( பகுதி-3 குஜராத்திலிருந்து கிளம்பிய ..) அவர்கள் மட்டுமென்ன வானத்திலிருந்தா குதித்து வந்தார்கள் …?

ketan-desai-mci (1)

கேத்தன் தேசாய் கைது விவரம் வெளிவந்ததையொட்டி,
துவக்கத்தில் ஏகப்பட்ட பரபரப்பான செய்திகள் வெளிவந்தன –

சிபிஐ மேற்கொண்ட அதிரடி ( !-? ) விசாரணை நடவடிக்கைகளில்,
டாக்டர் கேத்தன் தேசாய்க்கு ஏகப்பட்ட பெரிய பெரிய
பங்களாக்களும், கணக்கிலடங்காத அளவிற்கு தங்க நகைகளும்,
பினாமி பெயர்களில் சொத்துக்களும் –
இருப்பது தெரிய வந்ததாகவும், குஜராத்தில் காந்தி நகர்,
அஹமதாபாத் மற்றும் சில ஊர்களில் 10 வீடுகள்
இருப்பதாகவும் தகவல்கள் வெளியாயின.

கேத்தன் தேசாய் கைதானவுடன் முதலில் வெளிவந்த
பத்திரிகைத் தகவல்களின்படி –
1800 கோடி ரூபாய் ரொக்கமாகவும்,
1500 கிலோ தங்கமும்
கேத்தன் தேசாயின் இருப்பிடங்களிலிருந்து
கண்டுபிடிக்கப்பட்டதாகத் செய்திகள் வெளியாயின.
சிபிஐ இவற்றை லாரி லாரியாக கொண்டு சென்றதாகத்
தகவல்கள் வெளியாயின.

ஆனால் இரண்டு நாட்களுக்குள் நிலைமை முற்றிலும்
மாறி விட்டது. மீடியாக்கள் அடங்கி விட்டன.
இந்தியாவில் இத்தனை எதிர்க்கட்சிகள் இருந்தும் –
எவையும் இதை சீரியஸாக எடுத்துக் கொள்ளவில்லை.
(காரணம் தான் நமக்குத் தெரியுமே…..!!! )

சில செய்தித்தளங்கள் விவகாரமான செய்திகளை எல்லாம்
வெளியிட்டன. – ஆனால் 24 மணி நேரத்திற்குள் இந்த
தகவல்களும் அழிக்கப்பட்டு விட்டன. ஆனால் யாரோ ஒரு
புத்திசாலி கூகுள்ஷாட் எடுத்து வைத்திருந்ததை பிற்பாடு
வெளியிட்டார்..! அது தான் அப்போதைய செய்திகளுக்கு
ஒரே சாட்சி …!!!

kethan-desai-googleshot

அதன் பின்னர் வெளிவந்த (அடக்கி வாசிக்கப்பட்ட)
பத்திரிகைத் தகவல்கள் கீழே –

தேசாயின் வீட்டிலிருந்து 1.5 கிலோ தங்கமும்,
80 கிலோ வெள்ளியும் கைப்பற்றப்பட்டது.
அவருக்கு நிறைய வங்கிக் கணக்குகள்
இருப்பதும் கண்டு பிடிக்கப்பட்டிருக்கிறது.

அஹமதாபாத் நகரில் வங்கி லாக்கர்களை சோதித்ததில் –
30 லட்சம் பெறுமானமுள்ள தங்க நகைகளும்,
ஏராளமான சொத்து பத்திரங்களும், ரியல் எஸ்டேட்
முதலீடாக ரூபாய் 20 லட்சத்திற்கு மேல் இருப்பதும்,
ஒரு ஷாப்பின் மாலில் பங்குதாரராக இருப்பதும் தெரிய
வந்திருக்கிறது. அதைத்தவிர அவர் மனைவி ஒரு
நகைத்தயாரிப்பு கம்பெனியில் நிர்வாகிகளில் ஒருவராக
இருப்பதும் தெரிய வந்திருக்கிறது.

