ஜெயகாந்தன் – சில நினைவுகள் ….

jk-2

எனக்கு, சம்பிரதாயமாக இந்த மறைவிற்கு வருத்தம் தெரிவிக்க
வேண்டும் என்று தோன்றவில்லை.

மூப்பும், பிணியும், இயலாமையும் போட்டு வாட்டும் நேரத்தில் –
சாவு என்பது ஒருவருக்கு வரப்பிரசாதம் மாதிரி …
ஒரு விடுதலை என்று தான் சொல்ல வேண்டும்.

எனவே, அவருக்கு துன்பங்களிலிருந்து விடுதலை கிடைத்தது
என்னைப் பொருத்த வரையில் ஆறுதலாகவே இருக்கிறது.

அண்மையில், என் நெருங்கிய உறவினர் ஒருவர் மறைந்தபோதும்
வீட்டில் நான் இதைத்தான் கூறினேன். சம்பந்தப்பட்டவர்களை
பொருத்தவரை அது தான் நிஜம்..

இந்த சமயத்தில் ஜெயகாந்தன் அவர்களுடனான என் இளமைக்கால
அனுபவத்தை மீண்டும் நினைத்துப் பார்க்க விரும்புகிறேன்.

சின்னப் பையனாக இருந்த காலத்திலிருந்தே எனக்கு
நிறைய வாசிக்கும் வழக்கம் உண்டு. ஜெயகாந்தன் அவர்களின்
எழுத்தை விரும்பிப் படிப்பேன் –
அந்த வயதில் ஜே.கே. வெறியன் என்றே சொல்லலாம்.
20 வயதில் பணி கிடைக்கப்பெற்று, மத்தியப்பிரதேசத்திலுள்ள
ஜபல்பூர் நகரத்திற்குப் போய் விட்டேன்.
ஜெயகாந்தன் எழுத்துக்களைத் தொடர்ந்து வாசிக்க வேண்டுமே
என்பதற்காக, அப்போது ஜெயகாந்தன் எழுத்துக்களை தொடர்ந்து
பிரசுரித்துக் கொண்டிருந்த ஆனந்த விகடன் வார இதழுக்கு
வருட சந்தா கட்டி, தபால் மூலம் வாராவாரம்
பெற்றுக் கொண்டிருந்தேன்.

என் பெற்றோர்கள் அப்போது பாண்டிச்சேரியில் இருந்தனர்.
என் சகோதரிக்கு திருமணம் நிச்சயம் ஆனபோது,
அது தொடர்பான வேலைகளை கவனிக்க 1965 -ல்
ஒரு மாதம் ‘லீவு’ எடுத்துக் கொண்டு பாண்டி வந்தேன்.

அப்போது தான் ஜெயகாந்தன் “உன்னைப்போல் ஒருவன்”
படத்தைத் தயாரித்திருந்தார். அவரே எழுதி, இயக்கிய படம் அது.
‘Art Film’ வகையில் இருந்ததால், விநியோகஸ்தர்களோ,
திரையரங்கங்களோ – யாரும் அந்தப் படத்தை வாங்க / திரையிட
முன்வரவில்லை.

வேறு வழியில்லாமல், ஜெயகாந்தன், தானே நேரடியாக
திரைப்படத்தை வெளியிட முயற்சி செய்தார். முதலில்
இரண்டு, மூன்று பிரதிகள் மட்டுமே போட்டார் என்று
நினைக்கிறேன். ஊர் ஊராகச் சென்று ஒன்றிரண்டு தினங்களாவது
திரையிட முயன்று வந்தார். (கிட்டத்தட்ட 49 ஆண்டுகளாகி
விட்டன – நினைவில் இருப்பதை வைத்துக் கொண்டு எழுதுகிறேன்– கூறுவதில் எங்காவது சில தவறுகள் இருக்கக்கூடும் ….)

