அருண் ஜெட்லியின் முயற்சிகள் கருப்புப் பணத்தை வெளிக்கொண்டு வர உதவுமா …???

..

..

கடந்த 15 வருடங்களுக்கும் மேலாக – மாற்றி மாற்றி
இந்திய அரசியல்வாதிகள் அத்தனை பேருமே, போட்டி
போட்டுக்கொண்டு, பொது மக்களை உசுப்பேற்றி வந்தனர்.

ஸ்விஸ் வங்கிகளில் அத்தனை லட்சம் கோடி,
இத்தனை லட்சம் கோடி கருப்புப் பணம் இருக்கிறது –

அதைக் கொண்டு வந்தால் 15 ஆண்டுகளுக்கு மத்திய
பட்ஜெட்டே போட வேண்டாமென்று ஒரு கூட்டம்;

இந்திய மக்கள் அனைவருக்கும் தலைக்கு
3 லட்சம் கொடுக்கலாம் என்று ஒரு கூட்டம் –

ஆளாளுக்கு அள்ளி விட்டுக் கொண்டே போனார்கள்
வாக்குறுதிகளை…

நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலின்போது,
கருப்புப் பணத்தை ஒரு முக்கிய பிரச்சினையாக வைத்து
நாடெங்கும் 400 கூட்டங்களில் நரேந்திர மோடிஜி பேசினார்.

பாஜக ஆட்சிக்கு வந்தால் முதல் வேலையாக வெளிநாடுகளில்
பதுக்கி வைக்கப்பட்டிருக்கும் பணத்தை கொண்டு வருவோம்
என்று வாக்குறுதி கொடுத்தார். முடியாது என்று நிச்சயமாகத்
தெரிந்து கொண்டே கொடுக்கப்பட்ட வாக்குறுதி இது.
பத்தும் பத்தாததற்கு சுப்ரமணியன் சுவாமி வேறு துணை…!!!

பணக்காரர் என்றைக்காவது இளிச்சவாயராக இருந்ததுண்டா…?
இல்லை இளிச்சவாயர் தான் என்றாவது பணக்காரர்
ஆக முடியுமா..?

எந்தப் பணக்காரராவது, அதுவும் ஸ்விட்சர்லாந்து வரை
கோடிக்கணக்கில் கருப்பை கொண்டு சென்று கணக்கு துவங்கி,
டெபாசிட் பண்ணிவிட்டு வரும் அளவிற்கு
வழி-விவரம் எல்லாம் தெரிந்தவர் –
இந்திய அரசு தீவிரமாக இதில் இறங்குகிறது என்று தெரிந்த
பிறகு – பணத்தை அங்கேயே விட்டு வைப்பாரா …?

இப்போது கிடைத்துள்ள அறுநூற்று ( எண்ணூறு…!!) சொச்சம்
அக்கவுண்டுகளில் முக்கால்வாசியில் “அஞ்சு டாலர்” கூட
இல்லையாம் …!! ( இருந்தால் தானே அதிசயம் …? )

ஏகப்பட்ட ஆசைகளை, எதிர்பார்ப்புகளை – மக்களிடையே
( எல்லாருமாகச் சேர்ந்து தான் ) கிளப்பியாகி விட்டது.
இப்போது ஒன்றும் கிடைக்கவில்லை யென்றால் –
அதற்கான பதிலைச் சொல்லவேண்டிய பொறுப்பில்
– தாக்குதலை சந்திக்க வேண்டிய பொறுப்பில்
இருப்பவர் இன்றைய நிதியமைச்சர் திரு.அருண் ஜெட்லி தான்.

arun jaitley-3

அருண் ஜெட்லி அவர்களை கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்கும்
மேலாக நான் தொடர்ந்து கவனித்து வருகிறேன்.
அரசியல்வாதிகளிடையே அவர் ஒரு ஜென்டில்மேன்.
நன்கு படித்தவர், அறிவாளி – சிந்தனையாளர்.

