விகடனின் விற்பனை உத்திகள் – எழுப்பும் சில கேள்விகள்… !!

 

vikatan add-1

(ஆனந்த) விகடன் குழுமம் ஆடி மாத விற்பனைக்கென்று
சில விசேஷ விற்பனைத் திட்டங்களை அறிவித்திருக்கிறது.

ஜூலை, ஆகஸ்டு மாதங்களில், 200 ரூபாய்க்கு மேல்
புத்தகங்கள் வாங்குவோருக்கென்று (ஒவ்வொரு 200 ரூபாய்க்கும் ஒரு பரிசுக் கூப்பன்…!) ஒரு பரிசுத் திட்டத்தை அறிவித்திருக்கிறது.

ஆகஸ்ட் 31 வரை புத்தகங்கள் வாங்குவோரில் 2500 பேருக்கு (குலுக்கல் முறையில் …?) மொத்தமாக 25 லட்ச ரூபாய் மதிப்பில் பரிசுகள் வழங்கப்போவதாக அறிவித்திருக்கிறது.

இந்த இரண்டு மாத புத்தக விற்பனையில் கிடைக்கும்
மொத்த லாபத்தையும் அவர்கள் வாசகர்களுக்கு பரிசாகவே அளித்து விடுகிறார்கள் என்றே வைத்துக் கொள்வோம்.

பொதுவாக, பதிப்பாளருக்கு ஒரு புத்தகத்தின் விலையில்
20 % லாபம் கிடைக்கும் என்று வைத்துக்கொள்வோம்.
100 ரூபாய்க்கு புத்தகம் விற்றால் 20 ரூபாய் லாபம் கிட்டும்.
அதாவது 20 ரூபாய் லாபம் சம்பாதிக்க வேண்டுமானால்,
100 ரூபாய் அளவிற்கு புத்தகம் விற்பனையாக வேண்டும்.
(ஒன்றுக்கு ஐந்து என்கிற விகிதத்தில் )

மொத்த பரிசுத்தொகையான 25 லட்சம் ரூபாயை
அவர்கள் லாபமாக சம்பாதிக்க 125 லட்சம் அதாவது
ஒன்றே கால் கோடி ரூபாய்க்கு புத்தகங்கள் விற்க வேண்டும்.

இந்த அளவிற்கு பிரம்மாண்டமான ஒரு திட்டத்தை
அறிமுகப்படுத்தி செயல்படுத்தும் முயற்சிக்கும்,
உழைப்பிற்கும், ஒரு 10 சதவீதமாவது கம்பெனிக்கு லாபம்
வேண்டாமா ….. ? எனவே இத்துடன் ஒரு 10 % ஐ கூட்டினால், 1.375 கோடி அதாவது ஒரு கோடியே, முப்பத்தேழரை லட்சம் ரூபாய்க்கு விற்பனையாக வேண்டும்….!

சென்னையில் ஆண்டுக்கு ஒரு முறை நடக்கும் புத்தக
கண்காட்சியில், சுமார் 600 புத்தக ஸ்டால்களின் மொத்த
விற்பனையே சுமார் 8 கோடி அளவிற்குத் தான்
என்று தெரிகிறது.

இரண்டு மாதங்களில், ஒரே ஒரு புத்தக வெளியீட்டாளரால்
இந்த அளவிற்கு விற்பனை செய்ய முடியுமா ….?
இது நடைமுறை சாத்தியமா ….?

இவ்வளவு பெரிய ஒரு டார்கெட்டை எடுத்துக் கொண்டு
உழைக்கும் விகடன் குழுமம் இந்த முயற்சியில்
வெற்றி பெற வாழ்த்துகிறேன்.

பொதுவாகவே தமிழில் வாசிப்போர் எண்ணிக்கை
மிகவும் குறைந்து விட்டது என்று
வருத்தப்படுவோர் நிறைய பேர்.

எழுத்தாளர்கள், முக்கியமாக நாவலாசிரியர்கள்
அடிக்கடி இந்த வருத்தத்தைப் பகிர்ந்து கொள்கிறார்கள்.

அதே போல், புதிதாக தமிழில் புத்தகங்களை
வெளியிடும்போது, ஒரு பதிப்பில் 1500
பிரதிகளுக்கு மேல் போட முடிவதில்லை –

அதைக் கூட அரசு நூலகங்கள் உதவினால் தான்
விற்க முடிகிறது என்று வருத்தப்படும் பதிப்பாளர்களும்
நிறைய பேர் இருக்கிறார்கள்.

இந்த விற்பனை விழா முடிந்த பிறகு, விகடன் குழுமம்
கீழ்க்கண்ட சில புள்ளி விவரங்களை வெளியிட்டால்,

அது இதர புத்தக வெளியீட்டாளர்களுக்கும், எழுத்தாளர்கள்,
நாவலாசிரியர்கள் மற்றும் வாசகர்களுக்கும் பெரும்
உதவியாக இருக்கும்…..

