( மூன்றாவது இறுதிப் பகுதி ) எம்ஜிஆரும், ராகு காலமும், நடுவில் சிக்கிய நானும்……

 

atm

ஆர்கேசி அவர்களுக்கு ஒரு புறம் நிம்மதி –
இன்னொரு புறம் டென்ஷன்.
நிம்மதி – ஒரு விஐபி யை கவனித்தால் போதுமே….!
டென்ஷன் – பாதுகாப்பு அமைச்சர் ஆர்வி அவர்களை ஆர்கேசிக்கு ஏற்கெனவே பழக்கம் உண்டு. ஆனால் எம்ஜிஆர் அவருக்கு முற்றிலும் புதியவர். ஆர்வி அவர்களும் வந்திருந்தால் எம்ஜிஆரை எதிர்கொள்ள பெரிய உதவியாக இருக்கும்.
இப்போது தனியாக முதல் அமைச்சரை சமாளிக்க வேண்டுமே..!!

என்னைப் பொறுத்த வரையில் செக்யூரிடி ப்ரோடோகாலை சமாளிப்பது குறித்து மட்டுமே யோசனை. மற்றபடி இடம், சூழ்நிலை, விழா – எல்லாம் ஏற்கெனவே பழக்கப்பட்ட அனுபவம் கைகொடுக்கும் – சமாளித்து விடலாம் என்கிற நம்பிக்கை இருந்தது.

மேலும், 10 -12 வயதில் ‘மலைக்கள்ளன்’, ‘மதுரை வீரன்’  போன்ற திரைப்படங்களைப் பார்த்தது முதலே ஒரு வியக்கத்தக்க ஹீரோவாக என் மனதில் வீற்றிருந்த எம்ஜிஆர் அவர்களை முதல்முறையாக நேரில் பார்த்து,
அருகில் இருந்து பேசப்போவது,
நிகழ்ச்சிகளை அவரை முன்வைத்து நடத்துவது –
எல்லாம் எனக்கு ஒரு த்ரில்லிங்கான எதிர்பார்ப்பாகவே இருந்தது…! எனவே நான் ஆவலுடன் அந்த சந்தர்ப்பத்தை எதிர்பார்த்துக் கொண்டிருந்தேன்….!!

காலையிலேயே தமிழகத்தின் மூத்த போலீஸ் அதிகாரிகள் விழா இடத்திற்கு வந்து விட்டார்கள்.
நிகழ்ச்சி விவரங்கள், யார் யாருக்கு மேடையில்
இருக்க வேண்டிய அவசியம் இருக்கிறது என்பது குறித்த விவரங்களை எல்லாம் கேட்டறிந்து கொண்டு, மேடை அப்போது முதலே அவர்கள் கட்டுப்பாட்டிற்குள் வருகிறது என்றும் ஏற்கெனவே  குறிப்பிடப்பட்டவர்களைத் தவிர வேறு யாரும்
மேடையில் அனுமதிக்கப்பட மாட்டார்கள் போன்ற மற்ற பாதுகாப்பு விவரங்களையும் தெரிவித்தார்கள்.

பாதுகாப்பு காரணங்களை முன்னிட்டு, நாங்கள் ஏற்கெனவே அறிவித்த விவரங்களில் எத்தகைய மாற்றங்களையும் அவர்களின் அனுமதியின்றி மேற்கொள்ளக்கூடாது என்றும் வலியுறுத்தினார்கள்.

மதியம் ஒன்றரை மணியளவு இருக்கும். காலையிலிருந்தே நான் ஒன்றும் சாப்பிடவில்லை. வெறும் டீயை குடித்துக்கொண்டே ஓடிக்கொண்டிருந்தேன். மிகவும் அசௌகரியமாக் உணர்ந்தேன்.
சரி – வீட்டுக்குப் போய், கொஞ்சம் மோர் சாதம் சாப்பிட்டு வந்து விடலாம் என்று, ஆர்கேசி அவர்களின் உதவியாளரிடம் மட்டும் 15 நிமிடங்களில் வந்து விடுகிறேன் என்று சொல்லிவிட்டு வீட்டுக்கு விரைந்தேன்.

கை, கால் – கழுவிக்கொண்டு சாப்பிட உட்கார்ந்தேன்.
இரண்டு கவளம் மோர் சாதம் மட்டுமே சாப்பிட்டேன்.
அதற்குள் வீட்டு வாசலில் போலீஸ் ஜீப் நிற்கிறது. அதிலிருந்து ஆர்கேசி யின் உதவியாளர் விரைந்து இறங்கினார். அதற்குள் நான் அருகே சென்றேன்.