பாண்டிச்சேரியில் இருந்த என் நண்பர் வட்டம், “உன்னைப்போல்
ஒருவனை” எப்படியாவது பாண்டியில் ஒரு காட்சியாவது
திரையிட்டு விட வேண்டுமென்று வெறியாக இருந்தது.
இரண்டு நண்பர்கள் நேரடியாக சென்னை சென்று ஜெயகாந்தன்
அவர்களைத் தொடர்பு கொண்டு சம்மதம் பெற்று விட்டனர்.

ஜே.கே.வுக்கும், இதற்காக பாண்டிச்சேரி வரவேண்டும் என்கிற
ஆர்வம் இருந்தது.

பாண்டி, “அஜந்தா” தியேட்டரை ஒரு காலைக்காட்சிக்காக
வாடகைக்கு எடுத்தோம். ( அப்போதெல்லாம் தினசரி 3 காட்சிகள்
மட்டுமே… எப்போதாவது பிற மொழிப்படங்கள் வந்தால்,
ஞாயிறு மட்டும் காலைக்காட்சி போடுவார்கள்…)
வாடகை கொடுத்தால், தியேட்டரை ஒரு காட்சிக்கு பயன்படுத்தக்
கொடுப்பார்கள். விளம்பரம், வசூல், செலவு, அனைத்தும்
நம் பொறுப்பு.

ஒரு போஸ்டர் கூட அச்சடிக்கவில்லை. கையாலேயே
போஸ்டர் தட்டிகள் தயாரித்தோம். முக்கியமான இடங்களில்,
தட்டிகளை வைத்தோம். சிறு ஊர் என்பதால் (அப்போது ….! )
சிரமமில்லை.

எல்லா தியேட்டர் வாசல்களிலும், ஊருக்குள் நுழையும்
3 மார்க்கங்களிலும், பட்டாணிக்கடை, பீச், பார்க், லைப்ரரி,
மணக்குள விநாயகர் கோவில் அருகே, ரங்கபிள்ளைதெரு
போஸ்ட் ஆபீஸ் வாசல் என்று –
அனைத்து இடங்களிலும் கையால் எழுதப்பட்ட போஸ்டர்கள்.
அவற்றில் பல என் கையால் எழுதப்பட்டவை ….!!

பரபரப்பான அந்த ஞாயிறு வந்தது.
படப்பெட்டியுடன் ஜெயகாந்தனும் வந்தார்.
அப்போது சுமார் 31-32 வயது தான் இருக்கும் அவருக்கு……..!
மிகத் துடிப்பாக இருந்தார்….

தியேட்டர் முழுவதும் கட்டணம் – ஒரே ‘ரேட்’
என்று வைத்திருந்தது.
கிட்டத்தட்ட தியேட்டர் நிரம்பி இருந்தது.
ஒன்பதரை மணிக்கு படம்.
படம் துவங்கும் முன் ஜெயகாந்தன் பேசினார்.

கூட்டம் மிக ஆவலுடன் படம் பார்க்கக் காத்திருந்தது …
படம் மிக மிகச் சுமாராகத்தான் வந்திருந்தது.
ஒளிப்பதிவு மிக மோசம்.
பல இடங்களில் ஒலிப்பதிவும் சரி இல்லை.
மேலும் படம் அவ்வளவு மெதுவாக( slow movie )
இருக்கும் என்று நாங்கள் எதிர்பார்க்கவில்லை.
அவருக்குப் சற்றும் பொருந்தாத வேலை …..
கதை எழுதுவது வேறு – திரைப்படம் எடுப்பது வேறு அல்லவா ?

ஆனால் நாங்கள் ஜே.கே.யை விரும்பியது
இந்த திரைப்படத்துக்காக இல்லையே ……
ஆக – படத்தைப் பொருத்த வரை ஏமாற்றமாக இருந்தாலும்,
ஜெயகாந்தனை நேரில் சந்தித்ததில், அவருடன்
உரையாட வாய்ப்பு கிடைத்ததில் எங்கள்
அனைவருக்கும் மிக்க மகிழ்ச்சி…..

