எம்ஜிஆரும், ராகு காலமும், நடுவில் சிக்கிய நானும்……( பகுதி -1 )

??????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????

சுமார் 40 ஆண்டுகள் இந்தியாவின் பலவேறு மாநிலங்களில் மத்திய அரசின் முக்கியமான துறை ஒன்றில் பணிபுரிந்ததும்,
அரசுப்பணியில் இருக்கும்போதே, 20 ஆண்டுகளுக்கு
மேலாக சமுதாயப் பணிகளில் ஈடுபாட்டுடன் செயலாற்றியதும் அற்புதமான அனுபவங்கள் பலவற்றை எனக்குத் தந்தன.

அரசுப்பணியிலிருந்து ஓய்வு பெறும்போது,
வாழ்க்கையை பயனுள்ள வகையில் செலவழித்தோம்
என்கிற திருப்தியுடன் ஓய்வு பெற்றேன்.

என்னுடன் பல்வேறு சந்தர்ப்பங்களில்,
பல்வேறு இடங்களில்.பணியாற்றிய சிலருக்கும்,
என் நெருங்கிய நண்பர்கள் சிலருக்கும் –
இந்த சம்பவங்களில் சில தெரியும். நான் இப்படி ஒரு
வலைத்தளம் உருவாக்கி எழுதி வருவது
என் மிக நெருங்கிய அந்தக்கால நண்பர்கள்
4 பேருக்கு மட்டுமே தெரியும்.

என் அலுவலக மற்றும் பொதுவாழ்வில் ஏற்பட்ட அனுபவங்களில்
மற்றவர்களும் ரசிக்கக்கூடிய அல்லது
எதாவது ஒரு விதத்தில் மற்றவர்களுக்கு
பயன்படக்கூடிய சில அனுபவங்களை மட்டும்-

தகுந்த இடைவெளிகளில் இங்கு பதிவுசெய்ய வேண்டும் என்று எனக்குத் தோன்றியது. (சில நண்பர்களும் கூட கூறினார்கள்).

இவற்றை எழுதுவதன் இன்னொரு பலன் –
பழைய நினைவுகளை அசை போடும்போது எனக்கு கிடைக்கும் “மலரும் நினைவுகளின்” சுகம்…!!

நான் பழகிய மத்திய அரசின் மூத்த அதிகாரிகளில்
சிலர் அற்புதமான மனிதர்கள். இந்த நாட்டின் சொத்து என்று அவர்களைச் சொல்லலாம்.
அதே சமயம், மனிதப்பதர்கள் என்று சொல்லக்கூடிய
அளவிற்கு மோசமான சிலருடனும் கூட வேலை செய்ய வேண்டிய அவசியம் எனக்கு இருந்தது.

தனிப்பட்ட முறையில் யாரையும் பாதிக்காத வகையில்
சிலவற்றை அவ்வப்போது இங்கே எழுதலாமென்றிருக்கிறேன்.
சம்பவங்கள் கிட்டத்தட்ட உண்மை என்பதால்,
சம்பந்தப்பட்டவர்களின் பெயர்களை முழுவதுமாகத் தராமல், இனிஷியல்களில் சுருக்கமாகத் தருவதாக உத்தேசம்.

இவற்றில் என் பெயர்ச் சுருக்கம் “கேஎம்”
என்பதாக இருக்கும்……!!
( நிகழ்ந்து பல வருடங்களுக்குப் பிறகு, என் நினைவிலிருந்து இவைகளை எழுதுவதால், சில இடங்களில் எதாவது தகவல்கள் சரியாகக் கூறப்படாமல் இருக்க வாய்ப்பு உண்டு…)

இந்த அனுபவங்களில் சில சமயங்களில்
விஐபி க்கள் சிலரும் வருவார்கள் …..

( நான் பணியில் இருந்தபோது,
தொழிற்சாலை சம்பந்தப்பட்ட அதிகாரபூர்வமான
பொது நிகழ்வுகளில் – எனக்கு என்று எப்போதும்
குறிப்பிடத்தக்க ஒரு பங்கு இருக்கும்.

