கப்பலில் வந்து ‘மெட்ராஸ்’ மேல் ‘குண்டு’ போட்ட சுத்த வீரத்தமிழன் …..

 

Champakraman Pillai-2

இன்றைய சென்னை – அன்றைய ‘மெட்ராஸ்’ –

முன்னொரு சமயத்தில் ‘மெட்ராஸ்’ மீது குண்டு வீசப்பட்டது என்கிற விஷயம் இன்றைய தலைமுறையில் பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. இது குறித்து தெரிந்தவர்களிலும்,
குண்டு போட்டவன் ஒரு தமிழன் என்பது தெரிந்தவர்கள் அபூர்வமாகவே இருக்கும்……

நூறு வருடங்கள் ஆகி விட்டன – இந்த சம்பவம் நிகழ்ந்து….!
1914-ஆம் ஆண்டு, செப்டம்பர் மாதம்,
22-ந்தேதி இரவு 9.30 மணி.
மின்சாரம் பயன்பாட்டில் இல்லை என்பதால் ‘மெட்ராஸ்’
சீக்கிரமாகவே தூங்கி விட்டது.
இருளில் நகரமே அமைதியாக உறங்கிக் கொண்டிருந்தது.

‘எம்டன்’ என்பது ஜெர்மனியின் யுத்தக் கப்பல் ஒன்றின் பெயர். முதல் உலகப்போரில், பல சாகசங்களைப் புரிந்த கப்பல். எதிரியின் கப்பல்களைக் குறிவைத்துச் சுடுவதில்
‘கில்லாடி’யாக இருந்த இந்தக் கப்பலில் 360 ஜெர்மன்
சிப்பாய்கள் இருந்தார்கள். எதிரி நாடுகளின் 20 கப்பல்களை ஏற்கெனவே தகர்த்து, மூழ்கடித்து விட்டு, ரகசியமாக பிரிட்டிஷ் இந்தியாவின் ஆளுகையில் இருந்த ‘மெட்ராஸ்’ கடற்கரையை நெருங்கி வந்தது.

emden ship

எம்டன் கப்பலின் கேப்டனாக இருந்தவர் கார்ல்பான் முல்லர். இந்த யுத்தக் கப்பலின் தலைமை எஞ்சினீயராக
2வது அதிகார நிலையில் இருந்தவர் டாக்டர் செண்பகராமன் பிள்ளை என்னும் நாஞ்சில் நாட்டுத் தமிழர்.

யாரும் எதிர்பாராத அந்தநேரத்தில், மெட்ராஸ் கடற்கரையில் இருந்து சில ஆயிரம் அடி தூரத்தில் நின்று கொண்டு, குண்டுகளைப் பொழிந்தது எம்டன்.
முதலில் எம்டன் கடற்கரையோரமாக இருந்த,
பர்மா ஷெல் எண்ணெய்க் கம்பனிக்குச் சொந்தமான
எண்ணெய் டேங்குகள் மீது குண்டுகளை வீசியது.

முதல் 30 சுற்றுத் தாக்குதல்களில் பல டேங்குகள் தீப்பற்றி எரியத் தொடங்கின. அடுத்ததாக எம்டன் துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சிறிய சரக்குக் கப்பல் ஒன்றைத் தாக்கி மூழ்கடித்தது. அக்கப்பலில் இருந்த 26 மாலுமிகள் இத்தாக்குதலில் காயமடைந்தனர். 5 மாலுமிகள் உயிரிழந்தனர்.

புனித ஜார்ஜ் கோட்டைச் சுவரின் ஒரு பகுதி அடியோடு
பெயர்ந்து விழுந்தது. கோட்டையை நோக்கி வீசப்பட்ட
பல குண்டுகளில் ஒன்று வெடிக்காமல் மண்ணில் புதைந்தது. அது இன்றும் காட்சிக்கு வைக்கப்பட்டு இருக்கிறது.

emden gundu

 

வெறும் 30 நிமிடங்களுக்கே இந்த தாக்குதல் நீடித்தது.பிரிட்டிஷ் படைகள் விழித்துக்கொண்டு பதில் தாக்குதலை தொடங்கும் முன்னர், ‘எம்டன்’ கடலுக்குள் பின்வாங்கி, இருட்டில் மாயமாய் மறைந்தது.