—–

காலம் ஓடி விட்டது. வருடங்கள் பறந்து விட்டன.
கிட்டத்தட்ட 50 ஆண்டுகளுக்குப் பிறகு –
அண்மையில், தனது 80-வது வயதில் ஜெயகாந்தன் கொடுத்த
பேட்டியிலிருந்து ஒரு சில பகுதிகள்……

——
• தமிழில் வேறு எந்தப் படைப்பாளிக்கும் கிடைக்காத
சம கால மரியாதை – உங்கள் ஞானகுரு பாரதிக்கும்
கூடக் கிடைக்காதது – உங்களுக்கு மட்டும் வாய்த் திருக்கிறது.
இதற்கு என்ன காரணம் என்று நினைக்கிறீர்கள்?

சாமானிய மக்களுடைய வாழ்க்கையை எழுதியதும்,
அந்த எழுத்தோடு ஒட்டி வாழ்ந்ததும் காரணம்
என்று நினைக்கிறேன்.

• ஊடகங்கள் எல்லாக் காலங்களிலும் கொண்டாடிய,
கொண்டாடும் ஒரே தமிழ் எழுத்தாளர் நீங்கள்.
ஊடகங்களோடு உறவாடுவதில் சூட்சமம் ஏதும் இருக்கிறதா?

என் எழுத்தினால் நின்றேன்; என் எழுத்தின் மீது
நான் நிற்கிறேன். இதுதான் ஒரே சூட்சமம். யாரிடமும் நான்
மண்டியிட்டுக் கைகூப்புவது கிடையாது.

• என்ன கடமைகள் மீதி இருப்பதாக நினைக் கிறீர்கள்?

இந்தப் பிறப்புக்கு என் கடமைகளை முடித்து விட்டதாகவே
நினைக்கிறேன்.

• உங்கள் வாசகர்களுக்குச் சொல்ல சிறப்புச் செய்தி உண்டா?

ஞானகுரு பாரதி அன்றைக்குச் சொன்னதுதான்
என்றைக்கும் என் செய்தி:

ஊருக்கு நல்லது சொல்ல வேண்டும்,
உண்மையைச் சொல்ல வேண்டும்.
ஒரே வேண்டுகோள்: தமிழையும் படியுங்கள், தமிழுக்கு நல்லது!

——————–

ஜெயகாந்தனும், அவரது ஞானகுரு பாரதியும்
சொல்லிச் சென்றதை –

-நாமும் இயன்றவரை செய்ய முயற்சிப்போமா …?

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

24 Responses to ஜெயகாந்தன் – சில நினைவுகள் ….

 1. today.and.me சொல்கிறார்:

  //ஊருக்கு நல்லது சொல்ல வேண்டும், உண்மையைச் சொல்ல வேண்டும்.//
  சொன்னபடி வாழ்ந்தவர். அதனால்தான் இன்று அவரை உலகம் கொண்டாடுகிறது.

  ————————————
  “கன்னிப் பருவத்திலே அந்நாள் – என்றன்
  காதில் விழுந்த திசைமொழி எல்லாம்
  என்னென்னவோ பெயருண்டு – பின்னர்
  யாவும் அழிவுற்று இறந்தன கண்டீர்!

  தந்தை அருள் வலியாலும் – முன்பு
  சான்ற புலவர் தவ வலியாலும்
  இந்தக் கணமட்டும் காலன் – என்னை
  ஏறிட்டுப் பார்க்கவும் அஞ்சி இருந்தான்

  இன்றொரு சொல்லினைக் கேட்டேன் – இனி
  ஏது செய்வேன்? எனதாருயிர் மக்காள்!
  கொன்றிடல் போலொரு வார்த்தை – இங்கு
  கூறத் தகாதவன் கூறினான் கண்டீர்!

