பொன்னியின் செல்வன் – ஆனந்த விகடன் செய்யும் மிகப்பெரும் தவறு ….

ஆசிரியர் கல்கி அவர்களின் master piece –
தமிழ் இலக்கியத்தில் என்றும் தனியிடம் பிடித்து நிலைத்து
நிற்கும் அமர காவியம் “பொன்னியின் செல்வன்”.

kodai medai-1

இன்னமும் எனக்கு நினைவிருக்கிறது. எனக்கு 9-10
வயதில் கல்கியில் தொடர்கதையாக வாரா வாரம் படிக்க
ஆரம்பித்தேன்.அப்போதே எங்கள் வீட்டில் கல்கி, ஆனந்த
விகடன்,தினமணி கதிர் ஆகியவை வழக்கமாக
வாங்குவோம். கல்கி வார இதழ் வந்தவுடன் (வீட்டில் 10
பேர்) எல்லாரும் போட்டி போடுவோம் -பொன்னியின்
செல்வனை முதலில் படிக்க. இது எங்கள்
வீட்டில் மட்டுமல்ல. அப்போது, தமிழ் நாட்டில் அநேக
வீடுகளில் இப்படித்தான் இருந்தது. எத்தனை முறை
படித்தாலும் அலுக்காது கல்கியின் நகைச்சுவை மிளிர்ந்தோட
எழுதப்பட்ட அந்த அற்புதமான நடை.

வரலாற்றுத் தொடரான இதில் பொன்னியின் செல்வன்
என்பது அருள்மொழி வர்மன் என்கிற ராஜராஜ சோழனின்
கதைப் பெயர். ஆனால் இதில் உண்மையான
கதாநாயகன் ராஜராஜ சோழனின் உற்ற நண்பனும்,
பிற்காலத்தில் அவரது சகோதரி குந்தவையை காதலித்து
மணம் புரிகின்றவனுமாகிய வீரன் வானவரையன்
வந்தியத்தேவன் தான்.

நான் இளைஞனாக இருந்தகாலத்தே செய்தி வந்தது –
எம்ஜிஆர் பொன்னியின் செல்வனை திரைப்படமாக எடுக்க
உரிமை வாங்கி இருக்கிறார் என்று. எம்ஜிஆர்
வந்தியத்தேவனாகவும், வைஜயந்திமாலா குந்தவையாகவும்
ஜெமினி கணேசன் அருள்மொழிவர்மனாகவும் நடிக்கப்
போகிறார்கள் என்றெல்லாம் செய்திகள் வந்தன. பிறகு
எல்லாம் காற்றோடு கலந்து போய் விட்டன.

பின்னர் செய்தி வந்தது. கமலஹாசன் படமாக எடுக்கப்
போகிறாரென்று. பின்னர் வேறொரு செய்தி வந்தது
மணிரத்னம் திரைப்பட உரிமையை வாங்கி இருக்கிறாரென்று.
எதுவும் உறுதிப்படவில்லை. ஆனால், உள்ளத்தில் ஆசை
மட்டும் அணையாமலே இருந்தது – கல்கியின்
கதாபாத்திரங்கள் உயிர்ப்புடன் உலா வருவதைப் பார்க்க
வேண்டுமென்று. நான் தான் என்றில்லை- அந்த
தலைமுறை தமிழர்கள் அநேகரின் ஆசை அது.

இறுதியாக, தமிழக அரசு பொன்னியின் செல்வனை
நாட்டுடைமையாக்கியது. யாருக்கும் காசு கொடுக்க
வேண்டிய தேவையில்லாமல், எந்த பதிப்பாளர்
வேண்டுமானாலும் எத்தனை பதிப்பு வேண்டுமானாலும்
புத்தகமாகப் போடலாமென்பது உறுதியானது.