கைது செய்யப்பட்ட கேத்தன் தேசாய் கோர்ட் அனுமதியுடன்
சிபிஐ கஸ்டடியில் 5 நாட்களுக்கு விசாரணைக்காக
எடுக்கப்பட்டிருக்கிறார் !

அப்போதைய மத்திய சுகாதார அமைச்சர் –
திரு குலாம் நபி ஆசாத் ( காங்கிரஸ் ) சொல்கிறார் –
“இந்திய மருத்துவ கவுன்சில்” சுதந்திரமானது…
மத்திய அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் அது இல்லை….!

ஆனால், கேதன் தேசாய் கைதைத் தொடர்ந்து,
மே 15,2010-ல் மத்திய அரசு இந்திய மருத்துவ கவுன்சிலைக்
கலைத்து விட்டு, அதன் செயல்களை நிறைவேற்ற –
தற்காலிகமாக ஒரு புதிய நிர்வாகக் குழுவை
நியமித்தது.

டாக்டர் குணால் சாஹா என்பவர் கொடுத்த புகாரின் பேரில்
கேத்தன் தேசாயின் மருத்துவ லைசென்ஸ் பறிக்கப்பட்டு,
அவர் மருத்துவ சேவை செய்வதற்கு அகில இந்திய
மருத்துவ கவுன்சிலால் தற்காலிகத் தடை
விதிக்கப்படுகிறது !

இவரிடம் இவ்வளவு பணம் இருந்திருக்க முடியுமா ?
–ஒருவர் எப்படி இவ்வளவு கோடிகள் சம்பாதித்திருக்க
முடியும் ? – என்றெல்லாம் கேள்விகளை எழுப்பப்பட்டு –
அதற்கு பதிலாக ஒரு பத்திரிகை விவரமாக சில விஷயங்கள்
கூறி இருக்கிறது. அதிலிருந்து ஒரு பகுதி –

இந்த ஆசாமி இந்திய மருத்துவ கவுன்சிலின் தலைவராக
இருந்த காலத்தில் (சுமார் 13 ஆண்டுகள் !!)
– இந்தியா முழுவதும் சுமார் 200 தனியார்
மருத்துவக் கல்லூரிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.

ஒரு கல்லூரியைத் துவக்க அனுமதி கொடுக்க தோராயமாக
30-35 கோடி ரூபாய் வரை வசூலிக்கப்பட்டது என்று
வைத்துக்கொண்டால் – குத்து மதிப்பாக எவ்வளவு பணம்
சேர்ந்திருக்கும் என்பதை கணக்கிட்டு கொள்ளலாம்….

அதுமட்டுமல்ல… ஒவ்வோர் ஆண்டும் இந்தியாவில்
உள்ள தனியார் மருத்துவக் கல்லூரிகள் ஒவ்வொன்றும்
தலா ஐந்து சீட்களை அய்யா கோட்டாவில் சேர்க்க வேண்டும்.

அந்த சீட்டுகள் ஒவ்வொன்றும் 25 லட்சத்தில் இருந்து
30 லட்சம் வரை விலை போயிருக்க வாய்ப்பு இருந்தது.
ஒவ்வொரு கல்லூரியிலும் ஒரு ஆண்டுக்கு ஐந்து சீட்கள்
என்றால், வருடத்துக்கு 200 தனியார் மருத்துவ கல்லூரிகளிலிருந்து
சுமார் ஆயிரம் சீட்கள் இவரது கோட்டாவுக்கு வருகிறது.

ஒவ்வொரு சீட்டுக்கும் முப்பது லட்சம் ரூபாய் என்கிற
வகையில், ஆயிரம் சீட்களுக்கு 300 கோடி ரூபாய்.
ஒரு வருடத்தில் 300 கோடி ரூபாய் என்றால்,
பதவியில் இருந்த 13 ஆண்டுகளுக்கு கணக்குப்
போட்டுக்கொள்ளலாம்.
இந்த நிலையில் – 1,800 கோடி ரூபாயும்,
1,500 கிலோ தங்கமும் நடைமுறை சாத்தியம் தானே ?

