துக்ளக் ஆண்டு விழா – ஒரு நேரடி ரிப்போர்ட்….

thuglaq - cho_speech

புதனன்று ( 14 ஜனவரி ) ‘துக்ளக்’ இதழின் 45வது ஆண்டு விழா
சென்னையில் நடைபெற்றது. நிகழ்ச்சி பற்றிய ஒரு தொகுப்பு
என் பார்வையில் – சுருக்கமாக ….!

இரண்டு விஷயங்கள் முக்கியமாகச் சொல்லப்பட வேண்டும்.

– கூட்டம் – வழக்கத்தில் பாதி தான் இருந்தது.( முக்கியமான
தலைவர்களோ, hot topics எதுவுமோ இல்லாமல் இருந்ததும்
ஒரு காரணமாக இருக்கலாம்…)

– ஆசிரியர் ‘சோ’ அவர்கள் மிகவும் உடல்நலம் குன்றி இருக்கிறார்.
மூச்சு விடுவதில் அவருக்கு சிரமம் இருக்கிறது. அடிக்கடி
வாயால் மூச்சு வாங்கிக் கொள்கிறார். தொடர்ந்து பேசுவதற்கு
மிகவும் சிரமப்படுகிறார். துவக்கத்தில் பிடிவாதமாக நின்றுகொண்டே
பேசத்துவங்கியவர், பின்னர் இயலாமையால், உட்கார்ந்து கொண்டு
பேசினார்.

எப்போதும் உற்சாகமாக, சுறுசுறுப்புடன் கலந்து கொள்ளும்
அவரது உடல்நிலையைக் காண வருத்தமாக இருக்கிறது.

அரசியலில் அவர் எத்தகையை நிலையை எடுத்தாலும்,
நான் அவரை பலமுறை இதே தளத்தில் விமரிசனம்
செய்திருந்தாலும் கூட – ‘சோ’ அவர்களின் மீது
எனக்கு எப்போதும் தனிப்பட்ட மரியாதையும், பரிவும் உண்டு.

பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளாவிடினும் பரவாயில்லை-
அவர் விரைவில் உடல்நலம் பெற்று நீண்ட நாட்கள்
ஆரோக்கியமாக வாழ வேண்டுகிறேன்.

இந்த விழாவில் – ஒரு வித்தியாசமாக பல கட்சிகளையும்
சேர்ந்தவர்கள் பேச அழைக்கப்பட்டிருந்தனர். திருவாளர்கள்
ஜவாஹிருல்லா (மனித நேய மக்கள் கட்சி ),
ஹெச்.ராஜா (பா.ஜ.க.) மற்றும்
டி.ராஜா (இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ) ஆகியோர்
‘இன்றைய அரசியல்’ பற்றிப் பேசினர்.
அதிமுக வைச்சேர்ந்த பழ.கருப்பையா அவர்களின் பெயர்
அழைப்பிதழில் இருந்தாலும், அவர் நிகழ்ச்சியில்
கலந்து கொள்ளவில்லை.

விழாவில் பார்வையாளர்களாக கலந்து கொண்டவர்களில்
குறிப்பிடத்தக்கவர்கள் – திருவாளர்கள் – ரஜினிகாந்த்,
ஆடிட்டர் குருமூர்த்தி, மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்,
திருமதி தமிழிசை சௌந்திரராஜன்……

முதலில் நிகழ்ந்த வாசகர் கேள்வி-பதிலில் குறிப்பிடத்தக்கதாக
எதுவும் இல்லை. மதுவிலக்கு பற்றி பேச்சு வந்தபோது,
சோ தனக்கு அதில் நம்பிக்கை இல்லை என்றார்.

அடுத்து பேசிய ஜவாஹிருல்லா அவர்கள் –

நாட்டில் நிம்மதியைக் குலைக்கும் விதத்தில் இந்துத்வா
அமைப்பினர் செயல்படுவதைப் பற்றி குறை கூறினார்.
பிரதமர் மோடியோ, பாஜக தலைவர் அமீத் ஷாவோ
இதுபற்றி வாய் திறவாமல் மௌனமாக இருப்பது
அவர்களை ஆதரிப்பது போன்ற நிலையே…

– மீத்தேன் வாயு எடுப்பது பற்றி மத்திய அரசு உடனடியாக
தன் நிலையை அறிவிக்க வேண்டும்.

