சிறுவர்கள் + பாலியல் வல்லுறவு பற்றி – திருமதி கனிமொழி + ‘ஹிந்து’ நாளிதழ் சொல்வது ஏற்கத்தகுந்ததா ?

.
kanimozhi - hindu

ராஜ்ய சபா உறுப்பினர் திருமதி கனிமொழி நேற்றைய ஹிந்து ஆங்கில
நாளிதழில் சிறுவர்கள் பாலியல் வன்முறையில் ஈடுபடுவதற்காக,
அவர்களை தண்டனைக்கு உட்படுத்துவது குறித்து – ஒரு விரிவான கட்டுரை
எழுதி இருக்கிறார்.

ஹிந்து நாளிதழும் திருமதி கனிமொழியின் இந்த கருத்தை வலியுறுத்தி,
புதிய சட்டத்தை கைவிட வேண்டுமென்று தலையங்கமே எழுதி இருக்கிறது.

அவர்கள் கூறுவது என்ன …?

தற்போதைய சட்டங்கள், 18 வயதிற்குட்பட்ட சிறுவர்கள் –
பாலியல் வன்முறை, கொலை உட்பட எத்தகைய கொடுங்குற்றங்களில்
ஈடுபட்டாலும் அவர்களை குழந்தைகளாகவே கருதி – சிறுவர் சீர்திருத்தப்
பள்ளிகளுக்கு அனுப்புவதோடு நிறுத்திக் கொள்கிறது.

டெல்லியில் நடைபெற்ற ‘நிர்பயா’ பாலியல் வன்முறையில் ஈடுபட்டவர்களில்
ஒரு சிறுவன் – கொடுமையான குற்றங்களில் ஈடுபட்டாலும், 18 வயது
நிரம்பாதவன் என்கிற காரணத்தால், கடும் தண்டனையிலிருந்து
தப்பிய காரணத்தால் பொது மக்களிடையே இந்த சட்டப்பிரிவிற்கு
கடும் எதிர்ப்பு எழுந்தது. எனவே, தற்போதைய பாஜக அரசு ஆகஸ்ட் 2014-ல்
16 முதல் 18 வயது வரையுள்ள குற்றவாளிகள், கொலை- கற்பழிப்பு போன்ற
கொடும் குற்றங்களில் ஈடுபடும்போது, அவர்களை பெரியவர்களாகவே
கருதி, பொது கிரிமினல் சட்டங்களுக்கு உட்படுத்தும் வகையில் ஒரு
சட்ட மசோதாவை Juvenile Justice (Care and Protection Bill) பாராளுமன்றத்தில்
அறிமுகப்படுத்தியது. தொடர்ந்து இது ஒரு பாராளுமன்ற நிலைக்குழுவின்
பரிசீலனைக்கு அனுப்பப்பட்டது. இந்த நிலைக்குழு, இந்த விதிகளை
ஏற்றுக் கொள்ள மறுத்து, தனது அறிக்கையை சமர்ப்பித்தது.

இருந்தாலும், மத்திய அமைச்சரவை இந்த குழுவின் பரிந்துரைகளை
ஏற்காமல், முதலில் சட்ட மசோதாவில் கூறிய விதிகளையே
(16 முதல் 18 வயது வரையுள்ள குற்றவாளிகள், கொலை- கற்பழிப்பு போன்ற
கொடும் குற்றங்களில் ஈடுபடும்போது, அவர்களை பெரியவர்களாகவே
கருதி, பொது கிரிமினல் சட்டங்களுக்கு உட்படுத்துவது ) சட்டமாக
இயற்ற ஒப்புதல் அளித்துள்ளது. இந்த மசோதா விரைவில் பாராளுமன்றத்தில்
விவாதத்திற்கும் வரவிருக்கிறது.