—–

1) அதிக பட்சமாக எந்தெந்த புத்தகங்கள்,
எந்த எண்ணிக்கையில் விற்பனை ஆயின…?

( டாப் டென் மட்டும் கூடப் போதும் )

2)பொதுவாக எந்தெந்த எழுத்தாளர்களின்
புத்தகங்கள் அதிகம் விற்பனை ஆயின …?

(இதிலும் டாப் டென் மட்டும் போதும் )

3) இரண்டு மாதங்களில் மொத்தம் எவ்வளவு
ரூபாய்க்கு விற்பனை செய்ய முடிந்தது …?

4) எத்தனை நபர்கள் புத்தகங்களை வாங்கினார்கள் ….?

விற்பனை முழுவதும் கணினிகளின் துணையோடு
நடைபெறுவதால், மேற்கண்ட விவரங்களை சேகரிப்பதில் அதிகம் சிரமம் இருக்காது என்று நம்புகிறேன்.

இந்த விவரங்களை விகடன் குழுமம் வெளியிடுவது
தமிழ்ப் புத்தகங்களின் பதிப்பு மற்றும் விற்பனையில்
வித்தியாசமான, புதிய அணுகுமுறை ஒன்று உருவாக
வழி கோலும்.

——————-

பின் குறிப்பு –

இந்த இடுகையின் பொருள் சில கேள்விகள்
எழுவதற்கான அடிப்படையாக அமையும் –
அமைய வேண்டுமென்று விரும்புகிறேன்.

1) இந்த “மாபெரும் விற்பனை முயற்சி” யை
தமிழில் வாசிப்பவர்களின் எண்ணிக்கையை
அதிகரிக்கவோ,
தமிழ்ப் புத்தகங்கள் வாங்குவோரின் எண்ணிக்கையை
அதிகரிக்கவோ செய்யப்படும் முயற்சியாகக்
கருதுவீர்களா –

அல்லது

மறைமுகமாக costly lottery
( ஒரு லாட்டரி டிக்கெட் விலை இருநூறு ரூபாய் …! )
ஒன்றினை நடத்தும் முயற்சியாக கருதுவீர்களா ….?

2) ஜூனியர் விகடன், ஆனந்த விகடன் (டைம் பாஸ்…?) இதழ்களில் வெளிவரும் படங்கள், செய்திகள், கட்டுரைகளின் ” இலக்கியத் தரம்” எத்தகையதாக இருக்கின்றன ….
அவை தமிழையும், இலக்கியத்தையும் பிரதிபலிக்கின்றனவா அல்லது முற்றிலும் வியாபார நோக்கை கொண்டவையாக இருக்கின்றனவா ….?

நண்பர்களின் கருத்தை வழக்கம்போல்
பின்னூட்டங்களில் தெரிவிக்க வேண்டுகிறேன்.

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

5 Responses to விகடனின் விற்பனை உத்திகள் – எழுப்பும் சில கேள்விகள்… !!

 1. sakthy சொல்கிறார்:

  ஆனந்த விகடன் ஒரு தொழிற்சாலை. அங்கிருந்து தமிழினத்திற்கோ தமிழுக்கோ நன்மை தரும் செயல்கள் எதையும் எதிர்பார்க்க முடியாது. இது ஒரு வியாபாரம் மட்டுமே.
  எண்ணிக்கையை அதிகரிக்கும் என்று சொல்வதும் முட்டாள்தனம்.நல்லவற்றைப் படிப்பவர்கள் எண்ணிக்கை என மாற்ற வேண்டும்.
  உங்களைப் போல் இணையம் நடத்துவோரும் இருக்கிறார்கள். அதே சமயம் ஆபாசக் கதைகள் கொண்டு தமிழில் வலைப்பூக்களை நடத்துவோரும் பலர். இந்தப் பக்கங்கள் கொட்டிக் கிடக்கின்றன. அதைப் படிப்பவர்கள் எண்ணிக்கை அதிகரிப்பதை வைத்து, தமிழில் படிப்பவர்கள் எண்ணிக்கை அதிகரித்து விட்டது என்று சொல்லலாமா?

  ஈசா சாமியாரிடம்,நித்தியானதரிடம்,ராம் தேவிடம் இருந்து நாம் எப்படி நல்லதை எதிர்பார்க்க முடியாதோ. அரசியல்வாதிகளிடம் சாமியார்களிடம் மக்கள் நலனை எப்படி எதிர்பார்க்க முடியாதோ.பாஜாக-காங்கிரஸ்-ராஜபக்சேயிடம் இருந்து எப்படி ஈழத் தமிழர்களுக்கு விடிவை எதிர்பார்க்க முடியாதோ…அப்படி இங்கிருந்தும் நலனை எதிர்பார்க்க முடியாது.

