சுஜாதா – சில நினைவுகள் ….

sujatha-4
திடீரென்று சுஜாதா அவர்களின் நினைவு வந்தது.
சுஜாதாவை – அவரது எழுத்துக்களைத் தான் –
நான் எப்போதிருந்து அறிவேன் …?

அறுபத்தெட்டு – எழுபதுகளில் …?
அவர் ‘கணையாழி’ யில் கடைசி பக்கத்தில்
ஸ்ரீரங்கம் எஸ்.ஆர். ஆக எழுதிக்கொண்டிருந்த போதிலிருந்தேநான் அவர் எழுத்துக்களைப் படித்துக் கொண்டிருந்தேன்.

நான் பணிபுரிந்து வந்த அலுவலகத்தில் நானும், M.P.மற்றும் D.R. என்கிற இரண்டு நண்பர்களும் ஆக மொத்தம் 3 பேர் தமிழில் நிறைய வாசிக்கும் பழக்கம் உடையவர்கள். புத்தகங்களுக்காக அதிகம் செலவிட வசதி இல்லாத காலம் அது.

நாங்கள் படிக்க விரும்பும் வார, மாத இதழ்களை பட்டியலிட்டோம். கிட்டத்தட்ட தமிழில் அப்போது வெளிவந்து கொண்டிருந்த 80 % இதழ்கள் அவற்றில் அடக்கம். அப்போதெல்லாம் இப்போது போல்
புற்றீசல்களாகப் பத்திரிகைகள் இல்லை. தரமானவை மட்டுமே இருந்தன. அவற்றை மூன்றாகப் பிரித்தோம். அவரவர் முன்னுரிமை கொடுக்கும்
புத்தகங்களை அவரவர் வாங்க வேண்டியது. பின்னர் எங்களுக்குள் KM to MP, MP to DR, and DR to KM – இப்படி பரிமாறிக்கொள்ள ஆரம்பித்தோம். செலவு கிட்டத்தட்ட எல்லாருக்கும் ஒரே அளவில் இருக்கும்படி பார்த்துக் கொண்டோம். எல்லாருக்கும் எல்லாமும்
படிக்கக் கிடைத்தது. இதில் அவ்வப்போது ஓசியில்
படிக்கும் மற்ற நண்பர்களும் உண்டு.

ஆறு மாதத்திற்கொரு தடவை பழைய வார, மாத இதழ்களை எல்லாம் எடைக்கு போட்டு விட்டு, கிடைக்கும் காசுக்கு நல்ல நாவல்களாக
வாங்குவோம். அந்த நாவல்கள், ஒரு சிறிய
நூலகம் மாதிரி உருவாகிக் கொண்டிருக்கிறது. எனக்கு பணி மாற்றல் உத்திரவு வரும் வரை 6-7 ஆண்டுகள் வரை இந்தப் பழக்கம் தொடர்ந்தது.

அப்போது – என் விருப்ப பட்டியலில் இருந்தவற்றில்
கணையாழியும் ஒன்று. சுஜாதாவின் எழுத்துக்கள் பிடிக்குமே தவிர, அவரைப்பற்றிய தனிப்பட்ட தகவல்கள் எதுவும் நீண்ட நாட்கள் வரை தெரியாது ( எதிலும் வெளிவரவில்லை ).

நான் இளைஞனாக இருக்கும்போது பிடிக்க ஆரம்பித்த அவரது எழுத்துக்கள், நடு வயது கடந்து முதியவன் ஆன பின்பும் தொடர்ந்து பிடித்துக் கொண்டே இருந்தது.

அவரது வித்தியாசமான, சுருக்கமான, அர்த்தமுள்ள தமிழ்,
நளினமான நடை, விருவிருப்பு, வேகம், மர்மம்,
மறைந்திருந்த கவர்ச்சி, விஞ்ஞான பூர்வ அணுகுமுறை,
தொடர்ந்த மெல்லிய நகைச்சுவை உணர்வு ஆகியவை
அப்போது எல்லா வயதினரையும் கவர்ந்தன.

