ஆர்.கே.நகரில் தேர்தல் கொண்டாட்டம்….!!! உண்டா …???

cartoon on elections

அண்மையில் இந்து வலைத்தளத்தில் ஒரு இடுகையைப் படித்தேன்.
“ஆர்.கே.நகருக்கு அடித்தது யோகம்” என்கிற தலைப்பில் –
முழுநீள அரசியல் நகைச்சுவை கட்டுரை. சுவையான இந்த
கட்டுரையை எழுதிய “ராணிப்பேட்டை ரங்கன்” அவர்களுக்கு
என் பாராட்டுக்களும், வாழ்த்துக்களும்.

முதலில் அந்த கட்டுரையிலிருந்து சில பகுதிகள் – பிறகு
நமது கருத்துக்கள்.

——————————

சென்னை மாநகரில் இடம் பெற்றுள்ள ஆர்.கே. நகருக்கு
ஜே.ஜே. நகராக – அதாவது இடைத்தேர்தலினால் ஜன சந்தடி மிக்க
நகராக – மாறும் அதிருஷ்டம் அடித்திருக்கிறது.
அ.தி.மு.க. சார்பில்
இத் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட வெற்றிவேல்
தன்னுடைய சட்டப் பேரவை உறுப்பினர் பதவியை ராஜிநாமா
செய்திருக்கிறார். (அவருடைய ராஜிநாமாவை நாம் அதிர்ஷ்டம்
என்று கூறவில்லை. அதற்கு பதில் மரியாதையாக அவருக்கு
அமையக்கூடிய அதிர்ஷ்டத்தைச் சொன்னோம்).

ஜெயலலிதா வேட்பாளர் என்றால், தேர்தல் முடிவு என்ன என்று,
“முட்டாளே முட்டாளே மூளையில்லா முட்டாளே” என்ற பாடலுக்கு
வாட்ஸ்-அப்பில் வாயசைக்கும் சிறுமி கூட சொல்லிவிடுவாள்.

எதிர்க்கட்சிகள் தனித்தோ, கூட்டாக நின்றோ போட்டியிடலாம்.
ஆனால் முடிவு வந்தவுடன் “பண பலம், ஆள் பலம் வென்றது,
காவல்துறை, மத்திய தேர்தல் ஆணையம், மாநிலத் தேர்தல்
ஆணையம், தேர்தல் பார்வையாளர் நடுநிலையோடு
செயல்பட்டிருந்தால் முடிவு மாறியிருக்கும்” என்று அறிக்கையை
இப்போதே தயாராக எழுதி வைத்துக் கொள் ளலாம்.

இந்த நேரம் பார்த்து ராதா கிருஷ்ணன் நகர் வாக்காளராக நாம்
இல்லையே என்ற ஏக்கம் யாருக்கு எழுந்தாலும் தப்பில்லை. அங்கே
இனி குப்பைகள் காணாமல் போகும். அந்தக்கால தபால் ஆபீஸ்
கிளியரன்ஸ் போல 4 மணி நேரத்துக்கு ஒருமுறை குப்பைகள்
அகற்றப்படும். அதற்கென்று ஒரு தனி ஐ.ஏ.எஸ். அதிகாரி வண்டியோடு
தெருமுனையில் (தேர்தல் முடியும்வரை) நிற்பார். சாலை விளக்குகள்
அனைத்தும் ஜெகஜோதியாக எரியும்.

நியூயார்க்கா, பாரீஸா என்று வியக்கும் அளவுக்கு சாலைகள்
மேடு பள்ளமில்லாமல் பளிச்சென்று ஆகிவிடும். பாதாள சாக்கடையில்
அடைப்பே இருக்காது. ஒவ்வொரு தெரு முனையிலும் ஒரு மேஸ்திரி
ரப்பர் டியூபுடன் உள்ளே குதித்து அடைப்பை நீக்கக் காத்திருப்பார்.

