தீமாபுர் – கற்பழிப்பு ஆசாமியை அடித்தே கொன்றது சரியா …. ? தவறா ….?

.

 

dimapur-lynching-1

dimapur-1

 

மார்ச் 5, 2015, நாகாலாந்திலுள்ள தீமாபுர் சிறைச்சாலை.
சுமார் 7000-8000 பேர் கொண்ட ஆக்ரோஷமான கூட்டம்
ஒன்று திரண்டு நிற்கிறது. அவர்களை கட்டுப்படுத்த முயன்ற
போலீஸ் காவலை மீறி, ஒரு கும்பல் சிறைச்சாலைக்குள்
நுழைந்து கற்பழிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு,
விசாரணைக்கைதியாக வைக்கப்பட்டிருக்கும் ஒருவனை
தர தரவென்று வெளியே இழுத்து வருகிறது….

அவன் உடைகளைக் கிழித்து எறிந்து, நிர்வாணமாக்குகிறது.
அங்கிருந்து அவனை அடித்து, உதைத்துக் கொண்டே,
7-8 கிலோமீட்டர் தொலைவில் ஊருக்கு நடுவே இருக்கும்
மணிக்கூண்டு வரை இழுத்துக் கொண்டு வருகிறது.
அவன் இடுப்பில் ஒரு கயிற்றைக் கட்டி,
அவனை மோட்டார் சைக்கிளுடன் பிணைத்து –
இழுத்துச் செல்கிறது.

வழியிலேயே கோபம்கொண்ட கூட்டத்தின் மூர்க்கத்தனமான
தாக்குதல் காரணமாக அந்த மனிதன் இறந்து விடுகிறான்.

கலவரத்தை அடக்க போலீஸ் கண்ணீர்ப்புகை
பிரயோகம் செய்கிறது. வெத்து குண்டுகளை வெடிக்கிறது.
தடியடிப் பிரயோகம் செய்கிறது.
ஜெயில் வாசலிலும், தொடர்ந்தும் – போலீசுக்கும், கும்பலுக்கும்
இடையே நடந்த மோதல்களில் கூட்டத்தைச் சேர்ந்த
ஒருவர் இறந்து போகிறார். 52 பேர் காயம் அடைகின்றனர்.
10 போலீஸ் வண்டிகள் தீக்கிரையாகின்றன.

கூட்டத்தில் இருந்தவர்கள் பெரும்பாலும், யுனிபார்ம் அணிந்த
பள்ளி, கல்லூரி – மாணவ, மாணவிகளாக இருந்ததால்,
போலீசால் அதற்கு மேல் பலப்பிரயோகம் செய்ய இயல்வில்லை
என்று போலீஸ் கமிஷனர் கூறுகிறார்.

காவல் நிலையத்தில் பதியப்பட்டுள்ள முதல் தகவல்
அறிக்கை ( First Information Report)- யின்படி –
இதன் பின்னணியாகச் சொல்லப்படுவது –

கல்லூரிப் பெண் ஒருவர் போலீசில் – பிப்ரவரி,23 2015 அன்று
தீமாபுர் ஓட்டல் ஒன்றில் – பரீத் கான் மற்றும் அவனது
கூட்டாளி ஒருவனால் தான் பலவந்தப்படுத்தி கற்பழிக்கப்பட்டதாக
புகார் கூறுகிறார். பரீத் கான் மற்றும் அந்தப் பெண் ஆகிய
இருவரும் அருகிலுள்ள ஒரே கிராமத்தைச் சேர்ந்தவர்கள்.
ஏற்கெனவே அறிமுகமானவர்கள். பரீத் கானின் மனைவி
அந்தப்பெண்ணின் சினேகிதி. பரீத் கான் அந்தப் பெண்ணை
காரில் வருமாறு கூறியபோது, தெரிந்தவர் தானே என்கிற
நினைப்பில் கூடச்சென்றதாகவும், பின்னர் அவன் அந்தப்
பெண்ணுக்கு குளிர்பானத்தில் போதை மருந்தை கலந்து
கொடுத்து, ஓட்டலுக்கு அழைத்துச்சென்று, கற்பழித்ததாகவும்,
பின்னர் அதை வெளியே சொல்லாமலிருக்க 5000 ரூபாய்
பணமும் கொடுத்து விட்டுச் சென்றதாகவும் புகார் கூறி
இருக்கிறார். புகார் கூறும்போது, அந்தப் பணத்தையும்
அந்த பெண் – போலீசிடம் ஒப்படைத்திருக்கிறார்.

