திருமதி சுஷ்மா ஸ்வராஜ் அவர்களின் ஏமாற்றும் முயற்சி …..

இன்று பகல் கேள்வி நேரம் முடிவடைந்ததும் பாராளுமன்றத்தில்
( லோக் சபா ) தமிழக மீனவர் பிரச்சினை குறித்து “சிறப்பு கவன
ஈர்ப்பு தீர்மானம்” விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்படும்
என்று
முன்னதாகவே அறிவிக்கப்பட்டிருந்ததால், கேள்வி நேரத்திலிருந்தே
தொடர்ந்து லோக் சபா நேரடி தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை
கவனித்துக் கொண்டிருந்தேன்.

Fishermen- tamilnadu

இங்குமுன்னதாகவே ஒரு விஷயத்தை தெளிவு படுத்திவிட
வேண்டும். பாராளுமன்றத்தில், சாதாரணமாக இந்தி அல்லது
ஆங்கிலம் இரண்டில் எதில் வேண்டுமானாலும் பேசலாம்.
இது முடியாதவர்கள் மொழி பெயர்ப்பு வசதி ஏற்பாடு
செய்யப்பட்டிருக்கும் மற்ற மொழிகளிலும் பேசலாம்.

பொதுவாக, உறுப்பினர் இந்தியில் கேள்வி கேட்டால்
இந்தியிலும், ஆங்கிலத்தில் கேள்வி கேட்டால் ஆங்கிலத்திலும்
அமைச்சர்கள் பதில் சொல்வது வழக்கம். (அமைச்சருக்கு
இந்த மொழிகள் தெரியவில்லை என்றால் – அவருக்கு தெரிந்த
மொழியில் சொல்லலாம்… ).

ஆனால் – இன்றைய நிகழ்ச்சியில் விவாதத்திற்கு நோட்டீஸ்
கொடுத்தவரும், தொடர்ந்து விவாதங்களில் ஈடுபடப்
போகின்றவர்களும்
தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் – இந்தி தெரியாதவர்கள் – என்று
முன்னரே நன்கு தெரிந்திருந்தும், அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜூக்கு
ஆங்கிலம் நன்கு தெரியும் என்றாலும் – வேண்டுமென்றே
இந்தியிலேயே பேசினார்.

முதலில் தலைப்பை டாக்டர் வேணுகோபால் (அதிமுக)
ஆங்கிலத்தில் சொன்னதும், சுஷ்மா தன் விவரமான அறிக்கையை
இந்தியில் படிக்க ஆரம்பித்து விட்டார். லோக் சபாவில்
தமிழ்நாட்டைச் சேர்ந்த எம்.பி.க்கள் –
– ஒரு பாஜக ( திரு.பொன்ரா )
– ஒரு பாமக (திரு.அன்புமணி)
– மற்றவர்கள் அனைவரும் அதிமுக.
( இதில் அன்புமணி மற்றும் பொன்ரா ஆகியோர்
விவாதத்தின்போது அவையில் இல்லை…. !!! )

வழக்கமாகச் சொல்வதையே –
மத்திய அரசு தமிழக மீனவர் பிரச்சினையில்
அதிக அக்கறை கொண்டு செயல்படுகிறது.
தூக்கில் தொங்க இருந்த 5 மீனவர்களை நாங்கள் தான்
காப்பாற்றினோம் என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
இப்போதெல்லாம் இலங்கை ராணுவம் மீனவர்களை
அடிப்பதில்லை, வதைப்பதில்லை, சுடுவதில்லை, கைது செய்து
வழக்குப் பதிவு செய்து கொண்டு விடுதலை செய்து விடுகிறார்கள்.

பிரதமர் மோடி, ஜனாதிபதி ராஜபக்சேயுடன்
இது பற்றி தொடர்ந்து –

( மே மாதம் பதவியேற்பு விழா சந்திப்பின் போதும்……..
செப்டம்பரில் அமெரிக்காவில் சந்தித்த போதும்………
நவம்பரில் நேபாளத்தில் சந்தித்தபோதும் ……)
மிகுந்த அக்கறையுடன் (???? !!!!!)
பேசியதால் தான் இந்த நல்ல (?) விளைவு – என்றார்.

