“ரஜினி மீது பாரதிராஜாவின் தாக்குதல்”……என்று விஷயத்தை ஏன் திசை திருப்புகிறார்கள்….?

.

.

bharathiraajaa-1

ஒரு பேட்டியில் பாரதிராஜா அவர்களிடம் ஒன்பது கேள்விகள்
முன் வைக்கப்படுகின்றன. அதில் ஒரே ஒரு கேள்விக்கு
அவர் சொன்ன பதிலை மட்டும் எடுத்துக் கொண்டு,

அதிலும் அவர் சொல்லாத ஒரு கோணத்தில் தலைப்பை
போட்டு, பரபரப்பை உண்டாக்குகிறார்களே தவிர,
அவர் சொன்ன வார்த்தைகளில் உள்ள உண்மைகளை
பெரும்பாலானோர் கவனிக்கவே இல்லை.

முதலில் பாரதிராஜாவின் பேட்டியிலிருந்து,
இந்த இடுகைக்கு தொடர்பான பகுதி மட்டும் கீழே
(அதற்குப் பின் நம் விவாதம்..) –

———————————————————————

கேள்வி – விஜய்காந்த், ரஜினி, விஜய் … இப்படி நடிகர்கள்
அரசியலுக்கு வர்றதுக்கு சினிமா தான் பாதையா ..?

“இதுக்கு அடிப்படையான காரணம் யார்.. சொல்லுங்க..
ஊடகம் தானே நடிகர்களைத் தூண்டிவிட்டு, அரசியலுக்கு
வருவீங்களான்னு முதல் கேள்வி கேட்குது …?”

‘சினிமாவில் சிறந்த படைப்புகளைக் கொடுத்திருக்கீங்க.
மேடைல உணர்ச்சிகரமாப் பேசுறீங்க.. நீங்க ஏன் அரசியலுக்கு
வரக் கூடாது?’ன்னு என்கிட்டயே கேக்கிறாங்க….

Why they are doing like this..? ஒரு நடிகன்கிட்ட
‘எப்போ ஆஸ்கர் விருது ஜெயிப்பீங்க’ன்னு கேளுங்க..
அதைவிட்டுட்டு அரசியல் பத்தி எல்லாம்
ஏன் கருத்து கேக்குறீங்க?
சரி.. அப்படியே யாராவது கேட்டாலும், அவனுக்காச்சும்
கொஞ்சம் சுய புத்தி வேணும்..

அது கலைஞர் மேடையாக இருக்கட்டும்,
மேடம் மேடையாக இருக்கட்டும் –

எல்லா மேடையிலேயும் நான் இதைச் சொல்லியிருக்கேன்…
‘தயவு செஞ்சு எங்களை ரொம்ப
பக்கத்துல வெச்சுக்காதீங்க.. ஏன்னா, பேசும்போது நீங்க
எங்களுக்குத் தெரியறதே இல்லை.. உங்க நாற்காலிகள்தான்
கண்ணுக்குத் தெரியுது’ன்னு..!

அரசியலில் ஈடுபட எனக்கென்ன தகுதியிருக்கு..?
சமூகத்தில் என் பொறுப்பு.. ‘ஒரு கதை சொல்லி’..
அதுக்கு மேல எனக்கு எந்த முக்கியத்துவமும் வேண்டாம்..

First of all.. ஒரு நடிகனுக்கு அரசியலில் ஈடுபட
என்ன தகுதியிருக்கு..?

‘இந்த நாட்ல எத்தனை ஜீவ நதிகள் ஓடுது?’ன்னு
சொல்லச் சொல்லுங்க.
‘எத்தனை நதிகள் வற்றி வறண்டு காணாமல்
போச்சு?’ன்னு தெரியுமான்னு கேளுங்க.
“இந்தியால எத்தனை டேம் இருக்கு?’ன்னு கேட்டுப் பாருங்க.
“வட இந்தியாவுக்கும், தென் இந்தியாவுக்கும் கலாச்சார ரீதியா
என்ன வித்தியாசம்னு தெரியுமா?’ன்னு கேளுங்க..

சும்மா நாலு ரசிகர் மன்றங்கள் வைச்சு 50 பேருக்கு தையல்
மிஷின் வாங்கிக் கொடுத்திட்டா அரசியலுக்கு வந்திரலாமா..?
What is this..? எனக்கு எந்தப் பயமும் இல்ல..
நான் சொல்றதை அப்படியே போடுங்க..