இந்தி வெறி பிடித்து அலையும் கூட்டத்தினிடையே –
வெகு சகஜமாக ஆங்கிலத்தில் உரையாடுபவர்.
இந்தி, ஆங்கிலம் இரண்டிலுமே அருண் ஜெட்லி
அருமையாக உரையாற்றக் கூடியவர்.
எந்த விஷயமாக இருந்தாலும் சரி, தான் சொல்ல வந்ததை
மிகத்தெளிவாக, கேட்பவர் மிகச்சுலபமாக புரிந்து கொள்ளும்
விதத்தில் பேசுபவர்.

முந்தைய நிதியமைச்சர்களைப்போல் (!) கேட்பவர்களை
முட்டாள்கள் என்று நினைத்துப் பேசும் குணம் அவரிடமில்லை.
சிரித்துக் கொண்டே வில்லத்தனம் செய்பவரும் இல்லை…!
எரிச்சலோ, கோபமோ, அமைதியோ, சமாதானமோ –
அவரது முகம் உண்மையைக் காட்டி விடும்…!

அருண் ஜெட்லி நிதியமைச்சர் பொறுப்பில் இருப்பது
பல விதங்களில் நமக்கு, நாட்டுக்கு – ஏன் மோடிஜி
அவர்களுக்கே கூட நிம்மதி தரும் விஷயம் என்று
சொல்லலாம்.
இந்திய பொருளாதாரம் வளரும் – உயரும்
என்கிற நம்பிக்கை அருண் ஜெட்லி நிதியமைச்சராக
இருப்பதால் தான் வருகிறது.

மோடிஜியும் அருண் ஜெட்லியும் நீண்டகால நண்பர்கள் –
ஒரே equation-ல் இருப்பவர்கள். எனவே,
பயமோ -போலிவேடமோ இல்லாமல்,
தன் பணியை (ஓரளவிற்கு….!) சுதந்திரமாகச்
செய்யக்கூடிய நிலையில் இருப்பவர் ஜெட்லி.

சுப்ரீம் கோர்ட் அமைத்த, ஓய்வுபெற்ற நீதிபதி ஷா
அவர்களின் தலைமையிலான Special Investigation Team
என்ன தான் முயன்றாலும், எவ்வளவு தான் முயற்சி செய்து,
வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு வைத்திருப்பவர்கள்
பற்றிய விவரங்களை உடனடியாக இல்லா விட்டாலும்,
ஆறு, எட்டு – மாதங்களில் சேகரித்து விட்டாலும் –
அங்கே எந்த மடையர் இதுவரை பணத்தை எடுக்காமல்
விட்டு வைத்திருக்கப் போகிறார்….?

எந்த வெளிநாட்டு வங்கிகள் ஒப்புக் கொண்டாலும் கூட –
அனைத்து விவரங்களையும் கொடுத்தாலும் கூட –
இனிமேல் எங்கேயிருந்தும் கருப்புப்பணம் கிடைக்க
வாய்ப்பில்லை என்பது தான் நிதரிசனமான உண்மை.

(ஆனால் அதை யாரும் இப்போதைக்கு ஒப்புக் கொள்ள
மாட்டார்கள்…..அரசியல்வாதிகளாயிற்றே…!! )

பின் கருப்புப் பணத்தை வெளிக்கொண்டு வர
என்ன தான் வழி …?

வெளிநாட்டு வங்கிகளிலிருந்து இப்போது அத்தனை
கருப்புப்பணமும் விலக்கிக் கொள்ளப்பட்டிருக்கும் என்றாலும்
கூட, கடந்த 10-15 ஆண்டுகளாக அங்கு அக்கவுண்ட் வைத்திருந்த
இந்தியப் பெருங்குடிமகன்களின் விவரங்களை இப்போதும்
பெற முடியும்.

