சின்ன மருத்துவர் அய்யா மீது என்ன வழக்கு …..?

ANBUMANI_RAMADOSS

வழக்கு இருக்கிறது …. வழக்கு இருக்கிறது என்று சொல்லிக்கொண்டே
இருக்கிறார்களே தவிர, என்ன ஏது என்று விவரமாக இதைப்பற்றிய
விஷயங்கள் தமிழ் செய்தித்தாள்களில் வெளிவந்ததாகத் தெரியவில்லை.

“வருங்கால முதல்வர்” வேட்பாளராக அவரும் இருப்பதால்,
விமரிசனம் தள நண்பர்களுக்காக
அந்த வழக்கு பற்றிய விவரங்களை கொஞ்சம் சேகரித்தேன்…..
விவரங்கள் கீழே –

அவர் மத்திய சுகாதார அமைச்சராக இருந்தபோது நிகழ்ந்த விவகாரம் இது.
(காங்கிரஸ் கூட்டணி அரசில் ம.மோ.சிங் பிரதமராக இருந்தபோது
ஐந்து ஆண்டுகள் அமைச்சராக இருந்தார்…..)

2007 ஆம் ஆண்டில், இந்தூரில் (ம.பி.)
ஒரு புதிய மருத்துவ கல்லூரி துவங்கப்பட்டிருக்கிறது
( Index Medical College Hospital and Research Centre (IMCHRC) ).
இரண்டாம் ஆண்டு வகுப்பை துவங்குவதற்கு முன்னதாக மேலும்
சில வசதிகளை உண்டு பண்ணிக்காட்ட வேண்டும் என்கிற நிபந்தனையுடன்
அங்கு முதல் ஆண்டில் மருத்துவ படிப்புக்கு (MBBS) 150 மாணவர்களை
சேர்த்துக்கொள்ள இந்தியன் மெடிகல் கவுன்சில் (MCI) அனுமதி
கொடுத்திருக்கிறது.

2008 ஆன் ஆண்டு மே மாதத்தில், நிபந்தனைப்படி மேற்படி அடிப்படை
வசதிகள் செய்யப்பட்டு விட்டனவா என்று MCI ஒரு குழுவை அனுப்பி
வைத்து, ஆய்வு நடத்தி இருக்கிறது. அந்த நிபந்தனைகள் நிறைவேற்றப்
படவில்லை என்று குழு அறிக்கை தந்ததன் பேரில், 2ம் ஆண்டு
மாணவர்களின் சேர்க்கைக்கு MCI அனுமதி கொடுக்க மறுத்திருக்கிறது.

கல்லூரி நிர்வாகம் மருத்துவ கவுன்சிலிடம் மீண்டும் ஒரு முறை
மேல் முறையீடு செய்ததன் பேரில் MCI மற்றொரு குழுவை அனுப்பி
மீண்டும் ஒரு முறை ஆய்வு நடத்தி இருக்கிறது. இந்த முறையும்,
கல்லூரியில் போதிய அளவு ஆசிரியர்கள் நியமிக்கப்படாததையும்,
படுக்கைகளின் எண்ணிக்கையிலும், அடிப்படை வசதிகளிலும் குறைகள்
தொடர்ந்து நீடிப்பதை அறிந்து MCI அனுமதி வழங்க
மறுத்து விட்டது.

இதைத் தொடர்ந்து கல்லூரி நிர்வாகம் உச்சநீதிமன்றத்தை அணுகி
இருக்கிறது. அதன் பேரில் நீதிமன்றமே ஒரு இடைக்கால குழுவை
அமைத்து- மேற்படி கல்லூரியில் ஆய்வு நடத்தச் சொல்லி இருக்கிறது.
அந்த குழுவின் அறிக்கையும் கல்லூரிக்கு சாதகமாக இல்லை.

கடைசியாக கல்லூரி நிர்வாகிகள் மத்திய சுகாதார அமைச்சகத்தை
அணுகி இருக்கிறார்கள். அதன் அடிப்படையில் சுகாதாரத்துறை
ஒரு குழுவை அமைக்க, அந்த குழுவும், கல்லூரியில் உள்ள
குறைகளை சுட்டிக்காட்டி அறிக்கை கொடுத்திருக்கிறது.

விடுமா கல்லூரி நிர்வாகம்…? மீண்டும் சுகாதாரத்துறை
அமைச்சரை ( அல்லது அமைச்சகத்தை ) அணுகி உதவி கோரி
இருக்கிறது.
சுகாதார அமைச்சகமும் மீண்டும் ஒரு குழுவை அனுப்பி
இருக்கிறது. இந்த முறை அனுப்பப்பட்ட குழுவில், மத்திய சுகாதார
துறைக்கு சொந்தமான டெல்லி சப்தர்ஜங் மருத்துவ மனையைச்
சேர்ந்த டாக்டர்கள் ஜெ.எஸ்.துபியா மற்றும் டி.கே.குப்தா ஆகியோரை
அனுப்பி இருக்கிறது.