கர்நாடகா, கேரளாவில் இப்படிப் பண்ண முடியுமா..?
ஏன் தமிழ்நாட்ல மட்டும் இப்படி எல்லாம் நடக்குது. ?

சினிமாவில் இருப்பவர்கள் அரசியலுக்கு வரவே கூடாதா ?

சினிமாவில் இருந்து விலகி 10 வருடங்கள் மக்கள் மத்தியில்
வேலை பார்த்து, சோஷியல் சர்வீஸ் எல்லாம் செய்து..
மேடையில் பேசி அப்புறமாத்தான் அரசியலுக்கு வரணும்.
Go and work first ..

நேத்து நடிக்க வந்துட்டு நாளைக்கே சி.எம்.ஆக ஆசைப்படக்
கூடாது.. 20 வருஷமாவா ஒருத்தரை அரசியலுக்குக்
கூப்பிட்டுக்கிட்டே இருப்பீங்க.. What is this nonsense..?
அட்லீஸ்ட் முனிசிபாலிட்டி, பஞ்சாயத்துத் தேர்தல்ல நின்னு
ஜெயிச்சிட்டு, அப்புறம் அரசியல் கட்சில சேர்ந்து மக்களுக்கு
ஏதாவது நல்லது செய்யட்டும்..

ஸார்.. ஒரு உண்மையைச் சொல்றேன்.. I’m telling frank truth..
ஒரு நல்ல கலைஞன் அரசியலுக்குப் போக மாட்டான்.
மகாத்மா காந்தி என்னைக்காவது சேர்ல உட்கார்ந்தாரா..?
அன்னை தெரசா போஸ்டிங் எடுத்துக்கிட்டா சேவை செஞ்சாங்க..?

அவங்களைவிடவா இவங்க எல்லாம் நல்லது
பண்ணிடப் போறாங்க….?
————————————————————————-

இதில் ரஜினி மீது “அட்டாக்” எங்கே வருகிறது …?

அவரை அரசியலுக்கு வரும்படி தூண்டுபவர்களைத் தான்
பாரதிராஜா “அட்டாக்” செய்கிறார்.

நடிகர்களை அரசியலுக்கு வரத்தூண்டும் “மீடியா”வைத் தான்
“அட்டாக்” செய்கிறார்.
அதே சமயத்தில் அந்த “அட்டாக்” நமக்கும் (பொது மக்களுக்கும்)
மிகச்சரியாகப் பொருந்துகிறது.

பாரதிராஜா கேட்பதில் எந்த தவறும் இருப்பதாக எனக்குத்
தெரியவில்லை. சினிமா நடிகர்களுக்கு –
தானாகவே அரசியல் ஆசை வந்தாலும் சரி,
மீடியாக்கள் தூண்டி விட்டு வந்தாலும் சரி –
மக்களுக்கு “புத்தி” எங்கே போனது ….?

ஒரு மிகப்பெரிய டாக்டர் – பிரமாதமாக அறுவை
சிகிச்சைகள் செய்வார் – best surgeon.
இன்னொருவர் மிகப்பிரமாதமாக ஓவியம் வரைவார் –
A Great Artist.
இன்னொருவர் மிகச்சிறந்த பாடகர் -Wonderful Singer.

அவரவர் துறையில் உண்மையாகவே சிறந்து விளங்கும்
இவர்களை எல்லாம் ஏன் யாரும் அரசியலுக்கு கூப்பிடுவதில்லை..?
சி.எம். ஆகவேண்டும் என்று அவர்களைத் தூண்டுவதில்லை…?

தாங்கள் செய்யும் தொழில்களில், துறைகளில் உண்மையிலேயே
சிறந்த எல்லாரையும் நாம் அரசியலுக்கு அழைப்பதில்லையே …

நடிகர்களுக்கு மட்டும் ஏன் விதிவிலக்கு….?
அது தான் சினிமா என்கிற “மாயை” செய்யும் ஜாலம்.

அறிவு கெட்ட நம் மக்களுக்கு நிஜத்திற்கும் – நிழலுக்கும்
வித்தியாசம் புரிவதில்லை. நடிகர்கள் திரைப்படத்தில்
செய்வதை எல்லாம் நிஜ வாழ்க்கையிலும் செய்யக்கூடியவர்கள்
என்று கற்பனையாக நினைத்துக் கொள்கிறார்கள்.
அவர்களிடம் இல்லாத தகுதிகளை இருப்பதாக
இவர்களாகவே நினைத்துக் கொள்கிறார்கள்.