குழாயில் பன்னீர், ஜாதிக்காய், ஏலக்காய் கலந்த வாசனையோடு
இடைவிடாமல் தண்ணீர் வரும். பிராட்வே யிலிருந்து தாம்பரம் போகும்
பஸ் கூட ஒரு முறை ஆர்.கே. நகர் வழியாகப் போய்விட்டு வரும்.

முக்கியமாக, தெருவுக்கு ஒரு டிரான்ஸ்பார்மர், டிரான்ஸ்பார்மருக்கு
ஒரு ஏ.இ., ஒரு ஏ.இ.க்கு 2 லைன்மேன் என்று மின்சாரம் நேரடியாக
வீடுகளுக்குள் தடையின்றி பாயும். இப்படிப் பல வசதிகள் அந்தத்
தொகுதிக்கு வந்து குவியும்.

இப்போது எல்லோருடைய ஆர்வமும் ஜெயலலிதாவை எதிர்க்கப்
போகும் கட்சி(கள்) எது என்பதை அறிவதுதான். எல்லா எதிர்க்கட்சிகளும்
இணைந்து பொதுவேட்பாளரை நிறுத்தப் போகின்றனவா அல்லது
தனித்தனியாகக் களம் இறங்கி தங்களுடைய பலத்தை (!) நிரூபிக்கப்
போகின்றனவா என்று பார்க்க வேண்டும்.

மு.க. தமிழரசுவின் மகன் திருமணத்தை முன்னிட்டு எல்லா
கட்சித்தலைவர்களையும் சந்தித்து, அரசியல் பேசாமல் நாகரிகத்தோடு
திரும்பியுள்ள மு.க. ஸ்டாலின் இதற்கான முன் முயற்சியை
எடுக்கக்கூடும். ( அரசியல் பேசாதது நாகரிகம் என்றால், அரசியலைப்
பேசுவதே அநாகரிகம் என்றாகிறதே இதற்கு என்ன அர்த்தம் ? )

எதிர்க்கட்சி வரிசையில் முக்கியமான தலைவர் என்றால் அது
விஜயகாந்த்தான். அவர்தான் முதல் தீர்த்தகாரர்.
(ஏடாகூடமாக சிந்திக்க
வேண்டாம், அதிகாரப்பூர்வ எதிர்க்கட்சித் தலைவர், பிற கட்சிகளின்
முதல் மரியாதைக்குரியவர் என்று பொருள் ) எனவே அவருடன்
(அவர் என்றால் அவருடைய துணைவியார், மைத்துனர்) ஆலோசனை
கலந்த பிறகே எதிர்க்கட்சிகள் ஒரு முடிவுக்கு வர முடியும்.

அடுத்த முதல்வரை வீட்டுக்குள் தயாராக வைத்திருப்பதாகச் சொல்லும்
பா.ம.க. இடைத்தேர்தலில் போட்டியிட்டு என்னதான் தனக்கு செல்வாக்கு
என்று காட்டலாம்.
ஆனால் பொதுத் தேர்தல் நெருக்கத்தில் வரும்போது
இடைத் தேர்தலைத் திணிக்கக் கூடாது என்று சாமர்த்தியமாகச் சொல்லி
இருப்பதன் மூலம் – பா.ம.க. இந்த பல(விஷ)ப் பரீட்சையில்
இறங்குவது சந்தேகமே!

தி.மு.க.வின் கட்சியமைப்பும் தொண்டர் அமைப்பும் தலைவரின்
சாணக்கியத் தனமும் உலகம் அறிந்தது.
ஆளும் கட்சியாக இருக்கும்போது
இடைத் தேர்தல்களை எப்படிச் சந்திக்க வேண்டும் என்று அ.தி.மு.க- வுக்கே
பாடம் எடுத்த கட்சி.

அவர்களுடைய திருமங்கலம் பார்முலாவை பேடண்ட் சட்டப்படி
காப்புறுதி செய்யாததால்,
அதையே மேம்படுத்தி திருவரங்கம்
பார்முலாவாக ஜனநாயகத்துக்கு வழங்கியிருப்பது அ.தி.மு.க.