அழுத்தமான, ஆழமான, மனதில் பாதிப்பு ஏற்படுத்தக்கூடிய அளவில்- உணர்வுபூர்வமாக அவர் எழுதவில்லை தான். ஆனால் வெகு சுலபத்தில் அவரால் படிப்பவர் மனதில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்த முடிந்தது.

நான் 45-50- வயதை நெருங்குகின்ற காலங்களில் –
சுஜாதா அவர்களிடம் சில விஷயங்களை விவாதிக்க வேண்டும் என்று விரும்பினேன். 40-45 வயதுகளில் என் தேடல் உணர்வு அதிகரித்தது. ஆன்மிக விஷயங்கள் நிறைய தேடிப்படிக்க ஆரம்பித்தேன். நிறைய பயணங்கள் மேற்கொண்டேன்.
தொலைக்காட்சிகள் எல்லாம் வராத காலம் அது.
இருந்தது இரண்டே வழிகள் -ஒன்று ஆன்மிகப் பெரியவர்களின் நேரடி உரை – மற்றொன்று விஷயம் தெரிந்தவர்களின் – புத்தகங்களின் துணை.

சுஜாதா உச்சத்தில் இருந்த காலம் அது.
அப்போது அவர் தொடாத ஒரு விஷயம் ஆன்மிகம்.
கடவுள் நம்பிக்கை அவருக்கு இருந்ததாக அவர் எழுத்துக்கள் எதிலும் அதுவரை அவர் காட்டிக்கொண்டதில்லை.

அவருக்கு நம்பிக்கை இருந்ததா இல்லையா என்பதை அவர் சொல்லா விட்டாலும், கடவுள் நம்பிக்கை இருப்பதாகக் காட்டிக் கொள்வது தன் இமேஜுக்கு ஒத்து வராது என்று அவர் நினைக்கிறாரோ என்று எனக்குத் தோன்றியது.
அவரது சில எழுத்துக்கள் இருப்பையே சந்தேகிப்பது போலவும், சில சமயங்களில் நம்பிக்கையை நக்கல் செய்வது போலவும், இருப்பதாக நான் நினைத்தேன்.

அவர் ஒரு சிறந்த அறிவாளி என்பதோடு விஞ்ஞானியும் கூட என்பதால் சந்தர்ப்பம் கிடைத்தால், அவரிடம் இது குறித்து விளக்கமாகப் பேச நான் விரும்பினேன். ஆனால் அதற்கான முயற்சி எதையும் நான் எடுக்கவில்லை.

15-16 வருடங்களுக்கு முன்னால் ஒரு தடவை, வடக்கேயிருந்த நான் ஏதோ வேலையாக சென்னை வந்திருந்தேன். டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலையில்,
ஏவிஎம் ராஜேஸ்வரி திருமண மண்டபம் அருகேயுள்ள
‘சரவண பவனில்’ நின்று கொண்டே சாப்பிடும் இடத்தில்
( வட்டமான மேஜை ) ஒரு காப்பி மட்டும் வாங்கி
பருகிக்கொண்டிருந்தேன். சட்டென்று ஒரு ஆச்சரியம்.
எதிரே சுஜாதா அவர்கள் கையில் ஒரு காப்பி டம்ளர்-டபராவுடன் இடம் தேடி வந்து கொண்டிருந்தார். தனியாகத் தான் இருந்தார். நான் அவருக்கு அழைப்பு விடுவது போல் சற்று நகர்ந்துகொண்டு
அவரைப் பார்த்தேன். அவரும் அதை உணர்ந்து கொண்டு
என் மேஜைக்கு வந்தார்.
” நான் உங்கள் எழுத்தை மிகவும் விரும்புபவன்.
உங்களை இங்கு எதிர்பாராமல் சந்திப்பதில் எனக்கு மிகவும் மகிழ்ச்சி” என்று சொல்லி என்னை அறிமுகப்படுத்திக் கொண்டேன். அந்த காப்பி சாப்பிடும் நேரத்துக்குள் என்ன பேசுவது …?

