துக்ளக் ஆசிரியர் ‘சோ’ – “கருணைக்கொலை” குறித்து கூறுவது …..மகிழ்ச்சி அளிக்கிறது….!!

sethu poga uthavuvome...

 

மிக முக்கியமான ஒரு விஷயம் ஜூலை மூன்றாவது
வாரத்தில் உச்சநீதி மன்றத்தின் (சுப்ரீம் கோர்ட்) முன்
விசாரணைக்கு வந்தது.

உடல் உறுப்புகள் அனைத்தும் செயலிழந்த பிறகும்,
இறக்காமல் நீண்ட காலமாக அவதிப்படுகிறவர்களை,
குணமடைய வாய்ப்பே இல்லாமல், செயற்கை கருவிகளின் உதவியால் உயிர் பிழைத்திருக்கும் நிலையில் இருப்பவர்களை,

கருணைக்கொலை செய்ய அனுமதி கேட்டு ஒரு மனு
சுப்ரீம் கோர்ட் முன் வந்தது.

மத்திய அரசின் வழக்கறிஞர் முதல் நிலையில், இதைத்தீவிரமாக
எதிர்த்தார். பின்னர் இது குறித்து கருத்து சொன்ன மத்திய அரசு, இந்த விஷயத்தைக் குறித்து சரியான முடிவெடுக்கும் இடம் பாராளுமன்றமன்றமாகத் தான் இருக்க முடியும் என்றும் கோர்ட் இது விஷயத்தில் தலையிடக்கூடாது என்றும் சொன்னது.

உச்சநீதிமன்றம் இது குறித்து மாநில அரசுகளின் கருத்து கேட்டு அனைத்து மாநிலங்களுக்கும் நோட்டீஸ் அனுப்பி இருக்கிறது. வழக்கு இன்னும் விசாரணை நிலையில் இருக்கிறது.

கடந்த வாரம், இது குறித்து துக்ளக் ஆசிரியர் ‘சோ’ அவர்கள் தன் கருத்தை தெரிவித்திருக்கிறார் –

—————

– கோர்ட் தலையிட்டு ஒரு உத்திரவைப் பிறப்பித்து
அதன் மூலம் கருணைக்கொலைகளை சட்டரீதியாகச்
செய்ய முயற்சி நடக்கவில்லை. இது பற்றி ஒரு
விவாதம் தொடங்க நீதிமன்றம் கூறிய கருத்துக்கள்
உதவியிருக்கின்றன. அவ்வளவு தான்.

கருணைக்கொலை என்பது சிலருக்கு மிகவும் உதவக்கூடிய விஷயம் என்பதை மறுப்பதற்கில்லை.

உடல் நலம் சீரடைய வழியில்லை; உபாதைகளைத்
தந்து கொண்டிருக்கிற வியாதிகளின் தீவிரமும் குறைய
வாய்ப்பில்லை; செயற்கையாக இதயத்துடிப்பை மட்டும்

நீட்டித்துக்கொண்டு, எந்த வகையிலும் செயல்படாத
நிலையில் நோயாளியை அப்படியே வைத்திருப்பது
என்பது மருத்துவ ரீதியாக நடக்கக்கூடியதே;
அப்படி நடந்தும் வருகிறது.

இந்த நிலையை பலர் விரும்புவதில்லை.
அம்மாதிரி விரும்பாதவர்களுக்கு
சில கட்டுப்பாடுகளை விதித்துச் செயற்கை நீட்டிப்பை
துண்டித்து விடலாம் என்பது தான் கருணைக்கொலை.

ஆனால், இதில் வேறு சில ஆபத்துகளும் இருக்கின்றன.
“நோயாளிதான் விரும்பினார்” என்று சொல்லிகொண்டு
மற்ற சிலர் யாராவது இந்த முடிவை எடுத்து விடலாம்.
அப்போது அது கொலையே ஆகி விடக்கூடிய ஆபத்தும்
இருக்கிறது. உறவினர்களுக்குள் ஏற்படும் பகைமையின்
காரணமாக இந்த வாய்ப்புகள் பயன்படுத்தப்படலாம்.

இதற்கெல்லாம் இடம் இல்லாத வகையில், கடுமையான மேற்பார்வையின் கீழ் இதில் ஒரு வசதி செய்யப்பட்டால் அதில் தவறில்லை என்று நான் நினைக்கிறேன்.