மேலும், மீனவர்கள் எல்லையைத் தாண்டும்போது,
ஒலியெழுப்பக்கூடிய சாதனம் வழங்குவது, நடுக்கடலுக்குச்
சென்று மீன் பிடிக்க அனுமதி அளிப்பது என்று சில
விஷயங்களையும் அரைகுறையாகப் பேசினார்.

நடுக்கடல் சென்று மீன் பிடிக்க வசதியாக எந்திரப்படகுகளை
மாற்றியமைக்க மீனவர்களுக்கு
நிதியுதவி செய்வது குறித்து தமிழகம் ஏற்கெனவே மத்திய
அரசிடம் வேண்டுகோள் வைத்திருக்கிறது என்றும்
அதை மத்திய அரசு ஏற்றுக் கொள்ள வேண்டும் என்றும்
உறுப்பினர்கள் சொன்னபோது – அதனைக் கண்டு
கொள்ளவே இல்லை.

பின்னர் மொழிபெயர்க்கப்பட்ட அமைச்சரது பேச்சை அவசர
அவசரமாக புரிந்து கொண்டு, முடிந்த அளவு மற்ற தமிழக
உறுப்பினர்கள் பேசினர். இந்திய அரசு கச்சத்தீவை இலங்கைக்கு
தாரை வார்த்தது தான் பிரச்சினைக்கு அடிப்படைக் காரணம்
என்பதை தமிழக எம்.பி.க்கள் சொன்னபோது, பதிலளித்த
(இந்தியில் தான் ….) திருமதி சுஷ்மா ஸ்வராஜ் கச்சத்தீவு
பிரச்சினை சுப்ரீம் கோர்ட்டில் இருப்பதால் பாராளுமன்றத்தில்
தான் அது குறித்து பேச முடியாது என்கிற மாதிரி கூறினார்.

அமைச்சர் இந்தியில் பேசியதைப் புரிந்து கொண்டு, தமிழக
எம்.பி.க்கள் பதிலளிக்கும் முன்னர் சபாநாயகர் அவசரப்படுத்தி
அதற்கு மேல் விவாதத்தை தொடர முடியாமல், அடுத்த
விஷயத்தை எடுத்துக் கொள்ளத் துவங்கினார்.

அதைப்பார்த்துக் கொண்டிருந்த திரு. தம்பித்துரை –
பொறுக்க முடியாமல் குறுக்கிட்டு –
( தம்பித்துரை துணை சபாநாயகராகப் பதவி வகிப்பதால்,
சாதாரணமாக விவாதங்களில் கலந்து கொள்வதில்லை….)

இந்த விஷயத்தை அப்படியே விட்டு விட முடியாது –
முந்தைய அரசு 1974 மற்றும் 1976 -ல் கச்சத்தீவு தொடர்பாக
இலங்கையுடன் செய்து கொண்ட ஒப்பந்தங்கள்
பாராளுமன்றத்தின் ஒப்புதலைப் பெறாததால் செல்லாதவை.

சட்டப்படி தமிழ் நாட்டின் ஒரு மாவட்டமான, ராமநாதபுரத்தைச்
சேர்ந்த பகுதியான கச்சத்தீவை இலங்கைக்கு தத்தம் செய்ய
யாருக்கும் அதிகாரம் இல்லை.
செல்லாத ஒப்பந்தம் காரணமாகத் தான் மீனவர்கள் இத்தனை
இன்னல்களையும் எதிர்கொள்ள வேண்டி இருக்கிறது.

பாராளுமன்றத்தின் ஒப்புதலை பெறாமலே மற்ற நாடுகளுடன்
ஒப்பந்தங்கள் செய்து கொள்ள முடியும் என்றால் –

இப்போது வங்கதேசத்துடன் -பாஜக அரசு செய்து கொண்டுள்ள
ஒப்பந்தங்களுக்கு சபையில் அனுமதி கோருவது ஏன் ?
என்று மிகவும் ஆவேசமாகவே கேட்டார்.

இவ்வளவு அனுமதித்ததே அதிகம் என்பது போல்,
சபாநாயகர் அடுத்த விஷயத்துக்குப் போய் விட்டார்….

இன்றைய பாராளுமன்ற நிகழ்வுகள் மூன்று விஷயங்களை
உறுதி செய்தன –

1) மொழி தெரிந்தாலும் தெரியா விட்டாலும் – தமிழக
எம்.பி.க்கள் முடிந்த வரை போராடுகிறார்கள்….

