மாண்புமிகு நிதின் கட்காரிஜி’ யின் முன்னாள் விவகாரங்கள் ……

.

“காசு வாங்கினாலும் கூட வேலையை கச்சிதமாக முடித்து
விடுவார் ” – இது கட்காரிஜி பற்றி அவரது பாஜக அன்பர்கள்
பெருமையுடன் பேசும் விஷயம்.

கமிஷன் வாங்குவதை பெருமையுடன் கூறும் அளவிற்கு
சென்று விட்டார்கள் பாஜக நண்பர்கள்.

எனவே, அவர்கள் இன்னும் நிறைய பெருமை பாராட்டுவதை,
நமது வலைத்தள நண்பர்கள் ரசிக்க வேண்டும் என்பதற்காக,

ஏற்கெனவே கட்காரிஜி பற்றி இதே வலைத்தளத்தில்
வெளிவந்த இரண்டு இடுகைகளை கீழே மறுபதிவு
செய்கிறேன்.

இப்போதைய இடுகையுடன் அவற்றையும் தொடர்பு படுத்திப்
பார்த்தால், இவரது கடந்தகால பிரதாபங்கள்
இன்னும் நன்கு விளங்கும்.

————————————————————————————————————

நிதின் கட்காரியை தூக்கி எறிந்திருக்க வேண்டும்
பாஜக – ஆர் எஸ் எஸ் தலைமை !

Posted on ஒக்ரோபர் 26, 2012 by vimarisanam – kavirimainthan

——-
ஆதர்ஷ், காமன்வெல்த் கேம்ஸ், 2ஜி ஸ்பெக்ட்ரம் என்று
கடந்த 2 வருடங்களாக வரிசையாக வெளிவந்த
மத்திய காங்கிரஸ் கூட்டணி ஆட்சியின் ஊழல் பூதங்கள்
மக்களை மிரள வைத்தன.

அண்மையில் வெடித்த ராபர்ட் வாத்ரா, சல்மான் குர்ஷித்
விவகாரங்கள் மேலும் மேலும் எரிச்சலைக் கிளப்பின.

ஜனநாயகத்தில் – மக்கள் தாம் விரும்பும் ஒரு ஆட்சியை,
தாம் விரும்பும் தலைவர்களை –
தேர்ந்தெடுத்து அதிகாரத்தை கொடுக்க வழி இல்லை.

எனவே, இருப்பதற்குள் எது தேவலை,
எரிகிற கொள்ளியில் எந்த கொள்ளி தேவலை
என்கிற ரீதியில் தான்
ஒரு ஆட்சிக்கு மாற்றாக அடுத்த ஆட்சியைத் தேர்ந்தெடுக்க
வேண்டி இருக்கிறது.

இந்த அடிப்படையில், காங்கிரஸ் ஆட்சி சகிக்க முடியாத
உச்சத்திற்கு போனதால் – அடுத்து இருக்கும் கட்சிகளில்,
எது தேவலையோ, எதற்கு ஆட்சி அமைக்க வாய்ப்பு
இருக்கிறதோ அதைத் தேர்ந்தெடுப்பதை தவிர வேறு
வழி இல்லை. இந்த அடிப்படையில், மனதளவில்
மக்கள் அடுத்து பாஜக தலைமையிலான ஒரு கூட்டணி
ஆட்சிக்கு தயாராகிக் கொண்டிருந்தார்கள்.

காங்கிரஸ் கட்சிக்கு -ஊழலைப் பொறுத்த வரையில் –
நாங்களும் சளைத்தவர்கள் அல்ல என்று நிரூபித்துக்
காட்டாமல் பாஜக தலைமை விடாது போலிருக்கிறது.