இந்தத் தேர்தலில் எதிர்கட்சிகளுக்குத் தலைமை தாங்கி தி.மு.க. தன்
வேட்பாளரை களம் இறக்காவிட்டால் அடுத்த பொதுத் தேர்தலில்
கூட்டணிக் கட்சிகள் குறைந்த தொகுதிகளுக்கு ஒப்புக் கொள்ளாமல்
பிடிவாதம் காட்டலாம். கெத்துவிடாமலிருக்க தி.மு.க. போட்டியிடும்
நிலை வரலாம்.

ஜெயலலிதாவை எதிர்த்து எல்லா கோர்ட்படியும் ஏறி இறங்க தி.மு.க.
பயன்படுத்திக் கொண்ட பேராசிரியர் அன்பழகனையே ஆர்.கே. நகர்
பரீட்சையிலும் இறக்கிவிடாமலிருந் தால் சரி.

இதைவிட்டால்… எல்லா எதிர்க் கட்சிகளுக்கும் ஒரு யோசனை.
உங்கள் அனைவருடைய உண்மையான மக்கள் செல்வாக்கை
இந்த இடைத் தேர்தலில் சோதனைக்கு உள்ளாக்கி, வரப்போகிற
பொதுத் தேர்தலுக்கு முன்பாக ஏன் முழுக்க நனைய வேண்டும்?
உங்களில் யார் போட்டியிட்டு தோற்றாலும், ஆளும் கட்சியிடமிருந்து
தப்பாமல் வரப்போகிற எக்காளம் என்னவாக இருக்கும் தெரியுமா?

‘நீதி வென்றது – நீதிமன்றத்திலும், மக்கள் மன்றத்திலும்!
பொய் வழக்கு போட்டவர்களுக்கு மக்களும் பாடம் கற்பித்து விட்டார்கள்’

என்பதாகத்தான் இருக்கும். அதற்குப் பதிலாக நீங்கள் அனைவருமே
போட்டியிடாமல் ஒதுங்கினால் எப்படி இருக்கும்?

வேண்டாத இடைத்தேர்தல் செலவை தவிர்த்து, போட்டி இல்லாமல்
ஜெயலலிதாவை ஜெயிக்க வைத்து… அப்படியாவது மக்களிடம்
நல்ல பெயர் வாங்கலாமே!

மொத்தமாக ஒதுங்கினால், ‘அம்மாவை எதிர்க்க யாருக்கும் தெம்பில்லை’
என்று ஆளும்கட்சி ஏகடியம் பேசும். பேசிவிட்டுப் போகட்டுமே!

முக்கியமாக தி.மு.க. கவனத்துக்கு… பொதுத் தேர்தல் சமயத்தில்
கூட்டணிக் கட்சிகளுக்கு தொகுதி ஒதுக்கும்போது இந்தத் தேர்தல்
முடிவையும் அவர்கள் ஒரு சமீபத்திய சான்றாகக் காட்டி, அதிகத்
தொகுதிகளைக் கேட்கக்கூடும். கேட்பது என்ன, பிளாக் மெயிலே கூட
செய்வார்கள். இப்போது போட்டியிடாமல் இருந்தால் உங்களுடைய
உண்மையான செல்வாக்கு என்னவென்று தெரியாமல் நீங்கள் ஒதுக்கும்
தொகுதிகளைப் பெற்றுச்செல்லவும் வாய்ப்பிருக்கிறது.

கம்யூனிஸ்ட் கட்சிகள் போட்டியிடாது. காங்கிரஸ், பாஜக கட்சிகளின்
மாநிலத் தலைமை உணர்ச்சி வசப்படாமல் முடிவெடுக்க வேண்டும்.
மற்ற சிறு கட்சிகளும் அடக்கி வாசிப்பதே நல்லது. பொது வேட்பாளருக்கு
இங்கு பஞ்சமே இல்லை. டிராபிக் ராமசாமி போன்ற உற்சாகமுள்ள
இளைஞர்களைக் களத்தில் இறக்கலாம்.

