பங்களூருவில் முக்கியமான வழக்கு – மண்டையை குழப்பும் சட்டக் கேள்விகள் …..!!!

law - logo

40-50 ஆண்டுகளுக்கு முன்னர் அதிகம் போட்டி இல்லாத காலத்தில்.
தினத்தந்தி நாளிதழ் தனக்கென ஒரு தனிபாணியை உருவாக்கியது
.
“கோர்ட்டில் குபீர் சிரிப்பு” பகுதியும், பல மாமாங்கங்கள் தொடர்ந்த
சித்திரத்தொடர் “சிந்துபாத்” போன்றவையும் அதன் ஸ்பெஷாலிடி.
இன்று நாம் கையாளும் பல விசேஷ தமிழ்ச் சொற்கள் கூட
தினத்தந்தியால் உருவாக்கப் பெற்றவை தான்.

நான் இதைச் சொல்ல முற்பட்டதன் காரணம் வேறு.
தினத்தந்தி தனியாட்சி நடத்தி வந்த காலங்களில்
முக்கியமான, பிரபலமான வழக்குகள் நடக்கும்போது,
வார்த்தைக்கு வார்த்தை – சாட்சிகள், வக்கீல்கள், நீதிபதிகள் –
கோர்ட்டில் சொல்வதை அப்படியே போடுவார்கள். சில
சமயங்களில் ஒரு முழுபக்கம், ஒன்றரை பக்கம் வரை
கூடப் போகும். வழக்கின் சுவாரஸ்யத்தை அப்படியே
கோர்ட்டுக்குள் அமர்ந்து நேரில் காண்பது போல் இருக்கும் –
அது வழக்கின் போக்கையும் ஓரளவு புரிந்து கொள்ள உதவும்.

இப்போதெல்லாம் நாளிதழ்களின் போக்கே மாறி விட்டது.
கவர்ச்சிகரமான, பரபரப்பான, அதிர்ச்சியான தலைப்புகளில்
மட்டுமே கவனம் செலுத்துகிறார்கள். உள்ளே செய்தியை
ஒன்றிரண்டு பத்திகளில் சுருக்கமாக முடித்து விடுகிறார்கள்.
சட்ட நுணுக்கங்களெல்லாம் மக்களுக்கெதற்கு என்று
நினைக்கிறார்கள் போலும்…!

தமிழகத்திற்கு மிகவும் முக்கியமான வழக்கு ஒன்று
பக்கத்து மாநிலம் – பங்களூரில் நடந்து வருகிறது. தினமும்
4-5 மணி நேரங்கள் விவாதங்கள் நடக்கின்றன.
ஆனால், எந்த செய்தித்தாள்களிலும் வழக்கு
விவரங்கள் முழுவதுமாக வெளிவருவதில்லை.

ஒரு சுவாரஸ்யமான, சட்ட நுணுக்கங்கள் நிறைந்த கால
கட்டத்தில் வழக்கு இப்போது நிற்கிறது –
அங்கே-இங்கே
தேடியெடுத்த – உயர் நீதிமன்றத்தில் நடைபெற்றதாக
வெளிவந்திருக்கும் உரையாடல்களிலிருந்து, நமக்குத்
தேவையான பகுதிகளை மட்டும், சுருக்கமாக கீழே தருகிறேன்.

————————————————-

பிரச்சினை – வழக்கின் அப்பீல் நிலையில்-
பவானி சிங் அரசு வழக்குரைஞராகத் தொடரக் கூடாது….

பிரச்சினையைக் கிளப்புவது திமுக செயலாளர் திரு.அன்பழகன்
சார்பில் அவரது வக்கீல்.

இரண்டு பேர் சேர்ந்தாலே குழப்புவார்கள்….
இந்த வழக்கில் ஏகப்பட்ட வழக்குரைஞர்கள்…கேட்க வேண்டுமா…!!!
குழப்பங்களை நீங்களே பாருங்களேன் ……

வக்கீல்கள் யார் …. யார் ? யார் யாருக்காக …?

