யானைப் பசிக்கு சோளப்பொரி ….. (பகுதி-2 – கம்பெனிகள் கொடுப்பது …..)


இந்த தளத்தில் இடுகையின் முதல் பகுதி வெளிவந்த மறுநாள் –
மத்திய அரசு 2012 ஆம் ஆண்டு நியமித்திருந்த –
ஓய்வுபெற்ற டில்லி உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ஏ.பி.ஷா,
அவர்களின் தலைமையிலான ,மத்திய சட்டக்கமிஷன்,
தேர்தல் சீர்திருத்தங்களுக்கான சில பரிந்துரைகளை மத்திய
அரசிடம் சமர்ப்பித்திருக்கிறது.

அவற்றை கீழே தனியே சுருக்கமாகத் தந்திருக்கிறேன்….

————————————————————————
( http://www.dinamalar.com/news_detail.asp?id=1204621 )

* அரசியல் கட்சிகள், 20 ஆயிரம் ரூபாய்க்கு குறைவான
அளவில் நன்கொடைகள் பெற்றாலும், அந்த தொகையானது,
20 கோடியை தாண்டினாலோ அல்லது கட்சியின் மொத்த
நிதி வசூலில், 20 சதவீதத்தை தாண்டினாலோ, அதுகுறித்த
கணக்கு விவரங்களை, தேர்தல் கமிஷனிடம் சமர்ப்பிக்க
வேண்டும். இதுதொடர்பாக, தேர்தல் விதிகள் மற்றும்
வருமானவரி சட்ட விதிகளில், மத்திய அரசு மாற்றம்
செய்ய வேண்டும்.

* ஒவ்வொரு நிதியாண்டு முடிந்ததும், அடுத்த ஆறு மாதத்திற்குள்,
அரசியல் கட்சிகள் தங்களின் நிதி வசூல் மற்றும் கணக்கு
விவரங்களை தணிக்கை செய்து, அதை தேர்தல் கமிஷனிடம்
சமர்ப்பிக்க வேண்டும்.

* அரசியல் கட்சிகள், தங்களுக்கு கிடைத்த நிதி மற்றும்
நன்கொடைகள் தொடர்பாக தரும் விவரங்களை, தேர்தல் கமிஷன்
தன் இணையதளத்தில் வெளியிட வேண்டும்.

* அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை அளிக்கும் பெரிய நிறுவனங்கள்,

நன்கொடைகளை வழங்கும் முன், தங்கள் நிறுவனத்தின் வருடாந்திர

பொதுக்கூட்டத்தில், பங்குதாரர்களின் ஒப்புதலைப் பெறுவதை
கட்டாயமாக்க வேண்டும்.

* தேர்தல் செலவுக் கணக்கு விவரங்கள் மற்றும் தங்களுக்கு
கிடைத்த நிதி விவரங்களை, சமர்ப்பிக்க தவறும் வேட்பாளர்கள்,
தற்போது தேர்தலில் போட்டியிட, மூன்று ஆண்டுகளுக்கு தடை

விதிக்கப்படுகிறது. இந்த தடையை, ஐந்து ஆண்டுகளாக அதிகரிக்க

வேண்டும். அதாவது, அடுத்த ஐந்தாண்டுகளுக்கு, அவர்கள்
தேர்தலில் போட்டியிட முடியாத சூழ்நிலையை உருவாக்க வேண்டும்.

* கட்சிக்கு கிடைத்த நிதி மற்றும் நன்கொடை விவரங்களை,
குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் சமர்ப்பிக்காத அரசியல் கட்சிகளுக்கு,

அன்றாட அடிப்படையில் அபராதம் விதிக்க வேண்டும். அதன்பின்னும்,

அந்தக் கட்சிகள் விதிமுறைப்படி செயல்படாவிட்டால், அவற்றின்

அங்கீகாரத்தையும் ரத்து செய்ய வேண்டும்.

* கட்சிகளோ அல்லது தனிநபர்களோ, தேர்தல் நேரத்தில்
கறுப்பு பணத்தை செலவிட்டாலோ அல்லது செலவுக் கணக்குகளை

குறைவாகக் காட்டினாலோ, தற்போது பெரிய அளவில் நடவடிக்கை
எடுக்க முடிவதில்லை. இனி, இதுபோன்ற குற்றங்களை, ஊழல்
தடுப்புச் சட்ட விதிகளின் கீழ் கையாள வேண்டும்.

