பகுதி-2 – யதார்த்தமான பெண்ணியவாதிகள் யார் …..?

tulips -flowers

சென்ற ஆண்டு உலக மகளிர் தினத்தன்று “பாட்டி, அம்மா,
மனைவி, மகள், பேத்தி” என்கிற தலைப்பில் 5 தலைமுறைப்
பெண்களைப் பற்றி ஒரு இடுகை எழுதி இருந்தேன்.

.
என்னையும் அறியாமலே ஒரு நல்ல இடுகையாக
அது அமைந்தது – பலரிடமிருந்து பாராட்டுதல்களையும்
பெற்றுத் தந்தது.
முன்னதாக யோசிக்காமல், நேரடியாக
கணிணி முன் உட்கார்ந்து தட்டச்சு செய்த இடுகை அது.
எதனால் அது அவ்வளவு வரவேற்பைப் பெற்றது என்று
பின்னர் யோசித்துப் பார்த்தால் –
“உண்மையான அனுபவத்தின் சித்தரிப்பு ” என்பது தான் அது
சிறப்பாக அமையக் காரணமென்று தோன்றியது…

வாழ்க்கையில் நல்ல அனுபவங்களே நம்மை செம்மைப்
படுத்துகின்றன. ஆணோ, பெண்ணோ – சிறு வயதில் அவர்கள்
வளர்க்கப்படும் விதம், பின்னர் அவர்கள் வளரும் சூழ்நிலை,
எதிர்கொள்ளும் அனுபவங்கள் ஆகியவை தான் அவர்களின்
குணாதிசயங்களை தீர்மானிப்பதில் முக்கிய பங்கு
வகிக்கின்றன.

“ப்ரியா தம்பி” அவர்களின் பெண்ணியம் குறித்த
இந்த கட்டுரை மிகவும் இயல்பாகவும்,
அநேகமாக எல்லாராலும் ஏற்றுக் கொள்ளக்கூடிய
ஒன்றாகவும் இருக்கிறது.

இந்தக் கட்டுரையைப் படித்ததும் – அதை நான்
என் இயல்புடன் ஒப்பிட்டுப் பார்த்துக் கொண்டேன்.
பொதுவாக நான் என் வாழ்வில், எனக்குத் தெரிந்த,
நான் பழகிய, பெண்களைப் பற்றிய நினைவும்,
அவர்களுக்கும் எனக்குமான புரிதல்கள், உறவுகள் – எப்படி
இருந்தன என்பது பற்றியும் யோசிக்கத் தோன்றியது.

முதல் முதலில் 20 வயதில் நான் மத்திய அரசுப்பணியில்
சேர்ந்தபோது, எனக்கு அடுத்த இருக்கையில் அமர்ந்து
பணிபுரிந்து வந்த மஞ்சுஷா சாட்டர்ஜி (என்னை விட
இரண்டு வயது பெரிய வங்காளப் பெண் ) –
துவங்கி, நான் பணியிலிருந்து ஓய்வு பெறுவதற்கு
இரண்டு வருடங்கள் முன்னதாக, கடைசியாக எனக்கு
அறிமுகமான திருமதி புஷ்பா ராமகிருஷ்ணன் வரை

நினைவிலிருக்கும் அனைவரை பற்றியும் மீண்டும்
கொஞ்சம் நினைத்துப் பார்த்தேன்.

என் அனுபவங்கள் இனிமையானவை.
மிகவும் அற்புதமானவை.

என்னைப் பொருத்த வரையில் – பெண்கள் இயல்பாகவே
இனிமையானவர்கள், மென்மையானவர்கள்;
( எங்குமே
சில விதிவிலக்குகள் இருக்கக்கூடும் என்பதை நான்
மறுக்கவில்லை)

என் 40 ஆண்டுக்கால அலுவலக வாழ்விலும் சரி,
சொந்த வாழ்விலும் சரி – பெண்களுடன்-
நினைவில் வைத்து சொல்லக்கூடிய அளவிற்கு – கசப்பான
அனுபவங்கள் என்று எதுவும் எனக்கு ஏற்பட்டதில்லை.

பெண்கள் – மிக மென்மையானவர்கள்;
வாழ்க்கையில் அவர்களுக்கு ஏற்படக்கூடிய
இன்னல்களிலிருந்து – அவர்கள் மீள இயன்ற வரை உதவுவதும்,
அவர்களது பாதுகாப்பை எப்போதும் உறுதி செய்வதும்

ஆண்களின் கடமை என்கிற உணர்வு
சிறிய வயதிலிருந்தே என் மனதில் உருவாகி நிலைத்து விட்டது.

இதற்கு முக்கிய காரணம் என் அம்மா தான்.
எனக்கு நினைவு தெரிந்த நாளிலிருந்து –
என் அம்மா பட்ட துன்பங்களை எல்லாம் கூடவே
உடனிருந்து பார்த்திருக்கிறேன்.

அவர் துயரத்தைப் போக்கும் சக்தி எனக்கில்லையே என்று
அப்போதே வருந்தி இருக்கிறேன். எட்டு-பத்து வயதுப் பையனாக,
அவருக்கு சமையலறையில் பாத்திரம் தேய்த்துக் கொடுத்தும்,
கல்-உரலில் இட்லி மாவு அரைக்க கைகொடுத்தும்,
சப்பாத்தி இட்டுக் கொடுத்தும் –
அவர் கடை-கண்ணிக்குப் போகும்போதெல்லாம்
கூடவே துணைக்குப் போவதும் என்று பல விதங்களிலும்
அவருக்குத் துணை நின்றிருக்கிறேன்.