“ஆர்கேசி மிகவும் பதற்றமாக நீங்கள் எங்கே என்று கேட்டார். இங்கே தான் பந்தலில் எங்காவது இருப்பீர்கள் என்று சொன்னேன். நீங்கள் வீட்டிற்கு போயிருக்கிறீர்கள் என்று சொன்னால் கத்துவார் –
அதற்குள் ‘மைக்’கில் உங்களை எங்கிருந்தாலும் உடனே வரும்படி அறிவிக்கச் சொல்லி விட்டார். உடனடியாக போலீஸ் ஜீப் தான் கிடைத்தது. ஓடி வந்தேன் – என்ன விஷயமோ தெரியவில்லை. நீங்கள் என் கூடவே உடனே வாருங்கள் – என்னால் அவரை
சமாளிக்க முடியாது ” என்றார்.

கையை கழுவிக்கொண்டு உடனே ஜீப்பில் பறந்தேன்.
ஆர்கேசி நான் போலீஸ் ஜீப்பில் வந்திறங்குவதைப் பார்த்து விட்டார்.
“எங்க போயிட்டே நீ ?” என்று கேட்டவர் பதிலை எதிர்பார்க்காமல் விஷயத்தை ஆரம்பித்து விட்டார்.

மணி இரண்டு ஆகி விட்டது. எம்ஜிஆர் விமானம் இன்னும் சென்னையை விட்டே கிளம்பவில்லை என்று போலீஸ் கமிஷனர் கூறுகிறார் என்றார்.

நான் ரொம்ப கேஷுவலாக, “சார் எம்ஜிஆர் எப்போதுமே கொஞ்சம் ‘லேட்’டாத் தான் வருவார் – அதில் கவலைப்பட ஒன்றும் இல்லை.ஆனால் நிச்சயம் வந்து விடுவார்” என்றேன்.

கத்தினார் ஆர்கேசி – “அறிவிருக்கா ஒனக்கு…?
இன்னிக்கு என்ன கெழமை …? ( ஞாயிறு…!)
நாலரை – ஆறு ராகு காலம். ராகு காலத்துக்கு முன்னாடி function-ஐ ஆரம்பிக்க வேண்டாமா…?
ராகு காலத்துலயா புது factory க்கு
foundation போடுவே …?”

அவர் பதட்டத்துக்கான காரணம் இப்போது புரிந்தது.
நான் இந்த கோணத்தில் யோசிக்கவே இல்லை…..!!

“அப்படி எல்லாம் ஆகாது சார்… எப்படியும் நாலு மணிக்குள்ள வந்துடுவார். நாலரைக்குள்ள ஆரம்பிச்சுட்டால் போறும் – அதுக்கப்புறம் தொடர்ந்தாலும் பரவாயில்லை”
என்றேன் நான்.

“நாலரைக்குள்ள வரல்லேன்னா என்ன பண்ணுவே …?”- டென்ஷனுடன் ஆர்கேசி.

“மொதல்ல நீங்க ஒக்காந்து கொஞ்சம் டீ சாப்பிட்டு
கூலா ஒரு சிகரெட் பிடிங்க சார். யோசிப்போம் – வழி கிடைக்கும்”.
என்றேன் நான்.அதற்குள் எங்கள் ஜி.எம். கூட சேர்ந்து கொண்டார். (அவர் வட இந்தியர், கடைசியாக 8 வருடங்கள் லண்டனில் இருந்தவர். ஆர்கேசி ராகுகாலம் பற்றி இவ்வளவு கவலைப்படுவது அவருக்குப் புரியவில்லை…!)

யோசித்தோம். மாற்றுத் திட்டம் உருவானது. 4.20 மணிக்குள் எம்ஜிஆர் அவர்கள் வந்து விட்டால், விழாமேடைக்கு அவரை அழைத்துச் செல்லாமல், முன் பக்கத்தில் கீழே தயாராக
வைக்கப்பட்டிருந்த “அடிக்கல்” லை (foundation stone )சிமெண்டுகரண்டியால் ஒரு கலவை மட்டும் பூசச்செய்வது.(அப்போதெல்லாம் இது தான் வழக்கம் …!) -இதன் மூலம் முக்கியமான இந்த நிகழ்வு நாலரை மணிக்கு முன் ( ராகு கால துவக்கம் …) முடிந்து விடும்.