இந்த குழு, இந்தூர் மருத்துவ மனையில் “போதிய வசதிகள்”
செய்யப்பட்டு விட்டதாக செப்டம்பர், 2008-ல், சுகாதாரத்துறையிடம்
அறிக்கை சமர்ப்பித்து இருக்கிறது. அந்த அறிக்கையை, அப்போதைய
துணைச்செயலாளரான கே.வி.எஸ். ராவ், பிரிவு அலுவலரான
சுதர்சன் குமார் ஆகியோர் பரிசீலித்திருக்கின்றனர். அதன் பிறகு,
மத்திய சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த அன்புமணி
மேற்படி கல்லூரிக்கு தொடர்ந்து இயங்க அனுமதி கொடுத்திருக்கிறார்….!!

பல தடவை, பல குழுக்களை அனுப்பி, அனைத்துமே வசதிகள்
செய்யப்படவில்லை என்று கூறி குறைகளைப் பட்டியலிட்டு
கொடுத்திருக்கும்போது, மத்திய அமைச்சர் தாமாகவே முன்வந்து
அனுமதி கொடுத்ததை MCI யால் ஜீரணிக்க முடியவில்லை….!

( MCI எந்த லட்சணத்தில் செயல்படுகிறது என்பது பக்கம் பக்கமாக
எழுதப்பட வேண்டிய தனி விஷயம் … !! )

எனவே, MCI தானாகவே மீண்டும் ஒரு குழுவை அமைத்து
2008-ம் ஆண்டு அக்டோபர் 1-ந்தேதி அதே கல்லூரியில் புதிதாக ஆய்வு
நடத்தியது. இந்த ஆய்வில் கல்லூரியில் வசதிகள் “செய்யப்படவில்லை”
என்பது தெரிய வந்திருக்கிறது.

அன்புமணி அவர்கள் அமைச்சராகத் தொடர்ந்த வரையில்
சூடு பிடிக்காமலிருந்த இந்த விஷயம், 2009 தேர்தலுக்குப் பிறகு,
அவர் மீண்டும் அமைச்சராக முடியவில்லை என்கிற நிலையில்
விஷயங்கள் வெளியில் தெரியவந்து, சிபிஐ-யும் இது குறித்து
வழக்கு ஒன்றைப் பதிவு செய்து விசாரிக்க ஆரம்பித்தது.

பல அதிர்ச்சியான விஷயங்கள் வெளிவந்தன.
சுகாதார அமைச்சர் கல்லூரிக்கு அனுமதி கொடுத்த நாளன்று,
சம்பந்தப்பட்ட கல்லூரியின் நிர்வாகி/துணைத்தலைவர் – அமைச்சகத்துக்கு
நேரில் வந்து சென்றிருப்பது ஆதாரபூர்வமாகத் தெரிய வந்திருக்கிறது.

கல்லூரி நிர்வாகம் போலியான ஆசிரியர் பட்டியலை தயாரித்து
அளித்திருக்கிறது. கையெழுத்துகள் போலியாக போடப்பட்டிருந்தன.
சுகாதார அமைச்சகம் அனுப்பிய குழுவை, மருத்துவ கல்லூரி
தனியாக “கவனித்து” இருக்கிறது.

பல தடயங்கள் கிடைத்ததன் பேரில்,
சிபிஐ “லஞ்ச ஊழல்” தடுப்பு சட்டத்தின் கீழ் –

தகுதியில்லாத ஒரு மருத்துவக் கல்லூரிக்கு அனுமதி கொடுத்து
“தனிப்பட்ட பலன்”களை பெற்றதாக சின்ன மருத்துவர் அய்யா,
மற்றும் இதில் தொடர்புடைய

சுகாதாரத்துறை அதிகாரிகள் கே.வி.எஸ்.ராவ், சுதர்சன் குமார்,
டெல்லி சப்தர்ஜங் ஆய்வுக் குழுவினரான துபியா, குப்தா,மற்றும்

இந்தூர் மருத்துவக் கல்லூரி Index Medical College Hospital and
Research Centre (IMCHRC) -யின்
தலைவர் சுரேஷ்சிங் பதோரியா மற்றும்
அந்த கல்லூரியைச் சேர்ந்த 4 அலுவலர்கள் ஆகியோர் மீது –

குற்ற வழக்குகள் பதிவு செய்து விசாரணை டெல்லி பாட்டியாலா
வளாக, சிபிஐ நீதிமன்றத்தில் – நடந்து வருகிறது / நிலுவையில்
இருக்கிறது.

கிட்டத்தட்ட இதே பாணியில், உத்திர பிரதேசம் – பரேலியில்
“ரோகில்கண்ட் மருத்துவக் கல்லூரி” க்கு அனுமதி வழங்கிய
விவகாரத்திலும் ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் டாக்டர் அன்புமணி
மீது ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டு, அந்த வழக்கு தொடர்பான
குற்றப்பத்திரிக்கை லக்னோ நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டிருக்கிறது.