மொத்தம் 125 குண்டுகள் வீசப்பட்டிருந்தன.
சில நிமிடங்கள் மட்டுமே நடந்த இந்த தாக்குதலில்
மெட்ராஸ் நகரமே கதிகலங்கிப்போனது. எம்டன் எப்போது வேண்டுமானலும் மீண்டும் வந்து தாக்கும் என்ற அச்சத்தில் பலர் தெற்கு, மேற்கு நோக்கி கடற்கரையிலிருந்து தூரமான இடங்களுக்குப் ஓடினார்கள். எம்டன் ஏற்படுத்திய பீதி
நீண்ட நாட்களுக்கு சென்னையை விட்டு மறையவில்லை.

இந்த தாக்குதலால் பலத்த சேதம் எதுவும் ஏற்படவில்லை.
இந்தியாவை ஆண்டுவந்த பிரிட்டிஷ்காரர்களை அச்சுருத்த வேண்டும் என்பது மட்டுமே ‘எம்டனின்’ நோக்கமாக இருந்தது.
இந்தியாவை ஆட்சிபுரிந்து வந்த வெள்ளையர்களின்
கவுரவத்துக்கு இது ஒரு பேரிடியாக அமைந்தது.
முதல் உலகப்போரில் இந்தியாவில், ‘மெட்ராஸ்’ மட்டுமே, அதுவும் இந்த ஒருதடவை மட்டுமே தாக்கப்பட்டது என்பது சரித்திரம்..

இந்த தாக்குதலின் மூலம் பிரிட்டிஷாரை கதி கலங்க வைத்த டாக்டர் செண்பகராமன் பிள்ளை என்பவர் யார் ….? அவரது பின்னணி என்ன ….?

chenbagaraman pillai-1

எதிரிக்கு எதிரி நண்பன் என்கிற வகையில், இந்தியாவை ஆண்டுகொண்டிருந்த பிரிட்டிஷாரை துரத்தியடிக்க, 
பிரிட்டிஷ்காரர்களின் பரம வைரியான ஜெர்மனியின் நட்பு உதவும் என்று நம்பிச் செயல்பட்ட சில சுதந்திர போராட்ட வீரர்களில், நேதாஜிக்கும் மூத்த முன்னோடியாக இருந்தவர் டாக்டர் செண்பகராமன் பிள்ளை…. ( ஜெர்மனில் – இஞ்ஜினீரிங்கில் டாக்டர் பட்டம் பெற்றவர்…)

தமிழ்நாட்டைச் சேர்ந்த இவரது வாழ்க்கை, அற்புதமான
ஒரு திரைக்கதைக்கு தீனி போடும் அளவுக்கு திருப்புமுனைகளை கொண்டது. நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் பிற்காலத்தில் சுயமாக்கிக் கொண்ட ‘ஜெய்ஹிந்த்’ என்கிற உணர்ச்சியூட்டும் வார்த்தையை முதன்முதலில் உச்சரித்தவர் இந்த ‘ஜெய்ஹிந்த் செண்பகராமன்’ என்றும் அழைக்கப்படும் செண்பகராமன் பிள்ளை தான்.
‘ஜெய்ஹிந்த்’என்ற முழக்கத்தை 1933-ம் ஆண்டு வியன்னாவில் நடந்த மாநாடு ஒன்றில் செண்பகராமன் தான் முதல் முதலாக முழங்கினார்.