என் அம்மாவின் நிலை என் அடிமனதில் ஆழப்பதிந்து
விட்டதே – நான் வளர்ந்த பிறகு – என் அம்மாவைப் போல்,
என் மனைவியோ மகளோ வருந்தக் கூடிய சூழ்நிலை
ஒருக்காலும் உருவாகக் கூடாது என்று நான் உறுதியாகச்
செயல்பட அடிப்படையானது.

அம்மாவின் மீது சிறுவயதில் எனக்கு ஏற்பட்ட
அந்த அக்கரை தான் – பிற்காலத்தில்
நான் சந்திக்க நேர்ந்த அனைத்துப் பெண்களின் மீதும்
பிரதிபலித்தது.

பெண்களுடன் பழகுவதில் 28-30 வயது வரை ஓரளவு
தயக்கம் காட்டிய நான், என் திருமணத்திற்குப் பிறகு
எந்தவித தயக்கமுமின்றி மிக சகஜமாகப் பழக ஆரம்பித்தேன்.
அவர்களின் தனிப்பட்ட பிரச்சினைகளை என்னால் எளிதாக
புரிந்து கொள்ள முடிந்தது. அவர்களின் அலுவலகம்
தொடர்பான பிரச்சினைகளை விசேஷ அக்கரை
எடுத்துக் கொண்டு சரி செய்து கொடுத்தேன். அதன் பிறகு
எனக்கு வயதும், அனுபவமும், பதவிப் பொறுப்பும் கூடக்கூட,
என் இயல்பான குணங்களைப் புரிந்து கொண்ட,
என்னுடன் பணிபுரிய நேர்ந்த பெண்கள் தங்கள் சொந்த
வாழ்க்கை சம்பந்தப்பட்ட பிரச்சினைகளைக் கூட
நம்பிக்கையுடன் மனம் விட்டுக்கூறி, தங்கள் கவலைகளை
பகிர்ந்து கொண்டார்கள்.

அலுவலகத்தில், மேல் அதிகாரிகளிடம் எனக்கிருந்த
செல்வாக்கு, நல்ல பெயர் காரணமாகவும் –
எனக்கிருந்த பெரிய நண்பர்கள் வட்டத்தின் துணை
காரணமாகவும், நான் பல விதங்களில் அவர்களுக்கு
உதவி புரிய முடிந்தது.

அவர்கள் குடும்பங்களில் நோய்வாய்ப்பட்ட யாருக்காவது
விசேஷ மருத்துவ உதவிகள், பள்ளி- கல்லூரிகளில் அனுமதி,
அலுவலக, கூட்டுறவு வங்கிகள் மூலம் ஓரளவு கடனுதவி –
சில சமயங்களில் குடிகார குடும்ப உறுப்பினர்களின்
தொல்லையிலிருந்து விடுபட உதவி, நினைத்தால் வியப்பாக
இருக்கும் – என்னுடன் பணி புரிந்த இரண்டு பெண்களுக்கு
திருமண விஷயத்தில் முழுமுயற்சிகள் மேற்கொண்டு
நடத்தி வைத்திருக்கிறேன்.

என் வீட்டைப் பொறுத்த வரையில், இறைவன் அருளால்,
இன்று வரை என் மனைவிக்கு எந்த குறையும் இல்லாமல்
ஒரு நல்ல கணவனாக இருந்திருக்கிறேன். பணியில்
இருக்கும்போது, நான் பொது வாழ்விலும் அதிகமாக
ஈடுபட்டிருந்ததால் – வீட்டில் இருக்கும் நேரம் மிகவும்
குறைவாகவே இருக்கும்.

இதை ஈடுகட்ட –
என் இரண்டு பெண்களுமே – சிறு குழந்தைகளாக
இருந்தபோது – என் மனைவியின் சிரமத்தைக் குறைக்க
வேண்டும் என்பதற்காக, ஒரு ஏற்பாடு செய்து கொண்டேன்.
பகல் முழுவதும் குழந்தையை அவள் பார்த்துக் கொள்வாள்.
இரவு முழுவதும் குழந்தையைப் பார்த்துக் கொள்வது
என் பொறுப்பு. குழந்தை சிணுங்கினாலும், அழுதாலும்
அவள் எழுந்திருக்க வேண்டிய அவசியமில்லை
என்று கண்டிப்பாகச் சொல்லி இருந்தேன்…..

அப்போதெல்லாம், புடவைத்துணியில் கட்டிய தூளியில்
தான் குழந்தைகள் தூங்கும். இரவில் குறைந்தது
இரண்டு-மூன்று தடவைகளாவது மூத்திரம் போகும்… அழும்.

அழும் சப்தம் கேட்கும்போதெல்லாம் விழித்தெழுந்து,
குழந்தையை வெளியில் எடுத்து தோளில் சாத்திக் கொண்டு,
ஒரு கையால் துணியை மாற்றி விட்டு, தூளித்துணியை
நகர்த்தி, படுக்கப்போட்டு, 5-10 நிமிடங்கள் தூளியை ஆட்டி,
மீண்டும் தூங்க வைக்க வேண்டும்.
எந்தவித
எரிச்சலும் இல்லாமல், நான் முழுமனதுடன் விரும்பியே,
குழந்தைகள் வளர்ந்து அடுத்த நிலைக்குப் போகும் வரையில்
இதைத் தொடர்ந்தேன்.