கடந்த இரண்டு வருடங்களாக கர்னாடகாவில் எடியூரப்பா
போட்ட ஆட்டங்களை எல்லாம் சகித்துக் கொண்டு
அவர் தாடையைப் பிடித்து கொஞ்சிக்கொண்டிருந்தது
பாஜக தலைமை. வந்தது வரட்டும் என்று அப்போதே
அவரைத் தூக்கி எறிந்திருந்தால் பாஜகவுக்கு கர்னாடகாவில்
லிங்காயத்து ஓட்டுக்கள் போனாலும், மரியாதையாவது
மிஞ்சி இருக்கும். அவர் சொன்னதற்கெல்லாம் ஆட்டம்
போட்டது போக இப்போது அவர் தனிக்கட்சி துவங்குவதாக
வேறு அறிவித்து விட்டார்.
இப்போது லிங்காயத்து ஓட்டும் போச்சு –
மக்களிடையே மரியாதையும் போயிற்று !

அடுத்து -இப்போது நிதின் கட்காரி. பாஜக கட்சியின்
தேசியத் தலைவர் மீதே அடுக்கடுக்கான புகார்கள்.
அவரது டிரைவரும், அக்கவுண்டண்டும்
ஆளுக்கு 6 கம்பெனிகளில் டைரெக்டர்கள்
ஆக்கப்பட்டிருக்கிறார்கள் என்கிறபோது,
கொடுத்திருக்கிற அட்ரஸ் எல்லாம் போலி என்கிறபோது,
அரசாங்க காண்டிராக்டர்கள் மறைமுகமாக
அவர் நிறுவனத்தில் முதல் போட்டிருக்கிறார்கள்
என்கிறபோது –
முதல் நிலையில் – prima facie –
இதைவிட வேறு என்ன ஆதாரம் வேண்டும் ?

ஒன்று புகார்கள் வெளிவந்தவுடனேயே நிதின் கட்காரி
தானாகவே தலைமைப் பொறுப்பிலிருந்து விலகி இருக்க
வேண்டும்.
அல்லது பாஜக வின் உயர் மட்டத் தலைமையாவது
அவரை ராஜினாமா செய்யச் சொல்லி இருக்க வேண்டும்.

இரண்டையும் செய்யாமல், கட்காரி தான் விசாரணைக்கு
ஒத்துக் கொண்டிருக்கிறாரே – விசாரண நடந்து முடிவுகள்
வெளிவரும் வரை அவரை குற்றவாளி என்று சொல்ல
முடியாது என்று சப்பைக்கட்டு சொல்லிக் கொண்டிருப்பதை
விட கேவலமான நிலை எதுவும் இல்லை.

கட்காரி என்ன ஒத்துக் கொள்வது ?
– மத்திய காங்கிரஸ் அரசு
தான் துடித்துக் கொண்டிருக்கிறதே –
கட்காரி கேட்டாலும், கேட்காவிட்டாலும்
விசாரணை நடக்கப் போவது உறுதி.

பாஜக மவுனம் சாதிப்பதற்கு ஆர் எஸ் எஸ் தலைமையை
காரணம் காட்டுகிறார்கள். காலத்திற்கு ஒவ்வாத பல
கொள்கைகளைக் கொண்டிருந்தாலும், பொதுவாக
ஆர் எஸ் எஸ் நிறுவனம் அடிப்படையில் ஒழுக்கத்தையும்,
நேர்மையையும்,கட்டுப்பாட்டையும் வலியுறுத்தும்
ஒரு ஸ்தாபனம். கட்காரியின் ஊழல் சரித்திரத்தின்
காரணமாக பாஜக வுக்கு ஏற்பட்டுள்ள அவமானகரமான
நிலைக்கு ஆர் எஸ் எஸ் தலைமை காரணமாக
இருக்கக் கூடாது. ஆர் எஸ் எஸ் தலைமையை எதிர்பார்த்து
பாஜக இந்த விஷயத்தில் மவுனமாக இருக்கவும் கூடாது.

இதே நிதின் கட்காரியை தலைவராக வைத்துக் கொண்டு,
பாஜக வினர் எந்த முகத்தோடு மக்களை சந்திக்க முடியும் ?
எப்படி தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு, மக்களிடம்
ஓட்டுக் கேட்க முடியும் ?
காங்கிரஸை விட தாங்கள் வித்தியாசமானவர்கள் என்பதை
பாஜக எப்படி நிரூபிக்கப் போகிறது ?

