மோடிஜிக்கு ஏன் கிரிமினல்களின் தயவும் / உறவும் ….??

“அச்சே தின்” (“நல்ல நாட்கள்” )
நோக்கி இந்த நாடு ஓட்டமெடுக்க ( ? ) –

மோடிஜியின் கரங்களை வலுப்படுத்த –
அவரது கனவுகளை நிறைவேற்ற –
– மத்திய அரசில்
கடந்த ஞாயிறு அன்று 21 புதிய மந்திரிகள்
சேர்க்கப்பட்டுள்ளார்கள்.

அவர்களில் சிலரைப் பற்றி, அற்புதமான செய்திகள்
கிடைத்துள்ளன. மோடிஜிக்கு மிகவும் பெருமை சேர்க்கக்கூடிய
செய்திகள் அவை.,,! இந்தக் கதைகள் எல்லாம் மோடிஜிக்கு தெரிந்து தான், அவர்களைத் தெரிவு செய்திருக்கிறார் என்பது இன்னும் விசேஷம் …..

பாராளுமன்றத் தேர்தல்களுக்கு முன்னர் மோடிஜி அவர்களைப்
பற்றி, நமக்கு கிடைத்த ஒரு பாஸிடிவ் இமேஜ் –
நாம் அவரை விரும்பியதற்கான ஒரு முக்கிய காரணம் –

“அவர் தானும் சாப்பிட மாட்டார் – மற்றவர்களையும்
சாப்பிட விட மாட்டார்” என்பது.

ஆனால், இப்போது அவர் தன்னுடன் சேர்த்துக்
கொண்டிருப்பவர்களின் குணாதிசயங்கள்
அதற்கு துணை போவது போல் தெரியவில்லை …

மோடிஜியின் புதிய மந்திரிகள் சிலரின் சரித்திரப்
பின்னணி பற்றி கிடைத்துள்ள சில திடுக்கிடும்
செய்திகள் வரிசையாக கீழே –

முதலில் – திருவாளர் கிரிராஜ் சிங் ( பீகார் ) –

நவாடா(பீகார்) தொகுதியிலிருந்து 2014-ல் பாராளுமன்றத்திற்கு
தேர்ந்தெடுக்கப்பட்ட பாஜக உறுப்பினர்.
திரு.நரேந்திர மோடி அவர்களின் தீவிர ஆதரவாளர்.

முன்னதாக 2005 முதல் 2013 வரை சுமார் 8 ஆண்டுகள்
பீகாரில், நிதிஷ்குமார் தலைமையிலான,
பாஜக – ஜனதா தள கூட்டணி அரசில் அமைச்சராக இருந்தார்.
( வளம் பெரு(க்)க 8 வருடங்கள் அமைச்சர் என்பது –
தாராளமான காலம் தானே…?? )

2013-ல், நிதிஷ்குமாருக்கும்- மோடிஜி க்கும் மோதல் ஏற்பட்டு,
கூட்டணி உடைந்தபோது, நிதிஷ்குமார் பாஜக அமைச்சர்களை
தன் அரசிலிருந்து வெளியேற்றினார். அப்போது மோடிஜிக்கு
ஆதரவாகவும், நிதிஷ்குமாருக்கு எதிராகவும் தீவிரமாக குரல்
கொடுத்து தன்னை வெளிப்படையாகவே, தீவிர மோடிஜி
ஆதரவாளராக வெளிப்படுத்திக் கொண்டவர் கிரிராஜ் சிங்.

தேர்தலின் போது, ” நரேந்திர மோடியை பிடிக்காதவர்களுக்கு இந்தியாவில் இடமில்லை. அவர்கள் பாகிஸ்தானுக்குப் போய்க் கொள்ளலாம்” என்று பேசிப் “புகழ்” பெற்றவர் திருவாளர் கிரிராஜ் சிங் அவர்கள்…!!!

ஜனவரி, 2013-ல் பீகாரில் அமைச்சராக பதவி வகித்து வந்தபோது
கிரிராஜ் சிங் அவர்கள் கொடுத்துள்ள பிரமாண பத்திரங்களின்படி
அவரது (அசையும் மற்றும் அசையா ) மொத்த சொத்து மதிப்பு சுமார் 75 லட்சம் ரூபாய் மட்டுமே.

நான் இங்கு குறிப்பிடும் சம்பவம்
பாராளுமன்ற தேர்தலுக்குப் பின்னர் –
சுமார் 4 மாதங்களுக்கு முன்,
அதாவது ஜூலை 8, 2014 -ல் நடந்தது.

பாட்னாவில் உள்ள தன் வீட்டில் யாரோ கொள்ளையடித்து
விட்டதாகவும், சுமார் 50,000 ரூபாய் ரொக்கப் பணமும்,
சில நகைகளும் திருடப்பட்டு விட்டன என்றும் பாட்னா போலீசில்
புகார் கொடுத்திருக்கிறார் திருவாளர் கிரிராஜ் சிங்.