“உங்களோடு 2-3 மணிநேரம் பேசக்கூடிய வாய்ப்பு கிடைத்தால் மிகவும் சந்தோஷப்படுவேன்” என்றேன். ஒரு வாரம் கழித்து இந்த நம்பருக்கு போன் செய்யுங்கள். எப்போது இயலும் என்று சொல்கிறேன் என்றார். ஆனால் நான் மறுநாளே ஊர் திரும்ப வேண்டி இருந்தது. அதன் பின்னர் உடனடியாக சென்னை வரக்கூடிய நிலையில் இல்லாததால் – பின் தொடரவில்லை…!

மீண்டும் இரண்டு வருடங்களுக்குப் பிறகு ஒரு வாய்ப்பு. என் நண்பர் ஒருவரின் மகன் திருமணம் – வடபழனி திருமண மண்டபம் ஒன்றில். வரவேற்பு நிகழ்வின் போது எதிர்பாராத விதமாக மண்டபத்தில் சுஜாதா அவர்கள் வந்திருந்ததைப் பார்த்தேன். பெண்ணின் தந்தை அவருக்கு நல்ல பழக்கமாம். நான் என் நண்பரிடம், “சுஜாதா அவர்களுடன் கொஞ்சம் பேச
வேண்டியிருக்கிறது. அவர் அமர்ந்திருக்கும் நாற்காலிக்கு
அடுத்த நாற்காலியில் இருப்பவரை எப்படியாவது கொஞ்சம் கிளப்பி வேறு இடத்திற்கு அழைத்துப் போங்களேன் என்றேன்.
நண்பர் என்னை அழைத்துக்கொண்டு போய் சுஜாதாவிடம்
அறிமுகப்படுத்தி விட்டு, பக்கத்து நாற்காலியில் இருந்தவரை கிளப்பிக் கொண்டு போய் விட்டார். நான் அருகே காலியான நாற்காலியில் அமர்ந்து கொண்டு, சுஜாதாவுடன் சகஜமாகப் பேச ஆரம்பித்தேன்.

– மீண்டும் என் துரதிருஷ்டம் –
அவரது திரையுலக நண்பர் ஒருவரின் உருவத்தில் எனக்கு வில்லன் வந்து சேர்ந்தார். சுஜாதா எழுந்து அவருடன் போய் விட்டார்.

பிறகு அவரை சந்திக்கக்கூடிய வாய்ப்பு கைகூடவே இல்லை.

ஆனால் – அதற்கான அவசியம் இல்லாமல்,
அதற்குப் பிறகான காலங்களில், வயதான சுஜாதா விஞ்ஞானத்தை விட்டு வெளியே வந்தார்.
தன் இமேஜை விட்டு வெளியே வந்து,
நிறைய ஆன்மிக விஷயங்களைப் பற்றி எழுத
ஆரம்பித்தார். திருவரங்கம் ரங்கநாதரின் மீதும்,
ஆழ்வார்களின் பாசுரங்களின் மீதும் அவருக்கு உண்டான
பற்றை வெளிப்படையாகத் தெரிவிக்க ஆரம்பித்தார்.

சுஜாதாவின் மறைவிற்குப் பிறகு, அவரது மிகத்தீவிர
வாசகரும், நெருங்கிய நண்பருமான தேசிகன் அவர்கள் தன் வலைப்பக்கத்தில் பிப்ரவரி 2010-ல்
எழுதியதிலிருந்து மனதை நெகிழ்விக்கும் சில வரிகளை இங்கே கொடுப்பது சுஜாதா அவர்களின் கடைசிக் கால உணர்வுகளை விளக்க பொருத்தமாக இருக்குமென்று நினைக்கிறேன்.

————
“எப்படியாவது என்னை ஸ்ரீரங்கம் அழைச்சுண்டு போயிடு.
என் பிறந்த நாளைக்கு அங்கே போனா நன்னா இருக்கும்.
முடியுமா?” என்று என்னிடம் மூன்று ஆண்டுகளுக்கு
முன்பு சுஜாதா கேட்டார்.

ஒவ்வொரு வாரமும் அவரை பார்க்கும் போதும் “இந்த வாரம் டிக்கெட் இருக்கா பார்” என்று கேட்பார்.