போலீஸ் பரீத் கானை கைது செய்து, சிறையில் அடைத்து
விசாரணையை மேற்கொள்கிறது. கற்பழிப்பு குற்றச்சாட்டை
மறுக்கும் பரீத் கான் – அந்தப் பெண்ணும் இணங்கியதால்
தான் – உறவு கொண்டதாகவும், கற்பழிக்கவில்லை என்றும்
தன் செயலை நியாயப்படுத்துகிறான்.

பரீத் கான் அஸ்ஸாமைச் சேர்ந்தவன். அவன் நாகாலாந்தை
சேர்ந்த ஒரு பெண்ணை மணந்து கொண்டு, தீமாபுரில்
7-8 ஆண்டுகளாகத் தொழில் செய்து வந்திருக்கிறான்.
அவர்களுக்கு 3-4 வயதில் ஒரு குழந்தையும் இருக்கிறது.

இதற்குள் ஊருக்குள் வதந்திகள் பரவுகின்றன.
பங்களாதேஷைச் சேர்ந்த அகதி ஒருவன் நாகாலாந்து
கல்லூரிப் பெண்ணை பலவந்தப்படுத்தி கெடுத்து விட்டான்
என்றும் அவனை போலீஸ் கைது செய்து
சிறையில் வைத்திருந்தாலும் –
அவனை வழக்கிலிருந்து தப்புவிக்க முயற்சிகள்
நடக்கின்றன என்றும் வதந்திகள் பரவுகின்றன.

நாகாலாந்தும் அஸ்ஸாமும் பக்கத்து-பக்கத்து மாநிலங்கள்.
ஏற்கெனவே அவர்களிடையே தீராப்பகை உண்டு.
இதில் அஸ்ஸாமிலிருந்து வந்த பங்களாதேஷ் அகதி
நாகாலாந்து மாணவியை கற்பழித்து விட்டானென்று
செய்திகள் பரவவும் – கடும் கோபம் கொண்ட நாகாலாந்து
மக்கள் சிறையை உடைத்து, அந்த கைதியை வெளியே
இழுத்து வந்து …..
மேற்கண்ட ட்ரீட்மெண்டை கொடுத்திருக்கிறார்கள்.

அஸ்ஸாம் குடிமகன் ஒருவனுக்கு – நாகாலாந்து மக்கள்
இழைத்த இந்த அநியாயத்தை ( ? ) எதிர்த்து –
அஸ்ஸாம் கட்சிகள் கொந்தளிக்கின்றன.
அஸ்ஸாம் முதலமைச்சர் நாகாலாந்து அரசைத்
தாக்கிப் பேசுகிறார்….சிபிஐ விசாரணை கேட்கிறார்……

வழக்கம்போல் – எதிர்க்கட்சிகள் கொந்தளிக்க –
பாராளுமன்றத்தில் அமளிகள் எழும்ப –

மத்திய அரசு – மாநில அரசிடம் விளக்கம் கேட்க –
மாநில அரசு விசாரணைக்கு ஏற்பாடு செய்ய …..
இப்படி …..போய்க்கொண்டிருக்கிறது வழக்கு.