—————-

பொதுவாக “பழமையாளர்” ( கன்சர்வேடிவ்) என்கிற
இமேஜைக் கொண்டிருக்கிற ஆசிரியர் ‘சோ’ அவர்கள்
‘கருணைக்கொலை’ க்கு இந்த அளவு ஆதரவாக கருத்து கூறியிருப்பது எனக்கு மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது.

பாராளுமன்றத்தில் பேசி முடிவெடுக்கிறோம் என்று
மத்திய அரசு கூறுவது
கதைக்கு உதவாத விஷயம்.
40 ஆண்டுகளாக மகளிர் இட ஒதுக்கீட்டையே
கிடப்பில் போட்டு வருபவர்கள் இதில் என்ன தீவிரம்
காட்டப் போகிறார்கள் ….?

சிறந்த வழி –

இந்த விஷயம் மக்கள் முன் விரிவான விவாதத்திற்கு
வைக்கப்பட வேண்டும். அவர்கள் அச்சம் போக்கப்பட வேண்டும்.

சமூக அமைப்புகளின் மூலம், வலைத்தளங்கள் மூலம்,
தொண்டு நிறுவனங்களின் மூலம்
நாடு முழுவதும் மக்களின் கருத்துக்களைப்
பெற்றும், ஊடகங்களின் மூலம் விவாதங்கள் நடத்தியும்
கூடிய வரை தகுந்த கட்டுப்பாடுகளுடனும்,
உரிய மேற்பார்வை அமைப்புகளின் மூலமும்
இந்த கருத்தை நடைமுறைக்கு கொண்டு வர ஆதரவான ஒரு நிலை எடுக்கப்பட வேண்டியது அவசியம்
.

இந்த விஷயம் பாராளுமன்றத்தில் விவாதிக்கப்படும் முன், பொது மக்களிடையே கருத்தொற்றுமை உண்டாக்கப்பட வேண்டும். அப்போது தான் மத்திய அரசு விஷயத்தை கிடப்பில் போடாமல் உரிய சட்டங்களை முனைப்புடன் கொண்டு வரும்.

பின்குறிப்பு –

“செத்துப் போவதற்கு உதவி !”

-என்கிற தலைப்பில் இந்த “கருணைக்கொலை” பற்றி
நீண்ட நாட்களுக்கு முன்னர் விமரிசனம் வலைத்தளத்தில் ஒரு இடுகை வந்தது.
அதை இங்கு இணைப்பதன் மூலம்,
இந்த விஷயத்தின் தீவிரத்தை, அவசியத்தை,
படிப்பவர்கள் மனதில் ஆழப் பதியவைக்க முடியும்
என்று நம்பி, அதனை கீழே தருகிறேன்…..

————-

நீண்ட நாட்களாக ஒரு விஷயம் என் மனதில்
உறுத்திக்கொண்டே இருக்கிறது. நாளையோ,
எதிர்காலத்திலோ – எனக்கும்,
இதைப் படிக்கும் வேறு யாராவது ஒருவருக்கும் கூட
அந்த நிலை வரலாம் என்பதால் நான் என்
எண்ணத்தை இங்கு வெளிப்படையாகப் பதிவு செய்ய
விரும்புகிறேன்.

என்னைப் பொறுத்த வரை, நான் நல்லபடியாக
இயங்கும் வரை – என் சுய தேவைகளை நானே
பூர்த்தி செய்துக் கொள்ளக்கூடிய நிலையில்
இருக்கும் வரை தான்
உயிருடன் இருக்க விரும்புகிறேன்.
அடுத்தவர் உதவி இன்றி என்னால் இயங்க இயலாது
என்கிற நிலை ஏற்படுமானால், நான் என் இயக்கத்தை
நிறுத்திக்கொள்ளவே விரும்புவேன்.

நீண்ட நாட்களாக என் மனதில் இருந்ததை
இப்போது எழுதத் தூண்டியது சில தினங்களுக்கு
முன் நடந்த ஒரு நிகழ்ச்சி.