அதே வேளையில் ‘ஜெயா’ம்மா, ‘லலிதா’, ‘ஜெயா’க்காள், ‘அம்மா’கண்ணு
என்ற பெயரில் அந்தத் தொகுதியில் பெண் வாக்காளர்கள் யாராவது
வசிக்கிறார்களா என்று தேடிக் கண்டு பிடித்து அவர்களை சுயேச்சை
வேட்பாளர்களாக்கினால் சில நூறு வாக்குகளை சிதறடிக்கலாம்.

வேறு என்னதான் சாத்தியம்?

————————————————

இந்த மாதிரி முழுநீள – நகைச்சுவை – அரசியல் இடுகை எழுதவேண்டும்
என்று நான் முயற்சி செய்தது உண்டு.

ஆனால், சில தடவை முயற்சித்து, பிறகு கைவிட்டு விட்டேன்.
அரசியல் நகைச்சுவை கட்டுரை எழுத வேண்டுமானால் –
முதலும், முக்கியமானதுமான தகுதி – மனம் லேசாக இருக்க வேண்டும்.
செய்தியை மிக லேசான மனதுடன் அணுக வேண்டும்.
செய்தியில் சம்பந்தப்பட்டவர் மீது கோபம் வரக்கூடாது.
எழுதி முடிக்கும் வரை அதே “மூடி’ல்” இருக்க வேண்டும்.

என் பிரச்சினை – விரும்பியே நகைச்சுவையாக எழுத ஆரம்பித்தாலும்,
இரண்டு பத்திகள் எழுதுவதற்குள் – கோபம் பொத்துக் கொண்டு
வருகிறது. இடுகை சீரியசாகி விடுகிறது. எனவே, நமக்கு இது ஒத்து
வராது – எப்படி வருகிறதோ அப்படியே எழுதுவோம் என்று
விட்டு விட்டேன்.

ஒரு முக்கியமான விஷயம் – ஆர்.கே.நகருக்கு மட்டும் தனியாக
இடைத்தேர்தல் வருமென்று நீங்கள் யாராவது நினைக்கிறீர்களா
என்ன …?

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

15 Responses to ஆர்.கே.நகரில் தேர்தல் கொண்டாட்டம்….!!! உண்டா …???

 1. Pingback: ஆர்.கே.நகரில் தேர்தல் கொண்டாட்டம்….!!! உண்டா …??? | Classic Tamil

 2. chollukireen சொல்கிறார்:

  அருமையான கட்டுரை. எனக்குக்கூடத் தோன்றுகிறது. இந்த தேர்தல் ஸமயம் ஆர் கே நகர் வாசியாக நாமிருந்தால் எவ்வளவு விஷயங்கள் புதியதாகத் தெரிந்து கொள்ளலாம். நான் எனது எண்பத்து மூன்று வயதில் ஒரு முறைகூட ஓட்டுச் சாவடி போனது கிடையாது. ஓட்டு போட்டதும் கிடையாது. எவ்வளவு தகுதிகள் இழந்து விட்டிருக்கிறோம். எல்லா கட்சிகளும் நாகரீகமாக அவர்களின் பணத்தையும் வீணடிக்காமல் நாகரீகமாக பெயர்கெடாமல்,பெரிய மனிதர்களாக உயர்வதற்கு நல்ல சான்ஸ் போட்டி இடாமல் வெற்றிகரமாக கட்சியின் பெயரையாவது தக்க வைத்துக்கொள்ள அருமையான நல்ல யோசனை. சிரிக்க,சிந்திக்க,நடைமுறைப்படுத்த அருமையான யோசனைகள்.
  இந்தமாதிரி ஒரு கட்டுரையைப் படிக்க, உதவியுள்ளீர்கள். நக்கலும்,விக்கலும், போட்டி போட்டால் எப்படி இருக்கும். அம்மாவிற்கும் அம்மாவிற்கு அம்மாவாக அடிக்கும் யோகம். கொண்டாட்டம் மட்டும் தானா. திண்டாட்டமும் நிறைய இருக்கும். இதே மாதிரி நிறைய விஷயங்கள் கொடுங்கள். பாராட்டுகள். அன்புடன்
  நான் ஒரு வாசகி.