நாம் இங்கு சில கேள்விகளை எழுப்ப விரும்புகிறோம் –

உலக அரங்கில் இன்று இந்தியா –
காமுகர்களைக் கொண்ட
ஒரு அரக்க தேசமாகச் சித்தரிக்கப்பட்டுள்ளது.
3 வயது குழந்தை முதல் 72 வயது முதிய பெண்மணி வரை
எவரையும் இந்த காமாந்தகாரர்கள் விட்டுவைப்பதில்லை.

125 கோடி மக்களைக் கொண்ட பெரும் தேசமாக இருந்தாலும்,
இதில் மிஞ்சி மிஞ்சிப் போனால் அரை சதவீதம் கூடத்தாண்டாத
அளவில் தான் இத்தகைய கொடூரர்கள் இருந்தாலும் –
நமக்குப் பெயர் என்னவோ – காம தேசம் தான்.

சேகரிக்கப்பட்டுள்ள புள்ளி விவரங்கள் தரும் தகவல் –

– இந்தியாவின் 28 மாநிலங்கள் மற்றும் 7 யூனியன்
பிரதேசங்களையும் சேர்த்து கடந்த 13 ஆண்டுகளில்
கூறப்பட்டுள்ள மொத்த கற்பழிப்பு புகார்களின்
எண்ணிக்கை – 2,72,844.
நாடு முழுவதும் சேர்த்துப் பார்த்தால் –
சராசரியாக ஒரு நாளைக்கு 57 கற்பழிப்பு சம்பவங்கள் –
அதாவது ஒவ்வொரு மணிக்குள்ளும் – 2 கற்பழிப்பு சம்பவங்கள்…

இந்த குற்றங்களைப் புரிந்தவர்களில் எத்தனை பேருக்கு
நாம் தண்டனை வாங்கித் தந்திருக்கிறோம்…?
2012-ல் நாட்டையே உலுக்கிய டெல்லி “நிர்பயா” வழக்கு
குற்றவாளி –
இன்னமும் நாம் கொடுக்கும் வரிப்பணத்தில்
3 வேளையும் ரொட்டி தின்று கொண்டு திகார் ஜெயிலில்
உலா வருகிறான். பிபிசி பெண்மணிகளுக்கு – ஜம்பமாக
வீடியோ பேட்டிகள் கொடுத்துக் கொண்டிருக்கிறான்.

இந்த கொடூர மனித மிருகங்கள் நம்மிடையே தான்
இன்னமும் உலவிக் கொண்டிருக்கின்றன.

இதை எல்லாம் பார்க்கும்போது – மானமுள்ள இந்தியன்
எவனுக்கும் ரத்தம் கொதிக்கத்தானே செய்யும் …?
இத்தகைய அவலம் ஏற்படக்காரணம் என்ன …?

தப்பு செய்தால் தண்டனை கிடைக்கும் என்கிற பயம்
இந்த நாட்டில் எந்த நாய்க்காவது இருக்கிறதா …?

அரசியல் செல்வாக்கோ, பண பலமோ இருந்தால் போதும்-
எத்தகைய குற்றங்களையும் துணிந்து செய்து விட்டு –
காலரைத் தூக்கி விட்டுக் கொண்டு சமூகத்தில் உலவி வர
இந்த மிருகங்களை நாம் அனுமதிக்கிறோம்….
நமது சட்டங்கள் அனுமதிக்கின்றன….

காண்ட்ராக்ட் கில்லர்ஸ் – கூலிப்படை ஆட்கள்
எப்போது வேண்டுமானாலும்,
எந்த ஊரில் வேண்டுமானாலும் – கிடைக்கிறார்கள்.
3 லட்சத்திலிருந்து 30 லட்சம் வரை கூலி கொடுத்தால் –
கொலைப்பட்டாளம் வந்து கொலை செய்துவிட்டுப் போகிறது….

எப்பேற்பட்ட குற்றம் செய்தவனையும், ஒரு எம்.எல்.ஏ.வோ –
மந்திரியோ – நினைத்தால், வெளியே கொண்டு வந்துவிட
முடிகிறது. 27 கொலைகள் செய்தவன் எல்லாம் ஜாமீனில்
வெளியே நம்மிடையே சுற்றுகிறான்.