நண்பர் அல்ல. ஆனால் எனக்குத் தெரிந்த
ஒருவர், எண்பது வயதைத் தாண்டியவர்.
முதுமையால் ஏற்பட்ட தளர்ச்சி காரணமாக மிகவும் தள்ளாமையுடன் காணப்படுவார்.
அவரது மனைவி, அவரை விட 5 வயது குறைந்தவர்.
கடந்த 4-5 ஆண்டுகளாக உடல்நலக்குறைவால்
அவதியுற்று வந்தார்.
கிடைக்கும் பென்ஷனை வைத்துக்கொண்டு இருவரும்
காலந்தள்ளிக் கொண்டிருந்தார்கள். அவர்களை
கவனித்துக் கொள்ளும் அளவிற்கு நெருங்கிய
சொந்தம் யாரும் இல்லை.

கடந்த 6 மாதங்களாக மனைவி படுத்த படுக்கையானார்.
அவர் மீண்டும் எழுந்து நடமாட முடியாத அளவிற்கு
குணப்படுத்த முடியாத நோய். திடீரென்று ஒரு தகவல் கிடைத்தது. சென்று பார்த்தேன்.
வலியும் வேதனையும் தாங்க முடியாத
அந்த மூதாட்டி தன் வேதனையைப் பொறுக்க
முடியாமல், தான் இனி வாழ விரும்பவில்லை
என்றும் தனக்கு விஷம் கொடுத்து விடுதலை
கொடுக்கும்படியும் தன் கணவரிடம் வேண்டி
இருக்கிறார்.

மனைவி படும் துயரை சகிக்க முடியாத
அந்த முதியவர், மனைவிக்கு அவர் விரும்பியபடியே
விஷம் கொடுத்து விட்டார்.
போலீசுக்கும் போன் செய்து அந்த தகவலைக்
சொல்லி விட்டு அவர்கள் வருகைக்காக அமைதியாகக்
காத்திருந்தார் !

என் இதயத்தை என்னென்னவோ செய்தது
இந்த நிகழ்வு. அந்த மூதாட்டிக்கு இதைத் தவிர
வேறு நல்ல நிவாரணம் கிடையாது – உண்மை.

ஆனால் – அவதிப்படும் மனைவிக்கு நிவாரணம்
கிடைக்க வேண்டும் என்பதற்காக செய்த செயலால்
அந்த முதியவர் இனி படப்போகும் துன்பங்கள் ?

(“நான் கடவுள்” என்கிற திரைப்படத்தில் –
இயக்குநர் பாலா கிட்டத்தட்ட இது போன்ற
நிகழ்ச்சியை உருவாக்கி இருந்தார் )

(பின்னர், கூட இருந்து, அந்த முதியவர் சட்டச்சிக்கலில்,
வழக்கில் சிக்காமல் இருக்க என்னால் முடிந்த
சிறிய உதவியைச் செய்தேன் – அதை இங்கு எழுத
இயலாது – மன்னிக்கவும். )

கருணைக் கொலை (EUTHANASIA) என்பதை
சட்டபூர்வமான நடவடிக்கையாக்க வேண்டும்
என்று உலகில் பல பகுதிகளிலும் மனித நேய
உணர்வாளர்கள் வற்புறுத்தி வருகிறார்கள்.

உலகில் இது வரை ஒரே ஒரு இடத்தில் மட்டும் தான் –
அமெரிக்காவில் உள்ள ஒரேகான் மாகாணத்தில்
மட்டும் தான் கருணைக்கொலை சட்டபூர்வமாக்கப்
பட்டிருக்கிறது.

அனைத்து நாடுகளுக்கும், பல விஷயங்களில்
முன் மாதிரியாகத் திகழும் ஸ்விட்சர்லாந்து
நாட்டில் கருணைக்கொலையை சட்டபூர்வமாக்காமல்
ஒரு நோயாளி தன்னைத் தானே சாகடித்துக்கொள்ள
உதவுவதை சட்டபூர்வமாக்கி இருக்கிறார்கள்.

அதாவது, சரியான மனோநிலையில் உள்ள,
குணப்படுத்த இயலாத நோயால் வாடும் ஒரு
நோயாளிக்கு, அவர் விரும்பினால், ஒரு
தகுதி வாய்ந்த மருத்துவர் அவர் சுலபமாகச்
சாவதற்குரிய வழியை பரிந்துரைக்கலாம்.
இதில் சாவிற்குரிய மருந்தை நோயாளி
தன் கையாலேயே உட்கொள்ள வேண்டும்.