மறு நாள், அதாவது ஜூலை 9, 2014 அன்று பாட்னா போலீசார், சந்தேகப்படும் விதத்தில் ஒரு சூட்கேசுடன் நடமாடிக் கொண்டிருந்த தினேஷ் குமார் என்பவரைப் பிடித்து சோதனை போட்டார்கள்.

stolen from giriraj singh

அடித்தது ஜாக்பாட்.
அவனிடம் இருந்த சூட்கேசில் 1,14,00,000 ரூபாய்
(ஒரு கோடியே பதினான்கு லட்சம் ரூபாய் ) ரொக்கமாகவும்,
600 அமெரிக்க டாலர் நோட்டுக்களும்,
இரண்டு தங்கச் சங்கிலிகளும்,
ஒரு ஜோடி தங்க காதணிகளும்,
ஒரு தங்க லாக்கெட்டும்,
மூன்று தங்க மோதிரங்களும்,
14 வெள்ளிக் காசுகளும்,
7 விலையுயர்ந்த கைக்கெடிகாரங்களும்
கைப்பற்றப்பட்டன. இவையனைத்தும், தான் பாட்னாவில்,
உள்ள “போரிங்க் ரோடு” கிரிராஜ் சிங் அவர்களின் வீட்டிலிருந்து
முந்தைய நாள் திருடியவை என்று கூறினான் அகப்பட்டுக்கொண்ட
தினேஷ்குமார்.

அத்தோடு நில்லாமல், கிரிராஜ் சிங்கின் பாடிகார்டு ரூப்கமல்,
செக்யூரிடி கார்டு திரெந்திரா, வீட்டு வேலையாள் லட்சுமண்
ஆகியோரும் தனக்கு இதில் உதவி செய்தனர் என்றும்
அவர்களுக்கும் இந்த திருட்டு சொத்தில் பங்கு கொடுத்தாக
வேண்டும் என்று வேறு கூறி இருக்கிறான்…!!!

உடனடியாக, மற்ற 3 பேர்களையும் தள்ளிக்கொண்டு
வந்து ‘உள்ளே’ போட்டது போலீஸ்.

போலீஸ் அதிகாரிகள் கிரிராஜ் சிங் அவர்களின் இல்லத்தை
தொடர்பு கொண்டு, விஷயத்தைக் கூறி, திருட்டுப்போன
பொருட்களை அடையாளம் காட்ட – தகுதியான நபர்
யாரையாவது போலீஸ் ஸ்டேஷனுக்கு அனுப்பும்படி
கூறி விட்டு காத்திருந்தனர்
…… இருக்கின்றனர்….
நான்கு மாதங்களாக ………போலீஸ்காரர்கள் காத்திருக்கிறார்கள்…!

கிரிராஜ் சிங் சாதித்திருக்கிறார் –
தன் வீட்டிலிருந்து காணாமல் போனது வெறும்
50,000 ரூபாய் மட்டுமே என்றும், சூட்கேசில் இருந்த
பொருட்களுக்கும், பணத்திற்கும், தனக்கும்
எந்தவித சம்பந்தமும் இல்லை என்று……!!

போலீஸ் அதிகாரிகள் முடிந்த வரை முயற்சி செய்து பார்த்து விட்டார்கள். கிரிராஜ் சிங் ஒத்துழைப்பதாக இல்லை.

எனவே போலீஸ் துறை, வருமான வரி இலாகாவிடம்
விஷயத்தை தெரிவித்து விட்டு, இந்த வழக்கை கிடப்பில்
போட்டிருக்கிறது.

இப்பேற்பட்ட பெரிய மனிதர் தான், கடந்த ஞாயிறு அன்று
மோடிஜி அவர்களின் அமைச்சரவையில் சேர்ந்திருக்கிறார்.

என்ன சாதனை புரிந்ததற்காக அல்லது புரிவதற்காக,
இவரைத் தன் மந்திரி சபையில் மோடிஜி
சேர்த்திருக்கிறாரோ ….?

( தொடர்கிறது – பகுதி-2-ல் )

Advertisements
Gallery | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

மோடிஜிக்கு ஏன் கிரிமினல்களின் தயவும் / உறவும் ….?? க்கு 6 பதில்கள்

 1. Raja சொல்கிறார்:

  அன்பு காமை அவர்களே !,

  நாமக்கல் கவிஞர் அப்போதே சொல்லி விட்டுப் போனார் –

  “எத்தனை காலந்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே …
  நம் நாட்டிலே …. சொந்த ….. நாட்டிலே ….”

  ஒன்றும் மாறவில்லை –
  அதே நிலை தான் நீடிக்கிறது – இன்றும்.
  —- உங்களுடைய பதிவிலிருந்தே…

 2. drkgp சொல்கிறார்:

  Neither tomorrow , next year nor next century. Sorry Mr KM.

 3. S.Selvarajan சொல்கிறார்:

  அடித்தது ஜாக்பாட் ! . யாருக்கு ! யாருக்கோ !!

 4. yarlpavanan சொல்கிறார்:

  சிறந்த கருத்துப் பகிர்வு
  தொடருங்கள்

 5. today.and.me சொல்கிறார்:

  பார்க்காமல் விட்டுப்போன நண்பர்களின் பார்வைக்கு,

  Nation First, Party Next, Self Last

  @ twitter.com/girirajsinghbjp

  மாண்புமிகு மத்திய அமைச்சர் கிரிராஜ் அவர்களின் வீர உரை
  எதிலே first-next-last என்று எல்லாம் உங்கள் ஊகத்திற்கு விடுகிறேன்.

 6. இ.பு.ஞானப்பிரகாசன் சொல்கிறார்:

  இது, திருட்டுக் கொடுத்தவனுக்குத் தேள் கொட்டிய கதை!

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.