( பகுதி-2 ) எம்ஜிஆரும், ராகு காலமும், நடுவில் சிக்கிய நானும்……

mgr-2

அவ்வளவு தான் –
அனைவருக்கும் உற்சாகமும், பரபரப்பும் தொற்றிக் கொண்டது. படுவேகமாக பணிகளை ஆரம்பித்தோம்.
முதலமைச்சர், பாதுகாப்பு அமைச்சர் ஆகிய 2 விவிஐபி க்கள் வருவதால், நிகழ்ச்சி ஏற்பாடுகள் மிகச்சிறப்பாக அமைய வேண்டும். எவ்வளவு பேரை  வேண்டுமானாலும் உதவிக்கு அழைத்துக்கொள் -என்றார் ஜி.எம்.

நிறைய பேருக்கு பொறுப்புகள் பகிர்ந்தளிக்கப்பட்டன.
நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் மேடை நிர்வாகம் ( master of ceremony ) என் பொறுப்பு…

பாதுகாப்புத் துறை தொழிற்சாலையும், அதன் குடியிருப்பு பகுதியும் பொதுவாக வெளியாருக்கு அனுமதி மறுக்கப்பட்ட பகுதி. வெளியார் வருவதை செக்யூரிடியினர் அனுமதிக்க மாட்டார்கள்.

ஆனால், எம்ஜிஆர் வருவதால், சுற்றுவட்ட கிராம மக்கள் நிறைய பேர் வருவார்கள் என்றும், நாம் அதை தடுப்பது சரியாக இருக்காது என்றும் ஜி.எம்.மிடம் நான் எடுத்துச் சொன்னேன்.
( ஜிஎம் வட இந்தியர் – உள்ளூர் அரசியல் விவகாரங்கள் எல்லாம் அவருக்கு அதிகம் தெரியாது ).

எனவே, வெளியாரும் வர வசதியாக, எல்லையில் பந்தல் அமைக்க தீர்மானிக்கப்பட்டது. பெரிய திடல் சுத்தம் செய்யப்பட்டது. மற்ற ஏற்பாடுகள் தொடர்ந்தன – அதிகாரபூர்வமாக செய்தி வெளியிடா விட்டாலும், சுற்றுப்புறங்களில் எம்ஜிஆர் வரும் செய்தி பரவி விட்டது.

பாதுகாப்பு உற்பத்தித் துறையின் தலைமையகம் அமைந்துள்ள கல்கத்தாவிலிருந்து உயர் அதிகாரிகள் சனிக்கிழமையே வந்து விட்டனர். அப்போது தலைமைப் பொறுப்பில் இருந்தவர் –
ஒரு தமிழர் – பெயர் ஆர்கேசி.
ஆர்கேசி – நான் மதிக்கும் – மிகவும் வித்தியாசமான ஒரு மனிதர்…!

அவர் இப்போது இல்லை – மறைந்து விட்டார்.
அவரைப் பற்றி இங்கு கொஞ்சம் விவரமாகவே சொல்ல விரும்புகிறேன் நான்.

ஆர்கேசி அவர்கள் தலைமைப்பொறுப்பிற்கு வருவதற்கு சில வருடங்கள் முன்னதாக ஜி.எம்.ஆக இருந்தபோது நான் அவரிடம் பணி புரிந்திருக்கிறேன். என்னை அவருக்கு மிக நன்றாகத் தெரியும். நானும் அவரையும், அவரது குணாதிசயங்களையும் மிக நன்றாக அறிவேன்.

அற்புதமான மனிதர் அவர். தொழில் நுட்பத்தில் சிறந்தவர். மிகச்சிறந்த எஞ்ஜினீயர். எப்பேற்பட்ட தொழில் நுட்ப சிக்கல்கள் ஏற்பட்டாலும், தீர்வு கண்டு பிடித்து விடுவார். அலுவலகத்தில் வேலையாக இருந்தாலும் கூட –
தமிழர்களிடம் பேசும்போது தமிழில் தான் பேசுவார்.

எதாவது தவறு கண்டால் – காச் மூச் என்று கத்துவார். அடுத்த நிமிடம் மறந்து விடுவார்.
சர்வ சகஜமாகத் தொடர்ந்து பேசுவார்….

ஒரே ஒரு பிரச்சினை –
உங்களால் கற்பனையே செய்ய முடியாத அளவிற்கு
ஒரு ஞாபக மறதி. எதையும் மறந்து விடுவார்.
5 நிமிடங்களுக்கு முன்னர் சொன்னது நினைவில் இருக்காது. மிக நெருக்கமான மனிதர்களின் பெயரைக்கூட சமயத்தில் மறந்து விடுவார். ஒரு சமயம் தொழிற்சாலையில் இரவு ஷிப்டில் ஏதோ பிரச்சினை என்று – பேண்ட்,ஷர்ட் அணிய மறந்து – பனியன் வேட்டியுடன் காரை ஓட்டிக்கொண்டு உள்ளே வந்துவிட்டார் என்றால் பாருங்களேன் …!

ஞாயிறு அன்று திருவிழா …..!!!
சனிக்கிழமை இரவு 8 மணிக்கு கல்கத்தாவிலிருந்து,
சென்னை வழியாக திருச்சி வந்து சேர்ந்தார் ஆர்கேசி.
நான் inspection bungalow-வில் அவருக்காக காத்திருந்தேன். ஏற்கெனவே தொலைபேசியில் தொடர்பில் இருந்தோம்
என்னைப் பார்த்தவுடன் புரிந்து கொண்டார்.
எந்த கேள்வியும் இல்லை. “வா” என்று ஒரே வார்த்தையில் அழைத்து, அவரது அறைக்குள் அழைத்துச் சென்றார்.