ஐரோப்பாவில் ஸ்விட்சர்லாந்து நாட்டில் மட்டுமே
இந்த சட்டபூர்வமான தற்கொலை அனுமதிக்கப்
பட்டிருப்பதால், பல நாடுகளிலிருந்தும்
தீராத நோய் உடையவர்களுக்கு ஸ்விட்சர்லாந்தே
புகலிடமாகி விடுகிறது.

டெத் வித் டிக்னிடி ஆக்ட் –

இத்தகைய போக்கைத் தடுக்க, இங்கிலாந்து
நாடு இப்போது உதவி செய்யப்பட்ட சாவை
சட்டபூர்வமாக்கும் பணியைத் துவங்கி இருக்கிறது.

இங்கிலாந்து சட்ட மேல் சபை முன்னாள் தலைவர்
சார்லஸ் பால்கனர் என்பவரது தலைமையில்,
ஒரு குழு இதற்கான பரிந்துரைகளை ஆராய்ந்து
பரிந்துரைக்க உருவாக்கப்பட்டிருக்கிறது.
2011 -ல் இங்கிலாந்து நாட்டில் இது
சட்டபூர்வமாக்கப்பட்டு விடும் என்று
எதிர்பார்க்கப்படுகிறது.

“கௌரவமாகச் சாக அனுமதி”(DIGNITY in DYING)
என்று ஒரு இயக்கம் இதற்காக மிகத்தீவிரமாக
ஆதரவைத் தேடி பிரச்சாரம் செய்து கொண்டிருக்கிறது.

இப்போது சுவிஸ் நாட்டில் இருக்கும் முறைப்படி –
தான் மேற்கொண்டு வாழ விரும்பவில்லை என்றும்,
தான் சாவதற்கு சட்டபூர்வமாக உதவி செய்யும்படியும்,
15 நாட்கள் இடைவேளையில் இரண்டு முறை
நோயாளி டாக்டரை கேட்டுக்கொள்ள வேண்டும்.
சொந்தமாக எழுதிக்கொடுக்க வேண்டும்.
சம்பந்தப்பட்ட நபர் தீராத நோயால்(குணப்படுத்த
முடியாத நோயால் ) வேதனைப்படுபவராக
இருக்க வேண்டும்.

தீராத நோயால் வாடுபவர்களுக்கு விமோசனம் அளிக்கும் வகையில், வலி இல்லாமல் சுலபமாக சாவை அளிக்கும் இத்தகைய சட்டம் ஒன்று இந்தியாவிலும் வருவதற்கான முயற்சிகளை யாராவது துவக்கினால் தேவலை.

இது தவறாகப் பயன்படுத்தப்படாமல் இருக்க
தேவையான பாதுகாப்பு முறைகளை யோசித்து,
நிபுணர்களின் உதவியுடன் ஒரு சட்டத்தை உருவாக்கலாம்
.

முதல் படியாக – இத்தகைய கருத்தை மக்கள்
திறந்த மனதுடன் அணுகக்கூடிய இணக்கமானதொரு
சூழ்நிலையை ஏற்படுத்த வேண்டும்.

முயற்சியைத் துவக்கலாமா ?

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

11 Responses to துக்ளக் ஆசிரியர் ‘சோ’ – “கருணைக்கொலை” குறித்து கூறுவது …..மகிழ்ச்சி அளிக்கிறது….!!

 1. Srinivasanmurugesan சொல்கிறார்:

  இதனை செயல்படுத்துவற்கு மிக கடுமையான இதயம் வேண்டும்

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   இல்லை நண்பரே…
   அவதிப்படுபவரின் துன்பத்தைக் கண்டு
   நெஞ்சில் இரக்கம் கொள்ள வேண்டும்.

   அவர் துன்பத்தைப் போக்க
   நாம் உதவி செய்கிறோம் –
   அவ்வளவு தான் ….