இந்த நாட்டில் நல்லவர்கள் தான் பயப்பட வேண்டி இருக்கிறது.
நல்லவர்கள் தான் வெட்கித்தலை குனிய வேண்டியிருக்கிறது.

பொறுக்கிகளும், கொலைகாரர்களும் எந்தவித
பயமோ, வெட்கமோ இல்லாமல் சமூகத்தில் நடமாடுகிறார்கள்.
செல்வாக்கோடு, திமிராகத் திரிகிறார்கள்.

இஸ்லாமிய நாடுகளைப் போல் – கடுமையான சட்டங்களை
கொண்டு வந்தால் இந்த நிலை இங்கு இருக்குமா …?

எதற்காக மூன்று அப்பீல் ….?
முதல் நிலையிலேயே மூன்று ஜட்ஜுகளை வைத்து
தீர்ப்பு கொடுத்தால் …?
இதற்காக ஏன் சட்டவிதிகளை உருவாக்கக் கூடாது….?

பிடிபட்ட குற்றவாளிகளுக்கு உடனடியாக தண்டனை –
கடும் தண்டனை – அதுவும் பொதுமக்கள் முன்னால் –
முச்சந்தியில் நிறுத்திவைத்து சவுக்கால் அடித்து
தண்டனையை நிறைவேற்றினால் –
இந்த அளவு குற்றங்கள் நிகழுமா …?
குற்றவாளிகள் தான் பெருகுவார்களா …?

குற்றங்கள் நிகழ்ந்தால் –
அதைப் பதிவு செய்வதே பெரும்பாடு.
பதிவு செய்து விட்டாலும், துப்பு துலக்கி,
குற்றவாளிகளைக் கைது செய்வது அதிலும் பெரும்பாடு.

கைது செய்யப்பட்ட குற்றவாளிகள் தப்பித்துப் போகாமலும்,
ஜாமீனில் வெளிவந்து விடாமலும் பாதுகாப்பது
அதை விடப் பெரும்பாடு.
அரசியல்வாதிகளின், பணமுதலைகளின் செல்வாக்கையும் மீறி –
அவர்கள் மீது வழக்குகள் தொடர்வது அதிலும் பெரும்பாடு.

இத்தனையும் முடிந்து வழக்கில் தீர்ப்பு வரவே
எத்தனையோ ஆண்டுகள் ஆகி விடுகின்றன.
தப்பித்தவறி தண்டனை கிடைத்து விட்டால் –
அப்பீலுக்கு மேல் அப்பீல்…. மூன்று அப்பீல்கள்…!
வழக்கு முடிவதற்குள் குற்றவாளி சுகமாக –
முழுவாழ்வயும் வாழ்ந்து முடித்து விடுவான்.

இந்த நிலை, இத்தகைய நீக்குபோக்கான சட்டங்கள் –
அரசியல்வாதிகளின், பணக்காரர்களின் – தலையீடுகள் –
அநியாய காலதாமதம் –

இவையெல்லாம் தானே நாகாலாந்து – மக்கள்
சட்டத்தை கையில் எடுத்துக் கொண்டு –
தாங்களே குற்றவாளியை தண்டிக்கக் காரணம்….?

குற்றவாளிகள் நிச்சயம் பிடிக்கப்படுவார்கள்.
அவர்களுக்கு தண்டனை நிச்சயம் கிடைக்கும்….
அது மிகக் கடுமையானதாக இருக்கும் ….
அதில் யாராலும் குறுக்கிட முடியாது – என்கிற நம்பிக்கை
மக்களுக்கு இருந்தால் –
நாகாலாந்து சம்பவங்கள் நாட்டில் ஏன் நிகழ்கின்றன ….?