 3. மணிச்சிரல் சொல்கிறார்:

  —> ஒரு முக்கியமான விஷயம் – ஆர்.கே.நகருக்கு மட்டும் தனியாக
  இடைத்தேர்தல் வருமென்று நீங்கள் யாராவது நினைக்கிறீர்களா
  என்ன …?
  இன்னும் ஒரு வருடம் இருக்கிறது. மனம் கவரும் திட்டங்களை அறிமுகப்படுத்த இது தான் சரியான தருணம். கலைப்பதற்கு யாருக்கு மனம் வரும்?
  வேறு ஏதேனும் தொகுதி வரப்போகிறதா? விக்கியிடம் கேட்டாலும் பதில் இல்லை.

 4. சைதை அஜீஸ் சொல்கிறார்:

  எனக்கு ஒரு டவுட்டு யுவர் ஹானர்.
  டமில் வாட்ச் மேனுக்கு உட்கார, நிக்க, நடக்க என்று எதுவும் முடியவில்லை!
  எந்த போரிலும் கலந்துக்காத “தளபதி”-யோ யாருக்கும் தெரியாம லண்டன் பயணிக்கிறார்!
  சொந்த மகளாலேயே அம்மா என்றழைக்க முடியாத அம்மாவாலோ எதையும் பழைய மாதிரி போல்டா செய்ய, சொல்ல, நடக்க முடியலே!
  இவர்களை விட்டால் நம்மை ஆள ஆளேயில்லையா?

  அம்மாவின் ஹெல்த் டீடைல்ஸ் பற்றி கொஞ்சம் விசாரித்து எழுதுங்களேன், காமை ஐயா!

 5. புது வசந்தம் சொல்கிறார்:

  ஒரு வருடம் ஆகுமா ? அதெல்லாம் இருக்காது. வரும் டிசம்பரில் இருக்கலாம் என ஒரு கருத்தும் உலா வருகிறது.

 6. today.and.me சொல்கிறார்:

  கா.மை.ஜி,
  இந்தப் பதிவைப் பொறுத்தவரை எனக்கு சில மாற்றுக்கருத்துக்கள் இருக்கின்றன.

  ஊடகம் என்பது மக்களுக்கு முதல் பணியாக அறிவித்தலையும் (இன்ன நிகழ்ச்சி நடக்கிறது / நடக்கப்போகிறது என்பதுபோன்றவை) , இரண்டாவதாக அறிவுறுத்தலையும் (இதைச் செய்யலாம் செய்யக்கூடாது என்பதுபோன்றவை) செய்யவேண்டும். மூன்றாவதாக மக்களை மகிழ்வித்தலையும், நான்காவதாகத்தான் வணிகம் செய்தலையும் செய்யவேண்டும். இவைதாம் ஊடகங்களின் பணி. இது பொதுமக்களுக்குத் தெரியாமல் இருக்கலாம், ஆனால் அவற்றை தலைமுறைதலைமுறையாக நடத்திக்கொண்டு வருபவர்களுக்குத் தெரியாதா? இதை அப்படியே தலைகீழாக முதலில் பிஸிநெஸ், இரண்டாவதாக எண்டர்டெய்ன்மெண்ட். மூன்றாவதாக அட்வைஸ், நான்காவதாக இன்பார்மேசன்.

  இதனால் மறைமுகமாக மக்களை, (அல்ல, இந்தப் பத்திரிகைகளை விலைகொடுது வாங்கி இவர்கள் சாப்பிடும் சோற்றுக்கு ஆதாரமாக இருக்கும் முதலாளிகளான மக்களை) இவர்கள் ஏமாற்றுகிறார்கள் என்றே நினைக்கிறேன்.