நல்ல நடிகர்களை – நல்ல கலைஞர்களாகப் பாருங்கள்.
பிடித்திருந்தால் அவர்களைக் கொண்டாடுங்கள்.

அவர்கள் படத்தை ஒன்றுக்கு நாலு தடவையாக
பார்க்க வேண்டுமானாலும் செய்யுங்கள்.
அற்புதமான கலைஞர் என்று கொண்டாடுங்கள்.

ஆனால், அத்தோடு நிறுத்திக் கொள்ள வேண்டும்.
அவர்கள் துறையில் சிறந்தவர்கள் என்கிற அளவில்
பாராட்டுவதோடு நிறுத்திக் கொள்ள வேண்டும்.

உடனே அடுத்த ‘சி.எம்’ நீ தான் என்று குரலெழுப்புவது
முட்டாள் தனமாகத் தெரியவில்லையா ..?
இது வேறு – அது வேறு இல்லையா …?

அவர்கள் திரையில் செய்வதை எல்லாம் நிஜத்திலும்
செய்ய வல்லவர்கள் என்று நம்பி, அவர்கள்
“கட்-அவுட்”களுக்கு பாலாபிஷேகம் செய்யும் “புத்திசாலிகள்”
உலகிலேயே தமிழகத்தைத் தவிர வேறெங்கும் இருப்பதாகத்
தெரியவில்லை.

இந்த பைத்தியக்காரத்தனம் எல்லாம் இந்த தலைமுறையோடு
ஒழியட்டும். அடுத்த தலைமுறையாவது இது போன்ற
எண்ணங்களிலிருந்து வெளிவரட்டும்….

அதுவரை – பாரதிராஜா சொல்வது போல், நடிகர்கள்
நேரடியாக அரசியலில் இறங்க எதாவது தடை கொண்டு வந்தால்
கூட நல்லது தான்.

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

7 Responses to “ரஜினி மீது பாரதிராஜாவின் தாக்குதல்”……என்று விஷயத்தை ஏன் திசை திருப்புகிறார்கள்….?

 1. Srini சொல்கிறார்:

  che che.. indha pazham pulikudhu katha thaan idhu… in the past, this guy was wearing black shirt and tried to get into politics… nothing worked. he is fed up of that. at one moment, he decided that politics is not for me…. his interview is an outcome of the that failure.. BUT I am not denying what he said was wrong. he spoke correctly. he is on the correct path now.

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   ஸ்ரீநி,

   பாரதிராஜா எப்போதும் கொஞ்சம் உணர்ச்சி
   வசப்பட்டு பேசக்கூடியவர். யோசிக்காமல்,
   உணர்ச்சி வசப்பட்டு பேசக்கூடியவர்கள்
   பல சமயங்களில் உண்மையையே பேசுகிறார்கள்…!

   -வாழ்த்துக்களுடன்,
   காவிரிமைந்தன்

 2. S.Selvarajan சொல்கிறார்:

  சரியான ” சவுக்கடி ” கொடுத்த திரு.பாரதிராஜாவுக்கு — முதல் நன்றி ! இதை எடுத்து இயம்பிய திரு.கா.மை.க்கு —- இரண்டவது நன்றி !! 20 வருஷமாவா ஒருத்தரை அரசியலுக்குக்
  கூப்பிட்டுக்கிட்டே இருப்பீங்க.. What is this nonsense..? என்கின்ற இந்த ஒரு வரியை வைத்து — ரஜினியை பற்றி கூறி விட்டதாக நினைத்து இருப்பார்கள் போல தெரிகிறது —- அப்படியே இருந்தாலும் —- அதுதானே ” உண்மை ” இது நாடறிந்த செய்திதானே — ரஜினிக்கும் இது நன்கு தெரிந்த விஷயம் தானே ? அவர் ஒட்டு மொத்தமாக — குழப்பாமல் ” நான் அரசியலுக்கு வரமாட்டேன் ” என்று கூறினால் —- பிரச்சனைகள் முற்று பெரும் அல்லவா ? அவ்வாறு சொன்னால் வசூல் பாதிக்கும் என்கின்ற எண்ணமாக கூட இருக்கலாமோ ? பிழைக்க தெரிந்தவர்கள் !!!

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   உண்மை தான் செல்வராஜன்.

