இரவில் தூக்கிலிடப்பட்டு, விடியும் முன்னே எரியூட்டப்பட்டு, அஸ்தியும் – ஆற்றில் கரைக்கப்பட்ட சுத்த வீரன் ஒருவனின் சரித்திரம் ….

முன் குறிப்பு –
டாக்டர் செண்பகராமன் பிள்ளை பற்றிய இடுகையைப்
பார்த்து விட்டு, நண்பர் ஒருவர் விடுதலைப் போராட்ட
வீரர்கள் வேறு யாரைப்பற்றியாவது எழுதி இருக்கிறீர்களா ? – என்று கேட்டார். நான் முன்பு பகத்சிங் பற்றி எழுதிய இடுகை அதிகம் பேரைச் சென்றடையவில்லையோ என்று தோன்றியது…. விளைவு – கீழே மீண்டும் பகத்சிங் விஜயம் …..

———————

இரவில் தூக்கிலிடப்பட்டு, விடியும் முன்னே எரியூட்டப்பட்டு, அஸ்தியும்

– ஆற்றில் கரைக்கப்பட்ட சுத்த வீரன் ஒருவனின் சரித்திரம் ….
Posted on செப்ரெம்பர் 20, 2013 by vimarisanam –

kavirimainthan

இரவில் தூக்கிலிடப்பட்டு, விடியும் முன்னே
எரியூட்டப்பட்டு, அஸ்தியும் – ஆற்றில் கரைக்கப்பட்ட
சுத்த வீரன் ஒருவனின் சரித்திரம் ….

bhagat-singh-1

(22 வயதில் சிறைச்சாலையில் பகத் சிங்)
எந்த நாடாக இருந்தாலும் சரி, சுதந்திரத்திற்காக ரத்தம்
சிந்திய அத்தனை பேர் மீதும் நமக்கு அளவுகடந்த
அபிமானமும், மரியாதையும் எப்போதும் உண்டு.

இந்திய சுதந்திரத்திற்காக தூக்கில் தொங்க விடப்பட்ட,
இந்த நாட்டின் முதல் மார்க்சிஸ்ட் –
பஞ்சாபைச் சேர்ந்த வீரன் பகத் சிங்.

பகத்சிங் பற்றி கொஞ்சம் எழுதுங்களேன் என்று ஒரு
நண்பர் கேட்டிருந்தார். பகத்சிங் வடக்கே மிகவும் பிரபலம்.
பகத்சிங் மட்டுமல்ல – இந்திய சுதந்திரப் போராட்ட
களத்தில் கொடுமைகளைச் சந்திக்க நேர்ந்த வீரர்கள்
பலரைப்பற்றி, வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் சிறிது
எழுத நான் மிகவும் விரும்புவேன்.

அப்போது தான் அவர்கள் செய்த தியாகங்கள் அத்தனையும்
வீணாகி – இன்று கண்ட கழிசடைகளிடம் எல்லாம் எப்படி
இந்த நாடு சிக்கி சின்னாபின்னமாகிக் கொண்டிருக்கிறது
என்பதை இன்றைய சமுதாயம் நினைவில் கொள்ள முடியும் –
அல்லவா ?

இதே செப்டம்பர் மாதத்தில் தான் பிறந்தான் பகத்சிங்.
– செப்டம்பர் 28, 1907.
தூக்கிலிடப்பட்டு உயிர் விட்டது மார்ச் 23, 1931 அன்று.
ஆம் – தனது 24வது வயது நடந்து கொண்டிருக்கும்போது,
இளமையின் உச்சத்தில் இருக்கும்போது –
தெரிந்தே உயிர்த்தியாகம் செய்தான்.

சீக்கிய அரசர் ரஞ்சித் சிங்கின் படையில் பணி புரிந்து
கொண்டிருந்த ஒரு சீக்கிய குடும்பத்தில் பிறந்தவன்
பகத்சிங்.

அவனது 12வது வயதில், 1919 – ஜாலியன்வாலாபாத்
படுகொலைகள் நிகழ்ந்தன.இந்த சம்பவம் நிகழ்ந்த
சில நாட்களுக்குள் அங்கு சென்ற இந்த சிறுவனின்
மனதை இந்த நிகழ்ச்சிகள் மிகவும் பாதித்திருக்கின்றன.
(அன்று பிரிட்டிஷ் பீரங்கிகளிலிருந்து வெளிப்பட்ட
குண்டுகளால் துளைக்கப்பட்ட சுவர் இன்றும் காட்சிக்கு
அப்படியே வைக்கப்பட்டுள்ளது )
அந்த சிறு வயதிலேயே,1920 -ல் காந்திஜியின்
ஒத்துழையாமை இயக்கத்தில் கலந்து கொண்டு
தன் அரசு பள்ளிப் புத்தகங்களையும், அந்நியத் துணிகளையும்
எரித்திருக்கிறான்.

பிப்ரவரி 1921-ல் மீண்டும் நன்கணா சாகிப் என்கிற
குருத்வாராவிலும் 1922-ல் மீண்டும் சௌரி சௌரா என்கிற
இடத்திலும் பல சீக்கியர்கள் பிரிட்டிஷ்
படைகளால் படுகொலை செய்யப்பட்டனர்.