அதன் பிறகு, போட்டி போட்டுக்கொண்டு –
குறைந்த பட்சம் 10 பதிப்பகங்களாவது
பொன்னியின் செல்வன் ஐந்து பாகங்களையும் புத்தகங்களாக
வெளியிட்டன. ஒவ்வொரு கம்பெனியும் ஒவ்வொரு
அளவில், டிசைனில் – சிறியதாக, பெரியதாக…
இன்று கூட நீங்கள் புத்தக கண்காட்சி வந்தால் – அத்தனை
தினுசு புத்தகங்களையும் பார்க்கலாம். இதில் அதிக பட்சம்
லாபம் பார்த்தது விகடன் பிரசுரம் தான்…

இந்தக் காவியத்தை – கல்கியின் கனவுப்பாத்திரங்களான
-வந்தியத்தேவனை, குந்தவையை, அருள்மொழி வர்மனை,
நந்தினியை, ஆழ்வார்க்கடியானை – நாடக வடிவில்,
திரைப்பட வடிவில் பார்க்க மாட்டோமா என்று தமிழ் மக்கள்
ஏங்கினாலும், இந்தக் காவியத்தை திரைப்படமாக உருவாக்க
முடியாமல் இருந்ததற்கு முக்கிய காரணம் அதன் நீளம்.
3 மணி நேரத்தில் முடிக்க முடியாத பெரிய கதை –
ஏகப்பட்ட நிகழ்வுகள்..! எம்ஜிஆர் கூட இரண்டு பாகங்களாக
எடுக்கலாமா என்று யோசித்தார்.

ஆனால் -சாடிலைட் தொலைக்காட்சி சானல்கள் எல்லாம்
வந்த பிறகு, நீளம் ஒரு குறையாகவே இல்லை.
உண்மையில்,நெடுந்தொடர் எடுக்க அதுவே பலம் ஆனது.

சென்ற வருடம் ஒரே சமயத்தில் 2 கம்பெனிகள்
பொன்னியின் செல்வனை தொலைக்காட்சி சீரியலாக
எடுக்கப்போவதாக அறிவித்தன. கதைக்கு தான் காசு
கொடுக்க வேண்டாமே..!

ஏனோ தெரியவில்லை. இரண்டு கம்பெனிகளும்
திட்டத்தை கைவிட்டன.

இன்று குறைந்த பட்சம் 15 நல்ல நிலையிலுள்ள
தொலைக்காட்சி சானல்கள் தமிழுக்கென்றே இருக்கின்றன.
இன்று ஏகப்பட்ட கம்பெனிகள் தமிழில் நெடுந்தொடர்கள்
எடுக்கின்றன. நிறைய ஸ்பான்சர்ஸ் கிடைக்கிறார்கள்.
நிறைய பணம் பண்ணுகிறார்கள்.

ஆனால் திரும்பத் திரும்ப அதே தினுசான மாமியார்,
நாத்தனார், கள்ளக்காதல், இரண்டு பெண்டாட்டி, கொடூர
வில்லிகள் கதை தான். வீட்டிலிருக்கும் பெண்கள் தானே
இந்த சீரியல்களின் முக்கிய ரசிகர்கள். அவர்களை
காரணம் காட்டி (அந்த பெண்களே அவற்றை விட்டு
வெளிவந்து விட்டாலும் கூட ) இவற்றை விட்டு வெளியே வர எந்த
நெடுந்தொடர் தயாரிப்பாளர்களும் தயாராக இல்லை.

சில மாதங்கள் முன்பு ஆனந்த விகடனில், இந்துவில்
-விளம்பரங்கள் வரத்தொடங்கின.
கோடையில் – மேடையில் என்று. பிற்பாடு தெரிய வந்தது-
பொன்னியின் செல்வன் நாடக வடிவில் வெளிவருகிறதென்று.
தயாரிப்பு, வெளியீட்டில் -ஆனந்த விகடன் தான் முக்கிய
பொறுப்பேற்றுள்ளதாகத் தெரிகிறது.
துவக்கத்தில் இந்த செய்தி மகிழ்ச்சியைத் தந்தது.