இப்போது நாகாலாந்து பெண்கள் நிம்மதியாக இருக்கலாம்.
குறைந்தது அடுத்த 6 மாதங்களுக்காவது –
இந்த சம்பவம் நினைவில் இருக்கும் வரையிலாவது –
அங்கு கற்பழிப்பு சம்பவங்கள் நடைபெறாது…

கையாலாகாத அரசாங்கங்களால்,
ஓட்டைகள் நிறைந்த சட்ட முறைகளால் –
தங்களைப் பாதுகாக்க முடியாது
என்பதை உணர்ந்து கொண்டு –

தங்கள் பாதுகாப்பை தாங்களே உறுதி செய்து கொண்ட
அவர்களைக் குறை சொல்வதில் –
குற்றம் காண்பதில் நியாயம் இருக்கிறதா ….?

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

12 Responses to தீமாபுர் – கற்பழிப்பு ஆசாமியை அடித்தே கொன்றது சரியா …. ? தவறா ….?

 1. thenali சொல்கிறார்:

  //இஸ்லாமிய நாடுகளைப் போல் – கடுமையான சட்டங்களை
  கொண்டு வந்தால் இந்த நிலை இங்கு இருக்குமா …?//

  இசுலாமிய ஷரியாப்படி புகார் கொடுத்த பெண்ணும் விபச்சாரத்தில் ஈடுபட்டார் என குற்றம் சாட்டி தண்டனை கொடுத்தால், அதுவும் சில சமயம் ரேப்பிஸ்டை விட அதிக தண்டனை கொடுத்துடோம்ன்னு வைச்சுக்கங்க ஒருத்தரும் புகார் கொடுக்க வர மாட்டங்க.

  அப்படியே புகார் கொடுத்தாலும், சவுதி மாதிரியே “டிஎன்ஏ டெஸ்டெல்லாம் ஒத்துக்க மாட்டோம், 4 பேரை சாட்சியா கூட்டியா, இல்ல முடியாதுன்ன ரேப்பே நடக்கல”ன்னு தீர்ப்பு சொல்லிட்டா போதும்… ரேப்பு கொறஞ்சிடும்.!

  http://en.wikipedia.org/wiki/Rape_in_Saudi_Arabia#cite_note-AP-2

  • Ramachandran. R. சொல்கிறார்:

   திரு தெனாலி,

   உங்களுக்கு நேர்வழியில் யோசிக்கவே தெரியாதா ?

   இஸ்லாமிய நாடுகளில் பொதுவாக குற்றங்களை கண்டுபிடிப்பதிலும், குற்றவாளிகளை தண்டிப்பதிலும்,
   அவர்கள் காட்டும் வேகத்தையும், கடுமையையும், வெளிப்படைத்தன்மையையும்,
   அதன் மூலம் சமூகத்தில் தவறு செய்பவர்களுக்கு ஏற்படக்கூடிய பய உணர்வுகளைப் பற்றியும் தான் கே.எம்.சார் இங்கு கூறுகிறார்.
   பெண்களுக்கு இன்னும்
   அதிக பாதுகாப்பு கொடுப்பது பற்றி அவர் கூறும்போது,
   அதற்கு நேரெதிரான கருத்துக்களை நீங்கள் உதாரணம் காட்டுகிறீர்களே. கொஞ்சம் விசாலமாக யோசியுங்களேன்.
   சமூகத்திற்கு நல்லது செய்ய வேண்டும் என்கிற அக்கறையோடு செயல்படுபவர்களை இப்படி திசை திருப்புவதை
   உங்கள் மனசாட்சி ஏற்கிறதா ?

   • thenali சொல்கிறார்:

    அவரின் நோக்கத்தை யாரும் குறை சொல்ல வில்லை. அவரு சொன்னதை படித்ததும் – சில பெரிசுகள் ஏதாவது பிரச்சனை என்றால் உடனே பிரிட்டீஷ்காரனே இருந்திருக்கலாம், அவன் இருந்த போது… என்று ஆரம்பிப்பார்கள்- அதுதான் ஞாபகம் வந்தது. இசுலாமிய நாடுகளைப் போல சட்டம் என்பது தீர்வு அல்ல என்பதுதான் நான் சுட்டிக்காட்ட விரும்பியது. மற்றபடி மக்கள் செய்த வன்முறைக்கு முக்கிய காரணம், நமது அரசு இயந்திரங்களின் குறைபாடுதான் என்பது உண்மைதான்.