இவையெல்லாம் சேர்ந்து அவனை காந்திஜியின்
“அஹிம்சை” “ஒத்துழையாமை” என்பதெல்லாம்
சுத்த பைத்தியக்காரத்தனம். வன்முறையின் மூலமே
பிரிட்டிஷ் அரசை இந்தியாவிலிருந்து
விரட்ட முடியும் என்கிற முடிவிற்கு வரச்செய்தன.

லாகூர் பஞ்சாப் நேஷனல் காலேஜில் படித்துக்கொண்டே,
புரட்சிக் குழுவான “ஹிந்துஸ்தான் ரிபப்ளிகன்
அசோசியேஷன்” நடவடிக்கைகளில் தீவிர
பங்கு கொள்ள ஆரம்பித்தான்.
மார்க்சிஸ்ட் கொள்கைகளில் ஈடுபாடு துவங்கியது.
ரஷிய புரட்சியின் நாயகனான லெனின் இவனின்
வழிபாட்டிற்குரிய தலைவர் ஆனார்.

அவன் வீட்டில் திருமணம் செய்து கொள்ளுமாறு
வற்புறுத்தப்பட்டதால்,
“இந்திய சுதந்திரத்திற்காக
முழுவதுமாக என்னை ஈடுபடுத்திக் கொள்ள நான்
விரும்புகிறேன் -இல்லற வாழ்வு எனக்கு உரித்தானதல்ல.
என்னை மன்னித்து விடுங்கள்”
என்று கடிதம் எழுதிவைத்து விட்டு, வீட்டை விட்டு
வெளியேறி விட்டான்.
கான்பூர் சிறையில் அடைபட்டுக் கிடந்த சில போராளிகளை
விடுவிப்பது – அவனது அடுத்த முயற்சியாக இருந்தது !

அடுத்து அக்டோபர் 1926-ல் லாகூரில் நிகழ்ந்த ஒரு
குண்டு வெடிப்பு சம்பந்தமாக கைது செய்யப்பட்டு
(19 வயது..!) சில மாதங்களுக்கு பிறகு விடுதலை
செய்யப்பட்டான். பல பஞ்சாபி பத்திரிகைகளில்
புரட்சிக் கட்டுரைகளை எழுதுவதும், பல விவசாயிகள்
மற்றும் தொழிலாளர் அமைப்புகளை ஒருங்கிணத்து
கூட்டங்களை நிகழ்த்துவதும் தொடர்ந்தது.

அக்டோபர் 30, 1928-ல் சைமன் கமிஷன்
லாகூருக்கு விஜயம் செய்தது.இந்த கமிஷனில்
இந்தியர் யாரும் சேர்க்கப்படாததால்,
இதை எதிர்த்தும், பகிஷ்கரித்தும், பஞ்சாப் சிங்கம்
என்றழைக்கப்பட்ட லாலா லஜ்பத் ராய்
தலைமையில் லாகூரில் ஒரு அமைதியான பேரணி நடந்தது.

இந்த பேரணியை குலைக்கவும், போராளிகளின்
உறுதியைச் சிதைக்கவும், போலீஸ் சூப்பரிண்டெண்டெண்ட்
ஜேம்ஸ் ஸ்காட் என்கிற ஆங்கிலேயன் விசேஷ அக்கரை
எடுத்துக் கொண்டான். லாலா லஜ்பத் ராயை குறிவைத்து
போலீசாரின் தாக்குதல் நிகழ்ந்தது. லஜ்பத் ராய் படுகாயம்
அடைந்தார். இந்த காயங்களின் விளைவாக நவம்பர் 17,
1928-ல் லஜ்பத் ராய் இறந்து போனார்.

இதற்கு பழி வாங்கும் விதமாக ஜேம்ஸ் ஸ்காட்டை
தீர்த்துக்கட்ட, பகத்சிங் முடிவுசெய்து, தன்னுடன் உதவிக்கு
ராஜகுரு, சுக்தேவ், ஆசாத் ஆகியோரையும் சேர்த்துக்
கொண்டு திட்டம் ஒன்றைத் தீட்டினான்.

rajguru

sukh dev

ஆனால் இறுதிக் கட்டத்தில், தவறான சமிக்ஞைகள்
கிடைத்ததால், ஸ்காட் என்று நினைத்துக் கொண்டு,
ஜான் சாண்டர்ஸ் என்கிற துணை போலீஸ்
சூப்பிரண்டென்டெண்டை லாகூர் போலீஸ் தலைமையகம்
எதிரில் சுட்டுக்கொன்றார்கள் பகத்சிங்கும், ராஜகுருவும்.
இது நிகழ்ந்தது டிசம்பர் 17,1928 மாலை 04.15 மணிக்கு.
ஜான் சாண்டர்ஸை சுட்ட பிறகு இந்தக்குழு எதிரில் இருந்த
டிஏவி காலேஜ் மைதானத்திற்குள் புகுந்து தப்பி ஓட முயன்றது.
இவர்களைத் துரத்திக் கொண்டு ஓடி வந்த சனன் சிங்
என்கிற போலீஸ் கான்ஸ்டபிளை வேறு வழி இல்லாததால் –
இவர்களைக் கவர் செய்துவந்த சந்திரசேகர் ஆசாத் சுட்டார்.
இவர்களைப் பிடிக்க போலீஸ் படை மிகத்தீவிரமாக
செயல்பட்டது. நகரிலிருந்து இவர்கள் வெளியேற முடியா
வண்ணம் லாகூர் நகரம் சீல் வைக்கப்பட்டது. லாகூரிலிருந்து
வெளியே வரும் ஒவ்வொரு இளைஞரும் தீவிரமான
பரிசோதனைக்கு உள்ளாக நேர்ந்தது.அடுத்த இரண்டு நாட்கள்
இவர்கள் அனைவரும் நகருக்கு உள்ளேயே பதுங்கி இருந்தனர்.