திருஅன்பழகன் தரப்பில் – வக்கீல் நாகேஷ்.
தமிழக ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு இயக்குநரகம்
சார்பில் – வக்கீல் ராவ்.
பவானி சிங் சார்பில் – வக்கீல் செபஸ்டியன்.
கர்நாடக அரசு சார்பில் -அரசு தலைமை
வழக்கறிஞர் – ரவிவர்மகுமார்.

திரு.அன்பழகனின் ரிட் மனு தலைமை நீதிபதி வகேலா மற்றும்
நீதிபதி அஷோக் பி. ஹிஞ்சிகேரி ஆகியோர் முன்னிலையில்
விசாரணக்கு வந்திருக்கிறது.

செபஸ்டியன் – இந்த வழக்கில் அரசு வழக்கறிஞராக பவானி சிங்
ஆஜராவதற்கு உச்சநீதி மன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
கீழ் நீதி மன்றத்தில் அவர் தான் அரசு வழக்கறிஞராக இருந்து
வழக்கை திறமையாக நடத்தி குற்றவாளிகளுக்கு தண்டனை
வாங்கிக் கொடுத்திருக்கிறார்.

வகேலா (த.நீ.) – வக்கீல் ராவ் -ஐ நோக்கி – இந்த வழக்கின்
அப்பீல் விசாரணையில் எந்த ஆதாரத்தின் அடிப்படையில் அரசு
வழக்கறிஞரை நீங்கள் நியமித்து வழக்கை நடத்தி வருகிறீர்கள்…?

ராவ் – சி.ஆர்.பி.சி 24(8)-ன் அடிப்படையில் பவானி சிங்கை
நியமிக்கும் அதிகாரம் உள்ளது. இந்த வழக்கின் புகார்தாரர்கள்
நாங்கள் தான். எங்கள் சார்பில் வாதிட யார் ஆஜராக வேண்டும்
என்பதை தீர்மானிக்கும் உரிமை எங்களுக்கு தான் உள்ளது….

வகேலா – சி.ஆர்.பி.சி 24(1)-ன்படி கிரிமினல் வழக்கு ஒரு
மாநிலத்திலிருந்து இன்னொரு மாநிலத்திற்கு மாற்றம்
செய்யும்போது, எந்த மாநிலத்திற்கு மாற்றம் செய்யப்படுகிறதோ
அந்த மாநில அரசு தான் அரசு வழக்கறிஞரை நியமிக்க வேண்டும்
என்று கூறப்பட்டு இருக்கிறது.

நாகேஷ் – இந்த வழக்கில் உச்சநீதிமன்றம் தெளிவாக சொல்லி
இருக்கிறது. இந்த வழக்கின் அரசு வழக்கறிஞரை – கர்நாடக அரசு,
கர்நாடக உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியிடம் ஆலோசனை
செய்து தான் நியமிக்க வேண்டும். தமிழக அரசு நியமிக்க
உரிமை இல்லை….

ராவ் – ஒரு வேளை இந்த வழக்கில் நீதிமன்றம் குற்றவாளிகளை
விடுதலை செய்திருந்தால், அதை எதிர்த்து நாங்கள் தான்
அப்பீலுக்கு சென்றிருப்போமே தவிர, கர்நாடக அரசு அப்பீலுக்குப்
போகாது. அதனால் எங்கள் தரப்பு வழக்கறிஞரை நியமிக்கும்
உரிமை எங்களுக்கு உள்ளது.

வகேலா – மணிப்பூரில் ஒரு கிரிமினல் வழக்கு பதிவு செய்யப்பட்டு
கர்நாடக மாநிலத்துக்கு மாற்றப்பட்டால், அந்த வழக்கின் அரசு
வழக்கறிஞராக மணிப்பூர் வழக்கறிஞரை நியமிக்க முடியுமா ?