பின்னர் மேடைக்கு அழைத்துச்சென்று, மாலை மரியாதைகள், உரை – எல்லாவற்றையும் நிதானமாக வைத்துக்கொள்ளலாம்.

திரும்பவும் பிரச்சினையை கிளப்பினார் ஆர்கேசி.
“நாலு இருவதுக்குள்ள வரல்லேன்னா …?”

மீண்டும் யோசிக்கப்பட்டு அதற்கும் விடை
கண்டுபிடிக்கப்பட்டது. (plan’B’)
இன்னும் தாமதமாக வந்தால், முதல் அமைச்சரை நேராக அருகிலிருந்த inspection bungalow விற்கு அழைத்துச்சென்று, அறிமுகங்கள் செய்து வைக்கப்பட்டு, டீ, பிஸ்கட் சாப்பிட வைத்து – முடிந்த வரை இழுத்தடித்து, ஐந்தரை மணி வாக்கில் மேடைக்கு அழைத்துப் போவது. அங்கே மாலை, மரியாதைகள், வரவேற்புரை, புதிய தொழிற்சாலை பற்றிய விவரங்கள் என்று தொடர்ந்து பேசிவிட்டு, எம்ஜிஆர் அவர்களைப் பேசச்செய்தால் – அவர் பேசி முடியும்போது எப்படியும்
மாலை 6 மணியை தாண்டி விடும். (ரா.கா. முடிந்து விடும்…!)

பின்னர் முதல்வர் மேடையை விட்டு இறங்கி கீழே,
முன்பக்கத்தில் “அடிக்கல்” நாட்டுதலை முறையாகச் செய்து விட்டு,  அப்படியே கிளம்பலாம்.

நான் நிம்மதியாகி விட்டேன்… ஆனால் ‘பாஸ்’ டென்ஷன் முழுவதுமாகப் போகவில்லை…!

மணி மூன்றே முக்கால். எம்ஜிஆர் அவர்களின் விமானம் திருச்சி வந்திறங்கி விட்டது என்றும்,
அதிகபட்சமாக அரை மணி நேரத்திற்குள் விழாப்பந்தல் வந்து சேர்ந்து விடுவார் என்றும் போலீஸ் தகவல் கிடைத்தது.
சரி plan ‘A’ போலவே முதலில் நேராக
‘laying of foundation stone’ என்று முடிவு
செய்யப்பட்டு, முதலமைச்சரை வழி நடத்தும் குழுவுக்கும், போலீஸ் அதிகாரிகளுக்கும் சொல்லப்பட்டது.

நான் மேடைக்கு போய் ‘மைக்’ பொறுப்பை ஏற்றுக்கொண்டு விட்டேன்.

மணி 4.20. பந்தலின் பின்வழியே எம்ஜிஆர் அவர்களின் கார் நுழைகிறது. ( மேடைக்கு முன்னால், 100 சேர்கள் மட்டும் – விசேஷ அழைப்பாளர்கள் – அவர்கள் பின்னால், சிறிது இடைவெளி விட்டு, சவுக்கு கட்டைகள் மூலம் மூன்று பக்கமும் தடுப்புவேலி. அதன் பின்னர் முழுவதும் பொதுமக்கள் கூட்டம்.
அக்கம் பக்கத்தில் உள்ள கிராமத்து மக்கள் பெருந்திரளில் கூடி இருந்தார்கள். அவர்களில் முதலில் பெண்களும், குழந்தைகளும். அவர்களுக்குப் பின்னால் ஆண்கள் கூட்டம்.)

முதல்வர் காரை விட்டு இறங்கி நடக்கத் துவங்கியவுடன், நான் ஒலிபெருக்கியில் அறிவிப்புகளைத் துவங்கினேன். “மாண்புமிகு தமிழக முதல்வர் எம்ஜிஆர் அவர்கள்
விழாப்பந்தலுக்கு வந்து விட்டார். அடுத்து அவர் முதலில் மேடைக்கு முன்புறம் உள்ள புதிய தொழிற்சாலைக்கான ‘அடிக்கல்’ நாட்டும் விழாவினை தன் திருக்கரங்களால்
துவக்கி வைப்பார் – அதனைத் தொடர்ந்து விழா நிகழ்ச்சிகள் மேடையில் நடைபெறும்” – என்று.