இரண்டு நாட்களுக்குப் பிறகு, அவர்களது இயக்கத்தோழர்
பகவதி சரண் வோரா என்பவரின் மனைவி துர்காவதி தேவி
என்கிற பெண்மணியின் உதவியுடன் லாகூரை விட்டு
வெளியே செல்ல திட்டம் போட்டனர்.

கல்கத்தா செல்ல முடிவு செய்த
வெறும் மீசையுடனும், தொப்பியுடனும் சாதாரண பகத்சிங் –
சீக்கியருக்கான பிரத்யேக அடையாளமான-
முடியையும் தாடியையும் துறந்தான்.
தோற்றம் கொண்டான்.
துர்கா தேவியின் குழந்தையை பகத்சிங் தன் தோளில்
சாத்திக்கொண்டு, துர்கா தேவியும்
பகத் சிங்கும் கணவன் மனைவி போல முன்செல்லவும்,
ராஜகுரு அவர்களது வேலைக்காரர் போல் உடையணிந்து
அவர்களது பெட்டி, சாமான்களை தூக்கிக்கொண்டும்,
லாகூரை விட்டு ரெயில் மார்க்கமாக வெளியேறினர்.

Bhagat_Singh-3

(சீக்கிய தோற்றத்தை நீக்கிய பகத்சிங் )

போலீஸ்காரர்கள் ஒரு சீக்கிய இளைஞரை தீவிரமாகத்
தேடிக்கொண்டிருந்ததால்,
பெங்காலி குடும்பம் போல் தோற்றமளித்த இவர்களால்,
போலீஸ் வளையத்தைத் தாண்டி -லாகூருக்கு வெளியே
தப்பித்துச் செல்ல முடிந்தது.
காந்திஜி பகத்சிங் குழுவினரின் வன்முறைச் செயல்களை
கண்டித்தார்.

ஆனாலும் -லாகூர் சம்பவங்கள் –
நாட்டையே பரபரப்புக்குள்ளாக்கின.
இந்த சம்பவம் நாடு முழுவதும் பேசப்பட்டது.
சுதந்திர வேட்கை கொண்ட மக்களின் நடுவே, பகத்சிங்
குழுவினர் மிகுந்த வரவேற்பைப் பெற்றனர்.
பிரிட்டிஷ் அரசுக்கு எதிராக சுதந்திரப் போராட்டங்கள்
வலுவடைந்து வருவதைக்கண்ட நிர்வாகம் பல
அடக்குமுறை சட்டங்களை செயல்படுத்த ஆரம்பித்தது.

இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் ஒரு முயற்சியாக,
டெல்லி அசெம்பிளி கட்டிடத்திற்குள் குண்டு வீச
இவர்களது புரட்சி இயக்கம் தீர்மானித்தது. ஏப்ரல் 8,
1929 அன்று அசெம்பிளி ஹாலுக்கு உள்ளே,
பகத் சிங்கும் அவரது கூட்டாளி தத்தும் இரண்டு
குண்டுகளை வீசினர். புகைமூட்டத்துக்கிடையே
“புரட்சி ஓங்குக”(இன்குலாப் ஜிந்தாபாத்) என்கிற
கோஷங்களுடன், பல துண்டுப் பிரசுரங்களை இருவரும்
வீசினர். உயிர்ச்சேதம் ஏதும் ஏற்படவில்லை.
சிலருக்கு குண்டு வெடிச் சிதறல்களால் காயங்கள் ஏற்பட்டன.

இருவரும் தப்பி ஓட முயற்சிக்கவில்லை.
கைது செய்யப்பட்டனர்.
பகத் சிங் – தான் வேண்டுமென்றே இதைச் செய்ததாக
வெளிப்படையாக அறிவித்தான். புரட்சி எண்ணங்கள்
பரவ வேண்டும் என்பது அவன் விருப்பமாக இருந்தது.
இந்த செயலில் அவர்களுக்கு –
கொலை நோக்கம் இல்லாவிட்டாலும்,
இருவர் வசமும் துப்பாக்கிகள் இருந்தது – அவர்கள் மீது
கொலைக்குற்றம் சாட்ட வசதியாகப் போனது.

(நீண்டு விட்டது – மீதி அடுத்த பகுதியில் )

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.