2) மத்திய அரசு மீனவர் விவகாரத்தில் அரசியல் செய்கிறது.
இலங்கைக்கு ஆதரவாகத்தான் செயல்படுகிறது என்றாலும்,
அது வெளியே தெரியாமல் பார்த்துக் கொள்ள முயல்கிறது.

3) மத்திய அரசு இந்தி திணிப்பை முடிந்த இடங்களில்
எல்லாம் வேண்டுமென்றே தொடர்கிறது….

ஆங்கிலம் தெரிந்திருந்தும், தான் பேசுவது சுத்தமாக
இந்தி தெரியாத தமிழக உறுப்பினர்களிடையே தான்
என்பதை உணர்ந்தும் – வேண்டுமென்றே திருமதி
சுஷ்மா ஸ்வராஜ் இந்தியில் பதிலளித்தது ஏமாற்றும் செயல்.

(திருமதி சுஷ்மா ஆங்கிலத்தில் படித்து வழக்கறிஞர் பட்டம்
பெற்று, சுப்ரீம் கோர்ட்டில் வக்கீலாகப் பணியாற்றியவர்….)

– இவர்கள் எல்லாம் ஒரு நாள் தமிழ்நாட்டிற்கு வந்து தானே
ஆக வேண்டும் ….? அப்போது பார்ப்போம் …..
எப்படி, எந்த மொழியில் உரையாடுகிறார்கள் என்று.

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

14 Responses to திருமதி சுஷ்மா ஸ்வராஜ் அவர்களின் ஏமாற்றும் முயற்சி …..

 1. இ.பு.ஞானப்பிரகாசன் சொல்கிறார்:

  கடைசி வரி செம்மையாக இருந்தது!
  அன்புமணியும் பொன்.ரா-வும் அவையில் இல்லை என்பதைத் தாங்கள் ஏன் கனமான எழுத்துக்களில் காட்டியிருக்கிறீர்கள் என்பதும் புரிகிறது!

  இந்தி இந்தியாவின் தேசியமொழி இல்லை என்று தொடர்ந்து சான்றுகளோடு ஊடகங்களில் கூறப்பட்டு வருகிறது. அப்படியிருந்தும் துளியும் வெட்கம் இல்லாமல், வட இந்தியர்கள் இப்படி எல்லா இடங்களிலும் இந்தியை முன்னிறுத்துவது, இந்த நாட்டின் குறிப்பிட்ட ஒரு பகுதி மக்கள் தங்கள் பெரும்பான்மையையும், அரசியல் செல்வாக்கையும் பயன்படுத்தி மற்ற அனைவருடைய அடையாளங்களையும் அழிக்கும் முயற்சியே! இப்படி இந்தியே இந்திய மொழி, இந்தி பேசுபவர்களே இந்தியர்கள், இந்து சமயமே இந்திய சமயம் என்பது போல் நடந்து கொள்பவர்கள் இந்த மூன்று தரப்பு மக்களிடம் மட்டுமே வாக்குக் கேட்டுத் தேர்தலைச் சந்திக்க முன் வர வேண்டும்! எங்களிடம் எதற்காக வருகிறீர்கள்?

  இந்த நாட்டின் குறிப்பிட்ட இனத்தைச் சேர்ந்த மக்கள், அந்த இனத்தைச் சேர்ந்தவர்கள் என்பதற்காகவே கொடுமைப்படுத்தப்படுவதையும், இழிவாக நடத்தப்படுவதையும், மானக்கேட்டுக்கும் பாலியல் துன்புறுத்தல்களுக்கும் ஆளாக்கப்படுவதையும், கொல்லப்படுவதையும் இந்த நாட்டு அரசு இப்படி, போனால் போகிறது எனப் பிச்சை போடுவது போலத்தான் கையாளும் என்றால், நாங்கள் ஏன் இந்த நாட்டின் குடிமக்கள் எனச் சொல்லிக் கொள்ள வேண்டும்?

  • sella சொல்கிறார்:

   நாங்கள் ஏன் இந்த நாட்டின் குடிமக்கள் எனச் சொல்லிக் கொள்ள வேண்டும்?

   I like it. Put this first and start your argue.