ஆயிற்று. அப்படி இப்படி என்று கோடையும் வந்து
நாடகமும் மேடையில் வந்து விட்டது. ஆனந்த விகடன்
அதை வைத்து, ஏகப்பட்ட விளம்பரங்கள் செய்து/பெற்று,
ஏகப்பட்ட காசும் பண்ணியாகி விட்டது. ஆனால் இன்று
இந்த நிகழ்வு மகிழ்வைத் தரவில்லை. காரணம் –

சென்னை மியூசிக் அகாடமி அரங்கில் மொத்தம்
5 நாட்கள் நாடகம் நடைபெறுகிறது.
தினமும் ஒரு காட்சி. மூன்றரை மணி நேரம்.
டிக்கெட்டு விவரம் –
3000, 2000, 1000 மற்றும் 500 ரூபாய்கள்.
ஆயிரம் ரூபாய் டிக்கெட் வாங்கினாலே, நடிகர்களின்
முகம் தெரியாது. தூரத்தில் – உருவங்கள் நடமாடுவது
மட்டும் தான் தெரியும்.

இந்த லட்சணத்தில், ஆனந்த விகடன் விமரிசனம்
எழுதுவது போல் செய்திருக்கும் விளம்பர வாசகங்களைப்
பாருங்கள் –

“வந்தியத்தேவன் தோன்றும் காட்சிகளில் எல்லாம்
அமர்க்களம். குறிப்பாக குந்தவை தேவியை
முதல் முறை சந்தித்து விட்டு,
சிறிது தூரம் சென்று, மறுபடியும் அவளைத் திரும்பிப்
பார்த்து, புன்னகைக்கும் பார்வை – காதல் குறும்பின்
உச்சம்…!”

என்ன அபத்தம் இது. 3வது வரிசையில்
அமர்ந்திருப்பவர்களே, இந்தப் புன்னகையை பூதக்கண்ணாடி
வைத்து தான் பார்க்க வேண்டும்…

ஆயிரம் ரூபாய் கொடுத்து கடைசி வரிசையிலும்,
500 ரூபாய் கொடுத்து பால்கனியிலும் அமர்ந்திருப்பவருக்கு
அது வந்தியத்தேவன் என்பதே வசனத்தை வைத்து தான்
தெரிய வரும் – பின்னர் புன்னகையாவது …..

இவ்வளவு பொருட்செலவில், இவ்வளவு விளம்பரங்களுடன்
வெளிவரும் இந்த நாடகம் ஒரு நாளைக்கு 1000 பேர் வீதம்
5000 பேர் பார்ப்பதற்காகவா உருவாக்கப்ட்டது…?
இதன் பின்னர் கோவையில் 3 நாள் -3000 பேர்.
மதுரையில் 3 நாள் – 3000 பேர்.
ஆக மொத்தம் ஏழரை கோடி தமிழ் மக்களில் 11,000 பேர்
இந்த நாடகத்தைப் பார்த்தால் போதும் என்பது
ஆனந்த விகடனின் எண்ணமா ?

ஐந்து பாகங்களில், 2000 பக்கங்களில் வெளியாகியுள்ள
இந்த நாவலை மூன்றரை மணி நேரத்திற்கு சுருக்க
வேண்டியதன் அவசியமென்ன ..?
இது சினிமா இல்லையே…?

இதை நெடுந்தொடராக (சீரியலாக) அப்படியே கல்கியின்
கற்பனை வண்ணத்திலேயே எடுப்பதில் என்ன கஷ்டம் ..?
இந்தக் கதை பூராவும் காவிரிக்கரையிலும்,
கொள்ளிடக் கரையிலும், உறையூரிலிருந்து தஞ்சை,
குடந்தை, நாகை, வீராணம் ஏரி உட்பட அற்புதமான
ஆற்றங்கரைப் பின்னணியிலும், கோட்டை கொத்தளங்களின்
பின்னணியிலும் நடைபெறுகிறது. தமிழகத்தின் இயற்கை
எழிலை பின்னணியில் வைத்து, வெளிப்புறங்களிலேயே
இதை அருமையான நெடுந்தொடராக எடுத்திருக்கலாமே ..