அந்த விவரங்களைப் பெற்று, அத்தகைய நபர்களின்
தற்போதைய தொழில் நடவடிக்கைகள், முதலீடுகள், சொத்து
விவரங்களை கண்காணித்தால், ரகசியமாகப் புலன் விசாரணை
செய்தால் – பெரும் அளவில் கருப்புப் பணம் வைத்திருந்த
புள்ளிகளை நிச்சயமாக கண்ணி வைத்து பிடித்து விட முடியும்.

பின்னணிகளை தயார் செய்து கொண்டு பின்னர் ரெய்டு
செய்தால் பலர் சிக்க வாய்ப்பிருக்கிறது. பணமும் வெளிக்
கொண்டு வரப்பட வாய்ப்பு இருக்கிறது.

(வெளிநாடுகளில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த கருப்புப் பணம்
பெரும்பாலும் – ஏற்கெனவே இந்தியாவிற்குள் மறைமுக
வழிகளில் ( participatory notes …! ) கொண்டு வரப்பட்டு
விட்டது. இந்த திருட்டுப் பணம் பெரும்பாலும்,
பங்கு மார்க்கெட், ரியல் எஸ்டேட் மற்றும் தங்க வர்த்தகங்களில்
முதலீடு செய்யப்பட்டிருக்கிறது என்பது மத்திய அரசுக்கே
கிடைத்திருக்கும் ஒரு தகவல் …! )

ஆனால், இதில் ஈடுபடும் நிதி, மற்றும் Enforcement
துறையைச் சேர்ந்த அதிகாரிகள் மிக மிக
நேர்மையானவர்களாகவும், துணிச்சலானவர்களாகவும்,
எதற்கும் விலை போகாதவர்களாகவும் இருக்க வேண்டியது
அவசியம்.

– நிதியமைச்சர் முழுமூச்சாக இறங்கி முயற்சி செய்தால்,
வேலை செய்தால் இது சாத்தியமே.
தானே முன் நின்று, மிக மிக நேர்மையாக உழைக்ககூடிய
ஒரு டீமை – Vigilance மற்றும் Enforcement Directorate -ல்
உள்ள sincere & dedicated ஆன உயர் அதிகாரிகளைக் கொண்டு
அமைத்து – முழு மூச்சுடன் முனைந்தால் ஓரளவு வெற்றி
கிடைக்ககூடும். அருண் ஜெட்லியால் இதைச் செய்ய முடியும்..!

தற்போதைக்கு உடனடியாக பலனளிக்கக்கூடிய வேறு ஒரு
செயலிலும் ஈடுபட்டிருக்கிறார் அருண் ஜெட்லி…….

—————————
பின் குறிப்பு –
இந்த இடுகையை இன்னும் கொஞ்சம் பகுதிகளுடன்
நேற்றிரவே எழுதி விட்டேன். இன்று பதிவிடும் சமயத்தில்
தொலைக்காட்சிகளில் காண்கிறேன் – கருப்புப் பணம்
பற்றி பாராளுமன்றத்தில் இன்று விவாதம் செய்யக்கூடிய
சூழ்நிலை ஏற்பட்டிருக்கிறது.

என்ன பேசுகிறார்கள் என்பதைப் பார்த்து விட்டு,
மீதியை பிறகு தனியே எழுதலாமென்று நினைக்கிறேன்.

நண்பர்கள் தங்கள் கருத்துக்களை வழக்கம் போல் –
பின்னூட்டங்களில் தெரிவிக்கும்படி கேட்டுக் கொள்கிறேன்.

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

15 Responses to அருண் ஜெட்லியின் முயற்சிகள் கருப்புப் பணத்தை வெளிக்கொண்டு வர உதவுமா …???

 1. Srini சொல்கிறார்:

  Dear KM, sir,

  For sure the top leadership in India is more sincere, loyal, nationalist and corrupt free as of now. Modi, Arun Jaitley, Parrikar, Swaraj, suresh prabhu and Rajnath – these six people are good team and good people. I am sure they will do something good for the country and let us believe that there will be sincere efforts to bring the black money from abroad.

