ராஜீவ் காந்தி – டிஜிபி மோகன்தாஸ் கூறிய “அசல்” கதை…. (சாமிகளின் சாகசங்கள் – பகுதி-4 )

ராஜீவ் கொலை தொடர்பாக மூன்று விசாரணைக் குழுக்கள் அமைந்தன.
ஒன்று – திரு.டி.கார்த்திகேயன் அவர்கள் தலைமையிலான சிபிஐ
சிறப்புப் புலனாய்வுக் குழு விசாரணை.

இரண்டாவது – ராஜீவ் மரணமடைந்த 7 நாட்களில் ராஜீவுக்கு வழங்கப்பட்ட
பாதுகாப்புகளில் ஏதேனும் குறைபாடுகள் இருந்ததா என்பதைக் கண்டறிய உச்சநீதிமன்ற நீதிபதி ஜே.எஸ். வர்மா தலைமையில், 1991 ஆம் ஆண்டு
மே 27 ம் தேதி அமைக்கப்பட்ட விசாரணை ஆணையம். ஓராண்டு
காலத்தில் இந்த விசாரணை ஆணையம் தனது பணியை முடித்து
1992 ஜூன் மாதம் அரசிடம் பரிந்துரையை தாக்கல் செய்தது.

இந்த ஆணையம் நியமிக்கப்பட்டபோது பிரதமராக இருந்தவர் சந்திரசேகர். சட்ட அமைச்சராக இருந்து இதற்கான நடவடிக்கைகளை எடுத்தவர் திரு.சுப்ரமணியன் சுவாமி. ஆனால் இந்த கமிஷன் தனது அறிக்கையை தாக்கல் செய்த போது பிரதமராக இருந்தவர் காங்கிரஸ் கட்சியைச் சார்ந்த திரு.நரசிம்மராவ்.
ஆனால் நரசிம்ம ராவ் காலத்திலும், சுப்ரமணியன் சுவாமி
அமைச்சராக இல்லையே தவிர, சில செல்வாக்கான கமிட்டிகளில் பதவியில் இருந்தார்.

3வது – ராஜீவ் கொலைக்குப் பின்னால் நடந்த சதி, பின்னணி காரணங்கள்
தொடர்புள்ள தனி நபர்கள், நிறுவனங்கள் பற்றிய விசாரணைகளை
நடத்த அமைக்கப்பெற்ற நீதிபதி ஜெயின் தலைமையிலான ஜெயின் கமிஷன்.
12 முறை கால நீட்டிப்புப் பெற்று 6 ஆண்டுகாலம் விசாரணை நடத்திய இந்த ஆணையம், நரசிம்மராவ் தலைமையிலான மத்திய அரசின் மனப்பூர்வமான ஒத்துழைப்பு கிடைக்காத
நிலையில் கடைசியில் ரெண்டுங்கெட்டான் அறிக்கை
ஒன்றை மட்டும் சமர்ப்பித்து விட்டு ஒதுங்கிக் கொண்டது.

இதற்குப் பின்னரும் ஒரு கமிட்டி – மல்டி டிஸிப்ளின் மானிடரிங்க் ஏஜென்சி ( Multi-Disciplinary Monitoring Agency (MDMA) என்ற பெயரில் டிசம்பர்,2, 1998-ல் அமைக்கப்பட்டு, அது தனது வேலையை இன்ன்ன்ன்ன்ன்னமும் தொடர்ந்து கொண்டிருக்கிறது.

புலிகளின் ஆயுதக் கொள்முதல் விஷயத்தை மொத்த பொறுப்பேற்று
செய்துவந்ததாக சொல்லப்படும் ‘கே.பி.’
என்கிற குமரன் செல்வராஜா என்கிற  செல்வராசா பத்மநாதன் ஏற்கெனவே, இலங்கை போலீசாரால் வெளிநாடு ஒன்றில் வைத்து கைது செய்யப்பட்டு, இலங்கைக்கு கொண்டுவரப்பட்டு, விசாரிக்கப்பட்டு, அவரிடமிருந்து தேவையான அனைத்து விவரங்களும் சேகரிக்கப்பட்ட பின்னர் – இலங்கையிலேயே ஓரளவு சுதந்திரமாக  நடமாட விடப்பட்டுள்ளார். தற்போது அவர் ராஜபக்சே அரசின் ஆதரவிலும், பாதுகாப்பிலும் தான் இருக்கிறார்.