அறிவிப்பை கேட்டுக்கொண்டபடியே, கூட இருந்தவர்கள் வழிகாட்ட, ‘foundation stone’ இருந்த இடத்தை நோக்கி எம்ஜிஆர் அவர்கள் வேகமாக நடக்கத் துவங்கினார்.
எம்ஜிஆரை நேரில் கண்டவுடன், அதுவரை உட்கார்ந்திருந்த மக்கள் கூட்டம் எழுந்து ஆர்ப்பரிக்க ஆரம்பித்தது.
பெருந்திரளான மக்களை கண்டவுடன் எம்ஜிஆர் அவர்கள் தன் பாதையை திருப்பிக் கொண்டு, தடைவேலியை நோக்கிச் செல்ல ஆரம்பித்தார்…..

ஒவ்வொரு பக்கமாக, 3 பக்கமும் சென்று வேலிக்கருகே நின்றுகொண்டு, அவரது trade mark symbolபடி,
மக்களை நோக்கி இரண்டு கைகளையும் தலைக்கு மேலே தூக்கி கும்பிட்டும், இரண்டு கைகளையும் வீசிக்காட்டியும் புன்சிரிப்புடன் நடக்க ஆரம்பித்தார்.

நான் மேடையிலிருந்து தொடர்ந்து
அறிவித்து (கதறிக்) கொண்டே இருந்தேன்….!!
“மக்கள் அமைதியாக தங்கள் இடத்திலேயே
அமரவும். முதல்வர் அவர்கள் அடிக்கல் நாட்டி விழாவை துவக்கி வைக்கப் போகிறார்” என்று…..!!!

யார் கேட்கிறார்கள்…..?
( ஆர்கேசி அவசரம் அவர்களுக்கெப்படி தெரியும் …? )

இவர் ஒவ்வொரு பக்கமாகச் சென்று கைகளை வீசிக்காட்ட, மக்கள் ஆரவாரம் செய்ய கொஞ்ச நேரம் ஒரே அமர்க்களம் தான்.
– மணி 4.25, 4.30 எல்லாம் தாண்டி விட்டது.
இதற்குள், விசேஷ அழைப்பாளர்கள் எழுந்து நிற்க,
அவர்களில் தனக்குத் தெரிந்த சில காங்கிரஸ்
தலைவர்களைக் கண்டு ஓரிரு நிமிடங்கள் நின்று விசாரிக்க ஆரம்பித்து விட்டார்.

ஆக மொத்தம் ‘foundation stone’ அருகே எம்ஜிஆர்
சென்றபோது மணி 4.40….. பதிவு செய்யப்பட்ட நாதஸ்வர மேள ஓசை ஒலிபெருக்கியில்
ஒலிக்க அழகாக நல்ல ராகு காலத்தில்
புதிய தொழிற்சாலைக்கான அடிக்கல் நாட்டப்பட்டது.

முதல்வருடன் மேடையேறிய ஆர்கேசி அவர்களின்
கண்களை சந்திப்பதைத் தவிர்த்து விட்டு, மேற்கொண்டு
விழா நிகழ்ச்சிகளை விடுவிடுவென்று தொகுக்க ஆரம்பித்தேன்.

4.40 மணியளவில் துவங்கிய விழா சுமார் 5.45 மணியளவில் – ( ராகு காலத்தில் துவங்கி ராகுகாலத்திலேயே ) நிறைவுபெற்றது…!!

ஒருவழியாக கூட்டமும் கலைந்து,
விஐபி க்கள் எல்லாரும் சென்ற பிறகு மேடையின் கீழே
போடப்பட்டிருந்த நாற்காலிகளில், நாங்கள் (விழா ஏற்பாட்டில் ஈடுபட்டு இருந்தவர்கள் ) கொஞ்சம் ரிலாக்ஸ்டாக உட்கார்ந்தோம். குளிர் பானங்களுக்கு ஏற்பாடு பண்ணி இருந்தேன்.

ஆர்கேசி அங்கே வந்தார்.

விழா முடிந்த நிம்மதி அவரிடத்தே இருந்தாலும்,
ராகுகாலம் சமாச்சாரம் அவரை உறுத்திக்கொண்டு இருந்தது.
“என்னப்பா – கடைசீல புது ப்ராஜக்டுக்கு ராகுகாலத்துல போய் ‘foundation stone’ போட்டிருக்கோமே” …என்றார்.