திருவனந்தபுரத்தில் பிறந்தவர்.
தந்தை சின்னசாமிப் பிள்ளை – தாய் நாகம்மாள்.
திருவனந்தபுரம் மன்னர் உயர்நிலைப் பள்ளியில் ஆறாம் படிவம் ( 11-வது வகுப்பு ) படித்துக்கொண்டு இருந்தபோது, ‘ஸ்ரீபாரத மாதா வாலிபர் சங்கம்’ என்ற அமைப்பை ஏற்படுத்தி,  இந்திய விடுதலைப் போராட்டக் களத்தில் இறங்கினார்.

அவரது 17-வது வயதில், ஸ்ட்ரிக்ட்லேண்ட் என்கிற,
இந்தியாவிற்கு வருகை புரிந்திருந்த விலங்கியல் ஆய்வாளரின் நட்பு கிடைத்தது. பிரிட்டிஷ் அரசின் பார்வையிலிருந்து சில காலம் மறைந்திருக்க வேண்டிய அவசியத்தில் இருந்த செண்பகராமன் பிள்ளை –
அவருடன் இத்தாலிக்குச் சென்றிருக்கிறார். அங்கே தங்கி சில ஆண்டுகள் கல்வி பயின்றிருக்கிறார். பிறகு, சுவிட்சர்லாந்து மற்றும் பெர்லின் பல்கலைக் கழகங்களில் படித்துப் பொறியியல் துறையில் டாக்டர் பட்டம் பெற்றார்.

அப்போதைய ஜெர்மனின் அரசரான ‘கெய்சரி’ன்
நட்பைப் பெற்று, மன்னருடனான நெருக்கத்தை வளர்த்துக் கொண்டார்.
ஜெர்மனியில் இருந்தபடியே அவர், ‘இந்திய சுதந்திரப் போராட்ட இயக்கம்’ என்ற சர்வதேசக் குழுவை உருவாக்கிப் போராடினார்.

‘புரோஇந்தியா’ என்ற மாத இதழைத் தொடங்கினார். ஆங்கிலம் மற்றும் ஜெர்மனியில் அந்த இதழ் வெளியிடப்பட்டது.
வெளிநாடுகளிலிருந்த இந்தியர்களின் ஆதரவைத் திரட்டி,
INV (Indian National Volunteers force )
என்கிற ஒரு அமைப்பை உருவாக்கினார். பின்னாட்களில்  நேதாஜி உருவாக்கிய Indian National Army அமைப்புக்கும் முன்னோடியாக….!!

ஜெர்மனியின் அரசர் கெய்சர் கேட்டுக்கொண்டதற்கிணங்க,
INV முதல் உலகப்போரில், ஜெர்மனுக்கு உதவியாக போரிட்டது. இந்தியாவில் உள்ள ஆங்கிலேய ஆட்சியை எதிர்த்து 1915-ல் ஆப்கானிஸ்தானில் மாற்று அரசு ஒன்றை, ( முதன்முதலில் – நாடு கடந்த இந்திய அரசு …..!!!) ஜெர்மன் மற்றும் ஜப்பானின் ஆசியுடன் இவரது குழு உருவாக்கியது. இந்த அரசின் வெளிவிவகாரத் துறை
அமைச்சராக செண்பகராமன் பிள்ளை நியமிக்கப்பட்டார்.

ஆனால், பின்னர் 1918-ல் பிரிட்டிஷ் அரசு கொடுத்த நெருக்கடி காரணமாக, இந்த அரசுக்குக் கொடுத்த ஆதரவை ஜப்பான் திரும்பப் பெற்றது. ஆகவே, இந்தியாவின் தற்காலிக அரசு ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேற்றப்பட்டது.

1933-ம் ஆண்டு பெர்லினில் வாழ்ந்த மணிப்பூரைச் சேர்ந்த
லட்சுமிபாய் என்ற பெண்ணை, செண்பகராமன் திருமணம்
செய்து​கொண்டார்.

