சல்மான் கான் – வருத்தம் தரும் சில கேள்விகள் …..

.

சல்மான் கான் வழக்கு முடிவு – ஓரளவு விவரங்கள் அநேகமாக
எல்லாருக்கும் தெரியும்.

எனவே சுருக்கமாக –

2002 செப்டம்பர் 28-ந்தேதி நள்ளிரவு / விடியற்காலை, மதுவிருந்து
ஒன்றில் கலந்துகொண்டு விட்டு, தனது ஆடம்பர காரில் வீடு
திரும்பிக்கொண்டிருக்கிறார்.
‘ஹில்’ சாலையில் வரும்போது கார்
தறிகெட்டு தாறுமாறாக ஓடுகிறது. சாலையை விட்டு, இடது புறம்
அமெரிக்கன் எக்ஸ்பிரஸ் பேக்கரியின் வாசலில் படுத்திருந்த
சிலரின் மீது ஏறி, இறுதியாக பேக்கரியின் சுவரில் மோதி நிற்கிறது.

கார் ஏறியதாலும், மோதியதாலும் – நூருல்லா என்பவர் இறந்து போனார்.
அப்துல்லா ரவுப் ஷேக் கின் கால் நசுங்கி தண்டுவடம் முறிந்தது.
ஷேக், மனு கான் மற்றும் 2 பேருக்கு கை, கால்கள் உடைந்தன.
விபத்து நடந்தவுடன், காரிலிருந்த சல்மான் இறங்கி வீட்டிற்குச் சென்று
விட்டார். அவருடன் பாதுகாப்பிற்காகச் சென்றிருந்த போலீஸ்காரர் தான்
காவல் துறைக்கு தகவல் கொடுத்திருக்கிறார். குடித்து விட்டு போதையில்,
லைசென்சு கூட இல்லாமல் காரை ஓட்டி விபத்தை உண்டு பண்ணியதாக
சல்மான் கான் மீது வழக்கு தொடரப்பட்டது.

ஏறத்தாழ 13 ஆண்டுகளுக்குப் பிறகு மே 5, 2015 அன்று செஷன்ஸ் கோர்ட்
ஒருவழியாக வழக்கை முடித்துக்கொண்டு சல்மான் கானுக்கு 5 வருட
சிறைத்தண்டனையும், 25,000 ரூபாய் அபராதமும் விதித்திருக்கிறது.

தண்டனை அறிவிக்கப்பட்ட ஒரு மணி நேரத்துக்குள், சல்மான் கானின்
வக்கீல் (புகழ்பெற்ற உச்சநீதி மன்ற லாயர் ஹரிஷ் சால்வே ),
மும்பை உயர்நீதிமன்றத்தை அணுகி – இடைக்கால ஜாமீன் கேட்டிருக்கிறார்.

தீர்ப்பின் நகல் கூட கொடுக்கப்படாததால்
தாங்கள் ரெகுலர் ஜாமீன் கோர முடியவில்லை என்றும் சொல்லி இருக்கிறார்.
மும்பை உயர்நீதி மன்றம் முதலில் 2 நாளைக்கு இடைக்கால
ஜாமீனும், பின்னர் தண்டனையை நிறுத்தி வைத்து, நிரந்தர ஜாமீனும்
கொடுத்துவிட்டது.

பல கேள்விகள் எழுகின்றன –
சட்ட ரீதியாகவும், மனிதாபிமான அடிப்படையிலும் –

1) இந்த மிகச்சாதாரண ஹிட் அன்ட் ரன் என்று சொல்லப்படும்
இந்த வழக்கு – பதிமூன்று வருடங்கள் இழுத்தடிக்கப்பட யார் காரணம் ?
அல்லது எது காரணம் ?

2) இந்த தாமதத்தை ஏன் யாருமே, நீதிபதி உட்பட – கண்டிக்கவில்லை…?

3) பத்து மாத கால தாமதத்தால் வர வேண்டிய பதவிஉயர்வு
வராமலே ஓய்வு பெற வேண்டிய நிலை ஏற்பட்டு விட்டது
என்று
உச்சநீதிமன்ற நிர்வாகத்தை குறை கூறி கடந்த மாதம் பேசினாரே,
ஒரு மாநில உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி –
இந்த 13 வருட கால தாமதத்தை பற்றி சொல்ல அவருக்கு
எதாவது இருக்குமா …?