நான் அவரைத் தேற்றும் விதமாக –
“கவலையே படாதீங்க சார் – ராகு காலம் எல்லாம்
முடிஞ்சப்புறம் தான் பங்ஷன் நடந்துருக்கு” என்றேன்.

“ஏய் – என்ன சொல்ற நீ “ – அவர்.

“சார் நாம்ப ‘foundation stone’ போட்டபோது
சிங்கப்பூர் டைம்படி மணி ராத்திரி 7.10.
ராகு காலம் தான் 6 மணிக்கே முடிஞ்சு
போச்சே ” – இது நான்.
(அதற்கு முந்திய மாதம் தான் நான் சிங்கப்பூர் போய்
வந்திருந்தேன் ….!)

ஒருக்கணம் திகைத்தவர் – “ஒதைக்கணும் ஒன்னை” என்று சொன்னாலும், அவரது கண்களில் கொஞ்சம் நிம்மதியையும், ஒரு வித திருப்தியையும் என்னால் உணர முடிந்தது……
( அவரை அந்த நிலையில் இப்போது மீண்டும் நினைத்துப்பார்க்கும்போது மேஜர் சுந்தரராஜனின்
“படவா ராஸ்கல்” தான் என் நினைவிற்கு வருகிறது …)

இப்போது எல்லாவற்றையும் மீண்டும் நினைத்துப்
பார்க்கிறேன். அரசாங்கங்களுக்கு ‘ஆர்கேசி சார்’ போன்ற உன்னத அதிகாரிகள் மிக அபூர்வமாகவே கிடைப்பார்கள்.

அத்தகைய அற்புதமான அதிகாரிகளுக்கு
இந்த வலைத்தளத்தின் மூலம் … ஒரு சல்யூட்……

 

————-

பின் குறிப்பு –

இந்த விழா தொடர்பாக இன்னும்
ஏகப்பட்ட “களேபரங்கள் ” நடந்தன.
இந்த தலைப்பிற்கு தேவையான விஷயங்களை
மட்டும் தான் இங்கே சொல்லி இருக்கிறேன்.

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

16 Responses to ( மூன்றாவது இறுதிப் பகுதி ) எம்ஜிஆரும், ராகு காலமும், நடுவில் சிக்கிய நானும்……

 1. thumbiNerkuppai Thumbi சொல்கிறார்:

  விழா நல்ல விதமாக நடந்தேறியதற்கு மகிழ்ச்சி.
  சரி. நான் நம்ம ஊர் ராஹு காலம் பார்ப்பவர்கள் ஆயிற்றே? அறியவேண்டுமென்ற ஆவல்: அந்த தொழிற்சாலை நிறுவப்பட்டதா? நன்கு நடந்து வருகிறதா? அதாவது ராஹு காலம் ஒன்றும் செய்யவில்லை? (சூரியூர் தொழிற்சாலை பற்றியதா? அல்லது அதன் விரிவாக்கமா?)

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   நண்பரே,

   ராகு காலத்தில் தொடங்கப்பட்ட அந்த தொழிற்சாலை
   ஏகப்பட்ட தடங்கல்களை எதிர்கொண்டு, தாண்டிய பிறகு –
   நன்கு இயங்கி வருகிறது.
   ஆனால் -அந்த தடங்கல்களுக்கு காரணம் – ராகு காலம் தான்
   என்று நான் சொல்ல மாட்டேன் …..!!!

   -வாழ்த்துக்களுடன்,
   காவிரிமைந்தன்

 2. gopalasamy சொல்கிறார்:

  Very intersting; Your narration is simply superb. But it is not complete.
  1. whether you got any oppotunity to talk with MGR? How was his temperment?
  2. What happened to that industry? Is it still running?
  3, Whether RV paid a visit later?

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   thank you Mr.Gopalasamy.

   I could just have some formal talks with MGR in the
   stage reg. the programme only.

   He was very brisk and fast as he uses to be
   in public functions.

   RV became Vice President within a few months.
   He never visited the new project.

   with all best wishes,
   Kavirimainthan

 3. ramanans சொல்கிறார்:

  ராகு காலத்தில் ஆரம்பித்தால் எந்தக் காரியமும் நாசமாகி விடும் என்பதெல்லாம் சுத்த மூட நம்பிக்கை. ராகு காலத்தில் செய்யப்படும் (ராகு சம்பந்தப்பட்ட ) சில விஷயங்கள் நல்ல வெற்றியைத் தரும்.