“நிச்சயம் போகலாம்,” என்று சொல்லியும் அவர் பிறந்தநாளன்று போக முடியாமல், மே மாதம் கடைசி வியாழக்கிழமை (31 மே, 2007) அன்றுதான் எங்களால் போக முடிந்தது.

முதல் முறை ரயிலில் போகும் குழந்தை போல் ஆர்வமாக இருந்தார். —

ஸ்ரீரங்கத்தில் காலை ஐந்து மணிக்கு முன்பு இறங்கியவுடன் சுஜாதா உற்சாகமும் சந்தோஷமுமாக, “கோயிலுக்கு, வெயிலுக்கு முன்னாடி போயிட்டு வந்துடலாம்” என்றார்.

காலை, ஸ்ரீரங்கம் கோயிலுக்கு அவர் தம்பியுடன்
( திரு.எஸ்.ராஜகோபாலன் ) கிளம்பினோம். போகும் முன்,
“எனக்குக் கொஞ்சம் இட்டு விடு” என்று தன் தம்பியிடம் கேட்டு, நெற்றியில் ஸ்ரீசூர்ணம் இட்டுக்கொண்டு புறப்பட்டார்.

“வெறும் கால்ல நடந்தா எரியும், கோயில் உள்ளே சாக்ஸ் போட்டுக்கலாமா?”

—-

“சின்ன வயதில் அப்பாவுடன் ஸ்ரீரங்கம் கோயிலுக்குப்
போகும்பொழுது, கோயில் தூண்களை அப்பா தொட்டுப்பார்த்துக் கொண்டே வருவார். ஒரு நாள் அவரிடம் அதுபற்றிக் கேட்டபோது “இந்தத் தூண்களை திருமங்கையாழ்வார் தொட்டுப் பார்த்திருப்பார்; அவர் தொட்ட தூண்களை நானும் தொடுகிறேன்.
நீயும் தொட்டுப்பார்” என்பார்.

அதே போல் ஆயிரங்கால் மண்டத்துக்குப் போகும் வழியில் இருக்கும் மணல் மீது, பொசுக்கும் மத்தியான வெயிலையும் பொருட்படுத்தாது சிலசமயம் நடந்து செல்வார்.
” ஏம்ப்பா வெயில்ல போற?” என்று கேட்டால்,
“யாருக்குத் தெரியும்? இந்த இடத்தில எத்தனையோ ஆழ்வார்கள் நடந்து போயிருப்பா. அவா போன பாதைல நாம போறோம்கறதே பெரிய விஷயம் இல்லையா?” என்பார்.

அப்பா கைபிடித்துக்கொண்டு போன அந்த வயதில்,
அவர் சொன்னது பெரிய விஷயமாகப் படவில்லை,
அல்லது அதில் பொதிந்துள்ள அர்த்தத்தை
என்னால் புரிந்துக்கொள்ள முடியவில்லை.”

—–
“இங்கதான் கார்த்திகைக்கு சொக்கப்பானை கொளுத்துவாங்க… இங்கே தான் ஸ்ரீஜயந்தி உரியடி உற்சவம் நடக்கும்… எவ்வளவு தடவை இந்தக் கோயிலைச் சுத்தியிருக்கோம்!”

கோயிலுக்குள் போகும்போது கார்த்திகை கோபுரவாயிலில் திருப்பதியில் இருப்பது போல சிறிய குழாய் வழியாக நீர் கசிந்து கால்களை அலம்புவதைப் பார்த்து, “அட ஸ்ரீரங்கத்லயும் வந்துடுத்தா?” என்றார்.

அவருடைய உடல் கொஞ்சம் தளர்ந்திருந்த காரணத்தால்
சிறிது நடந்தபின் ஆங்காங்கே சற்றுநேரம் உட்கார்ந்துகொண்டார்.

கோயிலுக்குள் பெருமாள் சேவிக்க நெருங்கும்போது
அவர் முகத்தில் ஒரு விதமான மகிழ்ச்சி கலந்த பரபரப்பு இருந்தது.  சேவித்துவிட்டு வெளியே வந்தபோது என் தோளை அழுத்திவிட்டு,
“எப்படியோ பெருமாள்ட்ட என்னைக் கொண்டு வந்து
சேர்த்துட்டேப்பா!” என்ற போது அவர் கண்களின் ஓரத்தில் கண்ணீர் தேங்கியிருந்ததைப் கவனிக்க முடிந்தது.

