க்கையில் பலவற்றை முயற்சி செய்து பார்த்திருப்பீர்கள். நேரம் இருப்பின் 10 நாட்கள் எவ்வித பொருட் செலவும் அற்ற இதையும் முயற்சி செய்து பாருங்கள்! 🙂

 6. ரிஷி சொல்கிறார்:

  விபாசனா என்றால் உள்ளதை உள்ளபடி பார்த்தல் எனப் பொருள் அறிகிறேன்.

  நாம் அனைவருமே ஆளுக்கொரு கண்ணாடி அணிந்துகொண்டுதான் நம் வாழ்வினைக் கவனிக்கிறோம். ஒவ்வொரு கண்ணாடியும் ஒவ்வொரு கலரில் இருப்பதுதான் இதில் விசேஷம் 🙂

  ஓய்வாய் இருக்கும்போது Access Consciousness பற்றியும் அறிந்து கொள்ள வேண்டுகிறேன்.
  http://www.accessconsciousness.com/

 7. எழில் சொல்கிறார்:

  தியானம் என்று நாம் பொதுவாக குறிப்பிடுவது பல வகைப்பட்டாலும் எனது அனுபவத்தில் அவற்றை இரண்டாக பிரிக்கலாம். ஒன்று உடலுக்கு எப்படி உடற்பயிற்சி செய்து நலமாக நோய் நொடி இன்றி வாழ்கிறோமோ அதை போலான மன பயிற்சி. இதனால் வாழ்க்கையில் பல குறிப்பிட்ட நன்மைகளை பெறமுடியும், வாழ்வும் வளம் பெரும். இரண்டாவது வகை உங்கள் ஆன்ம பசிக்கு விருந்தாகி, வாழ்வின் நோக்கத்தையே புரிந்து கொள்ள வைக்கும் ஆழ் நிலைக்கு எடுத்து செல்ல கூடியது. பிறந்ததில் இருந்து உங்கள் மனதில் உருவான கேள்விகளும் குழப்பங்களும் ஒரு புள்ளியில் அடங்கி, கட்டுகள் அறுந்து ஏற்படும் விடுதலை நிலை. இதில் இரண்டாவது நிலைக்கு ‘விபாசனா’ இட்டு செல்ல கூடியது என்பதை உறுதியாக என்னால் கூற முடியும்.

  மேலும் NLP (http://www.nlp.com/) , Deepak Chopra (https://www.deepakchopra.com/), Maharaj ji Prem Rawat (http://www.wopg.org/en/), முதல் ஸ்ரீ ஸ்ரீ ரவிஷங்கர் (http://www.artofliving.org/srisriravishankar) வரை பலரது பயிற்சிகளுக்கு பெருந்தொகையான பணம் செலவழித்து போயிருக்கிறேன். நிச்சயமாக அவை பயன் அளிக்க கூடியவை, வாழ்வை வளம் பெற செய்ய கூடியவை. ஆனால் அவற்றையும் தாண்டி ஆழ் மனதுக்கு சென்று உங்கள் பிறவியின் நோக்கத்தையும், இயற்கையின் அளவற்ற அன்பையும் கருணையையும் நீதிகளையும் காட்ட கூடியது விபாசனா. இது எனது தாழ்மையான அனுபவ பூர்வமான புரிதல். மற்றும்படி உங்களுக்கு எது அமைதி, சாந்தம், சமாதானம், விளக்கம், புரிதல் என்பவற்றை தருகிறதோ அதை பின்பற்றுங்கள்.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.