  குறிப்பாக கல், க்ரானைட், குவாரி, க்ரஷர், துப்பாக்கி எல்லாம் ஒருவிதத்தில் ராகு + செவ்வாய் சம்பந்தப்பட்டவையே. அவற்றின் பலம் மிகுந்த எம்ஜிஆர் அவர்களால் அது மிகச் சரியாக அந்த நேரத்தில் துவக்கப்பட்டிருப்பது மென்மேலும் வளர்ச்சியையே தந்திருக்கும் என்பது என் அனுமானம்.

  நல்லதொரு பதிவிற்கு நன்றி ஐயா. வணக்கம்.

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   வருக நண்பர் ரமணன்,

   நீண்ட நாட்களாயிற்று நீங்கள் இந்தப்பக்கம் வந்து.
   உங்களைக் காண மகிழ்ச்சி.

   என்னைப் பொருத்த வரையில்,
   இறை சக்தியை உண்மையாக நம்புகிறேன் –
   ராகு காலத்தை விட
   கடவுளின் கருணை பெரிதென்று நம்புகிறேன்.
   எனவே ராகுகாலத்தைப் பற்றி
   கூடிய வரையில் நினைப்பது இல்லை.

   -வாழ்த்துக்களுடன்,
   காவிரிமைந்தன்

   • ramanans சொல்கிறார்:

    சார்…

    நலம் தானே!

    நான் தினமும் வந்து பார்த்து, படித்துக் கொண்டுதான் இருக்கிறேன். பின்னூட்டம் இடாமல் அவசரத்தில் சென்று விடுவேன்.

    மற்றபடி நான் உங்களை ராகுகாலத்தை நம்புபவர் என்ற பொருளில் சொல்லவில்லை. பொதுவாக அந்த நம்பிக்கை உள்ள மனிதர்களைப் பற்றியே சொன்னேன்.

    நிறைய எழுதுங்கள். நன்றி

 4. சைதை அஜீஸ் சொல்கிறார்:

  நான் எம்ஜியார்-தான் ராகு காலத்தில் வரமாட்டேன் என்று சொல்லிவிட்டாரோ என்று எண்ணிக்கொண்டிருந்தேன். கடைசியில் ஆர்கேசி சாருக்குத்தான் அந்த பிரச்சனையோ? அது எப்படி காமை-சார் சிலருக்கு பலவிஷயங்கள் மறந்தாலும் இவை மட்டும் ஞாபகத்தில் இருப்பது? எப்படியோ நிகழ்ச்சி நல்லபடியாகவும் அமைதியாகவும் முடிந்ததில் மகிழ்ச்சி. இந்த தொடர் சீட்டின் நுனியில் அமர்ந்து படம் பார்க்கும் அனுபவத்தை தந்தது. பல திகில் காட்சிகள் (உங்களுக்குத்தான்) கொண்ட ஒரு அனுபவத்தை எங்களோடு பகிர்ந்ததில் மட்டற்ற மகிழ்ச்சி.

  கடைசியாக, இங்கு பின்னூட்டமிட்டவர்களில் பலருக்கு உள்ள சந்தேகம்: அந்த தொழிற்சாலை எப்படி ஓடுகிறது(தா?)

  எத்தனை பெரியார் வந்தாலும் மாறவேமாட்டார்கள் போல! ராக்கேட் விடும்போதே தேங்காயை உடைப்பவர்களாயிற்றே நாம்தான்.

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   நண்பர் அஜீஸ்,

   உங்களுக்கு பதிலளிக்கப் போனால்,
   நீண்டு விடும். பின்னர் சமயம் வரும். பேசுவோமே….

   -வாழ்த்துக்களுடன்,
   காவிரிமைந்தன்

 5. todayandme சொல்கிறார்:

  இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்து
  அதனை அவன்கண் விடல்.