   -வாழ்த்துக்களுடன்,
   காவிரிமைந்தன்

 2. chandraa சொல்கிறார்:

  practically this may not be possible to many people in civilised circle. already old sick people are done to death to enable their sons to get his job under COMPASSIONATE GROUNDS. what a compassion……

 3. Ganpat சொல்கிறார்:

  ஒரு வித்தியாசமான இடுகை..நாம் பல பத்தாண்டுகள் தள்ளி இருக்கிறோம்.
  1.பலகொலைகள் செய்து நிரூபிக்கபட்டவர்களையே தூக்கில் போடக்கூடாது எனும் சமூகம் இதை எப்படி ஏற்றுகொள்ளும்?
  2.”கருணை கொலை” என்பதே oxymoron என்பதால் “தன்னார்வ உயிர் நீக்கல்” என சொல்லலாம்.மக்களிடம் விளக்க எதுவாக இருக்கும்.
  3.பெற்றோர்களை நேசிக்கும் மகனோ மகளோ இதற்கு அவ்வளவு எளிதாக உடன்படமாட்டார்கள்.மாறாக அவர்களை வாழ்நாள் முழுதும் அலட்சியம் செய்த புதல்வர்கள் அவர்களின்(பெற்றோர்) கடைசி ஆசையையாவது(“வலி தாங்கலபா! என்ன சீக்கிரம் கூட்டிக்கோ”) நிறைவேற்றி வைக்க இது உதவும்.
  4.திரு.சோ.ராமசாமி ஒன்றை ஆதரித்தால் அதன் கதி என்ன என நாம் அறிவோம்.
  5.’ணை’ யை மாற்றி ‘ணா’போட்டால் ஒருவேளை மாநில அரசி(யி)ன் ஒப்புதலை பெற முடியலாம்.

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   கண்பத்,

   உங்கள் 5வது யோசனை …..
   இருந்தாலும் இவ்வளவு பயங்கரமான
   ஆசைகள் உங்களுக்கு கூடாது….!

   தலைப்பு பற்றி –

   நான் முன்பு எழுதிய இடுகைக்கு
   “செத்துப் போக உதவி”
   என்று தான் தலைப்பு வைத்திருந்தேன்.
   (மேலே கூட காணலாம் …)

   நான் இடுகையை எழுதும்போதே இதைப்பற்றி
   எழுத வேண்டும் என்று தான் நினைத்திருந்தேன்.
   ஆனால் – விடுபட்டு விட்டது.

   ஆமாம் – கடைசியில் நீங்கள் எனக்கு ஆதரவா
   இல்லையா என்று சொல்லாமல் விட்டு
   விட்டீர்களே …..!

   -வாழ்த்துக்களுடன்,
   காவிரிமைந்தன்

   • Ganpat சொல்கிறார்:

    நண்பரே!
    முழுமையாக ஆதரிக்கிறேன்.
    நம் தளத்தின் கொள்கைக்கான “இன்றில்லா விட்டாலும் நாளையாவது மாறும் அல்லவா ?” பட்டியலில் மேலும் ஒன்று கூடுகிறது.
    வணக்கம்.

 4. gopalasamy சொல்கிறார்:

  I accept your views 100 %. Now I am 65. Ialso dont want to live with some one’s support.
  What Sri Ganpath told to be considered. The name to be changed. ”கருணை கொலை” என்பதே oxymoron என்பதால் “தன்னார்வ உயிர் நீக்கல்” என சொல்லலாம்.மக்களிடம் விளக்க எதுவாக இருக்கும்.””
  The nurse who was raped by watchman in bomay hospital is “living” in very pathetical condition.
  மிக கடுமையான இதயம் வேண்டும், to see her condition.
  Sri, ganpath’s fifth point is superb.

  • Ganpat சொல்கிறார்:

   மிக்க நன்றி நண்பர் gopalasamy அய்யா!
   என்னைப்பொறுத்தவரை மிக பெரிய அதிர்ஷ்டசாலி என்பவர்..
   எழுபது வயது வரை,
   இரவு பத்து மணிக்கு படுத்தால்,
   உடனே ஆழ்ந்த உறக்கமடைந்து,
   காலை ஐந்துமணிக்கு எழவேண்டும்.
   எழுபது வயதிற்குப்பின், any day of HIS CHOICE,
   இரவு பத்து மணிக்கு படுத்தால்,
   பிறகு எழக்கூடாது!
   சற்று lighter side இல் முடிக்கிறேன்.
   ஒருவன் தவமிருந்து இறைவனிடம் வரம் கோரினான்..
   “சுவாமி! நான் கலியுகம் முடியும் வரை உயிர் வாழவேண்டும்!”
   இறைவன் சொன்னார்..”அது இயலாத காரியம்! வேறு எதாவது கேள்!”
   “சரி! நான் “நாதஸ்வரம்” சீரியல் முடியும் வரையாவது உயிர் வாழவேண்டும்!”
   “பக்தா என்ன இது ? நான் இந்த கலியுகமே முடியாதென்கிறேன்.நீ கிருத யுகத்திலும் வாழ ஆசைப்படுகிறாய்?”