தமிழகத்தின் இன்றைய இளைய தலைமுறைக்கு,
ஆயிரம் காலத்துக்கு முந்திய தமிழ்ர்களின் வாழ்வை
சுவைபட எடுத்துரைக்கும் அற்புதமான வாய்ப்பாக அது
அமைந்திருக்குமே…

ஒன்றிரண்டு வருடங்களுக்கு முன்னர் ஒரு ஆங்கில
தொலைக்காட்சி சானலில், ஒன்பதாவது நூற்றாண்டில்
இங்கிலாந்து மற்றும் ஸ்காட்லாண்டு அரச பரம்பரைகளுக்கு
இடையே உண்மையில் நிகழ்ந்த சில வரலாற்று சம்பவங்களை
“ட்யூடர்ஸ்” என்கிற தலைப்பில் ஒரு அருமையான
நெடுந்தொடராகத் தந்திருந்தார்கள். உண்மையான,
இங்கிலாந்திலும், ஸ்காட்லாந்திலும் அமைந்திருந்த
பழைய கோட்டை கொத்தளங்களின் பின்னணியில்
படப்பிடிப்பு அருமையாக வந்திருந்தது. அப்போதே
நினைத்தேன் – தமிழகத்தில் இது போல் பல சரித்திரத்
தொடர்களை எடுக்க வாய்ப்பு இருக்கிறதே என்று.

பொன்னியின் செல்வனை இப்படி குறுகிய வட்டத்திற்குள்
ஆனந்த விகடன் நிறுவனத்தினர் அடைத்து விட்டது ஏன்
என்று எனக்குப் புரியவில்லை. அவர்களே
தொலைக்காட்சிக்காகவென்று பல நெடுந்தொடர்களை
படைத்திருக்கிறார்கள். அதற்காகவென்றே ஒரு பிரிவும்
வைத்திருக்கிறார்கள். ஆட்களும், தொழில்நுட்ப வசதிகளும்
ஏற்கெனவே அவர்களிடமே இருக்கின்றன.

இல்லையென்றாலும் வெளியில் எதற்கும் பஞ்சமில்லை.
பொன்னியின் செல்வன் என்று சொல்லும்போது –
ஸ்பான்சர்களுக்கும் எந்த பஞ்சமும் இருக்க முடியாது.

பின்னர் ஏன் விகடன் இப்படிச் செய்கிறது …?

80 ஆண்டுகளுக்கு முன்னர் ஆனந்த விகடனை துவக்க
ஆசிரியர் கல்கி எந்த அளவிற்கு துணையாக இருந்தார்
என்பதை நினைத்தாவது அவர்கள் யோசித்திருக்க
வேண்டாமா ? விகடனின் முதல் ஆசிரியரே கல்கி தான்
என்பதை நினைவு கூர்ந்தாவது அவரது இந்த இலக்கியத்திற்கு
உரிய மரியாதையைத் தந்திருக்க வேண்டாமா ?

மிகுந்த பொருட்செலவில், நல்ல நடிகர்களையும்,
தொழில் நுட்பக் கலைஞர்களையும் கொண்டு,

பிரம்மாண்டமான தமிழகத்தின் நிஜப்பின்னணிகளில்
பொன்னியின் செல்வனை ஒரு நீண்ட நெடுந்தொடராக
எடுத்து, தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பி, உலகம்
முழுவதும் உள்ள தமிழ் மக்கள் அனைவரும் காண வழி
செய்திருக்க வேண்டாமா ?

மகாபாரதம் போல், ராமாயணம் போல் அற்புதமாக
வந்திருக்க வேண்டிய ஒரு தொலைக்காட்சித் தொடரை
இப்படிக் குறுக்கி வெறும் சில ஆயிரம் பேர்கள் பார்ப்பதுடன்
தனக்கு மட்டும் விளம்பரமும், பணமும் தேடிக்கொண்ட
விதத்தில் – விகடன் மிகப்பெரும் தவறு செய்து விட்டது.

ஆனால், இப்போது கூட அந்த தவற்றை சரி செய்துவிட
வாய்ப்பு இருக்கிறது. விகடன் நிறுவனம் அதைச்செய்ய
முன்வருமா…?