நாகேஷ் – 2004-ல் இந்த வழக்கு பெங்களூருக்கு மாற்றப்பட்டபோதும்,
தற்போது அப்பீல் நடைபெற்றுக் கொண்டிருக்கும்போதும்,
தமிழ்நாட்டில் அதிமுக ஆட்சி தான் நடந்து கொண்டிருக்கிறது.
அதனால் இந்த வழக்கில் அரசியல் தலையீடு இருக்கிறது…

வகேலா – இங்கு அரசியலை தொடர்பு படுத்த வேண்டாம்.
(கர்நாடகா அரசு தலைமை வழக்கறிஞர் ரவிவர்ம குமாரை பார்த்து )
இதற்கு என்ன சொல்கிறீர்கள்…?

ரவிவர்ம குமார் – நீதிமன்ற உத்தரவை செயல்படுத்த
தயாராக உள்ளோம்.

ராவ் – இந்த வழக்கு 19 நாட்களாக நடைபெற்றுக்கொண்டு
இருக்கிறது. இதில் ஏ-1-ன் வாதம் முடிந்து விட்டது. ஏ-2 வின்
வாதம் நிறைவு பெறும் நிலையில் இருக்கிறது. உச்சநீதிமன்றமும்
3 மாதத்தில் முடிக்க உத்திரவிட்டுள்ளது. இந்த நிலையில் இப்படி
ஒரு பிரச்சினை எழுப்புவது சரியில்லை.

வகேலா – அதற்காக சட்ட விதிமுறைகளை மீறிச் செயல்பட
அனுமதிக்கலாமா ?

செபஸ்டியன் – இந்த வழக்கு நடுநிலையாகவும், நியாயமாகவும்
நடைபெற வேண்டுமென்ற நோக்கத்தில் தமிழகத்திலிருந்து
2004-ல் கர்நாடகத்துக்கு மாற்றப்பட்டது. அப்போது ஆச்சாரியா
நியமிக்கப்பட்டார். அவர் இந்த வழக்கில் இருந்து ராஜினாமா
செய்ததை அடுத்து அரசு வழக்கறிஞராக பவானி சிங்கை
கர்நாடக அரசு நியமித்தது. கீழ்நீதிமன்றத்தில் பவானி சிங்
அரசு வழக்கறிஞராக இருந்து குற்றவாளிகளுக்கு தண்டனை
வாங்கிக் கொடுத்தார். அதையடுத்து தற்போது உயர்நீதி
மன்றத்தில் மேல் முறையீட்டு விசாரணையிலும் ஆஜராகி
இருக்கிறார்.

வகேலா – கிரிமினல் வழக்கில் மேல்முறையீட்டு விசாரணை
எந்த மாநிலத்தில் நடைபெறுகிறதோ – அந்த மாநில அரசுதான்
அரசு வழக்கறிஞரை நியமிக்க வேண்டும்.

செபஸ்டியன் – கீழ்நீதிமன்றத்தில், பவானி சிங் இருந்தபோது
3 முறை நீக்க வேண்டும் என்று இவர்கள் முயற்சி செய்தார்கள்.

வகேலா – சி.ஆர்.பி.சி.24(1)-ன்படி மேல்முறையீட்டு மனுவில்
நீங்கள் ஆஜராகி இருப்பது சட்டத்துக்கு புறம்பானது. 24(1)-ஐ
படித்துப் பாருங்கள்.

செபஸ்டியன் –இந்த வழக்கில் மேல்முறையீட்டு விசாரணையில்
பவானிசிங் ஆஜராகி வருவதற்கு கர்நாடக அரசும் ஆட்சேபணை
தெரிவிக்கவில்லை. கீழ்நீதிமன்றத்தில் கொடுத்த அரசாணை
இதற்கும் பொருந்தும். தமிழக ஊழல் மற்றும் கண்காணிப்பு துறை
மேல் முறையீட்டில் பவானிசிங் ஆஜராக அனுமதித்திருக்கிறது.