 2. R.Ramachandran சொல்கிறார்:

  இந்தி பேசுபவர்களுக்குத் தான் இந்தியா சொந்தம்
  என்று பாஜகவினர் நினைக்கிறார்கள்.
  பாராளுமன்றத்திலும் அனைத்து நடவடிக்கைகளும்
  இந்தியிலேயே இருக்கின்றன.

  நானும் நீங்கள் சொல்லும் காட்சிகளை
  தொலைக்காட்சியில் பார்த்தேன்.
  ஆனால், அமைச்சர் சுஷ்மா சொன்னது ஒன்றூமே
  புரியவில்லை. பாவம் தமிழக எம்.பி.க்கள்.
  அமைச்சர் என்ன சொல்கிறார் என்றே புரியாதபோது
  எப்படி விவாதத்தில் பங்கேற்க முடியும் ?

 3. S.Selvarajan சொல்கிறார்:

  திரு.கா.மை. அவர்களே ! இதெல்லாம் நடக்கும் — இதற்கு மேலேயும் நடக்கும் என்பதை தாங்கள் அறியாததா ? சு.சாமி பகிரங்கமாக தமிழக பா.ஜ.க. கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு ” எச்சரிக்கை ” விடுவதிலிருந்தே — எல்லோருக்கும் புரிகிறது !! மீண்டும் ஒரு எழுச்சி தேவையா ? என்பதுதான் புரியவில்லை ….

 4. Sundar Kannan சொல்கிறார்:

  இந்த பின்னோட்டம், திரு கா. மை. அவர்களின் இன்றைய இடுகையை பற்றியதல்ல, எனினும் இது மீனவர் பிரச்சினையை பற்றியது.
  சமீபத்தில் திரு வா மணிகண்டன் அவர்களின் “நிசப்தம்” வலைத்தளத்தில், இந்த பிரச்சினையின் மற்றொரு கோணத்தை முன்வைத்து எழுதப்பட்ட ஒரு கட்டுரையை படித்தேன். இதை படித்த பின் , “இப்படியும் இருக்கலாமோ?” என்று எண்ணத்தோன்றும்.
  http://www.nisaptham.com/2014/12/blog-post_3.html
  http://www.nisaptham.com/2014/12/blog-post_7.html

  சுந்தர் கண்ணன்

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   நண்பர் சுந்தர் கண்ணன்,
   உங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.

   நண்பர் வா.மணிகண்டன் கூறுவது போல் இலங்கைத் தமிழ் மீனவர்களுக்கும் இந்தப் பிரச்சினையில் ஓரளவிற்கு
   சம்பந்தம் இருக்கிறது என்பது உண்மையே.
   ஆனால், அதற்கான பங்கு மிகக் குறைச்சல்.

   இலங்கையில் இருக்கும் தமிழ் மீனவர்களின் நலனைக்
   காப்பதற்காகத்தான் இலங்கை கடற்படை தமிழக மீனவர்களை
   இந்த அளவிற்கு வதைக்கிறது / துன்புறுத்துகிறது என்பதை
   அவர்களே கூட நம்ப மாட்டார்கள்.

   இது விவாதத்திற்குரிய ஒரு விஷயம்.
   இதைப்பற்றி விவரமாக எழுத தனியே ஒரு இடுகை
   தேவைப்படும். பின்னர் வாய்ப்பு கிடைக்கும்போது
   அதைப்பற்றியும் விவரமாக விவாதிக்கலாமே……

   இந்த இடுகையில் முக்கியமாக நான் சொல்ல வந்தது –

   மீனவர்களை விடுவிப்பது, படகுகளை விடுவிப்பது,
   “கச்சத்தீவு” விவகாரம் – கூடவே, பாஜகவின் இந்தி வெறி….
   ஆகியவை குறித்தே.

   -வாழ்த்துக்களுடன்,
   காவிரிமைந்தன்

 5. DrKGP சொல்கிறார்:

  Dear KM, it is commendable that you watch the proceedings so closely to
  give such a version. Even if I had watched it , I might have missed many details.