திருமதி கனிமொழி அவர்களும், ஹிந்து செய்தித்தாளும், இந்த சட்ட
மசோதாவை கடுமையாக எதிர்த்து, கட்டுரை – தலையங்கமும் எழுதி
இருக்கின்றனர். அவர்கள் கூற்று –

– புள்ளி விவரங்களின்படி 2013-ஆம் ஆண்டில் – 16 முதல் 18 வரையுள்ள
சிறுவர்களின் மீது மொத்தம் 1388 பாலியல் வன்முறை வழக்குகள் மட்டுமே (!!!)
பதிவு செய்யப்பட்டிருக்கிறதாம். இது அந்த ஆண்டு பதிவு செய்யப்பட்ட
மொத்த பாலியல் வன்முறை வழக்குகளில் 5 சதவீதம் மட்டுமே. எனவே,
இந்த சிறிய எண்ணிக்கை ( ?) யிலான வழக்குகளாக, சட்டத்தையே
திருத்துவது தவறான போக்கு….!!!

– சிறுவர்களை சீர்திருத்த முயற்சிக்க வேண்டுமேயன்றி, தண்டனைக்கு
உள்ளாக்கக் கூடாது….!!!

-வறுமை காரணமாகவும், கல்வியறிவு இன்மை காரணமாகவும் இத்தகைய
குற்றங்களில் ஈடுபடும் சிறுவர்களை தண்டனக்கு உட்படுத்துவது கொடுமை….!!!

– தான் பல சமூக நல அமைப்புகளிடமும் கலந்து பேசியதாகவும்,
அவைகளும் இந்த சட்ட திருத்தத்திற்கு எதிராகவே கருத்து
தெரிவித்திருப்பதாகவும் திருமதி கனிமொழி கூறி இருக்கிறார்.

மொத்தமாக இந்த புதிய சட்டம் கைவிடப்பட வேண்டும் என்பது
திருமதி கனிமொழி மற்றும் ஹிந்து நாளிதழின் கருத்து. தங்கள் கருத்திற்கு
பொது மக்களின் ஆதரவை அவர்கள் கோரி இருக்கிறார்கள்..

இந்த விஷயத்தில் நான் சில கருத்துக்களை முன்வைக்க விரும்புகிறேன் –

ஏற்கெனவே இந்த நாட்டில் குற்றங்கள் – குறிப்பாக பெண்களுக்கு எதிரான
பாலியல் வன்முறைகள் வயது வித்தியாசமே இல்லாமல் அரங்கேறிக்
கொண்டிருக்கின்றன. செய்தித்தாள்களின் மூலமும், தொலைக்காட்சி
ஊடகங்களின் மூலமும் இந்த செய்திகளுக்கு கிடைக்கும் விளம்பரங்களால்-
உலகமே நம்மை கேவலமாகப் பார்க்கிறது – இந்தியா காமக்கொடூரன்களால்
நிரம்பிய நாடு என்று நினைக்கிறார்கள்.

நாளுக்கு நாள், மணிக்கு மணி – இந்த வன்முறைகள் கூடிக் கொண்டே
போகின்றன.

இதற்கான முக்கிய காரணங்கள் – பல வழக்குகளில் குற்றவாளிகள்
பிடிபடுவதில்லை; பிடிபட்டாலும் பலமான சாட்சியங்கள் அமைவதில்லை;
அப்படி அமைந்தாலும், தாமதப்படும் வழக்குகளால், குற்றவாளிகள்
ஜாமீனில் வெளிவந்து – சம்பந்தப்பட்டவர்களையும், சாட்சிகளையும் மிரட்டி,
வழக்கை நீர்த்துப் போக செய்கிறார்கள். ஆண்டுக்கணக்கில் வழக்குகள்
நீடிக்கின்றன.

இறுதியில், தண்டிக்கப்படுபவர்களின் சதவீதம் மிகமிகக் குறைவாகவே
இருக்கிறது. இந்த லட்சணத்தில் – 18 வயதுக்கு உட்பட்டவர்கள்,
வயது காரணமாகவே சுலபமாக தண்டனையிலிருந்து தப்பி விடலாம்
என்கிற வசதி வேறு..!

குற்றங்கள் குறைய வேண்டுமானால் –

கடுமையான தண்டனைகள் விதிக்கப்பட வேண்டும்.
வழக்குகள் விரைவாக விசாரிக்கப்பட்டு தீர்ப்பு வழங்கப்பட வேண்டும்.
தப்பு செய்தவர் யாராக இருந்தாலும் தண்டனையிலிருந்து தப்ப முடியாது
என்பது உறுதி செய்யப்பட வேண்டும்.

இன்னொரு விஷயம் – இந்த 18 வயது உச்ச வரம்பு….

