டாக்டர் சுப்ர.சுவாமிக்கு 70 லட்சம் வேண்டுமாம் – செய்யாத வேலைக்கு சம்பளம் …!! கொடுக்க மறுத்த டைரெக்டர் வீட்டுக்குப் போகிறார்…..!!!

.

.

டெல்லி இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி (IIT,Delhi )
டைரெக்டர் திரு.ஆர்.கே.ஷெவ்காங்கர் (RK Shevgaonkar ) பதவி ஓய்வு
பெறுவதற்கு இன்னும் இரண்டு ஆண்டுக்காலம் இருக்கும்போதே
தன்னுடைய ராஜினாமா கடிதத்தை மத்திய HRD அமைச்சகத்திற்கு
அனுப்பி இருக்கிறார். இதன் பின்னணியாக வெளிவந்திருக்கும் தகவல்கள்
டாக்டர் சுப்ரமணியன் சுவாமியும், பாஜக அரசின் HRD அமைச்சகமும்
கொடுத்த அழுத்தமும், அதிகாரமும் தான் இந்த ராஜினாமாவிற்கு
காரணமென்று சொல்கின்றன.

பிழைக்கத் தெரிந்த பெரிய மனிதர் …..

swamy

பிழைக்கத் தெரியாத ஒரு மனிதரின் புகைப்படம்…. ம்ம்ம்ம்ம்……!!!

IIT-Delhi -director raghunath

பல்வேறு செய்தித்தளங்களை ஆராய்ந்ததில் கிடைத்த
இதன் பின் கதையை கீழே காண்க –

திருவாளர் சுப்ரமணியன் சுவாமி டெல்லி ஐ.ஐ.டி. யில் 1969-ல்
உதவிப்பேராசிரியராக வேலைக்குச் சேர்ந்திருக்கிறார். பின்னர் 1971-ல்
ஐ.ஐ.டி.நிர்வாகம் அவரை பணியை விட்டு நீக்கி விட்டது.
இதை எதிர்த்து அவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருக்கிறார்.

இந்த வழக்கு நிலுவையில் இருந்த காலகட்டத்தில் –
இவர் பல்வேறு பணிகளில் ஈடுபட்டிருந்திருக்கிறார்.
அமெரிக்காவில் உள்ள ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில்
பேராசிரியராகப் பணி புரிந்திருக்கிறார்.
இடையில் இரண்டு முறை லோக் சபா உறுப்பினராகவும்,
பின்னர் ராஜ்ய சபா உறுப்பினராகவும் பணியாற்றி இருக்கிறார்.
பல்வேறு கமிட்டிகளில், கமிஷன்களில் ஊதியம் பெறும் வேலைகளில்
பணியாற்றிருக்கிறார்.

தன் டிஸ்மிஸ்ஸை எதிர்த்து இவர் தொடுத்த வழக்கின் விளைவாக –
நீண்ட காலத்திற்குப் பிறகு ( வழக்கம் போல் …!!! ) –
1991ஆம் ஆண்டு தீர்ப்பு வந்திருக்கிறது.

இவரை 1971ஆம் ஆண்டு டெல்லி ஐ.ஐ.டி.நிர்வாகம் பணியிலிருந்து
நீக்கிய உத்திரவு செல்லாது என்றும், இவரை மீண்டும் வேலைக்கு
சேர்த்துக் கொள்ள வேண்டுமென்றும், 1972 முதல் 1991 வரையிலான
காலத்திலும் இவர் பணியில் தொடர்ந்ததாக கருத்தில் கொண்டு,
அதற்கான ஊதியமும் இவருக்கு அளிக்கப்பட வேண்டுமென்றும்
தீர்ப்பு.

இதைத் தொடர்ந்து இவர் மீண்டும் டெல்லி ஐ.ஐ.டி பணியில் சேர்ந்து,
பின்னர் சந்திரசேகர் அமைச்சரவையில் சேரும்வரை பணியாற்றி இருக்கிறார்.

1972 முதல் 1991 வரையிலான 19 வருட காலத்திற்கு ( அதாவது,
அவர் வேலையில் இல்லாத / வேலை செய்யாத காலத்திற்கு )
தனக்கான சம்பளமும், அதற்கு 18 % (பதினெட்டு சதவீதம்) வட்டியும் சேர்த்து,
மொத்தம் சுமார் 70 ( எழுபது ) லட்சம் ரூபாயை டெல்லி ஐ.ஐ.டி.நிர்வாகம்
தனக்கு கொடுக்க வேண்டுமென்று அதனை விரட்டியிருக்கிறார்.