முதல் உலகப் போருக்குப் பிறகு, ஜெர்மனியில்
ஹிட்லர் ஆட்சி உருவானது. செண்பகராமன், ஹிட்லருடனும் நெருக்கமாகப் பழகி வந்தார். ஆனாலும்,இந்தியா குறித்து ஹிட்லருக்குள் இருந்த ஆழமான வெறுப்பை உணர்ந்த செண்பகராமன், வெளிப்படையாகத் தனது எதிர்ப்பைத்
தெரிவித்து இருக்கிறார்.

விளைவாக, நாஜிக்களின் நெருக்கடிக்கு ஆளானார்.
ஒரு விருந்தில் செண்பகராமன் சாப்பிட்ட உணவில்
மெதுவாகக் கொல்லும் விஷம் (slow poison )
கலக்கப்பட்டு இருந்தது. அதை அறியாமல் சாப்பிட்டுவிட்டு நோயுற்ற இவர், சிகிக்சை பெற இத்தாலி சென்றார். தீவிர சிகிக்சை அளித்தும் பயனின்றி செண்பகராமன் 1934-ம் ஆண்டு மே மாதம் 26-ம் தேதி இறந்து போனார்.

தன் மனைவியிடம், தனது இறுதி விருப்பமாக,
‘என்னுடைய சாம்பலை இந்தியாவுக்கு எடுத்துச் சென்று, எனது தாயாரின் சாம்பலைக் கரைத்த, கேரளாவில் உள்ள கரமனை ஆற்றில் கரைக்க வேண்டும். மீதியை நாஞ்சில் நாட்டு வயல்களில் தூவ வேண்டும்’ என்று தெரிவித்திருந்தார்.

ஆனால், அவரது மனைவி லட்சுமிபாயால் அதை அவ்வளவு எளிதாக நிறைவேற்ற முடியவில்லை. கணவனின் அஸ்தியைப் பாதுகாப்பாக வைத்திருந்தபோதும், லட்சுமி பாய் மீது நாஜி அரசு குற்றம் சுமத்தி அவரை மனநலக் காப்பகம் ஒன்றில் அடைத்தது – பல துன்பங்களுக்கு உள்ளாக்கியது.

கணவனின் அஸ்தியை வைத்துக்கொண்டு, லட்சுமிபாய்
30 வருடங்கள் போராடினார். முடிவில், அஸ்தியோடு
இந்தியாவுக்கு வந்து சேர்ந்தார். மும்பையில் தங்கி இருந்த அவர், இந்திய அரசின் மரியாதையோடு அந்த அஸ்தி கரைக்கப்பட வேண்டும் என்பதற்காகப் போராடினார். அதுவும் அவ்வளவு எளிதாக நடக்கவில்லை.

ஒரு கட்டத்தில், இந்திரா காந்திக்கு ஒரு கடிதம் எழுதினார். அதில், இந்திரா ஒரு சிறுமியாக தனது வீட்டுக்கு வந்து போன நிகழ்வை நினைவுபடுத்தி, தனது கணவனின் இறுதி ஆசையை நிறைவேற்ற உதவும்படி கேட்டுக்கொண்டார்.

ஒருவழியாக, இந்திய அரசு சார்பில், செண்பகராமனின்
அஸ்தியைக் கரைக்க ஒரு வழி பிறந்தது.
இந்திய அரசு சார்பில், செண்பகராமனின் அஸ்தியைக் கரைக்க ஏற்பாடு செய்யப்பட்டது. 1966-ம் இந்தியாவின் போர்க் கப்பல் ஒன்றில் செண்பகராமனின் அஸ்தியை எடுத்துக் கொண்டு மும்பையில் இருந்து கொச்சிக்குப் பயணமானார் லட்சுமிபாய்.

செண்பகராமன் விரும்பியபடியே அவரது அஸ்தி
கரமனை ஆற்றில் கரைக்கப்பட்டது. எந்த நதியின் நீரில்
தனது தாயின் அஸ்தி கரைந்து போனதோ, அதே நதியில்
செண்பகராமனும் கரைந்து போனார். அவரது மனைவி
லட்சுமி பாய் 1972-ம் ஆண்டு மும்பையில் காலமானார்.