 6. today.and.me சொல்கிறார்:

  கா.மை.ஜி
  //- இவர்கள் எல்லாம் ஒரு நாள் தமிழ்நாட்டிற்கு வந்து தானே
  ஆக வேண்டும் ….? அப்போது பார்ப்போம் …..
  எப்படி, எந்த மொழியில் உரையாடுகிறார்கள் என்று.//
  வருவார்கள், கிள்ளைத் தமிழில் தமிழைக் கிள்ளிக்கிள்ளி எறிவார்கள். நாமும் தமிழை என்ன அழகாக கொஞ்சி கொஞ்சிப் பேசுகிறார் என்று மனமகிழ்ந்துபோய்விடுவோம்.

  இதற்கெல்லாம் மசியாதவர்களுக்கு
  மதம் காட்டுவார்கள், பணம் காட்டுவார்கள், பயம் காட்டுவார்கள்.
  இந்த மொழிகளில் ஏதாவது ஒன்றுக்கு தமிழர் பணிந்துதானே ஆகவேண்டும்.

 7. கிரி அனகை. சென்னை. சொல்கிறார்:

  ஆங்கிலம் தெரிந்திருந்தும், தான் பேசுவது சுத்தமாக
  இந்தி தெரியாத தமிழக உறுப்பினர்களிடையே தான்
  என்பதை உணர்ந்தும் – வேண்டுமென்றே திருமதி
  சுஷ்மா ஸ்வராஜ் இந்தியில் பதிலளித்தது ஏன் என்பதற்கு விளக்கம் தமிழக பா ஜ தான் அளிக்க வேண்டும் ..

 8. Varadarajan சொல்கிறார்:

  Dear Mr K M
  Your detailings are very apt. Unless the tamilians Boycott both the BJP and Congress and do not allow them to have any alliance with any other political party in Tamil nadu these things will continue to reign in India. Tamil Nadu should not allow a single BJP or Congress MLA or MP even a counsellor to represent them. All Tamilnadu MPs and MLAs should take a vow to speak only in Tamil in Pariliament and give Memorandum only in tanil and not even in English.

  TN govt should send all official corrospondance to Centre only in Tamil and give instructions only in tamil in Tamil Nadu.

  Even we all should talk only in Tamil to the tourists who speaks only in Hindi and not in English in Tamil nadu to make them understand the difficulty.

  with regards

 9. ns raman சொல்கிறார்:

  All the facilities provided to MP from Tamil Nadu for translation from Hindi to English. They can very well give their questions in English and ask for a written reply. Even assistants can be appointed for preparation of question. Truth is All 37 Slaves are not prepared and lack of knowledge about parliament proceedings and issues. Stop this Hindi down down this can be fit for retired people who is not out of tamilnadu…..

  • today.and.me சொல்கிறார்:

   பரவாயில்லையே. பாராளுமன்றத்தில் நடப்பவற்றை லைவ் ஆகப் பார்ப்பவர்கள் தமிழர்கள் தமிழ்நாட்டில் யாருமே கிடையாது என்று முடிவுசெய்துவிட்டீர்களே. ஆனால் அப்படிபட்ட இந்தி கொஞ்சங்கூடத் தெரியாத பாமரத் தமிழர்களின் ஓட்டுகளால் ஜெயித்து அங்கே போய் அட்டெண்டென்ஸ் போட்ட 37 பேரை அடிமைகள் என்று சொல்லத்தெரிந்த உங்களுக்கு 2 கொத்தடிமைகளைக் காணோம் என்று கா.மை. எழுதியிருக்கிறாரே,அதைப்பற்றி ஏதாவது கருத்து இருக்கிறதா?

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   நண்பர் என்.எஸ்.ராமன்,

   (அதென்ன உங்கள் ஐடி யில் தினமணி என்று
   வருகிறது …? நீங்கள் தினமணி இதழில் பணி
   புரிபவரா அல்லது அந்த இதழின் சார்பாக
   எழுதுகிறீர்களா …? விருப்பம் இருந்தால் சொல்லலாம்…)

   இத்தனை நாட்கள் கழித்து புதிதாக வந்து திடீரென்று
   3 இடுகைகளுக்கு ஒரே சமயத்தில் பின்னூட்டம்
   போட்டிருக்கிறீர்கள். நீங்கள் யாராக இருந்தாலும்
   வரவேற்கிறேன்.

   எழுதியவரை குறை சொல்வதை விட்டு விட்டு,
   கருத்தில் என்ன குறை கண்டீர்களோ -அதைச் சொன்னால்
   தேவலை.