சாதாரணமாக, அரசு ஊழியர்கள் பணி இடை நீக்கம் (suspension)
அல்லது பணி நீக்கம் (Removal /Dismissal ) செய்யப்பட்டு, பிற்பாடு
அவர்கள் வேலையில் சேர்த்துக் கொள்ளப்பட்டு –
இடைக்காலத்திற்கான ஊதியம் வழங்கப்பட வேண்டும் என்று முடிவானால்,
அந்த இடைக்காலத்தில் அவர்கள் வேறு எங்கேயாவது
பணியில் சேர்ந்திருந்து எதாவது ஊதியமும் பெற்றிருந்தால், அந்த
தொகை கழிக்கப்பட்டுக் கொண்டு மீதியைத் தான் சம்பள பாக்கியாக
கொடுக்க வேண்டும் என்பது அரசு விதி முறை.

அந்த அடிப்படையில் டெல்லி ஐ.ஐ.டி.நிர்வாகம் அவரிடம்
இடைப்பட்ட 19 ஆண்டுக்காலத்தில் அவர் எங்கெங்கே பணியாற்றினார்,
எவ்வளவு ஊதியம் பெற்றார் என்பதற்கான விவரங்களை
கேட்டிருக்கிறது.
( இந்த விவரங்களைத் தந்தால் அவருக்கு எழுபது
லட்சமெங்கே – எழுபது பைசா கூட கிடைக்காது…… அவர் அமெரிக்காவில்
வாங்கிய லட்சக்கணக்கிலான டாலர் சம்பளமும்,
லோக் சபா, ராஜ்ய சபா உறுப்பினராக பல ஆண்டுகளுக்கு வாங்கிய
சம்பளமும் – கூட்டிக்கழித்துப் பார்த்தால், அவருக்கு சட்டப்படி எதுவுமே
வர வாய்ப்பில்லை….!!! வர வேண்டிய சம்பள பாக்கியில், இந்த
வருமானங்களை எல்லாம் கழித்தால் ஒன்றும் தேராது….
மைனஸில் தான் போகும் ….!!! )

ஆனால் நம்ம ஆள் தான் இதிலெல்லாம் நிபுணர் ஆயிற்றே –
வாங்கிய சம்பள விவரங்களைத் தருவாரா ….!!!

இந்த விவரங்களைத் தராமல், வேறு சட்ட சந்து பொந்துகளைக்
காட்டி, சு.சு. மீண்டும் நீதிமன்றத்திற்குச் சென்றதாகத் தெரிகிறது.
டெல்லி ஐ.ஐ.டி.நிர்வாகமும், நீதிமன்றமே இதற்கு விளக்கம் சொல்லட்டும்
என்று காத்திருந்திருக்கிறது.

இதெல்லாம் – மே 2014-க்கு முந்திய கதை.

மே 2014-ல் தான் இந்தியாவே தலைகீழாக மாறி விட்டதே….!
புதிய அரசு பதவி ஏற்றுக் கொண்டது…..
அதே பழைய HRD அமைச்சகம் தான்….
ஆனால் அமைச்சர் புதியவர், பாஜக அமைச்சர் –
எனவே, ஒரு ‘உல்டா-பல்டி’ …!!!

அமைச்சகம் தன் பழைய நிலையை மாற்றிக் கொண்டு விட்டது…!
கோர்ட்டே மீண்டும் வேலையில் சேர்த்துக் கொள்ளும்படி
உத்திரவிட்ட பிறகும், பழைய பாக்கியை கொடுக்காமல்
இழுத்தடிக்கிறதா டெல்லி ஐ.ஐ.டி.நிர்வாகம் …?
‘வாட் இஸ் திஸ் நான்சென்ஸ்’ என்று கேட்டிருக்கிறார் புதிய அமைச்சர் …!!!

சு.சு.விற்கான சம்பள பாக்கியை உடனடியாக
தீர்த்து வைக்கும்படி டெல்லி ஐ.ஐ.டியின் டைரெக்டர்
திரு.ஆர்.கே.ஷெவ்காங்கர் (RK Shevgaonkar ) அவர்களுக்கு அழுத்தம்
கொடுக்கப்பட்டிருக்கிறது.

சு.சுவாமி ஏற்கெனவே இந்த விஷயத்தை கோர்ட்டிற்கு கொண்டு
சென்றிருப்பதால், அதன் தீர்ப்பு வந்தபிறகு, இதில் முடிவெடுப்பது
தான் சரியாக இருக்கும் என்று டைரெக்டர் எடுத்த நிலை
ஏற்றுக் கொள்ளப்படவில்லை. தான் எதிர்ப்பது எப்பேற்பட்ட
மாட்சிமையுடைய பாஜக வின் கொள்கை பொறுப்பாளரை என்பது
அந்த மனிதருக்கு தெரிய வேண்டாமோ ….!!!