 5. todayandme சொல்கிறார்:

  // நண்பர் கண்பத் // 70வயதுவரை மட்டுமல்ல உயிரோடிருக்கும் நாளெல்லாம் நான் அதிர்ஷ்டசாலியாகவே இருக்க ஆசைப்படுகிறேன். ஆனால் உங்களுடைய பாஷையில் துரதிர்ஷ்டம் என்னைத் துரத்துமேயானால் அதற்காக சாக ஆசைப்படாமல் இருக்கும்வரை மற்றவர்களுக்கு எந்தவிதத்திலாகிலும் உதவியாய் இருக்கவே ஆசைப்படுவேன்.

  // நண்பர் கோபாலசாமி // The nurse who was raped by watchman in bomay hospital is “living” in very pathetical condition. மிக கடுமையான இதயம் வேண்டும், to see her condition.

  இவள்மீது கருணை கொண்டு அந்த வாட்ச்மேனைக் கொலைசெய்து அதை வீடியோவாகக் காட்டினால் ஒருவேளை அந்த நர்ஸ் நிம்மதியாக, தானாவே போய்விடக்கூடும். நம் சட்டங்களால் நீதி(பதி)களால் மசோதாக்களால் இப்படி ஒரு உடனடித்தீர்வைக் கொண்டுவர இயலுமா? நிர்பயாக்களையே மசோதாவாக்க முயன்றுகொண்டிருக்கும் நம்மால்.

  // நண்பர் கா.மை // நான் மகனாகவோ மகளாகவோ இருந்தால் என் பெற்றோரை கருணைக்கொலை செய்வதற்கு முதலில் அவர்களையே சம்மதிக்கச்செய்யமாட்டேன். பிறகுதானே நானோ என்னைச் சார்ந்த மற்றவர்களோ. அவர்களுடைய இருப்பு என்பது மற்றவர்களுக்கு நான் உள்ளிட்ட அவரைச்சார்ந்த அனைவருக்கும் எவ்வளவு முக்கியம் என்பதைஉணரும்படியாகச் செய்வேன் – செய்திருக்கிறேன்.

  ஒவ்வொரு மனிதருக்கும் தான் மற்றவர்களுக்குத் தேவை என்கிறவரை ஓகே. ஒருவேளை தேவையில்லாமல் போய்விட்டோம் அல்லது புறக்கணிக்கப்படுகிறோம் என்கிற நிலை வந்துவிட்டாலே தனக்குள் இதுநாள்வரை பாதுகாத்துவைத்திருக்கிற ஈகோவிற்கு பலத்த அடிவிழுந்து விடுகிறது. தனக்கு முக்கியத்துவம் இல்லாத உலகிலே இருக்க விருப்பமில்லாமல் தற்கொலைக்குப் போய்விடுகிறார்கள்.

  மற்றவருக்குத் தேவையில்லாமல் போய்விட்டோம் அல்லது புறக்கணிக்கப்படுகிறோம் என்கிற நிலைக்கும்மேல் மற்றவருக்குத் தொல்லையாக இருக்கிறோம் அல்லது தொல்லையாக இல்லையென்றாலும் என்னால் வலியைப் பொறுத்துக்கொண்டு உயிர்வாழ இயலாது என்கிற நிலைக்குப் போய்விடுகிறவர்களுக்கு கருணையால் கொலையும் தன்னார்வ உயிர்நீக்கலும் சரி என்பதை என்னால் ஒப்புக்கொள்ள இயலவில்லை.
  ———————————————
  பிறப்பு மற்றும் இறப்பு தன்கையில் கிடையாது, ஆண்டவன் கையில்தான் உண்டு என்று நம்பும் கடவுள் நம்பிக்கை உள்ளவர்களுக்கு..