  “புத்தம் புதிய கலைகள் – பஞ்ச
  பூதச் செயல்களின் நுட்பங்கள் கூறும்
  மெத்த வளருது மேற்கே – அந்த
  மேன்மைக் கலைகள் தமிழினில் இல்லை

  சொல்லவும் கூடுவதில்லை – அவை
  சொல்லுந் திறமை தமிழ்மொழிக் கில்லை
  மெல்லத் தமிழினிச் சாகும் – அந்த
  மேற்கு மொழிகள் புவிமிசை யோங்கும்”

  என்றந்தப் பேதை யுரைத்தான் – ஆ!
  இந்த வசை எனக்கெய்திடலாமோ?
  சென்றிடுவீர் எட்டுத் திக்கும் – கலைச்
  செல்வங்கள் யாவுங் கொணர்ந்திங்கு சேர்ப்பீர்!

  தந்தை அருள் வலியாலும் – இன்று
  சார்ந்த புலவர் தவ வலியாலும்
  இந்தப் பெரும்பழி தீரும் – புகழ்
  ஏறிப் புவிமிசை என்றும் இருப்பேன்.”

  தமிழ் வழக்கிழந்து; வாழ்விழந்து போகும் என்று சொல்லும் சிலரைப் பார்த்து பாரதி ‘பேதைகள்’ என்று மிகக் கடுமையாக உரைக்கின்றார் ஒருபோதும் தமிழுக்கு எதிராக நம்பிக்கையின்மையை விதைக்கவில்லை.

  “தமிழ் இனி மெல்ல செத்துப்போய் ஆங்கிலம் போன்ற மேற்குமொழிகள் ஓங்கி நிற்கும் என்று பேதை ஒருவன் உரைக்கின்றான். அப்படியொரு பழி எனக்கு ஏற்படலாமா தமிழா? எழுந்திரு.. எட்டுத்திக்கும் ஓடு! உலகில் கிடைக்கும் அறிவுச்செல்வங்கள் அனைத்தையும் கொண்டுவந்து தமிழுக்கு உரமேற்று” என்று தமிழ்த்தாயே கூறுவதாக நமக்கு நம்பிக்கையூட்டுகிறார் பாரதி.
  ———————–
  //ஒரே வேண்டுகோள்: தமிழையும் படியுங்கள், தமிழுக்கு நல்லது!//
  தமிழுக்கு மட்டுமல்ல, நமக்கும் நல்லதுதானே.

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   நண்பர் டுடேஅண்ட்மீ,

   அற்புதமான வார்த்தைகளை சரியான நேரத்தில்,
   சரியான இடத்தில், சரியான விதத்தில் நினைவு படுத்துகிறீர்கள்.

   நன்றியும், பாராட்டுக்களும்.

   -வாழ்த்துக்களுடன்,
   காவிரிமைந்தன்

 2. Killergee சொல்கிறார்:

  சிறந்த நினைவோட்டங்கள் நண்பரே… ஜெயகாந்தன் அவர்களின் ஆன்மா சாந்தியடைய பிரார்த்திப்போம்.
  நண்பரே இந்தப்பதிவின் மூலம் பார்த்தால் தங்களது வயதும் 70 இருக்கும் போலயே…. சரியா ?

  • today.and.me சொல்கிறார்:

   //நண்பரே இந்தப்பதிவின் மூலம் பார்த்தால் தங்களது வயதும் 70 இருக்கும் போலயே…. சரியா ?//
   அக்டோபர் 2014லேயே ‘எனக்கு வயது எழுபத்தி ஒன்று ஆகிறது’ என்று சொல்லிவிட்டார். கிட்டக்கிட்ட கணக்கு சரிதான்.
   https://vimarisanam.wordpress.com/2014/10/10/%E0%AE%89%E0%AE%9F%E0%AE%A9%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B5%E0%AF%87/#comments
   —————
   ஆனால் கா.மை.ஜி வயதை மறந்துவிடவேண்டும் என்று கேட்டுக்கொண்டிருக்கிறோம். வயதோவென்றால், ‘விடாது கறுப்பு’ போல ஏதாவது ஒருவிதத்தில் தொடர்ந்துகொண்டே இருக்கிறது. 🙂 🙂

   • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

    நண்பர் todayandme, killerjee ஆகியோருக்கு,

    நான் மறந்து விடுவதாகச் சொன்னாலும் நீங்கள் மறக்க விட மாட்டேனென்கிறீர்களே… என்ன செய்வது ….!