விளைவு – பதவியை ராஜினாமா செய்து கடிதம் கொடுத்து விட்டார்.
முதலில் தங்களுக்கு இதைப்பற்றி எதுவுமே தெரியாது என்று சொன்ன
HRD அமைச்சரகம், தற்போது ஜனாதிபதி தான் ராஜினாமாவை ஏற்க
வேண்டும் என்பதால், அவரிடம் அது அனுப்பப்பட்டிருக்கிறது
என்று சொல்கிறது. மற்றபடி, வெளியில் கூறப்படும் காரணங்கள்
எல்லாம் வெறும் வதந்திகள் என்றும், டைரெக்டர் அவரது
சொந்த காரணங்களுக்காகவே ராஜினாமா செய்கிறார் என்றும்
அதிகாரபூர்வமாக சொல்லப்படுகிறது.

எது உண்மை – எது வதந்தி என்பது டெல்லி ஐ.ஐ.டியின் டைரெக்டர்
திரு.ஆர்.கே.ஷெவ்காங்கர் (RK Shevgaonkar ) சொன்னால் தான்
தெரியும்…..!!!

—————————————————————–

பின் குறிப்பு –

திருவாளர் சுப்ரமணியன் சுவாமி ஒரு கடுமையான அறிக்கையை
வெளியிட்டிருக்கிறார். டெல்லி ஐ.ஐ.டி. டைரெக்டர் ராஜினாமா
செய்தது அவரது சொந்தக் காரணங்களுக்காகத்தான்.

“என்னால் தான் அவர் ராஜினாமா செய்தார் என்று யாராவது
வதந்தியைப் பரப்பினால், நான் கடுமையான நடவடிக்கை
எடுப்பேன்” என்று.

நமக்கு ஏன் வம்பு…. நம் பங்குக்கு நாமும் இதை வதந்தி என்றே
கூறி விடுவோமே….!!! எனவே, நானும் சொல்லி விடுகிறேன் –
” ஐ.ஐ.டி. டைரெக்டர் தானே முன்வந்து சொல்லும்வரை இது
வெறும் வதந்தி தான்”….!!!

பின் பின் குறிப்பு –

வதந்தியை செய்தி என்று சொல்வது தான் சட்டப்படி குற்றம்.

செய்தியை வதந்தி என்று சொல்வது குற்றமல்ல என்று –
என் அறைகுறை சட்ட அறிவு சொல்கிறது. எனவே ……..

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

5 Responses to டாக்டர் சுப்ர.சுவாமிக்கு 70 லட்சம் வேண்டுமாம் – செய்யாத வேலைக்கு சம்பளம் …!! கொடுக்க மறுத்த டைரெக்டர் வீட்டுக்குப் போகிறார்…..!!!

 1. Arun சொல்கிறார்:

  நீங்கள் சொல்லியிருப்பது உண்மை. அவர் அரசியல் காரணுங்களுக்காக பதவி நீக்கம் செய்யப்பட்டார் என்பதும் உண்மை. இதை பழி வாங்கும் நோக்கத்துடனே செய்வதாக சில பேட்டிகளில் வெளிப்படையாக சொல்லியிருக்கிறார். நம் மக்களின் கெட்ட காலம் அவர் பக்கம் காற்று வீசுகிறது.

 2. எழில் சொல்கிறார்:

  இதில் அவர் எப்போதோ அனுமதி இல்லாமல் மொரீஷியஸ் சென்றாராம். அதை வைத்து வழமை போல் மிரட்டல் அரசியல் செய்து காசு பார்க்கலாம் என்று நினைத்த இவருக்கு, அவர் ராஜினாமா வரை போய் நெருக்கடி ஏற்படுத்துவார் என்று எதிர் பார்க்கவில்லை போல் தெரிகிறது. இப்போ இவர் செய்தி வதந்தி கேஸ் என்று மக்களை மிரட்டுகிறார். இதில் 70 லட்டசத்தை விட இவரின் அதிகார ஆணவ திமிர் தான் இவரை இப்படி எல்லாம் ஆட்டுவிக்கிறது.

 3. S.Selvarajan சொல்கிறார்:

  ஜனநாயக நாடு ? இவற்றை எல்லாம் வேடிக்கை பார்த்துக்கொண்டு —- ஒரு ” Clean Image ” ! அடுத்து வரும் டைரக்டர் கொடுத்து விடுவாரா ?

 4. ltinvestment சொல்கிறார்:

  Married Donkey then get ready to get kicks….

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.