இதையெல்லாம் நான் இங்கு சொல்வதை யாரும்
தற்பெருமைக்காகச் சொல்வதாக நினைத்து விடக்கூடாது.

( நான் அப்படிப்பட்ட ஆசாமி அல்ல என்பது என் எழுத்தைப்
பழகியவர்களுக்கு தெரியும்.)
நான் வாழ்ந்து முடிந்து விட்டேன்.
இப்போது, அந்திமக் காலத்தில் அழைப்பை எதிர்பார்த்து
காத்திருக்கிறேன். இந்த நேரத்தில் –
என அனுபவங்களைச் சொல்வது, அடுத்த
தலைமுறையினருக்கு எந்த விதத்திலாவது உதவியாக
இருக்கலாம் என்கிற எண்ணத்தில் தான் எழுதுகிறேன்.

பொதுவாக, குழந்தைகளின் வளர்ப்பில்,
துணையாக இருக்கலாமே தவிர,
பெண்களின் பங்கை ஆண்களால் எந்த விதத்திலும்
ஈடு செய்ய முடியாது.

குழந்தைகள் நல்ல சூழ்நிலையில், ஆரோக்கியமாக,
நல்ல பண்புள்ளவர்களாக வளர வேண்டுமானால் –
அதில் பெண்களின் ஈடுபாடு மிக மிக அவசியம்.

அந்தப் பெண்கள் கவலையற்ற சூழ்நிலையில் –
முழு ஈடுபாட்டோடு குழந்தைகளை வளர்க்கத் தேவையான,
நல்ல அமைதியான குடும்பச் சூழலை ஆண்கள்
அமைத்துக் கொடுக்க வேண்டியது அவசியம்.
அந்தப் பெண்கள் நிம்மதியும், பாதுகாப்பும் உள்ளவராக உணர,
ஆண்களின் ஒத்துழைப்பு மிகவும் அவசியம்.

சம்பாதித்தால் போதாது. வீட்டிற்கு வேண்டியவற்றை
வாங்கிப் போட்டு விட்டாலும் போதாது.
பெண்களைப் பற்றிய,
அவர்களின் தனிப்பட்ட பிரச்சினைகளைப் பற்றிய,
அவர்களின் கவலைகளைப் பற்றிய,
– ஒரு புரிதலும்,
அவர்களிடம் ஒரு பரிவும் ஆண்களுக்கு எப்போதும்
இருப்பது மிகவும் அவசியம்.

வித்தியாசமாக சில சமயங்களில், ஆண் பலவீனனாகவும்,
அவனுக்கு இணை சேரும் பெண் தைரியமும், உறுதியும்
உள்ளவளாகவும் அமைவது உண்டு. இத்தகைய நேரங்களில்,
ஆண் சுமக்க வேண்டிய அத்தனை பாரத்தையும் சேர்த்து,
பெண்ணே சுமக்க வேண்டி இருக்கும்

இங்கு ஆண் பெரியவனா, பெண் பெரியவளா என்கிற
பேச்சு எழுவதில் அர்த்தமே இல்லை. ஆணைத் தவிர்த்து
பெண் தனியாகவோ, பெண்ணைத் தவிர்த்து ஆண் மட்டும்
தனியாகவோ வாழ்வது – சாத்தியமே இல்லை.

அது இயற்கைக்கு முரணானதும் கூட.
அவர்கள் இணைந்து வாழவென்றே இயற்கையால் –
இறைவனால் படைக்கப்பட்டவர்கள்.

அதே போல், குடும்பத்தில் – தாயிடம், மனைவியிடம்,
சகோதரிகளிடம், மகளிடம் காட்டும் அதே அக்கரையும்,
கரிசனமும் – அனைத்துப் பெண்களிடமும் காட்டப்பட
வேண்டும். பெண்களை நன்றாக கவனித்துக் கொள்ளும்
சமுதாயம் தான் உலகில் சிறந்து விளங்கும். அங்கு
பெண்ணிய உரிமைகளுக்கான குரல் எழாது;
ஆண்களின் மேலாதிக்கத்தை எதிர்க்கப் போராட்டமும்
தேவையே படாது.

இந்த உலகமும், குடும்பமும், வாழ்வும் – ரம்மியமானவை.
அதை உணர – இங்கு தேவைப்படுவது –

ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ளுதலும்,
பரிவு கொள்ளுதலும், விட்டுக் கொடுத்தலும் மட்டுமே.

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

27 Responses to பகுதி-2 – யதார்த்தமான பெண்ணியவாதிகள் யார் …..?

 1. visujjm சொல்கிறார்:

  தெய்வம் உங்களை போன்றோர்களின் பண்புகளிளும் , பக்குவத்திலும் வாழும் என்பது போன்ற பதிவு…

  நன்றி கலந்த வாழ்த்துக்கள்… ஜி

 2. ranjani135 சொல்கிறார்:

  இன்றைக்கு பல திருமணங்கள் விவாரத்து நோக்கிப் போவதற்கு நீங்கள் எழுதியுள்ள புரிதலும், பரிவு கொள்ளுதலும், விட்டுக் கொடுத்தல் இல்லாததும் தான். நீயா, நானா என்ற போட்டியில், குடும்பங்கள் ஒன்றாக இருந்தாலும், கணவன் மனைவி மனதளவில் பிரிந்து தான் இருக்கிறார்கள்.