இவை என் வேலை சம்பந்தப்பட்டவை அல்ல –
பொதுவாகவே, தொழிற்சாலைக்கு அப்பாற்பட்டு –
வெளியே எனக்கு சமூக நலன் சம்பந்தப்பட்ட நிகழ்ச்சிகளில் இருந்த ஈடுபாடும், அனுபவமும், என் மேலதிகாரிகளுக்கு என் மீதிருந்த நம்பிக்கையுமே அவர்கள் இத்தகைய பொறுப்பை எனக்கு அளித்ததற்கான காரணங்கள்…)

இனி எதிர்வரும் இடுகைகள் எல்லாவற்றிற்கும் சேர்த்து, இந்த அறிமுகமே போதுமானது….

———————–

1984ஆம் ஆண்டு, மார்ச் மாதம்.
நான் அந்த சமயத்தில், திருச்சி அருகே மத்திய அரசின்
பாதுகாப்புத் துறை பொறுப்பில் உள்ள ஒரு தொழிற்சாலையில் நிர்வாகத்துறையில், ஒரு சிறிய பிரிவின் பொறுப்பாளராகப் பணியில் இருந்தேன். ( மேல் நிலையும் இல்லை – கீழ் நிலையும் இல்லை – நடுநிலை அதிகாரி….!)

அந்த சமயத்தில் தமிழகத்தில் எம்ஜிஆர் தான் முதல்வர்.

மத்தியில், தமிழகத்தைச் சேர்ந்த –
ஆர்.வெங்கட்ராமன் (ஆர்வி) அவர்கள் பாதுகாப்பு அமைச்சராக இருந்தார். (பிற்காலத்தில் அவர் ஜனாதிபதி பதவியையும் வகித்தார் என்பது உங்களில் பலருக்கு நினைவிருக்கலாம் …)

ஆர்வி அவர்கள் தான் பதவியில் இருக்கும்போதே
தன் செல்வாக்கைப் பயன்படுத்தி – தமிழகத்திற்கு எதாவது செய்ய வேண்டுமென்று மிகவும் ஆர்வமாக இருந்தார். அவர் தன் கட்டுப்பாட்டில் இருந்த பாதுகாப்புத் துறையில், புதிய தொழிற்சாலை ஒன்றை தமிழ்நாட்டிற்கு கொண்டு வர முனைந்தார். (ஏற்கெனவே திருச்சியில் ஒரு தொழிற்சாலை இருந்தது ….)

முடிவெடுக்கும் முன்பு விஷயம் வெளியில் தெரிந்தால்,
இடத்தைப் பற்றிய சர்ச்சைகள்/போட்டிகள் நிறைய ஏற்படும் என்பதால் தமிழ்நாட்டின் அப்போதைய முதல்வர் எம்ஜிஆர் அவர்களுடன், இடம் குறித்து –
ரகசியமாக கலந்தாலோசித்திருக்கிறார்.

திருச்சியில் ஏற்கெனவே இருந்த பாதுகாப்புத் துறை
தொழிற்சாலைக்காக ஒதுக்கப்பட்ட இடத்தில்,
சுமார் 500 ஏக்கர் அளவிற்கு பயன்படுத்தப்படாமல்,
காலியாகவே இருந்ததால், அதையும், அதையொட்டி
இன்னும் 500 ஏக்கர் நிலமும் ஏற்பாடு செய்வது
தமிழக அரசுக்கு சுலபமாக இருக்கும் என்று
எம்ஜிஆர் அவர்களும் கூறியதால்,
புதிய தொழிற்சாலைக்கான இடம் திருச்சி என்று
ஆர்வி அவர்களால் முடிவு செய்யப்பட்டது.

மார்ச் 4, 1984 – ஞாயிற்றுக்கிழமை – அன்று
புதிய தொழிற்சாலைக்கான அடிக்கல் நாட்டும் விழாவை வைத்துக்கொள்வது என்று பாதுகாப்பு
அமைச்சகத்தால் முடிவு செய்யப்பட்டது.

விழாவிற்கு முந்திய ஞாயிறு வரை – இந்த செய்தி யாரிடமும் சொல்லப்படவில்லை. திங்கள் காலை, ஆர்வி அவர்களின் உதவியாளரிடமிருந்து நான் பணிபுரிந்து வந்த தொழிற்சாலையின் ஜெனரல் மேனேஜர் (ஜி.எம்.)அவர்களுக்கு தொலைபேசி மூலம் இது குறித்த சில விவரங்கள் தெரிவிக்கப்பட்டன.
ஜிஎம் அவர்கள் உடனடியாக என்னை தன் அறைக்கு வரும்படி தொலைபேசியில் அழைத்தார். அவரது அறையில் நான் நுழையும்போதே – தொடர்ந்து எங்கள் துறையின் தலைமைச்செயலகம் உள்ள கல்கத்தாவிலிருந்து ஜி.எம்.முக்கு
அடுத்த தொலைபேசி…!