காலம் தாழ்த்தாமல், எந்தவித சாக்கு போக்கும்
சொல்லாமல் – பாஜக உடனடியாக கட்காரியை
தலைமைப் பதவியில் இருந்து விலக்க வேண்டும்.

இல்லையேல் மக்களிடம் ஓட்டுக்கேட்க பாஜகவுக்கு
எந்த அருகதையும் இல்லை.

——————————————————————————————————————————————-

கேட்டாரே மந்திரி – “சொகுசு கப்பலுக்கு நானென்ன
கடலில் நீந்தியா போக முடியும் …?

Posted on மார்ச் 6, 2015 by vimarisanam – kavirimainthan
——–

கீழே புகைப்படத்தில் இருக்கும், சொகுசு கப்பலைப் பாருங்கள்…
எஸ்ஸார் க்ரூப் என்னும் இந்திய நிறுவனத்திற்கு சொந்தமானது.

sunrays-essar cruise

cruise-ship-1

cruise-ship-2

cruise-ship-3

இந்த சொகுசுக் கப்பல் ( luxury yacht ) பிரெஞ்சு கடலில்
waters of the French Riviera – நடுக்கடலில் – நிறுத்தி
வைக்கப்பட்டிருந்தது….

எதற்காக ….?

இந்நாள் மத்திய மந்திரி ஒருவர் –
அந்நாளில் – 2013 ஆம் ஆண்டு, ஜூலை 7
முதல் ஜூலை 9 வரையிலான நாட்களில் 8 பேர் அடங்கிய
தன் முழு குடும்பத்துடன் (புருஷன், பெண்டாட்டி, 2 பிள்ளைகள்,
ஒரு பெண் மற்றும் 3 வேண்டப்பட்டவர்கள்…)
இரண்டு நாட்களில் நடுக்கடலில் ஜாலியாக உல்லாச விடுமுறை
கொண்டாடுவதற்காக….!

இவர்கள் பிரெஞ்ச் கடற்கரையில் உள்ள ( Nice airport )
விமான நிலையத்திலிருந்து நடுக்கடலில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த
சொகுசுக்கப்பலுக்கு அந்த எஸ்ஸார் நிறுவனத்திற்கு சொந்தமான
ஹெலிகாப்டரிலேயே போகும்போதும், திரும்ப வரும்போதும்
பயணம் செய்தனர்….!!!

ஏன் அந்த கம்பெனியின் ஹெலிகாப்டரில் இலவசமாக பயணம்
செய்தீர்கள் என்று ஒரு செய்தியாளர் கேட்டதற்கு –
அந்த மந்திரி பதில் கேள்வி கேட்கிறார் ” நடுக்கடலில் இருந்த
அந்த கப்பலுக்கு நானென்ன நீந்தியா போக முடியும் …? “

மந்திரி இதற்காக பணம் எதாவது கொடுத்தாரா ?
( கொடுத்தால் -அப்புறம் அவர் மந்திரியாக இருப்பதற்கே
லாயக்கில்லை என்று அர்த்தமாகி விடுமே….. எனவே
…… கொடுக்கவில்லை !!!)

ஆனால் “அது அவர்களின் சொந்த விமானம்.
நான் அவர்களது விருந்தினராக அங்கு சென்றேன்..
டிக்கெட்டு வாங்கி பயணம் செய்யக்கூடிய விமானமாக
இருந்திருந்தால், நானே பணம் கொடுத்து டிக்கெட் வாங்கி
இருப்பேன்” என்கிறார் மந்திரி.

தன் செயலை இன்னும் நியாயப்படுத்த அய்யா மேலும் கூறுகிறார் –
” 2013- ஜூலையில் நான் மந்திரியாக இல்லை,
பாராளுமன்ற உறுப்பினர் கூட இல்லை…
எனவே எந்த பதவியையும் பயன்படுத்தி நான் இந்த சலுகைகளை
அனுபவித்ததாக எவனும் குற்றம் சாட்ட முடியாது…!!!

( அடுத்த பகுதியில் தொடர்கிறேன்….)

