( பகுதி-2 ) பங்களூரு வழக்கில் பவானி சிங் தொடர்வாரா ?

.

சில நாட்களுக்கு முன்னர், முக்கியமான வழக்குகளில் கூட,
நீதிமன்ற நடவடிக்கைகள் விவரமாக வெளியிடப்படுவதில்லையே
என்கிற குறையை சில செய்தித்தாள்களுக்கு நான் தனிப்பட
எழுதித் தெரியப்படுத்தி இருந்தேன்.
அது யார் கவனத்திற்கு
சென்றதோ இல்லையோ தெரியவில்லை – ஆனால், கடைசியாக
நடந்த நிகழ்வுகள் தினமலர் செய்தித்தாளில் ஓரளவு விவரமாக
வந்திருக்கின்றன. அதிலிருந்து தொகுக்கப்பட்ட சில விவரங்களை
கீழே தந்திருக்கிறேன்.

முந்திய இடுகையில் கொடுத்துள்ள விவரங்களின்படி –
தலைமை நீதிபதி வழக்கை விசாரிக்கக் கூடாது என்று
கேட்டுக்கொள்ளப்பட்டதால் – வழக்கு நீதிபதிகள் குமார். வீரப்பா
ஆகியோர் அடங்கிய பெஞ்சுக்கு மாற்றப்பட்டிருக்கிறது.
அங்கு நடைபெற்ற விவாதங்கள் பற்றிய விவரங்கள் கீழே –

————————

மேல் முறையீட்டு வழக்கில்,
அரசு வக்கீலாக பவானி சிங் ஆஜராக கூடாதென்று,
தி.மு.க., பொது செயலாளர் அன்பழகன் தாக்கல் செய்த மனு,

கர்நாடகா உயர்நிதிமன்ற நீதிபதிகள் குமார். வீரப்பா
ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன், விசாரணைக்கு வந்தது.

கர்நாடகா அரசு தரப்பில் -அட்வகேட் ஜெனரல் ரவிவர்மகுமார்,
பவானிசிங் தரப்பில் – வக்கீல் நாகானந்த்,
அன்பழகன் தரப்பில் – வக்கீல் நாகேஷ்,
ஜெயலலிதா தரப்பில் – பரணிகுமார், திவாகர்,
நாகராஜன் ஆகியோர் ஆஜராகியிருந்தனர்.

அன்பழகன் வக்கீல் நாகேஷ்: முன்னாள் மத்திய அமைச்சர்
அழகிரி தொடர்பான வழக்கு, தமிழகத்தில் நடந்தால்
நீதி கிடைக்காது என்று, சிலர் தொடர்ந்த வழக்கை ஏற்று,
ஆந்திரா நெல்லூருக்கு உச்சநீதிமன்றம் மாற்றியது.
இதில், ஆந்திரா தான், அரசு வக்கீலை நியமித்தது.
அதே போன்று, இவ்வழக்கிலும் கர்நாடகா அரசு தான்,
அரசு வக்கீலை நியமிக்க வேண்டும்.

நீதிபதி: அது வேறு, இது வேறு, இவ்வழக்கை, தமிழக
ஊழல் தடுப்பு போலீஸார், விசாரணை செய்து, நடத்தி
வருகின்றனர். அரசு வக்கீலை, அவர்கள், நியமிப்பது தான்
சரியானது.

அன்பழகன் வக்கீல்: கர்நாடகா அரசு தான், அரசு வக்கீலை
நியமிக்க வேண்டுமென்று, உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதை, கர்நாடகா அரசு பின்பற்ற வேண்டும்.

நீதிபதி: இதை சொல்ல, நீங்கள் யார்?

அன்பழகன் வக்கீல்: நீதி கிடைக்க வேண்டுமென்று,
இவ்வழக்கை கர்நாடகாவுக்கு, நாங்கள் தான் மாற்றினோம்.

நீதிபதி: வழக்கை மாற்றியதுடன், உங்கள் பணி முடிவடைந்தது.

கர்நாடகா அரசு தான், அரசு வக்கீலை நியமிக்க வேண்டுமென்று
கூறுவதற்கு, உங்களுக்கு உரிமையில்லை.
வேறு அனுபவம் வாய்ந்த, மூத்த வக்கீல் யாராவது, என்று
குறிப்பிட்டுள்ளீர்கள். இதற்கு என்ன அர்த்தம்…?