  உங்கள் தாயாரிடம் நீங்கள் காட்டிய பரிவு படிக்கையில் கண்கள் பனித்தன. இத்தனை அன்பான மனிதர் இருக்க முடியுமா என்று தோன்றியது. கூட வேலை செய்யும் பெண்களிடமும் அதே பரிவை நீங்கள் காட்டியது மனதிற்கு இதமாக இருந்தது. இதைப்போல ஒவ்வொரு ஆணும் இருந்தால் நம் சமுதாயம் நல்லதொரு சமுதாயமாக உருவாகும்.

  ஒவ்வொரு பெண்ணும், ஒவ்வொரு ஆணும் படிக்க வேண்டிய கட்டுரை, இது.

  பாராட்டுக்களும், மனம் நெகிழ்ந்த வாழ்த்துக்களும், ஸார்!

 3. srinivasanmurugesan சொல்கிறார்:

  நன்றி அய்யா….தங்களின் வாசகனாக இருப்பதில் பெருமைபடுகிறேன்

 4. Rama Ravi (Ramvi) சொல்கிறார்:

  //சம்பாதித்தால் போதாது. வீட்டிற்கு வேண்டியவற்றை
  வாங்கிப் போட்டு விட்டாலும் போதாது.
  பெண்களைப் பற்றிய,
  அவர்களின் தனிப்பட்ட பிரச்சினைகளைப் பற்றிய,
  அவர்களின் கவலைகளைப் பற்றிய,
  – ஒரு புரிதலும்,
  அவர்களிடம் ஒரு பரிவும் ஆண்களுக்கு எப்போதும்
  இருப்பது மிகவும் அவசியம்.//

  அருமை. மிகவும்சிறப்பான கருத்து.

  //பெண்களை நன்றாக கவனித்துக் கொள்ளும்
  சமுதாயம் தான் உலகில் சிறந்து விளங்கும். அங்கு
  பெண்ணிய உரிமைகளுக்கான குரல் எழாது;
  ஆண்களின் மேலாதிக்கத்தை எதிர்க்கப் போராட்டமும்
  தேவையே படாது.//

  சத்தியமான வார்த்தைகள்.

  அருமையான சிறப்பான கருத்துக்கள்.

 5. Sharron சொல்கிறார்:

  The English people always say HAPPY WIFE HAPPY LIFE

 6. வத்சலா ராகவன் சொல்கிறார்:

  திரு காவிரிமைந்தன் அவர்களுக்கு,

  உங்கள் சூடான அரசியல் கட்டுரைகளை தொடர்ந்து படித்து வருகிறேன். அதில் கமெண்ட்ஸ் எழுதும் அளவுக்கு
  எனக்கு அரசியல் தெரியாது. ஆனால் இன்று நீங்கள் எழுதியிருக்கும் கட்டுரை நெஞ்சத்தை உருக்கிறது. இவ்வளவு மென்மையான மனிதரா நீங்கள் என்று ஆச்சரியமாக இருக்கிறது.
  நிஜமாகவே
  உங்கள் மனைவியும், பெண்களும் கொடுத்து வைத்தவர்கள்.
  ஆபிசில் உங்கள் கூட வேலை செய்தவர்கள் அதை விட
  அதிருஷ்டசாலிகள். என் அம்மா பட்ட கஷ்டம் வேறு
  எந்த பெண்ணுக்கும் வரக்கூடாது என்று வாழ்க்கை முழுவதும்
  விரதமே இருந்திருக்கிறீர்களே.
  புரிதலும், பரிவும், விட்டுக்கொடுத்தலும் தான் வாழ்க்கை என்று எவ்வளவு
  அழகாக எழுதி இருக்கிறீர்கள். இதைப்படித்த பிறகு என் மனதில் ஏற்பட்டுள்ள நிறைவை எப்படி எழுதுவது என்று தெரியவில்லை.
  இந்த மாதிரி நிறைய எழுதுங்கள் சார். கடவுள் உங்களுக்கு நீண்ட ஆயுளைக் கொடுப்பார். எனக்கு நம்பிக்கை இருக்கிறது.
  மிக மிக நன்றி.

  வத்சலா ராகவன்

  • today.and.me சொல்கிறார்:

   வத்சலா மேடம்,
   //இந்த மாதிரி நிறைய எழுதுங்கள் சார். //
   இந்த மாதிரியும் என்று தயவுசெய்து திருத்துங்கள். ஏனென்றால் நீங்கள் குறிப்பட்ட “அந்தமாதிரி” எழுத, அரசியல் பாடம் நடத்த இங்கு ஆட்கள் இல்லை. உங்கள் கமெண்ட்டைப் பார்த்து கா.மை.ஜி திருந்தி கிருந்தி விடப் போகிறார். 🙂 🙂

   மற்றபடி, உங்களை கமெண்ட் பக்கம் வரவைத்ததற்காக கா.மைஜி இதை எழுதியிருக்கிறார் என நான் நினைத்துக்கொள்கிறேன்.