  இது போன்ற அதிகம்சந்தாதாரர்கள் மற்றும் வாசிப்பாளர்களைக் கொண்ட ஒரு வெகுஜன ஊடகம் ஜனநாயகம்-தேர்தல்-வாக்குரிமை-வாக்காளர்கள்-கட்சி-கட்சித்தலைவர்கள்-வேட்பாளர்கள்-கட்சித்தொண்டர்கள் போன்றவற்றை இவ்வாறு கேலிகலந்து எழுதுவது என்பதை என்னால் ஏற்றுக்கொள்ள இயலவில்லை.

  உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு நாம் என்று பெருமைபாராட்டிக்கொள்கிறோம். உலகில் வல்லரசாக ஆகிவிட்டோம் என்று கூறிக்கொள்கிறோம். உலகில் மிகப்பெரிய கூலித்தொழிலாளர் சந்தை நம்மிடம்தான் உள்ளது என்று உலகஅரங்கில் இந்தியர்களை விற்றுக்கொண்டிருக்கிறோம்.

  இன்றைய லெட்பேட் கட்சிகள் வரை பார்த்தோமானால் தனிமனிதத் துதிகளும், கட்சி கோஷங்களும், சாதி – மத அடிப்படையிலான கட்சிகளையும் பார்க்கும்போது நாம் ஜனநாயகம்-மக்களாட்சி என்று சொல்கிறோமே? அவையெல்லாம் உண்மையிலேயே நடைமுறையில் உள்ளனவா? என்பவற்றை சீர்தூக்கிப் பார்த்து சரிசெய்யவேண்டிய நிலையில்தான் நாம் இருக்கிறோம். இந்த நிலை இந்த ஊடகங்களுக்குத் தெரியாதா?

  ஆர்கே நகர் தேர்தலைப் பற்றி- இவர்கள் செய்திருக்கவேண்டியது
  முதல்பணியாக அறிவித்தல்
  தேர்தல் இருக்கிறது, இந்தத் தேதியில்.
  இரண்டாவது பணியாக அறிவுறுத்தல்.
  அதற்கு மக்கள் என்ன செய்யவேண்டும்? வாக்குச்சீட்டு-அப்டேட்-கரக்ஷன்- போன்றவை. அரசுத்தரப்பில் என்ன தேர்தல்குறித்து என்ன செய்வார்கள்? இவற்றைப் பற்றி சொல்லியிருக்கலாம்.
  மேலும் அறிவுறுத்தவேண்டுமானால், பணம் வாங்காதீங்க, பக்கத்துவீட்ல வந்து குடுக்றாங்களா? இங்க கம்ப்ளைண்ட் பண்ணுங்க.. இதுபோன்ற தகவல்களைத் தந்திருக்கலாம்.

  தங்களுக்குக் கிடைத்த ஊடகம் என்கிற வாய்ப்பை,
  மக்களின் அறியாமையைக் குறித்து கேலிபேசவும், மக்களாட்சித் தத்துவத்தையே சட்டியில்போட்டு பொறித்தெடுத்து கபளீகரம் செய்யும் துடுக்குத்தனமும் செய்யப் பயன்படுத்திக்கொண்டார்கள் என்று வேண்டுமானால் சொல்லலாம்.

  தேர்தல் அல்லது இடைத்தேர்தல் என்பது ஒரு கேலிக்கூத்து அல்ல. அதைக்குறித்து பகடியம் பேச. நன்கு யோசித்துப் பார்த்தோமானால் தேர்தல் என்பது நமக்கெல்லாம் கிடைத்த வரம்.முற்காலத்தில் கோலோச்சிய மன்னர்களைப் போலலல்லாமல் இன்று நல்லவரோ கெட்டவரோ, நல்லவர்மாதிரித தெரிகிறவரோ, கெட்டவர் மாதிரித் தெரிகிறவரோ, தேர்ந்தெடுக்கும் வாய்ப்பு மக்களுக்கு வாய்த்திருக்கிறது.

