(part-2) இரவில் தூக்கிலிடப்பட்டு -விடியும் முன்னே

(part-2) இரவில் தூக்கிலிடப்பட்டு -விடியும் முன்னே

இரவில் தூக்கிலிடப்பட்டு -விடியும் முன்னே (part-2)
Posted on செப்ரெம்பர் 23, 2013 by vimarisanam – kavirimainthan

———————

செஷன்ஸ் கோர்ட்டில் வழக்கு நடந்தது.
இந்த வழக்கில் பகத் சிங் வக்கீல்
யாரையும் நியமித்துக் கொள்ளவில்லை.
தானே வாதாடினான்.
இறுதியில் இருவருக்கும் 14 வருட கடுங்காவல்
தண்டனை விதிக்கப்பட்டது.

இதற்கிடையில் லாகூரில் இவர்களது குண்டு தயாரிக்கும்
தொழிற்சாலை போலீசாரால் கண்டு பிடிக்கப்பட்டது.
இயக்கத்தின் பல உறுப்பினர்களும் இதில் பிடிபட்டனர்.
சாண்டர்ஸ் கொலைக்குற்றமும் சேர்ந்து கொண்டது.
பகத்சிங், ராஜகுரு, சுக்தேவ் மூன்று பேர் மீதும் –
சாண்டர்ஸ் மற்றும் சனன் சிங்கை கொன்றதாக –
கொலை வழக்கு நடந்தது.

பகத் சிங் இந்த வழக்கு விசாரணையை இந்தியாவின்
சுதந்திர கோரிக்கை வலுப்பட பயன்படுத்திக் கொள்ள
தீர்மானித்து, அதற்கேற்ப தானே வழக்காடினான்.

வழக்கு மிகவும் பரபரப்பான சூழ்நிலையில் நடைபெற்றது.
நாடு முழுவதும் ஒரு போராட்ட சூழ்நிலை நிலவியது.

இதற்கிடையில் மியன்வாலி சிறையில் பிரிட்டிஷாருக்கும்
இந்தியர்களுக்கும் இடையே காட்டப்பட்ட பாரபட்சமான
அணுகுமுறைகளையும்,
இந்திய கைதிகள் மிக மோசமாக நடத்தப்பட்டதையும்
எதிர்த்து, மற்ற கைதிகளையும் சேர்த்துக் கொண்டு பகத்சிங்
சிறையிலேயே உண்ணாவிரதம் துவங்கினான்.

அரசியல் கைதிகளுக்கும், மற்ற கைதிகளுக்கும்
வேறுபாடு உண்டு என்றும் அரசியல் கைதிகளுக்கு
செய்தித்தாள்களும், புத்தகங்களும் படிக்க அனுமதி
கொடுக்க வேண்டும் என்பது கோரிக்கைகளில் ஒன்று.

அசெம்பிளியில் இது குறித்து விவாதம் எழுப்பப்பட்டது.
முகம்மது அலி ஜின்னா இவர்களின் கோரிக்கைகளை
ஆதரித்துப் பேசினார்.
விஷயம் லண்டனில் உள்துறைச் செயலகம் வரை சென்றது.

நேரு இவர்கள் செயல் முறைகளை நியாயப்படுத்தா
விட்டாலும், கோரிக்கைகளை ஆதரித்துப் பேசினார்.
இவர்களது தியாகம் வீண் போகாது என்றும் எழுதினார்.

காந்திஜியையும் மீறி, மக்களிடம் இவர்கள் செல்வாக்கு
வளர்ந்தது. நாடு முழுவதும் இது குறித்தே பேச்சு.
வட இந்தியா முழுவதும் பகதிசிங் குழுவினரை
மக்கள் போற்றினர். பல ஊர்களில் சுதந்திர உணர்வுடன்
இவர்களைப் பற்றிய பல பாடல்கள் பரவின.