3) பதிமூன்று வருடங்கள் காத்திருக்க முடிந்த வழக்குக்கு,
தீர்ப்பின் நகல் தயார் செய்யப்படும் வரையில் காத்திருக்க முடியாமல்
போனது ஏன் ?
தீர்ப்பின் நகல் தயாராகாத நிலையில் – தீர்ப்பு ஏன்
அவசர அவசரமாக சொல்லப்பட வேண்டும் ..?

4) சரி – என்ன தீர்ப்பு கொடுக்கப்பட்டது என்பதற்கான ஆதாரம் கூட
இல்லாமல், தண்டனை அறிவிக்கப்பட்ட ஒரு மணி நேரத்திற்குள்ளாகவே,
உயர்நீதிமன்றம் தற்காலிக ஜாமீன் கொடுத்தது எப்படி …?
எந்த ஆவணங்களின் அடிப்படையில் …?

எல்லா வழக்குகளிலும் இது போல் நடக்குமா …?

5) இரண்டு நாட்களுக்குள்ளாகவே, அவரது அப்பீல் ஏற்கப்பட்டு,
தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டு, நிரந்தர ஜாமீனும் அளிக்கப்படுவது
விந்தையாக இல்லை…? இந்திய நீதித்துறை சரித்திரத்திலேயே
இதுவரை இல்லாத விசித்திரம் …?

6) 2000 கோடி பணத்திற்கு அதிபர் என்பதாலோ –
புகழ்பெற்ற திரையுலக நட்சத்திரம் என்பதாலோ – சட்டமும், நீதியும்
வித்தியாசமாகச் செயல்பட முடியுமா என்ன …?

மனிதாபிமான நோக்கிலும் சில கேள்விகள் –

இந்த விபத்திற்குப் பிறகு – மும்பை உயர்நீதிமன்றம் –
இறந்து போன நூருல்லா மெஹ்பூப் கானின் மனைவிக்கு
பத்து லட்சம் ரூபாயும், கால் ஒடிந்து போன அப்துல்லா ரவுத் ஷேக் கிற்கு
மூன்று லட்சமும், காயமடைந்த மற்றவர்களுக்கு தலா ஒன்றரை லட்சமும்
சல்மான் கான் கொடுக்க வேண்டுமென்று உத்திரவிட்டது.

wife of Nurulliah mohboob khan who was killed in the accident

விபத்தில் செத்துப்போன நூருல்லா மெஹ்பூப் கானின் மனைவியிடம்
(புகைப்படத்தில் காணப்படுபவர் ) – இந்த பத்து லட்சம் ரூபாய் பணம்
இன்னமும் போய்ச்சேரவே இல்லை.
காரணம் – நூருல்லா
மெஹ்பூப் கானுக்கும், அவருக்கும் நிகழ்ந்த திருமணத்திற்கான
சட்டபூர்வமான சான்றுகளை அவர் கொடுக்கவில்லையாம்….!

இந்த தீர்ப்பிற்குப் பிறகு அவரும் சரி, காலை இழந்த அப்துல்லா
ரவுக் ஷேக்கும் சொல்கிறார்கள். “சல்மான் கானுக்கு தண்டனை
கிடைத்தாலென்ன – கிடைக்காவிட்டாலென்ன … அன்றாட
சோற்றுக்கே வழியில்லாமல் திண்டாடும் எங்களுக்கு
தகுந்த பண உதவி செய்ய எந்த கோர்ட்டும் உத்திரவு இடாதா ?
என்று…

உண்மை தானே ?-
எத்தனை வருடம் சிறைத்தண்டனை என்று யோசிக்கும்
நீதிமன்றம், பாதிக்கப்பட்டவர்கள் என்ன ஆனார்கள் …?
அவர்களுக்கு என்ன உதவி கிடைத்தது…? என்று யோசித்ததா ..
.?
குற்றவாளியை சிறையில் போட்டு விட்டால் …கடமை தீர்ந்ததா ?