 7. Ganpat சொல்கிறார்:

  அருமையான கட்டுரை கா.மை.ஜி.
  பெண்களை பற்றிய என் கருத்தையும் சொல்ல விழைகிறேன்.
  ஒரு வேளை திடீரென இந்த உலகில் உள்ள அத்தனை ஆண்களும் ஒரே நொடியில் ஒருவர் பாக்கியின்றி மறைந்து விடுகிறார்கள் என வைத்துக்கொள்வோம்.என்ன ஆகும்? ஒரு சில நாட்களுக்கு உலகம் ஸ்தம்பிக்கும் பிறகு வழக்கம் போல இயங்க ஆரம்பித்து விடும்
  இதற்கு பதிலாக திடீரென இந்த உலகில் உள்ள அத்தனை பெண்களும் ஒஎ நொடியில் ஒருவர் பாக்கியின்றி மறைந்து விடுகிறார்கள் என வைத்துக்கொள்வோம்.என்ன ஆகும்? ஒரு சில நாட்களுக்கு உலகம் ஸ்தம்பிக்கும் பிறகு …….
  ………………………
  ……………………..
  சுத்தமாக நின்று விடும்..

  (ஆண்கள் தயவு செய்து மன்னிக்கவும்)

  • today.and.me சொல்கிறார்:

   சக்தி இல்லையேல் சிவம் இல்லை
   (சக்தி இருக்கும், ஆனால் சிவனே என்று இருக்காது)
   சிவம் இல்லையேல் சக்தியில்லை
   (சிவனே என்று இருக்கும், ஆனால் சக்தி இருக்காது)
   இல்லையா கண்பத் ஜி.
   🙂 🙂

 8. visujjm சொல்கிறார்:

  மனதில் படுவதை சொல்கிறேன் … ஜி

  இன்று தெருவில் இறங்கி முழுமூச்சாக இறுதி வரை போராடும் ~ எரோம் ஷர்மிளா, நந்தினி ஆனந்தன் (மதுவுக்கு எதிராக ) போன்றோர்களையும் தாங்கள் ஒரு பதிவாக போட்டால் இன்னும் பெண்மை பற்றிய சமுதாய புரிதல் சிறப்புறும்…..

 9. S.Selvarajan சொல்கிறார்:

  வாழ்க்கையில் நல்ல அனுபவங்களே நம்மை செம்மைப்
  படுத்துகின்றன. ஆணோ, பெண்ணோ – சிறு வயதில் அவர்கள்
  வளர்க்கப்படும் விதம், பின்னர் அவர்கள் வளரும் சூழ்நிலை,
  எதிர்கொள்ளும் அனுபவங்கள் ஆகியவை தான் அவர்களின்
  குணாதிசயங்களை தீர்மானிப்பதில் முக்கிய பங்கு
  வகிக்கின்றன ! கூட்டு குடும்பம் அற்று விட்ட நிலையில் — பெரியப்பா — சித்தப்பா — மாமா — அத்தை போன்ற உறவுகள் காணாமல் போய்விட்ட நிலையில் — உனக்கு நான் … எனக்கு நீ …. என்று வேறு வழி இல்லாமல் திண்டாடும் போது ஒருவரை ஒருவர் சார்ந்து வாழும் போது ” யதார்த்தமான இரு இன வாதிகளும் ” உணரும் காலம் வெகு விரைவில் நடைமுறைக்கு வந்தே தீர வேண்டும் !! ஈகோ — எல்லாம் தானே மறைய ஆரம்பிக்கும் …. பொறுத்திருப்போம் !!!

 10. புது வசந்தம் சொல்கிறார்:

  அருமை, அருமை… இளம் பருவத்தினர், இளம் தம்பதியினர் என அனைவரும் படிக்க வேண்டும்.

 11. vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

  திருவாளர் விசு, ஸ்ரீநிவாச முருகேசன், ஷர்ரான்,
  செல்வராஜன், அன்பு (புது வசந்தம்),

  திருமதி ரஞ்சனி நாராயணன், ரமா ரவி,
  வத்சலா ராகவன், ரமா,

  -அத்தனை பேருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

  பாழாய்ப்போன அரசியலை விட்டு விட்டு,
  ஒரே ஒரு உருப்படியான இடுகையை எழுதியதற்கு
  இவ்வளவு பாராட்டுக்கள் என்றால், நான் நிச்சயம்
  இதில் தான் அதிகம் கவனம் செலுத்த வேண்டும்.
  அதை எனக்கு உணர்த்தியவர்கள் அனைவருக்கும் நன்றி.

  திருவாளர் Ganpat and todayandme –

  ஒரே ஒரு நாள் அரசியலை விட்டு வெளியே வந்ததற்கு
  என்னை நீங்கள் இவ்வளவு படுத்துவது நியாயமா …?
  மீண்டும் மீண்டும் நான் மோடிஜியின் “தீவிர” பக்தர்களிடம்
  வதைபடுவதில் உங்களுக்கு அவ்வளவு ஆனந்தமா …?

  -இருந்தாலும், உங்கள் நல்ல உள்ளங்களுக்கு
  என் மனமார்ந்த நன்றிகள்.