பின் தாயார் சந்நிதியிலும் சேவித்துவிட்டு வெளியே கொஞ்சம் நேரம் உட்கார்ந்துகொண்டார்.

———–

ஒன்பது மாதங்கள்( பிப் 27, 2008 ) கழித்து ஆசார்யன் திருவடிகளை அடைந்தார்

————

சுஜாதா அவர்கள் ஸ்ரீரங்கம் கோயில் பற்றி சொன்னது போன்ற வேறு சில உணர்வுகள் எனக்கு அதற்குப் பல வருடங்கள் முன்னரே தஞ்சை பெரிய கோயிலில் ஏற்பட்டதுண்டு.

திருச்சியிலிருந்து – தஞ்சை ஒன்றரை மணி நேரப்பயணம் தான். பவுர்ணமி நாளாகப் பார்த்து போவேன். அஸ்தமிக்கும் நேரத்திற்குப் போய், நந்தி சிலைக்கு இடது பக்கத்தில் இருக்கும் பரந்த புல்வெளியில் உட்கார்ந்து கொண்டு, நிலவொளியின் பின்னணியில் கோபுரத்தை
பார்த்துக் கொண்டே இருப்பேன்., கூட்டம் குறைந்த பிறகு – அப்படியே புல்வெளியில் சாய்ந்து படுத்துக் கொண்டு கோபுரத்தையும், கோயில் முழுவதையும் பார்த்துக் கொண்டே, இதைக் கட்டும்போதும்,
கட்டி முடித்தபின்னரும் – அந்த மாமன்னன் ராஜராஜ சோழன் நடந்த இடம், நின்ற இடம் அல்லவா இது….
இந்த இடத்தில் இருந்து கொண்டு தானே கோபுரத்தைப் பார்த்திருப்பான் –
அப்போது அவன் உணர்வுகள் எப்படி இருந்திருக்கும் என்றெல்லாம் நினைப்பேன். ஆயிரம் ஆண்டுகள் முன்னரே இவ்வளவு செயலாக்கத்தோடும், பராக்கிரமத்தோடும் இருந்த நம் பரம்பரை
ஏன் இன்று இப்படி இருக்கிறது – என்கிற
வருத்தமும் தோன்றும்.

——————–

தேசிகன், சுஜாதாவின் ஸ்ரீரங்கம் குறித்த உணர்வுகளை
எழுதியிருப்பதைப் படித்ததற்குப் பிறகு –
அடுத்த தடவை நான் ஸ்ரீரங்கம் கோயிலுக்குச் சென்ற போது – சுஜாதா அவர்களும், அவரது தந்தையாரும் கூறியவை எல்லாம் நினைவில் வந்தது. அனுபவபூர்வமான வார்த்தைகள்…..
நானும் கல்தூண்களையும், சிற்பங்களையும் தொட்டுக்கொண்டே, தடவிப்பார்த்துக் கொண்டே – நடந்தேன்.

————————-

என்றுமே மறக்க முடியாத,
வித்தியாசமான ஒரு பண்பாளர் சுஜாதா ரங்கராஜன் அவர்கள்.

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

10 Responses to சுஜாதா – சில நினைவுகள் ….

 1. விசு சொல்கிறார்:

  காவிரிமைந்தன் சார்,

  சுஜாதாவைப் பிடிக்காதவர்கள் யாருமில்லை.
  அவர் இடத்தைப் பிடித்தவர்களும் யாருமில்லை.