  தன் உடல் மீது மனிதனுக்கு உரிமை உள்ளது என்பதை ஒத்துக்கொள்ளுபவர், அந்தக் கடவுள் நம்பிக்கை அவர்களுக்கு தற்கொலைசெய்துகொள்ள தார்மீகமுறையாக சரிதானா என்பதை அறிகிறார்களா?

  தன்னுடைய துன்பத்தை சகிக்க இயலாதவர் தனது துன்பத்தைப் போக்க மற்றவர்களைக் கொலையாளி ஆக்க விரும்புவது ஏன்?

  பிறப்பு மற்றும் இறப்பு தன்கையில் தான். நாம் வாழும் விஞ்ஞான யுகத்தில் எதுவும் நம்மால் சாத்தியம், ஆண்டவனிடம் கிடையாது, என்றும் நம்பும் விஞ்ஞான நம்பிக்கை உள்ளவர்களுக்கு..

  அப்படி எதற்கும் உபயோகப்படாத உடம்பை (உயிரோடிருக்கும்) மருத்துவமனை மாணவர்களுக்கு படிப்புக்காக உதவும் பிராக்டிகல் மாடல் ஆக நான் இருக்க சம்மதிக்கிறேன் என்றோ அல்லது என் உடம்பில் உபயோகப்படுகிற ஸ்பேர்பாட்ஸ்ஸை மற்ற தேவைப்படுகிற மக்களின் பாடிகளில் ஸ்பேர்ஸ்-ஆக இருந்து உயிர்வாழ சம்மதிக்கிறேன் என்றோ ஏன் சிந்திப்பதில்லை.

  எதற்கும் சாவு ஒன்றுதான் தீர்வா?
  கூடாத ஒன்றின்மீது ஆசைப்படுவதே மனித மனத்தின் இயல்பு என்று அறிகிறேன்.

  ———————————————

  (பி.கு.1. உயிர்களைக் காப்பாற்ற என்றே மருத்துவத்தைப் படித்து அதன்படி செய்யமுயன்று பலவேளைகளில் முடியாமல்போய் விளைவாக உண்டாகும் பல டிப்ரெசன்களைத் தாண்டி, எல்லாம் கடவுள் கையில், நான் வைத்தியம் மட்டும்தான் செய்கிறேன் என்று சொல்லும் டாக்டர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.)

  (பி.கு.2. வறுமையில் வாடுவோர், தெருவோரங்களில் வாழ்வோர், மனநிலைசரியில்லாமல் உறைவிடமின்றி வெளியில் திரிவோர் என முறையான மருத்துவஉதவி கிடைக்காத நிலையில் இருப்பவர்கள் எத்தனையோபேர் தானாகவே இறந்துதான் போகிறார்கள். இதெல்லாம் கருணைத் தற்கொலை என்று கொள்ளலாமா?)

  (பி.கு.3. உயிரோடு இருக்கும்வரை அவர்களை பாதுகாப்பதற்கு நோயாளிக்கும் அவர்களைச் சார்ந்தோருக்கும் சிறப்பான கவுன்சிலிங் மாதிரி ஏதாவது ஏற்பாடு செய்யலாமா? அல்லது அரசே இதுபோன்ற சிறப்பு மருத்துவமனைகளை அமைக்கலாமா? அதாவது இப்படியாகப்பட்ட பிஸிக்கல் கண்டிசன்கள் இருந்தால் இனிமேல் நீ வைத்துப் பாதுக்காக்கத் தேவையில்லை, உன்னைப்பொறுத்தவரை அவர் இறந்துவிட்டார்-ஆனால் அவரை அரசாங்கம் வைத்துப் பாதுகாக்கும் என்று – அதிலும் ஒரு சிக்கல் – நோயாளி வாழ விரும்பவேண்டும். )

  அதற்கு அந்த நோயாளிக்கு ஒன்று வேண்டும் – நம்பிக்கை!

  கடவுள் இன்றில்லாவிட்டாலும் நாளை அதிசயமாய் என்னை மாற்றிவிடுவார் என்று. அல்லது விஞ்ஞானம் இன்றில்லாவிட்டாலும் நாளை வியக்கத்தக்கவகையில் வளர்ச்சியடைந்து என்னை பிழைக்கவைத்துவிடும் என்று.

  அதற்கு அந்த நோயாளியைச் சார்ந்தோருக்கு ஒன்று வேண்டும் – அன்பு!