  -வாழ்த்துக்களுடன்,
  காவிரிமைந்தன்

  • today.and.me சொல்கிறார்:

   கா.மை.ஜி,
   “அரசியலை விட்டு விட்டு” என்பதுதான் பாய்ண்ட். இதைமட்டும் எழுதிக்கொண்டிருந்தால் ம்ஹூம் நன்றாகவே இருந்திருக்காது.இதைச் சொல்ல நிறையப்பேர் இருக்கிறார்கள், ப்ரியா தம்பி உட்பட. அவருக்கு நன்றி.அவற்றை வெளியிடவும் நிறைய மீடியாக்கள் உண்டு.

   ஆனால் நம் மக்களுக்கு அன்பு மட்டும் இல்லை, அறிவும் நிறையப் போதிக்கப்படவேண்டியிருக்கிறது. முக்கியமாக அரசியல், சட்டம். மீடியாக்கள் அதைப்பற்றி கவலையில்லாமல் இருக்கும்போது, அந்த அறிவைப் பெற்றிருக்கும் நீங்கள் (உங்கள் திருப்திக்காக, ‘கொஞ்சூண்டு தெரிந்திருக்கும் நீங்கள்’ 🙂 திருப்தியா?) அதை எழுதுவதுதான் சரியாக இருக்கும், சமூகத்திற்குத் திருப்பித் தரும் கடமையாகவும் இருக்கும் என நினைக்கிறேன்.

   //ஒரே ஒரு உருப்படியான இடுகையை//
   ‘ஒரே ஒரு’ என்பதை கண்டிக்கிறேன் 🙂 .
   ஒரே ஒரு உருப்படியான இடுகை என்று கூறியிருப்பதை வன்மையாகக் கண்டிக்கிறேன் . மற்ற எல்லாமே உருப்படியில்லாததா என்ன? நீங்களே எப்படி இவ்வாறு சொல்லலாம்??
   🙂 🙂

   //இவ்வளவு பாராட்டுக்கள் என்றால், நான் நிச்சயம் இதில் தான் அதிகம் கவனம் செலுத்த வேண்டும்.//
   இப்படி எல்லாம் மெல்ட் ஆகிவிடுவீர்கள் என்றுதான் //இந்த மாதிரியும்// என்று திருத்திப் படிக்கச் சொல்லியிருக்கிறேன். அந்தக்கருத்தை கண்பத்ஜியும் வழிமொழிந்திருக்கிறார். முன்மொழிந்து , வழிமொழிந்துவிட்டால் அதற்குத்தானே first priority.

   🙂

   //மீண்டும் மீண்டும் நான் மோடிஜியின் “தீவிர” பக்தர்களிடம்
   வதைபடுவதில் உங்களுக்கு அவ்வளவு ஆனந்தமா …?//
   😀

   • Ganpat சொல்கிறார்:

    கா.மை ஜி..
    நீங்கள் ஒரு மாறுதலுக்காக இம்மாதிரி பதிவுகள் போடுவது பற்றி ஆட்சேபனை ஒன்றுமில்லை..ஆனால் பொதுவாக பெண்கள் அரசியல் விஷயங்களில் ஆர்வமில்லாதவர்கள்.நீங்கள் எல்லா பிரச்சினைகளையும் சுவைபட விவாதிப்பதில் வல்லவர்.எனவே இந்த மாதிரியான பதிவுகள் வரும்போது நீங்கள் “கடத்தப்படுவதற்கான” வாய்ப்புக்கள் அதிகம்.நம் வலைதளமும் மெள்ள ஒரு “மங்கையர் மலர்” ஆகிவிடக்கூடும் என்ற அச்சமே எங்கள் இருவருக்கும் 🙂 நாம் மோடியுடனே இருப்போம் லேடி வேண்டாம் 😉

    • today.and.me சொல்கிறார்:

     கண்பத்ஜி,
     //நாம் மோடியுடனே இருப்போம் லேடி வேண்டாம் //

     சிவனே என்று சக்தியில்லாமல் இருக்க எனக்கு சம்மதியில்லை.
     அவ்வப்போது கொஞ்சம் சக்தியூட்டிக்கொள்ளலாம், தவறில்லை.
     😈

 12. சைதை அஜீஸ் சொல்கிறார்:

  இந்த பெண்களே இப்படித்தான்.
  ஈஸியா ஏமாத்திடலாம்!

  //சம்பாதித்தால் போதாது. வீட்டிற்கு வேண்டியவற்றை
  வாங்கிப் போட்டு விட்டாலும் போதாது.
  பெண்களைப் பற்றிய,
  அவர்களின் தனிப்பட்ட பிரச்சினைகளைப் பற்றிய,
  அவர்களின் கவலைகளைப் பற்றிய,
  – ஒரு புரிதலும்,
  அவர்களிடம் ஒரு பரிவும் ஆண்களுக்கு எப்போதும்
  இருப்பது மிகவும் அவசியம்.//

  இப்படியெல்லாம் சொல்லிட்டால் போதும்… அதாவது “சொல்லிவிட்டால்” மட்டும் போதும். உடனே காமைஜீ ரொம்ப நல்லவர் வல்லவர் மென்மையானவர் அப்படீன்னு புகழ ஆரம்பித்துவிடுவார்கள்.

  //(எங்குமே சில விதிவிலக்குகள் இருக்கக்கூடும் என்பதை நான் மறுக்கவில்லை)//
  இதை படித்துவிட்டு எத்தனைபேர் காதிலிருந்து புகை வந்ததோ தெரியவில்லை. யாரும் அதை வெளிக்காட்டிக்கொள்ளவுமில்லை என்பதே எதார்த்தம்.