 2. rathnavelnatarajan சொல்கிறார்:

  சுஜாதா – சில நினைவுகள் ….= திடீரென்று சுஜாதா அவர்களின் நினைவு வந்தது.
  சுஜாதாவை – அவரது எழுத்துக்களைத் தான் –
  நான் எப்போதிருந்து அறிவேன் …? = வி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன் = மிகவும் நெகிழ வைத்த பதிவு. எனது பக்கத்தில் பகிர்கிறேன். நன்றி: வி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன்

 3. Kavignar Ara சொல்கிறார்:

  கவிஞர் ஆரா…….. என்னுடன் அவர் பேசிய நாட்கள் என் நினைவுக்கு வந்தது நான் பெங்களூரில் பணியாற்றிய போது என் நட்பான கோவை ரவிச்சந்திரன் அவரிடம் என்னை அழைத்துப் ப்போனார்.1977 ம் வருடம். ஒரு தேநீர் மிஸஸ் சுஜாதா கொடுத்தார் . சாப்பிட்டு விட்டு பல விடயங்களை பேசினேன் . என்னை சிலாகித்த பெருந்தகை அடிக்கடி வாங்க என்றார். என்னால் முடியல.மீண்டும் 3 முறை புத்தக கண்காட்சியில் சென்னையில் கண்டபோதும் பேசிய போதும் ரவி எங்கே என்றார். தெரியலை என்றேன் நல்ல பையன்ன்னார்.ஆழமான உணர்வுகள் நெஞ்சை அலைகழித்தன மறைவு பெரிதும் வெறுமை கொணர்ந்தது. ஏதோ எழுத முடியுது என்றால் (நீங்கள்) அவர் படிக்கச் சொன்ன சுந்தர ராமசாமியும்/ கி.ராவும் காரணங்களாய் இருக்கு என்ற உண்மை பளிச்சிடுகிறது.இனிய நினைவுகளுடன் நான் . நன்றி காவிரி மைந்தன் சார் என் பக்கம் பகிர்வேன் இதை முகநூலில்.
  நன்றியும் நல் வாழ்த்துகளும்
  26 8 2014…….அறக்கட்டளையும் உயிர்மையும் நடாத்தும் கூட்டங்களை தவறாது பங்கேற்கிறேன் .kavignarara@gmail.com

 4. chandraa சொல்கிறார்:

  it is always interesting to read sujatha…. however his dialogues in the film boys was vehemently criticised by all. vulgar jokes….. and he had alsolearnt about that…remained silent …he was a great writer.

 5. gopalasamy சொல்கிறார்:

  Sujatha trend setter. He was having his own style.
  Sujatha and k. Rangarajan could not receive sakithya acadamy due to politics.

 6. Ganpat சொல்கிறார்:

  இன்று தமிழகத்தில் எந்த ஒரு நடிகனும் சிவாஜியின் சாயல் இன்றி நடிக்க முடியாது.எந்த ஒரு இளைய எழுத்தாளனும் சுஜாதாவின் சாயல் இன்றி எழுதமுடியாது.அறிவு எனும் பேனாவில் சுவாரசியம் என்ற மை நிரப்பி விஞ்ஞானம் ஆன்மீகம் இலக்கியம் சரித்திரம் சமூகம் நகைச்சுவை போன்ற பல தாள்களில் எழுதி குவித்தவர்.அவர் நிரந்தரமானவர் அழிவதில்லை எந்த நிலையிலும் அவர்க்கு மரணம் இல்லை.

 7. ramanans சொல்கிறார்:

  நெகிழ்ச்சியான கட்டுரை காவிரி மைந்தன்.

  நேரம் இருக்கும்போது இந்தக் கட்டுரையை வாசியுங்கள்..

  http://ramanans.wordpress.com/2013/12/09/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE-%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D-by-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B5/

  அமுதவன் எழுதியிருக்கும் சுஜாதாவின் இந்த நூல் அவரது மற்றொரு பரிமாணத்தைச் சொல்கிறது, அருமையாய்.

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   வாசித்தேன் – நன்றி ரமணன்.

   முழு நூலையுமே வாசிக்க வேண்டும் போல் இருக்கிறது..

   -வாழ்த்துக்களுடன்,
   காவிரிமைந்தன்

 8. chandraa சொல்கிறார்:

  Sujathasmarvellous greatest contribution towards tamil literature is that he had translated THIRUKKURAL in its simplest form.. …in ninetees… the present younger generation will be delighted to read the book… vardamanan padhippagamhad released the wonderful book…..

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.