    தமிழ்நாட்டில் ஒரு பெண் போலீஸ் ஸ்டேஷனுக்கு தனியாக போகமுடியாத வெட்ககேடுதான் இன்னமும் இருக்கிறது. பெண் போலிஸிடம் தவறாக பேசிய உதவி கமிஷனருக்கு தண்டனை டிரான்ஸ்பராம். அதே தண்டனைதான் அந்த பாதிக்கப்பட்ட பெண்ணுக்குமாம் ஒருவேளை அம்மா ஏற்கனவே இசுலாமிய சட்டங்களை அமுல்படுத்த ஆரம்பித்து விட்டாரே??

 2. கந்தசாமி சொல்கிறார்:

  இந்த சம்பவம் வேறு மானிலத்தை சேர்ந்தவன் என்பதனால் மட்டுமே நடந்தது.

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   நண்பர் கந்தசாமி,

   வேறு மாநிலத்தைச் சேர்ந்தவன் என்பதால் மட்டுமே
   நடந்தது என்று நீங்கள் கூறுவது சரியில்லை.

   பல காரணங்களில், அதுவும் ஒன்று… அவ்வளவு தான்.

   மற்ற காரணங்கள் என்ன ….?
   சிந்தியுங்களேன்….!!!

   -வாழ்த்துக்களுடன்,
   காவிரிமைந்தன்

 3. Sharron சொல்கிறார்:

  What they have done is right.Our government will not take anything serious.Otherwise Karunanithi & Dhayanithi would not have come to the street to protest.They didn’t get the punishment at the right time.That’s why they are still cheating the people.

 4. Common Man சொல்கிறார்:

  Hello KM Sir,

  I really respect you a lot and admire your posts on various issues.

  I do read your posts a lot but I haven’t posted any comments so far. I really feel amaze to see such a enthusiasm and care about our society. Many of us may have same type of feelings, but how many of us express it and that too in a manner like yours. May Almighty give you more strength.

  Regarding this post, is that rape charge got proven??? If Yes, then people who gave this punishment will do the same for every rape happened in Nagaland. Punishments should be very harsh, but I don’t agree the way things unfolded in this event. People who involved in this punishment act should do their own soul searching and question themselves, that if they will do the same if anyone among them would have done this.

  We Indians are being divided more and more based on religion, language, state, caste, etc., this type of acts will create more gaps.

  Common Man

 5. ssk சொல்கிறார்:

  சட்டம் நிரபராதி தண்டிக்க பட கூடாது என்று சொல்வதால் மிகவும் தீர ஆராய வேண்டியுள்ளது.
  இதற்குள் சாட்சியம், பல்டி சாட்சி, வாதாடுபவர் திறமை, போலிசின் திறமை, பண பலம்,நேர விரயம் இதை எல்லாம் கடந்து வந்தாலும், நீதி சிரமமே. நீதிபதிக்கு குடும்பம், மதம் ,பயம்,பலவீனம் எல்லாம் உண்டு. அவர் சரியாக எழுதினாலும் மேல் கோர்ட்டில் வேறு தீர்ப்பு பெற முடிகிறது. நீதிபதிகளே பல விதமான அரசியல் கடந்து அந்த பதவியை பெறுகின்றனர். இவ்வாறு இருக்கும் போது
  நீதி எப்படி கிடைக்கும். அரசியல் குறுக்கீடு இல்லாமல் வேறு இருக்க வேண்டும்.