வகேலா – இந்த வழக்கில் அரசு வழக்கறிஞரை நியமிக்க
தமிழக அரசுக்கு அதிகாரம் இல்லை.

நாகேஷ் – இந்த வழக்கின் அரசு வழக்கறிஞரை நியமிக்க
தமிழக அரசுக்கு அதிகாரம் இல்லை. இந்த வழக்கு கர்நாடகாவில்
நடைபெற்று வருவதால் கர்நாடக அரசுக்கும், கர்நாடகா
உயர்நீதிமன்றத்திற்கும் தான் அதிகாரம் உள்ளது. அதனால்
சட்டத்துக்குப் புறம்பாக ஆஜராகியுள்ள பவானி சிங்கை
நீக்க வேண்டும்.

செபஸ்டியன் – பவானி சிங்கை நீக்கக்கோரி அவர்கள்
உச்சநீதிமன்றத்திற்கு சென்றபோது நீதிபதிகள் கண்டித்துள்ளதை
கவனத்தில் கொள்ள வேண்டும்.

வகேலா – உச்சநீதிமன்றம் பவானி சிங்கை நியமனம் செய்து
பிறப்பித்த உத்தரவு கீழ் நீதிமன்றத்துக்கு மட்டும் தான். அந்த
உத்தரவு நகலை படித்துப் பாருங்கள்.

ராவ் – சி.ஆர்.பி.சி.24(8)-ன்படி அரசு வழக்கறிஞர் பவானி சிங்
கீழ்நீதிமன்றத்தில் ஆஜராகி வாதம் செய்தார். அதைத் தொடர்ந்து
குற்றவாளிகள் தண்டிக்கப்பட்டு கடந்த செப்டம்பர் மாதம்
மேல்முறையீட்டு மனுவுடன் ஜாமீனில் விடுதலை செய்யக்கோரி
மனு தாக்கல் செய்திருந்தனர். அப்போது தமிழக ஊழல் தடுப்பு
மற்றும் கண்காணிப்பு இயக்குநரகம் சார்பில் ஆஜராகி வாதிட
29/09/2014ல் அன்று அனுமதி கடிதம் கொடுக்கப்பட்டது. அதை
ஆதாரமாக வைத்து வாதிட்டு வருகிறார். இந்த வழக்கில்
நாங்கள் புகார்தாரர் என்ற அடிப்படையில் அரசு வழக்கறிஞரை
நியமிக்கும் அதிகாரம் எங்களுக்கு உள்ளது.

இந்த வழக்கில் தமிழக அரசின் அரசாணை எண் 865-ன்படி,
அரசு வழக்கறிஞராக கடைசி வரை பவானி சிங் ஆஜராக
முடியும்.

நாங்கள் சட்டவிரோதமாக, இந்த வழக்குக்கு சம்பந்தம் இல்லாத
ஒருவரை நியமிக்கவில்லை. கீழ் நீதிமன்றத்தில் கையாண்ட
வழக்கறிஞரைத்தான் நியமித்து இருக்கிறோம்.

வகேலா – கர்நாடகாவில் நடைபெறும்போது அரசு வழக்கறிஞரை
தமிழக அரசு நியமனம் செய்வது தவறு இல்லையா..?
அரசு வழக்கறிஞரை நியமனம் செய்ய என்ன விதிமுறைகள்
பின்பற்றப்படுகின்றன, உச்ச நீதிமன்றத்தில் முன் உதாரணமான
வழக்குகள் இருக்கின்றனவா ?

ராவ் – இந்த வழக்கு மேல்முறையீட்டு விசாரணையில்
ஏ-1 வாதம் நிறைவுபெற்றது. அடுத்து ஏ-2 வழக்கறிஞர் வாதிட்டு
வருகிறார். இன்று வரை 20 நாட்கள் விசாரணை முடிந்து விட்டது.
இந்த சூழ்நிலையில் பவானி சிங்கை நீக்கினால் வழக்கு
பாதிக்கப்படும்.