பின்குறிப்பு –
கோடையில், மேடையில் ஏறிய பொன்னியின் செல்வன்
நாடகத்தின் சில புகைப்படங்கள் கிடைத்தன. அவை உங்கள்
பார்வைக்கு கீழே –( எனக்கென்னவோ, இது ஆசிரியர் கல்கி
அவர்களுக்கும், பொன்னியின் செல்வனுக்கும் செய்யப்பட்ட
அவமரியாதையாகவே தெரிகிறது…)

ps-1ps-2ps-3ps-4ps-5ps-6ps-7ps-8ps-9

 

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

9 Responses to பொன்னியின் செல்வன் – ஆனந்த விகடன் செய்யும் மிகப்பெரும் தவறு ….

 1. உண்மை சொல்கிறார்:

  //80 ஆண்டுகளுக்கு முன்னர் ஆனந்த விகடனை துவக்க
  ஆசிரியர் கல்கி எந்த அளவிற்கு துணையாக இருந்தார்
  என்பதை நினைத்தாவது அவர்கள் யோசித்திருக்க
  வேண்டாமா ? விகடனின் முதல் ஆசிரியரே கல்கி தான்
  என்பதை நினைவு கூர்ந்தாவது அவரது இந்த இலக்கியத்திற்கு
  உரிய மரியாதையைத் தந்திருக்க வேண்டாமா ?//

  பொய்யான தகவல்.

  விகடனை வாசன் வாங்கிய போது கல்கி எந்த உதவியும் செய்யவில்லை. பீறகு அவர் எழுதியனுப்பிய நகைச்சுவைக்கட்டுரைகளைப் பார்த்து தான் அவரை வாசன் விகடனில் சேர அழைத்தார். விகடனின் முதல் ஆசிரியர் பூதூர் வைத்யநாத ஐயர். அடுத்து வாசன்.

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   நன்றி (உண்மை..) நண்பரே.

   நீங்கள் கூறுவதே சரியாக இருக்கலாம்.
   நான் என் நினைவில் இருந்ததை வைத்து எழுதினேன்.
   வயதானவன். நினைவு தவறி இருக்க வாய்ப்பு இருக்கிறது.
   ஆனாலும்’பொய்’ என்பது தவறான பதம்.
   தெரிந்தே சொல்வது தான் ‘பொய்’. இது தெரிந்து சொன்னது அல்ல.
   ‘சரி’யென்று நினைத்து தவறாகச் சொன்னது…
   திரு எஸ்.எஸ்.வாசனும், கல்கி கிருஷ்ணமூர்த்தி
   அவர்களும் துவக்க காலத்தில் அவ்வளவு நெருக்கமாக
   இருந்தது என் நினைவில் பதிந்திருந்தது. அதனால்
   விளைந்த தவறு.

   பூதூர் வைத்தியநாத ஐயரிடமிருந்து
   தான் வாசன் அவர்கள் விகடனை விலைக்கு வாங்கினார் என்று நினைவு….!

   குறைந்த பட்சம், ஆனந்த விகடனின் வளர்ச்சிக்கு
   கல்கியும் உதவினார் என்பதையாவது ஏற்றுக் கொள்வீர்களா
   இல்லை விகடன் வளர்ந்தது ‘குறுக்கெழுத்துப் போட்டி’யால்
   மட்டும் தான் – கல்கி அவர்களுக்கு அதில் எந்த
   contribution-ம் இல்லை என்று சொல்லி
   விடுவீர்களோ தெரியவில்லை ..!!

   சரி இது கிடக்கட்டும் விடுங்கள்.

   நான் எழுதிய main விஷயத்திற்கு வாருங்களேன்.
   அதைப்பற்றிய உங்கள் மேலான கருத்துக்களை
   எழுதலாமே ….

   -வாழ்த்துக்களுடன்,
   காவிரிமைந்தன்

 2. ரங்கராஜன் ராஜகோபாலன் சொல்கிறார்:

  விகடனுக்கு எப்போதும் ஒரே அஜெண்டா தான்.

  விற்பனை அதாவது sales and circulation.
  இதெல்லாம் side business தான்.
  பேராசிரியர் கல்கி அவர்களை விகடன் இப்போதும்
  விரோதத்துடன் தான் அணுகி இருக்கிறது என்று
  தோன்றுகிறது. இல்லையென்றால் இவ்வளவு
  குறுகிய வட்டத்துக்குள் பொன்னியின் செல்வனை
  அடைப்பானேன். நன்றி.