  No broad reforms or bold steps can happen until BJP gets good nos in Rajyasabha.. You can see govt is “jittery” about this from yesterday. Modi and team needs to work hard / smart to get nos from state elections that are happening. till such time, let us hope and wait…with prayers.

  regards
  srini

 2. S.Selvarajan சொல்கிறார்:

  வெளிநாடுகளில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள கருப்பு பணத்தை இந்தியாவிற்கு கொண்டுவருவதில் உள்ள தடைகளை களைவதற்கு ஏதுவாக வெளிநாடுகளுடன் செய்து கொண்ட வரிஒப்பந்தங்களை மத்திய அரசு மறுஆய்வு செய்ய உள்ளதாக மத்திய நிதியமைச்சர் அருண்ஜெட்லி தெரிவித்தார்– இது 22– 11– 2014 தினமணி செய்தி !இப்படி தெரிவித்துள்ள நிதி அமைச்சர் — எப்படியும் வெளிநாடுகளின் கணக்கில் உள்ள 5– டாலர் கருப்பு பணங்களையாவது மீட்டுக்கொண்டு வருவார் — என்று நம்புவோம் !! நம்பிக்கையில்தானே இந்தியர்களின் வாழ்க்கை [ ஒவ்வொரு தேர்தலிலும் ] ஓடிக்கொண்டு இருக்கிறது ?

 3. today.and.me சொல்கிறார்:

  கா.மை.ஜி,

  இதுவரை நான் படித்த உங்கள் எழுத்துக்களில் இன்றைக்கு ஒரு ஸ்மூத்னெஸ் தெரிகிறதே. இப்படிக்கூட எழுதத்தெரியுமா உங்களுக்கு !

  இல்லாத கொக்கு தலையில் வெண்ணையை வைத்து அது உருகிக் கண்களில் வழிந்து பார்வையை மறைத்தவுடன் பிடிப்பார்களாம். கேட்கிறவன் கேணையனாக இருந்தால் காதிலே கடப்பாறையை விட்டுக் குடையுவீங்கடா என்ற வடிவேலு ஜோக்தான் நினைவுக்கு வருகிறது.

  ம். நடத்துங்கள் நடத்துங்கள்..

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   நண்பர் today.and.me,

   “ஸ்மூத்னெஸ்”க்கு – காரணம்
   ஜென்டில்மேன் அரசியல்வாதி அருண் ஜெட்லி ….
   எனக்கு பிடித்த வெகு சில ஜென்டில்மேன் அரசியல்வாதிகளில்
   அவரும் ஒருவர் .(தீவிரவாதிகளின் நடுவே ஒரு மிதவாதி …..!!!)
   அதனால் தான் ………..!!

   ஏற்றுக் கொள்வீர்கள் என்று நம்புகிறேன்.

   -வாழ்த்துக்களுடன்,
   காவிரிமைந்தன்

 4. seshan சொல்கிறார்:

  Good analysis about fm let us hope for miracle

 5. ஆஷிக் அஹ்மத் சொல்கிறார்:

  உங்கள் மீது சாந்தியும், சமாதானமும் உண்டாவதாக..

  நீங்கள் கூறியது போல தெரிந்துக்கொண்டே பொய் வாக்குறுதிகளை அள்ளி வீசி மக்களை முட்டாளாக்கியவர்களால் இந்நாட்டில் நல்லதொரு அரசாங்கத்தை கொடுக்க முடியாது. இதற்கு கடந்த ஆறு மாத ஆட்சி சான்றளிக்கின்றது.