17 வயது 11 மாதங்கள் நிரம்பியவன் கற்பழித்தால் தண்டனை கிடையாது.
இரண்டு மாதங்கள் முன்னதாக பிறந்திருந்து, 18 வயது 1 மாதம் நிரம்பியவன்
கற்பழித்தால் தண்டனை உண்டு. இதென்ன பைத்தியக்காரத்தனம்…?

இதன் மூலம் கற்பழிப்பை 18 வயதுக்கு உட்பட்டவர்கள்
தாராளமாகச் செய்யலாம் என்பதை சட்டபூர்வமாக்க விரும்புகிறார்களா ?

நம் நாட்டில், 17 வயது வாலிபன் ஒருவனுக்கு – குற்றங்களின் தன்மையும்
தெரியும், அதனால் ஏற்படக்கூடிய விளைவுகளும் தெரியும்.
தெரிய வேண்டியது ஒன்றே ஒன்று தான். என்ன தான் பின்னணி
இருந்தாலும், தப்பு செய்தால் தண்டனையிலிருந்து தப்ப முடியாது
என்கிற உண்மை.

பாலியல் வன்முறையில், கொலைகளில் – ஈடுபடக்கூடிய அளவிற்கு
உடல் வலிமையும், மனதில் தைரியமும் இருப்பவன் – வயது வரம்பை
மட்டும் வைத்து எப்படி குழந்தையாக கருதப்பட முடியும் ?
கொடும் செயலை செய்யத் துணிந்தவனால் கடும் தண்டனையை
அனுபவிக்க முடியாதா …?

மேலும், இத்தகைய நபர்களை வெளியில் விடுவதால் – அவர்கள்
மேலும் மேலும் இத்தகைய குற்றங்களில் ஈடுபட்டு, சமூகத்தை
சீரழிக்கவே வாய்ப்புகள் அதிகம்.

இத்தகைய வன்முறைகளால் பாதிக்கப்பட்டவர்களின் மனநிலை,
குடும்ப நிலையைப் பற்றி – கட்டுரையாளர்கள் யோசிக்கிறார்களா ?
ஒரு வேளை தங்கள் குடும்பத்தில், மிக நெருங்கிய உறவுப் பெண்
ஒருவருக்கு இத்தகைய கொடுமை நிகழ்ந்தாலும், அவர்கள் இதே
கருத்தைத்தான் கொண்டிருப்பார்களா …?

5 % தானே என்று வக்காலத்து வாங்குபவர்கள் –
இவர்களை இப்படியே விட்டால், 5 இன்னும் 5 வருடங்களில்
பதினைந்து ஆக வாய்ப்பிருக்கிறதே என்பதை யோசித்தார்களா ?

உண்மையில் இவர்கள் யாருக்காக வக்காலத்து வாங்குகிறார்கள்..?
பொதுமக்களுக்காகவா அல்லது குற்றவாளிகளுக்காகவா ?

துணிவிருந்தால், மக்கள் மத்தியில் இவர்கள் கருத்துக்கு
வாக்கெடுப்பு நடத்தி முடிவு தெரிந்து கொள்ள தயாரா ?

பெரும்பாலான மக்களின் கருத்துக்கு எதிராக இவர்கள்
பேசுவது ஏன் ? செயல்படுவது ஏன் ? யாரை குளிர்விக்க ?
சமூக சேவை என்கிற போர்வையில் நாடகமாடிக் கொண்டிருக்கும்
சில மேல் தட்டு மக்களுக்காகவா ?

நமது அபிப்பிராயம் –

குற்றம் செய்தவனை எப்படிக் கருதுவது ?
சிறுவனாகவா அல்லது பெரியவனாகவா – என்பதை
வழக்கை விசாரிக்கும் நீதிபதிகளின் பொறுப்பில் விடுவோம்.
வயது வரம்பு, அவர்களது தீர்ப்பை கட்டுப்படுத்த வேண்டாம்.
புதிய சட்டம் ஒருமனதாக பாராளுமன்றத்தில் நிறைவேற வேண்டும்.

முடிந்தால், சிறைத்தண்டனையோடு நில்லாமல்,
இத்தகைய வழக்குகளில் -சிங்கப்பூர் போல – கசையடிகளும்
சேர்க்கப்பட வேண்டும்.