  சாதாரணமாக எல்லாராலும் அரசியல் படிக்கமுடிகிறதா?
  எல்லாராலும் சட்டம் படிக்கமுடிகிறதா?
  எல்லாராலும் நீதித்துறையை விளங்கிக்கொள்ள முடிகிறதா?
  எல்லாராலும் அரசுநிர்வாக இயந்திரத்தைப் புரிந்துகொள்ள முடிகிறதா?
  பொருளாதாரம் குறித்த சிறு அறிவாவது தன்னளவில் எல்லாருக்கும் இருக்கும். அதை வார்டு அளவில் நகராட்சி அளவில், மாநகராட்சி அளவில் ஒப்பிட்டுபார்க்க இயலுமா?

  இதையெல்லாம் இந்த செய்திருந்தால் பல லட்சம் தமிழ்மக்கள் அவ்வந்தத் துறை குறித்து அறியாதவற்றை அறிவார்கள்.

  ஆனால் நேரே ‘சிந்தனைக் கட்டுரைகள் ‘ என்ற தலைப்பில் இப்படியொரு (நீங்கள்தான் இதை நகைச்சுவை கட்டுரை என்கிறீர்கள்) மக்களை மீண்டும் மடையர்களாக்கி சிந்திக்கவே வேண்டாத வெறும் ஓட்டளிக்கும் ரோபோவாக மாற்றும் முயற்சி இது என்றே கருதவேண்டியிருக்கிறது.

  என்றாலும் ‘விமரிசனம்’ வரை வந்து பல்வேறு பார்வையாளர்களின் பார்வையில் சிறப்பைப் பெற்று, தங்கள் முயற்சியில் வெற்றிபெற்றதற்காக ராணிப்பேட்டை ரங்கனையும், இந்துவையும் பாராட்டுகிறேன்.

  • மணிச்சிரல் சொல்கிறார்:

   கட்சி தலைவர்களின் கருத்துக்களை, கொள்கைகளை (இருக்கா? இருந்தால் மேற்கோள் காட்டவும்-னு சொல்லாதிங்க) வைத்து காமெடி பண்ணுவது ஒன்றும் புதிதல்ல. இத்தளத்தில் ௯ட விகடனில் வந்ததை மேற்கோள் காட்டியதாக ஞாபகம். தாங்களும் பங்களித்தீர்கள் ௭ன்று நினைக்கிறேன். தவறு இருப்பின் மன்னிக்கவும்.

   • today.and.me சொல்கிறார்:

    காமடி, நகைச்சுவை, கார்ட்டூன் என்று ஒரு குறிப்பிட்ட நபரை கட்சியை கலாய்ப்பது வேறு.

    சிந்தனைக் கட்டுரை என்ற பெயரில் ஒட்டுமொத்த ஜனநாயக அமைப்பையே கேலிக்கூத்தாகச் சித்தரிப்பது வேறு.

    அதுவும் அறிவுறுத்தலின் அவசியத்தேவை இருக்கும்போது,
    ஊடகங்களின் கையில் இருக்கும்போது,
    மக்களுக்கு ஊடகங்கள் செய்யவேண்டிய கடமை என்று இருக்கும்போது,
    இவ்வாறு எழுதியிருப்பதும் இதை வெளியிட்டிருப்பதும் ஓட்டளிக்கும் மக்கள்மீதே நம்மீதே மையடித்து, ‘உனக்கு ஒண்ணுமே தெரியலைபார்’ என்று எகத்தாளமிடும் சாடிஸ அறி(வீனத்தை)வைத்தான் பார்க்கிறேன்.

    முன்னதைப் படித்து சிரித்து நகர்ந்துவிடுவார்கள். மக்களுக்கும் அந்த ரிலாக்சேஷேன் தேவையாக இருக்கும்.