  Minimum Government, Maximum Governence என்றார் மோடி. அதற்கு நேர்மாறாக நடந்துக்கொண்டார். அளிக்கப்பட்ட எந்தவொரு வாக்குறுதியும் நிறைவேறுவதற்கான சாத்தியகூறுகள் தென்படவில்லை. எல்லாமே பல்டி தான். இதற்கெல்லாம் முத்தாய்ப்பாக திறனில்லா மந்திரி சபை.

  வாய்சவடால் தொடர்ந்து பயனளிக்காது.

  பலரை சில காலம் ஏமாற்றலாம். சிலரை தொடர்ந்து ஏமாற்றலாம், ஆனால் எல்லோரையும் எல்லா நேரமும் ஏமாற்ற முடியாது.

  மக்கள் விழித்துக்கொள்ள ஆரம்பித்துவிட்டார்கள். அது மோடிக்கும் அவர் பரிவாரங்களுக்கும் நல்லதல்ல.

  நன்றி,

  ஆஷிக் அஹ்மத் அ

 6. bandhu சொல்கிறார்:

  இது வரை நடந்தது எதுவும் பெரிய நம்பிக்கை அளிக்கவில்லை. மோடி விளம்பரப் பிரியராக காட்சி கொடுக்கிறார். அமைச்சர்கள் உருப்படியானவர்களாக தெரியவில்லை. நடக்கவே முடியாதவற்றை வாக்குறுதியாக எப்படிக் கொடுக்க முடிகிறது. எதையாவது சொல்லி அரசுக்கு வரவேண்டும் என்ற நோக்கம் தவிர அதை நிறைவேற்றவேண்டும் என்ற எண்ணம் இருப்பதாகத் தெரியவில்லை.

 7. Siva சொல்கிறார்:

  Black money or white money, but more money has been already transferred from foreign banks to India by those who illegally accrued the money. As KM sir said it is not surprise if you find any account holder with more money in their account. I remember well that SBI had stopped online money transfer from foreign banks 2 years ago. I think that precautionary step was taken by SBI to keep away from the practice of encouraging online transfer by illegal money makers. However, it is not going to benefit any one if you go behind those illegal money maker/Indian tax evader (this will be the correct) because they might have already fixed their account books. Siva

 8. today.and.me சொல்கிறார்:

  மத்தியில் பாஜக ஆட்சி அமைத்து ஆறு மாதங்கள் ஆகிவிட்டபடியால் பூங்கொத்துகளை வைத்து நாடுபழக வந்த மருமகளை பாராட்ட தனியா ஒரு பக்கம் அமைக்கலாமா கா.மை.ஜி.?

  யாராவது பதில்சொல்லுங்களேன்?
  http://ramaniecuvellore.blogspot.in/2014/11/blog-post_25.html

  வாக்குறுதிகள் உண்மையானவை தானா?
  http://ramaniecuvellore.blogspot.in/2014/11/blog-post_24.html

  இந்த அளவுக்கு சீரியஸாகப் படித்தால் மண்டை காய்ந்துவிடும். எனவே கொஞ்சம் படம் பார்த்து கதைசொல்வோமா?
  http://ramaniecuvellore.blogspot.in/2014/11/blog-post_56.html

  • S.Selvarajan சொல்கிறார்:

   சமூகத்தில் மாற்றத்தை விரும்பும் ஒரு சாமானிய ஊழியனின் குரல், உழைக்கும் மக்களின் எதிரொலி ? is this words ” ORIGINAL ” ?

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   நண்பர் todayandme,

   நான் கம்யூனிஸ்ட்டும் அல்ல….
   பாஜக வும் அல்ல ….

   (நீங்கள் சில சுட்டிகளை இந்த இடத்தில்
   மேற்கோள் காட்டி இருப்பதன் அர்த்தம்
   உண்மையிலேயே எனக்கு விளங்கவில்லை..
   அவை கம்யூனிஸ்ட் சித்தாந்தத்தை மேற்கொண்டவை )

   கட்சி சார்புள்ள இடுகைகள் எப்போதுமே
   கொஞ்சம் ஒருதலைப்பட்சமாகத் தான் இருக்கும்.
   அது பாஜக வாக இருந்தாலும் சரி –
   கம்யூனிஸ்ட் ஆக இருந்தாலும் சரி.