– தூக்கு தண்டனை பெற்ற 5 மீனவர்களை விடுவித்த
விஷயத்தில், தமிழகத்திற்கு முக்கிய பங்கு உண்டு.

ஆனால், பாஜக தனக்குத்தான் முழுப்பெருமையும்
வந்து சேர வேண்டும் என்பதற்காக – அந்த மீனவர்களை –
கொழும்பிலிருந்து – டெல்லி வழியாக ராமேஸ்வரம்
அழைத்து வரப்பட்டதை குறை கூறினார்.

மீனவர்களுக்காக தனி அமைச்சகம் அமைப்பதாக
தேர்தல் சமயத்தில் சொன்னதை
இன்னும் நிறைவேற்றாதது ஏன்…?
90 படகுகளை விடுவித்துக் கொண்டு வர இன்னமும்
நடவடிக்கை எடுக்காதது ஏன் ..?

‘அச்சே தின்’ யாருக்கு …? தொழிலதிபர்களுக்குத்தானா…?

இறுதியில் ஜவாஹிருல்லா —
மிகவும் உறுதியான குரலில் – தீவிரவாதிகள் இஸ்லாத்தின்
பெயரில் நிகழ்த்தும் பயங்கரவாத நடவடிக்கைகளை தாங்கள்
கண்டிப்பதாகவும் -இஸ்லாம் இத்தகைய கொள்கைகளை
ஏற்றுக் கொள்ளவில்லை என்றும் கூறினார்.

அடுத்து பேசிய ஹெச்.ராஜாவின் (பாஜக) பேச்சு –
இந்து தீவிரவாதத்தை நியாயப்படுத்தும் விதத்தில் இருந்தது.
இந்து-முஸ்லிம் பேதத்தை அதிகரிக்கும் வகையில்
கேரளாவிலிருந்து பல புள்ளி விவரங்களை அள்ளி வீசினார்…!

அவர் பேசும்போது சில சமயங்களில் – அவரைச் சேர்ந்த
ஒரு சிறிய கும்பல் ஆரவாரம் செய்து கை தட்டியது.
ஆட்சியில் பொறுப்பு கிடைக்காத சில பாஜக தலைவர்கள் –
தற்போது டாக்டர் சு.சுவாமியின் வழியில்
தீவிர இந்துத்வா வாதங்களை முன்வைத்துச்செல்கின்றனர் –
அவர்களில் ஹெச். ராஜாவும் ஒருவர்

அவருக்குப் பின் பேசிய டி.ராஜா (இந்திய கம்யூனிஸ்ட்)-

பாஜக வையும், இந்துத்வா தீவிரவாதிகளையும்
கடுமையாகச் சாடினார். நாட்டில் பாஜக கூட்டணிக்கு
வாக்களிக்காத மக்கள் 59 % இருக்கிறார்கள் என்பதையும்
நினைவில் கொண்டு மத்திய அரசு – இந்திய மக்கள்
அனைவருக்குமாக சேர்த்து தான் செயல்பட வேண்டுமென்று
வற்புறுத்தினார்.
டி.ராஜா பேசும்போது, ஹெச்.ராஜாவின்
ஆதரவாளர்கள் சிலர் குரலெழுப்பினர். உடனே
ஆசிரியர் ‘சோ’ மிகவும் கடுமையான குரலில் அவர்களை
அடக்கினார்.

பாஜகவுக்கு ஆதரவானவர்களே அதிகமாக நிறைந்திருந்த
அந்த அரங்கத்தில், டி.ராஜா தைரியமாகவும், உறுதியாகவும்
தன் தரப்பு வாதங்களை முன்வைத்தார்.

0 % inflation நிலைக்கு மோடி அரசு கொண்டு வந்து விட்டதாக
பெருமையடித்துக் கொள்கிறார்கள். ஆனால் inflation குறையக்
காரணம் மோடி அரசு அல்ல……I.S.I.S.அமைப்பு தான்.
அந்த அமைப்பினரால் கச்சா எண்ணை விலை குறைந்தது…
அதனால் inflation குறைந்தது…!!!