* சுயேச்சைகள் தேர்தலில் போட்டியிட, தடை விதிக்க வேண்டும்.

* தேர்தல் நேரத்தில் பணம் கொடுத்து, பத்திரிகைகளில் செய்தி
வெளியிடச் செய்வதையும், அரசியல் ரீதியான விளம்பரங்கள்

வெளியிடுவதையும், குற்றமாக அறிவிக்க வேண்டும்.
அப்படி செய்வோரை, தேர்தலில் போட்டியிட தகுதியற்றவர்களாக
அறிவிக்க வேண்டும் அல்லது தேர்ந்தெடுக்கப்பட்டால், அவர்களை
தகுதி நீக்கம் செய்ய வேண்டும்.

* குஜராத்தில், சமீபத்தில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலின்
போது, ஓட்டளிப்பது கட்டாயமாக்கப்பட்டது; அது, சரியல்ல.

* தேர்தல் கமிஷனர்களை, பிரதமர், லோக்சபா எதிர்க்கட்சித்
தலைவர் மற்றும் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அடங்கிய,
மூவர் குழுவினர் தேர்வு செய்ய வேண்டும். லோக்சபாவில்,

அங்கீகரிக்கப்பட்ட எதிர்க்கட்சி இல்லை எனில், கூடுதல்
இடங்களைப் பெற்றுள்ள எதிர்க்கட்சியின் தலைவர்,
மூவர் குழுவின் உறுப்பினராக இடம் பெற வேண்டும். மேலும்,
தேர்தல் கமிஷனர்கள் அனைவருக்கும், அரசியல் சட்ட ரீதியாக,
சமமான பாதுகாப்பு வழங்க வேண்டும்.

* தேர்தல் தொடர்பான வழக்குகளை விசாரிக்க, உயர்
நீதிமன்றங்களில், ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட, தேர்தல்
தொடர்பான அமர்வுகளை அறிமுகப்படுத்த வேண்டும்.

* வேட்பாளர்களின் தேர்தல் செலவுக் கணக்கை மதிப்பிடும் போது,
தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நாள் முதல், தேர்தல் முடிவு
வெளியாகும் நாள் வரையிலான செலவுகளை, கணக்கில் கொள்ள

வேண்டும்; அதற்கேற்ற வகையில், விதிகளில் திருத்தம்
செய்ய வேண்டும்.

* தேர்தல் கமிஷனில் பதிவு செய்துள்ள கட்சிகளின் வேட்பாளர்கள்

மட்டுமே, லோக்சபா மற்றும் சட்டசபைத் தேர்தல்களில் போட்டியிட

வேண்டும். அதற்கு, மக்கள் பிரதிநிதித்துவம் சட்டப் பிரிவு, 4
மற்றும் 5ல், திருத்தம் செய்ய வேண்டும்.

* தேர்தலில், ஒரு வேட்பாளர், ஒன்றுக்கு மேற்பட்ட தொகுதிகளில்

போட்டியிடுவது, தடை செய்யப்பட வேண்டும்.

* விதிமுறைகளுக்கு உட்பட்டு நடக்காத கட்சிகளின் அங்கீகாரத்தை
ரத்து செய்யும் உரிமையை, தேர்தல் கமிஷனுக்கு வழங்க வேண்டும்.

* எம்.எல்.ஏ.,க்கள் அல்லது எம்.பி.,க்கள் கட்சி தாவினால், அவர்களின்

பதவியை பறிக்கும் உரிமை, தற்போது சபாநாயகருக்கு அல்லது சட்ட

மேலவை தலைவருக்கு அல்லது ராஜ்யசபா தலைவருக்கு உள்ளது;
இந்த விதிமுறை மாற்றப்பட வேண்டும்; பதவியை பறிக்கும்
உரிமையை, ஜனாதிபதி அல்லது மாநில கவர்னருக்கு வழங்க
வேண்டும்; அதற்கேற்ற வகையில், அரசியல் சட்டத்தில்
திருத்தங்கள் மேற்கொள்ள வேண்டும். மேலும், தேர்தல் கமிஷனின்

பரிந்துரையின் அடிப்படையில் மட்டுமே, ஜனாதிபதி அல்லது
கவர்னர், இந்த பதவி பறிப்பு நடவடிக்கையை எடுக்க வேண்டும்.