இன்று சுதந்திர தினத்தைக் கொண்டாடிக் கொண்டு
இருக்கிறோம். எண்ணற்ற இந்தியர்கள், தன் நாடு
சுதந்திரம் பெற எத்தனையெத்தனையோ தியாகங்களைச் செய்திருக்கிறார்கள். அவர்களில் சில நூறு பெயர்களை மட்டுமே நாடு அறியும் – நாட்டு மக்கள் அனைவரும் அறிவார்கள்.

ஆனால், பெரும்பாலும் வெளியில் தெரியப்படாமலே
போன சுதந்திரப் போராட்ட வீரர்கள் லட்சக்கணக்கானோர் உண்டு. இயன்ற வரையில், அவர்களைப் பற்றிய விவரங்களை சேகரித்து, மக்களுக்கு பரந்த அளவில் தெரியப்படுத்தி, அவர்களை கௌரவிக்க வேண்டிய கடமையும், பொறுப்பும் நமக்கு இருக்கிறது – அல்லவா ?

அதில் ஒரு சிறு முயற்சி தான் இந்த இடுகை.

நண்பர்கள் அனைவருக்கும் –
இனிய சுதந்திர தின வாழ்த்துக்கள்.

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

10 Responses to கப்பலில் வந்து ‘மெட்ராஸ்’ மேல் ‘குண்டு’ போட்ட சுத்த வீரத்தமிழன் …..

  1. Ganpat சொல்கிறார்:

    மிக முக்கியமான அருமையான பதிவு.அரிதான விவரங்கள்.சுதந்திரம் நமக்கு தங்கத்தட்டில் கொடுக்கப்படவில்லை.தங்கள் உடல் பொருள் ஆவி அனைத்தயும் தனம் நாட்டு விடுதலைக்கு ஈந்து நமக்கு பெற்று தந்த அந்த செம்மல்களுக்கு நம் அஞ்சலி. வெள்ளைகாரர்களிடமிருந்து விடுதலை பெற்று கொள்ளைக்காரர்களிடம் சிக்கிகொண்ட எம்மை சொர்க்கத்திலிருந்து ரட்சியுங்கள்.

  2. Dr.S.Phillips சொல்கிறார்:

    Mr.Kavirimainthan,

    Simply SUPERB .
    Wonderful Article on the Independence Day.
    Thanks a lot for introducing
    ‘Jai Hind Shenbakaraman’

  3. M. Syed சொல்கிறார்:

    தெரியாத வரலாறு பதிவு நன்றி.

    அனைவருக்கும் இனிய சுதந்திர தின வாழ்த்துக்கள்.

    எம். செய்யது
    துபாய்.

  4. புது வசந்தம் சொல்கிறார்:

    அருமையான பதிவு. இங்கு வெகு சிலரின் சரித்திரம் மட்டுமே பதிவு செய்யப்பட்டுள்ளது. நாம் வாழும் சுதந்திரம், பல்லாயிரம் முகமறியா மக்களின் வாழ்வியல் போராட்டமே. பெற்ற சுதந்திரத்தை பேணி காப்பதே நமது தலையாய கடமை.

  5. gopalasamy சொல்கிறார்:

    Long time before, in Dinamani kadhir his life history was published. Thanks for reminding him.
    Tamilnadu knows only people like “kallakudi kondan”. There is a hope in mind, by seeing this article, at least somebody is there to remember the freedom fighters.

  6. Samy sathi சொல்கிறார்:

    Wonderful article. Certainly it will open some eyes.

  7. visujjm சொல்கிறார்:

    அருமை … ஜெய்ஹிந்த்…

  8. Jaya BALA SANKAR சொல்கிறார்:

    வாழ்க செண்பகராமன் புகழ்

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.