– கொடுக்கிற தெய்வம் கூரையை பிய்த்துக் கொண்டு கொடுக்கும்
என்று சொல்கிறார்கள். ஆனால் – கூரையே இல்லாமல்
வசிக்கும் ஏழை மக்களுக்கு எங்கிருந்து உதவி வரும் ….?

100 சதவீதம் அந்நிய முதலீடு பற்றி தீவிரமாக இருக்கிறார்கள்.
இது தொழிலாளர்களின் அழிவுக்கே வழிகோலும் ….
முதலில் உங்கள் கட்சி பொருளாதார நிபுணர் குருமூர்த்தியை
கேளுங்கள் அவர் ஒப்புக்கொள்கிறாரா என்று ….
உங்கள் கட்சியை சேர்ந்த அவரே ஏற்றுக்கொள்ளாத
விஷயத்தில் நீங்கள் ஏன் இவ்வளவு தீவிரம் காட்டுகிறீர்கள்…?

அனைவருக்கும் பிறகு ஆசிரியர் சோ அவர்கள் பேசியதன்
சுருக்கம் கீழே –

இந்து மதத்தில் – மதமாற்றத்திற்கே இடமில்லை.
தனிப்பட்ட விதத்தில் யாராவது மதம் மாறுவது
பிரச்சினையே இல்லை. யாரும் எந்த மார்க்கத்தில்
வேண்டுமானாலும் போகலாம். ஆனால் அதை கூட்டம்
கூட்டமாக மற்றவர் முனைந்து செய்வது தவறு.

மோடி வளமான எதிர்காலத்தை நோக்கி –
வளர்ச்சியை நோக்கி செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்.
ஆனால், இந்துத்வா தீவிரவாதிகள் – அதைக் குலைக்கும்
வகையில் செயல்படுகிறார்கள். ஆர்.எஸ்.எஸ். தலைமை
தான் இவர்களை கண்டித்து, அடக்கி வைக்க வேண்டும்.

FDI ஐ குருமூர்த்தி ஆதரிக்கவில்லை. உண்மை தான்.
அதில் பாஜக விற்கும் அவருக்கும் மனஸ்தாபம் உண்டு.
ஆனால் – என்னைப் பொருத்தவரை நான் FDI ஐ
ஆதரிக்கிறேன்.

ஜி.கே.வாசன் பற்றி – மிகவும் அமைதியானவர்,
நேர்மையானவர். அவர் தலைமையில்
தமாகா மெதுவாக வளர்ந்தாலும்
எதிர்காலத்தில் ஒரு நல்ல கட்சியாக உருவாகும்.

கலைஞர் கருணாநிதி பற்றி – இந்த வயதிலும் கலைஞரின்
தன்னம்பிக்கையும், தாக்குப்பிடிக்கும் திறமையும், தன்னை
வியக்க வைக்கிறது என்றார். நல்ல புத்திகூர்மை, அனுபவம்,
ஞாபகசக்தி, பேச்சாற்றல் இத்தனையும் அவரிடம் இருந்தும் –
அவரால் தமிழ்நாட்டிற்கு எந்த பலனும் இல்லை.

அவரது திறன் அனைத்தும் – அவரது குடும்ப உறுப்பினர்களை
வளப்படுத்தவும், சமாளிக்கவுமே உதவுகின்றன.

தற்போது 11வது முறை அவர் திமுகவின் தலைவராக
தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது அதிசயமல்ல – 12வது முறையும்
அவர் தான் தலைவர் என்றார்.

அதிமுக தலைவர் ஜெயலலிதா பற்றி – தமிழ்நாட்டின்
எதிர்கால அரசியல் ஜெ.யின் பெங்களூர் அப்பீல் எப்படி முடிவு
பெறப்போகிறது என்பதைப் பொறுத்து அமையும்.
வழக்கின் முடிவு அவருக்கு சாதகமாக அமைந்தால்,
அடுத்து நடக்கும் தேர்தலில் அதிமுக தான் வெற்றி பெறும்.
ஜெ. தான் மீண்டும் ஆட்சிக்கு வருவார்.