  இன்றைய தேதியில் உலகில் பலரும் நல்லவர்களே. அல்லது கெட்டுவிட வாய்ப்பில்லாதவர்களே! (அப்போ வாய்ப்பு கொடுத்து பார்க்கலாமா என்று கேட்டுவிடாதீர் திரு டுடேஅண்ட்மீ-ஜீ)

  அப்புறம், எதார்த்தம் என்று பார்த்தால், இன்று பெண்கள் ஒரு போகப்பொருளாகவே சித்தரிக்கப்பட்டுவிட்டனர். அவர்களும் அதையே நம்பியும்விட்டனர். பிறகு “தெருவில் கடிக்கவரும் சொறி நாயை கொல்ல நினைத்தால், ப்ளூ கிராஸ் காரர்கள் காப்பாற்ற வருபதை” போல
  பெண்களே நீங்கள் போகப்பொருளாக படைக்கப்படவில்லை
  என்று யாராவது சொன்னால் உடனே கோபம் கொள்வது என்பதும் எதார்த்தமே!

  (காமைஜீ மேலே நான் சொல்லியது “சும்மா” ஒரு எதார்த்தம்!
  எல்லோரும் ஒரே மாதிரி சொல்லியுள்ளதால் கொஞ்சம் கரம் மசாலா சேர்த்துள்ளேன். அவ்வளவுதான். மற்றபடி உங்களை பற்றி எங்களுக்கு நன்றாகவே தெரியும். நீங்கள் இளகிய மனம் படைத்தவர்மட்டுமல்ல… தவறுகளை கண்டால் சினங்கொண்டு அதை தடுக்க போராடுபவரும் என்று!)

  வாழ்க வளமுடன்!

  • today.and.me சொல்கிறார்:

   அஜீஸ் ஜி
   //இன்றைய தேதியில் உலகில் பலரும் நல்லவர்களே. அல்லது கெட்டுவிட வாய்ப்பில்லாதவர்களே! (அப்போ வாய்ப்பு கொடுத்து பார்க்கலாமா என்று கேட்டுவிடாதீர் திரு டுடேஅண்ட்மீ-ஜீ)//

   கேட்டுத்தான் இருந்திருப்பேன். ஆனால் வாதத்திற்காக அல்ல.

   வாய்ப்பு இருக்கும்சூழலிலும் நல்லவர்களாக இருந்தால்தான் அல்லது அந்த வாய்ப்பைப் பார்த்து தன்ஒழுக்கத்தை மதிக்கநினைத்து அதைத் தவிர்த்து ஓடுபவர்கள்தான் நல்லவர்கள். என்ன, அந்தப் ‘பலரும்’ என்பது ‘சிலர்’ ஆகலாம். கெட்டவன் திருந்தி நல்லவனாக மாற சந்தர்ப்பம் வாய்ப்பளிக்கும்போது, in reverse act, நல்லவர்களைக் கெட்டவர்களாகவும் சந்தர்ப்பமும் சூழ்நிலையும் ஏன், சமூகமுமே மாற்றிவிடக்கூடும்..

   நான் இதைச் சொல்லுவேன் என்று எதிர்பார்த்ததற்காக நன்றி.

   //பெண்களே நீங்கள் போகப்பொருளாக படைக்கப்படவில்லை
   என்று யாராவது சொன்னால் உடனே கோபம் கொள்வது //
   ஊடலின் ஆரம்பம். ❤
   🙂

 13. மணிச்சிரல் சொல்கிறார்:

  பலம் பலவீனமென எண்ணத்தைத் தெளித்துவிட்டு
  மென்மைக்கிணை மென்மையெனப் புள்ளியிட்டு
  வந்ததும் வாழ்ந்ததும் இனிகாணக் கோலமிட்டு
  இயற்கையென்று உயர பற(ர)ந்து நிற்கிறீர்.
  படைத்ததைப் பார்த்துவிட்டு
  புரிந்ததை வார்த்தையிலிட்டு
  இட்டுவென இட்டுவிட்டு
  இயற்கை அன்று என்று நிற்கின்றோம்.
  காலத்திற்கேற்ற கலாச்சாரம்!

 14. ltinvestment சொல்கிறார்:

  KM Sir, You have multi facet writing and presenting skills. Your vast experience can make it shine on all subjects. Please do record our old living culture, how you tackled tricky situations and Of Course ” Politics”.
  Hats off to you.

 15. mahalakshmivijayan சொல்கிறார்:

  ஆண்கள் அத்தனை பேரும் கண்டிப்பாக படிக்க வேண்டிய அற்புதமான பதிவு!

  • S.Selvarajan சொல்கிறார்:

   இருபாலரும் படிக்க வேண்டும் என்பதற்காகத்தான் திரு கா.மை. அவர்கள் இதை அளித்துள்ளார்கள் :— இங்கு ஆண் பெரியவனா, பெண் பெரியவளா என்கிற
   பேச்சு எழுவதில் அர்த்தமே இல்லை. ஆணைத் தவிர்த்து
   பெண் தனியாகவோ, பெண்ணைத் தவிர்த்து ஆண் மட்டும்
   தனியாகவோ வாழ்வது – சாத்தியமே இல்லை….. எனவே இது இருவருக்கும் பொதுவானது !