 3. mani Rajendran சொல்கிறார்:

  திரு KM,

  திரு கல்கி அவர்களின் “பொன்னியின் செல்வன்” காவியத்தை நானும் சில முறை படித்துள்ளேன். ஒவ்வொரு முறை படிக்கும்போதும், முதன்முறை படிப்பது போல் இருக்கும். கடந்த வருடம், சிகாகோ தமிழ் சங்கம், நண்பர் அறவாழி தலைமையில் ஒரு ஆறு மாத காலம் ஒத்திஹை செய்து, பொன்னியின் செல்வன் நாடஹத்தை இங்கு அரங்கேற்றம் செய்தார்கள். சுமார் 800 நண்பர்ஹல் கண்டு களித்தோம். சுமார் 40 பாகத்தில் 50க்கும் மேலோர் நடித்தனர் – மறக்க முடியாத நிகழ்ச்சி. CD உள்ளது – சந்திக்கும் போது கொடுக்கின்றென்.

  அன்புடன்,

  ராஜேந்திரன்.

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   மிக்க நன்றி திரு மணி ராஜேந்திரன்.

   -வாழ்த்துக்களுடன்,
   காவிரிமைந்தன்

 4. GOPALASAMY சொல்கிறார்:

  Vikatan’s aim is only money and publicity. They collected money for “thane” storm. they gave publicity for this nearly one year. I stopped buying vikatan after that only.
  vikatan’s circulation raised due to Kalki. Nobody can refute it. But vikatan was having enemity with kalki magazine and editor. Because of business interest only they took up Ponniyin Selvan.
  we can not expect anything good from vikatan.

 5. AAR சொல்கிறார்:

  1. Sivagamiyin Sabadam is more positive story than Ponniyin Selvan.
  SS has Love, Bravery, Arts, Governance, War between Kingdoms, Believable story line, Completeness.
  PS has Lust, Tricks, Politics, Internal feud, Unbelievable circumstances, abrupt endings.
  Just because PS is big, people are giving importance to it.

  My favourite is SS always. I never liked PS.

  2. Sun TV or Vijay TV or Zee TV will never make PS or any Tamil story as TV series because:
  It cannot be dubbed and shown on their other language group TVs. Kerala or Karnataka or Bengalis or Hindi people have not read PS.
  Ramayana or Mahabharata or Krishna can be dubbed in multiple channels because people know these stories already. So its easy and lazy work.

 6. jeyasree சொல்கிறார்:

  ponneien selvan eppoluthu padithaalum allukathu athan kathapathirangal en karpaniel aziaamal irukeraargal ennai pol anaivarukum irukum athai nadakamagavo cinema nirivu sieamudiaathu

 7. இ.பு.ஞானப்பிரகாசன் சொல்கிறார்:

  விகடன் இப்படிச் செய்தது சரியா தவறா என்பது அப்புறம் இருக்கட்டும். ஆனால், இதை விகடன் வேண்டுமென்றே செய்தது போலக் கருத்திட்டுள்ளவர்கள் கூறுவது வருத்தமளிக்கிறது. எனக்குத் தெரிந்து விகடனுக்கு இணையான ஒரு சிறந்த இதழ் தமிழில் வேறு இல்லை. அரசியல் நடுநிலைமை, சமூக அக்கறை, தமிழ்ப் பற்று, தமிழர் பிரச்சினைகளில் உறுதியான நிலைப்பாடு என விகடன் போல் ஓர் இதழ் இங்கு வேறு கிடையாது. ‘தானே’ புயல் நிவாரண நிதி பற்றி மேலே ஓர் அன்பர் குறிப்பிட்டு அதன் பிறகுதான் தான் விகடன் வாங்குவதையே நிறுத்தியதாகக் கூறியிருந்தார். ஆனால், எனக்கு அதை அவர்கள் செலவிட்ட விதத்தைப் அதுவரை விகடன் பற்றி இருந்த மலையளவு நல்லெண்ணம் வானளவாய் உயர்ந்து விட்டதுதான் உண்மை. பாதிக்கப்பட்ட சிலருக்கு வீடு கட்டிக் கொடுத்தது, அந்தப் பகுதிப் பெண்களின் வேலைவாய்ப்புக்கு உதவும் வகையில் தொழிற்சாலை அமைத்துக் கொடுத்தது என்று சங்கர் படம் போன்ற பிரம்மாண்டச் சேவைகளை விகடன் அந்தப் பணத்தில் செய்தது. இதில் என்ன தவறு என எனக்குப் புரியவில்லை. மக்களிடமிருந்து பணத்தைத் திரட்டி உரிய காரணத்துக்குச் செலவிடாமல், பொய்க் கணக்குக் காட்டித் தானே அமுக்குக் கொண்டால்தான் தவறு. அது இந்தத் ‘தானே’ புயல் நிவாரண நிதி விதயத்தில் நடந்திருந்தால் இவ்வளவு பிரம்மாண்டமான உதவிகளைச் செய்திருக்க முடியுமா?