ஒரு வேளை தீர்ப்பு அவருக்கு எதிராக இருந்தால் – மீண்டும்
சுப்ரீம் கோர்ட்டுக்கு போக வேண்டும் – இன்னும் நீண்ட காலம்
ஆகும் என்பதால் – தமிழக அரசியல் நிலைமை மாறலாம்.

ஜெயலலிதா அவர்கள் இல்லாமல் நீண்ட நாட்களுக்கு
தமிழக அரசு நிர்வாகத்தை நடத்தக்கூடிய அளவுக்கு
அந்த கட்சியில் வேறு யாருமில்லை.

புதிய கூட்டணிகள் உருவாகக்கூடும். அப்போது
மக்கள் மன நிலை எப்படி இருக்கும் என்று சொல்ல முடியாது.
எனவே, இப்போதைக்கு தமிழ்நாட்டின் எதிர்கால அரசியல் பற்றி
தீர்மானமாக ஒன்றும் சொல்ல முடியாது என்றார்.

ஜெ. அவர்கள் மீதான வழக்கு பற்றி நேரடியாக தன்
கருத்து என்னவென்று கூறாமல் – சட்ட நிபுணர்கள்
அப்பீலில் ஜெ.வுக்கு சாதகமாகச் சில விஷயங்களைக்
கூறுகிறார்கள் என்று அவற்றைப்பற்றி சொன்னார் –

கீழ்க் கோர்ட்டில் –
வருமானவரி இலாகா ஏற்றுக் கொண்ட income tax returns-ஐ
கூட ஜட்ஜ் ஏற்றுக் கொள்ள மறுத்திருப்பது …..

லாலு பிரசாத் யாதவ் வழக்கில் பாட்னா உயர் நீதிமன்றம்
2010-இல் அளித்த தீர்ப்பை மேற்கோள்காட்டி ஜெயலலிதா
வழக்கில் வருமான வரித் துறை அளித்த விவரங்களை
தனி நீதிபதி ஏற்கவில்லை. ஆனால் பாட்னா உயர்
நீதிமன்றத்தின் தீர்ப்பை ஏற்கெனவே 2013-ல் உச்ச நீதிமன்றம்
ரத்து செய்து விட்டது. இது கருத்தில் கொள்ளப்படவில்லை.

சொத்துக்களின் மதிப்பு பற்றி அரசு pwd தரப்பில்
செய்யப்பட்ட குளறுபடிகள் ….
கல்யாண செலவுகள் …
விவசாய வருமானங்கள் ….இவற்றைப் பற்றியெல்லாம்
எந்தவித ஆதாரங்களின் அடிப்படையிலும் இல்லாமல் –
ஜட்ஜ் தானாகவே குத்துமதிப்பாக ஒரு தொகையை
நிர்ணயம் செய்தது – சட்டத்தில் இடம் பெறாத ஒரு வழி….etc.etc.

திரு.ஓ.பன்னீர்செல்வம் குறித்து கூறும்போது –
அவர் கயிற்றின் மீது நடப்பது போல் மிகவும்
ஜாக்கிரதையாக நடக்கிறார். அவரைப் பற்றி குறைகூறுவது
நியாயமில்லை. அவர் பாட்டுக்கு தன் பணியை
செய்து கொண்டு போகிறார்….

– தான் ஜெ.அவர்களுக்கு சாதகமாகவே பேசுவது
குறித்த குற்றச்சாட்டிற்கு –
உண்மை தான். கலைஞர் – ஜெ – இருவரையும் ஒப்பிடும்போது,
நான் ஜெயலலிதா அவர்கள் பற்றி ஒரு soft corner approach
உடன் தான் நடந்து கொள்கிறேன். ஆனால் வேறு வழி இல்லை.
கலைஞரை ஆதரிப்பது தமிழ்நாட்டுக்கு நல்லதல்ல…

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

13 Responses to துக்ளக் ஆண்டு விழா – ஒரு நேரடி ரிப்போர்ட்….

 1. jaman சொல்கிறார்:

  நன்று

 2. krisrisan சொல்கிறார்:

  How is ISIS responsible for oil price fall?? Doesn’t D. Raja have any brains? First of all, how can any sane person offer a line in support of a terrorist group called ISIS? Did any one present in the meeting object to his speech or did it go unnoticed? Gurumoorthy must have reacted on oil price at least?