   “தலைவா, தலைவா” என்று
   கொண்டாடுகிறார்கள். “நான் அந்த விளையாட்டுக்கு
   வரவில்லை” என்று சொன்னால் – கூட்டம்
   வேறு திசையில் போய் விட்டால் என்ன செய்வது
   என்கிற அச்சமும் ஒரு காரணம் ….

   இது ரஜினிக்கு தான் என்றில்லை …
   “பாவ்லா” காட்டிக் கொண்டிருக்கும் எல்லா
   முன்னணி நடிகர்களுக்குமே பொருந்தும்.

   -வாழ்த்துக்களுடன்,
   காவிரிமைந்தன்

 3. சைதை அஜீஸ் சொல்கிறார்:

  //அவர்கள் திரையில் செய்வதை எல்லாம் நிஜத்திலும்
  செய்ய வல்லவர்கள் என்று நம்பி….//
  காமராஜுக்கு முன் எத்தனைபேர் தமிழக முதல்வராக இருந்தனர் என்று கேட்டால் நம்மில் எத்தனைபேரால் பதில் சொல்லமுடியும்?
  அதே சமயத்தில் காமராஜுக்குப்பின் எத்தனைபேர் முதல்வராக இருந்தனர் என்பதை நம்மில் அனைவருக்கும் தெரியும்!
  கிட்டத்தட்ட ஐம்பது ஆண்டுகளில் தமிழகத்தை ஆண்டவர்கள் வெறும் நான்கு பேர் மட்டுமே! (நெடுஞ்செழியன், ஜானகி மற்றும் பன்னீர் ஆகியோரை அவர்களே முதல்வர் என்று நம்பவில்லையே!)
  ஆனால் பக்கத்திலுள்ள ஆந்திரா, கேரளா, கர்னாடகா, ஏன்… பாண்டிச்சேரியில்கூட ஐந்து ஆண்டுகளில் எத்தனைபேர் முதல்வராகிறார்கள்? ஏன் இங்கே மட்டும் இப்படி? பிறகு அவன் அப்படி கேட்கிறான்… இவன் இப்படி சொல்றான் என்பதெல்லாம்… சும்மா ஹம்பக்!
  //அறிவு கெட்ட நம் மக்களுக்கு நிஜத்திற்கும் – நிழலுக்கும் வித்தியாசம் புரிவதில்லை//
  இன்றில்லாவிட்டாலும் நாளையாவது மாறவேண்டும்!!!

 4. இ.பு.ஞானப்பிரகாசன் சொல்கிறார்:

  ஐயா! பதிவில் தாங்கள் கேட்டிருக்கும் அத்தனை கேள்விகளும், கூறியிருக்கும் அத்தனை கருத்துக்களும் மிக மிகச் சரியானவையே! ஆனால், இதில் ரஜினியை பாரதிராஜா தாக்கவேயில்லை என்கிற தங்கள் கூற்றைத்தான் என்னால் ஏற்க இயலவில்லை.

  “20 வருஷமாவா ஒருத்தரை அரசியலுக்குக் கூப்பிட்டுக்கிட்டே இருப்பீங்க.. What is this nonsense..?” என்பதே ரஜினியையும் சேர்த்துத் தாக்குவதுதானே? எப்படி எனக் கேட்கிறீர்களா? எடுத்துக்காட்டாக, நாம் வீட்டில் ஒரு சிறு சண்டை காரணமாக முறுக்கிக் கொண்டு, முகத்தைத் தூக்கி வைத்துக் கொண்டு உட்கார்ந்திருக்கிறோம் என வைத்துக் கொள்ளுங்கள். நம் மகனோ, மகளோ, வீட்டிலிருக்கும் குழந்தைகளில் யாராவதோ நம்மை சமாதானப்படுத்திச் சாப்பிட அழைக்கிறார்கள்; நாமோ எவ்வளவோ சமாதானப்படுத்தியும் பிகு செய்துகொண்டே உட்கார்ந்திருக்கிறோம்; அப்பொழுது வீட்டில் யாராவது ஒருவர், “அதான் வரலைங்கிறாரே விடேன்” என்று சொன்னால் நமக்கு எவ்வளவு சீற்றம் வரும்? சமாதானப்படுத்துபவர்களைத்தானே சொல்கிறார்கள், நம்மைச் இல்லையே என்றா தோன்றும்?