   நான் சாதாரண, கட்சி சார்பு எதுவும் இல்லாத
   சராசரி தமிழ்/இந்தியக் குடிமகன்.

   எனக்கு வேண்டியது, நான் எதிர்பார்ப்பது -ரொம்ப கொஞ்சமே….
   சித்தாந்தங்கள் அல்ல … நடைமுறை சாத்தியமானவையே…!

   தூய்மையான, வெளிப்படையான, நேர்மையான நிர்வாகம்,
   ஜாதி-மத பேதமற்ற ஒற்றுமையான சமுதாயம்,
   நாட்டில் இருக்கும் வளங்கள் அனைத்தும் சமமாக –
   எல்லாருக்கும் – எல்லாமும்….

   என் கண்ணில் தென்படும் குறைகளைச் சுட்டிக் காட்டுகிறேன்.
   நல்லவைகளைப் பாராட்டுகிறேன்.
   இந்த வயதில், இருக்கிற உடல்சக்தியைக் கொண்டு –
   இதைவிட மேற்கொண்டு எதையும் இந்த சமுதாயத்திற்கு
   செய்ய முடியாதவனாக இருக்கிறேன்.

   -வாழ்த்துக்களுடன்,
   காவிரிமைந்தன்

 9. DrKGP சொல்கிறார்:

  Whereas one has to sincerely appreciate your heartfelt wish list for the
  welfare of our country , we may have to take into account the prevailing enormity
  of the situation . The shoots coming out in the changed situation are not
  fully encouraging either. For the last half a century , we have come across
  many such well meaning citizens yawning for good days throughout our college
  and after. Still it is only a mirage.The reasons, I believe lies in the political system.
  At least fifty percent of our adult population is affiliated to one of the myriad of political
  parties. These parties have no long term ideas for solving the ills of the system except
  to see some fast and huge wealth for their patrons.To attain their goal, they promise anything and everything on earth, ally with anybody to achieve majority, tolerate any scam big or very big and
  in the meantime fill their bags full. Recent. Generations having grown in the polluted environ
  have very little sensitivity to feel the wrongs inflicted on the society and hence fail to react
  aggressively. In the midst of our grumblings, we are bound to acknowledge the big strides
  our economy has taken in the recent years. Whom will you credit for this ? The almighty!

 10. natchander சொல்கிறார்:

  The opinion and the stand taken by shri kaveri minden towards arun jatley will be supported by many in india and particularly in tamilnadu.but he has to take care of his health. in the recent times he was admitted in the hospital twice.

 11. sakthy44@live.com சொல்கிறார்:

  கா.மை. மறந்தாலும்,
  நாம் மறவாது,
  தமிழ் மண்ணுக்காய் வித்தான மாவீரர்களுக்கும்,
  சிங்களப் பயங்கரவாதத்தால் உயிரிழந்த ஈழத் தமிழ் உறவுகளுக்கும்,
  எமது அஞ்சலியை இந்த மாவீரர் நாளில் செலுத்துகிறோம்.

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   நண்பர் சக்தி,

   மறக்கவில்லை. எப்படி மறக்க முடியும் …?
   இன்றைய இடுகையை பதிவிடும்போது எழுதலாம்
   என்றிருந்தேன். அதற்குள்ளாக நீங்கள் எழுதி விட்டீர்கள்.
   அதனாலென்ன – உங்களுடன் நானும் சேர்ந்து கொள்கிறேன்.
   தியாகங்கள் வீண் போகாது …
   அவர்கள் என்றென்றும் நினைக்கப்படுவார்கள்…

   -வாழ்த்துக்களுடன்,
   காவிரிமைந்தன்

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.