ஏற்பாடுகள் எந்த அளவில் இருக்கின்றன – இன்னும் என்னென்ன செய்ய வேண்டும் என்றெல்லாம் கேட்க ஆரம்பித்தார்… அதற்குள் அவருக்கு தொலைபேசி அழைப்பு வந்தது. (அப்போது செல் போன் எல்லாம் அறிமுகமே ஆகவில்லை ….)
அவர் தனிமையில் பேசட்டும் என்று, நான் அவரிடம்
“சார், நான் வெளியில் நிற்கிறேன். பேசிய பிறகு கூப்பிடுங்கள்” என்று சொல்லி விட்டு, வெளியே வந்து வராந்தாவில் நின்று கொண்டிருக்கிறேன்.

5 நிமிடம் கழித்து அறையின் கதவைத் திறந்து வெளியே வந்தவர், என்னைப் பார்த்தவுடன்
” யார் நீ – எதுக்காக இங்க
நின்னுண்டிருக்கே…?” என்றாரே பார்ப்போம்.
என் இடத்தில் வேறு யாராவதாக இருந்தாலும், நொந்து நூலாகி இருப்பார்கள். ஆனால், நான் அவரை மிக நன்றாக அறிந்தவன் என்பதால் கவலையே படவில்லை.

உரிமையோடு அவரிடம் –
” வேணும் சார் – எனக்கு இதுவும் வேணும் –
இன்னமும் வேணும் – நான் தான் ‘கேஎம்’ – எதாவது ஞாபகம் வருதா… – ரூம்ல ஒங்ககிட்ட பேசிண்டிருந்தேன். நீங்க போன்ல பேசி முடிக்கறதுக்காக வெளில வந்து காத்துக்கிட்டுருக்கேன்” என்றேன்.

ஒன்றுமே நடக்காதது போல், தொடர்ந்து பேச ஆரம்பித்தவர் –
“ஏய் – ஒங்கிட்ட நல்ல சொக்கா எதாவது இருக்கா …?
கலரா, செக் போட்டு ….!
எம்ஜிஆர் வர்றார் இல்ல –
நாளைக்கு பங்க்ஷனுக்கு போட்டுக்க சொக்கா இல்லை – திருப்பதி எல்லாம் போய் – 3 நாளா ட்ராவல் பண்ணிண்டு இருந்ததுல எல்லாம் அழுக்காயிடுத்து” என்றார் மிகவும் வெகுளித்தனமாக…

அவரது அப்பாவித்தனத்தை இன்று நினைத்தாலும் எனக்கு வியப்பாக இருக்கிறது.

நான் அவரிடம் “சார் என் சட்டை ஒங்களுக்கு சரியா இருக்காது. நீங்க அந்த பொறுப்பை எங்கிட்ட விடுங்க. காலைல நான் அதுக்கு வேற ஏற்பாடு பண்ணிடறேன்” என்று சொல்லி பிறகு மற்ற வேலைகளைத் தொடர ஆரம்பித்தோம்.

இன்று எங்கே பார்க்க முடியும் இத்தகைய மனிதர்களை ….?

மறுநாள் – ஞாயிற்றுக்கிழமை – பொழுது விடிந்தது –
வித்தியாசமான தகவல்களோடு….!

Defence Minister ஆர்வி அவர்களுக்கு மிக அவசரமான ஒரு வேலை. ராணுவ தளபதியோடு வெளிநாடு செல்கிறார். எனவே அவரால் “அடிக்கல் நாட்டு விழா”வில் கலந்து கொள்ள முடியாது. சீனியர் அதிகாரி என்கிற முறையில் ஆர்கேசி அவர்களே வரவேற்கட்டும். முதல்வர் எம்ஜிஆர்
அடிக்கல் நாட்டி, தலைமையுரையும் நிகழ்த்துவார்.
ஆர்வி அவர்களே எம்ஜிஆருடன் பேசி
எல்லாவற்றையும் விளக்கி விட்டார்……

என்று பாதுகாப்பு அமைச்சர் ஆர்வி அவர்களின்
செயலாளரிடமிருந்து தகவல் வருகிறது.

(பகுதி – 3ல் முடிவடையும் …)

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

One Response to ( பகுதி-2 ) எம்ஜிஆரும், ராகு காலமும், நடுவில் சிக்கிய நானும்……

 1. எஸ்.இளங்கோவன் சொல்கிறார்:

  காவிரிமைந்தன் சார்,

  வாழ்க்கையில் நடந்த சம்பவங்களை மிக அழகாக
  ஒரு கதை சொல்லி போல் சொல்கிறீர்கள்.
  கண்பத் அவர்கள் சொல்வது போல் இது எல்லாருக்கும்
  கைவராது. வாழ்த்துக்கள். இது போல் நிறைய
  எழுதுங்கள்.

  நீங்கள் சொல்லும் ஆர்கேசி அவர்களைப் பார்க்க வேண்டும்
  போலவும், அவருடன் வேலை செய்ய வேண்டும் போலவும்
  ஆவலாக இருக்கிறது.

  //இன்று எங்கே பார்க்க முடியும் இத்தகைய மனிதர்களை ….?//

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.