* சட்டக் கமிஷன் வழங்கிய பரிந்துரைகளை, இனி மத்திய சட்ட

அமைச்சகம் ஆய்வு செய்யும். அவற்றில் எவற்றை எல்லாம்,
சட்ட விதிகளின் சேர்க்கலாம் என மத்திய அரசு முடிவு செய்யும்.

——————————————————————————–

இன்னும் பல விஷயங்களில் –
சட்ட கமிஷன் கவனம் செலுத்தி இருக்கலாம்.

தேர்தல் சீர்திருத்தங்களின் முக்கிய நோக்கம் என்னவாக
இருக்க வேண்டும் …?

கருப்புப்பணம் தேர்தலில் விளையாடுவதையும்,
வாக்காளர்களுக்கு பணம் கொடுத்து ஓட்டுக்களை விலைக்கு
வாங்க செய்யப்படும் முயற்சிகளை கட்டுப்படுத்தவும்
நிறைய கவனம் செலுத்த வேண்டும்.

பணம் படைத்தவர்கள் மட்டும் தான் தேர்தலில் போட்டியிட
முடியும் என்கிற தற்போதைய நிலையை மாற்றி,
தேர்தலில் போட்டியிட “பணம்” ஒரு தகுதியே அல்ல –
என்கிற நிலையை கொஞ்சம் கொஞ்சமாக உருவாக்க வேண்டும்.

“நல்ல பெயரும்”, “மக்களிடையே நம்பிக்கையும்” உள்ளவர்கள்
மட்டுமே தேர்தல் களத்தில் இறங்க முடியும் என்கிற நிலையை
படிப்படியாக ஏற்படுத்த வேண்டும்.

1) அரசியல் கட்சிகளுக்கு, கம்பெனிகள் கொடுக்கும் ‘நன்கொடை’க்கு
வருமான வரியிலிருந்து ஏன் விலக்கு கொடுக்க வேண்டும்..?

இதற்கு எந்தவித நியாயமான காரணங்களும் இல்லையே…
இது ஒன்றும் “தான-தர்மம்” இல்லையே ?

2) சிறிய கட்சிகள் என்ன பாவம் செய்தன ? கம்பெனிகள்
நன்கொடை கொடுப்பதானால், அங்கீகரிக்கப்பட்ட அரசியல்
கட்சிகள் அனைத்திற்கும் ஒரே அளவில் ( proportionately )
கொடுக்க வேண்டும் என்றும் விதிக்கலாம்.

3) கட்சித் தலைவர்களுக்கு விமான பயணங்கள், தங்கும்விடுதிகள்
(கெஸ்ட் ஹவுஸ்) வசதி ஆகியவை ஸ்பான்சர் செய்வது
தடை செய்யப்பட வேண்டும்.

4) அரசியல் கட்சிகள், ஒரு குறிப்பிட்ட தொகைக்கு மேல்
(ஐயாயிரம் ரூபாய் …? ) செய்யும் செலவுகள் அனைத்தையும்
காசோலை மூலம் தான் நிகழ்த்த வேண்டும் என்று விதி
கொண்டு வரப்படலாம்.

5) கட்சிகள் பணம் வசூலிக்கும்போதும், செலவுகள் செய்யும்போதும்,
பணம் கொடுப்பவர், வாங்குபவர் – என்று எல்லாருடைய
பான்-எண்களையும் குறிப்பிடுவதை கட்டாயமாக்கலாம்.

6) போட்டியிடும் வேட்பாளர்களின் எண்ணிக்கைக்கு
தகுந்தாற்போல், அரசியல் கட்சிகளிடமிருந்து – தொகையை
வசூலித்துக்கொண்டு, அரசாங்கமே அனைத்து வேட்பாளர்களுக்கும் –
ஒரே அளவிலான விளம்பரங்களுக்கு ஏற்பாடு செய்யலாம்.
இதன்மூலம் பணக்கார கட்சிகள் -இஷ்டத்திற்கு பெரும்
பொருட்செலவில் விளம்பரம் செய்ய முடியாமல் கட்டுப்படுத்தலாம்.