அதோடு நில்லாமல், இத்தகைய வழக்குகள் விரைவாக
முடிக்கப்பட்டு, தண்டனைகளும் பலத்த விளம்பரங்களுடன்
நிறைவேற்றப்பட வேண்டும்.

சமுதாயத்தில் தண்டனைகளைப் பற்றிய ஒரு பய உணர்வு
ஏற்படுத்தப்பட வேண்டும்.

இந்த நாட்டில் பெண்களுக்கு ஏற்படும் அவலங்களுக்கும்,
இந்த நாட்டின் பெருமைக்கு ஏற்பட்டிருக்கும் அசிங்கத்திற்கும்-
கூடிய விரைவில் ஒரு முடிவை கொண்டு வர வேண்டும்.

நீங்கள் என்ன சொல்கிறீர்கள் நண்பர்களே ….?

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

13 Responses to சிறுவர்கள் + பாலியல் வல்லுறவு பற்றி – திருமதி கனிமொழி + ‘ஹிந்து’ நாளிதழ் சொல்வது ஏற்கத்தகுந்ததா ?

 1. கிரி அனகை. சென்னை. சொல்கிறார்:

  புதிய சட்டம் கைவிடப்பட வேண்டும் என்று சொல்லும் பாராளுமன்ற நிலைக்குழுவும், திருமதி கனிமொழி அவர்களும், ஹிந்து செய்தித்தாளும்,, மக்கள் மத்தியில் இவர்கள் கருத்துக்கு வாக்கெடுப்பு நடத்தி முடிவு தெரிந்து கொள்ளட்டுமே. என்ற உங்கள் கருத்து சரியே ….

 2. கந்தசாமி சொல்கிறார்:

  Hate Crime and Not criminals.. In our society well educated professors , judges, etc make these type of crimes.Many girl students who submit their thesis for Phd undergo these sexual assault by their guides. In our society those people who attain 18 years only are eligible to vote, those persons who are 17 years 11 months old can not vote. Rule is a Rule. Children below 18 should be given chances to realize their mistakes. They should not be given kasai yadi as you recommend. If at all you wish to do that please act , there are so many old bulls who are well educated and well placed and occupy highly esteemed positions in our society.

  • Sharron சொல்கிறார்:

   Both the boys and girls get maturity very quickly now a days.Girls and boys at the age of 13 to 15 are referred as young women and young men now.So they deserve very strict punishment.

 3. சக்தி சொல்கிறார்:

  உங்கள் கருத்தை ஒரு விசயத்தை தவிர முற்றாக ஆதரிக்கிறேன்.சமீபத்தைய சௌதி போன்ற அராபிய நாடுகளில் உள்ள பெண்கள் அமைப்பும் மனித உரிமை அமைப்பினரும் வெளியிட்ட ஆண்டறிக்கையின்படி கடுமையான தண்டனைகளால் முற்றிலும் குற்றங்கள் அங்கு குறையவில்லை என்பதுதான்.ஓரளவிற்கு குறைந்ததே தவிர எதிர்பார்க்கப்பட்ட அளவு அந்த நாடுகளில் குறையவில்லை. அதற்கு அவர்கள் கூறும் காரணங்கள் பல. ஆனாலும் கடுமையான தண்டனைகளால் சிங்கையில், எதிர்பார்க்கப்பட்டதை விட அதிக அளவு குறைந்துள்ளது என்பது உண்மை. காரணம் என்ன என்பது என் அறிவிற்கு எட்டிய அளவில் தெரியவில்லை.மனித உரிமை அமைப்புகள் கூறிய காரணங்களாக இருக்கலாம்.

  இதைவிட மேலே சொல்லப்பட்ட சட்டத்தில் உள்ள ஒரு பகுதியை குறிப்பிட்டிருந்தால் நன்றாக இருந்திருக்கும். இப்படியான சட்டம் அமெரிக்கா,ஜேர்மன் மற்றும் சில ஐரோப்பிய நாடுகளில் நடைமுறையில் இருக்கிறது.