  திருடியவரை திருப்பி கொடுத்து விட்டு போகலாம் என்று தீர்ப்பு எழுத படுகிறது. இது சரி என்றும்,தவறு என்றும் வாதிட பெரும் திரளான மக்கள் உண்டு இரு தரப்பிலும். இது அவரவர் மன விருப்பப்படியே. எது உண்மை என்று ஆராய்ந்து அல்ல. ஆக யார் அதிகம் பண பலம், கூச்சல், போடுகிறார்களோ அவர்கள் சரியா ?

  நீதி என்பது எது? மக்களால் செய்ய பட்ட அரசு எழுதி வைத்ததே நீதி. இந்த சட்ட முறை மாற்ற வேண்டுமானால் மக்கள் தங்களுக்கு தகுந்த சட்ட முறையை அரசிடம் சொல்லி மாற்றி கொள்ளலாம். இங்குள்ள சட்ட முறை ஒன்றும் சுயம்பு வாக வந்ததல்ல. மாற்ற முடியாத புனிதமும் அல்ல. அது மாறக்கூடியது மக்கள் தேவைக்கு ஏற்ப.

  மாட்டின் மேல் காட்டப்படும் நேயம் மனிதன் மேலும் காட்டப்பட வேண்டும். மனித நேயம் பெருக இத்தகைய செயல்கள் மாறும். தண்டனை விரைவு நீதி மன்றத்தில் குறுகிய காலத்தில் தரப்பட நீதி மேல் நம்பிக்கை வரும்.
  நாடு நலம் பெரும்.

 6. சு சு சொல்கிறார்:

  கடைசி வரை பரீத் கான் நல்லவரா கெட்டவரா-nu சொல்லவில்லை. நீங்களாவது சொல்லுங்க சார்!

  மக்களுக்கு போலீஸ் மேலயும் நம்பிக்கை இல்லை, கோர்ட் மேலயம் நம்பிக்கை இல்லை. இப்ப நடக்கறத பார்த்தா எந்த ஆம்பளை மேலயம் நாடுக்கு நம்பிக்கை இல்லை!

  – சு சு

 7. srinivasanmurugesan சொல்கிறார்:

  தனி மனிதன் கொன்றால் கொலை… அதையே கூட்டமாக செய்தால் கலவரம்/புரட்சி. இதுதான் உலக நீதி/நியதி…..

 8. M. Syed சொல்கிறார்:

  K. M. அய்யா !

  விரிவான அலசல். நாட்டின் நிலைமையை பற்றிய தங்களுடைய கவலை புரிகிறது. இஸ்லாமிய நாட்டைப்போல சட்டங்கள் கடுமையாக்கப் படவேண்டும் என்று தாங்கள் சொன்னால் அதற்கும் குறை சொல்லிக்கொண்டு வருவார்கள் சில பேர்கள். இஸ்லாமிய நாடுகளில் குற்றமே நடக்கவில்லை என்று யாரும் நினைக்க வேண்டாம் . ஆனால் மிகவும் கம்மி குற்றம் செய்தால் கண்டிப்பாக தண்டனை விரைவில்கிடைக்கும் என்ற பயமே பாதி பேரை குற்றம் செய்ய துண்டுவதில்லை இது யதார்த்தம். அபுதாபியில் தற்போது நடந்த அமெரிக்க பெண் கொலை மற்றும் Exchance. கொள்ளை முயற்சி குற்றவாளி உடனே கைது. இங்கு துபையில் குடும்பத்துடன் வாழ்பவர்களிடம் கேட்டால் சொல்லுவார்கள் (நாடு, மதம், இனம் கடந்து) அனைவரும் பாதுகாப்பாக இருப்பதாக. இது ஏன் நமது நாட்டில் முடிவதில்லை யோசித்தோமா நாம் ? முதலாவது அரசியல் செல்வாக்கு, பணபலம், பக்கசார்பு மற்றும் அரசாங்க அதிகாரிகள் பாரபட்ச நடவடிக்கைகள் எல்லாம் சேர்ந்து நமது நாட்டை நாசமாக்குகின்றது அரசாங்க அதிகாரிகள் மனபாவம் முதலில் மாறவேண்டும் அப்போது தான் மக்களை மாற்றமுடியும். அனைவரும் முயற்சிப்போம்.