   நான் சொன்னது – பாராளுமன்றத்தில், உறுப்பினர்கள்
   ஆங்கிலத்தில் கேள்வி கேட்டால் –
   அமைச்சருக்கும் ஆங்கிலம் தெரிந்திருந்தால் –
   ஆங்கிலத்திலேயே பதில் சொல்வது தான் மரபு என்று.
   அதற்கு நீங்கள் சொல்லும் விளக்கம் என்ன ?

   அமைச்சர் அதிபுத்திசாலி. எப்படி வேண்டுமானாலும்
   பேசுவார்…. உறுப்பினர்களுக்குத் தான்
   கேள்வி கேட்க வக்கு இல்லை என்கிறீர்களா ?

   நீங்கள் யாராக இருந்தாலும் –
   எனக்கு உங்களை விட அதிகமாகவே “இந்தி” தெரியும்.
   பல ஆண்டுகள் வடக்கிலேயே வாழ்ந்தவன்.
   எனவே – எனக்கு ‘இந்தி’ மொழி தெரியாத காரணத்தால்
   இதை நான் எதிர்க்கவில்லை. ‘இந்தி’யை வைத்துக் கொண்டு
   அவர்கள் எப்படி நம்மை இரண்டாம்தர குடிமகனாக
   மாற்ற முயற்சிக்கிறார்கள் என்பதையே சொன்னேன்…

   உங்களுக்கு அடிமையாகவே இருக்க வேண்டுமென்றால் –
   தாராளமாக இருந்து விட்டுப் போங்கள்…..

   “சுதந்திரம் எங்கள் பிறப்புரிமை” – என்பதில் நம்பிக்கை
   உடையவர்கள் நானும் என் நண்பர்களான இந்த
   வலைத்தள வாசகர்களும். இதைத் தடுக்க யாருக்கும்
   உரிமை இல்லை.

   விவாதங்களில் பங்கு கொள்ள நீங்களும் விரும்பினால் –
   நேரடியாக, கருத்துக்களைச் சொல்லி விவாதம் செய்யுங்கள்.
   உருட்டல், மிரட்டல்கள் எல்லாம் இங்கு வேண்டாம்.

   கடைசியாக ஒரு வார்த்தை – “எதாவது” ஒரு கட்சியின்
   “அடிமை”யாக இருப்பவர்களுக்கு இந்த வலைத்தளத்தில்
   வரும் இடுகைகள் கசப்பாகவே இருக்கும்.
   அதற்கு நானென்ன செய்ய …?
   Sorry – I am helpless…..

   -வாழ்த்துக்களுடன்,
   காவிரிமைந்தன்

  • இ.பு.ஞானப்பிரகாசன் சொல்கிறார்:

   என்ன திமிர் இருந்தால் எங்கள் நாடாளுமன்ற உறுப்பினர்களை அடிமைகள் என்பாய்? அட அற்பப் பதரே! நாங்கள் இல்லாவிட்டால் இந்த நாட்டின் அடிமைத்தனமே ஒழிந்திருக்காது, தெரிந்து கொள்! மகாத்மா காந்தியின் ‘சத்திய சோதனை’ படித்துப் பார்! தமிழர்கள் இல்லாமல் இந்த நாடு விடுதலை அடைந்திருக்க முடியாது என்று எழுதியிருக்கிறார். இந்த நாட்டில் அடிமைத்தனத்துக்கு எதிராக முதல் குரல் கொடுத்தவர்களே நாங்கள்தான். குள்ளநரிகளே! விடுதலை அடையும்பொழுது எல்லா இனங்களுக்கும் தனித்தனி நாடுதானே இருந்தது? எல்லா மத, இன, மொழி மக்களுக்கும் முழுமையான பிரதிநிதித்துவம் அளிக்கப்படும் என்று கூறி எல்லாப் பகுதிகளையும் சேர்த்து ஒரே நாடாக்கிவிட்டு, இன்று இந்திதான் தாய்மொழி, இந்து சமயம்தான் நாட்டின் சமயம், மற்றவர்களெல்லாரும் அடிமைகள் என்றா பேசுகிறீர்கள்? சூழ்ச்சிப் பிண்டங்களே! வெட்கமாயில்லை?

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.