இரண்டாயிரம் கோடி வைத்திருப்பவர், ஆண்டுக்கு
200 கோடி சம்பாதிப்பவர் – அவரிடம் பெரிய தொகையை அபராதமாக
விதித்து, அந்த பணத்தை, பாதிக்கப்பட்டவர்களுக்கு நஷ்டஈடாக
கொடுக்கச் செய்ய வேண்டாமா …?

இத்தனை பேர் இருக்கும் மும்பை சமூகத்தில்,
இந்த பாதிக்கப்பட்ட நபர்களுக்கு உரிய நஷ்ட ஈடோ, பண உதவியோ
கிடைக்க உதவ யாருமே முன்வரவில்லையா …?

உதவி செய்யக்கூட கோர்ட் தான் உத்திரவு இட வேண்டுமா ?

யாருக்கும் மனசாட்சி இல்லையா …?
இரண்டாயிரம் கோடி வைத்திருக்கும் நடிகர் – சட்டம் சொன்னால்
மட்டும் தான் உதவி செய்ய வேண்டுமா …?

விபத்தினால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் –
குற்ற உணர்ச்சி தான் இல்லையென்றாலும் கூட –
மனிதாபிமானத்தோடாவது உதவியிருக்க வேண்டாமா ..?

வேதனையாக இருக்கிறது –
நமது சட்டத்தையும், நீதித்துறையையும்,
கருணையற்ற சமுதாயத்தையும் பார்க்க …

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

10 Responses to சல்மான் கான் – வருத்தம் தரும் சில கேள்விகள் …..

 1. கில்லர்ஜி சொல்கிறார்:

  நாட்டில் ரசிகன் என்ற அறியாமைவாதிகள் வாழும்வரை இந்த வகையான அநியாயங்கள் தொடரும்.

 2. புது வசந்தம் சொல்கிறார்:

  மனிதாபிமானமாவது மண்ணாங்கட்டியாவது. ஊடகமும் அவரது துறையும் சல்மானுக்காக வருத்த படுகிறது. கோடி கணக்காக முதலீடு செய்த முதலாளி என்ன ஆவான்?.பாவம், அவன் வயிற்று பசி அறியாதவன், பண பசி மட்டுமே அறிந்தவன். தெருவோர மக்கள் தானே ?

  வழக்கு 13 வருடம் நடந்ததாம், என்ன செய்ய ? வருஷா வருஷம் கோடை விடுமுறை வேற இருக்கு ? அப்புறம் நீதி மன்ற புறக்கணிப்பு இப்படி பல…

  வசதி படைத்தவருக்கு ஒரு நீதி, வசதி இல்லாதவனுக்கு ஒரு நீதி…இன்னமும் விசாரிக்க படாத எத்தனையோ பேர் நீதிக்காக காத்திருகிறார்கள்..தங்களுக்கும் விடியும் என்ற நம்பிக்கையில்….இதில் குற்றவாளி எத்தனை பேரோ ? நிரபராதி எத்தனை பேரோ ?

  இதில் இப்படியும் சிலர் இருக்கிறார்கள்
  /*இஸ்லாமியர் என்பதால் சல்மான்கானுக்கு உடனடி ஜாமீன்: பாஜக தலைவர் சாத்வி பிராச்சி கூறியுள்ளார்.*/ இதை இன்னும் கொழுத்தி போட்டு குளிர் காய…

  அப்புறம் மற்றொரு முரண் :
  /நாட்டின் வளர்ச்சிக்கு தோள்களில் கலப்பையை ஏந்துங்கள் துப்பாக்கியை ஏந்தாதீர்கள் என மாவோயிஸ்டுகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி அறிவுறுத்தியுள்ளார்/ அவன் கலப்பையை கையில் எடுத்தவுடன் பன்னாட்டு கம்பெனிக்கு தாரை வார்க்கப்படும்.. அப்படிதானே…

  • bandhu சொல்கிறார்:

   ///நாட்டின் வளர்ச்சிக்கு தோள்களில் கலப்பையை ஏந்துங்கள் துப்பாக்கியை ஏந்தாதீர்கள் என மாவோயிஸ்டுகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி அறிவுறுத்தியுள்ளார்/ அவன் கலப்பையை கையில் எடுத்தவுடன் பன்னாட்டு கம்பெனிக்கு தாரை வார்க்கப்படும்.. அப்படிதானே…//
   இது மாவோயிஸ்ட்களை ஒழிக்க சாத்வீக வழி. கலப்பையை கையில் எடுத்தவுடன் கடன் கழுத்தை முறிக்கும். பிறகு மற்ற விவசாயிகள் போல தற்கொலை செய்து கொள்வார்கள்..