  16-18 வயதுக் குற்றவாளிகள் விசயத்தில் தீர்ப்பு சொல்லு முன்னர், நீதிபதி ஒரு குழுவை அல்லது சமூக-மனவியல் நிபுணரை சந்திக்க வைத்து அடிப்படைக் காரணங்கள்,குற்றத்தின் வகை, போன்ற பலவற்றை கண்டறிந்து அறிக்கை ஒன்றை சமர்ப்பிக்கும்படி கேட்கிறார். அவர்/கள் நேரிலும் குடும்பத்தினரிடமும் இரண்டு பக்கத்தினரிடமும் கேட்டறிந்து அறிக்கையையும் நேரிலும் தனது கருத்தை சொல்வார்கள். அவர்கள் கருத்தைக் கேட்டறிந்த பின்னரே நீதிபதி சிறியவருக்கான அல்லது பெரியவருக்கான தண்டனையா என்பதை முடிவு செய்கிறார்.

  அந்த நிபுணர் குற்றவாளி செய்யும் குற்றத்தின் தரத்தை கருத்தில் கொண்டு சிறுவருக்குரிய அல்லது பெரியவருக்குரிய தண்டனை வழங்கும்படி சொல்வார். சமீபத்தில் ஈவ்டீசிங்க் செய்த ஒரு 16 வயது சிறுவனுக்கு பெரியவருக்கான தண்டனை வழங்கப்பட்டது.

  இதேபோன்ற பிரிவு தற்போது இந்தியாவில் சமர்ப்பிக்கப்பட்ட சட்டத்திலும் உள்ளது. அதனால் 16-18 வயதில் உள்ள குற்றவாளியை அவர்களின் குற்றத்திற்கு ஏற்ப சமூக-மனவியல் நிபுணர் ஒருவரின் கருத்தை வைத்தே தீர்ப்பு வழங்கப்படும்.எல்லாக் குற்றங்களுக்கும் பெரியவர்களுக்கான தண்டனை கிடைக்காது. பாலியல் போன்ற கொடுங்க் குற்றங்களுக்கு மட்டுமே பெரியவர்களுக்கான தண்டனை கிடைக்கும்.

  அதனால் கனிமொழி அக்கா சமர்ப்பிக்கப்படும் சட்டத்தை முழுவதும் தெரிந்து கொண்டு கருத்து சொல்லி இருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்று எண்ணுகிறேன்.

 4. rajanat சொல்கிறார்:

  I have a great respect for your writtings but you too get a jerk like an elephantn. If you agree on cane beating of Singapore then you are leading your opinion to Saudi Arabia criminal judicial system.
  I.am not getting into the age debate. Let Indian judiciary decide what is right by preserving Indian democracy and women dignity.

 5. rajanat சொல்கிறார்:

  I have read other folks comments and they too reflect my point of view on kasaiadi.

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   நண்பரே,

   நான் முக்கியமாக வலியுறுத்த வந்தது –
   விரைவான விசாரணை,
   மிகக் கடுமையான தண்டனை –
   தண்டனை பற்றிய பயத்தை அனைவர் மனதிலும் உண்டு பண்ணுவது –
   என்பதைத்தான்.

   சவுக்கடி தான் என்றில்லை –
   தப்பிக்கவே முடியாது – கடுமையாக தண்டிக்கப்படுவார்கள்
   என்கிற பய உணர்வு உண்டாக்கப்பட வேண்டும்.

   -வாழ்த்துக்களுடன்,
   காவிரிமைந்தன்

 6. Vaidyalingam Renganathan சொல்கிறார்:

  பாலியல் குற்றம் செய்பவர்கள் முதியவர்களாயிருந்தால் தூக்குத் தண்டனையும் இளையவர்களாய் இருந்தால் ஆயுள் தண்டனையும் அளிக்க வேண்டும். அப்பொழுதுதான் இந்த குற்றங்களை தடுக்க முடியும்.