இதே ஆசாமியைக் கைது செய்ய முன்னர் இண்டர்போல் உதவிய நாடிய
இந்திய புலனாய்வு நிறுவனம், உலகின் 23 நாடுகளுக்கு கைது வேண்டுகோள் விடுத்த புலனாய்வு நிறுவனம் – இன்று இவரைப் பிடித்து விசாரிக்க எந்த அக்கரையும் காட்டுவதாகத் தெரியவில்லை …..
அது ஏன் என்பது அந்த “சாமி”க்கே வெளிச்சம்…..!!!

ராஜீவ் காந்தி கொலைச் சம்பவம் நிகழ்ந்ததும், அதனை விசாரிக்க
சிபிஐ யின் சிறப்பு புலனாய்வுக் குழு ஒன்று அமைக்கப் பட்டது.
இதனைத் தலைமை தாங்கி இயக்க தகுந்த போலீஸ் அதிகாரிகள்
3 பேர் அடங்கிய ஒரு பட்டியலைத் தருமாறு, பிரதமர் சந்திரசேகர்
தமிழக அரசைக் கேட்டுக் கொண்டார். தமிழகமும் தந்தது.
அதில் முதலாவது நபராக இருந்தவர் முன்னாள் தமிழக டிஜிபியும்,
புலிகளைப் பற்றி நன்கு அறிந்தவருமான மோகன் தாஸ்.

சந்திரசேகர் இந்தப் பட்டியலை திருமதி சோனியா காந்தியிடம்
காட்டி, அவரது விருப்பத்தைக் கேட்டிருக்கிறார். “அன்னை” இந்த
மூன்று பேர் அடங்கிய பட்டியலை ஒரு பக்கம் ஒதுக்கி விட்டு,
அவராகவே ஒரு பெயரைச் சொல்லி இருக்கிறார் –

அவர் – கர்னாடகா ஐபிஎஸ் கேடரைச் சேர்ந்த திரு.டி.ஆர்.கார்த்திகேயன்.
பின்னர், அவரது தலைமையில் தான் சிபிஐ யின் சிறப்பு புலனாய்வுக் குழு
அமைக்கப்பட்டு விசாரணை நடந்தது.

தமிழகத்தில் எம்ஜிஆர் முதல்வராக இருந்த காலத்தில் அவருக்கு
மிகவும் பிடித்தமானவராகவும், டிஜிபி யாகவும் செயல்பட்டவர்
திரு. மோகன் தாஸ். எம்ஜியாருக்கும் -பிரபாகரனுக்கும் இருந்த
தொடர்புகள் அனைத்தும் இவர் மூலமாகவே நிகழ்ந்தன.

k.mohandas

ராஜீவ் கொலைச் சம்பவம் நடந்து சில காலங்களுக்குப் பிறகு,
பதவியிலிருந்து ஓய்வு பெற்றிருந்த மோகன் தாஸ் ” the assasination ”
என்கிற பெயரில் ஒரு புத்தகம் எழுதினார். புலனாய்வுத் துறைகளின்
மூலம் அவருக்குக் கிடைத்த தகவல்கள் அனைத்தையும் ஒன்று திரட்டி,
ராஜீவ் காந்தியின் கொலை பற்றிய பின்னணியை அவர் ஒரு
கற்பனைக் கதை போல் அதில் தந்தார்.
சட்டச்சிக்கல் எதுவும் வந்துவிடக்
கூடாது என்பதால் சம்பவத்தில் இடம் பெற்றிருந்த அத்தனை
பாத்திரங்களுக்கும் புனைப்பெயர் கொடுத்திருந்தார்.
(இந்த புத்தகம் வெளியில் கிடைக்காதவாறு பிறகு, மத்திய அரசு
பார்த்துக்கொண்டது …!!)

கீழ்க்கண்ட புனைப்பெயர்களைத் தொடர்பு படுத்தி கதையை படிக்க
வேண்டும்.

ராஜீவ் – ஜார்வின்
இந்தியா – டயானோ
வி.பி.சிங் – வப்சப்
அருண் நேரு – நேரோ
செய்தியாளர் சித்ரா சுப்ரமணியன் – டிச்ரா
சந்திரசேகர் – பேர்ட்ஸ்லே
சந்திரா சாமி – பாதர் மூன்ஷைன்
பிரபாகரன் – சுந்டன்
சிவராசன் – சைலோப்ஸ்

டிஜிபி மோகன்தாஸ் எழுதிய கதையில் –

ராஜீவ் கொலை வழக்கில் நிகழ்த்தப்பட்ட விசாரணைகளை
மறைமுகமாகக் குறை சொல்கிறார் மோகன் தாஸ்.
——————–

டயானோ நாட்டின் பிரதமராக இருந்த ஜார்வின்,
அவரது அமைச்சரவையிலேயே பாதுகாப்பு அமைச்சராக இருந்த
வப்சப் என்பவரால் ஆயுதங்கள் வாங்கிய விவகாரத்தில்
லஞ்சம் வாங்கியதாக காட்டிக் கொடுக்கப்படுகிறார்.
இந்த ஆயுத பேரங்களை நிகழ்த்தியவர் ஜார்வின் அமைச்சரவையில்
இருந்த இன்னொரு அதிகாரம் மிக்க அமைச்சரான நேரோ….!!!