மத்தியில் எந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்தாலும் கேத்தான்
தேசாய் பதவிக்கு எந்தப் பங்கமும் வராது.
( இப்போதே பார்த்துக்கொண்டு தானே இருக்கிறோம்…!!! )

ஏனென்றால், அனைத்துக் கட்சித் தலைவர்கள் மற்றும்
அமைச்சர்களுக்கு மெடிக்கல் கல்லூரியில் இடம் ஒதுக்கிக்
கொடுப்பது, அவர்கள் நடத்தும் கல்லூரிகளுக்கு
சத்தமில்லாமல் அனுமதி வழங்குவது, இத்தகைய தேவைகள்
இல்லாத தலைவர்களுக்கு – கோடிகளில் கொடுப்பது
என்று எல்லாரையும் கையில் போட்டுக்கொள்வதில்
கெட்டிக்காரர் இந்த ஆசாமி..

இவரது செல்வாக்கிற்கு ஒரு உதாரணம் –

1997-ம் ஆண்டு தேவகௌடா பிரதமராக இருந்தபோது
நிகழ்ந்தது. அப்போது, அவருக்கு வேண்டப்பட்ட ஆசாமி
ஒருவரால் கர்நாடாகாவில் அமைக்க​ப்பட்ட
ஒரு தனியார் மருத்துவக் கல்லூரிக்கு அய்யா அனுமதி
கொடுக்க மறுத்துவிட்டார். பின்னர், அதற்காக அன்றைய
பிரதமர் தேவகௌடா, இவர் வீட்டுக்கே சென்று
கேட்டுக்கொண்ட பிறகு அனுமதி கிடைத்தது.

நாட்டின் பிரதமரையே வீட்டுக்கு வரவழைக்கும் அளவிற்கு
கையில் அதிகாரம் இருந்த ஆசாமி இவர்….!!

இந்த நிலையில் இருந்தவரைத்தான் , 2010-ம் ஆண்டு
பாட்டியாலா மருத்துவக் கல்லூரிக்கு
இரண்டு கோடி ரூபாய் லஞ்சம் வாங்கியதாக
சி.பி.ஐ. பொறிவைத்துப் பிடித்தது.
இந்த விவகாரத்தில் கேத்தன் தேசாய் மீது 19 வழக்குகள்
பதிவு​செய்யப்பட்டன.

ஆனால் ……..

மத்தியில் ஆளும் காங்கிரஸ் கட்சித்தலைமை,
மத்திய சுகாதார அமைச்சர் ஆகியோரிடையே
இந்த ஆசாமிக்கு எவ்வளவு செல்வாக்கு இருந்தது
என்பதைப் புரிந்து கொள்ளாமல் –
அதிரடியாக, தான் ஆட்டத்தை துவக்கியது தவறு என்பதை
விரைவிலேயே உணர்ந்து கொண்டது சிபிஐ.

கேத்தன் கைது செய்யப்பட்ட 3 நாட்களுக்குள்ளாகவே
அப்போதைய மத்திய சுகாதார அமைச்சர் குலாம் நபி ஆசாத்
குழு ஒன்றினை அமைத்து, கேத்தன் அனுமதி கொடுக்கவிருந்த
அந்த குறிப்பிட்ட மருத்துவக் கல்லூரி பற்றிய விவரங்களை
ஆராய்ந்து ஒரு ரிப்போர்ட் கொடுக்கச் சொல்லி இருக்கிறார்.

அந்த கமிட்டியும் உடனடியாக ஆராய்ந்து – 4 நாட்களுக்கும்
உள்ளாகவே அமைச்சரிடம் தன் அறிக்கையை கொடுத்து
விட்டது.