    சரி கடைசீ தடவை … எனக்கு 72-உம் முடிந்து
    இப்போது 73 நடக்கிறது – மன்னிக்கவும் ஓடுகிறது –

    மீண்டும் மன்னிக்கவும் தள்ளாடுகிறது –
    என்பதை இனி நான் மறந்து செயல்பட முயற்சி செய்கிறேன். ….!!!

    -வாழ்த்துக்களுடன்,
    காவிரிமைந்தன்

 3. சக்தி சொல்கிறார்:

  ஊருக்கு நல்லது சொல்ல வேண்டும்,
  உண்மையைச் சொல்ல வேண்டும்.
  ஒரே வேண்டுகோள்: தமிழையும் படியுங்கள், தமிழுக்கு நல்லது!
  தமிழனுக்கும் நல்லது.

  இந்தத் தருணத்தில் மிருகத்தனமாக கொலை செய்யப்பட்ட அப்பாவித் தமிழர்களுக்கு எனது அஞ்சலி. பிரேத பரிசோதனை அறிக்கை மிகக் கொடூரமாக விபரித்துள்ளது.
  இவர்களுக்காகவும் ஜெயகாந்தன் சில கதைகளை எழுதி இருந்தார். அவர் சார்பாக அஞ்சலி.

 4. புது வசந்தம் சொல்கிறார்:

  மூன்று மரணங்கள், ஒரு எழுத்தின் மரணம், ஒரு இசையின் மரணம் – இந்த இரண்டும் மூப்பின் காரணமாக, மூன்றாவது தமிழன் என்ற இனம் என்பதால் பலியிடப்பட்டிருகிறார்கள். – இவர்களது ஆன்மா அமைதி கொள்ளட்டும்.

  இந்த 20 குடும்பத்தின் நிலை என்னவாகும் ?

 5. drkgp சொல்கிறார்:

  Dear KMji,
  The episode with Jayakanthan was narrated on this blog on
  a previous occasion also which was savoured by many of
  JK lovers like me. You are lucky to have had such a close
  association with him. JK had tremendous impact on younger
  generation in those days such that many of us would ruminate
  about a novel or story for many days after reading them.
  Long live his memories.

 6. drkgp சொல்கிறார்:

  It is very sad that 20 of the hapless labourers were gunned down
  whereas their employers go scotfree . This smuggling is on for
  for many years with the connivance of the officials. Will they
  punish the officials too?

 7. yogeswaran சொல்கிறார்:

  Dear Maindhan Sir,

  Thank you for your memories on J.K.

  He is legend.

  I heard J.K had the guts to critisise the greats like MGR,Anna,Periyar in their presence.

  Is their any way you can unearth them and publish in you blog.

  rgs

  yogi

 8. drkgp சொல்கிறார்:

  Mr Kauffman,
  JK was straight in conveying a message whether in novels or in politics or social
  forums without any masala or sweetening, unlike many of us who would be
  hesitant to offend others sentiments.

 9. Taru சொல்கிறார்:

  Jeyagandhan sir had this feeling that Tamil did not develop because some genius Tamil pundits thought other languages are opposed to tamil.

  I particular Sanskrit as a flawless language could have helped Tamil for its deficiency on lack of phonetic and logical constructs. He loved Sanskrit until his last breadth.

  Some Tamil racists continue to oppose Sanskrit even today. As jayagandhan wished, we all take pledge to encourage Tamil children to learn Sanskrit also. Not only this will help Tamil growth, but also Sanskrit will improve the opportunity to read our great epics and Vedas with ultimate understanding.

  Taru

  • today.and.me சொல்கிறார்:

   நண்ப தரு,
   முதலில் நாட்டின் வரலாறைப் படியுங்கள், அல்லது மொழிகளின் வரலாறைத் தெரிந்துகொள்ளுங்கள். அல்லது மொழிகள் உருவானதற்கான ஆதாரங்களாகக் கிடைக்கும் கல்வெட்டு, ஓலைகள், சுவடிகள், இன்னபிறவற்றைப் பற்றி அறிந்துகொள்ளுங்கள்.