  //முதலமைச்சர், பாதுகாப்பு அமைச்சர் ஆகிய 2 விவிஐபி-க்கள் வருவதால், நிகழ்ச்சி ஏற்பாடுகள் மிகச்சிறப்பாக அமைய வேண்டும். எவ்வளவு பேரை வேண்டுமானாலும் உதவிக்கு அழைத்துக்கொள் -என்றார் ஜி.எம்.
  நிறைய பேருக்கு பொறுப்புகள் பகிர்ந்தளிக்கப்பட்டன.
  நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் மேடை நிர்வாகம் ( master of ceremony ) என் பொறுப்பு… //

  அந்நாளைய ஜி.எம். அவர்களுக்கு நன்றி… இன்று ஒரு பதிவை உருவாக்கிட உதவியாக இருந்ததற்காக.

  இந்தப் பதிவிலுங்கூட, தேசிய அளவிலான நிகழ்வை-நடந்தவிதத்தை – பொதுவில் சொல்லும்போது பாதகங்கள் இல்லாதவண்ணம் எவற்றைச் சொல்லலாம், எந்த அளவிற்குச் சொல்லலாம், அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டியவைதானா, போன்றவற்றை ஆய்ந்து தெளிந்து, சுவைபடக் கூறியமைக்கு கா.மை. அவர்களுக்கு நன்றி.

  பின்னூட்டத்தில் அனைவரும் கவலைப்படுவதுபோல அல்லாமல், உங்கள் எடிட்டிங் திறமையைக் கண்டு வியக்கிறேன். எதை, எங்கே, எவ்வளவு சொல்லவேண்டும் என்ற அளவினைக் கண்டு மகிழ்கிறேன்.

  உங்கள் அனுபவங்கள் எங்கள் பாடங்கள். இவ்வனுபவத்தின் வழி அனைவரும் கற்றுக்கொள்ளவேண்டியவை பல.

  நன்றிகள். இன்னும் பல அனுபவங்கள் தொடரட்டும்.

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   நண்பரே (today and me ),

   என் எழுத்தை விட, அதை நீங்கள் எடை
   போட்டிருக்கும் திறன் பிரமாதம்….

   உங்கள் நல்லெண்ணங்களுக்கு நன்றி.
   நான் கொடுத்து வைத்தவன் – பல நல்ல
   உள்ளங்களை இந்த வலைத்தளம்
   எனக்கு அறிமுகப்படுத்தி இருக்கிறது.

   -வாழ்த்துக்களுடன்,
   காவிரிமைந்தன்

 6. todayandme சொல்கிறார்:

  பதிவு-1ல் புகைப்படத்தில் நடுவில் சிக்கிவிட்டீர்களோ என்று எதிர்பார்த்தேன்…

  ஒவ்வொருவர் எதிர்பார்ப்பையும் மாற்றி புதிய க்ளைமேக்ஸ்-ஐக் கொடுத்து

  ‘சுபம்’ கார்டு போட்டுவிட்டீர்கள்.

  🙂

 7. Ganpat சொல்கிறார்:

  நம் மாநிலத்திற்கே 1967 மார்ச் முதல் மெகா ராகு காலம் தொடர்ந்து நடக்கும்போது இந்த மினி ஒண்ணரை மணி நேர ராகு காலம் என்ன செய்து விடும்.??
  மற்றபடி உங்கள் பதிவு மிக சுவாரசியம்.
  திரு கோபாலசாமியின் சந்தேகங்களே எனக்கும்.

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   கண்பத்,

   உங்களுக்கு பதிலளிக்கும்போது,
   அநேகமாக எல்லா வினாக்களுக்கும்
   ஏற்கெனவே விடை கிடைத்திருக்கும்…..

   ஒரு விஷயம் – தொடர்ந்த ராகுகாலம்
   என்பதை என்னால் ஏற்க முடியவில்லை.

   இடையிடையே சில வசந்த காலங்களும்
   இருக்கத்தானே செய்தன …….!!! ???

   -வாழ்த்துக்களுடன்,
   காவிரிமைந்தன்

 8. gopalasamy சொல்கிறார்:

  My family also have belief in rahu kaalam. By heritance, i also will not start anything at that time.
  But, we will see at what time we leave our house only. It means starting time. So, according to our belief, Sri RKC, you and MGR did not leave the houses during rahu kaalam.
  What is the condition of small arms factory in Trichy? If anybody having information pl share.

 9. Sanmath AK சொல்கிறார்:

  KM Sir,

  Your narration is simply superb….. Also the way you have put things about a government function is awesome….. As like Mr.Ajees, I too initially felt that MGR might have refused bcoz of ragukalam……. as u said in the first comment, hope that factory is still functioning well…… for young guys like me, your experience will be examples……share more like this……

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.