——————————————————————————————————————————–

.

( பகுதி-2 ) -மத்திய மந்திரியும் சொகுசு கப்பல் வாசமும் …..

” எஸ்ஸார் க்ருப் கம்பெனி செலவில் சுகவாசம்
அனுபவிக்கும்போது நான் தான் எந்தப் பதவியிலும் இல்லையே …
இதில் எந்த விதத்தில், என்னை சம்பந்தப்படுத்தி,
யார் கேள்வி கேட்க முடியும் ?” என்று கேட்கும்
அதிபுத்திசாலி மந்திரியின் வாதத்தில் நியாயம் எந்த அளவிற்கு
இருக்க முடியும் என்று யோசிப்பதை விட –

மக்களை எந்த அளவிற்கு அவர் முட்டாள்களாக
நினைத்துக் கொண்டிருக்கிறார்,
அவரது மனோபாவம் என்ன செய்தி சொல்கிறது
என்பது தான் முக்கியம்….

அதாவது சட்டத்தை மீறினால் தானே குற்றம் …
தர்மத்தை விடுங்கள் – நடைமுறையை,
மனசாட்சியை மீறினால் ஒரு தவறும் இல்லையே
என்பது தான் அவரது எண்ணமாக இருப்பது தெரிகிறது.

எட்டுபேர் கொண்ட குடும்பத்துடன், ஓசியில், ஒரு கம்பெனி
தயவில் ஹெலிகாப்டர் சவாரி செய்வதும், சொகுசு கப்பலில்
இரண்டு நாட்கள் தங்கி விடுமுறை கொண்டாடுவதும்
எந்தவித தவறும் இல்லை என்பது அவர் அபிப்பிராயம்.
இது ஏன் என்றும் நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது.

மந்திரி என்ன நினைத்திருப்பார் ? – ” இன்று அவர்கள்
செய்கிறார்கள், நாளைக்கு பதிலுக்கு நாம் ( அரசாங்கம்
மூலமாக ) “பதில் மரியாதை” செய்யப்போகிறோம் –
எல்லாம் ஒரு “பரஸ்பர கவனிப்பு” தானே …? ”
என்பது தான் அவரது எண்ண ஓட்டமாக இருந்திருக்க முடியும் …!!!

இந்த மந்திரியின் பின் சரித்திரத்தை ஒருக்கணம் நினைத்துப்
பார்த்தால் – இவரது செய்கைக்கான நியாயங்கள் புரிந்து விடும்.

என்ன இவர் பின்னணி – ?

சுமார் 15 வருடங்கள் மராட்டிய மாநிலத்தில் எம்.எல்.ஏ.வாக
இருந்திருக்கிறார். சில காலங்கள் சட்டமன்றத்தில் எதிர்க்கட்சித்
தலைவராக இருந்திருக்கிறார். 1995 முதல் 1999 வரை
PWD மந்திரியாக இருந்திருக்கிறார்….
ரோடு போடுவதில் …(!) புகழ் பெற்றவர்….!!!
இவர் மீது ஊழல் புகார் எழுந்து – விசாரிக்கப்பட்டு,
ஒரு வழியாக ….. முடித்து வைக்கப்பட்டிருக்கிறது.

பாஜக வின் மராட்டிய மாநிலத் தலைவராக இருந்திருக்கிறார்.
கட்சியின் அகில இந்திய தலைவராகவும் இருந்திருக்கிறார்.
2013-ல் இரண்டாம் முறையும் போட்டியிட முயற்சித்தபோது,
இவர் மீது “புர்தி” தொழில் நிறுவன செயல்பாடு குறித்து
புகார் எழுந்து, பதவியிலிருந்து “ஒதுங்க” வேண்டியிருந்தது.

தன் சொந்த கம்பெனிகளில் – தனது டிரைவர்களையும்,
சமையல்காரரையும், வீட்டு வேலைக்காரரையும்
டைரெக்டர்களாக்கி (பினாமிகள் ….) புகழ் பெற்றவர்.