அந்த அறிக்கையின்படி – அந்த மருத்துவ கல்லூரியில்
பெரிய குறைபாடுகள் எதுவும் இல்லை. விதிமுறைகளின்படி,
ஒரு ஆடிட்டோரியம் கட்டப்பட வேண்டியது மட்டும் தான்
பாக்கி. அதற்கும் அவசரம் ஏதுமில்லை..!
அந்த ஆடிட்டோரியம் முதல் பேட்ச் மாணவர்கள்
5வது வருட படிப்பிற்கு போவதற்குள் கட்டினால்
போதுமானது என்று கமிட்டியே கூறி விட்டது !

அந்த மருத்துவக் கல்லூரிக்கு அனுமதி (recognition )
கொடுப்பதில் எந்த விதிமுறை மீறலும் இல்லை என்பது
கமிட்டியின் முக்கியமான தீர்ப்பு …!!
அதை அடிப்படையாகக் கொண்டு,
அந்த மருத்துவக் கல்லூரிக்கு இயங்க அனுமதியும்
உடனடியாகக் கொடுக்க அமைச்சர் உத்திரவிட்டு விட்டார்.

இந்த ரிப்போர்ட்டின் நகல் சுகாதார அமைச்சகத்தால்,
சிபிஐ க்கும் கொடுக்கப்பட்டது.
இதன் மறைமுக அர்த்தம் –
கல்லூரிக்கு அனுமதி வழங்கியதில்
முறைகேடுகள் ஏதும் இல்லை என்பது மத்தியஅரசால் –
சுகாதாரத்துறை அமைச்சரால் – சிபிஐ க்கு கூறப்படுகிறது !

என்ன செய்யும் சிபிஐ … ?
அவர்கள் மட்டுமென்ன வானத்தில் இருந்து குதித்தவர்களா …?
அவர்களும் மனிதர்கள் தானே …?

(அடுத்த பகுதியில் – தொடர்கிறது )

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

11 Responses to ( பகுதி-3 குஜராத்திலிருந்து கிளம்பிய ..) அவர்கள் மட்டுமென்ன வானத்திலிருந்தா குதித்து வந்தார்கள் …?

 1. ஜோதிஜி திருப்பூர் சொல்கிறார்:

  போன மாதத்தில் கூட மும்பையில் ஒரே இடத்தில் 13 000 கோடி வருமானவரித்துறை கைப்பற்றினார்கள். ஊடகத்தில் பெரிய பரபரப்பு இல்லையே?

 2. Ganpat சொல்கிறார்:

  நண்பர் கா.மை அவர்களுக்கு,
  நான் எப்போவும் எழுப்பும் கேள்வியை இப்போவும் கேட்கிறேன்.
  நம் நாட்டில் ஒரு அரசியல்வாதி தண்டிக்கப்பட வேண்டும் என்றால் அவன் என்ன குற்றம் செய்திருக்க வேண்டும்.??
  நண்பரே! நீங்கள் இவ்வளவு முயற்சியும் சிரமமும் பட தேவையில்லை.நம் நாடு ஒரு குடியரசு.ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை குடிமக்கள் ஓட்டளித்து தங்கள் அரசை தேர்ந்தெடுக்கிறார்கள்.நீங்கள் கட்டுரையில் எழுதியுள்ள ஒரு வார்த்தை ஏன்,ஒரு எழுத்து கூட நாட்டில் உள்ள 70% வாக்காளர்களுக்கு புரியாது.இதுவே இந்த அயோக்கியர்களின் பலம்.We have a very long way to go Sir! Please do not strain yourself too much.My humble request to you.
  Kind regards,
  Ganpat

  • புது வசந்தம் சொல்கிறார்:

   உண்மைதான், ஆனாலும் ஒரு எதிர்பார்ப்பு ? மாறி விடாதா என ? இப்படித்தான் சில மாதங்களுக்கு முன்னர் ஒரு சாமியார் பிடிபட்டார் , ஒரு போர்க்களம் போல ? என்ன ஆச்சு ? வெறும் தலைப்பு செய்தியாக சில நாட்கள் மட்டும்…

 3. today.and.me சொல்கிறார்:

  கா.மை.ஜி,

  உங்கள் படிப்பறிவும், பட்டனுபவமும், மொழி வளமும் இந்தத் தலைமுறை வாக்காளர்களுக்கும் அடுத்ததலைமுறை வாக்காளர்களுக்கும் நிச்சயமாகக் கொண்டுசெல்லப்படவேண்டியவையே. முக்கியமாக, தமிழைமட்டும் அறிந்துள்ள மக்களுக்கு, தமிழ் ஊடகங்களால் சொல்லப்படாத, மறைக்கப்பட்ட செய்திகள் இவை.