 3. Pingback: சல்மான் கான் – வருத்தம் தரும் சில கேள்விகள் ….. | Classic Tamil

 4. கிரி அனகை. சென்னை. சொல்கிறார்:

  நத்தை வேக நீதித்துறையையும்,பணம் மட்டுமே பிரதானமாய் நினைக்கும் வழக்கறிஞர்களையும், மனித மாண்புகளை இழந்து கருணையற்ற வாழ்க்கைக்கு பழகி கொண்ட மனிதர்களையும் நினைத்து வேதனையாகதான் இருக்கிறது..

 5. நெல்லைத் தமிழன் சொல்கிறார்:

  ‘நீதி எல்லாருக்கும் பொதுவாய் இருப்பது கடினம். மக்கள் தேர்ந்தெடுக்கும் ஆட்சியே நீதியை விட உயர்ந்தது. 64 கோடி ரூபாய் வழக்கில் நீதி கிடைத்ததாகச் சிலர் நம்பினாலும், அதனை அனுபவிப்பது மக்கள். 2ஜி, தொலைக்காட்சி வழக்கு, ஆசிய விளையாட்டு ஊழல், ஹரியானா நில ஊழல் போன்று எத்தனையோ ஊழல் வழக்குகளில் சட்டம் தூங்குகிறது. மக்களுக்கு நீதியின் மேல் எப்படி நம்பிக்கை வரும்?

 6. today.and.me சொல்கிறார்:

  ஹீரோ ஒர்ஷிப் சைக்கோக்கள் இருக்கும்வரை இவர்களை அசைக்கமுடியாது என்றே தோன்றுகிறது. இந் தக் கொடூரம் எவ்வளவு தூரம் வரை போகும் என்றால், “பிளாட்பாரம் என்பது நடப்பதற்குத்தானே அன்றி, தூங்குவதற்கு அல்ல, நீங்கள் உங்கள் கிராமங்களில்சென்று தூங்கினால் நாங்கள் ஏன் உங்களைக் கொல்லப்போகிறோம்” என்று சொல்லும் அளவுக்கு…

  மக்களே திருந்துங்கள்.

  Mumbai ke road Aur footpath pe sone ka shauk hai ?? Y not at your village no vehicles to kill u..

  http://businessofcinema.com/bollywood_news/singer-abhijeets-tweets-on-salman-khans-verdict-land-him-into-legal-trouble/206403

 7. today.and.me சொல்கிறார்:

  கா.மை.ஜி,
  உங்கள் கேள்விகள் 1-6அனைத்திற்கும் பதில் பணம், பணம், பணம்.
  அதை உபயோகப்படுத்தும் விதத்தில் உபயோகப்படுததினால் யாரைவேண்டுமானாலும் வளைக்கலாம், இறுக்கலாம், இடிக்கலாம்.
  யார் அதிகாரத்தில் இருந்தாலும்..!!

  பாதிக்கப்பட்டவர்கள் விசயத்தில், இவ்வளவுதான் நமது தற்போதைய நீதி-நிர்வாக-ஆட்சித் துறை.

  சரிசெய்ய யாராவது யாராவது எப்போதாவது வரமாட்டார்களா என்ன?
  நம்பிக்கைதானே வாழ்க்கை. காத்திருப்போம் நாளையாவது மாறும் என்று.

 8. தங்க.ராஜேந்திரன் சொல்கிறார்:

  இந்த லட்சணத்தில் சல்மான்கான் சமூகசேவை செய்து வருபவராம்; என்ன சேவை, வாழ வழியற்றவர்கள் சாகத்தான் வேண்டும் என்று காரை ஏற்றிக் கொல்வதாக இருக்குமோ?

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.