ஏற்கெனவே, டெல்லி சிபிஐ தனி நீதிமன்றத்தில் அதே போன்ற
ஒரு வழக்கு நடந்து வருவதால், லக்னோ வழக்கையும் டெல்லிக்கு
மாற்றி உச்சநீதிமன்றம் உத்திரவிட்டதன் பேரில், இரண்டு வழக்குகளும் –
டெல்லி சிபிஐ, பாட்டியாலா வளாக நீதிமன்றத்தின் முன்
நிலுவையில் இருக்கின்றன.

இப்போதைக்கு இது தான் நிலவரம்….

Gallery | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

சின்ன மருத்துவர் அய்யா மீது என்ன வழக்கு …..? க்கு 9 பதில்கள்

 1. Pingback: சின்ன மருத்துவர் அய்யா மீது என்ன வழக்கு …..? | Classic Tamil

 2. ஜோதிஜி திருப்பூர் சொல்கிறார்:

  இது வரையிலும் இந்த விவகாரங்களை எவரும் இது போன்று தெளிவாக எழுதவில்லை. நன்றி,

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   நன்றி ஜோதிஜி.

   -வாழ்த்துக்களுடன்,
   காவிரிமைந்தன்

 3. bandhu சொல்கிறார்:

  பெரியதாக அடிபட்ட இன்னொரு விஷயம். இவருக்கும் டாக்டர் வேணுகோபாலுக்கும் ( AIMS ) நடந்த சச்சரவுகள். விபரங்களை மறந்து விட்டேன்..

  ஆனால், இந்த வழக்கும் ஊழல் வழக்குதான் போல. டாக்டர் அன்புமணி சொல்வது போல் இது சாதாரண வழக்காகத் தெரியவில்லை.

 4. சைதை அஜீஸ் சொல்கிறார்:

  //2009 தேர்தலுக்குப் பிறகு, அவர் மீண்டும் அமைச்சராக முடியவில்லை என்கிற நிலையில் விஷயங்கள் வெளியில் தெரியவந்து//
  மே 2010-ல் MCI-ஐ அன்றைய ஜனாதிபதி கலைத்தார்!

 5. நெல்லைத் தமிழன் சொல்கிறார்:

  தமிழ் நாட்டில் பொறியியல் கல்லூரிகளுக்கு எப்படி அனுமதி கொடுக்கப்படுகிறது என்பதை ஆராய்ந்தால், அது ஒரு பகீர் ரகம். யாரும், முதலில் காசு போட்டு பின்பு ஒரு சீட்டுக்கு மாணவன் தரும் பணத்திலிருந்து லாபம் பெறுவதில்லை. முதலில் லஞ்சம். கட்டடம் கூரைக் கட்டிடம். ஆசிரியர்கள் (என்று தரும் லிஸ்ட்) போலி. குழுவைக் கவனித்து (லஞ்சம் மூலம்), அரசியல்வாதிகளைக் கவனித்து அனுமதி பெற்று, முதல் 4 பேட்ச் மாணவர்கள் மூலமாக வருமானம் பெற்று பின்புதான் கல்லூரி வளரும். (ரேஷன் அரிசியை மடை திருப்பியதாக வேலூர் கல்லூரித் தாளாளர் மீது குற்றம் வந்ததும், மத்திய அரசாங்கத்தில் உயர் பதவியில் இருக்கும் மூத்த தம்பியின் கல்லூரி எப்படி வளர்ந்ததென்பதும் இதனைச் சொல்லும்.

 6. நெல்லைத் தமிழன் சொல்கிறார்:

  அதுனால, அன்புமணியை மட்டும் குறை சொல்வது இயலாது. நம் சிஸ்டத்தைத்தான் குறை சொல்லவேண்டும்.

 7. தங்க.ராஜேந்திரன் சொல்கிறார்:

  இந்த விஷயத்தை இவ்வளவு சரியாகப் பதிவிட்டதற்கு மிக்க நன்றி!

 8. வெ.க.சந்திரசேகரன் சொல்கிறார்:

  தனியாரால் பொறியியல்,மருத்துவம்,ஆசிரியர் பயிற்சி பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் என்று கடந்த பத்து ஆண்டுகளில் துவங்கி நடத்தப்பட்டு வரும் கல்வி நிறுவனங்களின் செயல்பாடு,உள் கட்டமைப்பு,கற்பித்தல் திறன் மற்றும் மாணவர்களின் செயல்திறன் போன்றவை பற்றிய ஒரு வெள்ளை அறிக்கை வெளியிடபடுமானால் நமது கல்வி தந்தைகள் மற்றும் அனைத்து விதங்களிலும் அவர்களுக்கு உதவியாக இருக்கும் அரசியல்,அதிகார ஆண்டைகளின் சுயமுகம் வெளிப்படும்.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.