  தமிழ் பேச்சு எங்கள் மூச்சு நிகழ்ச்சியை நடத்தி விட்டால்,விஜய் தொலைக்காட்சியை தமிழ் வளர்த்து ,தமிழுக்குத் தொண்டு புரிகிறது என்று சொல்லிவிட முடியுமா?
  ஆனந்த விகடன் ஒரு சாக்கடை நிறுவனம்.அங்கிருந்து நாற்றத்தை எதிர்பார்ப்பது முட்டாள் தனம். (தமிழில் நாற்றம் என்பது நறுமணத்தைக் குறிக்கும்.)

 2. ரங்கராஜன் ராஜகோபாலன் சொல்கிறார்:

  திரு காவிரிமைந்தன்,

  ஆனந்த விகடன் துவக்க காலத்தில் வளர்ந்ததே
  கடைசி பக்கத்தில் போட்ட
  ‘நாலணா குறுக்கெழுத்து போட்டி’ மூலம் தானே.
  எனவே மறைமுக லாட்டரி, ஒரு விதத்தில்
  ‘மெகா லாட்டரி’ என்பது உண்மை தான்.
  இந்த காலத்தில் 200ரூபாய் கொடுத்து லாட்டரி
  சீட்டு வாங்குவது ஒண்ணும் பெரிய விஷயம் இல்லை.
  குறி பரிசுப் பொருள் தான் என்கிறபோது
  வாங்குகிற புக்கை எல்லாம் யார் படிக்கப்போகிறார்கள் ?
  அப்படி வாங்குகிறவர்கள் எல்லாம் படிப்பதற்கா
  வாங்குகிறார்கள் ?
  மேலும், மேலே நண்பர் ‘சக்தி’ சொன்ன மாதிரி எந்த மாதிரி
  புத்தகம் விற்கிறது என்பது தான் மிக முக்கியம்.
  நீங்கள் கேட்ட நான்கு கேள்விகளுக்கும் விகடன் குழுமம்
  பதில் கொடுத்தால் வண்டவாளம் தண்டவாளத்தில்
  ஏறி விடும்.
  நன்றி.

 3. todayandme சொல்கிறார்:

  கா.மை சார்,

  குறைந்தபட்சம் 45-50% புத்தகவிற்பனையில் லாபம் வைக்கப்படுகிறது. எல்லாக் கணக்கையும் திரும்ப முதல்ல இருந்து போடுங்க. 🙂 🙂

  25 லட்ச ரூபாய் மதிப்பில் பரிசுகளுக்குக் கீழே conditions apply இருக்கிறமாதிரி இருக்குதே. உண்மையிலேயே குடுப்பாங்களா? இல்லை கண்டிசன்ல காணாம போய்டுமா?

  தமிழில் வாசிப்பு குறைந்துவிட்டது என்று கவலைப்படும் எழுத்தாள பதிப்பாள எழுத்துத்துறை நண்பர்கள் தங்கள் வாரிசுகளுக்கு தமிழை வாசிக்கவாவது கற்றுக்கொடுத்துள்ளார்களா? அல்லது ஆங்கில-இந்தி-ப்ரெஞ்ச் மீடியம் தானா?

  நூலகத்துறையில், இப்போது மட்டுமல்ல – தமிழை வளர்க்கிறேன் என்று எப்போது ஒரு குரூப் கிளம்பினார்களோ அப்பொழுதிலிருந்தே தொடர்ந்து இருந்துவரும் ஊழல்களால் அங்கு வந்துசேரக் காத்திருக்கும் புத்தகங்களின் தரம் மிகவும் மோசமாகத்தான் உள்ளது. நூலகத்தின் புத்தக விற்பனை படிவ சமர்ப்பத்தலின் இறுதி நாளன்று போய்ப்பார்த்தால் அந்த கண்றாவியெல்லாம் தெரியவரும். தரமுள்ள புத்தகங்கள் நூலகத்துக்குள்ளேயே நுழைய இயலாத நிலை. அதிலே 1000 போட்டால் என்ன? 1500 போட்டால் என்ன?

  // இந்த விற்பனை விழா முடிந்த பிறகு, விகடன் குழுமம் கீழ்க்கண்ட சில புள்ளி விவரங்களை வெளியிட்டால், அது இதர புத்தக வெளியீட்டாளர்களுக்கும், எழுத்தாளர்கள், நாவலாசிரியர்கள் மற்றும் வாசகர்களுக்கும் பெரும் உதவியாக இருக்கும்…..//
  ஆனால், புத்தகம் எழுதுவோர், வெளியீட்டாளர், நாவலாசிரியர், வாசகர் மட்டுமல்ல, அரசாங்கம், விற்பனை-வருமானம்-சேவை வரித்துறை அனைவர் மூலமும் பத்திரிகைக்கு பெரும் தொல்லையாகப் போய்விடுமே. யாராவது சொந்தக் காசிலேயே சூனியம் வச்சிக்குவாங்களா.