8) போஸ்டர்கள் ஒட்டுவது, பானர்கள் வைப்பது
எல்லாவற்றிலும் கட்டுப்பாடுகளைக் கொண்டு வந்து –
ஒவ்வொரு தொகுதியிலும் வைக்கப்படும் விளம்பரத்தட்டிகளின்
அளவை, எண்ணிக்கையை – மட்டுப்படுத்தலாம்.

7) தொலைக்காட்சிகள், செய்தித்தாள்களில் – விளம்பரங்களுக்கு
கட்டுப்பாடுகளைக் கொண்டு வந்து – அநாவசியமான
தேர்தல் செலவுகளைக் குறைக்கலாம். இது ஏழைக்கட்சிகளும்,
ஏழை வேட்பாளர்களும் – தேர்தல் களத்தில், சம வாய்ப்புடன்
போட்டியிட வசதி செய்யும்.

8) நாட்டில் புற்றீசல் போல், அளவிற்கதிகமான கட்சிகள்
தலையெடுத்து விட்டன. இவற்றைக் களைந்து கட்சிகளின்
எண்ணிக்கையைக் குறைக்க –

மத்தியிலும் சரி, மாநிலங்களிலும் சரி,
குறைந்த பட்ச சதவீதம் ஓட்டு வாங்கும் கட்சிகளை –
கட்சிகளின் அங்கீகாரப் பட்டியலிலிருந்து –
ஒவ்வொரு தேர்தலிலும்
இரண்டிரண்டாக நீக்கிக் கொண்டே வரலாம்.
இறுதியில், 4 அல்லது 5 கட்சிகள் மட்டுமே களத்தில்
மிஞ்சும் அளவிற்கு கொண்டு வருவது ஜனநாயகத்திற்கு
நல்லது அல்லவா ?

9) ஜாதி அடிப்படையிலோ, மத அடிப்படையிலோ –
இயங்கும் கட்சிகளுக்கு தேர்தல் கமிஷன் அங்கீகாரம்
அளிப்பதோ, தேர்தலில் போட்டியிட அனுமதிப்பதோ –
தடை செய்யப்பட வேண்டும்.

10) சுயேச்சைகள் தேர்தலில் நிற்கக்கூடாது என்று
விதி கொண்டு வருவது சரியாகத் தெரியவில்லை.
இந்த யோசனை கைவிடப்பட வேண்டும்.

– இவை எனக்குத் தோன்றிய யோசனைகள்.
நண்பர்கள் தங்களுக்கு தோன்றும் யோசனைகளை
பின்னூட்டங்களில் எழுதுமாறு வேண்டுகிறேன்.

பின் குறிப்பு –

பின்னர் அனைத்து யோசனைகளையும் தொகுத்து,
ஒரு கோரிக்கை மனுவாகத் தயாரித்து,
தேர்தல் கமிஷனுக்கு பரிசீலனைக்காக அனுப்பலாமா
என்று யோசித்துக் கொண்டிருக்கிறேன்.
உடனடியாக பிரமாதமாக எதுவும் நிகழ்ந்து விடும் என்கிற
எண்ணத்தில் அல்ல ….

ஊதுகிற சங்கை ஊதி வைப்போம்…..
என்றாவது ஒரு நாள் விடியாமலா போகும் …?

நீங்கள் என்ன சொல்கிறீர்கள் நண்பர்களே …?

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

One Response to யானைப் பசிக்கு சோளப்பொரி ….. (பகுதி-2 – கம்பெனிகள் கொடுப்பது …..)