  குறிப்பு : இதை சொல்லுவதனால் நீ முஸ்லிம் இஸ்லாமிய நாட்டுக்கு ஆதரவாக எழுதுவதாக தயவுசெய்து யாரும் குறைசொல்லவேண்டாம்.

  M. Syed,
  துபாய்

 9. இ.பு.ஞானப்பிரகாசன் சொல்கிறார்:

  இந்த நிகழ்ச்சிக்குத் தாங்கள் இப்படியொரு தீர்ப்புக் கொடுப்பீர்கள் என்று நான் சற்றும் எதிர்பார்க்கவில்லை காவிரிமைந்தன் ஐயா!

  தண்டனைகள் கடுமையானால் குற்றங்கள் குறையும் என்கிற எசு.ஏ.சந்திரசேகர் காலக் கோட்பாட்டை மேதையான தாங்கள் நம்புவது எனக்கு வியப்பாக இருக்கிறது.

  எனக்கும் மணமாகாத தங்கைகள் இருக்கிறார்கள். நாட்டில் நடக்கும் பாலியல் கொடுமைகளைப் பார்க்கும்பொழுது மனச்சான்றுள்ள மனிதன் எனும் முறையில் என் குருதியும் கொப்பளிக்கத்தான் செய்கிறது. ஆனால், அதற்காக இப்படியொரு கொடூரத் தண்டனையை ஒருவனுக்கு வழங்குவதை என்னால் ஏற்க முடியாது. அவன் அந்த இழிவான குற்றத்தைச் செய்தே இருந்தாலும், செய்துவிட்டுப் பாதிக்கப்பட்ட பெண்ணுக்குப் பணம் கொடுக்கும் அளவுக்கு அவன் திமிர் பிடித்த விலங்காகவே இருந்தாலும் அவனுக்குப் போட்டியான விலங்குத்தனத்துடன் நாமும் நடந்து கொள்வது எந்த வகையிலும் முறையில்லை.

  அது மட்டுமில்லை, தாங்கள் கூறுகிறபடி கடுமையான சட்டங்கள் வந்தாலும், தாங்களே இந்தக் கட்டுரையில் கூறியுள்ளபடி, செல்வமும் செல்வாக்கும் இருந்தால் யார் வேண்டுமானாலும் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்கிற நிலைமை உள்ள இந்த நாட்டில், அத்தகைய சட்டங்கள் குற்றவாளியைத் தப்பவிட்டு, அவனுக்குப் பதிலாகப் பணம் வாங்கிக் கொண்டு அந்தத் தண்டனையை ஏற்க வருபவனைப் பாதிக்கவே பயன்படும். காரணம், பணத்துக்காக என்ன வேண்டுமானாலும் செய்யக்கூடியவர்கள் ஏழைகளிலும் இருக்கிறார்கள் இந்த நாட்டில். தாங்கள் கூறுகிறபடி அத்தகைய கொடும் தண்டனைகள் வழங்கப்பட்டாலும், கொழுப்பெடுத்த பணக்காரக் குற்றவாளியிடம் தன் குடும்பத்தின் வறுமையைப் போக்கும் அளவுக்கு, வாழ்நாள் முழுவதும் தன் குடும்பத்தினர் நன்றாக வாழும் அளவுக்குப் பணத்தைப் பெற்றுத் தந்துவிட்டு அந்தக் கொடிய தண்டனையை ஏற்றுக்கொள்ளப் பலர் ஆயத்தமாகத்தான் இருப்பார்கள். ஏற்கெனவே, தூக்குத் தண்டனை விதயத்தில் நாடு முழுக்க அதுதான் நடக்கிறது என்கிறார்கள் களப் பணியாளர்கள்.

  எனவே, குற்றங்கள் குறைய ஒரே வழி! நல்லதொரு சமுதாயத்தை உருவாக்குவது மட்டுமே!

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.