பிரிட்டிஷ் அதிகாரிகள் இவர்களது உண்ணாவிரதத்தை
முறிக்க சகல விதத்திலும் முயற்சி செய்தனர்.
வலுக்கட்டாயமாக கூட உணவூட்ட முயற்சி செய்தனர்.
ஆனால் உண்ணாவிரதம் தொடர்ந்தது.

மக்களிடையே பெருத்த கிளர்ச்சி எழுந்ததால்,
பிரிட்டிஷ் அரசு விசாரணையை துரிதப்படுத்தி
முடித்து விட நினைத்தது.
பகத்சிங் லாகூரில் உள்ள போர்ஸ்டல் சிறைக்கு மாற்றப்
பட்டான். ஜூலை 10, 1929
அன்று கொலைக் குற்றத்துடன் கூடவே பிரிட்டிஷ் அரசுக்கு
எதிரான ராஜத்துரோக குற்றமும் சேர்ந்து கொள்ள,
வழக்கு விசாரணை துவங்கியது. பகத் சிங்கும் அவனது
நண்பர்களும் இன்னமும் உண்ணாவிரதத்திலேயே இருந்ததால்,
கைகளில் விலங்கிடப்பட்டு, ஒரு ஸ்ட்ரெச்சரில் கிடத்தப்பட்டு,
பகத்சிங் கோர்ட்டுக்கு கொண்டு செல்லப்பட்டான்.

இதற்குள், சிறையில் தொடர் உண்ணாவிரதம் இருந்த
ஜதீன்திரநாத் தாஸின் உடல்நிலை மிக மோசமாகியது.
உண்ணாவிரதமிருந்த 63 வது நாள் ஜதீன்திரநாத் தாஸ்
சிறையிலேயே மரணமடைந்தான்.

நாடு கொதிப்படைந்தது. மோதிலால் நேரு அசெம்பிளியில்
லாகூர் சிறையில் அரசியல் கைதிகள் மோசமாக
நடத்தப்படுவதைக் கண்டித்து ஒரு ஒத்திவைப்பு தீர்மானம்
கொண்டு வந்தார்.

இறுதியில் அக்டோபர் 5, 1929 அன்று அகில இந்திய
காங்கிரஸ் கட்சி மற்றும் தன் தந்தையின்
வேண்டுகோளை ஏற்று 116 வது நாளில் பகத்சிங் தன்
உண்ணாவிரதத்தை முடிவுக்கு கொண்டு வந்தான்.
கைதிகள் கைவிலங்கோடு கோர்ட் விசாரணைக்கு
கொண்டு செல்லப்படுவதை பகத்சிங் ஏற்றுக் கொள்ள
மறுத்ததால், கொடுமையான அடி, உதை, சித்ரவதைகளை
சந்திக்க நேர்ந்தது. இவற்றை எல்லாம் எதிர்த்து,
விசாரணைக்காக கோர்ட்டுக்கு செல்ல அவர்கள் அனைவரும்
மறுத்தனர். தங்கள் தரப்பு நியாயங்களை விளக்கி
பகத்சிங் கோர்ட்டுக்கும் கடிதம் எழுதினான். ஆனால் கோர்ட்
இந்த விளக்கங்களை ஏற்றுக் கொள்ள மறுத்து,
கைதிகள் வராவிட்டாலும் கூட- விசாரணை தொடரும்
என்று தீர்மானித்தது.

வழக்கு நீண்ட காலத்திற்கு தொடர்வதால்
பொது மக்களிடையே ஏற்படும் கொந்தளிப்பைத் தவிர்க்க
பிரிட்டிஷ் அரசு ஒரு குறுக்கு வழியை நடைமுறைக்கு
கொண்டு வந்தது. அவசர சட்டம் ஒன்றின் மூலம்
இந்த வழக்கை விசாரிக்கவென்றே
மூன்று உறுப்பினர் டிரைபியூனல் ஒன்றை நியமித்தது.
விளைவு, வழக்கு சீக்கிரம் முடியும். அதன் பிறகு
லண்டனில் உள்ள ப்ரிவி கவுன்சிலில் மட்டுமே
அப்பீல் செய்ய முடியும். கைதிகள் இல்லாமலே
விசாரணை தொடரவும், அவசர சட்டத்தில் விதிமுறை
கொண்டு வரப்பட்டது.