  • இளந்திரையன் சொல்கிறார்:

   முட்டாளே, தோழர் ராசாவுக்கு மூளை இல்லையா என்று கேட்கும்
   உமக்குத்தான் மூளையும் இல்லை, அறிவும் இல்லை. உமக்கு சரித்திரமும் தெரியவில்லை, பொருளாதாரமும் தெரியவில்லை. முதலில் போய் தெரிந்தவர் யாரிடமாவது கேட்டுக்கொண்டு பின்னர் இங்கு எழுத வாரும்.
   இது அறிவுள்ளவருக்கான தளம். அய்.எஸ்.அய்.எஸ் எண்ணை
   வயல்களைக் கைப்பற்றி வந்த விலைக்கெல்லாம் கச்சா எண்ணையை
   விற்பதால் தான் உலகச் சந்தையில் சரிந்தது எண்ணை வர்த்தகம்.

   காவிரிமைந்தன் அய்யா, ஒரு தாழ்மையான வேண்டுகோள். இது
   போன்ற மரியாதை தெரியாத மண்ணை எல்லாம் இங்கே இனி அனுமதிக்காதீர்கள். தயவுசெய்து இந்த பின்னூட்டத்தை அனுமதியுங்கள்.

   • today.and.me சொல்கிறார்:

    அன்பு நண்ப இளந்திரையன்,

    உண்மையில் நண்பர் krisrisan ஏன் கச்சா எண்ணெய் விலை குறைந்தது என்றுதெரியாமலோ அல்லது இந்தியாவில் உள்ள வேறு யாராவது தனிநபர் முயற்சியால் குறைந்தது என்றோ நம்பியிருந்திருக்கலாம். ‘விமரிசனம்’ அறிவுள்ளவருக்கான தளம்தானே. உண்மைநிலையை நீங்கள் அறிவுசார் தகவலாக மட்டும் குறிப்பிட்டிருந்தால் உங்கள் பின்னூட்டம் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும், தகவலும் தனிப்பட்ட விருப்பு வெறுப்பின்றி படிப்பவரைச் சென்று சேரும் என்பது என் கருத்து.

    எழுத்தில் கொஞ்சம் வேகத்தைக் குறைத்து விவேகத்தைக் கூட்டிக்கொள்ளுங்களேன். கனியிருப்ப ஏன் காய் கவரவேண்டும்?

    எனது இந்தப் பின்னூட்டம் உங்களுக்கு வருத்தத்தைத் தராது என்றே எண்ணுகிறேன். இன்றேல் மன்னிக்கவும்.

    • இளந்திரையன் சொல்கிறார்:

     தோழர் todayandme,

     உங்கள் அறிவுரை முதலில் krisrisan க்கானதாக இருக்க வேண்டும்.
     தோழர் டி.ராசாவுக்கு மூளை இல்லையா என்று கேட்டவர்
     அவர் தானே ? டெர்ரரிஸ்டுகளுக்கு ராசா எப்படி ஆதரவு
     கொடுத்தார் என்று கேட்டது அவர் தானே ? மதி கெட்ட அந்த
     மனிதருக்கு அறிவுரை ஏதும் தராமல் நீங்கள் எனக்கு புத்தி சொல்ல
     புறப்பட்டதேன் ? உங்கள் அறிவுரை நிச்சயம் எனக்கு
     வருத்தத்தைத்தான் தருகிறது. அறிவுரை இரண்டு பேருக்கும் ஆனதாக இருந்தால் ஏற்றுக்கொள்ளலாம். முதலில் தவறான வார்த்தைகளை
     பயன்படுத்திய அந்த மனிதரை விட்டு விட்டு எனக்கு மட்டும்
     நீங்கள் புத்தி சொல்ல வருவது எப்படி நியாயமாகும் ?