  அந்த அன்பு இல்லாவிட்டால் அலெக்சாண்டர் பிளெமிங்கோ இருந்திருப்பார், பெனிசிலியம் நொடேடம் இருந்திருக்கும். பல்லாயிரம் போர்வீரர்கள் உயிர்காத்த பெனிசிலியம் இருந்திருக்காது.

  அந்த அன்பு இல்லாவிட்டால் வெறும் தெரசா தான் இருந்திருப்பார். அன்னை தெரசா உருவாகியிருக்கமாட்டார்.

  அந்த அன்பு இல்லாவிட்டால் வெறும் பிளாரன்ஸ் நைட்டிங்கேல் இருந்திருப்பார், கைவிளக்கு ஏந்திய காரிகை உருவாகியிருக்கமாட்டார்.

  அந்த அன்பு இல்லாவிட்டால் வெறும் ஐடா சோபியா ஸ்கடர் இருந்திருப்பார் டாக்டர் ஐடா ஸ்கடரோ சிஎம்சியோ உருவாகியிருக்காது.

  முத்துலட்சுமி ரெட்டி ஒரு டாக்டராகவோ அல்லது அரசியல்வாதியாகவோ அறியப்பட்டிருப்பார் புண்ணியகோட்டி முதலியார் இடத்தையும் பணத்தையும் வைத்து என்னசெய்வதென்று தெரியாமல் பிள்ளைகளுக்கோ மற்றவர்களுக்கோ விட்டுசென்று காணாமல் போயிருப்பார் . WHO ஆல் உலகளவில் முதல்தரமான மையம் எனப் பெயர்பெற்ற அடையாறு கேன்சர் இன்ஸ்ட்டிடியூட் உருவாகியிருக்காது.

  இறுதியாக நண்பர் காமை மற்றும் மற்ற நண்பர்களுடன் இந்தவிசயத்தில் நான் வேறுபடுவதில் மகிழ்கிறேன்.

  • Ganpat சொல்கிறார்:

   நண்பரே!
   உங்கள் நீண்ட இடுகையில் நான் புரிந்துகொண்டது நீங்கள் கருணைக்கொலை யை எதிர்க்கிறீர்கள்.மிக்க நல்லது,ஆனால் அதற்கான காரணங்களில் சில எனக்கு புரியவில்லை.
   ==இது நோய்வாய்பட்டவரின் நிலை,அவரை காக்க வேண்டிய உறவினர்களின் நிலை இருவரின் பொருளாதார நிலை இவற்றைப்பொருத்தே அமையும்.
   ==நீங்கள் விரும்பும் படி உலகெங்கும் அன்பும் நேர்மையும் சிரத்தையும் வியாபித்திருந்தால் நமக்கு துன்பங்கள் ஏது?அவை இல்லாத போதுதானே
   பிரச்சினைகளே உருவாகின்றன.
   =மற்றபடி அலெக்ஸ்சாண்டர் பிளமிங் ,தெரேசா,போன்றோருக்கும் கருணைக்கொலைக்கும் என்ன சம்பந்தம் என புரியவில்லை.
   முடிவாக..
   மகாத்மா காந்தியை கொலை செய்த கோட்சேக்கு தூக்குதண்டனை விதிக்கப்பட்ட தருணம்.அதைப்பற்றி மரண தண்டனை கூடாதென்று பாராளுமன்றத்தில் காரசாராமான விவாதம்..உள்துறை அமைச்சர் ராஜாஜி அமைதியாக கவனித்துக்கொண்டிருந்தார்.நேரு கவலையுடன் இருந்தார்.நிலைமை கட்டு மீறத் தொடங்க, ஒரு உறுப்பினர் எழுந்து முழங்கினார்.”காந்தி மட்டும் உயிருடன் இருந்திருந்தால் கோட்சேயை நிச்சயமாக மன்னித்திருப்பார்.!” இதற்காகவே காத்திருந்த ராஜாஜி துள்ளி எழுந்து சொன்னார்..”காந்தி உயிருடன் இருந்திருந்தால் நாங்களும் கோட்சேயை மன்னித்திருப்போம்”பலத்த கரகோஷத்திற்கிடையே தண்டனை ஊர்ஜிதப்படுத்தப்பட்டது.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.