மே 5, 1930 அன்று வழக்கு விசாரணை துவங்கியது.
இந்த அவசர சட்டத்தை எதிர்த்து, குற்றம் சாட்டப்பட்டவர்களின்
தரப்பில் கல்கத்தா உயர்நீதிமன்றத்தில் வழக்கு போடப்பட்டது.
ஆனால் – அந்த மனுவும் நிராகரிக்கப்படவே, வழக்கு
விசாரணை துரிதகதியில் தொடர்ந்தது.

வழக்கில் பகத்சிங் சார்ந்த இயக்கத்தில் அவனுடன் சேர்ந்து
பங்காற்றிய சில நண்பர்களே, பிரிட்டிஷ் போலீசின்
சித்ரவதை தாங்க முடியாமல், குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு
எதிராக சாட்சியம் அளித்தனர்.
குற்றம் சாட்டப்பட்ட 18 பேர்களில், அரசுடன் ஒத்துழைத்த
3 பேர் வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டனர். மற்றவர்கள்
மீது மே 5, 1930 அன்று துவங்கிய விசாரண தொடர்ந்து
நடத்தப்பட்டு, செப்டம்பர் 10, 1930-ல் முடிவுக்கு
கொண்டு வரப்பட்டது.

அக்டோபர் 7, 1930 – 300 பக்கங்கள் அடங்கிய
தீர்ப்பு வாசிக்கப்பட்டது.

பகத்சிங், ராஜகுரு, சுக்தேவ் ஆகிய மூன்று பேருக்கும்
தூக்கு தண்டனையும், மற்ற 12 குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு
ஆயுள் தண்டனையும் விதிக்கப்பட்டது.

ப்ரிவி கவுன்சிலில் அப்பீல் செய்ய தண்டிக்கப்பட்டவர்களின்
சார்பில் ஒரு குழு அமைக்க பொதுமக்களால் ஒரு முயற்சி
முன்னெடுக்கப்பட்டது. பகத் சிங் முதலில் இதற்கு
ஒப்புக் கொள்ளவில்லை.

ஆனால் -யோசனைக்குப் பிறகு, இந்த வழக்கின் அப்பீல்
லண்டனில் விசாரிக்கப்பட்டால், இந்திய சுதந்திர
போராட்டங்களின் பின்னணியை இன்னும் பெரிய அளவில்
கொண்டு செல்ல அது உதவும் என்று நினைத்து அப்பீலுக்கு
ஒப்புக்கொண்டான்.

ஆனால் – இந்த அப்பீல் மனு ப்ரிவி கவுன்சிலால்
நிராகரிக்கப்பட்டது.

அப்பீல் மனு நிராகரிக்கப்பட்ட பிறகு, அகில இந்திய
காங்கிரஸ் தலைவர் மதன் மோகன் மாளவியா
இர்வின் பிரபுவுக்கு ஒரு கருணை மனு சமர்ப்பித்தார்.
இதுவும் நிராகரிக்கப்பட்டது.

மார்ச் 24, 1931 -தூக்கு தண்டனைக்கு -ஒரு மாவீரனின்
மரணத்திற்கு – நாள் குறிக்கப்பட்டது.

இதற்கிடையில், இவர்களை சிறையில் இருந்து மீட்க,
இயக்கத்தோழர் பகவதி சரண் வோரா (லாகூரில்
பகத் சிங் போலீசில் சிக்காமல் தப்ப உதவிய துர்காவதி
தேவியின் கணவன் ) முயற்சி ஒன்றினை மேற்கொண்டார்.
ஆனால், துரதிருஷ்டவசமாக் -சிறையில் தாக்குதல் நடத்தத்
தேவையான கையெறி குண்டுகளைத் தயாரிக்கும் முயற்சியில்,
அவர் ஈடுபட்டிருந்தபோது விபத்து ஏற்பட்டு உயிர் இழக்க
நேர்ந்தது.