இந்த ஊழல், ஜெனீவாவில் ஒரு செய்தித்தொடர்பாளராகப்
பணிபுரியும் டிச்ரா என்பவரால் பகிரங்கப்படுத்தப்படுகிறது.

ஜார்வினின் அரசு கவிழ்கிறது. நாட்டில் தேர்தல்கள் நடக்கின்றன.
இப்போது வப்சப், பிரதமர் ஆகிறார்.

ஆனால், வப்சப் ஆட்சியில் தொடர முடியாதவாறு,
ஜார்வினும் -பேர்ட்ஸ்லே யும்
கூட்டு சேர்ந்து கவிழ்க்கிறார்கள்.

உலக அளவில் ஆயுத பேர தொடர்புகளை உடையவரும்,
ஆட்சிகளை மாற்றுவதிலும், கவிழ்ப்பதில் கைதேர்ந்தவருமான
பாதர் மூன்ஷைன் களத்தில் இறங்குகிறார். சுந்டனுக்கு,
அவரது போரட்டத்திற்குத் தேவையான ஆயுதங்களைத் தருவதாகச்
சொல்லி, ஜார்வினை தீர்த்துக்கட்ட திட்டம் தீட்டுகிறார்.

சைலோப்ஸ் மூலமாக ஜார்வினை தீர்த்துக் கட்டும் திட்டம்
நிறைவேறுகிறது.

—————————————-

திருமதி மரகதம் சந்திரசேகர் போட்டியிட்ட தொகுதியில் ராஜீவ் காந்தி
தனது தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் கலந்துகொள்ள வந்தபோது
தான் துயர சம்பவம் நிகழ்கிறது.

இந்த சம்பவத்திற்கு தொடர்புடைய சில விஷயங்கள் இன்னும் சரியாக
வெளிப்படுத்தப்படாமலே இருக்கின்றன –

திருமதி மரகதம் சந்திரசேகரின் மகன் லலித் என்பவருக்கு ஐந்து லட்சம்
ரூபாய் கொடுக்கப்பட்டதாக சிவராசனின் டைரியில் ஒரு குறிப்பு
காணப்படுகிறது. இந்த லலித் என்பவர் இலங்கையைச் சேர்ந்த ஒரு
பெண்ணைத் திருமணம் செய்திருந்தார். அந்த இலங்கைப் பெண்ணின்
தொடர்பை வைத்துக் கொண்டு, தனு திருமதி மரகதம் சந்திரசேகரின்
வீட்டிற்கும் விஜயம் செய்திருக்கிறார்.

ராஜீவ் காந்தி – திருமதி மரகதத்தின் தொகுதியில் பிரச்சாரம் செய்யும்
நிகழ்ச்சி முழுவதையும் வீடியோவில் ஒளிப்பதிவு செய்து கொடுக்க
ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.
அதன்படி ஸ்ரீபெரும்புதூரில் உள்ள
விஜயா வீடியோ சென்டரை சேர்ந்தவர், கூட்டமேடையில் நின்றபடி
அந்த நிகழ்ச்சியை பதிவு செய்தார். ராஜீவ்காந்தியின் கொடுமையான
கடைசி நிமிடங்கள் அந்த வீடியோவில் நிச்சயம் பதிவாகியிருக்கும்.
அவ்வாறு எடுக்கப்பட்ட வீடியோ கேசட்டை பிற்பாடு எஸ்.ஐ.டி
கைப்பற்றி இருக்கிறது.