இன்னும் 6 நாட்களில் நடைபெற விருக்கும்
புதிய தொழிற்சாலைக்கான அடிக்கல் நாட்டு விழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்யும் பொறுப்பு எங்கள் ஜி.எம். அவர்களிடம் ஒப்படைக்கப்படுகிறது என்றும் அனைத்து
ஏற்பாடுகளையும் உடனே துவங்கும்படியும்.

அடுத்து சொல்லப்பட்ட செய்தி இன்னும் விருவிருப்பானது.

ஞாயிறு அன்று மாலை 3 மணிக்கு விழா நடைபெறும் என்றும், விழாவிற்கு பாதுகாப்பு அமைச்சர் ஆர்.வெங்கட்ராமன் அவர்கள் தலைமை தாங்க, தமிழ்நாடு முதலமைச்சர் எம்.ஜி.ஆர். அவர்கள் அடிக்கல் நாட்டுவார் என்றும் தகவல் கூறப்பட்டது.

கூடவே இன்னுமொரு கட்டுப்பாடும் –
விழாவிற்கு வரவேண்டியவர்கள் யார் யார் என்பதையெல்லாம் பாதுகாப்புத் துறையே முடிவு செய்து விட்டது என்றும் இது குறித்த தகவல்கள் வெள்ளிக்கிழமை தான் செய்தி எஜென்சிக்கள் மூலம் வெளிப்படுத்தப்படும் என்றும், அதுவரை வேறு யாருக்கும் இது குறித்த எந்த செய்திகளையும்
வெளியிட அனுமதி இல்லை என்றும்…. !!!

( பகுதி – 2ல் தொடர்கிறது …..)

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

7 Responses to எம்ஜிஆரும், ராகு காலமும், நடுவில் சிக்கிய நானும்……( பகுதி -1 )

 1. nparamasivam1951 சொல்கிறார்:

  விறுவிறுப்பான ஆரம்பம். திருச்சி நவல்பட்டு அருகே மலரும் நினைவுகள். 2ம் பதிவுக்கு ஆவல்.

 2. Ganpat சொல்கிறார்:

  Jeffrey Archer படிப்பது போல இருக்கு..நன்றி.வாழ்த்துக்கள்.

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   நன்றி கண்பத்.

   உங்கள் அன்பும் பெருந்தன்மையும்
   பரங்கிமலையை –
   இமையமலையுடன் ஒப்பிடுகிறது …!!

   -வாழ்த்துக்களுடன்,
   காவிரிமைந்தன்

   • todayandme சொல்கிறார்:

    நிலையின் திரியாது அடங்கியான் தோற்றம்
    மலையினும் மாணப் பெரிது. (குறள் 124)

    தன் நேர்மையான வழியை விட்டு விலகாது, அடக்கத்துடன் வாழ்பவனைப் பற்றிய பிறர் மனத் தோற்றம் மலையைக் காட்டிலும் மிக உயரமானது. – சாலமன் பாப்பையா உரை

    எப்படியோ, அசைக்க முடியாத மலை என்று ஒத்துக்கொண்டீர்களே.

    கண்பத் அவர்களை நான் வழிமொழிகிறேன்.

 3. Ganpat சொல்கிறார்:

  கா.மை.ஜி.,
  செய்திகள்/சம்பவங்கள் என்ற உணவுகளில் சுவாரசியம் என்ற சுவை அதிகரிக்க உப்பு காரம் மசாலா போன்ற பொய்களைத்தூவி அளிப்பது நம் உணவுவிடுதிகளாகிய ஊடகங்களுக்கு கை வந்த கலை.அப்படிப்பட்ட நிலையில் சற்றும் கலப்பின்றி உணவை சுவாரசியம் குறையாமல் அளிக்கிறீர்கள்.
  இந்த நாட்டில் நிகழும் அநியாயங்களை எழுத உங்களுக்கு 24மணி நேரமும் போதா!
  மற்றபடி நான் சொன்ன கருத்தை இன்னொரு நண்பரும் ஒத்துக்கொண்டுள்ளார் என்று அறிய மகிழ்ச்சி.
  நன்றி.

 4. gopalasamy சொல்கிறார்:

  waiting

 5. rathnavelnatarajan சொல்கிறார்:

  அருமை.
  நன்றி.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.