சிறையில் இருந்தபோது, பகத்சிங் ஒரு நாட்குறிப்பை
எழுதிக் கொண்டிருந்தான். 404 பக்கங்கள் அடங்கிய
இந்த நோட்டுப் புத்தகங்களில், தன் லட்சியங்களையும்,
கார்ல் மார்க்ஸ், லெனின் ஆகியோரின் சிந்தனைகளைப்
பற்றியும் எழுதி இருக்கிறான்.(அவை இன்றும் பகத்சிங்
சம்பந்தப்பட்ட ஒரு நினைவகத்தில் பாதுகாப்பாக
வைக்கப்பட்டிருக்கின்றன )

பகத்சிங், ராஜகுரு, சுக்தேவ் ஆகிய மூன்று பேருக்கும்
மார்ச் 24, 1931 அன்று லாகூர் சிறை வளாகத்தில்
தூக்கு தண்டனையை நிறைவேற்ற நாள் குறிக்கப்பட்டிருந்தது.

ஆனால் – சில பிரச்சினைகளை எதிர்நோக்கிய
பிரிட்டிஷ் அதிகாரிகள், கடைசி நாளில் தண்டனையை
11 மணி நேரங்களுக்கு முன்னதாக –
அதாவது முன்தினம் மார்ச் 23ந்தேதியே
இரவு 7.30 மணிக்கு லாகூர் சிறையில் நிறைவேற்றி
விட்டனர். தோழர்கள் மூவரும் ஒன்றாகவே,
ஒரே சிறையில், ஒரே நேரத்தில் – வீர மரணம் எய்தினர்.
இந்திய சரித்திரத்தில், இப்படி இரவு நேரத்தில்
தூக்குப் போடப்பட்டவர்கள் இவர்கள் மட்டுமே !

சட்டப்படி தூக்கு தண்டனை நிறைவேற்றலை மேற்பார்வையிட
ஹானரரி மாஜிஸ்டிரேட்கள் யாரும் முன்வராத நிலையில்,
ஒரு வெள்ளைக்கார நீதிபதியின் முன்னிலையில் தண்டனை
நிறைவேற்றப்பட்டது.

bhagatsingh_deathcertificate-1
BhagatSingh_DeathCertificate

தண்டனை நிறைவேற்றப்பட்டதும், அவசர அவசரமாக –
சிறையின் பின்பக்க சுவர் ஒன்று உடைக்கப்பட்டு,
பின்பக்கமாக, ரகசியமாக உடல்கள் வெளிக் கொண்டு
செல்லப்பட்டன.
சிறையை அடுத்து இருந்த கண்டாசிங் வாலா கிராமத்தை
ஒட்டிய வனாந்திரப் பிரதேசத்தில், உடல்கள்
சிறை ஊழியர்களாலேயே எரியூட்டப்பட்டு, அவர்களது
அஸ்தி(சாம்பல்) அருகில் ஓடிக்கொண்டிருக்கும்
சட்லெஜ் ஆற்றில் உடனடியாகக் கரைக்கப்பட்டது.

800px-statues_of_bhagat_singh_rajguru_and_sukhdev-2

(தூக்கிலிடப்பட்ட இடத்தில் இன்று மூவருக்கும் சிலைகள்)

இந்திய சுதந்திரத்திற்காக போராடியவர்களில் –
மிக மிகச் சிறிய வயதில் – நிச்சயமாக இது தான் முடிவு
என்று தெரிந்தே, எந்தவித சலனமோ,கலக்கமோ,
வருத்தமோ இன்றி – தைரியமாக சாவை எதிர்கொண்ட
வீரர்கள் பகத் சிங், ராஜ்குரு, சுக்தேவ் ஆகியோர்.