இந்த கேசட்டை எஸ்.ஐ.டி. யிடமிருந்து, அப்போதைய உளவுத்துறை
தலைவராக இருந்த எம்.கே.நாராயணன், ‘மேல் விசாரணைக்காக” என்று  சொல்லி வாங்கிக் கொண்டிருக்கிறார்.
அதன் பின்னர்
அந்த வீடியோ கேசட் கடைசி வரையில் நாராயணனிடமிருந்து
திரும்ப வரவில்லை. விசாரணை ஆவணங்களில் அது குறித்த
தகவல்கள் எதுவும் சேர்க்கப்படவும் இல்லை.
அந்த வீடியோ கேசட் என்ன ஆயிற்று…? அதில் அப்படி என்ன இருந்தது …? என்று பலரும் இன்று வரை கேட்டுக்கொண்டே இருக்கிறார்கள்.

ராஜீவுக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு ஏற்பாடுகளில் இருந்த பலவீனம்
குறித்து ஆராய அமைக்கப்பட்ட வர்மா கமிஷனும் அந்த வீடியோ
கேசட்டை கேட்டது.
இதே காரணத்திற்காக அமைக்கப்பட்ட ஜெயின் கமிஷன்,
பல் நோக்கு விசாரணை கமிஷன் ஆகியவையும்
அந்த சேட்டை கேட்டன.
ஆனால் எம்.கே.நாராயணனிடமிருந்து இன்று வரை
சரியான பதில் இல்லை…..!!!
அந்த நாராயணனை உரிய முறையில் ( ? ) கேள்வி கேட்க
ஆளும் யாரும் இல்லை….!!!

இது குறித்த சில தகவல்கள் திரு.ரகோத்தமனின் குறிப்புகளிலும்
இடம் பெற்றன.

நரசிம்மராவ் பிரதமராகப் பொறுப்பேற்ற பிறகு –
நாராயணனின் நடவடிக்கைகளில் பெரிதும் அதிருப்தி கொண்டு,
1992-ல்,அவரை பொறுப்பிலிருந்து விடுவித்ததோடு அல்லாமல் –

அவர்மீது முதல் தகவல் அறிக்கையும் ( FIR 1 of 1995 ) பதியச்செய்து,
விசாரணை நடத்த உத்தரவிட்டார்.

mknஆனால் – “அன்னை”யின் அருளைப் பெற்ற நாராயணனைநரசிம்மரால் ஒன்றும் செய்ய முடியவில்லை. வெளிச்சத்தைப் பார்க்காமலே FIR 1 of 1995 முடிவைச் சந்தித்தது.

வேடிக்கை என்று சொல்வதோ -வயிற்றெரிச்சல் என்று சொல்வதோ
தெரியவில்லை.. நரசிம்ம ராவ் காலத்திற்குப் பிறகு மீண்டும்
“அன்னையின் அருளை” பெற்ற நாராயணன்,
தேசிய பாதுகாப்பு ஆலோசகராகவும் –
அதன் பிறகு மேற்கு வங்க ஆளுநராகவும் கூட உயர்கதி (!) அடைந்தார்….!!!

(தொடர்ச்சி – பகுதி-5- ல் )

சாமிகளின் சாகசங்கள் – மற்ற பகுதிகளுக்குப் போக
சொடுக்கவும் –

Part1

Part2

Part3

Part5

Part6

Advertisements
Gallery | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

ராஜீவ் காந்தி – டிஜிபி மோகன்தாஸ் கூறிய “அசல்” கதை…. (சாமிகளின் சாகசங்கள் – பகுதி-4 ) க்கு 4 பதில்கள்

 1. karikalan சொல்கிறார்:

  அப்பப்பா ! ஒரு மர்ம நாவலைப் படிப்பது போன்றுள்ளது. இந்த காலத்திலும் இப்படி ஈஸியாக மக்களை ஏமாற்ற முடியும் என்பதை நினைத்தால் மந்து சங்கடமாக இருக்கிறது. தொடருங்கள் நானும் தொடர்கிறேன். நட்புடன்

 2. bandhu சொல்கிறார்:

  இதில் அதிர்ச்சி அளிப்பது எல்லா விஷயங்களிலும் கூடவே வருபவர்களின் பெயர்கள்!

 3. visujjm சொல்கிறார்:

  நிதி நிர்மூலமாகி நீதி நேரம் சென்று வந்தாகி விட்டது., ஓய் சு.சாமி

 4. Sundar சொல்கிறார்:

  கதையில் பெரிய ஓட்டை. ஜார்வினுக்கும் ஆயுத ஊழலில் சம்பந்தம் இருக்கும் போது, எதற்காக மூன்ஷைன் ஜார்வினை , சுந்டன் & சைலோப்ஸ் மூலமாக தீர்த்து காட்டுகிறார் ? பாதர் மூன்ஷைனுக்கு ஆயுத ஊழலில் கமிசன் கிடைக்காதாலா ?

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.