வகேலா –(கர்நாடகா அரசின் தலைமை வழக்கறிஞரைப் பார்த்து)
நீங்கள் என்ன சொல்கிறீர்கள்..?

ரவிகுமார் – முழுக்க முழுக்க உச்சநீதி மன்ற
வழிகாட்டுதலின்படி நடைபெறுகிறது. இதில் கர்நாடக அரசுக்கு
எந்த பங்களிப்பும் இல்லை. ஆனால், சி.ஆர்.பி.சி.28(1)-ன்படி,
வழக்கு எந்த மாநிலத்தில் நடைபெறுகிறதோ, அது சம்பந்தப்பட்ட
மாநில அரசு தான் அரசு வழக்கறிஞரை நியமிக்கும் அதிகார்ம்
உள்ளது என்று சட்டத்தில் குறிப்பிட்டு இருக்கிறது.
அதன்படி பார்க்கும்போது, தமிழக அரசின் அனுமதியுடன்
பவானி சிங் ஆஜராகி வருவது சட்டத்துக்குப் புறம்பானது.

வகேலா – கர்நாடக அரசு இந்த வழக்கில் அரசு வழக்கறிஞரை
நியமிக்காதபோது, அரசு வழக்கறிஞர் ஆஜராகி இருப்பது
சட்டத்துக்கு புறம்பானது. அவரை மாற்றி விட்டு, வேறு
யாரையாவது நியமனம் செய்யும் யோசனை அரசிடம்
உள்ளதா ?

ரவிவர்மகுமார் – பவானி சிங் இல்லாத பட்சத்தில், அரசு மூத்த
வழக்கறிஞர் நாராயண ரெட்டியை பயன்படுத்திக் கொள்ளலாம்.
அதை அரசு தன்னிச்சையாக செய்யத் தயாராக இல்லை….!!!

வகேலா – பவானி சிங்கை நீக்கினால் ஏற்படும் சாதக,
பாதகங்கள் குறித்து 3 தரப்பினரும் தங்களது கருத்துகளை
உணவு இடைவேளைக்குப் பிறகு தாருங்கள்.

– உணவு இடைவேளைக்குப் பின் கோர்ட் கூடும்போது –

செப்ஸ்டியன் – பவானி சிங் நியமனம் சட்டப்படி சரியில்லை
என்று அன்பழகன் தரப்பு புகார் கொடுத்ததை அடுத்து
23/09/2013 -ல் பவானி சிங்கை நீக்குவதற்கு நீங்கள் தான்
உத்திரவு பிறப்பித்தீர்கள் …!

அதை எதிர்த்து உச்சநீதி மன்றத்தில் மேல்முறையீடு செய்து,
மீண்டும் அவர் இந்த வழக்கில் அரசு வழக்கறிஞராக ஆனார்.
அதனால், மீண்டும் இதே வழக்கை நீங்கள் விசாரித்தால்
ஒருதலைப்பட்சமாக இருக்கும் என்பதால், வேறு பெஞ்சுக்கு
மாற்ற வேண்டும்.

வகேலா – என் மீது சந்தேகம் எழுப்பி மெமோ கொடுத்துள்ளதால்,
நான் தொடர்ந்து விசாரிப்பது சரியில்லை. அதனால் வேறு
அமர்வுக்கு பரிந்துரை செய்கிறேன்…..!!!

————————————————————-

இவ்வளவு வித்தியாசமான சூழ்நிலையில் ஒரு வழக்கு
நடைபெறும்போது, அது பொது மக்களுக்கு போய்ச்சேர
வேண்டாமா …? என்ன நடக்கிறது என்பதை மக்கள்
அறிய வேண்டாமா …?

நண்பர்கள் சட்ட விதியை சுலபமாக புரிந்து கொள்வதற்காக –
மேலே வாதங்களில் குறிப்பிட்டுள்ள Criminal Procedure
Code- லிருந்து பிரிவு 24(1) மற்றும் 24(8) ஆகியவற்றை கீழே
கொடுத்திருக்கிறேன்.