  ஊடகங்களின் முக்கியப்பணியே அறிவித்தலும், அறிவுறுத்தலும், அநீதியை மக்களுக்கு வெளிப்படுத்தலும், மக்களும் ஆட்சியாளர்களும் செய்யும் தவறுகளைத் திருத்துதலும், நல்லமுறையில் மக்களுக்கும் ஆட்சியாளர்களுக்கும் ஆலோசனை வழங்குதலும்தான்.

  ஆனால் இவை எல்லாவற்றையும் விட்டுவிட்டு மக்களை ஒரு போதையான போலியான மகிழ்ச்சிக்குள்ளாகத் தள்ளி அவர்கள் கவனத்தைத் திசைதிருப்பிவிட்டுவிட்டு அதிகார/பணபலம் உள்ளவர்களுக்கு மட்டுமாக ஊடகங்கள் தற்போது துணைபோகின்றன.

  பல ஊடகங்கள் தங்களுக்கு வசதியானவற்றையும், சில தங்களுக்கு அனுமதிக்கப்பட்டவற்றையும் மட்டுமே எழுதிவரும்போது அவைதாம் உண்மை என நம்பி ஓட்டுப்போடும் மக்களில் சிறு சதவீதத்தினரையாவது விமரிசனம் எழுத்துக்கள் சென்றடையுமானால் அது வெற்றிதான்.

  நீங்கள் ஊதுகிற சங்கை இருக்கிற பலத்தோடு ஊதிவிடுங்கள். அது மக்களின் விழிப்புக்கான சங்குச்சத்தமாக இருக்கட்டும் அல்லது ஊழல்வாதிகளின் இறுதியாத்திரைக்கான சங்குச்சத்தமாக இருக்கட்டும்.

  இன்றில்லாவிட்டாலும் நாளையாவது மாறும் அல்லவா?

 4. drkgp சொல்கிறார்:

  The media is run by the powerful and the media is for the powerful .
  Hence none of these scandals by the powerful will be blown
  by the mass media.
  Even if a minuscule percentage of the population is informed by
  our blog, that will be a success worth the strain by KMji.
  So let the siren go on ringing, still louder.

 5. yogeswaran சொல்கிறார்:

  dear sir,

  Majority of the media do not perform the duties expected from them.

  they are a ‘ KEPT PRESS’.

  during the lankan crisis i heard 90 % of the chennai media was brought under the control.

  masses should awake.

  best wishes to you sir.

  yogi

 6. ssk சொல்கிறார்:

  புலனாய்வு பத்திரிகைகள் எங்கே போய் விட்டன. இவ்வளவு பெரிய பெரிய ஊழல் செய்தும் தப்புவது எப்படி.

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   நண்பர் ssk,

   இது முற்றிலும் ஊழல் சம்பந்தப்பட்ட பிரச்சினை.
   ஊழல் ஜாதி, மதங்களுக்கு எல்லாம் அப்பாற்பட்டது.

   மேலும், ஜாதி, மத உணர்வுகளை விவாதிப்பதற்கான
   தளம் இது அல்ல என்பதை ஏற்கெனவே பலமுறை
   நான் சொல்லி இருக்கிறேன்.
   எனவே உங்கள் மறுமொழியில்
   சில பகுதிகளை நீக்கி இருக்கிறேன்.
   தயவு செய்து அத்தகைய கருத்துக்களை மீண்டும் இங்கு
   விவாதத்திற்கு கொண்டு வராதீர்கள்.

   -வாழ்த்துக்களுடன்,
   காவிரிமைந்தன்

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.