 1. ராம் சொல்கிறார்:

  யாருடைய மனதையும் புண்படுத்தும் நோக்கத்தில் இதை எழுத வில்லை. நேரிடையாகவோ மறைமுகமாகவோ யாரேனும் பாதிக்கபட்டால் மன்னிக்கவும். நாடாளுமன்றத் தேர்தல் விதிமுறைக்கான விருப்பங்கள்:-

  1. சட்டமன்றத்தில் அமர்ந்தால் தான் நாடாளுமன்றத்தில் அமர முடியும். ஒரு முறையாவது சட்டமன்ற தேர்தலில் வெற்றி பட்டிருக்க வேண்டும். படிப்படியாக வளர்ச்சியடைய உதவிகரமாக இருக்கும்.
  2. ஒரு கட்சியின் சார்பாக போட்டியிட வேண்டுமென்றால், குறைந்தது ஐந்து வருடங்கள் அந்த கட்சியில் இருந்திருக்க வேண்டும். இதன் மூலம் தன்னலத்திற்காக கட்சி விட்டு கட்சி மாறுவதை காலத்தை கொண்டு களைய முடியும். கொள்கையை மாற்றினால், செல்லுமிடத்தின் கொள்கைகளை படிக்கவும் அவர்களது வரலாறை அறியவும் இந்த கால அவகாசம் கண்டிப்பாக தேவைப்படும். புதியதாக கட்சியில் இணையும் பிரபலங்களுக்கும் இந்த அவகாசம் கண்டிப்பாக தேவைப்படும்.
  3. மாநிலத்தில், பிறந்த அல்லது வாழும் இடங்களில் மட்டுமே போட்டியிட முடியும். இடமாற்றத்தை வரைமுறை படுத்த வேண்டும்.
  4. வாக்கிற்கு பணம் தருவதை மானியத்தை கையாளுவதைப் போல் வங்கிகள் மூலம் நடைமுறைபடுத்தலாம். வாக்காளர்களின் வங்கி கணக்கு எண்ணை கட்சிகளுக்கு தாராளாமாக பகிரலாம். நிறுவனங்கள் கொடுக்கும் பணத்தை, கொண்ட கொள்கை சார்ந்தவர்களுக்கு கொடுப்பது தவறேயில்லை. ஆனால் அனைத்தும் வங்கிகளின் பரிவர்த்தனையாக தான் இருக்க வேண்டும். ஒருவர் பல கட்சிகளிடம் பணம் பெறும் முறையை வங்கிகளை கொண்டு தடுக்கவும் முடியும்.
  அதிகபட்சம் குடும்ப தலைவரின் ஆண்டு வருமானத்தை கொடுக்கலாம்.
  5. வேட்பாளரின் வரவுக்கு உட்பட்ட செலவுகளுக்கு எல்லையில்லா வருமான வரிவிலக்கு அளிக்கலாம். கட்சியிடம் இருந்து பெற்ற பணத்தையும், வசூலையும் வரவாக காட்டலாம். (நிறுவனம்/ஊழியர் முறைதான்) செலவுக்கான சான்றிதல்களை வங்கிகளிடம் இருந்து மட்டும் தான் பெறலாம். இதன் மூலம் வரவும் செலவும் நேர்கோட்டில் பயணிக்க ஏதுவாக இருக்கும்.
  6. நாடாளுமன்றத் தேர்தலில் வாக்களிப்பதற்கு விடுமுறை அவசியம் இல்லை. வருமான வரி செலுத்துவோர் நிரந்தர வருமான எண்ணைக் கொண்டு, தங்களின் வாக்கினை பதிவுசெய்ய இணையதளம் மூலம் வசதி செய்து தர வேண்டும். அனைத்து இரயில் நிலையம் /நூலகம்/ தபால் நிலையம்/காவல் நிலையம் /ஊராட்சி /பேருராட்சி மன்றங்களிலும் இந்த வசதி செய்து தர வேண்டும். அனைத்து அரசு/தனியார் அலுவலகங்களிலும் அலுவலகர்களுக்கு வசதி செய்து தர வேண்டும். இதனால் வருமான வரி செலுத்துபவர்கள் மட்டுமே நாடளுமன்றத்திற்கு வாக்கினை செலுத்த முடியும். அதாவது தன்னையும், தன்னை சார்ந்தவர்களையும் காப்பாற்றும்/காப்பாற்றுவதற்கு உதவும் தன்மை உள்ளவர்களால் மட்டுமே நாட்டை காப்பாற்ற முடியும். இது என்னுடைய தனிப்பட்ட நம்பிக்கை. விவாததிற்கு உரியதல்ல.
  நன்றி.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.