இவர்களின் தண்டனை நிறைவேற்றப்பட்டதையொட்டிய
நாட்களில், கராச்சியில் அகில இந்திய காங்கிரஸ்
மகாநாடு நடைபெற்றது. இதில் கலந்து கொள்ள வந்த
காந்திஜிக்கு கோபக்கார இளைஞர்களால் கருப்புக் கொடி
காட்டப்பட்டது. காந்திஜியை எதிர்த்து பல ஆர்ப்பாட்டங்களும்
நடைபெற்றன.

bhagat_singhs_execution_lahore_tribune_front_page-3

(தூக்கிலிடப்பட்ட மறுநாள் காலை பத்திரிகைச் செய்தி )

இந்த காங்கிரஸ் மகாநாட்டில் – இந்த மூன்று இளைஞர்களும்
போராடிய விதத்தைத் தான் ஏற்கவில்லையே தவிர,
அவர்களது நோக்கம் புனிதமானது. அவர்களது தியாகம்
விலைமதிப்பற்றது. அவர்களுக்கு வீர அஞ்சலி
செலுத்துகிறோம் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மன்னிப்புக் கேட்டுக் கொண்டால், தண்டனை குறைக்கப்பட்டு
உயிர் வாழக்கூடிய வாய்ப்புகள்- பகத் சிங்கிற்கு இருந்தன.
ஆனால், அவன் அப்படி உயிர் பிழைக்க விரும்பவில்லை.
தன் உயிரை இந்த நாட்டு மக்களின் உணர்வைக் கிளர்ச்சியுறச்
செய்ய பயன்படுத்தவே அவன் விரும்பினான். விரும்பியே
தூக்குமரம் ஏறினான்.
சாவதற்கு முன் இறுதியாக அவன் எழுதி வைத்த
வார்த்தைகள் –

“நீங்கள் உயிரைக் கொல்லலாம்.
லட்சியங்களைக் கொல்ல முடியாது.
சாம்ராஜ்ஜியங்கள் ஒரு நாள் அழியும்.
ஆனால் லட்சியங்கள் என்றும் நிலைக்கும்.”

அவனது லட்சியங்கள் என்றும் நிலைக்கும் என்று கூறி
வீரன் பகத்சிங் இந்த நாட்டின் சுதந்திரத்திற்காக
தன் உயிரைத் தியாகம் செய்தான்.

ஆனால் – அந்த சுதந்திரம் இந்த நாட்டில் இன்று –
எப்படி, எந்த கோலத்தில் இருக்கிறது …?

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

5 Responses to (part-2) இரவில் தூக்கிலிடப்பட்டு -விடியும் முன்னே

 1. Rangarajan Rajagopalan சொல்கிறார்:

  Thank you Mr.Kavirimainthan.

  These are the REALLY GREAT PEOPLE.

 2. T.Rajendran சொல்கிறார்:

  அன்று கொண்ட கொள்கைக்காக 116 நாட்கள் உண்ணாவிரதம் இருந்தான் பகத்சிங்;
  இன்று கொண்ட கொள்ளைக்காக 116 நிமிடங்கள் மட்டுமே உண்ணாவிரதம் இருக்கிறார்கள் தலைவர்கள்!

 3. புது வசந்தம் சொல்கிறார்:

  இத்தனை அவசரமாக தண்டனை நிறைவேற வேறு சில தலைவர்களும் காரணமாக இருந்தனர் என்று படித்தது நினைவில் உள்ளது. உயிர் தியாகம் செய்தவர்கள் பலர், சிலர் மட்டுமே வெளிச்சத்தில்.

 4. visujjm சொல்கிறார்:

  பலமே வாழ்வு; பலவீனமே மரணம்!

 5. Jaya BALA SANKAR சொல்கிறார்:

  அவன் எவன் என்று சொல்லாமல் மரியாதைக்குரிய அவர் இவர் என்று சொன்னால் நல்லது நன்றி ஜெய்ஹிந்து

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.