    இரண்டாவது, படித்து புத்திசாலித்தனமாக இருப்பதுபோல உணர்ந்து, சிரித்து, மறந்து விடவேண்டும் என்றே எழுதப்படுவது.

    இரண்டும் நடுவே மெல்லிய கோடு ஒன்று இருக்கிறது. கோட்டுக்கு அந்தப் பக்கம் நீங்கள் இருக்கிறீர்கள். இந்தப் பக்கம் நான் இருக்கிறேன். அவ்வளவுதான்.

    மாற்றுக்கருத்துக்கள் இருக்கலாம். இதில் தவறு இல்லை நண்ப மணிச்சிரல்.

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   ஆக, இந்த மாதிரி இடுகைகளை என்னால் எழுத முடியவில்லையே
   என்கிற குறை எனக்கு வேண்டாம் என்கிறீர்கள் – சரி தானே …!!!

   -வாழ்த்துக்களுடன்,
   காவிரிமைந்தன்

   • மணிச்சிரல் சொல்கிறார்:

    எங்களின் எதிர்பார்பெல்லாம் இடுகை வரவேண்டும் என்பதே, என்ன வரவேண்டும் என்பதில்லை. விழிப்புணர்வு சமுகத்தை சார்ந்ததாக இருக்க வேண்டும் என்று அவசியம் இல்லை. ஆன்மீகத்தில் இடுகை வந்தாலும் தெரிய வேண்டியதை தெரிந்து கொண்டு தெரிந்ததை தெரிவிப்போம். பேரும் ஊருமே நிரந்தரம். நன்றி.

   • today.and.me சொல்கிறார்:

    🙂

 7. today.and.me சொல்கிறார்:

  மிக முக்கியமான உங்கள் கேள்வியை விட்டுவிட்டேனே,…!

  ஜூன் 27ல் ஆர்கே நகருக்குத் தேர்தல் என தேர்தல் ஆணையம் இன்று (26 மே 2015) அறிவித்துள்ள நிலையில், மதிமுகவின் வைகோ இடைத்தேர்தல் என்பது அதிமுக-பாஜகவின் நாடகம் என்று நேற்று (25மே 2015) கூறியுள்ள நிலையில்,

  முன்னரே அறிவிக்கப்பட்ட மக்கள்நலத்திட்டங்களை இயன்றவரை மற்றத் தொகுதிகளிலெல்லாம் பொதுத்தேர்தலுக்கு முன் நிறைவேற்றி, நேரடியாகப் பொதுத்தேர்தலை ஆளும் கட்சி சந்திக்கக்கூடும் என்று எண்ணுகிறேன்.

  ராணிப்பேட்டை ரங்கள் பார்வையில் சொல்லவேண்டுமென்றால் “பாவம். தேர்தலை எதிர்பார்க்கும் மாற்றுக் கட்சியினர். ஐயோ பாவம். ஆர்கே நகர் மக்கள்”

  🙂 🙂

 8. நெல்லைத் தமிழன் சொல்கிறார்:

  தி.மு.கா போட்டியிடவில்லையென்றாலும் ஆர்.கே.நகர் மக்கள் வருத்தமடைவார்கள். (போட்டி இருக்கும்போதுதானே கூடுதல் வருமானம். ஒருத்தர் 500னா அடுத்தவர் 2000). தி.மு.கா போட்டியிட்டால் தி.மு.கா வருத்தமடையும். பாவம். எப்படியும் 1 லட்சம் அல்லது 75 ஆயிரம் வாக்கு வித்யாசத்தில் வெற்றிபெற, இறந்தவர்களெல்லாம் வாக்களிப்பதற்காக எழுப்பிக்கொண்டுவராமல் இருந்தால் சரிதான்.

 9. மணிச்சிரல் சொல்கிறார்:

  கழகத்தில் கால் முளைக்காது Mr. Nellaitamizhan.

 10. srinivasanmurugesan சொல்கிறார்:

  அய்யா!!!! தேர்தல் வந்துவிட்டது.27-06-2015ல் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.