Section 24(1) in The Code Of Criminal Procedure, 1973

(1) For every High Court, the Central Government or the State

Government shall, after consultation with the High Court, appoint a

Public Prosecutor and may also appoint one or more Additional Public

Prosecutors, for conducting in such Court, any prosecution, appeal or

other proceeding on behalf of the Central Government or State

Government, as the case may be.

—————–

Section 24(8) in The Code Of Criminal Procedure, 1973

(8) The Central Government or the State Government may appoint, for

the purposes of any case or class of cases, a person who has been in

practice as an advocate for not less than ten years as a Special Public

Prosecutor.

——————————————–

பின் குறிப்பு –

இது ஒரு சவாலான வழக்கு.

சட்டமும், விதிகளும் அனைவருக்கும் ஒன்றே தான் …!
ஆனால், எழுப்பப்பட்டிருக்கும் கேள்விகளும், சொல்லப்படும்
வியாக்கியானங்களும் தான் வித்தியாசமானவை.

இதில் ஆஜராகும் ஒவ்வொரு வக்கீலுக்கும் –
அவரவர்க்கென தனிப்பட்ட அவசியமும், ஆர்வமும்
இந்த வாத பிரதிவாதங்களில் பிரதிபலிப்பதைப் பார்க்கிறோம்.

இந்த வழக்கில், இந்த நிலையில் –
எந்த வித சொந்த விருப்பு வெறுப்பையும்
வெளிப்படுத்தாமல், சட்ட நுணுக்கங்களின் அடிப்படையில்
மட்டும் பார்வையைச் செலுத்தி ஒருவர் விவாதித்தால் –
அது எப்படி இருக்கும் …? நாம் அந்த நோக்கிலும்
பார்க்கக் கற்றுக் கொள்ள வேண்டுமென்று நினைக்கிறேன்.

தீர்ப்பு இன்னமும் கொடுக்கப்படாததால் –
இது தவறு ஆகாது என்றே நினைக்கிறேன்.

எனக்கிருக்கும் “தக்கனூண்டு” சட்ட அறிவையும்,
அனுபவத்தையும் கொண்டு எழுத முயற்சிக்கிறேன்.
அடுத்த பகுதியில் வருகிறேனே….!

(தொடரும் – பகுதி-2-ல் )

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

4 Responses to பங்களூருவில் முக்கியமான வழக்கு – மண்டையை குழப்பும் சட்டக் கேள்விகள் …..!!!

 1. Ramachandran. R. சொல்கிறார்:

  கே.எம்.சார்,

  பகுதி-2 -க்காக காத்திருக்கிறேன். நன்றி.

 2. today.and.me சொல்கிறார்:

  கோர்ட் நடவடிக்கைகளை நேரில் பார்த்ததுபோல இருக்கிறது – பல வருடங்களுக்குப் பிறகு. தொடர்ந்து தமிழில் தாருங்கள். அல்லது தரவைத் தாருங்கள். பகுதி 2ஐ எதிர்பார்த்திருக்கிறேன்.

  🙂 🙂
  நாலு வக்கீல் சேர்ந்து குழப்பினாலும் குழம்பாத ஜட்ஜ் ஐயாவா? அவருக்கே வச்சோமில்ல….. நாங்க சட்டம் படிச்சது இன்னாத்துக்கு.

 3. desinghjothi சொல்கிறார்:

  நீதிமன்றத்திற்குள்ளிருந்து வாதம்தனைக் கேட்டதுபோலிருந்தது! நன்றி!

 4. VAANARAM. சொல்கிறார்:

  ஏப்பா தம்பி , பொண்ணு கைய புடிச்சு இழுத்தியா ?

  என்ன கைய புடிச்சி இழுத்தியா ?

  வடிவேலு நேசம் புதுசு காமெடி தான் ஞாபகத்துக்கு வருது .

  திரும்ப திரும்ப பேசுற நீ … திரும்ப திரும்ப பேசுற நீ .

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.