  // 1) அதிக பட்சமாக எந்தெந்த புத்தகங்கள், எந்த எண்ணிக்கையில் விற்பனை ஆயின…? ( டாப் டென் மட்டும் கூடப் போதும் ) 2)பொதுவாக எந்தெந்த எழுத்தாளர்களின் புத்தகங்கள் அதிகம் விற்பனை ஆயின …? (இதிலும் டாப் டென் மட்டும் போதும் )3) இரண்டு மாதங்களில் மொத்தம் எவ்வளவு ரூபாய்க்கு விற்பனை செய்ய முடிந்தது …?4) எத்தனை நபர்கள் புத்தகங்களை வாங்கினார்கள?//

  ஒருவேளை இந்த நாலுகேள்விகளுக்கும் பதில்சொல்வார்களேயானால், ஆடிபோல தொடர்ந்து வரும் எல்லா சீசன்களிலும் (ஆவணி, புரட்டாசி, தீபாவளி…….) இந்த ரிசல்ட்டை வைத்தே புத்தகங்களின் தலைப்புகள், எழுத்தாளர்கள், வாசகர்களிடையே ஒரு artificial result oriented gambling ஐ உருவாக்கிவிடுவார்கள். அதுதான் இப்போது விதைபோட்டு ஆரம்பித்துவைக்கும் இந்த ஸ்பெசல் சேல்ஸ்-ன் பலன் ஆக இருக்கும்.

  1) இந்த “மாபெரும் விற்பனை முயற்சி” யை தமிழில் வாசிப்பவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவோ, தமிழ்ப் புத்தகங்கள் வாங்குவோரின் எண்ணிக்கையை அதிகரிக்கவோ செய்யப்படும் முயற்சி / costly lottery????

  பொன்னியின் செல்வனை முன்னிட்டு கல்கியின் புதிதாக புக்செய்யப்பட்டுள்ள சந்தாதாரர்கள் அல்லது அவர்கள் வெளியிடப்போகும் புதிய சர்க்குலேசன் விவரங்களைப் பொறுத்து காம்ப்பெடிசனுக்காக இவர்கள் செய்யும் வீண் பப்ளிசிட்டி முயற்சி.

  2) ஜூனியர் விகடன், ஆனந்த விகடன் (டைம் பாஸ்…?) இதழ்களில் வெளிவரும் படங்கள், செய்திகள், கட்டுரைகளின் ” இலக்கியத் தரம்” எத்தகையதாக இருக்கின்றன ….

  இலக்கியமா? அப்டின்னா!
  முற்றிலும் கவர்ச்சி நோக்கை கொண்டவை. விட்டில்கள் தானாக வந்து விழவேண்டுமல்லவா?

  🙂 🙂
  ஆடி தள்ளுபடி என்றால் இதுவரைக்கும் விக்காத புத்தகங்களைத் தள்ளிவிடறதா?
  ———————–
  இலவச ஆலோசனை:-

  ஆமாம், குளோபல் வார்மிங் அதிகமாயிட்டே போகுது, அதனால பேப்பர் உபயோகத்தைக் குறைங்கன்னு சொல்லிக்கிட்டே இருக்கிறாங்களே விஞ்ஞானிகளெல்லாம். விகடனானால் ஆன்-லைன் விற்பனையிலிருந்து புத்தகவிற்பனைக்குத் தாவுறாங்களே!

  எங்களிடம் 1000 ரூபாய்க்கு தமிழ் மின்புத்தகங்களை வாங்கினால் இலவசமாகவோ குலுக்கல்முறையில் பரிசாகவோ ஒரு ஐபேட் என்று விற்கலாமே?

 4. bganesh55 சொல்கிறார்:

  முக்கியமான ஒரு விவரத்தை நீங்க கேக்கலியே ஐயா… 25 லட்ச ரூபாய்க்கு பரிசுகள் வழங்கப்படுகிறதா என்று. அதைக் கேட்டு விடையைத் தெரிந்து கொண்டீர்களானால் இத்தனை கேள்விகள் நீங்கள் கேட்டிருக்க வேண்டிய அவசியமே இராது.

 5. Ganpat சொல்கிறார்:

  இது ஒரு நல்லதிட்டம்.புத்தகப்பிரியர்கள் பயன்படுத்திக்கொள்ளலாம்.பரிசுகள் பற்றி எனக்கு ஐயம் இல்லை.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.