 7. neelan neelan சொல்கிறார்:

  இரண்டு பக்கமும் சிந்திக்க வேண்டித் தான் உள்ளது. முதலில் பெண்கள் மீதான பாலியல் வன்முறை, அடுத்து சிறுவர்கள் மீதான பாலியல் வன்முறை. சிறுவர்களை அதாவது 15 – 18 வயதுடையவர் பாலியல் உட்பட குற்றவியல் குற்றங்களைச் செய்கின்ற போது அவர்களை எவ்வாறு கையாளவது என்பதில் பல குழப்பங்கள் உள்ளன, சில சமயங்களில் மற்றவர் செய்கின்ற குற்றங்களை இவர்கள் மீது போட்டு சிறு வயதிலே குற்றவாளிகளாக்கப்படும் அபாயமும் உள்ளது. இந்த வயதுடையோர் குற்றம்சாட்டப்பட்டவராக இருக்கும் வரை சிறையில் வைத்திருக்கலாம், ஆனால் இவர்களுக்கு என்ற தனிப்பட்ட சிறையில் வைத்திருக்க வேண்டும். அதன் மூலம் மற்ற குற்றவாளிகளோடு தொடர்பு ஏற்படாமலும், வளர்ந்தவர்களால் பாலியல் வன்முறைக்கு ஆளாகாமலும் இருப்பர். இவர்கள் குற்றவாளிகள் என நிரூபிக்கப்படும் வரையில் குழந்தைகள் பாதுகாப்பு அமைப்பு ஒன்று இவர்களை கண்காணிக்கவும், ஆலோசனை மற்றும் உதவிகளை வழங்கலாம். இந்த வயதுடையோர் பாலியல் வல்லுறவு, கொலை போன்ற கடும் குற்றங்களில் ஈடுபட்டு நிரூபிக்கப் பட்டால் 18 வயதை அடைகின்ற வரை சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் வைத்திருக்கலாம். 18 வயதை அடைந்த பிறகு சிறைக்கு மாற்றலாம். ஆனால் இத்தகையோருக்கு அதிகப் பட்ச தண்டனைகளான மரண தண்டனை வழங்கப்படுவது முறையல்ல. அது மட்டுமின்றி 18 வயதில் இருந்து எஞ்சியுள்ள தண்டனைக் காலத்தில் பாதியினை கடந்த பிறகு அவர்களது நன்னடத்தை மற்றும் ஒழுக்கத்தின் அடிப்படையில் சிலருக்கு தண்டனைக் குறைப்புக்கள் செய்யலாம். ஆனால் எவ்வளவு பெரிய குற்றமும் செய்துவிட்டு சிறுவர் என்பதால் சிறுவர் சீர்திருத்தப் பள்ளியிலோ, அல்லது ஒரு சில ஆண்டு தண்டனையோ பெற்று விட்டு வெளியேறலாம் என்ற முறை கைவிடப் படல் வேண்டும். இல்லை எனில் இத்தகைய சிறுவர்களையே சமூக விரோதக் கும்பல்கள் அனைத்து வித குற்றங்களைச் செய்ய பயன்படுத்திக் கொள்வார்கள்.

 8. LVISS சொல்கிறார்:

  The issue is being looked at from age angle –No thought is given to the shame that the victim would feel — Nothing like punishment works in our country –Between 17 yrs and 11 months and 18 years there are just about 30 days to do something and get away -After the Nirbhaya incident quite a few crimes of the same nature happened and some times one of the suspects was below 18 —

 9. srinivasanmurugesan சொல்கிறார்:

  நிச்சயம் கடுமையான தண்டனை வழங்கப்பட்டால் தான் குற்றங்கள் குறையும்.வழக்குகளும் காலதாமதம் இல்லாமல் உடனுக்குடன் விசாரிக்கப்பட்டு தண்டனை வழங்கப்பட்டால் குற்றமிழைக்க பயம் ஏற்படும்.நமது ஊரில் சாலையில் செல்பவர்கள் அருகில் வருபவர்களை பற்றி கவலைப்படாமல் எச்சில் துப்பி செய்கின்றார்கள்.நீர் நிலைகள் /சாக்கடைகளில் குப்பைகளை கொட்டுகின்றார்கள்.சுத்தம் சுகாதாரம் நல்லொழுக்கம் பற்றி சிறு வயது முதலே கற்பிக்கப்பட வேண்டும். இதற்கு ஆசிரியர்களுடன் பெற்றோரும் பாடுபட வேண்டும்.

 10. Ganpat சொல்கிறார்:

  பிறந்த தேதி மட்டுமே ஒருவன் வயதை தீர்மானிக்காது.மனோ நிலைப்படி அவன் வயது கண்டுபிடிக்கப்பட்டு அதற்கேற்றார் போல தண்டனை வழங்க வேண்டும்.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.