மே, 2009-ல் இவர் வீட்டு எதிரே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த,
இவருக்குச் சொந்தமான காரில் ஒரு ஏழு வயதுப் பெண்ணின்
சடலம் கண்டெடுக்கப்பட்டது. அந்த சிறுமியின் உடலில்
சில இடங்களில் காயங்கள் இருந்தன. சீரியசாக மேல்
நடவடிக்கையின்றி விஷயம் முடித்து வைக்கப்பட்டது.
இவருக்கு இள வயதில் இரண்டு மகன்கள் உண்டு….
இதன் மூலம் நிகழ்ந்த ஒரே ஒரு நல்ல (?) விளைவு –
சம்பவம் நடந்த இரண்டு மாதங்களில், இவரது டிரைவர்
இவரது ஏழு (7) கம்பெனிகளில் டைரெக்டராக அமர்த்தப்பட்டார்.

அரசியலில் தீவிரமாக ஈடுபட்டுக்கொண்டே,
இவர் சொந்தமாக பல வர்த்தக நிறுவனங்களையும்
துவக்கி, லாபகரமாக (!) நடத்தி வந்திருக்கிறார்.

மந்திரியாக, மற்றும் அரசு பொறுப்புகளை ஏற்கும்போதெல்லாம்,
குடும்பத்தின் மற்ற உறுப்பினர்கள் பெயருக்கு தன் உரிமைகளை
மாற்றி விடுவார். இப்போதும் அதே நிலை தான்…!!!

இவரை “கவனித்து” கொண்ட எஸ்ஸார் நிறுவனம் –
ஒரு மல்டிநேஷனல் நிறுவனம். பலவிதமான தொழில்களில்
ஈடுபட்டிருக்கிறது. பல நாடுகளில் அதற்கு கிளைகள் இருக்கின்றன.
முதல் முதலாக – கட்டுமானத் தொழில், ரோடு போடுவது என்று
துவங்கிய நிறுவனம் Steel, Energy, Infrastructure, manufacturing,
Oil, metals and mining, shipping, business process outsourcing,
telecom, realty, retail and Services
என்று பல துறைகளிலும் தன் கால்களைப் பதித்தது.

மொத்தமாக, அது ஈடுபடாத தொழில் துறை இல்லை –
புதிதாக எந்த வாய்ப்பு கிடைத்தாலும், பயன்படுத்திக் கொள்ள
தயார் என்கிற நிலையில் உள்ள ஒரு நிறுவனம்….!!!

மந்திரிக்கு, இந்த நிறுவனத்தில் – எந்தவித “பங்கு”ம் இருக்காது
என்று நம்புவோம்…

முக்கியமான ஒரு விஷயம் – அண்மையில், மத்திய அரசின்
அமைச்சகங்களிலிருந்து ஆவணங்கள் களவாடப்பட்டது
தொடர்பாக கைது செய்யப்பட்டவர்களில்,
எஸ்ஸார் நிறுவனத்தின் உயர் அதிகாரி ஒருவரும் அடங்குவார்.

மத்திய அமைச்சரவைக் கூட்ட நிகழ்ச்சிகள் சம்பந்தப்பட்ட
சில ஆவணங்கள் இந்த நிறுவனத்தின் அலுவலகத்திலிருந்து
சிபிஐ யால் கைப்பற்றப்பட்டன….

இந்த மந்திரி மட்டுமல்லாமல், வேறு சில
அரசியல் “தலை”களையும்
இந்த நிறுவனம் “கவனித்து” வந்த செய்தியும்
வெளியாகி இருக்கிறது.

எல்லாம் சரி – இப்போது நமது முக்கிய கவலை என்ன …?

மத்திய தரை வழி மற்றும் நீர் வழி – கப்பல்
போக்குவரத்து துறை அமைச்சராக பதவி வகிப்பவர். மத்தியில்
பொறுப்பேற்ற பிறகு, கடந்த 8 மாதங்களுக்குள் இவர் ஆற்றிய
பணிகளில் முக்கியமானது –

இந்தியா முழுவதுமாக, 104 நீர் வழித்தடங்கள் போக்குவரத்துக்காக
தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கின்றன. அதில் 51 நீர் வழித்தடங்கள்
விரைவிலேயே சரக்கு மற்றும் பயணிகள் போக்குவரத்துக்காக
ஒப்பந்தங்களுக்கு விடப்படவிருக்கின்றன.