அன்பழகன் வக்கீல்: மூத்த வக்கீல் யாரையாவது நியமனம்
செய்ய வேண்டுமென்பதுதான், எங்கள் கோரிக்கை.
அரசு வக்கீலை நியமிக்க, தமிழக அரசுக்கு, அதிகாரமில்லை.
கர்நாடகா அரசு தான், அரசு வக்கீலை நியமனம் செய்ய
வேண்டும். இது தான் நடை முறை.

பவானிசிங் வக்கீல்: இவ்வழக்கை விசாரணை செய்து,
நீதிமன்றத்தில் நடத்தி வருவது, தமிழக ஊழல் தடுப்பு
போலீஸார். அவர்கள் நியமனம் செய்த,
அரசு வக்கீல் பவானி சிங், முந்தைய சிறப்பு நீதிமன்றத்தில்,
ஆஜரானதை போன்று, இங்கும் ஆஜராகி வருகிறார்.

கடந்த, 20 நாட்களுக்கும் மேலாக, இங்கு விசாரணை
நடந்து வருகிறது. இவ்வழக்கை, 3 மாதத்துக்குள்,
அதாவது, மார்ச், 18 ம் தேதிக்குள் முடித்து விட
வேண்டுமென்று, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த நிலையில், அரசு வக்கீலை மாற்றினால், குறிப்பிட்ட
காலக்கெடுவுக்குள், வழக்கை முடிக்க முடியாது.

வழக்கை, தாமதப்படுத்த வேண்டுமென்ற எண்ணத்துடன்,
மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
பவானி சிங், தன் கடமையை
சரியாக செய்து வருகிறார். அரசு வக்கீலை, கர்நாடகா அரசு
நியமிக்க வேண்டுமென்பது ஏற்கதக்கதல்ல.

வழக்கை நடத்தி வரும், சென்னை ஊழல் தடுப்பு போலீஸார்
தான், நியமிக்க வேண்டும். கடந்த சிறப்பு
நீதிமன்றத்தில், அரசு வக்கீலாக பணியாற்றிய, பவானி சிங்கை,
உச்ச நீதிமன்றமே தொடர்ந்து பணியாற்ற அனுமதியளித்துள்ளது.

அட்வகேட் ஜெனரல் ரவி வர்மா குமார்: இவ்வழக்கில்,
அரசு வக்கீலை, கர்நாடகா அரசு தான் நியமிக்க வேண்டுமென்று,
எந்த உத்தரவையும், உச்ச நீதிமன்றம் அளிக்கவில்லை.
எனவே கர்நாடகா அரசு, அரசு வக்கீலை நியமனம் செய்யாது.

இதில் நீதிமன்றம் எடுக்கும் எந்த முடிவையும்,
ஏற்றுக் கொள்வோம்.

நீதிபதி: வரும் 9ம்தேதி தீர்ப்பளிக்கப்படும்.

பவானி சிங் வக்கீல்: அன்று, நான் வர முடியாது.
தயவு செய்து, 10 ம் தேதிக்கு ஒத்தி வைக்க வேண்டும்.

நீதிபதி: (இதை ஏற்றுக்கொண்டு) வரும், 10ம் தேதி, மனு மீது தீர்ப்பளிக்கப்படும்.

——————————

எனவே, இன்று ( பிப்ரவரி, 10ந்தேதி ), எந்த நேரமும்,
பவானி சிங் தொடரலாமா – கூடாதா என்பது குறித்த தீர்ப்பு
வெளியாகி விடும்.

—————–

பின் குறிப்பு – இந்த நிலையில் நாம் இந்த வழக்கைப்பற்றி
எந்த விவாதமும் நடத்துவது முறையாக இருக்காது.
எனவே, நீதிமன்ற நடவடிக்கைகளைப் பற்றிய செய்தியை
மட்டும் பதிவிட்டிருக்கிறேன்.

.

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

3 Responses to ( பகுதி-2 ) பங்களூரு வழக்கில் பவானி சிங் தொடர்வாரா ?

  1. KILLERGEE Devakottai சொல்கிறார்:

    சிறப்பான பதிவு
    தமிழ் மணம் 2-ம் இடம் வாழ்த்துகள் நண்பரே….

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.