   தேவையில்லாமல் ஜேகே என்னும் ஒரு மிகச்சிறந்த ஆளுமையின் சாவின்மீதான பதிவை சமஸ்கிருதம் / தமிழ் என்று கொச்சைப்படுத்தி படிப்பவர்களின் கவனத்தைக் கலைப்பதாக நினைத்து உங்களை நீங்களே கேவலப்படுத்திக்கொள்ளாதீர்கள்.

   ஜேகே சமஸ்கிருதத்தை விரும்பியிருக்கலாம். அது அவராக விரும்பியது. அவர் தமிழை பல ஆண்டுகளாக தன்கைகளில் வைத்து பராமரித்திருக்கிறார். அது உங்களைப்போன்ற ஆங்கிலம் தப்பிக்கொண்டு, தமிழனை இந்தியனாக பார்க்கமுடியாதவர்களுத் தெரிய வாய்ப்பில்லை.

   சமஸ்கிருதம் படிக்கவேண்டும் என்று ஏன் ப்ளெட்ஜ் செய்துகொள்ளவேண்டும்? அவர் தமிழைக் கரைத்துக்குடித்தமாதிரி, அவர் தொழிலுக்கு தமிழைமட்டும் உபயோகப்படுத்தியமாதிரி, அவருடைய வாழ்வாதாரமாக தமிழை மட்டுமே அவர் நம்பியிருந்தமாதிரி

   சமஸ்கிருதத்தையும் ஹிந்தியையும் மட்டுமே போற்றும் நீங்கள் எல்லாரும் ஜேகேயைப் பார்த்து ப்ளெட்ஜ எடுத்துக்கொள்ளலாமே? இதையும் விவாதத்துக்கென்றுதான் நான் சொல்லுகிறேன்.

   தமிழைப் படிப்பதும் படிக்காததும் உங்கள் விருப்பம். மற்றமொழிகளைத் தமிழன் படிப்பதும் படிக்காததும் அவர்கள் விருப்பம். இதில் ஏன் ப்ளெட்ஜ் செய்துகொள்ளவேண்டும். தமிழ் ஒரு மொழி. அதேபோல சமஸ்கிருதம் ஒரு மொழி. அவ்வளவுதான். அதற்குமேல் அதில் எதுவும் இல்லை என்பது என்பது சமஸ்கிருதம் தெரிந்த எனக்கு நன்றாகத் தெரியும். சமஸ்கிருதம் தெரியாதவர்களை பயமுறுத்தும் நோக்கில், தீண்டத்தகாத நோக்கில் பரப்பப்படும் இந்தக் கருத்துக்களை வன்மையாகக் கண்டிக்கிறேன்.

   மீண்டும் சொல்கிறேன்,
   தேவையில்லாமல் ஜேகே என்னும் ஒரு மிகச்சிறந்த ஆளுமையின் சாவின்மீதான பதிவை சமஸ்கிருதம் / தமிழ் என்று கொச்சைப்படுத்தி படிப்பவர்களின் கவனத்தைக் கலைப்பதாக நினைத்து உங்களை நீங்களே கேவலப்படுத்திக்கொள்ளாதீர்கள்.

 10. today.and.me சொல்கிறார்:

  மிகவும் வருந்தத்தக்கதும், கண்டிக்கத்தக்கதுமான ஒரு செய்தி

  இறுதிக்காலத்தில் தனது தந்தை ஜெயகாந்தன் உடல்நிலை குறித்தும், அதனை உபயோகப்படுத்திய மீடியாவின் கள்ளத்தனத்தையும், கவிப்பேரரசுவின் புகழ்போதையைக் குறித்தும்,