மேற்படி கம்பெனியிடம் 30 + 7 நடுத்தர, சிறிய கப்பல்கள்
ஏற்கெனவே உள்ளன. குறுகிய கால அவகாசத்தில்
மேலும் எத்தனை வேண்டுமானாலும் வாங்க அதற்கு வசதி உண்டு.
எத்தகைய புதிய தொழில்களில் வேண்டுமானாலும் ஈடுபட
அந்த கம்பெனி சகல வசதிகளுடன் தயாராக இருக்கிறது….

என்ன தான் ஈ டெண்டர், ஈ ஆக்-ஷன் என்றெல்லாம்
கூறிக்கொண்டாலும், இவை அனைத்தும் நேர்மையான முறையில்
நடத்தப்படுவது, சம்பந்தப்பட்ட இலாக்காக்களை நிர்வகிக்கும்
அமைச்சரை பொறுத்தது தானே …?

கோடிக்கணக்கான ரூபாய்கள் சம்பந்தப்பட்ட காண்டிராக்டுகள்,
திட்டங்கள், வேலைகளை – முடிவு செய்யும் பொறுப்பில்
இவர் இருக்கிறார்.

இன்னொரு ஆ.ராசா உருவாகிக் கொண்டிருக்கிறாரோ ….?

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

8 Responses to மாண்புமிகு நிதின் கட்காரிஜி’ யின் முன்னாள் விவகாரங்கள் ……

 1. Pingback: மாண்புமிகு நிதின் கட்காரிஜி’ யின் முன்னாள் விவகாரங்கள் …… | Classic Tamil

 2. சைதை அஜீஸ் சொல்கிறார்:

  எல்லாம் ஒரு பரிமாண வளர்ச்சிதானையா !

  • மணிச்சிரல் சொல்கிறார்:

   நன்றாக பரிணாம வளர்ச்சியடைந்தவர்களால் மட்டுமே இதை பண்ணமுடியும். மற்றவர்கள் முயற்சித்தால் பரிமாணத்தை தேய்த்து சட்டத்திற்குள்(2D Photo Frame) அடைத்துவிடுவார்கள்.

 3. today.and.me சொல்கிறார்:

  //“காசு வாங்கினாலும் கூட வேலையை கச்சிதமாக முடித்து
  விடுவார் ” – இது கட்காரிஜி பற்றி அவரது பாஜக அன்பர்கள்
  பெருமையுடன் பேசும் விஷயம்.

  கமிஷன் வாங்குவதை பெருமையுடன் கூறும் அளவிற்கு
  சென்று விட்டார்கள் பாஜக நண்பர்கள்.//

  Number one achievement of one year BJP rule.
  The complete brainwash of their slaves…

 4. paamaran சொல்கிறார்:

  காசு வாங்கினாலும் கூட — வேலை கச்சிதமாக முடித்து கொடுப்பவர்களுக்கு —– ” ஆயுளை ” அதிகமாக கொடுப்பானோ —- ஆண்டவன் …? { ஆண்டவன் — என்பது இறைவன் ! என்று ஒருவன் இருந்தால் }

 5. rathnavelnatarajan சொல்கிறார்:

  Reblogged this on rathnavelnatarajan.

 6. எழில் சொல்கிறார்:

  //“காசு வாங்கினாலும் கூட வேலையை கச்சிதமாக முடித்து
  விடுவார் ” //

  முன்பு இந்தியன் என்று சொல்ல வெட்கப்பட்டவர்கள் எல்லாம் தற்போதைய அரசு ஆட்சிக்கு வந்தபின் இந்தியன் என்று பெருமை பட்டு கொள்கிறார்கள் என்று பிரதமர் வெளிநாட்டில் சொன்னது இதனால் தான் போல…

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.