 3. Ramasubramanian.M. சொல்கிறார்:

  Congrats Mr.K.M.

  I was there from the beginning.
  You have fully covered the event in un-biassed way.
  News Agencies do not cover fully.
  Though you have reservations, your report is complete.
  A very good reporting. thank you.

 4. gopalasamy சொல்கிறார்:

  Apart from Thuglak’s function, the comments changed it’s course. I also want to know the reason forthe drop in oil prices. If ISIS is the reason, I request Mr. இளந்திரையன் to give any links so that we can also improve our knowledge.

 5. vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

  நண்பர்கள் krisrisan மற்றும் இளந்திரையன் –

  இதைச் சொல்வதற்கு வருந்துகிறேன். இரண்டு பேருமே
  தேவையில்லாத சொற்களைப் பயன்படுத்தி இருக்கிறீர்கள்.
  இதைத் துவக்கி வைத்தது சந்தேகமே இல்லாமல்
  நண்பர் krisrisan தான். அவர்கள் கூற வந்த கருத்தை
  கூறுவதற்கு வேறு பொருத்தமான வார்த்தைகள்
  ஏராளமாக இருக்கின்றன. அவற்றை பயன்படுத்திக்
  கொண்டிருக்கலாம்.

  CPI leader ராஜா அவர்கள் சொல்லிய கருத்துக்களில்
  கனம் உண்டு. பொதுவாகவே, பொருளாதாரம் என்பது
  கம்யூனிஸ்டு தலைவர்களின் அடிப்படை அறிவு. எனவே,
  அவர்களது பொருளாதார அறிவை -விஷயம் தெரியாமலே –
  krisrisan கேள்வி கேட்டது தவறு தான்.

  நண்பர் todayandme சரியாகவே சொன்னது போல் –
  கனி இருக்க காயைப் பறிப்பானேன்….?
  கருத்துக்களை அழகாகச் சொல்ல
  தமிழில் வார்த்தைகளா இல்லை …?

  (சமயத்தில் நான் கூட சூடான வார்த்தைகளைப்
  பயன்படுத்துவது உண்டு தான். ஆனால் ஓரளவு
  எச்சரிக்கை உணர்வுடனேயே எழுதுகிறேன்…)

  போகட்டும் …. இதை … இத்தோடு விட்டு விடுவோம்.

  நண்பர் கோபாலசாமி அவர்களுக்கு –

  கச்சா எண்ணை விலை குறைய பல காரணங்கள் உண்டு.
  அதில் ISIS அமைப்பு – எண்ணை வயல்களைக் கைப்பற்றி
  கிடைக்கும் எண்ணையை, குறைந்த விலைக்கு விற்று,
  அந்தப் பணத்தில் ஆயுதங்களை வாங்கிக் குவிப்பதும்
  ஒரு காரணம்.

  அமெரிக்கா ஷேல் உற்பத்தியை மிக அதிகமான அளவில்
  துவக்கி வெளிச்சந்தையில் விற்க துவங்கியதும் ஒரு காரணம்.

  இந்த மாதிரி பல காரணங்கள்.

  -வாழ்த்துக்களுடன்,
  காவிரிமைந்தன்

 6. இளந்திரையன் சொல்கிறார்:

  காவிரிமைந்தன் சார்,

  உங்களை நான் மிகவும் மதிப்பவன். ஆத்திரத்தில்
  கொஞ்சம் அவசரப்பட்டு எழுதி விட்டேன்.தயவுசெய்து என்னை
  ஒதுக்கி விடாதீர்கள். மன்னிக்கவும்.
  உங்கள் அறிவுரையை ஏற்கிறேன். நன்றி.

 7. gopalasamy சொல்கிறார்:

  sorry. again i am requesting a link to know more details.

 8. gopalasamy சொல்கிறார்:

  Thanks to “Today.and.Me”” . The seven questions raised in “the burning platform” were in my mind. Because i saw the difficulties in transporting oil thro a tanker ( just 7000 m3) from production company to a thermal plant, which is 30 kms away. One solenoid valve from Italy not came. so one compressor was not available for service. This is the condition of middle east countries.
  Again thanks.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.