  பதிவு பற்றி நான் கூற விரும்புவது என்னவெனில், இந்த நாடகத்துக்கு விகடன்தான் முதன்மை வழங்குநர் (sponser) என்பது எந்த அளவுக்குச் சரியான தகவல் என்பது தெரியவில்லை. நான் பார்த்த வரை, விளம்பரங்களில் எங்கும் விகடன் பெயர் இடம்பெறவில்லை. மேஜிக் லேண்டர்ன், எஸ்.எஸ் இன்டர்நேஷனல் ஆகிய நிறுவனங்களில் பெயரில்தான் விளம்பரங்கள் அனைத்தும் காணப்பட்டன.

  ‘பொன்னியின் செல்வ’னைத் திரைப்படமாக்கவும், நெடுந்தொடராக்கவும் எடுக்கப்பட்ட முயற்சிகள் பற்றி ஐயா அவர்கள் தொகுத்தே கூறினீர்கள். ஆக, இத்தனை பேரும் முனைந்து முனைந்து பின்வாங்குகிறார்கள் என்றால், அதற்குக் கண்டிப்பாகப் பெரிய காரணம் இருக்கும். அது வேறொன்றுமில்லை, ‘பொருள்’! கதையைச் சுருக்கி, அதுவும் வெறும் மேடை நாடகமாக்குவற்கே கோடிக்கணக்கில் பணம் தேவைப்பட்டதாக நாடகக் குழுவினர் விகடன் நேர்காணலில் கூறியதை நாம் படித்தோம். திரைப்படமாக்குவதற்கும் பணம்தான் பெரும் சிக்கல் என்று கமலகாசன் பலமுறை பல மேடைகளில் கூறியதையும் நாம் கேட்டிருக்கிறோம். எனவே, ‘பொருள்’ இதில் ஒரு முழுமுதற் சிக்கலாக இருக்கிறது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். இதை இரண்டரை மணி நேரத் திரைப்படமாக எடுப்பதற்கே பணம் திரட்டுவது சிரமமாக இருக்கும்பொழுது, நெடுந்தொடராக எடுப்பதென்றால் சாதாரணமா? ‘பொன்னியின் செல்வ’னுக்கா வழங்குநர் கிடைக்க மாட்டார்கள் என நீங்கள் கேட்கலாம். கிடைப்பார்களா மாட்டார்களா என்பது இதோ இந்த நாடக முயற்சியில் தெரிந்திருக்கிறது; கிடைத்திருக்கிறார்கள். எனவே, ஒருவேளை இது ‘பொன்னியின் செல்வன்’ நேசர்களின் வெள்ளோட்ட முயற்சியாகக் கூட இருக்கலாம். இப்படி ஒரு முயற்சி செய்து பார்த்துவிட்டு, அதன் பிறகு நெடுந்தொடராக்க முயலலாமே என்று அவர்கள் நினைத்திருக்கலாம். எனவே, பொறுத்துப் பார்க்கலாமே உள்ளர்த்தம் கற்பிக்காமல்!

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.