  ஜெயகாந்தன் அவர்களின் மகள் தீபலட்சுமி தனது முகநூல் பக்கத்தில்,

  குமுதம் இதழில் வெளியான வைரமுத்துவின் கட்டுரையைப் பற்றியதான ஜேகேயின் கடிதம் என்றவகையில் வெளி்யிட்ட கேவலம்…. மீடியாக்கள் இன்றைக்கு எந்தநிலைக்கு வேண்டுமானாலும் தரம் இழக்கும் கொடூரம். எந்த அச்சுமீடியாவோ அல்லது தொலைகாட்சி மீடியாவோ இதைப்பற்றி கண்டிக்கவுமில்லை. சம்பந்தப்பட்டவர்கள் மன்னிப்பு வேண்டவுமில்லை.
  ……………………………….
  சில நேரங்களில் மௌனம் குற்றமாகிவிடும் என்பதாலேயே இதை எழுத நேரிடுகிறது:
  இந்த வாரக் குமுதத்தில் கவிஞர் வைரமுத்து அவர்களின் சிறுகதைகளைப் பாராட்டி எழுத்தாளர் ஜெயகாந்தன் எழுதியதாக ஒரு கடிதத்தைப் பிரசுரித்து, அவரது கடைசி எழுத்து என ஆவணப்படுத்தி இருக்கிறார்கள்.

  அப்பா கடந்த பல மாதங்களாகவே எதையும் படிக்கவோ எழுதவோ இயலாத நிலையில் தான் இருந்து வந்தார் என்பது அவரை வந்து பார்த்த எல்லாருக்கும் தெரியும்.

  அன்புடன் வாஞ்சையாக யார் வந்து பேசினாலும் குழந்தை போல் கையைப்பிடித்துக் கொண்டு பேசும், அவர்கள் எது சொன்னாலும் மறுத்துப் பேசவோ, கருத்து தெரிவிக்கவோ கூட இயலாத நிலையில் இருந்தார் என்பதை வலியுடன் இங்கு வெளிப்படுத்த நேர்வதற்கு வருந்துகிறேன்.

  ஒரு வாழ்த்தை அவரே எழுதியது போல் எழுதி வந்து, வாசித்துக்காட்டி, அதில் கையெழுத்திடுமாறு கேட்டு, கையெழுத்து கூடச் சரியாகப் போடவராத நிலையில், ‘உங்கள் பழைய கையொப்பத்தைப் பயன்படுத்திக் கொள்ளலாமா’ என்று அனுமதியையும் கேட்டுப் பெற்றபின், அதை அப்படியே சொல்லி இருக்கலாமே!
  அவரை நன்கறிந்தவர்களுக்குத் தெரியும் அதுவே பெரிய விஷயம் தான் என்று!

  அப்படி இருக்க, அவர் அந்தக் கதைகளைத் தொடர்ந்து படித்தார் என்பதும், அவரே கைப்பட வாழ்த்து எழுதி அனுப்பினார் என்பதும், அந்த வாழ்த்துக் கடிதத்தை அவரது கடைசி எழுத்து என்று ஆவணப்படுத்தலாம் என்பதும் அவரையும் அவர் எழுத்தையும் உயிராய் நேசிக்கும் எவருக்கும் நியாயமாகாது.
  ………………………..
  https://www.facebook.com/deepajoe?fref=nf

  http://www.seythigal.com/?p=6070

 11. Ramachandran . R. சொல்கிறார்:

  வை.மு. ஒரு விவஸ்தை கெட்ட ஆள்
  தன்னைத் தானே புகழ்ந்து கொள்பவர்
  சமூகத்திற்கு எதையுமே செய்யாத தன்னலவாதி –

  கே.எம்.சார்,
  நீங்களே நிறைய எழுதி இருகிறீர்களே
  இவரைப் பற்றி. இந்த விஷயத்தில் இவருடன்
  குமுதம் வ.ராஜனும் சேர்ந்து கொண்டிருக்கிறார்.
  பிறகு எப்படி இருக்கும் ? தரங்கெட்ட வியாபாரிகள் இவர்கள்.
  தமிழுக்கு அவமானம் இந்த பிறவிகள்.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.