  அதே போலத்தானே இதுவும்? தொடர்ந்து மீண்டும் மீண்டும் ஒருவர் இன்னொருவருக்கு அழைப்பு விடுத்துக்கொண்டே இருக்கும்பொழுது, அத்தனை முறை அழைத்தும் அவர் பிகு செய்வதை, அந்தத் திமிரை நாம் நேரடியாகச் சாடாமல், அழைப்பு விடுப்பவரைச் சாடினாலே அது அழைப்பு விடுக்கப்படுபவருக்கும் பொருந்தும் இல்லையா? அவருடைய திமிரை மறைமுகமாகச் சுட்டிக்காட்டும் முயற்சிதானே அது?

  அப்படி இருந்தால் அதில் என்ன தவறு என்கிறீர்களா? ஆம் ஐயா, அதைத்தான் நானும் சொல்ல வருகிறேன்; அது தவறு இல்லை. பாரதிராஜாவின் அந்த நேர்காணல் ரஜினிக்கு எதிரான தாக்குதல்தான்; ஆனால், அதில் தவறு ஏதும் இல்லை என்பதே என் பணிவன்பான கருத்தும்.

  • இ.பு.ஞானப்பிரகாசன் சொல்கிறார்:

   அதே நேரம், இன்னொன்றையும் இங்கே பதிவு செய்ய விரும்புகிறேன். ரஜினியை விமரிசிக்கும் அளவுக்கு பாரதிராஜாவுக்கு என்ன தகுதி இருக்கிறது என்பதே அது!

   மீண்டும் சொல்கிறேன், இந்த நேர்காணலில் திரைத்துறையைச் சார்ந்தவர்கள் அரசியலுக்கு வருவதற்குண்டான தகுதிகள் பற்றியோ, அது தொடர்பான இன்ன பிறவற்றைப் பற்றியோ பாரதிராஜா கூறியுள்ள கருத்துக்களில் எனக்கு எள்ளளவும் மாற்றுக்கருத்து இல்லை. ஆனால் அதே நேரம், இப்படிப்பட்ட ஒரு நேர்காணல் மூலம் பாரதிராஜா பெரிய துணிச்சல்காரர், சமூக அக்கறையாளர் என்கிற மாயத்தோற்றம் ஒன்று உருவாவதுதான் அருவெறுப்பாக இருக்கிறது! காரணம், அஃது உண்மையில்லை.

   தமிழீழப் படுகொலையின்பொழுது புதிதாக வெடித்துக் கிளம்பிய சீமான், அமீர் முதலான திரைப்படத்துறையினர் பலர் பாரதிராஜாவின் தலைமையில்தான் தங்கள் மாநாடுகளை முதலில் கூட்டத் தொடங்கினர், இனமே அழிந்து கொண்டிருந்த வேளையில் அன்றைய தமிழ்நாட்டு மாநில அரசும், நடுவணரசும் செய்து வந்த இரண்டகங்களைப் பொது மேடையில் போட்டுத் தாக்கி அம்பலப்படுத்தினர். தொடக்கத்தில் இந்த முயற்சிகளுக்குத் தலைமை தாங்கி வழிநடத்திய பாரதிராஜா தன் வீட்டின் மீது நான்கு கற்கள் விடப்பட்டவுடனே வாயை மூடிக் கொண்டு ஓட்டுக்குள் ஆமையாக வீட்டுக்குள் பதுங்கினார். ஊடகங்களிடம் கூட வாய் திறக்காமல் மாதக்கணக்கில் மௌனவிரதம் பூண்டார். தமிழினத்தின் தலைமைப் பொறுப்பில் இருந்து கொண்டு இனத்தையே காட்டிக் கொடுத்த கயவரை எதிர்ப்பற்கென்றே புறப்பட்டவர், அன்று பூண்ட மௌனவிரதத்தை அதன் பிறகு கலைத்ததே அந்தக் கயவரின் புகழ் பாடும் மேடையில்தான்!

   அப்பேர்ப்பட்ட ‘நல்லவர்’, ‘துணிச்சல் திலகம்’ இன்று ஈழம் பற்றிப் பெரிதாக ஊடகங்கள் கண்டு கொள்ளவில்லை, அப்படியே கண்டு கொண்டாலும் தனக்குத் துணையாக நல்ல புளியங்கொம்பைப் பிடித்திருக்கிறோம் என்பதால் இப்பொழுது சமூகம், நாடு, இனம் எனவெல்லாம் மீண்டும் ‘பேச’த் தொடங்கி விட்டார் என்பதே உண்மை!

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.