 16. இ.பு.ஞானப்பிரகாசன் சொல்கிறார்:

  காவிரிமைந்தன் ஐயா!

  வழக்கத்துக்கு மாறாக இருந்தாலும் இந்தப் பதிவும் நன்றாகத்தான் இருக்கிறது. பெண்களிடம் நீங்கள் நடந்து கொண்ட விதம் பற்றி நீங்கள் பகிர்ந்திருக்கிறீர்கள். ‘பெண்ணியம்’ என்கிற கனமான தலைப்பின் கீழ் இதைப் பார்க்கும்பொழுது, இதில் புதிதாக ஒன்றும் இல்லை. ஆனால், இதை எழுதிய தங்கள் அகவையை வைத்து இதைப் பார்க்கும்பொழுது, இதற்காக நான் தங்களை வியக்கிறேன்.

  தங்களுக்கு 70 அகவைக்கு மேல் என்றீர்கள். தங்களுடைய இளமைப் பருவம் என்றால், ஏறத்தாழ 40 ஆண்டுகளுக்கு முன். அதாவது, பெண் என்றால் வீட்டு வேலை செய்தே கிடக்க வேண்டும்; ஆனாலும் அவளுடைய அந்த வேலையை ஒரு வேலையாகவே மதிக்க மாட்டோம்; ஆண்கள் நாங்கள் எப்பொழுது வந்தாலும் எங்களுக்குப் பணிவிடை செய்யப் பெண் என்பவள் ஆயத்தமாக இருக்க வேண்டும்; எங்களின் கோபதாபங்களுக்கான வடிகாலாய் இருக்க வேண்டும்; எங்களுக்காக எங்கள் குடும்பம் மொத்தத்தையும் அனுசரித்துப் போக வேண்டும்; இவ்வளவும் செய்தாலும் ஏதோ ஒரு பிரச்சினை என்றால் நாங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் வீட்டை விட்டுத் துரத்தி விடுவோம்; எந்நேரம் வேண்டுமானாலும் திடீரென்று நடத்தையில் ஐயம் கொள்வோம்; உடனே தீக்குளித்துக் காட்ட வேண்டும் என்றெல்லாமும் இன்னும் பலவாறும் ஆண்கள் திமிர் பிடித்தாடிய காலக்கட்டத்தில் தாங்கள் தங்கள் மனைவியை இவ்வளவு மதித்து, அவர் வீட்டுவேலையை மதித்துக் குழந்தை வளர்ப்பில் கைகொடுத்தது என்பது உண்மையிலேயே போற்றுதலுக்குரியது!

  தங்களுடன் பணிபுரிந்த பெண்களுக்குக் கூடத் தாங்கள் முழு முயற்சியெடுத்துத் திருமணம் செய்து வைத்திருப்பதெல்லாம் மிகப் பெரிய விதயம்.

  ஆனால் ஒன்று – ‘பெண்ணியம்’ என்பது ஆண்கள் பெண்களிடம் கரிசனத்துடன், அக்கறையுடன் நடப்பது என்பது இல்லை ஐயா. பெண்ணின் உரிமைகளை, கருத்துக்களை மதித்து நடப்பதும், தனக்கிருக்கும் எல்லா உரிமைகளும் சுதந்திரங்களும் பெண்ணுக்கும் உண்டு என உணர்ந்து ஏற்பதும்தான்! இந்தக் காலத்து ஆண்களுக்குச் சிரமமே அதில்தான். மற்றபடி, பெண்களைக் கண்ணுக்குள் வைத்துப் பார்த்துக் கொள்ளவெல்லாம் ‘நம்ம பசங்க’ எப்பொழுதும் ஆயத்தமாகவே இருக்கிறார்கள். ஆனால் உரிமை, சுதந்திரம் என வரும்பொழுதுதான் சிக்கலே தொடங்குகிறது.

  தன் வருமானத்தை அப்படியே தன் அம்மாவிடம் கொடுப்பது, அலுவல்ரீதியான பயணங்கள், இரவுப்பணி போன்றவற்றில் ஈடுபடுவது, கடவுள் நம்பிக்கை, அரசியல் போன்றவற்றில் தனக்கெனத் தனிக் கருத்து கொண்டிருப்பது, திருமணத்துக்குப் பிறகான நட்பு, குழந்தைப்பேறு போன்ற பல விதயங்கள் இங்கு ஆணுக்கு ஒரு மாதிரியாகவும் பெண்ணுக்கு ஒரு மாதிரியாகவும் இருக்கின்றன. இவற்றையெல்லாம் செய்வது ஆணுக்கு மிகவும் இயல்பாக இருக்கும் அதே நேரம், பெண்ணுக்கு இவை ஒவ்வொன்றும் பெரும் போராட்டமாகவே இருக்கின்றன. ஒன்றும் வேண்டாம், தன்னை விடத் தன் மனைவி கொஞ்சம் கூடுதலாக ஊதியம் பெறத் தொடங்கிவிட்டாலே கூட நம் ஆட்களுக்குக் கொஞ்சம் தாழ்வு மனப்பான்மை வந்து விடுகிறது. அதையொட்டிக் குடும்பத்தில் அடுத்தடுத்து பல சிக்கல்கள் உருவாகின்றன. என்னத்தைச் சொல்ல!

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.